×
Saturday 28th of December 2024

சிவாலய ஓட்டம் வரலாறு


Sivalaya Ottam

🛕 சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் குமரியில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு சிவாலய ஓட்டம் ஆகும். இவ்வழிபாடு மாசி மாதம் நடைபெறுகிறது. சிவராத்திரியின் முதல் நாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, “பத்மனாதபுரத்தைச் சுற்றியுள்ள பன்னிரு சைவத் திருத்தலங்களையும் 24 மணி நேரத்தில் ஓடி வலம் வருகின்றனர்”.

🛕 சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். மேலும் இவ்வோட்டத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். கையில் ஓலை விசிறியுடனும் ஒரு சிறிய பண முடிச்சுடனும் ஓடுகின்றனர்.

🛕 சிவாலய ஓட்டத்தில் ஓடும் பக்தர்கள் ஏகாதசி விரதம் இருப்பவர்கள். இவர்கள் தீயினால் சுடப்பட்ட பொருள்களை சாப்பிட மாட்டார்கள். இளநீர், நுங்கு, வாழைப்பழம் ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுவர். சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்தும் வகையில் சிவனை தரிசிக்க வரும் பக்தர்கள் விஷ்ணுவின் நாமத்தை ‘கோவிந்தா! கோபாலா!!’ எனச் சொல்லி ஓடுவர்.

🛕 பக்தர்கள் புனிதப் பயணம் செல்லும் போது, கையில் விசிறி ஏந்திச் செல்வது சமண மதத்திலுள்ள ஒரு வழக்கம். மேலும் திருநந்திக்கரையில் உள்ள குடவரைக் கோவில், திற்பரப்பில் உள்ள குகைக் கோவில், பன்னிப்பாக்கம் அருகில் உள்ள பாதச் சுவடு திருமலையில் கல்லிலே பொறிக்கப்பட்டுள்ள கண்கள் ஆகியவை இவ்வோட்டம் சமண சமயத்திலிருந்து வந்ததை உறுதி செய்வதாய் உள்ளது.

🛕 குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணையும் முன்பு அன்றைய திருவிதாங்கூர், கொச்சியுடன் (இன்றைய கேரளா) இணைந்திருந்தது. அப்போது, தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு ஆகிய 4 தாலுகாக்கள் இருந்தன. இதில் தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய இரண்டையும் நாஞ்சில் நாடு என்றும், கல்குளம், விளவங்கோடு ஆகிய இரண்டையும் ‘வேணாடு’ என்றும் அழைத்து வந்தனர். வேணாட்டின் தலைநகரமாக தற்போது பத்மநாபபுரம் என்று அழைக்கப்படும் கல்குளம் விளங்கியது.

Also read: மகா சிவராத்திரி விரதம் மற்றும் மந்திரங்கள்

Sivalaya Ottam Temples List in Tamil

🛕 கல்குளத்தை சுற்றி 12 சிவாலயங்கள் உள்ளன.

  1. திருமலை மகாதேவர் கோவில்
  2. திக்குறிச்சி மகாதேவர் கோவில்
  3. திற்பரப்பு மகாதேவர் கோவில்
  4. திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில்
  5. பொன் மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில்
  6. திருப்பன்றிப்பாகம் சிவன் கோவில்
  7. கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில்
  8. மேலாங்கோடு சிவன் கோவில்
  9. திருவிடைக்கோடு சடையப்பமகாதேவர் கோவில்
  10. திருவிதாங்கோடு மகாதேவர் கோவில்
  11. திருப்பன்றிக்கோடு மகாதேவர் கோவில்
  12. திருநட்டாலம் சங்கர நாராய ணர் கோவில்

sivalaya ottam temples

🛕 இந்த 12 சிவாலயங்களுக்கும் சிவராத்திரி தினத்தில் பக்தர்கள், ‘கோபாலா….. கோவிந்தா….’ என அழைத்தவாறு நடந்தும், ஓடியும் சென்று வழிபடுவார்கள். சிலர், சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், வேன் போன்ற வாகனங்களில் சென்று தரிசனம் செய்வார்கள். இந்த சிவாலய ஓட்டம் புதுக்கடை அருகே உள்ள முன்சிறை, திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்குச் செல்வர்.

🛕 பின்னர் அங்கிருந்து அருமனை, களியல் வழியாக 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திற்பரப்பு மகாதேவர் கோவிலுக்கு சென்று, அங்கிருந்து குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு வழியாக 8 கி.மீ தொலைவில் உள்ள திருநந்திக்கரை சிவன் கோவில் செல்வார்கள்.

🛕 பின்னர், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிப்பாகம் சிவன்கோவில், பத்மநாபபுரம் என்று அழைக்கப்படும் கல்குளம் நீலகண்ட மகாதேவர் கோவில் செல்வார்கள். 12 சிவாலயங்களில் இங்கு மட்டும் தேவி வடிவில் சிவன் உள்ளார்.

🛕 அங்கிருந்து, மேலாங்கோடு சிவன்கோவில், தென்கரை வில்லுக்குறி வழியாக, திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், அங்கிருந்து கோழிப்போர்விளை, பள்ளியாடி திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில் சென்று இறுதியாக நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் சிவாலய ஓட்டம் நிறைவு செய்யப்படுகிறது. இதில் பக்தர்கள் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வருவார்கள்.

🛕 இந்த 12 சிவாலயங்களில் 11 சிவாலயங்களில் பக்தர்களுக்கு திருநீரு வழங்கப்படும். 12வது சிவாலயமான திருநட்டாலத்தில் மட்டும் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கப்படுகிறது. திருநட்டாலம் கோவிலில் சுவாமி சிவன்-விஷ்ணு என சங்கரநாராயணர் வடிவத்தில் எழுந்தருளியுள்ள நிலை சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக உள்ளது.

Sivalaya Ottam Story in Tamil

🛕 சிவாலய ஓட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்பதற்கு சரியான காரணம் தெரியவில்லை. இருப்பினும் 2 விதமான கருத்துகள் கூறப்படுகின்றன. அவற்றில் 3 தத்துவங்களை நிலைப்படுத்தும் பீமன் கதை தான் ஏராளமான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.

🛕 பாண்டவர்களின் முதல்வரான தர்மபுத்திரனுக்கு ராஜகுரு யாகம் ஒன்றை நிறைவேற்ற புருஷ மிருகத்தின் (வியாக்ரபாத மகரிசி) பால் தேவைப்பட்டது. அந்த ராட்சத மிருகத்துக்கு சிவன் மீது மிகுந்த பக்தியும், விஷ்ணு மீது மிகுந்த வெறுப்பும் உண்டு. பீமனின் அகந்தையை அடக்கவும், வியாக்ரபாத மகரிசிக்கு, சிவனும், விஷ்ணுவும் ஒன்று என பாடம் புகட்டவும் நினைத்து மகாவிஷ்ணு, பீமனிடம் பால் கொண்டுவர கட்டளையிட்டார்.

🛕 அத்துடன் 12 உத்திராட்சங்களை பீமனின் கையில் கொடுத்து, உனக்கு ஏதாவது ஆபத்து வந்தால், இதில் ஒன்றை கீழே போட்டுவிடு என்று சொல்லி அனுப்பி வைத்தார். பீமன் தயக்கத்துடன் உத்திராட்சங்களை வாங்கிவிட்டு புறப்பட்டான். பீமன் அடர்ந்த காட்டை அடையும்போது அங்கு புருஷ மிருகம் கடும் தவத்தில் இருந்தது.

🛕 அப்போது, பீமன், ‘கோவிந்தா, கோபாலா’ என குரல் எழுப்பியபடி பால்பெற முயற்சி செய்தான். கோவிந்தா என்ற வார்த்தையை கேட்டவுடன் புருஷ மிருகத்துக்கு சிவலிங்கம், விஷ்ணுவாக தெரிய, தவம் கலைந்து விடுகிறது.

🛕 சிவபூஜையில் புகுந்த பீமனை புருஷ மிருகம் கோபத்துடன் துரத்திச் சென்று பிடித்துக் கொண்டது. உடனே பீமன் ஒரு உத்திராட்சத்தை அந்த இடத்தில் போட்டான். உடனே அந்த இடத்தில் ஓரு சிவலிங்கம் உருவாகியது. புருஷ மிருகம் ஆழ்ந்த சிவநெறி செல்வர் என்பதால் லிங்க பூஜையை தொடங்கி விடுகிறது.

🛕 சிறிது நேரம் கழித்து பீமன் மீண்டும், ‘கோவிந்தா, கோபாலா’ என குரல் எழுப்பி பால் பெற முயன்ற போது புருஷ மிருகம் மீண்டும் துரத்தி சென்று பற்றிக்கொள்ள, அடுத்த உத்திராட்சத்தை அங்கு போட்டுவிட்டு ஓடிவிட்டார்.

🛕 இவ்வாறு 12 உத்திராட்சங்களும், 12 சைவ தலங்களை உருவாக்கி விடுகிறது. 12-வது உத்திராட்சம் போடும் போது பீமனின் ஒரு கால் வியாக்ரபாத மகரிசிக்கு சொந்தமான இடத்திலும், மறு கால் வெளியிலும் இருந்தது. உடனே, பீமன் அதனுடன் வாதம் செய்தான்.

🛕 இந்த வழக்கில் நீதி தேவனான தரும புத்திரன், தனது தம்பி என்றும் பாராமல் புருஷ மிருகத்துக்கு சாதகமாக நீதி வழங்கினார். பீமனுடைய உடலில் பாதி, புருஷமிருகத்துக்கு சொந்தம் என அறிவிக்கிறார். இறுதியில் யாகம் நிறைவேற புருஷமிருகம் பால் வழங்குகிறது. பீமனுடைய கர்வம் ஒடுக்கப்பட்டது. புருஷ மிருகத்தின் மீது இருந்த அவதூறுகளும் களையப்படுகிறது. இவ்வாறு “பீமன் ஓடியதை நிறைவு கூறும் வகையில் இன்றும் பக்தர்கள் கோவில்களுக்கு ஓடிச்சென்று” வழிபடுகிறார்கள்.

மற்றொரு கதை: சூண்டோதரன் என்ற அரக்கன் சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டவனாக இருந்தான். அவன் சிவனை வேண்டி திருமலையில் (முதல் சிவாலயம்) கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவன் அரக்கன் முன் தோன்றி வேண்டிய வரம் தருவதாக கூறினார். உடனே அந்த அரக்கன், ‘நான் யாருடைய தலையை தொட்டாலும் அவன் சாம்பலாகி விட வேண்டும்’ என்ற வரத்தைக் கேட் டான்.

🛕 சிவனும் அந்த வரத்தைக் கொடுத்தார். உடனே அரக்கன் வரம் உண்மையிலேயே தனக்கு தரப்பட்டதா? என்பதை அறிய சிவனின் தலையை தொடமுயன்றான். உடனே, சிவன் அங்கிருந்து, ‘கோபாலா, கோவிந்தா’ என்று அழைத்தவாறு ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிகிறார்.

🛕 இறுதியில் நட்டாலத்தில் விஷ்ணு, மோகினி அவதாரம் எடுக்கிறார். மோகினியின் அழகில் மயங்கிய அரக்கனை அவன் கையால் அவனது தலையை தொடச் செய்து அழிக்கிறார், விஷ்ணு. இவ்வாறு சிவன் ஓடி ஒளிந்த 12 இடங்களில் சிவன் கோவில் எழுப்பப்பட்டதாகவும், நட்டாலத்தில் சிவனை விஷ்ணு காத்ததால் அங்கு இருவருக்கும் கோவில் எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

🛕 இவ்வாறு, “சிவன் ஓடிய ஓட்டத்தை நினைவு கூறும் வகையில் தான் சிவாலய ஓட்டம் நடப்பதாக வரலாறு கூறுகிறது”.

🛕 சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு அருமனை, களியல், திற்பரப்பு, குலசேகரம், பொன்மனை உள்ளிட்ட பகுதிகளில் கிழங்கு, கஞ்சி, கடலை போன்ற உணவுகளும், சுக்குநீர் உள்ளிட்ட நீர் உணவுகளும் வழங்கப்படுகிறது.

🛕 இந்த சிவாலய ஓட்டத்தில் தமிழகம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் அதிக பக்தர்கள் கலந்து கொள்வது மிகச் சிறப்பானதாகும். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சிவாலய ஓட்டத்திற்கு தமிழக அரசு மகா சிவராத்திரி அன்று உள்ளூர் விடுமுறையும் அறிவித்துள்ளது.

நன்றி: சந்திரசேகரன் கோபாலகிருஷ்ணன்



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 8, 2024
மார்கழி பாவை நோன்பு – திருவெம்பாவை
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்