×
Saturday 28th of December 2024

கண் திருஷ்டியைக் களைவது எப்படி?


How to Remove Kan Drishti in Tamil?

கண் திருஷ்டியைக் களைவது எப்படி?

“கல்லடி பட்டாலும், கண்ணடி படக் கூடாது,” என்று பெரியோர்கள் கூறுவதுண்டு. காரணம் கல்லால் ஏற்படும் வேதனை தற்காலிகமானது, அதன் விளைவுகளின் தன்மையை மனித அறிவால் ஓரளவு கணிக்க முடியும். ஆனால், கண் திருஷ்டியின் விளைவுகளோ பல ஆண்டுகளுக்கும் ஏன் பல பிறவிகளுக்கும் கூட தொடரக் கூடியது. அதன் விளைவுகளின் தன்மையை மனித அறிவால் கணித்துக் கூற முடியாது.

மனிதன் தன்னுடைய பூர்வ ஜன்மத்தில் செய்த வினைகளின் பலனையே இப்பிறவியில் நோய்களாகவும், விபத்துக்களாகவும், கடன் தொல்லைகளாகவும் அனுபவித்து வருகிறான் என்று சொல்கிறோம் அல்லவா? அது போல மனிதர்கள் அனுபவிக்கும் திருஷ்டி துன்பங்களும் அவர்களுடைய பூர்வ ஜென்ம செயல்களின் பலன்களே என்பதில் ஐயமில்லை.

நோய்த் துன்பங்கள், கடன் தொல்லைகள் போன்ற துன்பங்களை இறை வழிபாடுகள், தீர்த்த யாத்திரைகள் போன்ற ஆன்மீக சாதனங்களால் முற்றிலும் தணிக்க முடியாது என்பது உண்மையே ஆயினும் அத்துன்பங்களின் விளைவுகளை நிச்சயமாக இறை வழிபாடுகளால் ஓரளவு குறைத்துக் கொள்ளலாம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மேலும், எத்துன்பத்தையும் ஏற்றுக் கொள்ள தேவையான மன உறுதியைப் பெற ஆன்மீக சாதனம் ஒன்றுதான் வழி என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.

திருஷ்டிகள் சூழும் வாயில்கள்

ஒருவர் அழகான புது கார் ஒன்றை வாங்கி அதில் பயணம் செய்கிறார் என்றால் அப்போது அந்தக் காரையும் அதில் பயணம் செய்பவரையும் அனைவரும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை. அந்தக் காரின் சொந்தக்காரருக்கும் அவருடைய அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள் போன்றோருக்கும் கார் மூலம் மிகவும் சந்தோஷம் கிடைக்கலாம்.

அவருடைய சகோதர, சகோதரிகள் அந்த அளவிற்கு ஆனந்தத்துடன் அந்தப் புதுக் காரை வரவேற்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது. அவருடைய நண்பர்கள், மற்ற உறவினர்கள் பலவித கேள்விக் குறிகளுடன் அந்தக் காரை எதிர் கொள்வார்கள். அவருடைய எதிரிகளுக்கும், தினமும் மைல் கணக்கில் நடந்தோ, சைக்கிள் போன்ற வாகனங்களிலோ பயணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளவர்களும் அந்தப் புதுக் காரைப் பார்க்கும்போது தங்களையும் அறியாமல் ஒரு பொறாமை எண்ணத்தை மனத்தில் வளர்த்து விடுவார்கள்.

இவ்வாறு அந்தக் காரைப் பார்த்து சந்தோஷம் அடைபவர்களின் புண்ணிய சக்திகளும், பொறாமை கொள்பவர்களின் புண்ணிய சக்திகளும் ஒன்றையொன்று எதிர் கொள்ளும்போது இந்த சக்திகளில் பொறாமை சக்திகளின் வெளிப்பாடு அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும்  நிலையையே நாம் திருஷ்டி என்று அழைக்கிறோம்.

இவ்வாறு நல்ல எண்ணெங்கள், நற்சக்திகளின் விளைவுகளை விட தீய சக்திகளின், பொறாமை எண்ணங்களின் தாக்குதல் அதிகரிக்கும்போது அந்த சக்திகளின் தீவிரத்தைப் பொறுத்து விபத்துகள், காரின் சில பாகங்கள் பழுதடைதல், தீப்பிடித்தல், உயிருக்கு ஆபத்து ஏற்படுதல் போன்ற துன்பங்கள் ஏற்படுகின்றன.

அதனால்தான்,

அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

அதாவது, அழுக்காறு என்னும் பொறாமைத் தீ அறத்தைப் பாழக்கி விடும் என்று வள்ளுவப் பெருந்தகை எச்சரிக்கிறார்.

எனவே எந்த அளிவிற்குப் புண்ணிய சக்தியை பெருக்கிக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு பொறாமை எண்ணங்களிலிருந்தும் அதன் விளைவாக ஏற்படும் திருஷ்டி தோஷங்களிலிருந்தும் நம்மையும் நம்முடைய உடைமைகளையும் நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

பொறாமை ஏற்படுவதற்கு மூல காரணமாக இருப்பது கண்தானே. அதனால் திருஷ்டி ஏற்படும்போது அது எந்த வித காரணத்தால் ஏற்பட்டாலும் அதை கண் திருஷ்டி என்றே வகைப்படுத்துகிறோம். கண்களால் தூண்டப்பட்ட மனது பக்குவம் அடையாத நிலையில் இருக்கும்போது அது பொறாமை எண்ணமாக வடிவெடுத்து மற்றவர்களைத் தாக்குகிறது.

இவ்வாறு ஒரு எண்ணம் பொறாமையாக மாறி மற்றவர்களுக்கு அது துன்பத்தை இழைக்கும்போது எந்த அளவிற்கு அதனால் ஏற்படும் விளைவுகள் கொடியதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு பொறாமை கொண்டவர்களின் புண்ணிய சக்திகள் கரைந்து விடும் என்பதை உணர்ந்து கொள்வது அவசியம்.

இவ்வாறு மனிதர்களைத் தாக்கும் பொறாமை சக்திகள் அவர்களின் கண்கள், மூக்கு, காது போன்ற ஒன்பது துவாரங்கள் வழியாக உடலில் புகுந்து துன்பத்தை விளைவிக்கின்றன. எனவே பொறாமை எண்ணங்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க விழைவோர் அவர்கள் உடலில் உள்ள நவ துவாரங்களைத் தூய்மைப்படுத்தும் வழிபாடுகளை மேற்கொள்வதால் திருஷ்டித் துன்பங்களிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.

நவதுவார வழிபாடுகள்

  1. மனித உடல் ஒன்பது சரீரங்களின் தொகுதியாகும். கோயில் கோபுரங்களில் உள்ள கலசங்கள் மனித உடலின் தூல ரூபமாகும். எனவே, ஒன்பது கலசங்களுக்குக் குறையாமல் உள்ள கோயில் கோபுரங்களை தினந்தோறும் குறைந்தது மூன்று நிமிடங்கள் கண்ணார தரிசித்து வழிபடுதலால் மனித சூட்சும சரீரங்கள் தூய்மை பெறுவதுடன் உடலில் உள்ள நவதுவாரங்களும் சீர் பெறும். அதனால் திருஷ்டி துன்பங்களின் தீய விளைவுகள் தவிர்க்கப்படும்.
  2. திருவானைக் கோவில் போன்ற திருத்தலங்களில் மூல மூர்த்தியை நவசாளரங்கள் வழியாக தரிசனம் செய்து வழிபடுவதால் கண் திருஷ்டிகள் நம்மை எளிதில் தாக்காத வகையில் கவச சக்திகளைப் பெருக்கிக் கொள்ள முடியும். ஒன்பது சாளரங்களுக்கு மேல் உள்ள சிறுகமணி சிவத்தலம் போன்ற திருக்கோயில்களிலும் இத்தகைய வழிபாடுகளை மேற்கொண்டு பயனடையலாம்.
  3. மனித உடலின் நவதுவாரங்களுக்கு அதிபதியாக விளங்கும் தெய்வங்களே விநாயகப் பெருமானும், ஆஞ்சநேய மூர்த்தியும் ஆவார்கள். உலகிலேயே மிகப் பெரிய சுயம்பு பிள்ளையார் மூர்த்தியான திருச்சி உச்சிப் பிள்ளையார் அருளும் மலைக் கோட்டையை ஒன்பது முறைக்குக் குறையாமல் கிரிவலம் வந்து வணங்குவதால் கண் திருஷ்டி துன்பங்கள் விலகும்.
  4. ராமபிரான் கயிலை ஈசனை வழிபடுவதற்காக திருக்கயிலையிலிருந்து சிவலிங்க மூர்த்தியைப் பெற்று வருமாறு ஆஞ்சநேயரை அனுப்பினார் அல்லவா? அப்போது ஆஞ்சநேய மூர்த்தி கயிலையில் எம்பெருமானை லிங்க வடிவில் பூஜித்து அதன் பின்னரே ராமேஸ்வரத்திற்கு சிவலிங்கத்தைக் கொண்டு வந்தார். அவ்வாறு ஆஞ்சநேய மூர்த்தி கயிலை ஈசனை வழிபடும் சித்திரத்தை அல்லது உருவப் படத்தை அல்லது ராமேஸ்வரத்தில் உள்ள விஸ்வநாத லிங்க மூர்த்தியை தொடர்ந்து வழிபடுவதால் கண் திருஷ்டிக் கோளாறுகள் நம்மை அண்டாது.
  5. பொதுவாக, ஜாதக ரீதியாக செவ்வாய் கிரகம் ஆட்சி, உச்சமாக விளங்குபவர்கள் கண் திருஷ்டி துன்பங்களால் பாதிக்கப்படுவதில்லை. முருக பக்தர்களும், கௌமார உபாசகர்களையும் திருஷ்டித் துன்பங்கள் அண்டாது. எனவே குமரன் அருளும் மலைத் தலங்கள் யாவும் கண் திருஷ்டியை நீக்கும் தலங்களே. அதிலும் சிறப்பாக திருச்செங்கோடு, செங்கோட்டை அருகே திருமலை, கோயம்புத்தூர் அருகே அனுவாவி மலை போன்ற குமரத் தலங்கள் மிகவும் சக்தி வாய்ந்த கண் திருஷ்டிக் காப்புத் தலங்களாக சித்தர்களால் போற்றப்படுகின்றன.   
  6. திருமண வைபவங்களில் நவ தானியங்களை மண் சட்டிகளில் வளர்த்து முளைப் பாலிகைகளை வழிபடும் நிகழ்ச்சி ஒன்று உண்டு. புது மணத் தம்பதிகள் மேல் விரவும் கண் திருஷ்டி தோஷங்களைக் களைவதற்காகவும், தம்பதிகள் நற்சந்ததிகளைப் பெற்று வாழவும் இந்த முளைப் பாலிகை வழிபாடு ஒரு முக்கிய திருமண வைபவமாக நிறைவேற்றப்படுகிறது.
  7. இயற்கையாகவே, முளைப் பாலிகை வழிபாடு திருஷ்டி தோஷங்களை நீக்கும் ஆதலால் மண் சட்டிகளில் முளைப் பாலிகைகளை வளர்த்து திருச்சி சமயபுரம் அருகே ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயத்திலும், கண்ணாயிரம், செந்தாமரைக் கண்ணன், கண்ணாத்தாள் போன்று கண் பெயருடைய இறைவன், இறைவிகள் அருளும் தலங்களில் சமர்ப்பித்து வழிபாடுகள் நிறைவேற்றுவதால் கண் திருஷ்டி தோஷங்கள் அண்டாது பாதுகாத்துக் கொள்ளலாம். இந்த முளைப் பாலிகைகளை கன்றுடன் கூடிய பசுக்களுக்கு வழங்குவதும் ஓர் அற்புத வழிபாடாகும்.

How to Remove Kan Drishti for Babies in Tamil?

குழந்தைகள் மேல் படியும் திருஷ்டி தோஷங்கள்

பெரியவர்களை விட குழந்தைகளைத் திருஷ்டி தோஷங்கள் நிறையவே பாதிக்கும் வாய்ப்புகள் உண்டு. பெரும்பாலான குழந்தைகள் சுறுசுறுப்பாக ஆரவாரத்துடன் இருப்பதால் குழந்தைகள் மேல் இயற்கையாகவே பெரியவர்களுக்கும் உடல்நலம் குன்றியவர்களுக்கும் பொறாமை எண்ணங்கள் உருவாகி அவை திருஷ்டி தோஷங்களாக வளர்ந்து குழந்தைகளைத் தாக்குகின்றன.

இதனால்தான் முன் பின் தெரியாதவர்களிடம் குழந்தைகளைத் தரக் கூடாது என்று நம் முன்னோர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருந்தனர். தற்காலத்தில் தம்பதிகள் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருந்தால் அத்தகையோர் குழந்தைகளைக் காப்பகத்தில் விட்டு விடும் முறை வெகுவாக வளர்ந்து வருகிறது. பெற்றோர்களைத் தவிர மற்றவர்கள் குழந்தைகளுக்கு ஊட்டும் உணவு நிச்சயமாக அவர்கள் உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

இத்தகைய குழந்தைகளே எதிர்காலத்தில் பெற்றோர்கள் மேல் பாசம் என்பது என்னவென்று தெரியாமல் தான் தோன்றித்தனமாக வளர்ந்து தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி விடும் சூழ்நிலை உருவாகி விடுகிறது. பெற்றோர்கள் இதை நன்றாக ஆத்ம விசாரம் செய்து உரியமுறையில் செயல்பட வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

குழந்தைகள் வீட்டில் இருக்கும்போதும் வெளி இடங்களுக்கு அவர்களைக் கூட்டிச் செல்லும்போதும் கட்டாயம் குழந்தைகள் கன்னத்தில் ஒரு திருஷ்டி பொட்டு வைத்திருக்க வேண்டும். ஒரு நிமிடம் கூட குழந்தைகள் திருஷ்டி பொட்டு இல்லாமல் இருக்கக் கூடாது. இது பெற்றோர்களின் தலையாய கடமை.

கலியுக நியதியாக குழந்தைகள் மூன்று அல்லது ஐந்து வயது வரை தெய்வீகத் தன்மையுடன் விளங்குவதால் அவர்களுக்கு எதிர்காலத்தில் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளும் தங்கள் பெற்றோர்களுக்கு வரக் கூடிய துன்பங்களும், ஆபத்துகளும் முன் கூட்டியே தெரிய வரும். எனவே, முடிந்தவரை அக்குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுக்கு வரக் கூடிய துன்பங்களைத் தாங்களே எடுத்து அனுபவிப்பதால் பெரும்பாலான குழந்தைகள் அடிக்கடி நோய் வாய்ப்படுகின்றன. இதை அறிந்தால்தான் குழந்தைகளை தேவையில்லாமல் சபிப்பதோ, அவர்களை அடிப்பதோ, கடுஞ் சொற்களால் நிந்திப்பதோ எவ்வளவு தவறான செயல் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

குழந்தைகளுக்கு திருஷ்டி பொட்டு இடுவதற்கு உகந்த திருஷ்டிக் கண் மையை பெற்றோர்கள் தாங்களாகவே வீட்டில் தயாரித்துக் கொள்தல் நலம். இந்த திருஷ்டிக் கண் மையை குழந்தைகளுக்கு மட்டும் அல்லாமல் பெரியவர்களின் திருஷ்டி நிவாரணத்திற்காகவும், கண் பாதுகாப்பிற்காகவும், தெய்வ மூர்த்திகளின் அலங்காரத்திற்காகவும் பயன்படுத்தி பலன் பெறலாம்.

திருஷ்டி கண் மை

கரிசலாங் கண்ணி இலைகளை சிறிது நீர் விட்டு அம்மியில் வைத்து நன்றாக அரைக்க வேண்டும். நவீன மிக்சி, கிரைண்டர்களைத் தவிர்க்கவும். அவ்வாறு அரைத்த விழுதை ஒரு வெள்ளைத் துணியில் இட்டு சாறு பிழிய வேண்டும். அந்த சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து மண் சட்டியில் அல்லது வாணலியில் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

அப்போது சடசட வென்று எண்ணெய் பொரியும். நீர் முழுவதுமாக ஆவியாகி வெளியேறி விட்டால் எண்ணெயிலிருந்து சப்தம் எழாது. அப்போது எண்ணெயை இறக்கி வைத்து ஆற வைக்க வேண்டும். இதுவே கரிசலாங் கண்ணி தைலம் தயாரிக்கும் எளிய முறையாகும்.

இவ்வாறு தாங்களாக தயாரித்த கரிசலாங்க கண்ணி தைலத்தால் பெண்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், ஆண்கள் புதன், சனிக் கிழமைகளிலும் தலைக்குத் தேய்த்து எண்ணெய்க் குளியல் நிறைவேற்றி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும், தீர்க்கமான கண் பார்வை கிட்டும், கண் கோளாறுகள் அறவே நீங்கும். தோல் நோய்கள் நெருங்காது, இளநரையை தவிர்க்கக் கூடிய எளிய வைத்திய முறை இது. மலச்சிக்கல் ஏற்படாது. ஆயுள் வளரும்.

ஏழரை ஆண்டு சனி, ஜன்ம சனி, அஷ்டம சனி போன்ற சனீஸ்வர பகவான் பீடிப்பால் துன்பம் அனுபவிப்போர் சனீஸ்வர பகவான் தனிச் சன்னதி கொண்டு விளங்கும் திருத்தலங்களில் நல்லெண்ணெயுடன் கரிசலாங்கண்ணி தைலத்தை கலந்து எட்டு தீபங்கள் ஏற்றி வழிபடுதலால் நவகிரகங்களால் ஏற்படும் துன்பங்களிலிருந்து ஓரளவு நிவாரணம் கிட்டும். அகால மரணங்களைத் தவிர்க்கக் கூடிய அற்புத வழிபாடு இது.

சந்ததி இன்றி தவிப்போரும், பெண் வாரிசுகளை மட்டும் பெற்று நிராதரவாய் வருந்துவோரும், முதுமையில் துணை அற்றோரும் சனி ஹோரை நேரத்தில் அகல் விளக்கில் கரிசலாங்கண்ணி தீபம் ஏற்றி அஸ்தமன சூரிய மூர்த்தி விளங்கும் ஆலயங்களில் வழிபடுதலால் முதுமை சுமையாய் மாறாமல் உரிய பாதுகாப்பை இறைவன் அளிப்பார்.

இந்த தைலத்தால் இறைவனுக்கு விளக்கேற்றி வைக்க வேண்டும். ஒரு கொட்டாங்குச்சியில் (தேங்காய் மூடி) உட்புறம் சுத்தமான பசு வெண்ணெயைத் தடவி அந்த விளக்கு தீபத்தின் மேல் காட்ட வேண்டும். அப்போது தீபத்திலிருந்து எழும் புகை வெண்ணெயின் மேல் படிந்து சிறிது நேரத்தில் வெண்ணெய் கறுத்து விடும்.

இந்த கரிய குழம்பை ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு மையிடுவதற்காக, கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது குழந்தைகளின் மேல் படியும் அனைத்து விதமான திருஷ்டி தோஷங்களையும் களையக் கூடிய சக்தி வாய்ந்த காப்பாகும்.

 

Also, read



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 10, 2024
புனித யாத்திரை பாடல்கள்
  • அக்டோபர் 20, 2024
அதர்வ வேதத்தில் நோய் மற்றும் சிகிச்சை பரிந்துரைகள்
  • செப்டம்பர் 14, 2024
அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்