- ஜூலை 6, 2022
எம்-152எ என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி நாகரிக முத்திரை ஒன்று இறந்தவர் மேடு என்னும் மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை தற்போது இந்திய நாட்டின் தலைநகரமான புதுடெல்லியில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது.
இந்த முத்திரையைப் பற்றியும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியைப் பற்றியும் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ளச் செய்தியாவது,
இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு எண் 1, பக்கம் – 47லும், மற்றக் குறிப்புக்கள் பக்கம் – 367லும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சதுர வடிவிலான இந்த முத்திரையின் மேல் பகுதியில் 9 எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2-ஆவது, 3-ஆவது, 4-ஆவது, 5-ஆவது, 6-ஆவது ஆகிய 5 எழுத்துக்கள் இணைந்துள்ளன. கீழ் பகுதியில் எருது வகையைச் சேர்ந்த ஒத்தக்கொம்பன் என்னும் ஒத்தக்கோடு நந்தியின் உருவமும், பரமஞானம் (பரத்தை அறிந்தவன்) என்பதைக் குறிக்கும் ஒரு குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளன.
புடைப்பு வகையைச் சார்ந்த எழுத்துக்களைக் கொண்ட இந்த முத்திரை துணி, மரப்பட்டை ஆகிய மிருதுவானவற்றின் மீது அச்சிட்டு இடமிருந்து வலமாக, ப + (ரு + பா + ண + ன + னி) + ட் + ட + ஆ. பரு பாணனனிட்ட ஆ எனப் படிக்கப்படுகின்றன.
இவற்றில் ‘ப’ என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ரு’ என்பது 12-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘பா’ என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ண’ என்பது 6-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ன’ என்பது 18-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘னி’ என்பது 18-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ட்’ என்பது 5-ஆவது உயிர் எழுத்து, ‘ட’ என்பது 5-ஆவது உயிர்மெய்; எழுத்து, ‘ஆ’ என்பது 2-ஆவது உயிர் எழுத்து ஆகியவையாகும்.
‘பரு’ என்பதற்கு கணு, கடல், மலை, துறக்கம் (தேவருலகம்) எனவும், ‘பாணன்’ என்பதற்கு பாடுங்குலத்தான், வீணன், சிவபக்தனான ஓரசுரன் எனவும், ‘(இ)ட்ட’ என்பதற்கு வைத்த, கொடுத்த, படைத்த எனவும், ‘ஆ’ என்பதற்கு இடபம், ஆன்மா, பெற்றம், விதம், ஆகுகை, ஆகுக, ஓர் இகழ்ச்சிக் குறிப்பு எனத் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.
இந்த முத்திரை தேவருலகப் பாடுங்குலத்தான் படைத்தாகுக / தேவருலக சிவபக்தனான ஓரசுரன் படைத்தாகுக என்பதைக் குறிப்பிடுவதாகக் கருதலாம் எனத் தெரிவித்துள்ளார்.