×
Saturday 28th of December 2024

நடராஜருடைய கூத்தில் பொதிந்துகிடக்கும் தத்துவங்கள்


Nataraja Thandavam Meaning in Tamil

நடராஜருடைய கூத்தில் பொதிந்துகிடக்கும் தத்துவங்கள்

நடராஜர் நடனமாடத் தொடங்குமுன் 14 முறை தன் கையிலுள்ள ‘டக்கா’ எனப்படும் உடுக்கையை ஒலிக்கிறார். அதனின்றும் வெவ்வேறு சப்தங்கள் எழுகின்றன. அவருடைய ஆட்டத்தைக் காணக் குழுமியிருக்கும் தேவர்கள், முனிவர்கள் ஆகியோரிடையே இருந்த பரதமுனி, நாரதமுனி, பாணினிமுனி, பதஞ்சலிமுனி, முதலானோருக்கு வெவ்வேறு வகையாக இந்த சப்தங்கள் ஒலிக்கின்றன; பொருளாகின்றன.

  • பரதமுனிக்கு அவை நாட்டியசாஸ்திர சூத்ரங்களாகவும்
  • நாரதமுனிக்கு சங்கீதசாஸ்திர சூத்ரங்களாகவும்
  • பாணினிமுனிக்கு வியாகரணசாஸ்திர சூத்ரங்களாகவும்
  • பதஞ்சலிமுனிக்கு யோக சாஸ்திர சூத்ரங்களாகவும் அவை ஒலிக்கின்றன.

அவரவர் துறையில் அவரவர் சிறப்பான நூல்களை உலகம் உய்ய அளிக்க அவை வழிசெய்கின்றன.

பிரபஞ்ச இயக்கமே சிவதாண்டவம்

அதனால்தான் சிவனின் நடனத்தை ஸ்ரீசக்ர பிந்துவில் நடைபெறும் நடனமெனக் கூறுவர். அவருடைய நடனத்தாலேயே பிரபஞ்சம் இயங்குகிறது. அவரைச் சுற்றி அனைத்தும் இயங்குகின்றன. பரதமுனிக்கு உடுக்கையின் ஒலியினால் விளக்கியது தவிர தனது நடன முத்திரைகளாலும், கரணங்களாலும், அவற்றின் சேர்க்கையான அங்கஹாரங்களாலும் நடனக் கலையின் சூக்ஷ்மங்களை நடராஜப் பெருமான் விளக்குகிறார். இதனை அடிப்படையாகக் கொண்டே தன் நூலில் நூற்றியெட்டு கரணங்களை பரதர் விளக்குகிறார். தஞ்சை பிரஹதீஸ்வரர் ஆலயப் பிராகாரத்திற்கு மேல் உள்ள கோபுர உள்சுற்றில் இந்த நூற்றியெட்டுக் கரணங்களையும் செதுக்கியுள்ள சிற்பி இறுதியில் ஒரு பிறையினை அதிகப்படியாக ஏதும் செதுக்காது விட்டுச் சென்றிருக்கிறார், இது வருங்காலத் தலைமுறைகளுக்கு அந்தச் சிற்பி விடுத்துள்ள சவால். ‘பரதமுனி கூறிய நூற்றியெட்டு கரணங்களையும் இங்கு நான் செதுக்கியுள்ளேன். இது தவிர வேறு ஏதாவது காரணம் உனக்குத் தெரிந்தால் இங்கு செதுக்கிவிடு’ என. இதுநாள் வரை அந்தப் பிறை ஏதும் செதுக்காது தான் வெற்றாக, நடனக் கலையின் முழுமைக் கொரு வெற்றிச் சான்றாக இருந்து வருகிறது.

உலகில் ஒருவர் அடையத்தகுந்த பேறுகளிலெல்லாம் மிகச் சிறந்த பெரும் பேறாகிய பெருவீட்டை, நாதனுடன் ஒன்றும் யோக நெறியை அறிந்த யோகிகள் அகக்கண்ணினால் காண, ஈசன் அந்த நடனத்தை, மக்களின் அறியாமை எனும் முயலகனை காலின் கீழ் அழுத்தி, ஆயிரம் தலைகள், ஆயிரம் கால்கள், ஆயிரம் கைகள், சடைமுடியுடைய ஆயிரம் உருவங்களுடன் மூவாசைகளை அழிக்கும் மூன்று முனைகளை உடைய சூலமேந்தி, பல்வேறு ஆயுதங்களைக் கைகளிலேந்தி வாயுவைத் தன் நடன வேகத்தினாலியக்கி, சந்திர, சூர்ய, அக்னிகளை தன் முக்கண்ணாக்கி, கோபமெனும் புலியையும், மதம் (கர்வம்) எனும் யானையையும் அடக்கித் தோலுரித்து, ஆடையாயுடுத்தி, வெவ்வேறு தீயசக்திகளெனும் விஷப் பாம்புகளை அணிகலன்களாக்கி கோடி சூர்யப் பிரகாசத்தோடு ஹிரண்ய கர்ப்ப முட்டையில் உள்ளும், புறமுமாக நின்று வேதங்களென்னும் காற்சிலம்புகள் ஒலிக்க ஆடுகின்றார்.

அணுவிற்கணுவாய், அசையாப் பொருளாய் தங்கள் ஆன்மாவில் விளங்கும் ஈசனை, பிரபஞ்ச மூலகாரணராய், பிரபஞ்ச சுழற்சிக்குக் காரணராய் உள்ள மஹேசரை, புனித பிரஹ்மக் கருவான தங்கக் கருவாய்த் தங்கியுள்ளவரை, அதையடக்கிய ஹிரண்ய கர்ப்பமாகிய பொன் முட்டையுள் ஆடுவதை யோகிகள் காண்கின்றனர். இந்த ஹிரண்ய கர்ப்பமே பொன்னம்பலமென வழங்கப்படுகிறது. இந்த நடனத்தை கூர்ம புராணம் வர்ணிக்கிறது.

தாருகா வனத்தில் வேதங்களில் சிறந்து விளங்கி, அதனாலேயே செருக்கடைந்த முனிவர்களை செருக்கடக்கி உய்விக்க வந்த ஈசன் சுந்தரனாய், விஷ்ணுவை மோஹினியாக்கி, எழுந்தருளினார். முனிவர்களின் மனங்கள் மோஹினியின் எழிலுருவில் மயங்கின; முனிபத்னியர் சுந்தரரின் எழிலில் தம்மை இழந்தனர். சில கண நேரம் மதிமயக்கிய முனிவர்கள் புலனடக்கத்தை உடையவர்களாக வாழ்ந்திருந்த காரணத்தால் தங்கள் மதிமயங்கிய சுந்தரரையும், மோஹினியையும் எவரென அறியாது அழிக்க முற்பட்டனர். அவர்களின் மாயையினை விலக்க, அவர்களால் ஏவப்பட்ட கோபத்தின் உருவான புலியையும், மதத்தின் உருவான யானையையும் தோலுரித்து உடுத்திக்கொண்டு விட்டார் சுந்தரர். தீயசக்திகளாகிய பாம்புகளையும் தன் அணிகளாக்கிக்கொண்டார். இறுதியில் அவர்களிடம் எஞ்சியிருப்பது வேதங்கள்தான். அவற்றை அவர்கள் ஏவ அவற்றையும் தனது காற்சிலம்புகளாக்கி பிட்சாடனராக, கஜசம்ஹார மூர்த்தியாக, நடனமிட்டார், அவர்களுடைய மடமை அல்லது அஞ்ஞானமெனும் முயலகனை காலின் கீழிருத்தி. இந்த நடனத்தை நினைத்து பின்னொரு சமயம் விஷ்ணு மெய்சிலிர்க்க அதனைத் தானும் காண விழைந்த ஆதிசேஷன் பதஞ்சலி முனிவராகி தில்லையில் ஈசனின் நடனத்தைக் கண்டு களித்தார்.

பிரபஞ்சத்தின் சுழற்சிக்கு மைய இயக்கமாகத் திகழும் இந்த ஆட்டத்தில் சிவசக்தி ஐக்யத்துக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் சிவனது தாண்டவத்துடன் சக்தியின் லாஸ்யத்தையும் நாம் காண்கிறோம்.

ஈசனின் நடனத்தில் தான் எத்தனை வகை?

எத்தனை விதமாக தன் நடனத்தை எத்தனை பேர்க்கு அருளச் செய்கிறார் மஹேசர்?

அவற்றில் தாண்டவத்தில் தான் எத்தனை விதம்?

தாண்டவ – யோக நடனம்

ஒரு பெண்ணால் மட்டுமே தான் கொல்லப்பட வேண்டுமென வரம் பெற்ற தாருகாட்சன் என்ற அரக்கனிடமிருந்து தேவர்களைக் காக்க உமையுடன் கூடிய ஈசன், தன் மூன்றாவது கண்ணிலிருந்து நீலகண்டமுள்ள காளியைப் படைத்தார். அரக்கனை அழித்த பின்னரும், அவனது உதிரம் குடித்ததனால், உக்கிரம் தணியாத காளியின் உக்கிரத்தை அடக்க ஈசன் ஒரு குழந்தையாக மாறி காளியின் மார்பிலிருந்து பாலாக அவளது உக்கிரத்தை உறிஞ்சிவிட்டார். பிறகு காளியை மகிழ்விக்க பூதகணங்களுடன் தாண்டவமாடினார். இந்தத் தாண்டவத்தினை தேவர்களும், முனிவர்களும் யோக சக்தியினால் கண்டார். இது லிங்கபுராணத்தில் வர்ணிக்கப் படுகிறது.

ஊர்த்துவ தாண்டவம்

சும்பன், நிசும்பன் எனும் அரக்கர்களை அழிக்கும் காளி உக்கிர நடனம் புரிந்தாள். அவளை அடக்க இறைவனும் அவளுடன் நடனம் புரிந்தாள். ஒரு நிலையில் இறைவன் தன் காதினின்றும் கழன்று விழுந்த குண்டலத்தினை சுழன்றாடியபடியே காலினால் லாகவமாக எடுத்து ஊர்த்துவ தாண்டவ நிலையில் பழையபடி காதில் அணிந்த நிலையில், பெண்மை காளியை காலைத் தூக்க இயலாது தலைகுனியச் செய்தது. இது திருவாலங்காட்டில் நடந்தது. இதைக் காண ஆனந்த முனிவரும், கார்க்கோடகன் எனும் பாம்பரசனும் தவமியற்றிக் கண்டனர். யோக நிலையில் பிராணாயாமத்தால் மூச்சை ஊர்த்துவ நிலைக்கு கொண்டு செல்வதையே இந்த யோக நடனம் குறிக்கிறது என்பர்.

சந்தியா தாண்டவம்

சிவபெருமான் சமுத்திர மந்தனம் எனப்படும் பாற்கடலைக் கடைந்தபோது முதலில் வெளிவந்த ஆலகால விஷத்தினை புவனங்களைக் காக்க வேண்டி, தன் கண்டத்தே நிறுத்தி அருளி நீலகண்டராகி தேவர்களால் அர்ச்சிக்கப்பட்டார். ஓர் ஏகாதசியன்று. இதையடுத்து திரயோதசியன்று மாலை சந்தியாகாலத்தில் ஒரு யாமப் பொழுது கையில் சூலமேந்தி உமையவள் காண நந்தியின் இரு கொம்பினுக்கிடையே நின்று தாண்டவ நடனம் புரிந்தார். இதை பிரதோஷ நடனம் என்பர். ஆகமத் திரட்டும், சோமதேவரின் கதாசரித் ஸாகரமும் இதை வர்ணிக்கின்றன. வைரங்களால் இழைக்கப்பெற்ற பொன் சிம்மாசனத்தில் ஜகன்மாதாவை இருத்தி கயிலாயத்தின் உச்சியில் ஈசன் சூலபாணியாக ஆடினான். தேவர்கள் நன்றிகூறி சூழ்ந்து நின்றனர். வாணி வீணை இசைத்தான். இந்திரன் குழலூதுகின்றான். திருமகள் பாடுகிறாள். திருமால் மத்தளம் இசைத்தான். பிரமன் குடம் இசைக்கிறான். நாரதர் தனது மஹதி எனும் தம்பூரில் சுருதி சேர்த்தார்.

கந்தர்வர்கள், யக்ஷர்கள், சித்தர்கள், வித்யாதரர்கள், அமரர்கள், அப்ஸரஸ்கள், இன்னும் மூவுலக வாசிகளும் கண்டுகளிக்க சூலபாணியாக அம்பிகை காண இந்த சந்தியா தாண்டவத்தினை ஈசன் திருக்கைகள் சுழன்றாட அவருடன் மலைகளும், காற்றும், கடல்களும் உடன் சுழன்று புயல்வீசும் சூழல் ஏற்படுவதாக ரத்னாகரரின் சுபாஷிதரத்ன கோஷத்தில் சோமநாத பிரஸஸ்தியில் வர்ணிக்கப் படுகிறது. இந்த சந்தியா தாண்டவத்தில் ஈசனின் காலின் கீழ் முயலகன் இல்லை. காளிதாசரும் உஜ்ஜயினி மஹாகாளியின் சந்தியா தாண்டவத்தை இதே ரீதியில் வர்ணிக்கிறார். இதில் இவர் புஜதாருவனம் என்னும் பலவகைப் பாணியை எட்டு, பத்து, பன்னிரண்டு கைகள் அமைவதை வர்ணிக்கிறார். இதில் பாம்பை ஈசன் தன் அரையிலணிந்தும், தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டும் ஆடினார். ஜபாகுசும புஷ்பங்கள் அலரும் மாலைவேளையில் மஹாகாளர் இந்த நடனத்தை ஆடுவதாக காளிதாசர் வர்ணிக்கிறார். இத்தகைய நடனத்தை எல்லாரும் கயிலாசநாதர் கோவிலிலுள்ள எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பத்தில் காண்கிறோம்.

இதைத் தவிர திருப்பரங்குன்றத்தில் அமைந்த லலித நடனத்தையும், மதுரை வெள்ளியம்பலத்தில் ஈசனின் கால் மாறியாடிய நடனத்தையும் சந்தியா தாண்டவம் என்பதுண்டு. இதில் ஈசனின் காலில் கீழ் முயலகன் உண்டு. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த வங்கத்தைச் சேர்ந்த வல்லாளசேன மன்னரின் நைக்தி செப்புப் பட்டயத்தில் தொடக்கத்திலேயே சந்தியா தாண்டவ வழிபாடு காணப்படுகிறது. பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீ சைலம் கோவில் ஆனந்த தாண்டவத்தைப் போன்றுள்ள சந்தியா தாண்டவ சிற்பமும், முயலகனுடன் கூடிய மற்றொரு சிற்பமும் உள்ளன.

சிறுமணவூர் முனிசாமி முதலியார் எனும் புலவர் எழுதிய ‘நடராஜர் பத்து’ இந்த ஆனந்த தாண்டவத்தை விவரிக்கிறது. இதில் ஈசனின் ஆபரணங்களும், கையிலேந்திய ஆயுதங்களும், அவருடைய ஆட்டத்தினால் ஈர்க்கப்பட்டு அவருடன் சேர்ந்து ஆடியவர்களும் வர்ணிக்கப்படுவதைக் காண்கிறோம்.

ஈசனின் கையிலிருக்கும் ஜீவனின் மனமெனும் மான் ஆடுகிறதாம். மனம் ஒரு நிலையில் நிற்காது இங்குமங்கும் ஓடிக்கொண்டிருக்கும், ஒரு மானைப்போல். ஓரிடத்தில் நின்றாலும் அதன் கண்கள் இங்குமங்கும் அலையும். ஈசனின் கையிலிருக்கும் போதே அது நிலைபெறுகிறது. அதன் கண்களும் ஈசனை நோக்கி அவரிடத்திலேயே லயிக்கின்றன. ஈசன் ஆடும்போது அதுவும் ஆடுகிறதாம்.

ஈசனின் கையிலிருக்கும் மழுவென்னும் கோடாலியாடுகிறதாம். தன் தாள் சேர்ந்த ஜீவன்களின் பிறவித் தொடரை அந்த மழுவினால் வெட்டி பிறவியற்ற நிலையை அருளுகிறாராம் ஈசன். அவருடன் அந்த மழுவும் ஆடுகிறதாம்.

ஈசனின் தலையிலணிந்திருக்கும் மதியும், புனலான கங்கையும் ஆடுகின்றனவாம். நிறைமதியாய் எப்போதும் இருந்தவன், தன் இருபத்தேழு மனைவியருள் ரோஹிணியிடமே மிகுதியாகக் கொண்ட அன்பால், மற்ற மனைவியரின் மனத்தாங்கலையும், தனது மாமனாரின் சாபத்தையும் அடைந்து, அதனால் உடல் தேயத் தொடங்கி பொலிவிழந்த நிலையில் ஈசனின் தாள்களைச் சரணடைய, அவனைப் பிறைமதியாய் தனது சென்னியில் சூடினார் ஈசன். அதேபோல் பகீரதனின் தவத்திற்கிணங்கி வேகவதியாக வேகமாய் இறங்கிய ஆகாச கங்கையை உலகைக் காக்கும் பொருட்டு தன் விரிசடையில் சூடினார் ஈசன். அந்த மதியும், புனலும் ஆடலரசனின் ஆனந்த நடனத்தின்போது சேர்ந்தாடுகின்றனவாம்.

ஈசனின் பூணூலாடுகின்றதாம். கால் தண்டையயணிந்த மறைகள் ஆடுகின்றனவாம். ஈசனின் குண்டலங்களிரண்டும் ஆடுகின்றனவாம். அரையில் உடுத்தியிருக்கும் உடையான புலித்தோல் ஆடுகின்றதாம். தும்பை, அருகு மாலைகளாடுகின்றனவாம்.

ஈசன் ஆடுவதைக் கண்டால் எவருக்குத்தான் ஆடத் தோன்றாது?

மங்கை சிவகாமியும்,
சகோதரன் திருமாலும்,
மறை தந்த பிரமனும்,
வானவர்கோன் இந்திரனுடன் வானவர் கூட்டமும்,
குஞ்சர முகத்தோனும்,
குழந்தை முருகனும்,
ஞானசம்பந்தரோடு பதினெட்டு முனிவர்களும்,
அஷ்டதிக்பாலகரும்,
நந்தி வாகனமும்,
தேவலோகத்து நாட்டியப் பெண்களும் ஆட
இவர்களோடு திசையெங்கும் தன் குழல் பறந்தாட ஈசன்
ஆனந்தக் கூத்தாடினாராம்.

ஈசனின் கைகளில்
மானையும்,
மழுவையும் தவிர
உடுக்கை,
அக்னி,
சூலம்,
கத்தி,
கேடயம்,
பிரம்ம கபாலம்,
பாம்பு ஆகியவற்றையும் நாம் காண்கிறோம்.

வீசு கையினால் அர்த்த நாரீஸ்வர தத்துவத்தில் தன் ஆனந்த நடனத்தில் தேவியின் பாகமாகிய இடப் பதத்தினைக் காட்டுகின்றார் ஈசன், “தேவியின் பதத்தைப் பற்றிக் கொள். என் மறுகால் போல் ஸ்திரமான, அஞ்ஞானத்தை ஒடுக்கிய, வாழ்வினை அளிக்கிறேன்,” என்றுணர்த்தும் வகையில், வலக் கரத்தினால் அபயத்தையும் அருளுகின்றார். மதுரை வெள்ளியம்பலத்தில் மாறுகால் நடனமாடும் போதும் இவ்விரண்டு முத்திரைகளும் மட்டும் மாறுவதில்லை. சிவதாண்டவச் சிற்பங்களில் மாறாது காணும் மற்றொன்று ஈசனின் தலையில் காணும் விரித்த மயிற் பீலியும், விரித்த சடையும். சந்தியாகால அழகைக் கண்டு ஈசன் தனை மறந்தவராய் தன் சடைமுடிகளைத் தளர்த்திவிட்டு ஆடத்தொடங்கி விட்டார். ஆடலின் வேகத்திற்கேற்ப சடைகள் திக்கெங்கும் வீசிப் பனந்தன. அடியவர்களுக்கு வேண்டிய வளங்களை வாரிவழங்கும் கருணை மேகமான அவரைக் கண்டு மயில்களும் தோகை விரித்தாடின. அவற்றின் பீலிகளும் ஈசனின் சிரத்தை அலங்கரித்தன.

இந்த ஆனந்தத் தாண்டவத்தில் ஈசனின் கையிலிருக்கும் அக்னியை சம்ஹார சக்தியாகவும், உடுக்கையை ஸ்ருஷ்டி சக்தியாகவும் அறிஞர்கள் விவரித்த போதிலும், இலங்கையைச் சேர்ந்த பேரறிஞர் திரு. ஆனந்த குமாரஸ்வாமியும், இந்திய கலை, மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணரும், பேரறிஞரும், எனது தந்தையுமான, திரு. க. சிவராமமூர்த்தி அவர்களும் வேறுபட்ட கருத்தை உடையவர்களாக உள்ளனர். அவர்கள் தகுந்த ஆதாரத்துடன் அறுதியிட்டுக் கூறுவது ஈசன் கையிலிருக்கும் அக்னிதான் பரமாத்மாவின் ஸ்ருஷ்டி சக்தியான பேரொளியென்றும், அதனின்றும் தோன்றிய ஒளிச்சுடர்களான ஜீவாத்மாக்கள்தான் ஈசனின் பிரபாவலியிலுள்ள சிறு சிறு தீச்சுடர்களென்றும், அவை யாவும் லயமடைவது ஈசனின் வலக் கரத்திலிருக்கும் உடுக்கையின் நாதப் பிரஹ்மத்தில் என்பதும் தான். நாதமென்றாலே லயம் என்பது உடன் பிறந்த தொரு தத்துவமல்லவா! மேலும் அம்பாளின் பாகமான இடக் கரத்தில், தாயான அவளது செயலான ஸ்ருஷ்டியும், ஈசனின் பாகமாகிய வலக் கரத்தில் அவரது செயலான சம்ஹாரமும் இருப்பது தானே முறை?

இவை தவிர சதருத்ரீயத்தில், பார்வதியை மணப்பதற்கு விழைந்த சிவபெருமான், இமவானின் மனைவியான மேனையின் முன் இடக் கரத்தில் ஊது குழலும், வலக் கரத்தில் துடியும் ஏந்தி நடமிட்டதாக வர்ணிக்கப்படுகிறது.

பரத முனி பஞ்சபூதங்களின் உருவிலும் இறைவன் ஆடுவதாக ஜலமய மூர்த்தி, தேஜோமய மூர்த்தி, ஆகாஸமய மூர்த்தி என்றெல்லாம் குறிப்பிடுகிறார். சுழற்காற்றின் சுந்தர நடம், தீச்சுடரின் நெளியும் ஒளிநடம், ஒளிகளின் நடம், சூரிய, சந்திரர்களின் நடம், இவை யாவும் ஈசனின் நடமன்றோ! நடராஜ ஸ்தோத்திரத்தில் சிவனுக்கும், ஜீவனுக்கும் உள்ள இயற்கை நிலை ஒற்றுமையைக் கூறும் வகையில் “நடராஜரே, நீங்கள்தான் ஆடுகிறீர்களா? அல்லது பஞ்சபூத உடையில் உள்ள என்னை ஆடவைக்கிறீர்களா?” என வினவும் நிலையைக் காண்கிறோம்.

இவை தவிர வெவ்வேறு யோக நிலைகளைக் காட்டும் வீராட்ட தாண்டவங்கள் எட்டு வகைப்படும். அவை ஈசனின் வெவ்வேறு வெற்றிகளை முழங்குவனவாகவும் விளங்குகின்றன. திருவதிகையில் அட்டயோக சாதனையை விளக்கும் வகையில் திரிபுர சம்ஹாரராகவும், கண்டியூரில் விந்து ஜெயம், மூலாக்னி எழுப்புதல் ஆகியவற்றை விளக்கும் வகையில் பிரஹ்மசிரச்சேதம் செய்த நிலையிலும்; திருக்கொறுக்கையில் சிவதிருஷ்டி பெறல், ஞானக்கண் நிலைகளை விளக்கும் வகையில் காமதஹனராகவும்; திருவழுவூரில் முத்திச் சிறப்பு, சிவவொளி விளக்கம் ஆகியவற்றை விளக்கும் வகையில் கஜசம்ஹாரராகவும்; திருக்கோவிலூரில் அஞ்ஞான அழிப்பை விளக்கும் வகையில் அந்தகாசுர வதம் புரிந்த நிலையிலும்; திருப்பறியலூரில் சிவராஜயோகம், அக்னிகாரியம், பசித்துவ நீக்க அகவேள்வி ஆகியவற்றை விளக்கும் வகையில் தக்ஷன் வேள்வி தகர்த்த நிலையிலும்;திருவிற்குடியில் வாயுயோகசாதனை, மூலாதாரம் ஆகியவற்றை விளக்கும் வகையில் ஜலந்தர சம்ஹார மூர்த்தியாகவும்; திருக்கடவூரில் அங்கியோகம், மூலநாடி சுஷும்னை வைபவம் ஆகியவற்றை விளக்கும் வகையில் காலசம்ஹார மூர்த்தியாகவும் ஈசன் விளங்குகிறார்.

மும்மலங்களே முப்புரமாகக் கொண்டு ஈசன் ஆகியவற்றை நாசம் செய்து யோகியரைக் காத்தலே திரிபுர சம்ஹாரமென்பர். இந்நிலையில் ஈசன் கரங்களில் வழக்கமான சூலம், மழு, கத்தி, கேடயம் தவிர பினாகமெனும் வில்லையும், பாசுபதமெனும் அம்பையும் காண்கிறோம்.

யோகநெறியில் விந்து ஜெயம் சிறப்பானதொன்று. மூலாக்னியை மேலெழுப்பி விந்து நாசம் ஏற்படாது தடுத்தலை பிரம்ம சிரச்சேதமென யோகநெறியில் கூறுவர். தானும் ஐந்து சிரம் கொண்டவனே, ஈசனுக்கு சமமானவனே எனும் பிரம்மனின் கர்வத்தை அடக்க பைரவர் மூலம் அவனது நடுச்சிரத்தைக் கொய்து அந்த பிரம்ம கபாலத்தை பிக்ஷா பாத்திரமாய் ஏந்தி ஈசன் தாண்டவமாடுகிறார்.

வாசியோக மேன்மையால் குண்டலினியை மேலெழுப்பி மேனிலைப் பலன்களை எய்துவதை காமதஹனமாக யோகியர் கூறுவர். சிவத்தின் மேன்மையினை விளக்கவே காமதஹனம் விளைந்தது.

யோகநெறியில் ஆறு ஆதாரநிலைகளிலிருக்கும் தேவதைகளின் அருள்நிலைகள் மறைந்து சஹஸ்ராரத்தில் அக்னி தோன்றுதலை கஜசம்ஹாரமாகக் கூறுவர். சிவனைத்தவிர வேறு யாராலும் அழிவிலா வரம்பெற்ற கஜமுகாசுரனைக் கொன்று ஈசன் கரியுடை போர்த்து தாண்டவமாடுகிறார்.

முதுகெலும்பின் முடிவிடமாகிய குருத்து அல்லது குந்தகம் எனும் பகுதிக்கு மேல் சூரிய ஒளி, ஆன்ம ஒளி, சோம ஒளி, எனும் மூவொளி அமைந்த பகுதியை சூலம் என்பர். யோகப் பயிற்சியின் மூலம் அந்தகமாகிய அறியாமையினை நீக்கி சுஷும்னையில் ஆன்ம ஒளி காணுதலே அந்தகாசுர சம்ஹாரமென திருமந்திரம் கூறுகிறது. இந்நிலையில் ஈசனின் தாண்டவத்தை திருக்கோவிலூரில் காண்கிறோம்.

சிவசக்தி ஐக்கியமான ஆண்-பெண் அம்சக் கூட்டுறவு வேள்வி எனப்படும். இதனை ஈசனுக்கு அர்ப்பணமாகச் செய்ய வேண்டும். ஈசன் அருளின்றி யோகத்தில் விந்து ஜெயம் கிட்டுவது இயலாது என்பதைக் காட்டுவதே தக்ஷன் வேள்வி தகர்த்தல். ஈசனின் இந்நிலையை திருப்பறியலூரில் காண்கிறோம்.

யோகத்தின்போது கீழ்நோக்கு இயல்புடைய ஜலந்தரனெனப்படும் அபானவாயுவை மேல்நோக்கிப் பிராணனுடன் கலக்கச் செய்யும் யோகமுறையை அங்குலி யோகம் என்பர். இந்நிலையில் பிராணனுடன் கலந்து அபானன் சஹஸ்ராரத்தில் ஈசனின் பேரொளியில் இணைவதை ஜலந்தர யோகமென திருமந்திரம் கூறும். இந்நிலைத் தாண்டவத்தை திருவிற்குடியில் காண்கிறோம்.

மூலக்கனலை சுஷும்னை வழியாக சஹஸ்ராரத்துக்கு எழுப்பும்போது காலமெனும் யமபயம் ஒழியும். பிரஹ்மரந்திரப் பேரொளியில் லயித்து சாகாதிருத்தலை அங்கியோகம் என்பர். பிரஹ்மரந்திரத்தில் ஊர்த்துவதிருஷ்டியால் பார்த்து சஹஸ்ரார தளத்தில் சிவ – ஜீவ, சிவ – சக்தி ஐக்கியப் பேரொளியில் லயிக்கும்போது எழும் பேரொளி வைபவத்தை காலசம்ஹார வைபவம் என்பர். இத்தாண்டவத்தை திருக்கடையூரில் காண்கிறோம்.

இந்த எட்டு வீராட்டங்களின் அம்சமும் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தில் ஒருமை எய்துவதைக் காண்கிறோம். ஸ்ரீருத்ரத்தின் நடுமணியாம் ‘நம : சிவாய’த்தில் ஐந்து பூதங்களும், ஐந்து தொழில்களும், ஐந்து பிரஹ்ம நிலைகளும், ஐந்து திசைகளும், ஐந்து சக்திவேதங்களும் அடங்குவதுடன் சிவதாண்டவ உருவின் ஐந்து பாகங்களும் கூட அடங்குவதைக் காண்கிறோம்.

சிவதாண்டவத்தில் ஐம்பெரும் பாகமென ஐந்தெழுத்து மந்திரம், ஐந்து முகங்கள் (ஐந்து பிரஹ்மங்கள்), ஐந்து திசைகள், ஐந்து பூதங்கள், ஐந்தொழில்கள், ஐந்து சக்திபேதங்கள் ஆகியவை உள்ளடங்கியுள்ளன. துடி எனும் உடுக்கையில் ‘ந’ எனும் எழுத்தும், ஸத்யோஜாதமெனும் பிரஹ்மநிலையும், மேற்கு திசையும், பிருத்வி எனும் பூதமும், படைத்தலைச் செயும் பிரம்மனும், கிரியா சக்தியும் அடங்கக் காண்கிறோம்; அமைந்த கரத்தில் ‘ம’ எனும் எழுத்தும், தத்புருஷமும், கிழக்கு திசையும், வாயுவும், காத்தல் எனும் தொழில் புரியும் விஷ்ணுவும், ஞான சக்தியும் அடங்கக் காண்கிறோம்; அக்னியில் ‘சி’ எனும் எழுத்தும், அகோரமும், தெற்கு திசையும், தேஜஸும், அழித்தலெனும் பணிபுரியும் ருத்ரனும், இச்சா ஸக்தியும் அடங்கக் காண்கிறோம்; ஊன்றிய பாதத்தில் ‘வா’ எனும் எழுத்தும், வாமதேவமும், வடக்கு திசையும், நீரெனும் பூதமும், திரோதனமெனும் மறைத்தலைப் புரியும் சதாசிவனும், ஆதிசக்தியும் அடங்கக் காண்கிறோம்; குஞ்சித பாதத்தில் ‘ய’ எனும் எழுத்தும், ஈஸானமும், உச்சிதிசையும், ஆகாயமும், அருளலைப் புரியும் மஹேஸ்வரரும், பராசக்தியும் அடங்கக் காண்கிறோம்.

அவரது ஆனந்த நடனம் மூலம் அவரே உணர்த்தும் தத்துவத்தை உணர்ந்து தூக்கிய திருவடியாம் அம்பிகையின் பாதத்தை சிக்கெனப் பற்றி, அவரருளால் அபஸ்மாரம் நீங்கப் பெற்று ஸ்திர வாழ்வை நாம் அடைவோமாக. அவரது இடக்கரம் அமைந்த தேஜஸினின்று ஒரு பொறியாகப் பிறந்த நாம், அவரருளால் அவரது நினைவில் வாழ்ந்து அவரது வலக்கரமமர்ந்த துடியில் லயத்தை அடைய அவரது திருவடி போற்றி வேண்டுவோமாக.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

Also, read



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்
  • செப்டம்பர் 19, 2024
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருவாலங்காடு