10+ Healthy Vegetarian Soup Recipes in Tamil
Vegetable Soup Seivathu Eppadi
காய்கறி சூப் செய்வது எப்படி?
🍲 மழைக்காலங்களில், குளிர் காலங்களில் அடிக்கடி சூடாக தேநீர் குடிக்கும் பழக்கம் நிறைய பேருக்கு உண்டு. அதற்கு மாற்றாக காய்கறி சூப் சொந்தமாகத் தயாரித்து இதமான குளிரில், பதமான சூட்டில் உட்கொண்டால் சூழலிற்கு ஏற்றதாகவும், உடலிற்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும். சத்துள்ள காய்கறி சூப் தயாரிப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போமா:
தேவையான பொருட்கள்:
காரட் – ஒன்று
தக்காளி – ஒன்று
பீட்ரூட் – ஒன்று
பீன்ஸ – இரண்டு
காலி·பிளவர் – ஒன்று
வெங்காயம் – இரண்டு
பச்சை மிளகாய் – இரண்டு
பால் – 200 மி.லி.
பெருங்காயம் – சிறிதளவு
சோளமாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் – ஒரு ஸ்பூன்
உப்பு – சிறிதளவு
கொத்தமல்லி தேவையான அளவு
செய்முறை:
- காற்கறிகள் அனைத்தையும் சுத்தமான நீரில் கழுவி, பின்னர் மிகவும் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் தேவைப்படும் அளவிற்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாய், வெங்காயத்தைப் போட்டு நன்கு சிவக்கும் வரை வதக்கவும்.
- வதக்கியதும் இரண்டு லிட்டர் தண்ணீர் விட்டு அதில் சோள மாவைப் போட்டு நன்கு கலக்கவும்.
- தண்ணீர் கொதி வந்ததும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை அதில் போடவும். காய்கறி நன்கு வெந்து கலந்ததும், பாலை விட்டு இறக்கவும்.
- பின்னர் உப்பு மற்றும் மிளகுப் பொடியைக் கலந்து பச்சைக் கொத்தமல்லியை மேலாகத் தூவவும்.

Mudakathan Keerai Soup Seivathu Eppadi
முடக்கத்தான் கீரை சூப் செய்வது எப்படி?
🍲 அன்றைய காலத்தில் போல் இன்று இயற்கை உணவுகள் இல்லை. அனைவரும் பாஸ்ட் பூட் என ஓடுகிறோம், ஓய்வில்லாமல் உழைக்கிறோம், குறிப்பாக உடலுக்கு வேலை கொடுக்காமல் அறிவுக்கு வேலை கொடுக்கிறோம், உடல் உழைப்பு தான் சிறந்த உடற்பயிற்சியாக இருந்தது.
🍲 இதனால் மூட்டு வலிகள், முழங்கால் வலி, முழங்கை வலி, இடுப்பு வலி போன்றவை அன்று குறைவாகவே இருந்தது. ஆனால் இன்று இவை எல்லாம் அதிகரித்துவிட்டது. இன்று இந்த வலிகளுக்கான தீர்வை தான் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்:
தக்காளி, சோள மாவு, வெங்காயம் மற்றும் முடக்கத்தான். இவற்றை கொண்டு மூட்டுவலி தீர்க்கும் முடக்கத்தான் கீரை சூப் இதோ..!
செய்முறை:
- முதலில் அடுப்பை பற்ற வைத்து சட்டியை அடுப்பில் வைக்கவும்.
- பின் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் மற்றும் தக்காளி போட்டு நன்றாக வதக்கவும், பின் இதனுடன் சிறிதளவு சோள மாவு சேர்க்கவும், இதில் முடக்கத்தான் கீரையை போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் அரை லீட்டர் அளவு தண்ணீர் விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து அப்படியே மூடி வைத்து விடவும்.
- 10 – 15 நிமிடம் மூடி போட்டு கொதிக்க வைக்கவும். பின்பு இறக்கினால் சுடச் சுட மூட்டுவலி தீர்க்கும் முடக்கத்தான் சூப் ரெடி. இதனை வாரம் ஒரு முறை குடித்து வந்தாலே போதுமானது.

Muttaikose Soup Seivathu Eppadi
முட்டைகோஸ் சூப் செய்வது எப்படி?
🍲முட்டைகோஸை ஜூஸ் போட்டு குடித்தால் அல்சர் குணமாகும். உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட வேண்டும். முட்டைகோஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இவை செரிமான மண்டலத்தை சீராக இயக்கி மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்.
மேலும் உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய் ஆகியவற்றை குணப்படுத்தும். காலையில் தினமும் வெறும் வயிற்றில் பருகினால் உடல் கொழுப்பு கரையும்.
தேவையான பொருள்கள்:
முட்டைகோஸ் – கால் கிலோ
மிளகு – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
செய்முறை:
- முதலில் முட்டைகோஸை நன்கு கழுவி சிறியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- பின் கடாயில் எண்ணெய் எடுத்துக்கொண்டு அதில் மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.
- தாளித்ததும் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- நன்கு வதங்கிய பின்பு நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து வதக்க வேண்டும்.
- அதன்பின் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கால் மணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.
- நன்கு கொதித்ததும் அதனை வடிகட்டி மிளகுத்தூள், கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து குடிக்க வேண்டும்.

Thoothuvalai Keerai Soup Seivathu Eppadi
தூதுவளை கீரை சூப் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
தூதுவளை இலை – 1 கப்
மிளகு, சீரகம் – 2 தேக்கரண்டி
பூண்டு – 1
புளி தண்ணீர் – 2 கப்
எண்ணெய் – 1 தேக்கரண்டி
மஞ்சள் துாள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- தூதுவளை, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை எண்ணெயில் வதக்கி, அரைக்கவும். அதில், மஞ்சள் துாள், உப்பு, புளி தண்ணீர் சேர்க்கவும்.
- வாணலியில், எண்ணெய் காய்ந்ததும், கடுகு தாளித்து பின், இந்த கலவையை ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கமகம… தூதுவளை கீரை சூப் தயார்.
- இதைப் பருகினால், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல், தும்மல் மற்றும் மழைக்கால வியாதிகள் ஓடிப்போகும். சூப்பை வெது வெதுப்பாக குடிக்கவும். சாதத்தில் ஊற்றி பிசைந்தும் சாப்பிடலாம். உடனே பலன் கிடைக்கும்.

Makka Cholam Soup in Tamil
மக்காசோளம் சூப் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
மக்காசோளம் – 1/2 கப்.
முட்டைக்கோஸ்(அரிந்தது) – 1/2 கப்.
காரட்(அரிந்தது) – 1/2 கப்.
பால் சிறிதளவு.
உப்பு தேவையான அளவு.
மிளகு பொடி தாவையான அளவு.
செய்முறை:
- முதலில் மக்காசோளம், முட்டைகோஸ், காரட் ஆகியவைகளை தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
- வேகவைத்த காய்களில் இரண்டு மேஜைக்கரண்டி அளவு மக்காசோளம் மட்டும் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- மீதம் உள்ள வேகவைத்த அனைத்து காய்கறிகளையும் நன்றாக ஆறியவுடன் மிக்ஸ்-இல் அரைக்கவும்.
- அதனை வடிகட்டி எடுத்த ஜூஸ் வுடன் தனியே எடுத்து வைத்துள்ள மக்காசோள பற்களையும் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
- கொதித்ததும் கொஞ்சம் பால் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கலக்கவும்.
- அதனுடன் சிறிது மிளகு பொடி சேர்த்து அடுப்பை அணைக்க வேண்டும். சூடான மக்காசோள சூப் தயார்.

Dhaniya Soup Seivathu Eppadi
தனியா சூப் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
சீரகம் – கால் கப்
தனியா – கால் கப்
மிளகு – 2 டீஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு
எலுமிச்சை சாறு – சிறிதளவு
தண்ணீர் -2 கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கு
செய்முறை:
- இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- சீரகம், தனியா, மிளகு ஆகிய மூன்றையும் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும். இந்த கலவையுடன் தண்ணீர் சேர்த்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- அந்த தண்ணீர் கலவையுடன் உப்பு சேர்த்து அடுப்பில் கொதிக்கவைக்க வேண்டும்.
- நன்றாக கொதித்து பக்குவம் வந்ததும் இறக்கி, அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக பரிமாறவும். சூப்பரான தனியா சூப் ரெடி.

Moongil Arisi Soup Seivathu Eppadi
மூங்கில் அரிசி சூப் செய்வது எப்படி?
🍲 மூங்கில் அரிசியை நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்துவதன் மூலம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும். இனிப்பு சுவையுடன் கூடிய மூங்கில் அரிசி உறுதியானது என்பதுடன், ஊட்டச்சத்து நிறைந்த அரிசியாகும். உடலில் உள்ள வாத, பித்த, கப தோஷங்களை நிவர்த்தி செய்வதுடன் உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்டது. அதாவது சிறுநீர் வழியே உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் வகையில் இதன் செயல்பாடு அமைகிறது. மூங்கில் அரிசியில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மூங்கில் ரைஸ் (‘காதி கிராஃப்ட்’டில் கிடைக்கும்) – ஒரு கப்,
கேரட் – ஒன்று ,
பட்டாணி – ஒரு கப்,
பீன்ஸ் – 5,
வெங்காயம் – ஒன்று,
பூண்டு – 2 பல்,
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு,
மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- பீன்ஸ், கேரட், கொத்தமல்லி, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பட்டாணியை வேக வைத்து கொள்ளவும். மூங்கில் அரிசியில் கல் இருந்தால் நீக்கிவிட்டு, கழுவி 30 நிமிடம் ஊற வைத்து சாதம் சமைப்பது போல் வேக வைத்து கொள்ளவும். (குக்கரில் போட வேண்டாம்). வடிகஞ்சியையும் உபயோகிக்கவும்.
- கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, கேரட், பீன்ஸ், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- இதனுடன் வேக வைத்த பட்டாணியும் சேர்த்து வதக்கவும்.
- உப்பு, மிளகுதூள், வடித்த கஞ்சியை சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு, காய்கறி பாதி வெந்தவுடன் மூங்கில் ரைஸை சேர்த்து, கொதி வந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி, இறக்கி பரிமாறவும்.
- சத்தான மூங்கில் அரிசி காய்கறி சூப் ரெடி.

Cauliflower Soup Seivathu Eppadi
காலிஃப்ளவர் சூப் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
🍲 காலிஃப்ளவர் 1 கப், காலிஃப்ளவர் தண்டு 1 கப், பால் 3 கப், நெய் 3 தேக்கரண்டி, மைதா 2 தேக்கரண்டி, எண்ணை 1 தேக்கரண்டி, உப்பு தேக்கரண்டி, வெங்காயம் 1, மிளகு தேக்கரண்டி, பூண்டு 6 பல்.
செய்முறை:
- காலிஃப்ளவரை மிக மிக சின்னத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காலி பிளவர் தண்டு, பூண்டு, வெங்காயத்தை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- இனி வாணலியில் நெய்யை விட்டு சூடுபடுத்தவும். அதில் காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு 2 நிமிடம் வதக்கி மிளகு, உப்பு போட்டு தனியாக எடுத்துக்கொள்ளவும்.
- தொடர்ந்து வாணலியில் எண்ணை விட்டு அரைத்த காலி பிளவர் தண்டு, பூண்டு, வெங் காயத்தை இட்டு சிறிதுநேரம் கழித்து மைதா மாவை கலக்கவும்.
- தீ மெதுவாக எரியவேண்டும். பின்னர் ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாக சூடேறியதும் எடுத்து ஆற விடுங்கள். பிறகு முன்னதாக தயாரித்து வைத்து இருந்த காலிஃப்ளவர் மசியலை எடுத்து கலக்கி மீண்டும் சூடுபடுத்தவும்.
- இப்போது மேலும் ஒரு கப் தண்ணீர், ஒரு கப் பாலை கலக்கவும். காலிஃப்ளவர் சூப் ரெடி. சுவை அபாரமாக இருக்கும். உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. இப்ப எங்கே போறீங்க? காலிஃப்ளவர் வாங்கத்தானே 🙂

Mulaikattiya Pasi Payaru Soup Seivathu Eppadi
முளைகட்டிய பாசிப்பயறு சூப் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
முளைகட்டிய பாசிப்பயறு – அரை கப்,
பெரிய வெங்காயம் – 1, பூண்டு – 4 பல்,
தனியாதூள் – 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய புதினா, கொத்துமல்லி,
எண்ணெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
தேங்காய்ப்பால் – ஒரு கரண்டி.
செய்முறை:
- வெங்காயம், பூண்டைத் தோலுரித்து பொடியாக நறுக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பூண்டு, வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதங்கியதும், புதினா, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும்.
- 3 டம்ளர் தண்ணீரில், தனியாதூளைக் கரைத்து வடிகட்டி, வதக்கிய கலவையில் சேர்க்கவும். நன்றாகக் கொதிக்கும்போது, முளைகட்டிய பயறைச் சேர்த்து, வேகவிடவும். அரை வேக்காடு வெந்ததும் இறக்கி, தேவையான உப்பு சேர்த்து, தேங்காய்ப்பாலை ஊற்றிக் கலந்து பரிமாறவும்.
- தனியா வாசத்துடன், வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த சூப்.
- விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் மிளகுத்தூளை, கொதிக்கும்போது சேர்க்கலாம். சிறிது கெட்டியாக வேண்டும் என்பவர்கள், பாதி வெந்த நிலையில் இருக்கும் பயறை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, அரைத்து, சூப்பில் சேர்த்துக் கலக்கிக்கொள்ளலாம்.

French Onion Soup Seivathu Eppadi
ஃபிரெஞ்சு ஆனியன் சூப் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
🍲 பிரெட் ஸ்லைஸ் – 4, வெண்ணெய் – 50 கிராம், வெள்ளை வெங்காயம் – 2 (பெரியது), சீஸ் (அ) பனீர் – 50 கிராம், காய்கறி வேக வைத்த தண்ணீர் – ஒரு லிட்டர், சர்க்கரை – சிறிதளவு, உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு.
செய்முறை:
- ‘மைக்ரோவேவ் அவன்’-ஐ ‘ப்ரி-ஹீட்’ செய்து, பிரெட் ஸ்லைஸ் நடுவில் துருவிய சீஸ் அல்லது பனீரை வைத்து மொறுமொறுப்பாக ஆகும் வரை வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.
- கடாயில் வெண்ணெயை சேர்த்து, சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- இதில் சர்க்கரை, உப்பு சேர்த்து, பொன்னிறமாக ஆகும் வரை மேலும் வதக்கவும்.
- காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து, கெட்டியானவுடன் இறக்கவும்.
- வறுத்த பிரெட் துண்டுகளை கப்பில் வைத்து, அதன் மேல் சூப் ஊற்றி, மிளகுத்தூள், சிறிதளவு துருவிய சீஸ் தூவி பரிமாறவும்.
🍲 காய்கறி வேகவைத்த தண்ணீர் தயாரிக்க: வெங்காயம், செலரி, கேரட், டர்னிப், தக்காளி – தலா ஒன்று ( பெரிதாக நறுக்கவும்), பூண்டு – 2 பல் (தட்டவும்), பிரிஞ்சி இலை – ஒன்று, தைம் இலை – ஒரு டீஸ்பூன், பாஸில் இலை – ஒரு டீஸ்பூன், மிளகு – 3 டீஸ்பூன், லவங்கம் – 2, பட்டை – ஒன்று, உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – 3 லிட்டர் எடுத்துக் கொள்ளவும்.
🍲 ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய்கறிகள் மற்றும் இதர பொருட்களை போட்டு முதலில் அதிக தீயில் 5 – 10 நிமிடம் கொதிக்கவிட்டு, பிறகு மிதமான தீயில் 30-45 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, ஆறியவுடன் வடிகட்டி பாட்டிலில் சேகரித்துக் கொள்ளவும்.

Vendakkai Soup Seivathu Eppadi
வெண்டைக்காய் சூப் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் – 4 (பெரியதாக நறுக்கவும்), சாதம் – ஒரு கப், வெள்ளை மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப, சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், பூண்டு – 2 பல், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- கடாயில் எண்ணெயை விட்டு, சூடானதும் நறுக்கிய வெண்டைக்காயை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- இதில் பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு நன்கு வதக்கி, தண்ணீர் ஊற்றி, சாதம், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- நன்கு கொதித்தவுடன் சோயா சாஸ், வெள்ளை மிளகுத்தூள்சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து, இறக்கி பரிமாறவும்.

Badam Soup Seivathu Eppadi
பாதாம் சூப் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
பாதாம் – 50 கிராம், வெங்காயம் – ஒன்று, செலரி, பாஸில் இலை – சிறிதளவு, காய்கறி வேகவைத்த தண்ணீர் – அரை லிட்டர், பால் – ஒரு கப், பாதாம் – சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- பாதாம்பருப்பை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 அல்லது 15 நிமிடம் வரை வைத்திருந்து தோலை உரித்தெடுக்கவும்.
- ஒரு பாத்திரத்தில், உரித்த பாதாம், செலரி, பாஸில், நறுக்கிய வெங்காயம், காய்கறி வேக வைத்த தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து வேகும் வரை கொதிக்க வைக்கவும்.
- வெந்தவுடன் இறக்கி, மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.
- இதனை அடுப்பில் வைத்து, மிக சிறு தீயில் சிறிது நேரம் கிண்டி, அடுப்பிலிருந்து இறக்கும்போது பால் சேர்க்கவும்.
- இதனை சூப் கிண்ணத்தில் ஊற்றி, மேலே வறுத்த பாதாமை நறுக்கி சேர்த்துப் பரிமாறவும்.
