- ஜூலை 6, 2022
உள்ளடக்கம்
அகில உலக நாடுகளில் எல்லாம் மூத்த நாகரிகம் 7500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகம். அந்நாகரித்திற்கு மிகச் சிறந்த சான்றுகளாகக் கூறப்படுபவை குறியீடுகளும் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ள முத்திரைகள். அவற்றில் எம்-1எ என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி முத்திரை இறந்தவர் மேடு என்னும் மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை தற்போது இந்திய நாட்டின் தலைநகரமான புதுடெல்லியில் உள்ள தொல்பொருள் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது.
இந்த முத்திரையைப் பற்றியும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியைப் பற்றியும் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ளச் செய்தியாவது,
இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு எண் 1, பக்கம் – 1லும், மற்றக் குறிப்புகள் பக்கம் – 366லும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சதுர வடிவிலான இந்த முத்திரையின் மேல் பகுதியில்; எண் ஒன்று, சோகம் என்பதைக் குறிக்கும் குறியீடு, 5 எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முதலாவது எழுத்து இரண்டாவது எழுத்துடனும், நான்காவது எழுத்து ஐந்தாவது எழுத்துடனும் இணைந்துள்ளன. கீழ்பகுதியில் ஒத்தக் கொம்பன் என்னும் ஒத்தக்கோடு நந்தியின் உருவமும், பரமஞானம் என்பதைக் குறிக்கும் குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த முத்திரை துணி, மரப்பட்டை போன்ற மிருதுவானவற்றில் அச்சிட்டு இடமிருந்து வலமாக- ஒன்று + (ஊ + ன்) + ஆ + சோகம் + (உ + ள்). ஒரு ஊன் ஆ சோகம் உள் எனப் படிக்கப்படுகிறது.
‘ஒரு’ என்பதற்கு ஓர், ஒப்பற்ற (தனித்துவம் வாய்ந்த), ஒற்றை எனவும், ‘ஊன்’ என்பதற்கு தசை, இறைச்சி, கொழுப்பு, உடல் எனவும், ‘ஆ’ என்பதற்கு இடபம், பசு, ஆன்மா, ஆகுகை, ஆவது, விதம் எனவும், ‘சோகம்’ என்பதற்கு சோர்வு, திரள், கடவுளும் ஆன்மாவும் ஒன்றெனப் பாவிக்கை எனவும், ‘உள்’ என்பதற்கு உள்ளிடம், உள்ளம், மனம், இடம், மறை, மனவெழுச்சி எனவும் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. அதாவது ஓர் உடலாவது கடவுளும் ஆன்மாவும் ஒன்றெனப் பாவிக்குமிடம் என்பது அதன் பொருளாகிறது.
பொருள் விளக்கம்: பரமான்மாவின் அங்கமாகிய சீவான்மா என்னும் உயிர் நிலையானது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் கூட்டுக் கலவையான உடல் நிலையற்றது. அத்தகைய நிலையான உயிர் நிலையற்ற உடலில் ஒரு குறிப்பிட்டக் காலம் வரை குடிகொண்டிருப்பது உலகமகா அதிசயம். இந்த உலகமகா அதிசயத்தை அறிவதே இந்த பூமியில் வாழும் மனித வாழ்க்கையின் ரகசியம். பரமான்மாவும் சீவான்மாகிய உயிரும் ஒன்றே! இரண்டற்றது என்னும் அத்துவைதத் தத்துவமே இந்த ரகசியம். இந்த ரகசியத்தை அறியவதே மனித குலத்தின் இலட்சியம்.
உயிருள்ள உடல் உடலம், உயிரற்ற உடல் சடலம். எனவே இப்பூமியில் உடலமாக வாழும் காலத்தில் இந்த ரகசியத்தை அறிந்தால் மட்டுமே இறப்பு எய்திய பின் சாயுச்சியம் என்னும் சீவான்மா பரமான்மாவிடம் ஒன்றும் நிலையை அடைய முடியும். இந்த ரகசியத்தை சடலமான பின்னர் அறிய முடியாது. அதன் காரணமாகவே மீண்டும் மீண்டும் மானுடப் பிறவி எடுத்து வாழ்கிறோம் என்பதையே இந்த முத்திரையில் சூட்சுமமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சிந்து சமவெளியில் வாழ்ந்த பழந்தமிழர்கள் என்பதும், அவர்கள் அத்துவைதத் தத்துவத்தை அறிந்துணர்ந்தும் கடைபிடித்தும் வாழ்ந்துள்ளனர் என்பதும் தெரியவருவதாகக் கருதலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.