×
Wednesday 27th of November 2024

எளிய சமையல் குறிப்புகள்


உள்ளடக்கம்

Cooking Tips in Tamil

  1. இட்லி மாவில் உளுந்து போதாமல், மாவு கெட்டியாயிருந்தால் பச்சை அப்பளங்களைத் தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓடவிட்டு மாவில் கலந்து விடுங்கள். இட்லி மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும்.
  2. சமைக்கும்போது உருளைக்கிழங்குகளை மிக அதிகமாக வேகவிட்டு விடுவது உண்டு. இம்மாதிரி சமயங்களில் உருளைக்கிழங்குகள் மாவுபோல ஆகிவிடாமல் தடுக்க, பால் பவுடர் தூளைக் கொஞ்சம் கிழங்குகள்மேல் தூவி விடுங்கள் – சிறிது நேரத்தில் கிழங்குகள் கெட்டிப்பட்டுவிடும்.
  3. “சொத சொத’வென்று சப்பாத்தி மாவு ஆகிவிட்டதா? கவலையே வேண்டாம். ஃப்ரீசரில் ஓர் அரைமணி நேரம் வைத்த பின் எடுத்து உருட்டி சப்பாத்திகளாக இடுங்கள். மாவு இறுகி விடுவதால் சுலபமாக இட வரும்.
  4. கோதுமை, மைதா போன்ற மாவுகளைப் பயன்படுத்திப் பூரி, சப்பாத்தி செய்யும்போது, மாவு தேவையான அளவு இல்லை என்று தெரிந்தால், உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் அகற்றிப் பிசைந்து அதை கோதுமை அல்லது மைதாவுடன் சேர்த்துப் பிசைந்து பூரி, சப்பாத்தி செய்யலாம்.
  5. சாம்பாரில் உப்பு கூடினால் ஒரு முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி சாம்பாரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். அதிகமாக உள்ள உப்பின் சுவை குறைந்துவிடும்.
  6. வத்தக் குழம்பு மற்றும் காரக் குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம். சிறிது தேங்காய்ப்பால் விட்டு இறக்குங்கள். காரம் குறைவதுடன் சுவையும், மணமும் பிரமாதமாக இருக்கும்.
  7. தக்காளி சூப் நீர்த்து இருந்தால், மாவு கரைத்துவிடுவதற்குப் பதில் அதில் ஒரு வெந்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்கவும். சத்தும், ருசியும் அதிகரிக்கும்.
  8. தோசை வார்க்கும்போது தோசை ரொட்டி போல் வந்தால், சாதம் வடித்த கஞ்சியைச் சிறிதளவு தோசை மாவில் கலந்து தோசை வார்த்துப் பாருங்கள். தோசை பூப்போல் மிருதுவாய் இருக்கும்.
  9. முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்றவைகளை வேக வைக்கும் பொழுது ஒரு சொட்டு எலுமிச்சை சாறு ஊத்தி வேக வைத்தால் வேண்டாத வாசம் போய் விடும்.
  10. தேங்காய் துருவும் பொழுது ஓட்டையும் சேர்த்து துருவி பயன்படுத்தினால் குடல் புண் உண்டாகும். அதனால் வெள்ளைப் பகுதியை மட்டும் பயன்படுத்தவும்.
  11. மிளகாய் வத்தலை வறுக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் ஹச்…… ஊச்……… என்று தும்மல் ஏற்பட்டு பாடாய்படுத்தாது.
  12. வடகத்தை வெறும் வாணலியில் வறுத்த பின் எண்ணெயில் வறுத்தால் நன்றாக பொறிந்து மொறு, மொறுப்பாக இருக்கும்.
  13. வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது. வேப்பம்பூவிற்கு எங்கே போவது என நினைக்க வேண்டாம். கடைகளில் கிடைக்கிறது.
  14. அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது. தாது உப்புக்களும், வைட்டமீன்களும் அருகம்புல்லில் அதிகம்.
  15. ஓமப்பொடி செய்யும் பொழுது கடலைமாவு, மூன்று பங்கு, அரிசி மாவு ஒரு பங்கு சிறிது மைதா கலந்து செய்தால் எண்ணெய் குடிக்காமலும், தூள் அதிகமாகமலும், நன்றாக எடுக்க வரும். கறிவேப்பிலைச் செடி நன்கு வளர புளித்த மோருடன் நீர் கலந்து ஊற்றி வரலாம்.
  16. மைசூர் பாகு செய்வதற்குக் கடலை மாவை டால்டாவில் கரைத்து பின் சர்க்கரைப் பாகில் கிளறினால் கட்டியில்லாமல் மென்மையாக வரும்.
  17. ஜாடியில் ஊறுகாயைப் போடும் முன் கொதிக்கும் எண்ணெயில் நனைக்கப்பட்ட துணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்த பின் ஊறுகாயைப் போட்டு மூடி வைத்தால் பூசனம் பிடிக்காமல் இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • மே 18, 2022
குல்கந்து செய்வது எப்படி?
  • மே 15, 2022
ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)
  • ஏப்ரல் 21, 2022
கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?