×
Wednesday 27th of November 2024

காசிக்கு இணையான சீர்காழி சட்டைநாதர் திருக்கோவில்


உள்ளடக்கம்

Sattainathar Temple, Sirkazhi

சீர்காழி சட்டைநாதர் திருத்தலம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

சிவஸ்தலம் சீர்காழி சட்டைநாதசுவாமி கோவில்
மூலவர் சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்பாள் பெரியநாயகி, திருநிலைநாயகி
தல விருட்சம் பாரிஜாதம், பவளமல்லி
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் முதலான 22 தீர்த்தங்கள்
ஆகமம் பாஞ்சராத்ர ஆகமம்
தொன்மை 1000 – 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, ஸ்ரீகாளி, கொச்சை வயம், கழுமல வள நகர்
ஊர் சீர்காழி
மாவட்டம் நாகப்பட்டினம்

Sirkazhi Sattainathar Temple History in Tamil

சீர்காழி சட்டைநாதர் கோவில்

தல சிறப்பு: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 14 வது தேவாரத்தலம் ஆகும்.

“காசியில் பாதி காழி” என்பது பழமொழி, காசியை காட்டிலும் மிகப்பெரிய பைரவ க்ஷேத்திரம்.

காசியை தரிசித்த புண்ணியம் இங்கு கிடைக்கும். இதுவே எல்லாவற்றிற்கும் மூல க்ஷேத்திரம்.

பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, மூலவர், உற்சவர் என அனைவருமே மூலஸ்தானத்தில் கைலாய காட்சியில் உள்ள ஒரே தலம் சீர்காழி தான்.

சீர்காழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது. சைவக் குரவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.

sattainathar temple sirkazhi inside view

பிரம்மபுரீஸ்வரர் ஆலயமானது (Brahmapureeswarar Temple) சீர்காழியிலேயே மிக முக்கியமான ஆலயமாகும். இக்கோவிலில் சிவபெருமான் தனது தேவியான திருநிலைநாயகியுடன் எழுந்தருளியுள்ளார். இக்கோவிலில் சிவபெருமான் மூன்று வடிவங்களில் அருள் புரிகிறார். பிற இரண்டு வடிவங்கள், சட்டைநாதர் (Sattainathar) மற்றும் தோணியப்பர் (Thoniappar) ஆகும். இக்கோவிலில் 22 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமனது பிரம்ம தீர்த்தம் ஆகும். நான்கு புறங்களிலும் நான்கு பெரிய கோபுரங்கள் சூழ பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது இக்கோவில்.

18 சித்தர்களில் ஒருவரான சட்டைமுனி சித்தர் இங்கு ஜீவ சமாதி ஆகி உள்ளார். சிவன் கோவில் பிரகாரத்தில் இவரது ஜீவ சமாதிக்கு மேல் ஒரு பீடம் உள்ளது, இங்கிருந்தபடியே உச்சியிலிருக்கும் சட்டை நாதரை தரிசிக்க முடியும். வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு இந்த பீடத்திற்கு அபிஷேகம் நடக்கும். இரவு 12 மணிக்கு இதற்கு புனுகு சட்டம் சார்த்தி, வடை மாலை அணிவித்து பாசி பருப்பு பாயசம் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

அஷ்ட பைரவர்களும் ஓரே இடத்தில் இருக்கும் சிறப்பு

இங்கு அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்டபைரவர், குரோத பைரவர், உண்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீஷண பைரவர், அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர். எனவேதான் காசியில் பாதி காழி என்பர். இவர்களது சன்னதிக்குள் சட்டை அணிய அனுமதியில்லை. அஷ்டமி திதிகளில் சிறப்பு பூஜை உண்டு.

sirkazhi sattainathar temple brahmapureeswarar

குன்றுக் கோவில் உருவான வரலாறு

உரோமச முனிவர் கயிலை சென்று சிவனை நோக்கி தவம் செய்து “இறைவா! பக்தர்களின் குறை தீர்க்க தென்திசையில் தேவியுடன் எழுந்தருளி கயிலை தரிசனம் தரவேண்டும்” என வேண்டினார். ஒரு சமயம் ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தது. இதில் ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் கயிலையை மூடிக் கொண்டார். வாயுவால் மலையை அசைக்கக் கூட முடியவில்லை. தேவர்களின் வேண்டுகோளின்படி ஆதிசேஷன் ஒரு தலையை மட்டும் தூக்க, வாயுவின் வேகத்தினால் ஒரு சிறு பகுதி பெயர்ந்தது. இறைவன் அருளால் அந்த சிறு மலையை 20 பறவைகள் சீர்காழிக்கு கொண்டு வந்து சேர்ந்தன.

காலவித்து என்னும் மன்னனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. கயிலை சென்று இறைவனை வணங்கினால்தான் புத்திர பாக்கியம் கிடைக்கும் என பெரியவர்கள் கூறினர். அந்த மன்னன் சின்னக் கயிலையான சீர்காழிக்கு வந்து இறைவனை வணங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெற்றான்.

மூன்றடுக்கு சன்னதி

இக்கோவில் மூன்று அடுக்குகளைக் கொண்ட குன்றுக் கோவிலாக விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். இவருக்கு 6 கால பூஜைகள் நடக்கிறது. படைக்கும் தொழிலைச் செய்த பிரம்மா, தானே உலகில் பெரியவன் என அகங்காரம் கொண்டார். இந்த அகங்காரத்தைப் போக்குவதற்காக சிவபெருமான், பிரணவ மந்திரத்தை பிரம்மனுக்கு மறக்கச் செய்தார். இதனால் வருந்திய பிரம்மன் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். இதனால் இத்தலத்து இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.

sirkazhi sattainathar temple three level architecture

நடு அடுக்கில் உமா-மகேஸ்வரர் உள்ளனர். இவரை “தோணியப்பர்” என அழைக்கின்றனர். இவருக்கு 4 கால பூஜை நடக்கிறது. இந்த குன்றையும் ‘தோணிமலை’ எங்கின்றனர்.

சீர்காழி திருத்தலத்தின் பன்னிரண்டு சிறப்புப் பெயர்கள்

1. பிரமபுரம்

புராணங்களின்படி, பிரம்மதேவனுக்கு தான் என்னும் அகந்தை (கர்வம்) ஏற்பட்டதாம். அதனால், மஹாபலி சக்கரவர்த்தியை நரகத்திற்கு அனுப்பிவிட்டாராம். இதன் காரணமாக தகாத விளைவுகள் ஏதும் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் விதமாக சிவபெருமான் வேடன் உருவத்தில் வந்து பிரம்மதேவனின் அகந்தையை அழித்து, தனது தவறை உணர்ந்துகொள்ளச் செய்தாராம். இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்தது இத்தலத்தில்தான் என்பதால், இத்தலத்திற்கு, பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் என்ற பெயர் ஏற்பட்டது. பிரமபுரம் (பிரமாபுரமேவிய பெம்மான்).

2. வேணுபுரம்

இறைவன் மூங்கில் வடிவமாகத் தோன்றியதால் வேணுபுரம் என்று அழைக்கப்படுகிறது.

3. புகலி

சூரனுக்குப் பயந்த தேவர்களுக்குப் புகலிடமாக விளங்கிய தலமாதலின் – புகலி.

4. வெங்குரு

குருவான வியாழன் வழிபட்டு, குருத்துவம் பெற்றமையால் – வெங்குரு.

5. தோணிபுரம்

ஏழு தீவுகள் அடங்கிய இந்தப் பேரண்டத்தை, ஒரு சந்தர்ப்பத்தில் கடல் பொங்கி அழித்தது. அப்போது சீர்காழி திருத்தலம், பிரளய வெள்ளத்திலும் தோணியாக மிதந்து அழியாதிருந்தது. இதனால் இவ்வூர் “தோணிபுரம்” என்றும் போற்றப்படுகிறது.

6. பூந்தராய்

பூமியைப் பிளந்து சென்ற இரணியாக்கனைக் கொன்ற வராக மூர்த்தி வழிபட்டதால் – பூந்தராய்.

7. சிரபுரம்

தலைக்கூறாகிய ராகு பூசித்ததால் – சிரபுரம்.

8. புறவம்

புறா வடிவில் வந்த அக்கினியால் சோழ மன்னன் நற்கதியடைந்தமையால் – புறவம்.

9. சண்பை

சண்பைப் புல்லால் மாய்ந்த தம்குலத்தோரால் வந்தபழி தன்னைப் பற்றாதிருக்க, கண்ணபிரான் (திருமால்) வழிபட்டதால் – சண்பை.

10. ஸ்ரீகாளி (சீகாழி)

தில்லைப் பெருமானுடன் வாதாடிய குற்றம்போக, காளி இங்கு வந்து வழிபட்டதால் – ஸ்ரீகாளி (சீகாழி),

11. கொச்சை வயம்

மச்சகந்தியைக் கூடிய கொச்சையாம் பழிச்சொல் நீங்கப் பராசரர் பூசித்ததால் – கொச்சை வயம்.

12. கழுமல வள நகர்

உரோமச முனிவர் இத்தலம் அடைந்து பூசித்ததால் ஞானோபதேசம் பெற்று (சிவபோகம் நுகரச்செய்யும்) உலகில் உயிர்களது மலங்கழுவும் வரம் பெற்றதனால் ‌ – கழுமல வள நகர் என பெயர் பெற்றது.

சீர்காழி கோவில் அமைப்பு

கோவில் ஊர் நடுவே நான்கு கோபுர வாயில்களுடன் அழகுற விளங்குகிறது. கணநாத நாயனார் தொண்டுசெய்து வாழ்ந்த தலம். இத்திருக்கோவிலின் இறைவன் – பிரமபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர். இறைவி – பெரியநாயகி, திருநிலைநாயகி. தலமரம் – பாரிசாதம். தீர்த்தம் – பிரம தீர்த்தம் முதலாகவுள்ள 22 தீர்த்தங்கள்.

பிரமதீர்த்தமே பிறவற்றினும் மேலானது. இக்கரையில்தான் ஞானசம்பந்தர், ஞானப்பாலையுண்டார். ‘திருமுலைப்பால் உற்சவம்’ இன்றும் சித்திரைப் பெருவிழாவில் இரண்டாம் நாள் விழாவாக நடைபெறுகின்றது. ‘திருமுலைப்பால் உண்டார் மறுமுலைப்பால் உண்ணார்’ என்பது இப்பகுதியில் சொல்லப்படும் மொழியாகும்.

இறைவன் திருமேனிகளுள் அடிப்பாகத்திலுள்ள பிரமபுரீஸ்வரர் பிரமன் பூசித்தது – இலிங்கவடிவம். இடைப்பகுதியிலுள்ள தோணியப்பர் (ஞானப்பால் தந்தவர்) குரு வடிவம். சட்டை நாதர் சங்கமவடிவம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது.

மாவலியிடம் சென்று மண்கேட்டுப் பெற்ற மகாவிஷ்ணு, செருக்குற்றுத்திரிய, வடுகநாதர் சென்று தம் திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பிலடித்து வீழ்த்தினார். இலக்குமி மாங்கல்ய பிச்சை கேட்க அவ்வாறே அருள்செய்ய மகாவிஷ்ணு உயிர்பெற்றெழுந்து வணங்கினார். தம் தோலையும் எலும்பையும் அணிந்து கொள்ளமாறு அவர் வேண்ட, இறைவனும் எலும்பை கதையாகக்கொண்டு, தோலைச் சட்டையாகப் போர்த்து அருள் செய்தார். இவ்வடிவமே சட்டைநாதர் வடிவமாகும்.

sirkazhi temple moolavar sattainathar

சீர்காழி சட்டைநாதர் கோவில் வரலாறு

திருஞானசம்பந்தரின் அவதாரத் திருத்தலம்

தோடுடைய செவியன்” என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் இந்த சீர்காழியில் தான் பாடினார்.

உலக நாயகி பார்வதி அம்மையிடம் திருமுலைப்பால் அருந்திய திருஞானசம்பந்தரின் அவதாரத் திருத்தலம். அவர் ஞானப்பாலுண்டு அற்புதங்கள் நிகழ்த்திய தலம்.

இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். திருஞானசம்பந்தர் சைவமும், தமிழும் தழைக்கவும், உலகம் உய்யவும் முருகப்பெருமானின் திரு அவதாரமாக அவதரித்தவர்.

சீர்காழித் திருத்தலத்தில் சிவபாத இருதயர் – பகவதி அம்மையாருக்கு மகனாகப் பிறந்த அவர், தன்னுடைய மூன்று வயதில் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்திற்கு தந்தையுடன் சென்றார். தந்தை அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடியபோது, சம்பந்தருக்கு பசி ஏற்பட்டது. அவர் ஆலயத்தையும், குளத்தில் மூழ்கி நீராடிக்கொண்டிருந்த தந்தையையும் பார்த்தபடியே அழுதுகொண்டிருந்தார். குழந்தையின் அழுகுரலை குளத்தினுள் மூழ்கி நீராடிய தந்தையால் உணர முடியவில்லை. ஆனால், குழந்தையின் அழுகுரலைக் கேட்ட சீர்காழி திருத்தல ஈசன் தோணியப்பர், பார்வதியிடம் குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அவ்வண்ணமே அன்னை உமையவளும் ஞானப்பாலை சம்பந்தருக்கு ஊட்டி, அவரது கண்ணீரைத் துடைத்து விட்டு, சிவபெருமானுடன் தரிசனம் கொடுத்து மறைந்தார்

சிறிது நேரத்தில் குளித்து விட்டு வந்த சிவபாத இருதயர், சம்பந்தரின் வாயில் பால் எச்சிலைக் கண்டு ‘யார் தந்த எச்சில் பாலை உண்டாய்? சொல்’ எனக் கேட்டு, சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார். அப்போது சம்பந்தர், சிவனும் – பார்வதியும் அம்மையப்பனாய் தரிசனம் தந்த திசையைக் காட்டி, ‘தோடுடைய செவியன் விடையேறி’ என்று பதிகம் பாடலானார். ஆம்! அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி. மூன்று வயது குழந்தையின் பாடலைக் கேட்டு சொக்கி நின்றது கூட்டம்.

பிரளய காலத்தில் தோணியில் அம்மையும் அப்பனும் இங்கு வருவதால், இறைவன் தோணியப்பர் என்ற பெயரிலும், அன்னை பெரியநாயகி என்ற பெயரிலும் அருள்கின்றனர். இவர்கள் இருவரும் ஆலய சிறு குன்றின் நடுப்பகுதியில் வீற்றிருக்கிறார்கள். இவர்களே சம்பந்தருக்கு காட்சி தந்து ஆட்கொண்டவர்கள்.

sirkazhi sattainathar temple thoniappar

திருஞானசம்பந்தர் வாழ்ந்த வீடு, சீர்காழியில் திருஞானசம்பந்தர் தெருவில் அமைந்துள்ளது. தற்போது அந்த வீட்டில் தேவாரப் பாடசாலை நடைபெற்று வருகிறது. சீர்காழியில் மூன்று மூர்த்தங்களாக ஈசன் அருள்பாலித்து வருகிறார். பிரம்மதேவர் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர், கிழக்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார். இவர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். பிரம்மபுரீஸ்வரரின் வலதுபுறம் தனிச் சன்னிதியில் திருஞானசம்பந்தர் உற்சவராக எழுந்தருளியுள்ளார். பிரம்மபுரீஸ்வரரின் கருவறைக்கு மேல்தளத்தில் கட்டுமலையில் தோணியப்பரும், பெரிய நாயகி அம்மனும் குரு மூர்த்த வடிவில் அருள்புரிகிறார்கள். தோணியப்பர், பெரியநாயகி அம்பாளின் பின்புறம் பிரம்மதேவர், விஷ்ணு, சரஸ்வதி, லட்சுமி என அனைவரும் சிவபெருமானை வணங்கிய வண்ணம் திருக்கயிலைக் காட்சி பெறுகிறார்கள்.

முருகன், காளி, பிரமன், திருமால், குரு, இந்திரன், சூரியன், சந்திரன், அக்கினி, ஆதிசேஷன், ராகு, கேது, வியாசர் முதலியோர் இறைவனை வழிபட்டுப் பேறு பெற்ற தலம்.

சீர்காழியின் பெருமையை திருஞானசம்பந்தர் திருப்பதிகத்தில் பாடிய சிறப்பு

திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

2.070 திருக்கழுமலம் திருச்சக்கரமாற்று பண் – காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1

பிரமனூர், வேணுபுரம், புகலி,
வெங்குரு, பெருநீர்த் தோணி
புரம், மன்னு பூந்தராய், பொன்னம்
சிரபுரம், புறவம், சண்பை,
அரன்மன்னு தண்காழி, கொச்சை
வயம், உள்ளிட்டுஅங்கு ஆதி ஆய,
பரமன்ஊர் பன்னிரண்டாய் நின்றதிருக்
கழுமலம், நாம் பரவும் ஊரே.

பொழிப்புரை: இத்திருப்பதிகம் சீகாழியின் பன்னிரு திருப்பெயர்களைத் தனித்தனியே முதலிற் கொண்டு பன்னிரு பாடல்களாக அமைந்துள்ளது. கழுமலத்தின் பெயரை மட்டும் பெரும்பாலும் முடிவாகக் கொண்டுள்ளது. நாம் பரவும் ஊர் பிரமனூர் முதலாகக் கொச்சைவயம் உள்ளிட்ட பன்னிரண்டு திருப்பெயர்களை உடைய கழுமலமாகும்.

பாடல் எண் : 2

வேணுபுரம், பிரமனூர், புகலி, பெரு
வெங்குரு, வெள்ளத்து ஓங்கும்
தோணிபுரம், பூந்தராய், தூநீர்ச்
சிரபுரம், புறவம், காழி,
கோணிய கோட்டாற்றுக் கொச்சை
வயம்,சண்பை கூரும் செல்வம்
காணிய வையகத்தார் ஏத்தும்
கழுமலம்நாம் கருதும் ஊரே.

பொழிப்புரை: நாம் கருதும் ஊர் வேணுபுரம் முதலாக சண்பைச் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டு செல்வம் கருதிய வையகத்தார் ஏத்தும் கழுமலமாகும்.

பாடல் எண் : 3

புகலி, சிரபுரம், வேணுபுரம், சண்பை, புறவம், காழி,
நிகர்இல் பிரமபுரம், கொச்சைவயம், நீர்மேல் நின்ற மூதூர்,
அகலிய வெங்குருவோடு, அந்தண் தராய், அமரர் பெருமாற்கு இன்பம்
பகரு நகர்நல்ல கழுமலம்நாம் கைதொழுது பாடும் ஊரே.

பொழிப்புரை: நாம் கைதொழுது பாடும் ஊர் புகலி முதலாக பூந்தராய் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக்கொண்ட, சிவபெருமானுக்கு இன்பம் தரும் நல்ல கழுமலமாகும்.

பாடல் எண் : 4

வெங்குரு, தண்புகலி, வேணுபுரம்,
சண்பை, வெள்ளம் கொள்ளத்
தொங்கிய தோணிபுரம், பூந்தராய்,
தொகுபிரம புரம்,தொல் காழி,
தங்கு பொழிற்புறவம், கொச்சை
வயம்,தலைபண்டு ஆண்ட மூதூர்
கங்கை சடைமுடிமேல் ஏற்றான்
கழுமலம்நாம் கருதும் ஊரே.

பொழிப்புரை: நாம் கருதும் ஊர் வெங்குரு முதலாக சிரபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களை உடையதும், கங்கையணிந்த சடை முடியினை உடைய சிவபிரான் எழுந்தருளியதும் ஆகிய கழுமலமாகும்.

பாடல் எண் : 5

தொல்நீரில் தோணிபுரம், புகலி, வெங்குரு, துயர்தீர் காழி,
இன்னீர வேணுபுரம், பூந்தராய், பிரமனூர், எழில்ஆர் சண்பை,
நல்நீர பூம்புறவம், கொச்சை வயம்,சிலம்பன் நகரா, நல்ல
பொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலம்நாம் புகழும்ஊரே.

பொழிப்புரை: நாம் புகழும் ஊர், கடல்மேல் மிதந்த தோணிபுரம் முதலாகச் சிரபுரம் உள்ளிட்ட பன்னிரு பெயர்களைக்கொண்டதும், நல்ல பொன் போன்ற சடையினை உடையான் எழுந்தருளியதுமான பொலிவுடைய கழுமலமாகும்.

பாடல் எண் : 6

தண்அம் தராய்,புகலி, தாமரையான் ஊர்,சண்பை, தலைமுன்ஆண்ட
வண்ண நகர்கொச்சை வயம்,தண் புறவம்,சீர் அணிஆர் காழி,
விண்ணியல்சீர் வெங்குரு,நல் வேணுபுரம், தோணிபுரம், மேலால் ஏந்து
கண்ணுதலான் மேவியநல் கழுமலம்நாம் கைதொழுது கருதும் ஊரே.

பொழிப்புரை: நாம் கைதொழுது கருதும் ஊர், தண்மையான பூந்தராய் முதலாகத் தோணிபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களை உடைய இருகண்களுக்கு மேல் நெற்றியில் நிமிர்ந்துள்ள கண்ணை உடையோனாகிய சிவபிரான் மேவிய கழுமலமாகும்.

பாடல் எண் : 7

சீர்ஆர் சிரபுரமும், கொச்சைவயம், சண்பையொடு, புறவம், நல்ல
ஆராத் தராய்,பிரம னூர்,புகலி, வெங்குருவொடு அந்தண் காழி,
ஏரார் கழுமலமும், வேணுபுரம், தோணிபுரம், என்று என்றுஉள்கிப்
பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பரிய பெருமான் ஊரே.

பொழிப்புரை: சீர் பொருந்திய சிரபுரம் முதலாகத் தோணிபுரம் நிறைவாய்ப் பன்னிரு திருப்பெயர்களை நினைந்து இவ்வூரைப் பிரியாதவனாய், திருமாலும் பிரமனும் வழிபட்டும் காண்பரிய பெருமானாய் உள்ள சிவபிரானது ஊர் கழுமலம்.

பாடல் எண் : 8

புறவம், சிரபுரமும், தோணிபுரம், சண்பை,மிகு புகலி, காழி,
நறவ மிகுசோலைக் கொச்சை வயம்,தராய், நான்முகன் தன்ஊர்,
விறல்ஆய வெங்குருவும், வேணுபுரம், விசயன் மேல் அம்புஎய்து
திறலால் அரக்கனைச் செற்றான்தன் கழுமலம்நாம் சேரும் ஊரே.

பொழிப்புரை: நாம் சேர்வதற்குரிய ஊர் புறவம் முதலாக வேணுபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டது. அது அருச்சுனனோடு விற்போர் செய்தவனும் இராவணனை அடர்த்தவனும் ஆகிய சிவபிரானது கழுமலமாகும்.

பாடல் எண் : 9

சண்பை, பிரமபுரம், தண்புகலி, வெங்குரு,நல் காழி, சாயாப்
பண்புஆர் சிரபுரமும், கொச்சை வயம்,தராய், புறவம், பார்மேல்
நண்புஆர் கழுமலம்,சீர் வேணுபுரம், தோணிபுரம், நாண்இலாத
வெண்பல் சமணரொடு சாக்கியரை வியப்புஅழித்த விமலன் ஊரே.

பொழிப்புரை: நாணமற்ற வெண்பற்களைக்கொண்ட சமணர்கள், சாக்கியர்கள் ஆகியோரின் பெருமைகளை அழித்த விமலனது ஊர், சண்பை முதலாகத் தோணிபுரம் ஈறாகப் பன்னிரு பெயர்களைக் கொண்ட ஊராகும்.

பாடல் எண் : 10

செழுமலிய பூங்காழி, புறவம், சிரபுரம்,சீர்ப் புகலி,
செய்ய கொழுமலரான் நல்நகரம், தோணிபுரம், கொச்சைவயம், சண்பை, ஆய விழுமியசீர் வெங்குருவொடு, ஓங்குதராய், வேணுபுரம், மிகுநன் மாடக்கழுமலம். என்று இன்னபெயர் பன்னிரண்டும் கண்ணுதலான் கருதும்ஊரே.

பொழிப்புரை: செழுமையான அழகிய காழி முதலாக வேணுபுரம் ஈறாகப் பன்னிருபெயர்களைக் கொண்டது கண்ணுதலான் கருதும் ஊராகும்.

பாடல் எண் : 11

கொச்சை வயம்,பிரமனூர், புகலி, வெங்குரு, புறவம், காழி,
நிச்சல் விழவுஓவா நீடார் சிரபுரம், நீள் சண்பை மூதூர்,
நச்சஇனிய பூந்தராய், வேணுபுரம், தோணிபுரம், ஆகி நம்மேல்
அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் கழுமலம்நாம் அமரும் ஊரே.

பொழிப்புரை: நாம் விரும்பும் ஊர், கொச்சைவயம் முதலாகத் தோணிபுரம் உள்ளிட்ட பன்னிரு பெயர்களைக்கொண்டதும் நம்மேல் வரும் அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் எழுந்தருளியிருப்பதுமான கழுமலமாகும்.

பாடல் எண் : 12

காவி மலர்புரையும் கண்ணார் கழுமலத்தின் பெயரை, நாளும்
பாவியசீர்ப் பன்னிரண்டு நல் நூலாப் பத்திமையால், பனுவன் மாலை,
நாவில் நலம்புகழ்சீர் நான்மறையான், ஞானசம் பந்தன் சொன்ன,
மேவிஇசை மொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்பு உளாரே.

பொழிப்புரை: குவளை மலர் போலும் கண்களை உடைய மகளிர் வாழும் கழுமலத்தின் பெயர்களை நாள்தோறும் புகழ்மிக்க பன்னிரு நூல்கள் போல நாவினால் நலம் புகழ்ந்து ஞானசம்பந்தன் பாடிய இப்பனுவல்மாலையை இசையோடு மொழிபவர் விண்ணவர்களில் ஒருவராக எண்ணப்பெறும் மேலான விருப்புடையவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

பதிகம் பாடியோர்

திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரி நாதர், கணநாதர், நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார், அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்துதாண்டவ தீட்சிதர் ஆகியோரும்கூட இத்தலத்தின் மீது பாடல்கள் பாடியுள்ளனர்.

Sirkazhi Temple Inscriptions

கல்வெட்டுகள்: இக்கோவிலில் 47 கல்வெட்டுகள் இருக்கின்றன. சோழ மன்னர்களது கல்வெட்டுகளோடு வீர விருப்பண்ண உடையார் கல்வெட்டுகளும், கிருஷ்ணதேவராயரது கல்வெட்டுகளும் இருக்கின்றன. இந்தக் கல்வெட்டுகளிலிருந்து பல பழக்க வழக்கங்களும், நில அளவை முறைகளும், தலம் மூர்த்தி இவைகளின் அமைப்புகளும் விளக்குவதாக உள்ளன. “இராஜராஜ வளநாட்டுத் திருக்கழுமல நாட்டுப் பிரமதேசம் திருக்கழுமலம்” என்ற நீண்ட பெயரில் இத்தலம் குறிப்பிடப்பட்டிருக்கும். வீர ராஜேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், ராஜாதிராஜன் முதலிய சோழ மன்னர்கள் ஏற்படுத்தியுள்ள நிபந்தங்கள் கணக்கில் பல இவன்றிம்மூலம் அறியவருகிறது.

Sirkazhi Temple Theertham

தீர்த்தங்கள்: இவ்வாலயத்தில் பிரம்ம தீர்த்தம், காளி தீர்த்தம், கழுமல தீர்த்தம், விநாயக நதி என இருபத்திரண்டு தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஞானசம்பந்தருக்கு உமை அன்னை ஞானப்பால் ஊட்டிய பிரம்ம தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்த்தாகும்.

sirkazhi sattainathar temple pond

Sirkazhi Sattainathar Temple Festivals

திருவிழா: சித்திரை திருவாதிரையில் பிரம்மோத்ஸவம் தொடங்கும். இதில் 2ம் நாள் சம்பந்தருக்கு அம்பாள் பால் தந்த உற்சவம் பிரம்ம தீர்த்தத்தின் கரையில் நடக்கிறது. அன்றைய தினம் ஞானசம்பந்தருக்கு நைவேத்யம் செய்த பாலை பிரசாதமாக சாப்பிட்டால் மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். மலைக் கோவிலில் அருள்பாலிக்கும் உமா – மகேஸ்வரருக்கு சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாதப்பிறப்புகளிலும், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை மற்றும் சிவராத்திரி நாட்களிலும் தைலாபிஷேகம் நடைபெறும். ஆடிப்பூரம், நவராத்திரி. தை அமாவாசை, வைகாசி மூலம், ஆனி ரோகிணி, ஐப்பசி சதயம் ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜை உண்டு.

Sirkazhi Sattainathar Temple Timings

சீர்காழி கோவில் திறக்கும் நேரம்: காலை 06:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும்.

Sirkali Temple Phone Number: +91-4364-270235, +91-9443053195

Sirkazhi Sattainathar Temple Address

அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோவில், சீர்காழி – 609 110. நாகப்பட்டினம் மாவட்டம்.

106 D, Pidari South Street, Thenpathi, Sirkali, Tamil Nadu 609110.



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்