- நவம்பர் 14, 2024
உள்ளடக்கம்
புராண பெயர்
எம்பிரான்மலை, திருக்கொடுங்குன்றம்
இறைவன் பெயர்
கொடுங்குன்றீஸ்வரர், கொடுங்குன்றநாதர், மங்கைபாகர்
அம்மன் பெயர்
தேனாம்பிகை, குயிலமிர்த நாயகி
தல விருட்சம்
உறங்காப்புளி
தீர்த்தம்
மதுபுஷ்கரிணி, தேனாழி தீர்த்தம்
ஆகமம்/பூஜை
காரணாகமம்
புராண பெயர்
எம்பிரான்மலை, திருக்கொடுங்குன்றம்
ஊர்
பிரான்மலை
மாவட்டம்
சிவகங்கை
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற வகையில் பெருமைக்குரிய கோவில்கள் பல உண்டு. அவற்றுள் ஒன்று திருக்கொடுங்குன்றம் என்றழைக்கப்படும் பிரான்மலை ஸ்ரீ கொடுங்குன்றநாதர் ஆலயமாகும். ஒருசமயம் வாயு, ஆதிசேஷனுக்கிடையே தங்களில் யார் “பலசாலி” என்ற சர்ச்சை எழுந்தது. இருவரும் தங்களுக்குள் போட்டி வைத்துக்கொண்டனர். ஆதிசேஷன் மேருமலையைச் சுற்றிக்கொள்ள வேண்டும், அதை வாயு பகவான் தனது பலத்தால் பெயர்க்க வேண்டும் என்பது போட்டி. ஆதிசேஷன், மலையை இறுகப் பற்றிக்கொண்டார். வாயு அதைப் பெயர்க்க முயன்றார். காற்று பலமாக வீசியதில், மேருமலையிலிருந்து சில துண்டுகள் பெயர்ந்து விழுந்தன. அவ்வாறு விழுந்த ஒரு துண்டே, இங்கே மலையாக திருக்கொடுங்குன்றம் என்ற பெயரில் உள்ளது. கடையேழு வள்ளல்களுள் ஒருவனும், முல்லைக்குத் தேர் ஈந்தவனுமான பாரி வள்ளல் ஆட்சி செய்த இடம் இப்பகுதி. அக்காலத்தில் இப்பகுதி பறம்பு நாடு என்றும் இம்மலை பறம்பு மலை என்றும் அழைக்கப்பட்டது. இன்று காலப்போக்கில் மருவி “பிரான்மலை” ஆகிவிட்டது.
மலை அடிவாரம், மலையின் நடுப்பகுதி, மலை உச்சி ஆகிய மூன்று நிலைகளிலும் சந்நிதிகள் கொண்டு காணப்படும் ஒரே ஆலயம் பிரான்மலை கொடுங்குன்றநாதர் ஆலயம் தான். மலை உச்சியில் மங்கைபாகர் என்னும் பெயரில் ஈசன் திருமணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். மங்கைபாகருக்கு உமாமகேஸ்வரர் என்றும் ஒரு பெயருண்டு. இறைவி தேனாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறாள். சந்தனம், புனுகு தைலக் காப்பிட்டு, அபிஷேகம், ஆராதனை செய்து இவரை வழிபட்டால் எண்ணியது நிறைவேறும், திருமணத் தடைகள் அகலும் என்பது நம்பிக்கை.
தென்திசையை நேராக்க வந்த அகத்திய முனிவர் தான் விரும்பும் போதெல்லாம் இறைவனின் திருமணக் கோலத்தைக் கண்டு மகிழும் வரத்தைப் பெற்றார். அவ்வாறு அவர் வேண்டுதலுக்கிணங்க, இறைவன் மங்கையொரு பாகனாகக் காட்சி அளித்த பல தலங்களுள் இதுவும் ஒன்றாகும். அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய குடைவரைக் கோவில் இது. இங்குள்ள மங்கைபாகர் எதிரில் நந்தி இல்லை. சிவன், அகத்தியருக்கு திருமண காட்சி கொடுத்தபோது, நந்திதேவர் கைலாயத்தில் இருந்தார். எனவே, சிவன் இங்கு நந்தி இல்லாமல் காட்சி தருகிறார். கொடிமரம், பலிபீடமும் கிடையாது. லிங்க வடிவம் இன்றி சிவபெருமான் மங்கைபாகர் என்ற பெயரில் உருவத் திருமேனியுடன் காணப்படும் சிலை நவ மூலிகைகளின் சாறு கொண்டு செய்யப்பட்டதாகும். எனவே, இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. பெளர்ணமியன்று புனுகு, சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்துகின்றனர்.
மங்கைபாகர் இத்தலத்தில் போக நிலையில் காட்சி தருகிறார். ஒவ்வொரு முறையும் இவருக்கு புத்தாடையையே அணிவிக்கின்றனர். ஒரேநாளில் பலமுறை வஸ்திரம் மாற்ற வேண்டி வந்தாலும், புது வஸ்திரமே அணிவிக்கப்படும். கையில் வேதங்களுடன் காட்சி தருவதால் இவருக்கு, “வேதசிவன்” என்றும் பெயருண்டு. கல்வியில் சிறப்பிடம் பெற, இவருக்கு வெள்ளை நிற மலர் மாலை, வஸ்திரம் அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். இந்த சன்னதியின் முன்மண்டப மேற்சுவரில் கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் காணச்சென்ற தேவர்கள், அசுரர்களின் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு.
மலை நடுப்பகுயில் உள்ள கோவிலில் மிக முக்கியமான சந்நிதியாய் விளங்குவது பைரவர் சந்நிதியாகும். இங்குள்ள பைரவர் வடுக பைரவராய் எழுந்தருளியிருக்கிறார். வடுகன் என்றால் “பிரம்மச்சாரி” என்ற பொருள் உண்டு. “வீரன்” என்ற பொருளும் கூறப்படுகின்றது. கருவறை, அர்த்தமண்டபம், முன் மண்டபம் எனத் திகழ்கின்றது பைரவர் கோவில். தெற்கு நோக்கிய சந்நிதி. பைரவர் சூலம், உடுக்கை, கபாலம், நாகபாசம் போன்றவற்றைக் கொண்டிருக்கின்றார். நின்ற திருக்கோலம், சற்று உக்ரமான தோற்றத்துடன் காணப்படும் இவருக்கு, வீரத்தின் அடையாளமான வாள் சார்த்தி வைக்கப்படுள்ளது. பண்டை அரசர்களால் வழிபாடு செய்யப்பட்டதால் வீரத்தின் அடையாளமாக வாள் சார்த்தி வைக்கப்பட்டுள்ளதாம். பைரவருக்கு வலப்புறம் உள்ள சந்நிதியில் காசிவிஸ்வநாதர் – விசாலாட்சி எழுந்தருளியுள்ளனர். வடுக பைரவர் தவிர விநாயகர், தட்சிணாமூர்த்தி சந்நிதிகளும் உள்ளன.
முண்டாசுரன் என்னும் அரக்கன், சிவனைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவில்லை என்ற வரம் பெற்றதால், ஆணவத்துடன் அனைவரையும் கொடுமைப்படுத்தினான். பிரம்மனையே அவன் போருக்கு அழைக்க, அவன் செருக்கை அழித்து அவனை அழிக்க, சிவன் ஏற்ற திருக்கோலமே ஸ்ரீ வடுகபைரவர் ஆகும். ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றையும், காரியத்தடைகளையும் களைபவர் இத்தலத்து பைரவர். கருப்பு வஸ்திரம் சார்த்தி, எலுமிச்சை மாலை அணிவித்து இவரிடம் வேண்டிக் கொண்டால் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அடுத்து கீழே உள்ள மலையின் அடிவாரப் பகுதியில் கிழக்குப் பார்த்து கொடுங்குன்றநாதர் மிகச் சிறிய லிங்க வடிவில் எழுந்தருளியிருக்கின்றார். கொடுங்குன்றநாதர் சந்நிதி வலம் வரும்போது அறுபத்துமூவர் மூலமூர்த்தங்களும், விநாயகர், அம்மையப்பர் சந்நிதிகளும் உள்ளன. நவக்கிரக சந்நிதிகளில் எல்லா கிரகங்களும் அமர்ந்த நிலையில் உள்ளன. அம்பாள் குயிலமுதநாயகி நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். இக்கோவிலின் வடகிழக்குப் பிரகாரத்தின் கூரைப் பகுதியில் தொங்கும் கல்வளையங்கள் சிற்பக் கலைச் சிறப்பு மிக்கவை.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது இரு பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும், இரு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். வழக்கமாக முருகன் சத்திதி எதிரில் இருக்கும் மயில் வாகனத்திற்கு பதிலாக இங்கு யானை உள்ளது. முருகன் சந்நிதி எதிரில் 18 துவாரங்களுடன் கூடிய மதில் உள்ளது. இந்த மதில் வழியாகத்தான் யானையைப் பார்க்க முடியும்.
இத்தலத்தின் தலவிருட்சம் உறங்காப்புளி மரம், பெயரில்லா மரம் என்று இரண்டு மரங்கள் உள்ளன. உறங்காப்புளி மரம் கோவிலுள் உள்ள தீர்த்தத்தின் கரையில் உள்ளது. பெயரில்லா மரம் மலைமீது சுவாமி (மங்கைபாகர்) சந்நிதிக்குப் பக்கத்தில் மலைக்கற்களின் இடுக்கில் உள்ளது. இதுவரை இம்மரத்தை என்ன பெயர், எந்த வகையைச் சார்ந்தது என்பதை யாராலும் அறிந்து கொள்ளமுடியாததால் இதனை பெயரில்லா மரம் என்று அழைக்கின்றனர். தீர்த்தம் தேனாழி தீர்த்தம். மகோதர மகரிஷி, ஆதிசேஷன், பிரம்மா, சரஸ்வதி, சுப்ரமண்யர், நந்தி ஆகியோர் வந்து வழிபட்டு அருள் பெற்றிருக்கின்றனர்.
மலையடிவாரத்தில் கோவிலின் நுழைவாயில் முன்புறம் அடையவளைந்தான் என்ற பெயர் கொண்ட திருக்குளம் உள்ளது. அதனை அடுத்துள்ள ராஜா மண்டபத்தைக் கடந்து, விநாயகரை வழிபட்டுப்பின் உச்சிக் கோவில், இடைக்கோவில், அடுத்து அடிவாரக் கோவில் என வழிபட வேண்டும் என்பது மரபாக இருக்கிறது.
ஏறுவதற்கு மிகவும் கடினமானது என்பதாலும், கொடிய பல வளைவுகளைக் கொண்டிருப்பதாலும் இது கொடுங்குன்றம் என்றழைக்கப்படுகின்றது. அடிவாரத்தில் இருந்து மலையுச்சிக்கு சுமார் 5 கி.மீ. நடக்க வேண்டும். செங்குத்தான படிகளைக் கொண்டதாக இருக்கிறது. சில இடங்களில் படிக்கட்டுகள் இல்லை. சித்தர்கள் பலர் இன்னமும் சூட்சும வடிவில் இந்த மலையில் வாழ்வதாக நம்பப்படுகிறது. மலையுச்சியில் முருகன் கோவில் ஒன்று உள்ளது. பிற்காலத்தில் வாழ்ந்த ஒரு இஸ்லாமியப் பெரியவரின் சமாதியும் (தர்கா) உள்ளது. முல்லைக்குத் தேர் ஈந்த வள்ளல் பாரி வாழ்ந்ததால் இந்த ஊர் என்றும் எப்பொழுதும் பசுமையாகவும், வளமாகவும் காணப்படுகின்றது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். (ஐப்பசி முதல் பங்குனி வரையில்), சிவன் மீது சூரிய ஒளி விழுகிறது. இவ்வாறு சூரிய ஒளி விழுவதைக் காண்பது அபூர்வம். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பாதாளம், பூமி, மலை என மூன்றடுக்கு கொண்டதாக இக்கோவில் அமைந்துள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 195 வது தேவாரத்தலம் ஆகும்.
திருவிழா: சித்திரையில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சிவராத்திரி.
பிரார்த்தனை: கருத்து வேறுபாடுள்ள தம்பதியர்கள் இங்கு வேண்டிக் கொள்ள ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை. ஜாதகத்தில் சுக்கிரன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள், இங்கு அம்பிகையிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்: சுவாமி, அம்பிகைக்கு வெண்ணிற வஸ்திரம் அணிவித்து, விசேஷ பூஜைகள் செய்வித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
திறக்கும் நேரம்: காலை 6 – மதியம் 12 மணி, மாலை 4 – இரவு 8 மணி வரை. மலை மீதுள்ள மங்கைபாகர் சன்னதி மட்டும் மாலையில் 6.30 வரை திறந்திருக்கும்.
இத்தலத்திற்கான சம்பந்தரின் பதிகம் 1-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
1. வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக்
கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
ஆனிற்பொலி வைந்தும்மமர்ந் தாடியுல கேத்தத்
தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே.
2. மயில்புல்குதண் பெடையோடுடன் ஆடும்வளர் சாரல்
குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக்கொடுங் குன்றம்
அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்திநின் றாடி
எயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே.
3. மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக்
குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல்
வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான்வள நகரே.
4. பருமாமத கரியோடரி யிழியும்விரி சாரல்
குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம்
பொருமாஎயில் வரைவிற்றரு கணையிற்பொடி செய்த
பெருமானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே.
5. மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும்
கூகைக்குலம் ஓடித்திரி சாரற்கொடுங் குன்றம்
நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந்நல மங்கை
பாகத்தவன் இமையோர்தொழ மேவும்பழ நகரே.
6. கைம்மாமத கரியின்னினம் இடியின்குர லதிரக்
கொய்ம்மாமலர்ச் சோலைபுக மண்டுங்கொடுங் குன்றம்
அம்மானென உள்கித்தொழு வார்கட்கருள் செய்யும்
பெம்மானவன் இமையோர்தொழ மேவும்பெரு நகரே.
7. மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட
குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம்
அரவத்தொடு மிளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றை
நிரவச்சடை முடிமேலுடன் வைத்தான்நெடு நகரே.
8. முட்டாமுது கரியின்னினம் முதுவேய்களை முனிந்து
குட்டாச்சுனை யவைமண்டிநின் றாடுங்கொடுங் குன்றம்
ஒட்டாவரக் கன்றன்முடி ஒருபஃதவை யுடனே
பிட்டானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே.
9. அறையும்மரி குரலோசையை அஞ்சியடும் ஆனை
குறையும்மன மாகிம்முழை வைகுங்கொடுங் குன்றம்
மறையும்மவை யுடையானென நெடியானென இவர்கள்
இறையும்மறி வொண்ணாதவன் மேயவ்வெழில் நகரே.
10. மத்தக்களி றாளிவ்வர வஞ்சிம்மலை தன்னைக்
குத்திப்பெரு முழைதன்னிடை வைகுங்கொடுங் குன்றம்
புத்தரொடு பொல்லாமனச் சமணர்புறங் கூறப்
பத்தர்க்கருள் செய்தானவன் மேயபழ நகரே.
11. கூனற்பிறை சடைமேல்மிக வுடையான்கொடுங் குன்றைக்
கானற்கழு மலமாநகர்த் தலைவன்நல கவுணி
ஞானத்துயர் சம்பந்தன நலங்கொள்தமிழ் வல்லார்
ஊனத்தொடு துயர்தீர்ந்துல கேத்தும்மெழி லோரே.
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலமும் செய்த பாவங்கள் நீங்க, மூன்றடுக்குள்ள சிவாலயமான பிரான்மலை மங்கைபாகர் கோவிலை தரிசனம் செய்து பேறு பெறுவோம்.