- மே 23, 2022
உள்ளடக்கம்
7500 ஆண்டுகளுக்கும் முற்பட்டது சிந்து சமவெளி நாகரிகம். அந்நாகரிகம் உலக நாகரிகங்களான எகிப்து, சீனம், மெசபடோமியா ஆகியவற்றை விட மூத்த நாகரிகம் என்பது அகில உலக வரலாற்று ஆய்வாளர்களின் ஒருமித்தக் கருத்து.
அக்கருத்திற்குச் சான்றாகச் சிந்து சமவெளிப் பகுதியில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வுகளின் போது கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளில் குறியீடுகளாலும், எழுத்துக்களாலும் அரிய பல செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவை படித்து பொருள் அறிய இயலாததொரு புரியாத புதிராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
சில வடநாட்டு அறிஞர்கள் அவை சமஸ்கிருதமாக இருக்கக் கூடும் எனவும், மறைந்த பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆய்வறிஞர் சர் அஸ்கோ பார்போலா, ஹிராஸ் பாதரியார், உருசிய நாட்டு ஆய்வறிஞர் சர் அலெக்சாண்டர் டுபியன்ஸ்கை (Sir Alexander Dubiansky) ஆகியோர் அவை பழந்திராவிட மொழி குடும்பத்தைச் சார்ந்தவையாக இருக்கக் கூடும் எனவும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிந்து சமவெளி முத்திரைகளை ஆய்வு செய்து வரும் திருச்சிராப்பள்ளியை சேர்ந்த தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் சிந்து சமவெளி முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகளும், எழுத்துக்களும் பழந்தமிழ் மொழியைச் சார்ந்தவை என்பதை ஆராய்ந்தறிந்து சிந்து சமவெளி நாகரிக மக்கள் பழந்தமிழர்கள் என்பதையும் உறுதிப்படுத்துகிறார்.
அதற்கோர் உதாரணமாக சிந்து சமவெளி முத்திரை எண்: எச்-25எ இல் பொறிப்பட்டுள்ள அரிய செய்தி ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளார். அச்செய்தியாவது,
சதுர வடிவிலான இந்த முத்திரையின் மேல் பகுதியில் புடைப்பு வகையைச் சேர்ந்த 11 பழந்தமிழ் எழுத்துக்களும், கீழ் பகுதியில் புடைப்பு வகையைச் சேர்ந்த ஒத்தக்கொம்பன் எனும் ஒத்தக்கோடு நந்தியும், பரத்தைப்பற்றி அறிந்தவன் என்பதைக் குறிக்கும் பரம்மஞான குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளன.
புடைப்பு வகையைச் சார்ந்த இந்த முத்திரை துணி, மரப்பட்டை ஆகிய மிருதுவானவற்றின் மீது அச்சிட்டு இடமிருந்து வலமாக பாலனருளினம் சிண்ணாண் (பாலன் அருள் இனம் சிண் ஆண்) எனப் படிக்கப்படுகிறது.
பாலன் என்பதற்கு காப்போன் எனவும், அருள் என்பதற்கு கருணை, பொழிவு, நல்வினை (நற்செயல்) எனவும் இனம் என்பதற்கு வகை, குலம், திரள், உவமானம் எனவும், சிண் என்பதற்கு கூட்டாளி (நண்பன்) எனவும், ஆண் என்பதற்கு ஆண்மரம் எனும் சேமரம் அல்லது அழிஞ்சில் மரம் எனவும் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. அதாவது இந்த முத்திரை காப்போனின் நற்செயலுக்கு உவமானம் நண்பனாகிய அழிஞ்சில் மரம் எனக் கூறுகிறது.
7500 ஆண்டுகளுக்கும் முன் சிண்ணாண் எனும் அழிஞ்சில் மரத்தின் மரத்தின் விதைகள் இந்த மரத்திலேயே ஏறி ஒட்டிக்கொள்வதனால் இதற்கு ஏறழிஞ்சில் மரம், அதிசய மரம் எனும் சிறப்புப் பெயருண்டு. வடமொழியில் அங்கோலம் என்ற பெயரும் உண்டு.
இம்மரங்கள் தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் ஸ்தல விருட்சமாக உள்ளன. அதற்கு உதாரணமாக காரைக்குடி வைரவன்பட்டி வைரவர் திருக்கோயிலையும், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகிலுள்ள சின்னகாவனம் நூற்றெட்டீஸ்வரர் சிவன் கோயிலையும் சுட்டிக்காட்டலாம். ஏறழிஞ்சில் எனும் அழிஞ்சில் மரத்திற்கு ஆன்மிக ரீதியிலும் மருத்துவ ரீதியிலும் தனிச் சிறப்புகளுண்டு.
ஆதிசங்கரர் சிவானந்த லஹரி-61 யில் பக்தியின் தன்மைக்கு ஏறழிஞ்சில் மரத்தின்; விதைகளை உவமைபடுத்தியுள்ளார். அப்பாடலின் உட்பொருளாவது-
அங்கோலம் எனும் ஏறழிஞ்சில் மரத்தின் விதைகள் பூமியில் விழுந்த பின், அவை ஊர்ந்து சென்று மீண்டும் அம்மரத்திலேயே ஒட்டிக் கொள்வது போலும், காந்தக் கல்லை அதன் ஊசி போலவும், தனது மணவாளனைப் பதிவிரதை போலவும், மரத்தைக் கொடி போலவும், கடலை நதி போலவும், ஒருவனது உள்ளத்தின் ஓட்டம் பரமசிவனது திருவடித்தாமரையை நாடி எப்போதும் நிலைபெற்றிருந்தால் அதுவே பக்தி எனப்படும்.
ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியின் உரையிலும் அங்கோலம் எனும் ஏறழிஞ்சில் மரத்தின் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.ஏறழிஞ்சில் மரங்கள் பங்குனி, சித்திரை மாதங்களில் பூத்து குலுங்கும். அப்பூக்களில் ஒருவகையான பூச்சிகள் முட்டையிடுவதாகவும், அம்முட்டைகள் புழுவாகி அம்மரத்தின் காயிலும் பழக்கொட்டைகளில் வாழ்வதாகவும், நிலத்தில் விழும் பறவைகளின் எச்சங்களான பழக் கொட்டைகளை அப்புழுக்கள் அம்மரத்தின் மீதேற்றி துளையிட்டு ஒட்டிக் கொள்ளச் செய்வதாகவும், பின்னர் அப்புழுக்கள் பூச்சிகளாகின்றன என இந்த அதிசய நிகழ்வுக்கு அறிஞர்கள் அறிவியல் ரீதியில் விளக்கம் அளிக்கின்றனர்.
ஏறழிஞ்சில் மரத்தின் பூ, காய், பழம், பரப்பட்டை ஆகியவை தோல், கபம், சுவாசம், குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தையும் தீர்க்கும் மருத்துவ குணமுடையவை. பாம்பு போன்ற விஷ சந்துக்களின் கடியால் உண்டாகும் விஷத்தை முறித்து மரணம் அடையாமல் பாதுகாக்கும் குணம் உடையதால் சித்த மருத்துவத்தில் இம்மரம் சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. அதுவானது-
பொல்லா விஷக்கடியும் போராடும் பேதிவகை
செல்லாக் சிரந்திரணம் சேர் நோய்களெல்லாமும்
அங்கொலங் காணில் அரந்தை செய் நோய்களெல்லாமும்
பொங்கோல மிட்டோடிப் போம்.
மேற்கண்ட ஆன்மிகம், மருத்துவம் ரீதியில் சிறப்புடைய அழிஞ்சில் மரம் 7500 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி நாகரிகப் பகுதியில் வாழ்ந்த பழந்தமிழர்களால் சிண்ணாண் எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டதும், அதுவே பிற்காலத்தில் ஏறழிஞ்சில் மரம் எனும் ஒரு காரணப் பெயராகவும், வடமொழியில் அங்கோலம் எனவும் பெயர் பெற்றுள்ளதாகக் கருதலாம் என தெரிவித்துள்ளார்.
Also, read