×
Sunday 29th of December 2024

தரித்தத் திருப்பாணாழ்வார் கோட்டுருவம் ஆந்திர நாட்டில் கண்டுபிடிப்பு


உள்ளடக்கம்

Thiruppanazhwar Art Founded near Andhra Pradesh in Tamil

🛕 ஆந்திர பிரதேசம், கர்நூல் மாவட்டம், அகோபிலம் என்னும் ஊரில், ஸ்ரீ இலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் என்ற ஒரு வைணவத் திருத்தலம் அமைந்துள்ளது. அத்திருத்தலத்தின் திருச்சுற்றுப் பாதையில் பதிக்கப்பட்டுள்ள பலகைக் கல் ஒன்றின் மீது இசைக்கருவி ஒன்றை கையில் ஏந்தியபடி, இடையில் கச்சையும், கால்களில் காப்புகளும் அணிந்து, நின்ற கோலத்தில் காட்சித்தரும் திருவுருவக் கோட்டுருவம் ஒன்றை திருச்சி, உறையூரைச் சோர்ந்த வரலாற்று அறிஞரும், கிராமாலயா நிறுவனருமான சே.தாமோதரன் அவர்கள் கண்டுபிடித்துள்ளார்.

🛕 அக்கோட்டுருவத்தை ஆய்வு செய்த வரலாற்று அறிஞர் சே.தாமோதரன், தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் ஆகிய இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள செய்தியாவது,

🛕 “இக்கோட்டுருவம் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரும், துந்தனா என்னும் இசைக் கருவியைத் திருக்கரத்தில் ஏந்தியவருமான திருப்பாணாழ்வாரின் திருவுருவம்” என்பது தெரியவருகிறது. ஸ்ரீ இராமானுஜரின் “இறைவன் முன் எல்லோரும் ஒன்றே” என்ற கோட்பாட்டிற்கு திருப்பாணாழ்வாரின் வாழ்க்கை வரலாறு வலுவான ஒரு சான்றாகக் கூறப்படுவதுண்டு.

🛕 திருப்பாணாழ்வார் 7 அல்லது 8-ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டின் தலைநகரமாக விளங்கிய உறையூரில் திருமாலின் ஸ்ரீவத்ஸ அம்சராக பாணர் குலத்தில் அவதரித்தவராவார். இவருக்கு பாணர், முனிவாகனர், யோகிவாகனர், கவீசுவரர் என்ற சிறப்புப் பெயர்களுண்டு. 108 திருப்பதிகளில் இவர் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 3 கோவில்களை மங்களாசாசனம் செய்துள்ளார் என்பது தெரிய வருகிறது.

🛕 இவரது காலத்தில் பாணர் குலம் தீண்டாக் குலமாக இருந்துள்ளது. அதனால் இவர் காவேரி நதியின் கரையிலேயே நின்று கொண்டு துந்தனா என்னும் இசைக்கருவியை இசைத்து திருவரங்கத்தில் எழுந்தருளியுள்ள திருஅரங்கநாதரை:

பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்
கோரமாதவம் செய்தனன் கொல்? அறியேன் அரங்கத்தம்மான் திரு
ஆரமார்பதன்றோ அடியோனை ஆட்கொண்டதே – என மனமுறுகி பண் இசைத்து பாடி மகிழ்ந்து வந்துள்ளார்.

🛕 அவ்வாறு பாணர் பாடி மகிழ்ந்து வந்துள்ள ஒரு நாள் லோகசாரங்கர் என்னும் கோவில் பட்டர் திருஅரங்கனுக்கு திருமஞ்சனம் செய்யும் பொருட்டு காவேரி ஆற்றிலிருந்து குடத்தில் தண்ணீர் எடுத்து வந்துகொண்டிருந்தார். அவர் வரும் வழியில் தன்னிலை மறந்து திருஅரங்கநாதரை மனதால் நினைத்து வணங்கியவாறு நின்று கொண்டிருந்த பாணரை பலமுறை அழைத்தும் செவி கொடுக்காததால், பாணரை வழியிட்டு விலகும் பொருட்டு ஒரு கல்லை எடுத்து பாணர் மீது எறிந்தார் பட்டர். அவரால் எறியப்பட்ட அக்கல் பாணரின் தலையில் பட்டதால், அடிப்பட்ட தலையிலிருந்து குருதி பெருக்கெடுத்தது. அதைக் கவனிக்காமல் சென்ற லோகசாரங்கர் குடத்தில் தண்ணீரோடு திருஅரங்கன் திருமுன் சென்றார்.

thiruppanazhwar history art image

🛕 பாணரின் பக்தியின் சிறப்பை லோகசாரங்கருக்கு உணர்த்தும் வகையில் திருஅரங்கன் குருதி வடிந்த முகத்தினராய் காட்சி கொடுத்ததோடு மட்டுமின்றி, பாணரை தோளில் சுமந்து கொண்டு தம் திருமுன் நிறுத்தும்படியும் ஆணையிட்டார். லோகசாரங்கரரும் அவ்வாறே செய்தார். அந்நாள்வரை திருஅரங்கனை பார்க்காத பாணர் திருஅரங்கனின் தோற்றத்தை பாதம் முதல் உச்சி வரை பார்த்து மகிழ்ந்த மகிழ்ச்சியில்,

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன் என் உள்ளங் கவர்ந்தானை
அண்டா கோனணி அரங்னென் னமுதினைக்
கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாயே! – எனப் பத்துப் பாசுரங்களையும் பாடிமுடித்தார். அங்ஙனம் பாடி முடித்தவுடன், அனைவரும் காணும் வகையில் திருஅரங்கனின் திருவடியில் சரணடைந்து தோன்றாத்தன்மை பெற்று இவ்வுலகைவிட்டு மறைந்தார். இந்நிகழ்ச்சியின் காரணமாக இயற்பெயர் தெரியாத பாணருக்கு முனிவாகனன் என்றும் யோகிவாகனன் என்றும் பெயர் ஏற்பட்டதாக திருப்பாணாழ்வார் வரலாறு கூறுகிறது.

🛕 “இறைவன் முன் எல்லோரும் ஒன்றே” என்ற ஸ்ரீ இராமானுஜரின் கோட்பாட்டிற்கு ஒரு வலுவான சான்றான திருப்பாணாழ்வாரின் திருஉருவம் ஆந்திரா மாநிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது ஒரு சிறப்புச் செய்தியாகும். மேலும் திருச்சி உறையூரில் அமைந்துள்ள அருள்மிகு கமலவள்ளி நாச்சியார் கோவிலில் திருப்பாணாழ்வார்க்கு என தனியாக ஒரு சன்னிதி உள்ளது என்பது மற்றும் ஒரு சிறப்புச் செய்தியாகும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

T.L.Subash Chandira Bose
T.L.Subash Chandira Bose
Damodran
Damodran

One thought on "தரித்தத் திருப்பாணாழ்வார் கோட்டுருவம் ஆந்திர நாட்டில் கண்டுபிடிப்பு"

  1. Dear Sir, Congratulations to you and Mr.T.L.S.Bose. It appears to be a momentous discovery of Saint Thiruppanalwar of Kamalavalli Nachiayar temple, Woriayur in Tiruchi at such a far of place Ahobilam in A.P. I am sure this will be a significant contribution. So far Tiruppanalwar playing a musical instrument also has been brought out. Congrats.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஜூலை 6, 2022
சிந்து சமவெளி முத்திரையில் அதிசய அழிஞ்சில் மரத்தின் குறிப்பு
  • மே 23, 2022
திரு பாநாட்டான் படைத்தப் பாட்டு மங்களகரமானது
  • மே 7, 2022
போற்றுதலுக்குரிய நிலவு / வெந்தயம்