×
Wednesday 27th of November 2024

கங்கை கொண்ட சோழபுரம் – பிரகதீஸ்வரர் திருக்கோவில்


Gangaikonda Cholapuram Temple History in Tamil

பிரகதீஸ்வரர் கோவில் கங்கை கொண்ட சோழபுரம்

மூலவர் பிரகதீஸ்வரர்
அம்மன்/தாயார் பெரியநாயகி
தல விருட்சம் பின்னை, வன்னி
தீர்த்தம் சிம்மக்கிணறு
ஊர் கங்கை கொண்ட சோழபுரம்
மாவட்டம் அரியலூர்

Gangaikonda Cholapuram Brihadisvara Thirukovil

🛕 தல வரலாறு: தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012 – 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவனுக்கு “கடாரம் கொண்டான்’ என்ற பட்டம் கிடைத்தது.

🛕 தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோவிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோவில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தான். தஞ்சாவூரைப்போலவே சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினான். கோவில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தான். இதனால் இவ்வூர் “கங்கை கொண்ட சோழபுரம்’ ஆனது.

🛕 கும்பாபிஷேக நீரை கோவிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன் மேல் தனது சின்னமான சிங்கத்தின் சிலையை வடித்தான். கோவிலுக்கு வரும் போதெல்லாம் இந்த கங்கை நீரை தலையில் தெளித்து கொண்ட பின்பே சிவனை தரிசனம் செய்வான்.

🛕 இக்கோவில் முழுவதும் பாறாங்கல்லால் ஆனது. இங்குள்ள லிங்கம் தமிழகத்தின் மிகப்பெரிய லிங்கம் ஆகும். இவருக்கு உடுத்துவதற்கு தனியாக வேட்டி, துண்டு நெய்யப்படும். இங்குள்ள சண்டிகேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.

Gangaikonda Cholapuram Temple Special in Tamil

தல சிறப்பு

Gangaikonda Cholapuram Temple Lingam

🛕 பெரிய லிங்கம்: தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இங்கு தான் உள்ளது. தஞ்சை பெரிய கோவில் லிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவும் (ஆவுடையார்) கொண்டது. கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது. ஆவுடையை சுற்றி பலகை கட்டி, அதன் மீது ஏறிநின்று அபிஷேகம் செய்கின்றனர். ஒரே கல்லால் ஆன மூலவர் இங்கு பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார். தஞ்சாவூரில் உள்ள லிங்கம் ஆணின் அம்சம். இங்குள்ள லிங்கம் பெண் அம்சமாகும். அங்கு உரல் வடிவம். இங்கு உடுக்கை வடிவம்.

Gangaikonda Cholapuram Annabhishekam in Tamil

🛕 அன்னாபிஷேகம்: காஞ்சிமடத்தின் சார்பில், ஐப்பசி பவுர்ணமி தினத்தில் இங்கு பல வருடங்களாக மிகவும் சிறப்பாக அன்னாபிஷேகம் நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கான மூடை அரிசியை வேகவைத்து மூலவராக இருக்கும் பிரமாண்டமான லிங்கம் மூடும் அளவிற்கு சாதத்தினால் அபிஷேகம் செய்வார்கள். அன்றைய தினம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இந்த அபிஷேகம் நடக்கும். அத்துடன் காய்கறி, கனி வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, சிறப்பு பூஜை நடக்கும். மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை பக்தர்கள் அன்னாபிஷேக லிங்கத்தை தரிசிப்பார்கள்.

🛕 அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை பொதுவாக ஓடும் நீரில் விடுவது வழக்கம். குறிப்பாக பாணத்தின் மீது இருக்கும் அன்னத்தில் கதிர்கள் ஊடுருவி இருக்கும். அதை சாப்பிட்டால் அதன் சக்தியை தாங்கும் வலிமை நமக்கு கிடையாது. எனவே ஆவுடைப்பகுதியில் உள்ள அன்னத்தில், தயிர் கலந்து தயிர் சாதமாக பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இதைச் சாப்பிடுகிறார்கள்.

🛕 பெரிய நாயகி: பெயருக்கேற்றாற் போல் 9.5 அடி உயரத்தில் பிரமாண்டமாக அம்மன் அருள்பாலிக்கிறாள். நிமிர்ந்து பார்த்து தான் வணங்க வேண்டும். இவளது பாதத்தில் காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்துள்ளார். அதன் பிறகு தான் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வர ஆரம்பித்தனர் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

🛕 இங்கு சரஸ்வதி, லட்சுமி இருவரும் தியானக்கோலத்தில் இருப்பதால், இவர்கள் “ஞான சரஸ்வதி, ஞான லட்சுமி” என அழைக்கப்படுகின்றனர். பங்குனித்திருவிழாவின் கடைசி நாளில் துர்க்கைக்கு 500 குடம் பாலபிஷேகம் செய்யப்படுகிறது.

🛕 சுற்றமுடியாத நவக்கிரக மண்டபம்: இங்குள்ள நவக்கிரகம் மற்ற கோவில்களை போல் இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய யந்திர வடிவில் 8 கிரகங்கள் சுற்றிலும் அமைக்கப்பட்டு, 7 குதிரைகள் பூட்டிய தேரில் மேற்கு நோக்கி சூரியன் அமர்ந்துள்ளார். தேரை அருணன் சாரதியாக இருந்து ஓட்டுகிறான். தேரிலுள்ள 10 கடையாணிகளும் கந்தர்வர்கள் எனக் கூறப்படுகிறது. நவக்கிரகங்கள் இந்த உலகை சுற்றி வருகின்றன. எனவே அதை யாரும் சுற்றக்கூடாது என்பதன் அடிப்படையில் இங்கு நவக்கிரகங்களை சுற்றமுடியாத படி மண்டப அமைப்பு உள்ளது.

🛕 குழந்தை வடிவில் துர்க்கை: இங்குள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். இவள் ராஜேந்திர சோழனின் குலதெய்வம். 9 வயது சிறுமியின் வடிவில் சிரித்த முகத்துடன் 20 திருக்கரங்களுடன் மகிஷாசூரனை வதம் செய்த கோலத்தில் அருளுகிறாள். இத்தகைய கோலத்தை காண்பது மிகவும் அபூர்வம். இவளை “மங்கள சண்டி” என்று அழைக்கிறார்கள். திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றுக்காக இவளை வணங்குகின்றனர். பதவி உயர்வுக்காகவும், பணியிட மாற்றத்திற்காகவும் அர்ச்சனை நடக்கிறது. ராஜேந்திர சோழன் கோவிலுக்கு வந்தவுடன் முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின் தான் சிவனை வணங்குவான். இதன் அடையாளமாக இன்றும் கூட ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில், முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின்னர் தான் சிவனை தரிசிக்க செல்கின்றனர். இவளுக்கு கோவிலின் இடது பக்கம் தனி சன்னதி உள்ளது.

🛕 கணக்கு விநாயகர்: ஒருமுறை ராஜேந்திர சோழன் தன் அமைச்சரை அழைத்து “பெரிய கோவில் கட்டியதற்கு இது வரை எவ்வளவு செலவாகி உள்ளது?” என கேட்டான். அமைச்சருக்கு சரியாக சொல்ல தெரியவில்லை. அவர் பதறிப்போய் அங்கிருந்த விநாயகரை வணங்கினார். “காவிக்கல் 8 ஆயிரம் செம்புகாசு, காவிநூல் 8 ஆயிரம் செம்பு காசு” என நினைவு வந்தது. எனவே “கணக்கு விநாயகர்” என்று அழைக்கப்பட்டார். தற்போது “கனக விநாயகர்” எனப்படுகிறார். இவர் தன் வலக்கையில் எழுத்தாணியுடன் உள்ளார்.

Gangaikonda Cholapuram Temple Architecture in Tamil

🛕 கோபுர அமைப்பு: இங்குள்ள கோபுரம் சோழர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தஞ்சாவூரைப் போலவே இங்கும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த பின் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. 216 அடி உயரமுள்ள தஞ்சாவூர் கோபுரம் கீழிருந்து மேல் ஒரே சீராக கட்டப்பட்டிருக்கும். ஆனால் 180 அடி உயரம், 100 அடி அகலமுள்ள இக்கோவில் கோபுரம், கீழிருந்து 100 அடி உயரம் வரை அகலமாகவும், அதன் பின் 80 அடி உயரம் குறுகலாகவும் கட்டப்பட்டுள்ளது. கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு அடுத்தபடியாக இக்கோவில் விமானம் தான் தமிழகத்தில் பெரிய விமானம் ஆகும்.

🛕 தினமும் சூரிய தரிசனம்: இங்குள்ள நந்தியும் தஞ்சாவூரை விட பெரியது. தஞ்சாவூரில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டு உயரமான மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. தஞ்சாவூரில் மூலஸ்தானத்திலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் நந்தி உள்ளது. இங்கு 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது. தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு. மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் லிங்கத்தைப் பார்த்தால் மிகவும் அற்புதமாக இந்த ஒளி தெரியும் வகையில் வடிவமைத்துள்ளனர் நம் சிற்ப வல்லுனர்கள்.

🛕 சந்திரகாந்த கல்: கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்ன வென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும். இந்த அனுபவத்தை பல தலைமுறைகளாக இருந்து வரும் குருக்குள் தங்கள் சந்ததியினருக்கு கூறி வருகிறார்கள். இந்த வகை கல் வேறு எந்தக் கோவிலிலும் இருப்பதாக தெரியவில்லை.

Gangaikonda Cholapuram Temple Prarthanai & Nerthikadan

🛕 பிரார்த்தனை: திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றுக்காக துர்க்கையிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். பதவி உயர்வுக்காகவும், பணியிட மாற்றத்திற்காகவும் அர்ச்சனை செய்து பிரார்த்திக்கிறார்கள்.

🛕 நேர்த்திக்கடன்: பிரகதீஸ்வரருக்கு 25 மீட்டர் நீளமுள்ள வேஷ்டியும், 14 அடி உயர மாலையும், அம்மனுக்கு 9 கஜ புடவையும் சாத்தி வழிபடலாம்.

Gangaikonda Cholapuram Temple Festivals

🛕 திருவிழா: மாசி சிவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி, பங்குனித்திருவிழா, மார்கழி திருவாதிரை.

Gangaikonda Cholapuram Temple Timings

🛕 கோவில் திறக்கும் நேரம்: கங்கை கொண்ட சோழபுரம் (பிரகதீஸ்வரர் திருக்கோவில்) காலை 06:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும்.

Also, read

Gangaikonda Cholapuram Temple Address

அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோவில், கங்கை கொண்ட சோழபுரம்- 612 901, அரியலூர் மாவட்டம்.

 



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்