- ஜூலை 6, 2022
உள்ளடக்கம்
சிந்து சமவெளி நாகரிகமானது அகில உலக நாகரிகங்களின் மூத்த நாகரிகம் என்பதும், அந்நாகரிகம் 7500 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதும் அனைத்து உலக வரலாற்று ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்தாகும். அந்நாகரிகப் பகுதியில் இந்தியத் தொல்பொருள் துறையினர் மேற்கொண்ட அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களில் குறிப்பாக முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகளும், எழுத்துக்களும் அக்கருத்துக்கு ஆதாரச் சான்றுகளாகத் திகழ்கின்றன.
அக்குறியீடுகளும், எழுத்துக்களும் படித்து பொருள் அறிய முடியாத ஒரு மொழியை சார்ந்தவை என பன்னாட்டு அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் அவை பழந்திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவகையாக இருக்கக்கூடும் எனப் பின்லாந்து நாட்டு அறிஞர் அஸ்கோ பர்போலா, தமிழகத்தைச் சார்ந்த மறைந்த பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் ஆகியோர் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அக்குறியீடுகளையும், எழுத்துக்களையும் ஆய்வு செய்து வரும் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ள செய்தியாவது,
சிந்து சமவெளி நாகரிக முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகள் பழந்தமிழ் மொழி எழுத்துக்களாகப் பரிணமித்த காலகட்டத்தைச் சார்ந்தவை என்பதும், அதில் தமிழகத்தை அரசாண்ட மன்னர்களின் பெயர்களும், சில தமிழக ஊர்களின் பெயர்களும், மனித குலத்திற்கு மிகவும் அவசியமான வாழ்வியல் தத்துவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் எமது ஆய்வின் வாயிலாக தெரியவருகிறது. அவற்றில் “நன்னன்” என்னும் பெயர் சொல் முத்திரை எண்: எம்-1848எ-ல் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரையில் உள்ள நான்கு பழந்தமிழ் எழுத்துக்கள் வலமிருந்து இடமாக காணப்படுவதால் இது அரசு முத்திரையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
‘நன்னன் சேய் நன்னன்’ (மலைப்படுகடாம்), ‘நன்னன் ஆய்’ (அகநானூறு), ‘எழில்மலை நன்னன்’ (புறநானூறு) எனத் தமிழ்ச் சங்க கால இலக்கிய நூல்களில் ‘நன்னன்’ என்னும் தமிழ் மன்னர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ‘பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாள் சேரியெல்லாம் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்’ என மதுரைக்காஞ்சி கூறுகிறது. மேலும் 4945 ஆண்டுகளுக்கு முன் ‘எல்மெய் நன்னன்’ என்ற மன்னனும், 4865 ஆண்டுகளுக்கு முன் ‘வாழிசை நன்னன்’ என்ற மன்னனும் தமிழகத்தை அரசாண்ட மன்னர்கள் என்ற வரலாற்று செய்திகள் இணையதளத்தின் வாயிலாக அறியமுடிகிறது.
விசுவாவசு வருடம் (1906), பங்குனி மாதம், மதுரை தமிழ்ச்சங்க முத்திராசாலை பதிப்பு வெளியிடப்பட்ட ‘செந்தமிழ்’ என்னும் மாத இதழில் அந்தப் பத்திரிகை ஆசிரியர் ‘நன்னன் வேண்மான்’ என்றத் தலைப்புக் கட்டுரையில் ‘நன்னன்’ என்றப் பெயருடைய மன்னர்களைப் பற்றி தமது விரிவான ஆய்வு குறிப்புக்களை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்டவற்றின் வாயிலாக ‘நன்னன்’ என்ற பெயருடைய மன்னர்கள் பல்வேறு கால கட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசாண்டவர்கள் என்பதும், 7500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகம் ‘பழந்தமிழர் நாகரிகம்’ என்பதும், அப்பகுதியில் பேசப்பட்ட மொழி ‘பழந்தமிழ் மொழி’ என்பதும் தெரியவருவதாகக் கருதலாம் என அவர் தெரிவித்துள்ளார்.