- ஜூலை 6, 2022
உள்ளடக்கம்
🛕 கங்லிங் என்பது முக்தியடைந்த முனிவர்களின் தொடை எலும்பில் துளையிடப்பட்டு அதன் ஒரு முனையில் குஞ்சங்கள் அல்லது கயிறு கட்டப்பட்ட ஓர் இசைக்கருவி எனவும், தீய சக்தியிலிருந்து பாதுகாக்கக் கூடிய வல்லமை கொண்ட இதனைக் குடியிருப்பு வீடுகளின் நுழைவாயில்களில் கட்டித் தொங்கவிடுவது பழங்கால சைவ (இந்து) சமய மரபு எனவும் J.R. Santiago, Sacred Symbols of Hinduism, p.60-யில் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்மரபு தற்காலங்களில் கங்லிங் என்பதற்குப் பதிலாக புல்லாங்குழல் கட்டுவதாக மாறியுள்ளது.
🛕 இதனைப் பற்றித் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ள செய்தியாவது,
🛕 மனித உடலில் உள்ள எல்லா எலும்புகளிலும் தொடை எலும்பு மிகவும் உறுதியானது என்பதனால் முற்காலத்தில் ஞான குருமார்களின் (லாமாக்களின்) மறைவுக்குப் பின்னர் அவர்களது தொடை எலும்பு மட்டும் பத்திரப்படுத்தப்பட்டு, அடுத்த தலைமுறைப் பொறுப்பேற்கும் குருமார்களுக்கு அதனைக் கொடுப்பது ஓர் ஆசிரமம் மரபாக இருந்துள்ளது. தொடை எலும்பிலான கங்லிங் பௌத்த சமயத்தைக் கடைபிடிக்கும் திபெத்தியர்களின் சடங்குகளில் பயன்படுத்தும் இது ஓர் இசைக் கருவியாகும்.
🛕 மேற்கண்ட சிறப்புடைய கங்லிங்கின் வடிவத்தை புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான் மலையில் எழுந்தருயுள்ள தாயார் சன்னதியின் நுழைவாயில் தரையில் பதிக்கப்பட்டுள்ள ஒரு பலகைக் கல்லின் மேலே பொறிக்கப்பட்டுள்ள “ஸ்வஸ்தி ஸ்ரீ திருநலக்குன்றத்து இராகுத்தராயன் ஆசிரயம் அஞ்சினான் புகலிடம்” என்னும் பழங்கால கல்வெட்டுக்குச் சாசனத்திற்கு மேலே வலதுபுறம் மனதைக் குறிக்கும் குரங்கின் உருவமும், இடது புறம் கங்லிங் குறியீட்டையும் காணலாம்.
🛕 புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் என்னும் ஊருக்கு அருகாமையில் அமைந்துள்ள சிவாலயத்தின் சுற்றுபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு கல்வெட்டில் “(ஸ்வஸ்திஸ்ரீ) இராகுத்தராயன் ஆசிரயம்” என்னும் எழுத்துப் பொறிப்புக்களின் கீழே இடது புறத்தில் மனதைக் குறிக்கும் குரங்கின் உருவமும், வலது புறத்தில் கங்லிங் குறியீட்டையும் காணலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
🛕 புதுக்கோட்டை மாவட்டம் அளுந்தியூர் (அலுந்தியூர்) என்னும் ஊரில் அமைந்துள்ள சிவாலயத்தின் மண்டப கற்குவியலில், இரண்டாக உடைந்துகிடந்த கல்வெட்டு ஒன்றில் “ஸ்வஸ்திஸ்ரீ ……. நாயனாரும் மதுபதியும் ஆசிரியம்” என்றச் செய்தி மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு அக்கோவில் வளாகத்தில் உள்ள வில்வமரத்தடியில் வடக்கு நோக்கி நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
🛕 குறிப்பு: “குடுமியான் மலை” என்பது முற்காலத்தில் “திருநலக்குன்றம்” என்று அழைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது. இத்தகைய கல்வெட்டுக்களை ஆசிரியக்கல் அதாவது “தன்னைக் காத்து உதவும்படி பிறருக்கு எழுதிவைக்கும் கல்வெட்டு” எனத் தமிழ் அகராதி கூறுகிறது.