×
Monday 27th of January 2025

சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்


Sankatahara Chaturthi in Tamil

சங்கடஹர சதுர்த்தி விரதம்

வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை என்றே சொல்லப்படுகிறது.

சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும். பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கட ஹர சதுர்த்தி. “சங்கட” என்றால் “துன்பம்”, “ஹர” என்றால் “அழித்தல்”. துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.

ஆண்டின் ஆவணி மற்றும் மாசி மாத காலத்தில் பௌர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியே மஹா சங்கடஹர சதுர்த்தியாகும். இந்த சிறப்பான விரதத்தை அனுஷ்டித்தே அங்காரகன் என்ற செவ்வாய், நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை அடைந்தார். கிருஷ்ணர், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றனர். சிவனைப் பிரிந்த சக்தி இந்த விரதத்தை மேற்கொண்டுதான் சிவனை அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. கிருதவீரியன் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொண்டுதான் கார்த்தவீரியன் என்ற மகனைப் பெற்றான். பாண்டவர்கள்கூட இந்த விரதம் இருந்தே வெற்றி பெற்றனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கட ஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதம்.

2024 Sankatahara Chaturthi Dates in Tamil

தேதி / நாள் கிழமை
ஜனவரி 29, 2024 திங்கள்
பிப்ரவரி 28, 2024 புதன்
மார்ச் 28, 2024 வியாழன்
ஏப்ரல் 27, 2024 சனி
மே 26, 2024 ஞாயிறு
ஜூன் 25, 2024 செவ்வாய்
ஜூலை 24, 2024 புதன்
ஆகஸ்ட் 22, 2024 வியாழன்
செப்டம்பர் 21, 2024 சனி
அக்டோபர் 20, 2024 ஞாயிறு
நவம்பர் 19, 2024 செவ்வாய்
டிசம்பர் 18, 2024 புதன்

Sankashti Chaturthi Fasting Procedure in Tamil

சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி?

சங்கடஹர சதுர்த்தி வரும் அதிகாலையில் எழுந்து வீட்டில் உள்ள விநாயகரை முதலில் தரிசித்து விட வேண்டும். பின்னர் குளித்து முடித்து விநாயகருக்கு விளக்கேற்றி, அருகம்புல் அல்லது கிடைத்த மலர்களை வைத்து பூஜிக்கலாம். தூப தீப, நைவேத்தியம் செய்வது சிறப்பானது. அன்று முழுவதும் அதாவது மாலை வரை உபவாசம் இருப்பது நல்லது. மாலை வேளையில் அருகில் உள்ள கணபதி கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வசதி இருந்தால் அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம். பிரசாதமும் அளிக்கலாம். வழிபட்டு வீடு திரும்பும்போது அந்த நாளைய சந்திரனை தரிசித்து வேண்ட வேண்டும். அதன்பிறகு உணவு முடித்து விரதத்தை பூர்த்தி செய்யலாம். முடியாதவர்கள் பால், பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம்.

தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று வரும் சதுர்த்தி திதியில் துவங்கி ஓர் ஆண்டு முழுமையாக இந்த விரதம் இருந்தால், எண்ணியது எண்ணியவாறே நடக்கும். எல்லா காரியமும் தடையின்றி நடக்கும் என்று சொல்லப்படுகிறது. தன்னைக் கிண்டல் செய்த சந்திரனின் ஆணவத்தைக் கண்டித்து சாபமிட்டார் விநாயகப்பெருமான். ஆணவம் ஒழிந்த சந்திரன் இந்த சதுர்த்தி நாளில்தான் அனுக்கிரஹம் பெற்றான். எனவே இந்த நாளில் கணபதியை தரிசித்து விட்டு சந்திரனைக் காணலாம் என்று சொல்லப்படுகிறது.

Sankatahara Chaturthi Fasting Benefits in Tamil

சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் பலன்கள்

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.

சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய,

ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி : ப்ரசோதயாத்

எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன். வாழ்வின் எல்லா நலன்களையும் அளிக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மகிமையை உணர்ந்து பலன் பெறுவோம்.

 

Also, read



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஜனவரி 20, 2025
தைப்பூசம் - திருவிழா, தைப்பூச விரதம்
  • நவம்பர் 24, 2024
பொங்கல் வாழ்த்துகள்: Pongal Wishes in Tamil
  • ஆகஸ்ட் 20, 2024
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி [கோகுலாஷ்டமி]