- நவம்பர் 24, 2024
உள்ளடக்கம்
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்றார் கிருஷ்ண பரமாத்மா. இதனை பீடுடை மாதம் என்று அழைப்பார்கள். இந்த சொல் நாளடைவில் திரிந்து பீடைமாதம் என்று வழக்கில் வந்துவிட்டது. பீடுடை மாதம் எனில் “சிறந்த, பெருமைவாய்ந்த, மதிப்புள்ள மாதம்” என்று பொருள். அதனால் அல்லவோ பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தான் அந்த மாதமாக இருப்பதாக பறைசாற்றியுள்ளார்.
காலத்தை கணக்கிடுவதற்கு என சில அளவு கோல்கள் உள்ளன. வருடம் அயனம், மாதம், பக்ஷம், வாரம் என்பவை நடைமுறையில் உள்ளன. ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள் எனவும், இரண்டு அயனங்கள் எனவும் கணக்கிட்டுள்ளனர். இரண்டு அயனங்களும் முறையே உத்தராயணம், தக்ஷிணாயணம் என்று பெயர். “தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய” உள்ள ஆறு மாதங்களுக்கு உத்தராயணம் எனவும், “ஆடி மாதம் முதல் மார்கழி முடிய” உள்ள ஆறு மாதங்களுக்கு தக்ஷிணாயனம் எனவும் பெயர்.
மனித இனத்திற்கு கால அளவு உள்ளது போன்றே தேவர்களுக்கும் கால அளவு உண்டு. மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அதாவது ஒரு பகல் ஒரு இரவு. தை முதல் ஆனி மாதம் முடிய உள்ள உத்தராயணம் என்பது தேவர்களின் பகல். ஆடி முதல் மார்கழி முடிய உள்ள தக்ஷிணாயனம் என்பது தேவர்களின் இரவு. இரவின் கடைசி பகுதியாகிய விடியற்காலை நேரமாக தேவர்கட்கு அமைவது மார்கழி மாதம்.
எந்த ஒரு காரியத்தையும் சிந்தித்து செயல்படுத்த் திட்டம் தீட்டும் நேரம் விடியற்காலையாக அமைந்தால் அமைதியாக சிந்திக்கவும் சிந்திப்பதற்கு ஏற்ப செயல் படுத்துவதற்குண்டான வழி முறைகளை அமைப்பதற்கும் நல்ல சூழ்நிலையாக இந்த விடியற்காலை அமையும். அதோடு மேற்கொள்ள இருக்கும் செயலுக்கு விடிவும் நன்கு புலப்படும். இந்த நேரத்தில்தான் சிறுவர்கள் படிப்பதற்கு ஏற்ற நேரம் என்பார்கள். அப்போது படித்தால் படித்தது மனதில் பசுமரத்தாணிபோல் நன்கு பதிந்து இருக்கும் என்பதை அநுபவ பூர்வமாக உணர்ந்து தெரிவித்துள்ளனர் நமது முன்னோர்கள்.
தூங்கி எழும்போது இறைவனின் நினைவோடு எழ வேண்டும் என்பது மறபு. “உத்திஷ்ட சிந்திய ஹரிம்” என்று ஒரு வாக்கு உள்ளது. மனிதனின் ஒரு நாள் துவக்கம் இறை சிந்தனையோடு துவங்கினால் அந்த நாள் முழுவதும் பயனுள்ளதாக அமையும்.
தேவர்களின் ஒரு நாளின் துவக்கம் மார்கழி மாதத்தில் அமைவதால் அந்த நேரத்தில் தேவதா சிந்தனையுடன் மனிதனும் தன் வாழ்நாளில் நாளினை துவக்க வேண்டும் என்று விதித்துள்ளனர். ஆகையினால்தான் பகவானும், மார்கழி மாதமாக நான் இருக்கிறேன் என்பதின் நோக்கம், அந்த மாதம் முழுதும் என் நினைவாக இருந்து உனது செயலை துவக்கினால், “எடுத்துக்கொண்ட செயல் யாவிலும் என் அருளால் வெற்றி பெற்று பயனுருவாய்” என்று அருள்கின்றார்.
இந்த மாதத்தை நோன்பு மாதம் என்றும் சொல்வதுண்டு. பாவையர் நோன்பிலிருந்து நல்கணவனைப் பெறுவார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முதுமொழி. மார்கழியில் பாவையர் நோன்பிருந்து வழிபட தை பிறந்தவுடன் அவர்களின் விரதத்தின் பயனாக நல்லதொரு வழி பிறந்து அவர்களின் நோக்கம் நிறைவேறும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. ஆகவேதான் சைவ வைஷ்ணவர்கள் இந்த மாதத்தினை சிறப்பாக நோன்பிருந்து கொண்டாடி வழிபட என்று வகுத்துள்ளனர். வைணவ ஆழ்வார்களில் ஒரே பெண்மணியாக உள்ள ஆண்டாள், மார்கழி நோன்பிருக்க என திருப்பாவை பாடி அளித்துள்ளார். சைவக்குறவர்கள் நால்வரில் கடைசீயான மாணிக்கவாசகப் பெருந்தொகை திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி எனவும் இந்த மார்கழி மாதத்திற்கு எனவே பாடி வழிபட அளித்துள்ளார்.
மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் சிவபெருமான் கோவில்களிலும் கூட சிறப்பு வழிபாடு நடைபெறும். பாவை நோன்பு, வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீஹனுமந்த் ஜெயந்தி, சிவபெருமானின் ஆருத்ரா தரிசனம் என அனைத்து இறைவழிபாடுகளும் மார்கழி மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. சபரி மலை விரதம், பூஜை, வழிபாடு என இவை அனைத்தும் கூட மார்கழி மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் தெய்வங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. மொத்தத்தில், தெய்வங்களை தொழுவதற்கென்றே உள்ள மாதம் தான் மார்கழி.
மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்று கூறுவார்கள். இந்த மாதத்தில் சூரியன் குருவின் வீட்டில் (தனுசு) இருப்பார். இதன் காரணமாக சூரியக் கதிர்கள் பரவுவதற்கு முன் ஒரு தனி சக்தி உண்டாகும். இதன் காரணமாகவே அதிகாலையில் எழுந்து கோலமிட வேண்டும். அப்போது பெய்யும் பனிப்பொழிவானது நள்ளிரவில் பெய்யும் பனியைவிட மென்மையானதாக, தாக்கம் குறைந்ததாக, விஷத்தன்மையற்றதாக இருக்கும். சூரியக்கதிர் பரவுவதற்கு முன்னதாக வாசல் தெளித்து கோலமிடும்போது மார்கழி மாத தட்பவெப்பநிலைக்கு உடல் ஒத்துப்போகும். பெரிய நோய்கள் ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும். மாறாக பனிப்பொழிவுக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் உடல்நலம் மேம்படாது.
சீதோஷண நிலையை, வாழும் சூழலுக்கு தகுந்தாற்போல் அமைத்துக் கொள்ளவே, வாசலில் கோலமிட்ட பின்னர் விளக்கு வைத்து வழிபட வேண்டும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் விளக்கு வைப்பதால் அதிலிருந்து வெளியேறும் வெப்பம் வீட்டை கதகதப்பாக வைக்க உதவும். சீதோஷண நிலையும் சமனடையும்.
மார்கழி மாத விரதங்களில் ஏதேனும் ஒன்றை முழுமையாகக் கடைபிடித்தால் கூட பின்வரும் நன்மைகள் நமக்கு கிடைக்கும். அதன் படி, மார்கழி மாத விரதம் இருப்பவர்களுக்கு:
இப்படியாக இவ்வளவு சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் நாமும் கூட நமது இஷ்ட தெய்வத்தை தினமும் தொழுவோம். சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம்.
Also, read: மார்கழி பாவை நோன்பு