×
Wednesday 1st of January 2025

தேவீ நாராயணீயம் – தசகம் 1 to 10


Devi Narayaneeyam Lyrics in Tamil with Meaning – Dasakam 1 to 10

நன்றி: VASANTHA Amma http://krishvasa.blogspot.com/

தேவீ நாராயணீயம் – தசகம் 1 to 10

தேவீ நாராயணீயம் என்பது தேவீ பாகவதத்தின் குறுகிய வடிவம் தான். தேவீ பாகவதம் படித்தால் என்ன பலன் கிடைக்குமோ அது தேவீ நாராயணீயத்தைப் படித்தாலும் நிச்சயமாகக் கிடைக்கும். பாலேலி ஸ்ரீ நாராயண நம்பூதிரி இதை 430 ஸ்லோகங்களில் 41 தசகங்களில் எழுதி இருக்கிறார்.

தசகம் 1

தேவீ மஹிமை அவிக்னம் அஸ்து

1. யஸ்மின்நிதம், யத இதம், யதிதம், யதஸ்மாது
உத்தீர்ணரூபம், அபிபச்யதி யத் சமஸ்தம்
நோ த்ருச்யதே ச, வசஸாம் மனஸச்ச தூரே
யத் பாதி சா தி மஹஸே ப்ரணமாமி தஸ்மை

ஆதி தேவியிடமிருந்து தான் அனைத்தும் உண்டாகிறது. அன்னையின் சக்தியை இவ்வளவு தான் என்று அளவிட்டுச் சொல்ல முடியாது. அனைத்திற்கும் அவளே காரண கர்த்தா. ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் அனைத்திற்கும் அவளே மூலகாரணம். யாருடைய உதவியும் தேவிக்குத் தேவையில்லை. நாம் நாராயணீயமோ அல்லது பாகவதமோ எதைப் படித்தாலும் அன்னைக்கு அது பற்றிக் கவலையில்லை. நமக்கு எதைச் செய்வதற்கும் இந்த்ரியங்களின் உதவி தேவை. அன்னைக்கு இந்த்ரியங்கள் கிடையாது. உபநிஷத்துக்களில் இது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஆயினும் அன்னை புரிந்து கொள்ள முடியாத ப்ரம்மதத்வம். அப்படிப்பட்ட தேவியை நான் வணங்குகிறேன்.

2. ந ஸ்த்ரீ புமான் ந சுரதைத்ய நராதயோ ந
க்ளீபம் ந பூதமபி கர்மகுணா தயச்ச
பூமம்ஸ்த்வமேவ ஸதநாத்ய விகார்ய நந்தம்
ஸர்வம் த்வயா ஜகதிதம் விததம் விபாதி

பூதா, பிரம்மம், பரமாத்மா, ஆதி தேவி அனைத்தும் ஒன்றுதான். இந்த ஆதி தேவியின் ரூபம் எப்படி இருக்கும்? யாரும் சொல்ல முடியாது. ஆனாலும் நமக்கு அன்னையின் கருணையும் ஆசீர்வாதமும் கிடைக்கிறது. எதைப் பார்த்தாலும் இது பிரம்மமோ, அதற்கு இந்த குணம் இருக்குமோ, இந்த ரூபம் இருக்குமோ என்று கற்பனை செய்து கொள்கிறோம். அது ஆணா, பெண்ணா, தேவனா, அசுரனா, அல்லது அலியா யாருக்கும் தெரியாது. எதுவானாலும் அது ப்ரம்மமே. அதற்கு ஆரம்பமோ முடிவோ இல்லை. ஜனனம், மரணம் இல்லை. ஆனால் அது இல்லை யென்றால் எந்த வேலையும் நடக்காது. அந்த ப்ரம்மமான தேவியை நமஸ்கரிக்கிறேன்.

3. ரூபம்ந தேSபி பஹுரூப ப்ருதாத்த சக்திஹி
நாட்யம் தனோஷி நடவத் கலு விச்வரங்கே
வர்ஷாணி தே ஸரஸநாட்ய- கலாவிலீநா
பக்தா அஹோ! ஸஹ்ருதயா க்ஷணவன்னயந்தி

ப்ரம்மம் ஒரு நடிகன் போலத்தான். ஒரு நடிகன் நாடக மேடையில் திருடனாகவும், போலீஸ்காரனாகவும் நடிக்கிறான். நாடகம் முடிந்ததும் அவன் வேஷம் கலைகிறது. அவன் மீண்டும் முன்போலவே ஆகிறான். அந்த நாடகத்தில் போடும் வேஷத்திற்கேற்ப அவன் செய்யும் பாவமோ அல்லது புண்யமோ அவனை பாதிப்பதில்லை. அதுபோல் நாம் செய்யும் செயல்கள் எதிலும் அது பாவமோ, புண்யமோ பிரம்மத்திற்குச் சம்பந்தமில்லை. நாம் செய்யும் கர்மங்களின் புண்ணியம் பாபம் இரண்டும் நம்மையே சாரும்.

4. ரூபானுஸாரி கலு நாம ததோ புதைஸ்த்வம்
தேவீதி தேவ, இதி சாஸி நிகத்யமானா
தேவ்யாம் த்வயீர்யஸ உமா கமலாSத வாக்வா
தேவே து ஷண்முக உமா,பதி ரச்யுதோ வா

ப்ரம்மத்திற்கு ரூபம், நாமம் இல்லை. ஆண் என்றால் ராமன், கிருஷ்ணன். பெண் என்றால் உமா, சரஸ்வதி, லக்ஷ்மி என்று சொல்கிறோம். ஞானம், முக்தி தேவை என்றால் பார்வதியை பூஜிக்கிறோம். செல்வம் வேண்டும் என்றால் லக்ஷ்மியை பூஜிக்கிறோம். படிப்பு, பாட்டு, அறிவுக்கு சரஸ்வதியை பூஜிக்கிறோம். ஆனால் விஷ்ணு, ராமன், லக்ஷ்மி, சரஸ்வதி எல்லாமே ஒன்று தான். அதுவே அந்த ப்ரம்மம்.

5. த்வம் ப்ரம்ம சக்திரபி தாத்ரு ரமேசருத்ரைர்
ப்ரம்மாண்டஸர்க பரிபாலன சம்ஹ்ருதீச்ச
ராஜ்ஜீவ காரயஸி ஸுப்ரு! நிஜாஞயைவ
பக்த்தேஷ்வனன்ய சரணே,ஷீ க்ருபாவதீ ச

ப்ரம்மம் அரூபமாக இருந்தாலும் எல்லா மதத்தினரும் அதை இஷ்ட தெய்வமாக ராமன், சிவன், விஷ்ணு, அல்லா, ஜீஸஸ் என்று அவரவர் விருப்பம் போல, ப்ரம்மத்தைத் தான் பூஜிக்கின்றனர். ப்ரம்மத்தை சக்தி ரூபமாக பூஜிப்பது தேவீ நாராயணீயம். சக்தியும் ப்ரம்மமே. ஒரு ராணி எல்லோருக்கும் இதைச் செய், அதைச் செய் என்று கட்டளை இடுவது போல, சக்தியும் ப்ரம்மாவை நீ படைப்பினைச் செய், விஷ்ணுவை நீ காக்கும் தொழிலைச் செய், ருத்ரனை நீ அழிக்கும் தொழிலைச் செய் என்று புருவ அசைப்பில் கட்டளை தருகிறள். அவர்கள் அனைவரும், அன்னையை வணங்கிப் பின் அவரவர் தொழிலைச் செய்கின்றனர்.

6. மாதா கரோதி தனயஸ்ய க்ருதே சுபானி
கர்மாணி, தஸ்ய பதனே ப்ருசமேதி துக்கம்
வ்ருத்தௌ சுகம் ச: தவ கர்ம ந, நாபி துக்கம்
த்வம் ஹ்யேவ கர்மபலதா ஜகதாம் விதாத்ரீ

ஒரு செயலைச் செய்யும் போது அதனால் ஏற்படும் நல்லது, கெட்டது அனைத்திற்கும் நாமே காரணம். அந்த அந்த கர்ம பலனை நாம் அனுபவிக்க நேரிடுகிறது. இதன் காரணத்தால் துக்கம், மகிழ்ச்சி, கஷ்டம், நஷ்டம், பிரிவு, சேர்க்கை போன்ற இரட்டைகளை அனுபவிக்க நேரிடுகிறது. தேவிக்குக் கர்மபந்தக் கட்டு இல்லை. அதனால் சுகம், துக்கம் எதுவும் இல்லை. நமக்கு சுகம் தருபவள் அவள். அதனால் அவளைப் பணிவதே நமக்கு நல்வழி தரும்.

7. ஸர்வத்ர வர்ஷஸி தயா, மத யேவ வ்ருஷ்ட்யா
ஸிக்த: ஸுபீஜ இவ வ்ருத்திமுபைதி பக்தஹ
துர்பீஜவத் வ்ரஜதி நாசம் அபக்த ஏவ;
த்வம் நிர்க்ருணா ந விஷமா ந ச லோகமாதஹ

உழுது பதப்படுத்தப்பட்ட நிலத்தில் விதைக்கும் விதைகள் எல்லாம் முளைப்பதில்லை. மழை எல்லா விதைக்கும் ஒரே மாதிரி தான் பெய்கிறது. அதற்கு எந்த பாரபக்ஷமும் இல்லை. அதைப் போல் நாம் அனவரும் அன்னையின் குழந்தைகள். அன்னை காட்டும் கருணை மழையில் எந்த வித்தியாசமும் இல்லை. நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கும், சந்தோஷத்திற்கும், கஷ்டத்திற்கும் கர்ம பலனே காரணம். அன்னையின் கருணையில் பாரபக்ஷமில்லை.

8. ஸர்வோபரீச்வரி! விபாதி ஸுதாஸ முத்ரஹ
ஸ்தன்மத்யத: பரிவ்ருதே விவிதை; ஸுதுர்க்கைஹி
சத்ராயிதே த்ரிஜகதாம் பவதீ மணி த்வீ
பாக்யே சிவே! நிஜபதே ஹஸிதான,னா ஸ்தே

அமிர்தகடலின் மத்தியில், கடம்பவன காடுகளால் சூழப்பட்டு, சிந்தாமணி என்னும் ஒருவகை ரத்தினத்தால் நிர்மாணிக்கப்பட்ட மணித்வீபம் என்னும் அரண்மனையில் அந்தப்புரத்தில் பரமசிவனுடைய மடியில், ஆனந்த சல்லாபத்துடன் சயனித்திருக்கும் அன்னையே! உன்னை நான் வணங்குகிறேன்.

9. யஸ்தே புமானபிததாதி மஹத்வ முச்சைஹி
யோ நாம காயதி ச்ருணோதி ச தே விலஜ்ஜஹ
யச்சாதனோதி ப்ருசமாத்ம நிவேதனம் தே
ஸ ஸ்வான்யகானி விதுனோதி யதா தமோSர்க்கஹ

தேவியை நாம் ஸ்தோத்ரம், பாராயணம், பூஜை, பஜனை போன்றவைகளால் சந்தோஷப்படுத்த வேண்டும். நம்மையே அர்ப்பணம் செய்ய வேண்டும். அப்பொழுதான் நாம் செய்த பாபம் போகும். அஞ்ஞான இருட்டு விலகி ஒளி கிடைக்கும்.

10. த்வாம் நிர்குணாம் ச ஸகுணாம் ச புமான்விரக்தோ
ஜானாதி, கிஞ்சிதபி நோ விஷயேஷு ஸக்தஹ
ஞேயா பவ த்வமிஹ மே பவதாபஹந்த்ரீம்
பக்திம் ததஸ்வ, வரதே! பரிபாஹி மாம் த்வம்

இந்த்ரியங்களை அதனதன் போக்கில் அலையவிடாமல் தடுத்துக் கட்டுப்படுத்த வேண்டும். உலக போக சுக ஆசையை விட்டுவிட வேண்டும். அப்போது அன்னை நமக்குத் தெரிவாள். அப்பொழுது பேரானந்த சுகம் கிடைக்கும்.
தாயே! அப்பேர்பட்ட அந்த பக்தியை எனக்குத் தா என்று இந்நூலின் ஆசிரியர் வேண்டுகிறார்.

முதல் தசகம் முடிந்தது

தசகம் 2

ஹயக்ரீவ கதை

1. ரணேஷு தைத்யேஷு ஹதேஷு தேவாஹா
புரா ப்ரஹ்ருஷ்டா ஸஹதாத்ரு சர்வாஹா
யியக்ஷவோ யக்ஜபதிம் விநீதாஹா
ப்ரபேதிரே விஷ்ணும் அனந்த வீர்யம்

தேவாஸுர யுத்தம் 14 ஆண்டுகள் நடந்து முடிந்தது. அஸுரர்கள் ஒழிந்தார்கள் என தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அந்த வெற்றியைக் கொண்டாட ஒரு யக்ஞம் செய்ய நினைத்தார்கள். நல்ல காரியம் செய்ய நினைத்தால் அதை உடனே செய்ய வேண்டும் அல்லவா? அதனால் தேவர்கள் எல்லோரும் ப்ரம்மாவிடம் சென்று இதைச் சொன்னார்கள். உடனே ப்ரம்மாவும் சம்மதம் தெரிவித்து, யக்ஞத்தின் அதிபதி விஷ்ணுதான், அதனால் அவரிடம் இதைச் சொல்வோம் வாருங்கள் என்று அனைத்து தேவர்களுடன் ப்ரம்மா வைகுண்டம் சென்றார்.

2. த்ருஷ்ட்வா ச நித்ராவசகம் ப்ரபும் தம்
அதிஜ்ய சாபாக்,ரஸமர்ப்பிதாஸ்யம்
ஆச்சர்யம் ஆபுர் விபுதா நகோபி
ப்ராபோதயத் தம், கலு பாபபீத்யா

வைகுண்டத்தில் ஜனார்த்தனனைக் காணவில்லை. பின் எங்கு சென்றிருப்பார் என்று தேவர்கள் யோசித்தார்கள். ப்ரம்மா தன்னுடைய ஞான த்ருஷ்டியில் அவர் இருக்கும் இடம் அறிந்து, அனைவரும் அங்கு சென்றார்கள். அங்கே விஷ்ணு யுத்தத்தினால் மிகவும் களைத்தவராக, வில்லின் அடிப்பாகம் பூமியில் இருக்க, அதன் மேல் பாகத்தில் தன் முகவாயைப் பதித்தபடி, யோக நித்திரையில் இருப்பதைப் பார்த்தார்கள். அதனால் ப்ரம்மா, ருத்ரன், தேவர்கள் அனைவரும் யோக நித்திரையில் இருப்பவரை எப்படி எழுப்புவது? என்ன செய்வது? எனக் கவலை கொண்டனர்.

3. ஹரேஸ்ததானீம் அஜஸ்ருஷ்ட வம்ர்யா
முகார்ப்பணா குஞ்சித சாபமௌர்வீ
பக்னா, தனுச்சாSர்ஜம் அவாப ஸத்யஹ
ஸ்தேனா- பவத் ஸோSபி நிக்ருத்த கண்டஹ

தூங்கும் போது எழுப்புவது பாபம். விஷ்ணுவை எழுப்பினால் அவரின் கோபத்திற்கு ஆளாவோம். ஆனால் யக்ஞமும் நடந்தாக வேண்டும். என்ன செய்வது என்று ருத்ரன் யோசிக்கிறார். அப்பொழுது ப்ரம்மா, கரையானைப் படைத்தால் அது வில்லின் அடிப்பாகத்தில் உள்ள நாணை அரித்துவிடும். நாண் அறுந்தவுடன் சப்தம் வரும். அந்த சப்தத்தில் விஷ்ணு விழித்திடுவார். தேவர்கள் நினைத்தது நடக்கும் என்று கூறினார். எல்லோரும் இதை ஆமோதிக்க, ப்ரம்மா கரையானைப் படைத்து வில்லின் நாணை அரிக்கும்படிச் சொன்னார். ஆனால் கரையானோ நான் எப்படிச் செய்ய முடியும்? தூங்குபவரை எழுப்புவது, பேசும்போது குறுக்கே பேசுவது, கணவன் மனைவியின் அன்பில் குறுக்கிடுவது இவை எல்லாம் பிராம்ணனைக் கொன்ற பாபத்தைத் தரும் (ப்ரம்மஹத்தி தோஷம்) செயல்கள். அப்படி நான் இதைச் செய்வதால் எனக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது. லாபம் இருந்தால் செய்வேன் என்றது. ப்ரம்மாவும் யக்ஞத்தில் ஹோமத்தில் நெய் விடும் போது ஹோமகுண்டத்திற்கு வெளியே விழும் நெய்த் துளிகளை உன் பங்காகப் பெற்றுக்கொள் என்றார். ப்ரம்மாவின் ஆணைப்படி கரையான் வில்லின் அடிப்பாக நாணை அரித்தது. திடீரென ஒரு பெரும் சப்தம் கேட்டது. விஷ்ணுவின் தலை எங்கோ போய் விழுந்தது.

4. காயாத் சிரஸ்துத் பதிதம் முராரேஹே
பச்யத்ஸு தேவேஷு பபாத ஸிந்தௌ
சேத: ஸுராணாம் கதனே நிமக்னம்
ஹாஹேதி சப்தஹ ஸுமஹானபூச்ச

திடீரென ஏற்பட்ட சப்தத்தால் தேவர்கள் பயந்தனர். உலகமே கவலை கொண்டது. பூமி அதிர்ந்தது. கடல் பொங்கியது. கடல்வாழ் ஜீவன்கள் ஓன்றும் புரியாமல் தவித்தன. காற்று வேகமாக வீசியது. சூரியன் பூமியைத் தொட்டது. மலை அசைந்தது. எல்லாம் விபரீதமாக இருக்கிறதே என்ன நடக்கப் போகிறதோ என தேவர்கள் கவலை கொண்ட பொழுது மணிமகுடத்துடன் கூடிய விஷ்ணுவின் தலை ஓடிப்போய் எங்கோ விழுந்தது. எங்கு விழுந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. சிறிது நேரம் சென்றதும் ப்ரம்மாவும், மஹாதேவனும் விஷ்ணுவின் தலையில்லாத உடலைப் பார்த்தனர். யாரும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று எப்படி நடந்தது? யாரும் அழிக்க முடியாத விஷ்ணுவிற்கு எப்படி இது நடந்தது? அசுரனோ, ராக்ஷசனோ இதற்குக் காரணம் அல்ல. நாமேதான் இதற்குக் காரணம் என்று அனைவரும் வருந்தினர்.

5. கிமத்ர க்ருத்யம் பதிதே ஹரௌ நஹ
குர்ம: கதம் வே,தி மிதோ ப்ருவாணான்
தேவான் விதாதாஹபவேன்ன கார்யம்
அகாரணம்; தைவம் அஹோ! பலீயஹ

தேவர்களைக் காப்பவன், ஆபத்திற்கு உதவுபவன் இந்த விஷ்ணு. அவரை விட்டால் தேவர்களுக்கு வேறு ஆதரவு இல்லை. இனி நமக்கு உதவி செய்பவர் யாரும் இல்லை. இனி என்ன செய்யப் போகிறோம் என கவலை கொண்டனர். விஷ்ணுவிற்கு மரணம் வராது என ப்ரம்மாவிற்குத் தெரியும். அதனால் எல்லோரையும் சமாதானம் செய்கிறார். எந்த காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கும். விஷ்ணுவின் தலை போனதற்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். ஒரு பிறவியில் ஒருவன் உடலை எடுத்துவிட்டால், சந்தோஷம், துக்கம் இரண்டையும் அனுபவித்தே ஆகவேண்டும். இதில் சந்தேகம் வேண்டாம். தெய்வ சக்திக்கு முன் எதுவும் ஈடாக முடியாது. முன்காலத்தைப் பார்த்தால் சம்பு என்னுடைய தலையைக் கிள்ளி எறிந்தார். இந்திரன் உடலில் ஆயிரம் பெண் குறிகள் தோன்றின. அதனால் வானுலகம் விட்டு அவர் மானஸரோவரில் இருக்க நேர்ந்தது. இதைப் போலவே ஹரியின் தலையும் கடலில் விழுந்து இருக்கலாம் என்றார். கர்ம பலனை யாரானாலும் அனுபவித்தே ஆகவேண்டும்.

6. த்யாயேத தேவீம் கருணார்த்ர சித்தாம்
ப்ரஹ்மாண்ட ஸிருஷ்ட்யா,திக ஹேதுபூதாம்
ஸர்வாணி கார்யாணி விதாஸ்யதே நஹ
ஸா ஸர்வசக்தா, ஸகுணாSகுணா ச

கஷ்டம் வரும்போது நமக்கு ஆறுதல் தருபவள் தாய் தான். கஷ்டம் வந்தால் எல்லோரும் அவளிடம் தான் செல்வோம். அந்த தேவி ஸர்வ சக்தி. அவளே அனைத்திற்கும் காரணம். அவள் க்ருபாவதி. சகுணையும் நிர்குணையும் அவளே. ரூபத்துடனோ ரூபமில்லாமலோ எப்படி வேண்டுமானாலும் த்யானிக்கலாம். அவளே உலகின் தாய். மூலப்ரக்ருதி. மூன்று உலகையும் ரக்ஷிப்பவள். அசையும் அசையாத அனைத்தையும் காப்பவள். எல்லோரும் அவளை த்யானம் செய்யுங்கள். அவளைச் சரணடையுங்கள். நமக்கு வழி கிடைக்கும் என்றார் ப்ரம்மா.

7. இத்யூசுஷ: ப்ரேரணயா விதாதுஹு
ஸ்த்வாமேவ வேதா நுநுவு: ஸுராஸ்ச
திவி ஸ்திதா தேவகணாம்ஸ்த்வமாத்த
பத்ரம் பவேத் வோ ஹரிணேத்ருசேன

அனைத்து தேவர்களும் அன்னையை வணங்கினர். சரணடைந்தனர். வேதமும் அன்னையை துதித்தது. (வேதமானது “தேவீ! பகவதீ! மஹாமாயா! உலக நாயகியே! உன்னை வணங்குகிறோம். சங்கரனின் ப்ரிய நாயகியே! நெற்றியில் சந்திரக்கலை சூடியவளே! காயத்ரீ ரூபமானவளே! கீர்த்தி உடையவளே! ப்ரம்ம, விஷ்ணு, சிவனால் வணங்கப் பெறுபவளே! அசையும், அசையாத அனைத்திற்கும் உயிரானவளே! உன் பெயரைச் சொல்லவோ, உன் புகழைப் பாடவோ யாராலும் முடியாதவளே! தாயே! எந்த முயற்சியும் இன்றி உலகம் தோன்ற காரணமானவளே! உன் சக்தியை யாரால் அறிய முடியும் அம்மா! வேதமாகிய என்னாலும் அது முடியாத ஒன்று தாயே! விஷ்ணுவின் தலை கடலில் விழுந்தது தெரியாதது போல் இருக்கிறாயே? விஷ்ணு ஏதேனும் பாபம் செய்தாரா? பின் எப்படி இது நடந்தது? உன்னை வணங்குபவரிடத்தில் பாபம் எப்படி அம்மா இருக்கும்? ஏன் தேவர்களிடத்தில் பாரபக்ஷம் காட்டுகிறாய்? விஷ்ணுவின் தலை இப்படி ஆனது பெரிய ஆச்சர்யமல்லவா? நாங்கள் மிகுந்த கவலையில் இருக்கிறோம். உன்னைப் பணிந்தவரைக் காப்பவளாயிற்றே நீ. விஷ்ணுவின் தலையைப் பொருத்த ஏன் அம்மா இன்னும் தாமதம்? விஷ்ணு ஏதேனும் கர்வம் கொண்டாரா? அதனால் இப்படி விளையாடினாயா? அல்லது விஷ்ணுவினால் தோல்வியைத் தழுவிய தைத்யர்கள் கடும் தவம் செய்து இப்படி வரம் பெற்று அதனால் இப்படி ஆனதா? ஸமுத்ரராஜன் மகளான லக்ஷ்மி தேவியிடம் உனக்குக் கோபமா? லக்ஷ்மியும் உன் ஸ்வரூபம் தானே! தவறு இருந்தால் மன்னிக்கக் கூடாதா? உன் அடி பணிந்தோரை இப்படி சோதிக்கலாமா? விஷ்ணுவின் தலை எங்கு போனது என்று கூடத் தெரியவில்லையே? எங்களுக்கு உன்னை விட்டால் வேறு கதியில்லை தாயே! விஷ்ணுவின் உயிரை மீட்டுக்கொடு தாயே! தேவர்களுக்கு அமிர்தம் போல் உலகிற்கு உயிர் தருபவளே! நீ தான் எங்கள் துயரத்தைப் போக்கவேண்டும்” என்று அங்கங்களுடன் ஸாமகானத்தில் வேண்டியது.) அவர்களின் துதியால் மகிழ்ச்சியடைந்த தேவீ வானில் தோன்றினாள். உங்களுக்கு விஷ்ணுவால் நன்மை வரும் என்று சொன்னாள்.

8. தைத்யோ ஹயக்ரீவ இதி ப்ரசித்தோ
மயைவ தத்தேன வரேண வீரஹ
வேதான் முனீம்ச்சாபி ஹயாஸ்ய மாத்ர
வத்யோ ப்ருசம் பீடயதி ப்ரவாது

விஷ்ணுவினால் நன்மை வரும் என்று தேவீ சொன்னாள். விஷ்ணுவின் தலை விழுந்ததால் என்ன நன்மை வரப்போகிறது? ஹயக்ரீவன் என்னும் ஒரு தைத்யன் சரஸ்வதி ஆற்றின் கரையில் 1000 வருடங்கள் அன்னையை நினைத்து கடும் தவம் செய்தான். அன்னையும் ஸிம்ம வாகனத்தில் காட்சி தந்து “வேண்டிய வரம் கேள்” என்றாள். ஹயக்ரீவனும் “தேவர்களாலோ, அசுரர்களாலோ தோற்கடிக்க முடியாதவனாகவும், ஒரு அழிவில்லாத யோகியாகவும், இறப்பு என்பதே இல்லாதவனாகவும் இருக்க வேண்டும்” என வரம் கேட்டான். உடனே தேவீ ” பிறப்பும் இறப்பும் உலகின் இயற்கை. அதை மாற்ற முடியாது. வேறு வரம் கேள்” என்றாள். “மரணம் தவிர்க முடியாதது என்றால் குதிரைத் தலையுடைய ஒருவனைத் தவிர வேறு யாராலும் மரணம் சம்பவிக்கக் கூடாது” என வரம் கேட்டான். அன்னையும் அப்படியே வரம் தந்தாள். அதுமுதல் அவன் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தினான். மூவுலகிலும் தன்னைக் கொல்ல குதிரைத் தலை உடைய எவரும் இல்லை என கொக்கரித்தான். இதன் காரணமாக அன்னை குதிரைத் தலை ஒன்றை விஷ்ணுவின் உடலில் பொருத்துமாறு விஸ்வகர்மாவிற்கு ஆணை இட்டாள்.

9. தைவேன க்ருத்தம் ஹரீசீர்ஷ; மத்ய
ஸம்யோஜ்யதாம் வாஜிசிரோஸ்ய காயே
ததோ ஹயக்ரீவதயா முராரீர்
தைத்யம் ஹயக்ரீவமரம் நிஹந்தா

உலகில் காரணமில்லாமல் ஏதும் நடக்காது. விஷ்ணுவின் தலை போனதற்கும் ஏதேனும் காரணம் இருக்குமல்லவா? ஒரு நாள் லக்ஷ்மி தேவியானவள் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். அங்கு வந்த விஷ்ணு கேலியாகச் சிரித்தார். லக்ஷ்மி தேவிக்கு ஏன் அப்படிச் சிரித்தார்? என்ன காரணம்? வேறு ஏதேனும் பெண்ணை நினைத்து அப்படிச் சிரித்தாரோ? என பலவாறு யோசித்து தமோகுண உந்தலினால் மிகுந்த கோபம் கொண்டு “உன் தலை விழட்டும்” எனச் சாபம் தந்தாள். இதுதான் விஷ்ணுவிற்குத் தலை போனதன் காரணம். அன்னை விஷ்ணுவிற்கு குதிரைத் தலையைப் பொருத்தும்படி விஸ்வகர்மாவிற்கு ஆணை தந்தாள். குதிரைத் தலையுடன் விஷ்ணு ஹயக்ரீவர் ஆகிறார். அசுரனைக் கொல்ல இது காரணமாகிறது.

10. த்வமேவ முக்த்வா ஸதயம் திரோதாஹா
ஸ்த்வஷ்ரா கபந்தேச்வசிரோ முராரேஹே
ஸம்யோஜிதம் பச்யதி தேவஸங்கே
ஹயானன: ஸ்ரீ,ஹரிருத்திதோபூது

தேவர்கள் மிகவும் சந்தோஷப் பட்டார்கள். மஹாமாயாவின் அருளால் விஷ்ணு ஹயக்ரீவர் அவதாரம் எடுத்தார். சில காலம் சென்ற பின் அசுரனைக் கொன்று தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் நன்மை செய்தார்.

“ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகா க்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மகே”

11. தைத்யம் ஹயக்ரீவம் அஹன் ஹயாஸ்யோ
ரணே முராரிஸ்த்வ தனுக்ரஹேண
ஸதா ஜகன்மங்களதே! த்வதீயாஹா
பதந்து மே மூர்த்னி க்ருபாகடாக்ஷாஹா

விஷ்ணுவின் தலை போனதால் விஷ்ணுவிற்கும் ஆபத்தில்லை. தேவர்களுக்கும் துன்பமில்லை. அது அவர்களுக்கு அனுக்ரஹமாயிற்று. தேவியின் அனுக்ரஹத்தால் ஹயக்ரீவர் தோன்றினார். அசுரன் அழிந்தான். தேவியின் அருள் இருந்தால் எல்லாம் நன்மை ஆகும். விஷ்ணுவின் ஹயக்ரீவ அவதாரமும் ஹயக்ரீவ அஸுரனின் கதையும் சேர்ந்தது இந்த தசகம்.

இரண்டாம் தசகம் முடிந்தது

தசகம் 3

மஹகாளி அவதாரம்

1. ஜகத்ஸு ஸர்வேஷு புரா விலீனேஷு
ஷ்வேகார்ணவே சேஷதனௌ ப்ரஸுப்தே
ஹரௌ, ஸுராரீ மதுகைட பாக்யௌ
மஹாபலாவப்ஸு விஜஹ்ரதுர் த்வௌ

முன்பு ஒரு காலத்தில் ப்ரளயம் ஏற்பட மூன்று உலகமும் ஸமுத்திரத்தில் மூழ்கின. அப்பொழுது வாசுதேவன் ஆதிசேஷன் மடியில் உறங்கிக் கொண்டிருந்தார். அவர் காதிலுள்ள அழுக்கிலிருந்து மஹா பலசாலியான மது, கைடபன் என்னும் இரு தைத்யர்கள் தோன்றினர். அவர்கள் அந்தக் கடலில் திளைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

2.ஸமா: ஸஹஸ்ரம் யதசித்தவ்ருத்தீ
வாக்பீஜமந்த்ரம் வரதே! ஜபந்தௌ
ப்ரஸாதிதாயா அஸுரௌ பவத்யாஹா
ஸ்வச்சந்தம் ருத்யுத்வம் அவாபதுஸ்தௌ

அப்பொழுது அவர்களுக்கு ஒரு சந்தேகம் வந்தது. நாம் விளையாடும் இந்த கடலுக்கு யார் ஆதாரம்? யார் இதைப் படைத்தது? இது எப்படி உண்டானது? நாம் எப்படி உண்டானோம்? நமது தந்தை யார்? இப்படியெல்லாம் யோசித்தனர். அப்பொழுது கைடபன் மதுவிடம் இந்த ப்ரளய ஜலத்தில் நம்மை நிலை பெறச் செய்யும் சக்திதான் இந்த கடலுக்கும் ஆதாரமாக இருக்க வேண்டும் என்றான். மதுவும் அதை ஒத்துக்கொண்டான். அப்பொழுது ஆகாஸத்தில் அழகிய ஒளியுடன் வாக்பீஜ அக்ஷர ஒலியும் கேட்டது. இது வெறும் அக்ஷரமல்ல. இதில் ஏதோ சக்தி இருக்கிறது என்று நினைத்து அந்த சக்தியை நினைத்து 1000 வருடம் தவம் செய்தனர். தவத்தை மெச்சிய அன்னை அவர்கள் முன் தோன்றினாள். அவர்கள் வேண்டியபடி “தேவர்களாலோ அஸுரர்களாலோ வெற்றி கொள்ள முடியாதவர்களாகவும், தாங்கள் விரும்பினால் மட்டுமே மரணம் உண்டாகும்” என்ற வரத்தினையும் பெற்றனர்.

2. ஏகாம்புதௌ தௌ தரளோர்மிமாலே
நிமஜ்ஜனோன்மஜ்ஜன- கேளிலோலௌ
யத்ருச்சயா வீக்ஷிதம் அப்ஜயோனிம்
ரணோத்ஸுகாவூ,சதுரித்தகர்வௌ

வரத்தினைப் பெற்ற அசுரர்கள் தனக்கு நிகரான வல்லவர்கள் யாரும் இல்லை என்ற மமதையுடன் கடலில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று ஒரு நாள் தாமரை மலர் மேல் அமர்ந்திருக்கும் ப்ரம்மனைப் பார்த்தனர். நான்கு தலை உடைய அவரைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்தனர்.

4. பத்மாஸனம் வீரவரோபபோக்யம்
ந பீருபோக்யம், ந வராகபோக்யம்
முஞ்சேத மத்யைவ; ந யாஸி சேத் த்வம்
ப்ரதர்ச,ய ஸ்வம் யுதி சௌர்யவத்வம்

தன் வலிமையில் கர்வம் கொண்டு வேறு யாரும் யுத்தம் செய்ய இல்லாத காரணத்தால், வலுக்கட்டாயமாக ப்ரம்மனை எங்களுடன் யுத்தம் செய். இல்லாவிட்டால் தாமரை மலரை விட்டு ஓடிப்போ. யுத்தம் செய்ய வலிமை இல்லாத உனக்குத் தாமரை ஆசனம் எதற்கு? இந்த ஆசனம் வீரர்களுக்கு உகந்தது. நீ உடனே ஓடிப்போய் விடு என்று அச்சுறுத்தினர். இதைக் கேட்டு ப்ரம்மா பயந்து நடுங்கினார்.

5. இதம் ஸமாகர்ண்ய பயாத் விரிஞ்சஹ
ஸுஷுப்தி நிஷ்பந்தம் அமோகசக்திம்
ப்ரபோதனார்த்தம் ஹரிமித்தபக்த்யா
துஷ்டாவ; நைவாசலதம்பு ஜாக்ஷஹ

பயந்து போன ப்ரம்மா, இந்த அஸுரர்களுடன் சண்டை போடுவது நம்மால் முடியாத காரியம். எனவே நம்மைக் காப்பாற்றிக் கொள்ள தூங்கும் விஷ்ணுவை எழுப்புவதே ஒரே வழி. நம்மைக் காப்பாற்ற அவரால் தான் முடியும் என்று தாமரைத் தண்டினுள் சென்று விஷ்ணுவை “நாராயணா” ” கோவிந்தா” “மதுசூதனா” “ஆபத்பாந்தவா” ” அனாதரட்ஷகா” என்று பலவித நாமங்களால் அழைத்தார்.

6. அஸ்பந்ததா த்வஸ்ய கயாபி சக்த்யா
க்ருதேதி மத்வா மதிமான் விரிஞ்சஹ
ப்ரபோதயைனம் ஹரி மேவமுக்த்வா
ஸ்தோத்ரைர் விசித்ரைர் பவதீமனௌஷீது

எவ்வளவு அழைத்தும் அவர் எழுந்திருக்கவில்லை. அவர் என்ன செய்வார் பாவம்? அவரை அப்படி ஆழ்ந்த நித்திரையில் ஆழ்த்தியது நித்ராசக்தி அல்லவா? அவர் இப்பொழுது நித்ரா சக்தியின் வசத்தில் இருக்கிறார். அதனால்தான் நான் அழைத்தும் எழுந்திருக்க முடியவில்லை என்று யோசித்து அந்த ஆதிசக்தியான மஹாமாயாவைச் சரணடைகிறார். “தாயே! உன்னைப் பணிந்தேன். நான் ஆபத்தில் இருக்கின்றேன். என்னைக் காப்பாற்று. நீ என்னைக் காப்பாற்ற நினைத்தால் இந்த விஷ்ணுவை எழுப்பு. இல்லையேல் என்னையோ அல்லது அஸுரர்களையோ கொன்று விடு. என்னைக் காப்பாற்ற நினைத்தால் ஏன் இந்த அஸுரர்களைப் படைத்தாய்? என்னைக் காப்பது உன் கையில் தான் இருக்கிறது” என்று வேண்டினார்.

7. நுதிப்ரஸன்னா ப்ஜபவஸ்ய தூர்ணம்
நி: ஸ்ருத்ய விஷ்ணோ: ஸகலாம் கதஸ்வம்
திவி ஸ்திதா; தத்க்ஷணமேவ தேவோ
நித்ராவிமுக்தோ ஹரிருத்திதோ பூது

அப்பொழுது விஷ்ணுவின் உடலிலிருந்து அம்பிகையின் அருளால் ஒளிமயமான தாமஸ ரூபமான சக்தி வெளிப்பட்டது. ஆகாசத்தில் சுந்தரி ஆக, தமோகுண தேவியாக காளி அவதரித்தாள். அந்த சக்தி வெளி வந்ததும் விஷ்ணு தன் உடலை லேசாக அசைத்தார். ப்ரம்மன் ஆனந்தம் அடைந்தார்.

8. அதைஷ பீதம் மதுகைட பாப்யாம்
விரிஞ்சமாலோக்ய ஹரிர் ஜகாத
அலம்பயேனா, ஹமிமௌ ஸுராரீ
ஹந்தாஸ்மி சீக்ரம் ஸமரே த்ர பச்ய

கண் விழித்த விஷ்ணு “ப்ரம்மனே! நீ ஏன் இங்கு தாமரை மலரை விட்டு வந்தாய்? ஏன் பயப்படுகிறாய்? ஏன் துக்கம்? என்று கேட்க ப்ரம்மனும் நடந்தவை அனைத்தையும் கூறுகிறார் என்னைக் காத்தருள வேண்டும் என வேண்டினார். விஷ்ணுவும் கவலை வேண்டாம் நான் அவர்களை ஒரு நிமிடத்தில் அழித்து விடுகிறேன் என்று சமாதானம் கூறினார்.

9. ஏவம் ஹரௌ வக்தரி தத்ர தைத்யௌ
ரணோத்ஸுகௌ ப்ராபது ரித்தகர்வௌ
தயோர விஞ்ஞாய பலம் முராரீர்
யுத்யோத்யதோSபூதஜ ரக்ஷணார்த்தம்

அப்போது ப்ரம்மாவைத் தேடி மது கைடபர்கள் அங்கு வந்தார்கள். ப்ரம்மாவைப் பார்த்து இந்த தூங்கு முஞ்சியுடன் சேர்ந்தாயா? எங்களுடன் சண்டைக்கு வா. உங்கள் இருவரையும் என்ன செய்கிறேன் பார் என்று அறைகூவல் விடுத்தனர். இதைக் கேட்ட ஜனார்த்தனன் என்னுடன் சண்டை போடு. உங்கள் கர்வத்தை அடக்குகிறேன் என்றார். ப்ரளய ஜலத்தில் ஆதாரமில்லாமல் நிற்கும் மதுகைடபர்களுடன் பிறகு சண்டையைத் துவங்கினார்.

10. பிமேமி ராகாதிமஹாரிபுப்யோ
ஜேதும் யதிஷ்யேஹமிமான் ஸுசக்தான்;
ததர்த்தசக்திம் மம தேஹி நித்யம்;
நித்ராலஸோ மா ச பவானி மாதஹ

விஷ்ணு எதிரியை அழிக்க யுத்தம் செய்யப் புறப்பட்டார். ஆனால் வாழ்க்கையில் நாம் தினமும் சந்திக்கும் எதிரிகள் காமம், க்ரோதம், லோபம், மதம், ஆச்சர்யம் ஆகியவைகள். இவைகள் மிகப் பெரிய எதிரிகள். இவைகள் மிகவும் ஆபத்தானவை. இவைகளே மனிதனை மீண்டும் மீண்டும் பிறப்புச் சூழலில் சிக்க வைக்கின்றன. இவைகளைப் பணிய வைக்க பக்தி தான் சிறந்த சாதனை. எந்த காரியத்தைச் செய்தாலும் அது பூர்த்தி அடைய அன்னையின் அனுக்ரஹம் வேண்டும். தாயே! அப்படிப்பட்ட அனுக்ரஹத்தை எனக்குத் தா என ஆசிரியர் நாரயண நம்பூதிரி வேண்டினார்.

மூன்றாம் தசகம் முடிந்தது

தசகம் 4

மதுகைடப வதம்

1. த்வம் தாமஸீ ஸுப்தர,மாதவாங்கஜா
ச்யாமா ருசா மோ,ஹனதாம்ரலோசனா
ஏகார்ணவே கோர,ரணோத்ஸுகான் ஹரீம்
தைத்யௌ ச தௌ ஸ்மேர,முகீ ஸமைக்ஷதாஹா

நேத்ரம், முகம், மூக்கு, தோள், இருதயம் ஆகிய சர்வ அங்கங்களிலும் வியாபித்திருந்த நித்ராதேவியான தாமஸ குண சக்தி வெளிப்பட்டு, கண் சிவக்க, கறுப்பு நிறத்துடன் பராசக்தியுடன் ஆகாசத்தில் கண்ணுக்குத் தெரியாமல் நின்று கேலியாக அசுரர்களைப் பார்த்துச் சிரித்தாள்.

2. பசயத்யஜே பாஹு,ரணம் முராரிணா
க்ருத்வா மது: ச்ராந்திம்,அவாப,ஸத்வரம்
அப்யேத்ய யுத்தம் குருதே ஸ்ம கைடபஹ
ச்ராந்தே ச தஸ்மின்ன் அக்ருதாSSஹவம் மதுஹு

முதலில் மது என்பவன் வேகமாக ஓடி விஷ்ணுவுடன் மற்போர் செய்கிறான். மது கொஞ்சம் சளைத்ததும் கைடபன் சண்டை செய்கிறான். இவன் சளைத்ததும் மீண்டும் மது வருகிறான். இப்படி மாறி மாறி விஷ்ணுவிடம் யுத்தம் செய்கிறார்கள்.

3. ஏவம் முஹு; ஸங்கர,விச்ரமாவுபௌ
பர்யாயதோ வர்ஷ,சஹஸ்ரபஞ்சகம்
க்ளானிம் விநா சக்ரது; ரச்யுத: க்ளமாது
விச்ராந்திமிச்சன்ன,ஸுரௌ ஜகாத தௌ

இப்படியாக மாறி மாறி இடைவெளி இல்லாமல் யுத்தம் செய்கிறார் விஷ்ணு. 5000 வருடங்கள் போர் நடக்கிறது மிகவும் சோர்ந்து போகிறார். இந்த அஸுரர்களின் பலம் இப்படி வளர்ந்து கொண்டே போகிறதே! ஆனால் நம் பலமும் வீரமும் எங்கே போனது எனத் தெரியவில்லையே!. இவர்களை ஏதாவது உபாயம் செய்தே ஜயிக்க முடியும் என யோசித்து அவர்களிடம் சொல்கிறார். என்ன சொல்கிறார்?

4. ச்ராந்தேன பீதேன, ச பாலகேன ச
ப்ரபு:புமான் நைவ, கரோதி ஸம்யுகம்
மத்யே,ரணம் த்வௌ, க்ருத விச்ரமௌ யுவாம்
ஏக: கரோம்யேவ, நிரந்த,ராஹவம்

யுத்தத்தில் சோர்வடைந்தவன், நிராயுதபாணியானவன், பாலகன், கீழே விழுந்தவன் இவர்களுடன் யுத்தம் செய்வது வீரர்க்கு அழகல்ல. இது தர்மமும் அல்ல. நீங்கள் இருவரும் மாறி மாறி யுத்தம் செய்தீர்கள். அதனால் நீங்கள் களைப்படையவில்லை. ஆனால் நான் இடைவிடாமல் யுத்தம் செய்தேன். அதனால் நான் சிறிது இளைப்பாறியதும் யுத்தம் மீண்டும் தொடங்குவோம். இது உறுதி என்றார்.

5. ஞாத்வா ஹரீம் ச்ராந்த,முபௌ விதூரதஹ
ஸம்தஸ்ததுர், விச்,ரமஸௌக்ய வாம்ஸ்ததஹ
த்வாமேவ துஷ்டாவ, க்ருபா,தரங்கிணீம்
ஸர்வேஸ்வரீம் தைத்ய-ஜயாய மாதவஹ

அசுரர்களும் சரி என்று ஒத்துக் கொண்டு தூரத்தில் சென்று அமர்ந்து இளைப்பாறினர். விஷ்ணு யோசித்தார். இவர்களுக்கு ஏதோ வரம் கிடைத்திருக்கிறது. அதனால் தான் சண்டை செய்தாலும் இவர்களுக்கு மரணம் சம்பவிக்கவில்லை என யோசித்து தன் ஞான த்ருஷ்டியால் தேவியிடம் வரம் பெற்றதை அறிந்து கொண்டார்.

6. தேவீ ப்ரஸீதைஷ,ரணே ஜிதோSஸ்ம்யஹம்
தைத்யத்வயேனாப்,ஜபவம் ஜிகாம்ஸுனா;
ஸர்வம் கடாக்ஷைஸ்தவ ஸாத்ய; மத்ர மாம்
ரக்ஷே தி வக்தா,ரமபாஷதா ஹரீம்

எவ்வளவு சண்டை செய்தும் இவர்கள் சளைக்கவில்லை. யுத்தம் செய்தால் யாருக்கு ஜயம் கிடைக்கும் எனத் தெரியவில்லை. அதனால் இவர்கள் மரணத்தை விரும்பும் படியான உபாயம் செய்ய வேண்டும். அதற்கும் தேவியின் அருள் வேண்டும் என்று அன்னையைத் துதிக்கிறார்

7. யுத்தம் குரு த்வம், ஜஹி தௌ, மயா ப்ருசம்
ஸம்மோஹிதௌ, வக்ர,த்ருசே த்யயம் த்வயா
ஸஞ்சோதிதோ ஹ்ருஷ்ட,மனா மஹார்ணவே
தஸ்தௌ ரணாயா,யயதுச்ச தானவௌ

தேவீ காட்சி தருகிறாள். மாதவா! இப்பொழுது யுத்தம் செய். ஜயம் உண்டாகும் என அனுக்ரஹம் செய்கிறாள். விஷ்ணு முஷ்டி யுத்தம் செய்கிறார். அஸுரர்களின் மீது அன்னை காம வலையை வீசுகிறாள். மோகம் கொண்ட அஸுரர்கள் வெறி கொண்டவர்கள் போல் தேவியைப் பார்த்து மயங்கி நிற்கின்றனர். சண்டையில் சளைக்கின்றனர்.

8. பூயோபி குர்வன், ரணமச்யுதோ ஹசன்
காமாதுரௌ தே, முகபத்மதர்சனானு
தாவா ஹ துஷ்டோSஸ்ம்யதுலௌ ரணே யுவாம்
ததாம்யஹம் வாம் வரமேஷ வாஞ்சிதம்

சிறிது நேரம் யுத்தம் செய்கிறார்கள். உடனே தேவியின் சங்கீத கானத்தில் மயங்கி மோஹத்தில் மூழ்குகின்றனர். இந்த நல்ல சமயத்தைப் பயன்படுத்தி ” உங்கள் வீரத்தைக் கண்டு நான் மிகவும் மகிழ்ந்தேன். உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள்” என்று விஷ்ணு சொல்கிறார்.

9. தாவூசதுர் “வித்தி ஹரே! ந யாசகௌ
ஆவாம் ததாவஸ்தவ, வாஞ்சிதம் வரம்
நா ஸத்யவாசௌ ஸ்வ” இதீரிதோ ஹரிஹி
ஸ்த்வாம் ஸம்ஸ்மரன், சத்ரு,ஜிகீஷ்யா ப்ரவீது

தேவி நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். வரம் வாங்கினால் தாழ்ந்தவராகி விடுவோம் என்று ” விஷ்ணுவே! எங்களை யாசர்கர்கள் என்று நினைத்தாயா? எங்கள் இனத்தவரிடம் நீ யாசகம் பெற்றதை மறந்தாயா? உனக்கு வேண்டிய வரத்தை நாங்கள் தருகிறோம். வேண்டியதைக் கேள் என்றனர்.

10. “மஹ்யம் வரம் யச்சத,மத்ய மே யதோ
வத்யௌ யுவாம் ஸ்யாதம்” இதீரிதாவுபௌ
த்ருஷ்ட்வாப்ஸு லீனம், ஸகலம் ஸமூசதுஹு
ஸ்த்வம் ஸத்யவாங் நௌ, ஜஹி நிர்ஜலே ஸ்தலே

உடனே விஷ்ணு நல்ல காலம் பிறந்தது என மகிழ்ந்து, உங்களுக்குக் கொடுக்கும் திறமும், என் யுத்தத்தில் மகிழ்ச்சியும் இருந்தால் இந்த யுத்தத்தில் என் கையால் நீங்கள் மரணம் அடைய விரும்ப வேண்டும் என்ற வரம் கேட்டார். ஆகா! இவன் நம்மை வஞ்சித்து விட்டானே. இவனுக்கு வரத்தைக் கொடுத்துவிட்டு மோஹினியுடன் வாழலாம் என நினைத்தோமே. மோசம் போனோமே என்று வருந்தி, ஜலமில்லாமல் விசாலமான இடத்தில் எங்களைக் கொல்வாயாக! என்று சொன்னார்கள்.

11. ‘அஸ்த்வேவ’ மித்யா,த்ருதவாங் முதாஹரிஹி
ஸ்வோரௌ ப்ருதாவுன்னமிதே ஜலோபரி
க்ருத்வாரிணா தச்,சிரஸி ததாSசினது
ஸ்வச்சந்தம்ருத்யு, தவ மாயயா ஹதௌ

விஷ்ணு விஸ்வரூபம் எடுத்துத் துடைகளை விசாலமாக்கி பூமியாகக் காண்பித்து அதில் அஸுரர்களின் தலையை வைக்கச் சொன்னார். சக்ராயுதத்தால் கொன்றார். அஸுரர்கள் பரலோகம் சென்றனர்.

12. த்வேஷச்ச, ராகச்ச, ஸதா, மமாம்பிகே!
தைத்யௌ ஹ்ருதி ஸ்தோ; Sத்ர விவேகமாதவஹ
ஆப்யாம் கரோத்யேவ ரணம், ஜயத்வயம்;
துப்யம் மஹாகாளி! நம; ப்ரஸீத மே

இதைக் கண்டு கலி நமஸ்காரம் செய்தார். ராகத்வேஷம் தான் அஸுரர்கள். இதை வெற்றி கொள்ள விவேகம் வேண்டும். அதற்கு விஷ்ணு மனசில் வரவேண்டும். அதற்கு அன்னையின் அருள் வேண்டும்.

“நமஸ்தே சரண்யே சிவே சாணுகம்பே
நமஸ்தே ஜகத் வ்யாபிகே விஸ்வ ரூபே
நமஸ்தே சரண்யே ஜகத்வந்த்ய பாதார விநேத்
நமஸ்தே பாஹிமாம் பத்ரகாளி

நான்காம் தசகம் முடிந்தது

தசகம் 5

ஸீத்யும்னகதா

1. ஜாதா ஸுதேளா, மனுஸப்தமஸ்ய
ஸம்ப்ரார்திதோSநேந, முனிர் வஸிஷ்டஹ
சம்போ: கடாக்ஷேண ஸுதாம் குமாரம்
சக்ரே; ஸ காலேன, பபூவ ராஜா

மன்வந்த்ரம் என்றால் கால அளவு. கல்பம். அதாவது ப்ரம்மா ஸிருஷ்டிக்கும் காலம். ப்ரம்மாவின் சிருஷ்டி காலத்தில் அதாவது ப்ரம்மாவின் பகல் காலத்தில் 14 மன்வந்த்ரங்கள். அதில் 7 ஆவது மனு வைவஸ்வத மனு. இவர் தனக்கு ஸத் புத்திரன் வேண்டும் என தபஸ் செய்தார். குலகுருவான வஸிஷ்டரின் ஆலோசனைப்படி யக்ஜம் செய்தார். மனு புத்திரன் வேண்டும் என நினைத்தார். ஆனால் அவர் மனைவியோ புத்ரி வேண்டும் என நினைத்தாள். புத்ரி பிறந்தாள். அந்த பெண்ணின் பெயர் இளா. மனுவும் தனக்கு மகன் தான் வேண்டும் என வஸிஷ்டரிடம் சொல்ல அவரும் சிவனை த்யானித்து தன் தபோ சக்தியால் அந்த பெண்ணை ஆணாக மாற்றினார். ஆணின் பெயர் ஸுத்யும்னன். இளா ஸுத்யும்னனாக மாறினாள்

2. ஸுத்யும்னநாமா ம்ருகயா விஹாரீ
கதோ ஹயாரூட, இளாவ்ருதம் ஸஹ
ஸ்த்ரீத்வம் புன: ப்ராப்ய ஸுதம் ஹிமாம் சோர்
வவ்ரே பதிம்; புத்ரமஸுத சைஷா

ஒருநாள் இவன் ஆண்குதிரையில் தன் சகாக்களுடன் வேட்டைக்குச் சென்றான். அங்கு இளாவ்ருதம் என்னும் ஒரு உத்யாவனத்தைக் கண்டு அங்கு மரங்கள் பூத்திருப்பதையும் குயில்கள் பாடுவதையும் கண்டு மகிழ்ந்து அதனுள் தன் குதிரை, சகாக்களுடன் உள்ளே நுழைந்தான். உடனே ஸுத்யும்னன் உள்பட அனைவரும், (குதிரை உள்பட) பெண்களாக மாறிவிட்டனர்.

3. ந்யவேதயத் ஸா குரவே வஸிஷ்டாய
ஏஷா கதாசின்னிஜ பும்ஸ்த்வகாமம்;
தத்ஸாதனார்த்தம். ஹரமேவ தத்யௌ
முனி: ப்ரஸன்னஸ்தமுவாச சம்புஹு

ஸுத்யுனன் இளா என்ற பெயருடன் வசித்து வந்தான். நாணத்தால் அரண்மனைக்குப் போகவில்லை. ஒரு நாள் சந்திரனின் புதல்வன் புதன், இளாவைப் பார்த்து இருவரும் மோகித்து இளா கர்பவதி ஆகி, புரூரவன் என்னும் குழைந்தையைப் பெற்றெடுத்தாள். தன் நிலை எண்ணி வருந்தி மீண்டும் ஆணாக நினைத்தாள். தன் குல குருவான வஸிஷ்டரை நினைத்தாள். அவரும் ஞான திருஷ்டியால் இதை அறிந்து மகாதேவரை நோக்கித் தவம் செய்தார்.

4. “இளாவ்ருதம் மா புருஷ: ப்ரயாது
ப்ரயாதி சேத் ஸோ&ஸ்த்வ,பவா ததைவ
ஏவம் மயா நிச்சிதமேவ ஸௌம்ய!
கௌர்யா: ப்ரஸாதாய, பவான் ப்ரியோமே

இளாவ்ருதம் என்னும் அந்த உத்யாவனத்திற்கு ஒருநாள் ஸனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்களின் காந்தி எங்கும் பரவியது. அன்னையும் ஈசனும் உல்லாசமாக இருந்த நேரம் ஆதலால், அவர்கள் மீண்டும் தபோவனம் நோக்கித் திரும்பிச் சென்றனர். அன்னை, ஸனகாதிகளின் ஒளி கண்டு ஈசனிடமிருந்து விலகி நாணம் கொண்டாள். காரணம் அறிந்த பின் இருவரும் அந்த உத்யாவனத்தில் ப்ரவேசிப்பவர்கள் பெண்ணாக ஆகட்டும் என சபித்தனர். வஸிஷ்டரின் தவத்தால் மகாதேவன் அவர் முன்னால் தோன்றினார். வஸிஷ்டரும் பெண்ணுருவம் கொண்ட ஸுத்யும்னன் ஆணாக வேண்டினார். ஆனால் மகாதேவனோ சாபத்தை மாற்ற முடியாது என்ன செய்வது என யோசித்தார்.

5. ந பக்ஷபேதோSத்ர மமாஸ்தி, கௌரி
பவாம்ச்ச த்ருப்தௌ, பவதாம் மதீயௌ
இத: பரம் தஸ்ய, மனோரபத்யம்
மாஸம் புமான் ஸ்யாத், வனிதா ச மாஸம்

சாபத்தை மாற்றினால் பார்வதிக்குக் கோபம் வரும். வரம் தராவிட்டால் வஸிஷ்டர் வருந்துவார். பார்வதியும் வஸிஷ்டரும் வருத்தப் படாமல் ஒரு வரத்தைத் தர வேண்டும் என மஹாதேவன் நினைத்தார். அதனால் ஒரு மாதம் பெண்ணாகவும் ஒருமாதம் ஆணாகவும் இருக்க வரம் அருளினார்.

6. ஏவம் சிவோக்தேன மனோரபத்யம்
லப்த்வா ச பும்ஸ்த்வம் தரணீம் சசாஸ,
ஸ்த்ரீத்வே ச ஹர்ம்யேஷு, நிநாய காலம்:
ஜனோ ந சைனம், ந்ருபம் அப்ய நந்தது

ஆணுருவத்தோடு நகரம் சென்ற ஸுத்யும்னன் வியாஸரிடமிருந்து தான் பெண்ணாக மாறின காரணம் அறிந்து கொள்கிறான். பெண்ணாக மாறின போது அந்தப்புர வாசமும், ஆணாக மாறியதும் அரசாட்சி நிமித்தம் கொலு மண்டபத்திலும் இருந்து காலம் தள்ளி வந்தான். விபரம் அறிந்த மக்கள் அவன் ஆட்சியை விரும்பாமல் அலக்ஷியம் செய்து வந்தனர்.

7. புரூரவஸ்யாத்ம ஸுதே&ர்பயித்வா
ராஜ்யம் விரக்தோ வனமேத்ய பூபஹ
ஸ்ரீநாரதாத் லப்த,னவார்ணமந்த்ரோ
பக்த்யா ஸ தத்யௌ பவதாரிணீம் த்வாம்

இதை அறிந்து கொண்ட ஸுத்யும்னன் தன் மகனான புரூரவனுக்கு யௌவனம் வந்ததும் ராஜ்யத்தை அவனிடம் ஒப்படைத்தான். ஆரண்யம் சென்று நாரத மஹரிஷியிடம் நவாக்ஷர மந்த்ர உபதேசம் பெற்றுப் பல வருடங்கள் ஜபம் செய்து வந்தான்.

8. ஸிம்ஹாதிரூடாமருணாப்ஜ நேத்ராம்
த்வாம் ஸுப்ரஸன்னாம், அபி வீக்ஷ்ய நத்வா
ஸ்துத்வா ச பக்த்யா, ஸ்திரபும்ஸ்த்வமேஷ
லேபேSத ஸாயுஜ்யம், அவாப சாந்தே.

பக்திக்கு மெச்சிய அன்னை ஸிம்ஹ வாஹினியாக காட்சி தந்தாள். அன்னையை பல ஸ்தோத்ரங்கள் சொல்லி நமஸ்கரித்தான். (தேவீ! திவ்யமாயும், வேத ப்ரசித்தமாகவும், லோகச்க்ஷேமகரமாயும் இருக்கும் உன் ஸ்வரூபம் என்னால் பார்க்கப்பட்டது. தேவர்கள் வணங்கக் கூடியதும் மோட்க்ஷத்தைத் தரக்கூடியதுமான உன் பாத கமலத்தை நமஸ்கரிக்கிறேன். பூமியில் உன் ஸ்வரூபத்தை யார் அறிவார்? நான் என்ன பாக்யம் செய்தேன். தீனனாகிய என்னிடத்தில் உன் தயையைப் பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது. சம்பு, நாராயணன், ப்ரம்மன், இந்திரன், சூரியன், சந்த்ரன் போன்றவர்களே உன் மகிமை அறியமாட்டார்கள். அப்படியிருக்க குண ஹீனனான மானிடன் எப்படி அறிவான்? உன்னை சங்கரர் மட்டுமே அறிவார். நீ ஸத்வ குண ஸம்பன்னையாக பாற்கடலில் உதித்த லக்ஷ்மியாக, ரஜோகுண சரஸ்வதியாக, தமோகுண துர்கையாகவும் இருக்கின்றாய். இதனால் த்ரிகுணையாக எவரும் உன்னை அறிவார்கள். எவராலும் அறியக் கூடாத நிர்குணையும் நீயே! சகுணை என்பார்க்கு நிர்குணையாகவும், நிர்குணை என்பார்க்கு சகுணையாகவும் இருக்கிறாய். அதனால் உன்னை யாரும் அறியமுடியவில்லை. பக்தி உள்ளோருக்கு அனுக்ரஹம் செய்பவளல்லவா நீ! உன்னால் படைக்கப்பட்ட ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் மூவரும் ஆனந்தம் அடையவில்லை. அதனால் உன் பாதகமலத்தை அடிக்கடி நமஸ்கரிக்கிறார்கள். அம்மா! சகல தேவர்களுக்கும் தேவனான விஷ்ணு உன் பாத்தில் விழுகிறார். நீயே லக்ஷ்மி என்றால் அப்படி உன் பாதத்தில் விழுவாரா? அதனால் நீ அவரை ஆளுகின்ற சக்தி அல்லவா? திவ்ய அலங்காரமும், சாந்தமும் உடையவளே! அதனால் தான் அவர் மார்பகத்தை கட்டிலாக்கி மின்னல் போல் வாசம் செய்கிறாயா? நீ அவரை விட்டு விலகினால் சக்தியாகிய உன் அனுக்ரஹம் இல்லாதவராக மாட்டாரா? ப்ரம்மா, தேவகணங்கள் அனைத்தும் உன்னால் உண்டாக்கப் பட்டவையே. நீ சாமர்த்யசாலி. உன் சக்தியை நான் என்னவென்று சொல்வது? புருஷர்கள் எல்லாம் உன்னால் ஸ்ருஷ்டிக்கப் பட்டவர்களே. அதனால் உன்னை வணங்குகிறார்கள். நீ புருஷரூபம் இல்லாதவளாயுமில்லை, புருஷனாயும் இல்லை. தேவீ! நீ ஆணோ பெண்ணோ, ஸகுணையோ, நிர்குணையோ எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். நீ எவ்விதமானவள் என அறியும் புத்தியும் எனக்கு இல்லை. எந்த விதமாயும் இல்லாத உன்னை நான் பக்தி பாவத்தோடு த்யானிக்கிறேன். உன்னிடம் ஸ்திரமான பக்தியை வேண்டுகிறேன். என்னுடைய மரணகாலத்தில் எனக்கு உன் பக்தியைத் தர வேண்டும் என்று ஸ்தோத்திரம் செய்து வேண்டிணான்). தேவியின் பாத கமலத்தைச் சரண் அடைந்தான். உண்மை பக்தனுக்கு அன்னை ஸாயுஜ்ய பதவி தந்தாள். முனிவர்களுக்கும் கிடைத்தற்கரிய நாசமில்லாத பதவியை அடைந்தான்.

9. சௌர்யம் ந, வீர்யம் ந ச பௌருஷம் மே
நைவாஸ்தி ச ஸ்த்ரீ, ஸஹஜா திதிக்ஷா;
மூடோ ந, ஜானம்ய, சுபம் சுபம் ச;
தேயம் த்வயா மே சுபமேவ மாதஹ

10. பச்யானி மாத:! ப்ரவரான் குரும்:! ஸ்தே
காருண்யதோ மாம், ஸுபதா நயந்து
ஸத்ஸங்க,ஸம்பா,வித சித்த வ்ருத்திர்
பவானி; தே, தேவி! நம: ப்ரஸீத

இந்த இரண்டு ஸ்லோகங்களிலும் இதன் ஆசிரியர் அன்னையை வேண்டிக் கொள்கிறார். பவதாரிணீ! புருஷ குணமோ, பெண் குணமோ எதுவும் நான் அறியேன். பக்தியும் என்னிடம் இல்லை. அம்மா ! உன்னை மட்டுமே நான் அறிவேன். நல்லது கெட்டது எதுவும் எனக்குத் தெரியாது. எப்படிக் கரையேறுவது என்றும் தெரியவில்லை. குருவின் உபதேசம் ஞானக் கண்ணைத் திறக்கும். எனக்கு குருவும் யாரும் இல்லை. அதனால் உன்னை அம்மா! என்று அழைத்தேன். எனக்கு நல்லது எதுவோ அதைக் கொடு தாயே! என்னைக் கரையேற்று தாயே! என வேண்டினார்.

ஐந்தாம் தசகம் முடிந்தது

தசகம் 6

வ்யாஸ நாரத ஸமாகமம்

1. த்வதிச்சயா தேவீ! புலஸ்த்யவாசா
பராசராத் விஷ்ணு, புராணாகர்த்துஹு
முனேர் ஹரிர் லோக,ஹிதாய தீபாத்
யதா ப்ரதீபோSஜனி, க்ருஷ்ண நாமா

புராணங்களில் மிகப் பழமையானது விஷ்ணு புராணம். புலஸ்த்ய மஹரிஷி எழுதும்படிச் சொன்னதால் பராசரர் அதை எழுதினார். இது தேவியின் ஆசை தான். அவர் மனதில் இதை எழுதும்படி தோன்றச் செய்தவள் அன்னை தானே. ஒரு நாள் பராசரர் தீர்த்த யாத்திரைச் செய்யும் பொழுது காளிந்தி என்னும் யமுனா நதிக்கரைக்கு வருகிறார். நதியைக் கடப்பதற்கு ஓடக்காரன் தன் மகளான மச்சகந்தியை ஓடத்தில் அவரை அக்கரையில் சேர்க்கும்படிச் சொல்கிறான். அவள் பராசரருடன் நதியில் செல்லும் போது தோணி செல்லும் ரம்யமான சூழ்நிலையில், அவளது அங்க லாவண்யங்களைக் கண்டு விதியின் காரணமாக காம இச்சைக் கொள்கிறார் பராசரர். ஆனால் அவளோ, ஐயா! நல்ல குலத்தில் பிறந்தவரும், ஆசாரசீலரும், ஞானவைராக்யமும் உடைய நீர் என் அருகில் வரலாமா? என் உடலில் வீசும் மச்ச நாற்றம் உமக்குத் தெரியவில்லையா? நாம் இருவரும் ஒத்த ஆசாரம் உள்ளவர்கள் அல்லவே? நீர் என்கையைப் பிடிப்பது எனக்கு அருவருப்பாக இருக்கிறது. உம்மை ஓடத்திலிருந்து தள்ளிவிட்டால் என்ன செய்வீர்? பயப்படாதீர்! நான் அப்படிச் செய்ய மாட்டேன் என்றாள். அவள் அறிவினைக் கண்டு மகிழ்ந்த அவர் மேலும் இச்சை கொண்டார். அவள் கையை பிடித்தபடியே கரையை அடைந்ததும் “உன் மீது மச்ச வாடை அடிக்கிறது என்றாயே. அதை இப்பொழுதே மாற்றுகிறேன்” என்று அவளிடம் சுகந்த பரிமள நறுமணம் வீசும்படிச் செய்தார். என் மனதில் காம இச்சை தோன்றியதற்கு தேவியின் இச்சைதான் காரணம். இந்த உலகத்தில் விஷ்ணு அம்சமான சத் புத்திரன் ஜனிக்க வேண்டிய நேரம். நீ ஒன்றும் கவலைப்படாதே! என்று சொன்னார். அவளை “சத்யவதீ” என்றும் அழைத்து இனி நீ எனக்கு ஒத்தவள் தானே என்றார்? பராசரரின் சரஸ மொழிகளைக் கேட்டு, நான் சம்மதித்தாலும் இப்பொழுது பகல் நேரம் அல்லவா? மனிதர்களான நமக்கு இது தகுமா என்றாள். உடனே அவர் தன் தவ வலிமையால் பகலை இரவாக்கினார். அப்பொழுது சத்யவதீ ஐயா! நீர் என்னைப் புணர்ந்த பின் கர்ப்பவதி ஆக்கி விட்டுச் சென்ற பின் நான் பிதாவையும் உம்மையும் இழந்து பிறர் கேலிக்கு ஆளாவேனே என்றாள். சத்யவதீ! நான் சென்ற பின் நீ மீண்டும் கன்னி ஆவாய். பரிமள காந்தியுடன் கற்பிற் சிறந்தவள் என போற்றப் படுவாய். நீ விரும்பியவன் உனக்குக் கணவனாவான். இப்பொழுது என்னால் உண்டாகும் புத்திரன் விஷ்ணு அம்சம் நிறைந்தவனாக, மிகுந்த ஞானம் உடையவனாக, மூஉலகமும் போற்றும் பிரசித்தி உடையவனாக இருப்பான் என்றார்.

சத்யவதீ! நான் ஊர்வசீ ரம்பா போன்ற எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் உன் வயப்பட்டது விதியே என்று சொல்லி அவளோடு கூடி பின் யமுனையில் ஸ்நானம் செய்து ஆரண்யம் சென்றார். சத்யவதீ இரண்டாவது மன்மதனோ என்று சொல்லும்படியான ஒரு மகனைப் பெற்றாள். அவர் கிருஷ்ண த்வைபாயனர் எனப் பெயரிடப்பட்டார். தபோ வலிமையால் பிறந்தவராதலால் பிறந்தவுடன் தாயைப் பிரிந்து நீ நினைக்கும் போது வருவேன் என்று சொல்லி தவம் செய்ய காட்டிற்குச் சென்றார்.

2. வேதம் சதுர்தா விததத், ஸ க்ருஷ்ண-
த்வைபாயனோ வ்யாஸ, இதி ப்ரஸித்தஹ
வேதாந்த ஸூத்ராணி, புராணஜாலம்
மஹேதிஹாஸம் ச, மஹாம்ச்சகார

கிருஷ்ணாவதாரம் முடியும் நேரத்தில் த்வாபர யுக முடிவில் வ்யாஸர் கிருஷ்ண த்வைபாயனர் என்ற பெயரில் தோன்றினார். வரப்போகிற கலியின் கொடுமையை எண்ணி அதுவரை ஒன்றாக இருந்த வேதத்தை 4 வேதங்களாகப் பிரித்தார். வேதத்தை வரையரை செய்ததால் வேத வ்யாஸர் எனப் பெயர் பெற்றார். அதை சுகர் போன்ற மஹரிஷிகளுக்கு உபதேசம் செய்தார். ஒவ்வொரு த்வாபர யுகத்திலும் இந்த வ்யாஸர் பிறக்கிறார். இவர் 28 ஆவது வ்யாஸராவார். 29 ஆவது வ்யாஸராக அஸ்வத்தாமா பிறக்கிறார்.

3. தப: ப்ரவ்ருத: களவிங்கபோதம்
மாத்ரா ஸ ஸம்லாளி,தமாச்ரமாந்தே
பச்யன்னதந்யாம், அனபத்யதாம் ஸ்வாம்
ஸபுத்ரபாக்யாதி,சயம் ச தத்யௌ

ஒரு சமயம் வ்யாஸர் சரஸ்வதி நதிக்கரையில் ஆச்ரமத்தில் இருக்கும் போது ஆண் பெண் ஆகிய இரு ஊர்க்குருவிகளின் லீலா வினோதத்தையும், தன் முட்டையிலிருந்து வந்த குஞ்சுகளிடம் காட்டும் பரிவையும் பார்த்தார். வளர்ந்த பிறகு தாய் தந்தையரை அறியமுடியாத இப்பறவைகளுக்கு இத்தனை பரிவு என்றால், மனிதருக்கு புத்திரர்களிடம் வாஞ்சை இருப்பதில் ஆச்சர்யமென்ன? நூல்களில் புத்திர சுகமே உயர்ந்தது என்றும், புத்திரன் இல்லாதவருக்கு சுவர்க்கம் இல்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இன்று அது ப்ரத்யக்ஷமாகத் தெரிகிறது. வேத வாக்யமும் நிரூபணமாகிறது. இதை நினைத்துத் தனக்குப் புத்திரன் இல்லையே என வருத்தப்படுகிறார்.

4. ஸத்புத்ரலாபாய, தபச்சிகீர்ஷு
ஸ்தீவ்ரம் மஹாமேருஸமீவமேத்ய
‘ஆராதனீய:க’ இதி க்ஷணம ஸ:
சிந்தாதுரோ லோக,குரு: ஸ்திதோSபூத்

புத்திரன் வேண்டும் என்ற ஆசை உடையவராக, மேருமலையில் தவம் புரியச் செல்கிறார். ஸத் புத்திரன் பெறுவதற்கு ருத்ரன், விஷ்ணு, ப்ரம்மன், இந்திரன், சூரியன், கணேசன், அக்னி, வருணன் என்று எந்த தெய்வத்தை உபாஸிக்கலாம் என்று யோசிக்கிறார்.

5. ஸ்ரீநாரதஸ்,தத்ர, ஸமாகதஸ்த்வத்
க்ருபா கடாக்ஷாங்,குரவன் மஹர்ஷிஹி
அர்க் யாதி: ஸம்பூஜித ஆஸனஸ்தோ
வ்யாஸேன ப்ருஷ்ட: பரஹஸன்னிவாSSஹ

அப்பொழுது தெய்வாதீனமாக நாரதர் அங்கு வருகிறார். வ்யாஸரும் மகிழ்ந்து அர்க்யம், பாத்யம், ஆஸனம் கொடுத்து க்ஷேம லாபங்களை விஜாரிக்கிறார். நாரதர் வ்யாசரின் கவலைக்குக் காரணம் கேட்கிறார். ஸ்த் புத்திரன் பெற எந்த தெய்வத்தை உபாஸிப்பது எனக் கேட்க, இதைக் கேட்டு நாரதருக்கு சிரிப்பு வருகிறதாம்.

6. கிம் சிந்தயா க்ருஷ்ண! பஜஸ்வ தேவீம்;
க்ருபாவதி வாஞ்சி,ததானதக்ஷா
அஹேதுரேஷா கலு ஸர்வஹேதுர்
நிரஸ்த ஸாம்யாதிசயா” நிரீஹா

ஹ்ருதய கமலத்தில் தேவியின் பாத கமலத்தை த்யானம் செய்யும். அவள் உன் விருப்பத்தை முடித்து வைப்பாள் என்று சொன்னார். (தன் தகப்பனாரான ப்ரம்மாவும் லோக ரட்க்ஷகரான மாஹாவிஷ்ணுவைத், த்யானம் செய்யும் போது யாரை த்யானிக்கிறீர்கள்? என்று கேட்டார். அவர் கூறின பதிலையே நாரதரும் இப்போது சொன்னார்).

7. ஸைஷா மஹா,சக்திரிதி ப்ரஸித்தா;
யதாஜ்ஞ்யா ப்ரம்ம,ரமேச ருத்ராஹா
ப்ரம்மாண்டஸர்க,ஸ்திதி ஸம்ஹ்ருதீச்ச
குர்வந்தி காலே, ந ச தே ஸ்வதந்த்ராஹா

இந்த ஜகமானது அன்னையிடமிருந்தே வந்தது. ப்ரம்மன், விஷ்ணு, ருத்ரன் ஆகியவர்களுக்கும் படைத்து, காத்து, அழிக்கும் சக்தியை தந்தவள். அனைத்து ஜீவன்களுக்கும் சக்தி தருவது அவள்தான். பேசுவது, கேட்பது, நடப்பது, ஏன் சாப்பிடுவது கூட அவளின் சக்திதான். அந்த சக்தி இல்லாவிட்டால் எதுவும் அசையாது. அவளே ஸமஷ்டி சக்தி, மஹாசக்தி ரூபிணீ.

8. யஸ்யாச்ச தே, சக்திபிரேவ ஸர்வ
கர்மாணி குர்வந்தி;, ஸுராஸீராத்யாஹா
மர்த்யா ம்ருகா: க்ருஷ்ண! பதத்ரிணச்ச
சக்தேர் விதேயா: க, இஹாவிதேயஹ?

அனைத்திற்கும் சக்தி தருபவள் அவளே. அவளின்றி அணுவும் அசையாது. மது கைடபர்களை வதைக்க யார் அனுக்ரஹித்தது? மஹாவிஷ்ணு மச்ச, வராக, வாமன அவதாரங்கள் எடுத்ததும் அவளின் விருப்பமே. விஷ்ணுவின் தலை விழுந்து, குதிரைத்தலை பெற்றதும் அவளின் அருளே. யாரும் சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. அவளின் அருளே முக்கியம். இதில் உனக்குச் சந்தேகம் என்ன? என்று நாரதர் சொன்னார்.

9. ப்ரத்யக்ஷமுக்யைர், ந ச ஸா ப்ரமாணைர்
ஞேயா தபோபிஹி கடினைர் வ்ரதைச்ச
ந வேதசாஸ்த்ராத்,யயனேன சாபி;
பக்த்யைவ ஜானாதி, புமான் மஹேசீம்

தேவியைக் காண்பது எப்படி? எப்படி ப்ரத்யக்ஷமாவாள்? சப்தம் கேட்டு அன்னையைப் பார்க்க முடியாது. புலன்களாலும் அறிய முடியாது. இந்த்ரியங்களாலும் காண முடியாது. தீ இல்லாமல் புகையாது. புகை இருப்பதால் தீ கட்டாயம் இருக்கும். வேத சாஸ்த்ரங்கள் படித்தாலும், அறிந்தாலும் போதாது. தேவை உண்மை பக்தியே.

10. தாமேவ பக்த்யா, ஸததம் பஜஸ்வ
ஸர்வார்த்ததாம் க்ருஷ்ண! தவாஸ்து பத்ரம்;
இத்யூசுஷி, ப்ரம்மஸுதே கதே ஸ:
வ்யாஸஸ்தபோர்தம், கிரிமாருரோஹ

இவ்வாறு நாரதர் சொன்னதைக் கேட்ட சத்யவதி மகனான வ்யாஸர் உண்மையை உணர்ந்து அன்னையை த்யானம் செய்ய நிச்சலன புத்தியுடன் மேருமலை நோக்கிச் சென்றார்.

11. இஹாஸ்மி பர்யாகுல சித்தவ்ருத்திர்
குரும் ந பச்யாமி, மஹத்தமம் ச
ஸன்மார்க்கதோ மாம், நய விச்வமாதஹ
ப்ரஸீத மே த்வாம், சரணம் வ்ரஜாமி

வ்யாஸ முனிவருக்கு சரியான நேரத்தில் அவரின் சந்தேகம் தீர்க்க குருவான நாரதர் வந்தார். எனக்கு அப்படி யாரும் இல்லை. நான் யாரிடம் கேட்பேன்? அதனால் தேவி நீதான் எனக்கு அன்னையாகவும், குருவாகவும் வந்து நல்வழி படுத்த வேண்டும் என்று இந்த நூலின் ஆசிரியர் கூறுகிறார்.

ஆறாம் தசகம் முடிந்தது

தசகம் 7

சுகோத் பத்தி

1. க்ருஷ்ணஸ்ய தஸ்யாரணித: சுகாக்யஹ-
ஸ்தவ ப்ரஸாதாத ஜனிஷ்ட புத்ரஹ
ஹ்ருஷ்டோ முனிர் மங்களகர்ம சக்ரே
தத்ரேSதிதேயா வவ்ருஷு: ஸுமானி

நாரதர் உபதேசப்படி த்யானம் செய்த வ்யாஸருக்கு சிவன் காட்சி தந்து நல்ல ஸத் புத்திரன் ஜனிப்பான் என்று அருள் செய்கிறார். புத்திரன் ஜனிக்க வேண்டும் என்றால் விவாகம் செய்து கொள்ள வேண்டும். தன் மன நிலையில் அது தகுந்ததல்ல என்று நினைக்கிறார். அப்பொழுது இந்திரன் க்ருதாப்ஜி என்ற அப்ஸரசை அனுப்புகிறார். க்ருதாப்ஜி ஆகாசத்தில் தோன்றி வ்யாஸரைத் தன் வசம் இழுக்க முற்பட்டாள். வ்யாஸர் வித்யாசமான மனநிலை உடையவராதலால், அவர் மனதிற்கும். புத்திக்கும் போராட்டம் ஏற்படுகிறது. மனம் அப்ஸரஸின் அழகிலிலும் லாவண்யத்திலும் ஈடுபட்டாலும் அறிவு காம வழியில் செல்வதைத் தடுக்கிறது. முன்பு புரூரவன் ஒரு பெண்ணால் அவமானம் அடைந்தான். அதாவது ஸீத்யும்னன் பெண்ணுருவாக இருந்த போது அவனுக்கும் புதனுக்கும் பிறந்தவன் புரூரவன். அவன் நீதி தவறாது அரசாட்சி செய்து யாகங்களையும் தானங்களையும் செய்து வந்தான். இந்த புரூரவ சக்ரவர்த்தியின் பெருமையும் புகழும் கேட்டு இந்த்ரலோகத்து ஊர்வசி இவனை மணந்து கொள்ள விரும்பினாள். மானிடனிடத்தில் மோகம் கொண்டதால் ப்ரம்மன் அவளை பூலோகத்திற்குப் போகும்படிச் சபித்தார். பூலோகம் வந்து புரூரவனை காந்தர்வ மணம் புரிந்தாள். அப்பொழுது அவள் சில நிபந்தனைகளைச் சொன்னாள். 1. என்னை மறவாமல் ரட்க்ஷிக்க வேண்டும். 2. நான் கொடுக்கும் நெய்யை தினந்தோறும் சாப்பிட வேண்டும். வேறு எதையும் சாப்பிடக்கூடாது. 3. என்னிடம் இருக்கும் உரணங்களை உம்மிடம் தருகிறேன். அதைக் களவு போகாமல் காக்க வேண்டும். 4. நீர் நிர்வாணியாகவும் பிற பெண்களுடன் சேரும் போதும் நான் பார்க்கமாட்டேன். இதில் எது தவறினாலும் நான் உம்மைப் பிரிந்து விடுவேன் என்று சொல்ல, அரசனும் சம்மதித்து, அவளின் மோகத்தால் மதி இழந்து, நாடு, அரசநீதி, மக்கள் அனைத்தையும் மறந்து பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தான்.

இந்த சூழ்நிலையில் இந்திரன் பல நாட்களாக ஊர்வசியைக் காணவில்லையே என்று, அவள் இருக்கும் இடம் பூலோகத்தில் புரூரவஸின் அந்தப்புரம் என்று அறிந்து, கந்தர்வர்களை அழைத்து, அவளின் உயிருக்கு உயிரான உரணங்களை நீங்கள் கவர்ந்து வந்தால் அவள் தானகவே வருவாள் எனவே உடனே புறப்படுங்கள் என்றார். அதன்படி கந்தர்வர்கள் உரணங்களைக் கவர்ந்து செல்ல இதை அறிந்த ஊர்வசி ” ஐயோ! என் உயிர் போன்ற உரணங்கள் களவு போனதே! ஏ! அரசனே! கேட்பார் யாரும் இல்லையா? நீ எந்தப் பெண்ணுடன் உறங்குகிறாய்? நான் உன்னைப் பிரியும் காலம் வந்ததே” என்று உரத்த குரலில் அழுதாள். குரல் கேட்டு அரசன் வேகமாக ஓடி வந்தான். அப்பொழுது கந்தர்வர்கள் மாயையால் ஒரு மின்னலை உண்டாக்கினார்கள். நிர்வாணமாயிருக்கும் அரசனைப் பார்த்தாள் ஊர்வசி. உடனே அவனைப் பிரிந்து போனாள்.

நிபந்தனைகளை மீறியதால் தானே இப்படி நடந்தது. இப்பொழுது நான் ஆடைகளை உடையவனாக இருக்கிறேன் . ஊர்வசி மீண்டும் வரமாட்டாளா என்ற ஆசையுடன் அவளைத் தேடித் தேடி அலைந்து குருக்ஷேத்ரத்தில் ஊர்வசியைக் கண்டான். புரூரவன் ஊர்வசியிடம் ” பெண்ணே! என்னைவிட்டுப் போகாதே! நீ என்னைப் பிரிந்தால் என் உயிர் போய்விடும். அந்தப் பழி உன்னையே சேரும்” என்று புலம்பினான். ஊர்வசி சொன்னாள் “அரசனே! உன் புத்தி எங்கு போனது? நான் ஒரு வேசி அல்லவா? வேசியின் அன்பு நிலையானதாகுமா? ஒரு நல்ல குலத்து அரசன் பெண்களிடமும் கள்வர்களிடமும் அன்பு காட்டலாமா? இது நீதியா? நீதி மறந்த நீர் என்முன் நிற்காதே. போ!” என்று விரட்டினாள். அரசன் மிகுந்த துக்கம் அடைந்தான்.

அது போல் தான் ஆகிவிடக்கூடாது என்று நினைக்கிறார். தான் செய்ய வேண்டிய அக்னி காரியங்களைச் செய்ய, அரணியில் மத்தைப் பூட்டி அக்னி உண்டாக்க முயலும் போது, க்ருதாப்ஜி ஒரு கிளி உருவம் எடுத்து அங்கும் இங்கும்மாக ஆகாசத்தில் சிங்காரமாக ஊர்ந்தாள். அதைக் கண்ட வ்யாஸர் உணர்ச்சி வசப்பட அவரது வீர்யம் சிதறி அரணியில் விழுகிறது. அந்த அரணியிலிருந்து இவரை போல் ஒரு புத்திரன் ஜனிக்கிறான். இரண்டாவது அக்னி போன்று தோன்றிய அக்குழந்தையைக் கையில் எடுத்துத் தழுவி கங்கா ஸ்நானம் செய்வித்து சாதகாதி கர்மங்களைச் செய்து, சுக ரூபியான அப்ஸரின் மோகத்தால் உண்டான புத்ரனானதால் சுகன் என்று பெயர் வைத்தார்.

2. கேசிஜ் ஜகு: கேசன வாத்யகோஷம்
சக்ருச்ச நாகே நந்ருது: ஸ்த்ரியச்ச
வாயுர் வவௌ ஸ்பர்சஸுக: ஸீகந்தஹ
சுகோத்பவே ஸர்வஜனா: ப்ரஹ்ருஷ்டாஹா

ஆகாஸத்திலிருந்து புஷ்பமாரி பொழிந்தது. தேவர்கள் துந்துபி முதலிய பஞ்சவாத்யங்களை முழங்கினர். கந்தர்வர்கள் பாடினர். நாரதர் முதலிய ரிஷிகள் ஆசீர்வதித்தனர். காற்று சுகந்தமாக வீசியதாம். உலகத்தில் உள்ள அனைவரும் ஆனந்த சாகரத்தில் மூழ்கினர்.

3. பால: ஸ ஸத்யோ வவ்ருதே, ஸுசேதா
ப்ருஹஸ்பதேராத்தஸமஸ்த வித்யஹ
தத்வா விநீதோ குருதக்ஷிணாம் ச
ப்ரத்யாகதோ ஹர்ஷயதி ஸ்ம தாதம்

வ்யாஸர் மகனுக்கு உபநயனம் செய்வித்தார். சுகர் தேவ குருவான ப்ரகஸ்பதியிடம் வேதங்களையும், வேதாந்தங்களையும் கற்றுணர்ந்து அவருக்கு குருதட்ஷணையும் கொடுத்துவிட்டுப் பின் வ்யாஸரிடம் வந்தார். வித்தைகளைக் கற்றுணர்ந்த தன் மகன் எந்த கர்வமும் இல்லாமல் அடக்கமாக இருப்பதைக் கண்டு சந்தோஷம் கொண்டார்.

4. யுவானமேகாந் ததப; ப்ரவ்ருத்தம்
வ்யாஸ: கதாசித் சுகமேவமூசே
“வேதாம்ச்ச சாஸ்த்ராணி ச வேத்ஸி புத்ர;
க்ருத்வா விவாஹம் பவ ஸத்க்ருஹஸ்தஹ

எதிலும் ஒரு பிடிப்பில்லாமல் சந்யாஸி போல் இருக்கும் சுகரிடம், வ்யாஸர் “விவாஹம் செய்துகொண்டு, இல்லறத்தில் ஈடுபட்டு செய்ய வேண்டிய தேவ யக்ஜம், பிதுர்யக்ஜம் போன்ற கர்மங்களை மனைவியுடன் செய்து, பிதுர்க்கடனினின்று எனக்கு விமோசனம் தர வேண்டும். புத்திரன் இல்லாதவனுக்கு சுவர்க்கம் இல்லை என்று தர்ம சாஸ்த்ரங்கள் சொல்கின்றது. இல்லறதர்மம் மிகவும் உயர்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இல்லறத்திலிருந்தும் முக்தி அடையலாம். அனைவரும் சந்யாஸிகள் ஆனால் எப்படி சிருஷ்டி உற்பத்தியாகும். அதனால் நீ விவாஹம் செய்துகொள்” என்று ஒரு தந்தையின் இயல்பான குணத்துடன் சொன்னார்.

5. ஸர்வாச்ரமாணாம் கவயோ விசிஷ்டா
க்ருஹாச்ரமம் ஸ்ரேஷ்டதரம் வதந்தி;
தமாச்ரித ஸ்திஷ்டதி லோக ஏஷ;
யஜஸ்வ தேவான் விதிவத் பித்ரும்ச்ச

ஏகாந்த சந்யாஸ தர்மத்தைவிட இல்லறதர்மம் மிகவும் உயர்ந்தது. எல்லாவகையிலும் உயர்ந்ததாகவேச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே நீ விவாஹம் செய்து கொண்டு குழந்தைகளை உற்பத்தி செய்து நன்றாக இருக்கவேண்டும். அப்பொழுதான் நம் முன்னோர்கள் கரையேறுவார்கள். உன்னுடைய கடமைகளைச் சரிவர செய்து, பித்ருக்களைத் தர்ப்பணம் முத்லியவைகளால் திருப்திபடுத்தி புத்ர பௌத்ரர்களைப் பெற்று சந்தோஷமாக இருந்து எங்களைக் கரையேற்ற வேண்டும் என்றார். இள வயதில் திருமணம் செய்து கொண்டால் தான், புத்ர பௌத்ரர்களைப் பெற்றுக் கடமைகளைச் செய்துப் பின் தவம் செய்யப் போக முடியும். சுகர் கல்யாணம் செய்து கொள்ளாவிட்டால் தான் கரையேற முடியாது என்று நினைக்கிறார். அதனால் விவாஹம் செய்து கொள்ளச் சொல்கிறார்.

6. தவாஸ்து ஸத்புத்ர; ருணாதஹம் ச
முச்யேய; மாம் த்வம் ஸுகினம் குருஷ்வ;
புத்ர: ஸுகாயாத்ர பரத்ர ச ஸ்யாது
த்வாம் புத்ர! தீவ்ரைரலேபே தபோபிஹி

உன்னைப் புத்திரனாகப் பெற நான் பலகாலம் தவம் செய்தேன். அதனால் நீ இளவயதில் திருமணம் செய்து, உனக்குக் குழந்தை பிறந்து, அந்தக் குழந்தைக்கும் குழந்தை பிறந்து, அதாவது கொள்ளுப் பேரன் பிறந்து பார்க்க வேண்டும், என்னைக் கரையேற்ற வேண்டும் என்றார். எல்லோருக்கும் ஏற்படகூடிய இயற்கையான ஆசை. இந்த ஆசைதான் வ்யாஸர் மனதிலும் வந்தது.

7. கிஞ்ச ப்ரமாதீனி ஸதேந்த்ரியாணி
ஹரந்தி சித்தம் ப்ரஸபம் நரஸ்ய
பச்யன் பிதா மே ஜனனீம் தபஸ்வீ
பராசரோபி ஸ்மரமோஹிதோSபூது

இல்லற வாழ்வில் நியாயமான முறையில் பொருளைச் சம்பாதித்து, விதித்த கர்மங்களைக் கிரமப்படிச் செய்தால் பந்தத்தினின்றும் விடுபடலாம். விதித்த கர்மங்களை முறைப்படிச் செய்பவனுக்குச் சாதிக்க முடியாதது எது? இல்லற வாழ்க்கையில் தேவர்களையும், பித்ருக்களையும், மனிதர்களையும் த்ருப்தி அடையச் செய்து, விதித்த கர்மங்களைச் சரிவரச் செய்து, ஸத் புத்திரனைப் பெற்று, அவனை இல்லறத்தில் ஈடுபடுத்திப், பின் வானப்ரஸ்தாச்ரமத்தை அடைந்து, சில காலம் அதில் இருந்து பின் சந்யாஸ ஆச்சிரமம் அடைவாய்.

8. ய ஆச்ரமாதா ச்ரமேதி தத்தது
கர்மாணி குர்வன் ஸ ஸுகீ ஸதா ஸ்யாது
க்ருஹாச்ரமோ நைவ ச பந்தஹேதுஹு
ஸ்தவயா ச தீமன்! க்ரியதாம் விவாஹ:

இல்லறத்தில் ஈடுபடாதவனுக்கு இந்த்ரியங்களையும் புலன்களையும் வெல்வது எளிதல்ல. விஸ்வாமித்திரர் மேனகயைக் கண்டு மோகித்து சகுந்தலையை பெற்றார். என் பிதாவான ப்ராசரர் மச்சகந்தியை மோகித்தார். ப்ரம்மனும் தன் புத்ரியிடம் மோகம் கொண்டு பின் சிவனால் தெளிவடைந்தான். இதை எல்லாம் யோசித்து நான் சொன்னபடி விவாஹம் செய்து கொள் என்றார். சுகரிடம் எள்ளளவும் மாற்றம் இல்லாததால் மன வேதனை அடைந்து அழுகிறார்.

9. ஏவம் ப்ருவாணோபி சுகம் விவாஹா-
-த்யஸக்தமா ஜ்ஞாய பிதேவ ராகீ
புராணகர்த்தா ச ஜகத்குரு: ஸ
மாயாநிமக்னோSச்ருவிலோசனோSபூது

வ்யாஸர் ஜகத் குரு, புராணங்களை எழுதியவர். அவர் ஏன் அழ வேண்டும்? தபஸ் செய்ய சக்தி குறைந்ததா? இல்லை. தேவியிடம் பக்தி குறைந்ததா ? இல்லை. பின் ஏன் அழ வேண்டும்? பாசம். மகன் விவாஹம் செய்து கொள்ளவில்லையே என்ற பாசம். மாயை. ஜகமே மாயையில் உழலுகிறது. ஆனால் சுகர் பல ஜன்மங்களாக என்னைத் தொடர்ந்து வந்த மாயை கிழவனாகி, இப்பிறவியில் என்னை விட்டு விலகி விட்டது. எனவே விவாஹம் என்னும் மாயையில் சிக்க மாட்டேன். முற்றும் துறந்த முனிவர்களையும் மாயையில் சிக்க வைக்கும் அந்த மாயாசக்தியை நான் வழிபடுவேன் என்று சொல்கிறார். சுகர் சுக போகங்களிலிருந்து விலகி நிற்கிறார்.

10. போகேஷு மே நிஸ்ப்ருஹதாSஸ்து மாதஹ
ப்ரலோபிதோ மா கரவாணி பாபம்;
மா பாததாம் மாம் தவ தேவி! மாயா;
மாயாதிநாதே! ஸததம் நமஸ்தே

இந்த சுகர் எப்படி மாயையிலிருந்து விலகி அதன் பிடியில் சிக்காமல், மன உறுதியுடன் இருக்கிறாரோ அப்படிப் பட்ட மன உறுதியை எனக்கும் தா என்று இந்த கவிஞன் வேண்டுகிறார்.

ஏழாம் தசகம் முடிந்தது

தசகம் 8

பரமஞானோபதேசம்

1. அதாSSஹகிருஷ்ணஹ : ச்ருணு சிந்தயாலம்;
க்ருஹாச்ரமஸ்தே, ந ச பந்தக்ருத் ஸ்யாது;
பந்தஸ்ய முக்தேச்ச மனோ ஹி ஹேதுர்;
மனோஜயார்த்தம் பஜ விச்வதாத்ரீம்

வ்யாஸர் இவ்வளவு சொல்லியும் சுகரின் மனது விவாஹத்திற்குத் தயாராகவில்லை. அதனால் வ்யாஸர் மீண்டும் சொல்கிறார். விவாஹம் செய்து கொண்டு க்ரஹஸ்தாச்சிரமம் மேற்கொண்டால் பந்தம் ஏற்படும் என நீ பயப்படுகிறாய். பந்தத்திற்குக் காரணம் விவாஹம் இல்லை. நான், எனது என்ற மமதையும், அகந்தையும் தான் ஒருவனை பந்தப்படுத்துகிறது. விவாஹம் அதற்குக் காரணம் இல்லை. “நான் செய்யும் எல்லா செயல்களுக்கும் காரணம் அந்த லோகமாதாவே. அவள் ஆணைபடி நான் செய்கிறேன். நான் கர்த்தா இல்லை. என்னை செய்விப்பவள் அவளே. அதனால் அவளே கர்த்தா ஆகிறாள்” என்ற இந்த நினைவுடன் நீ எந்த செயலைச் செய்தாலும் அகந்தை வராது. எல்லாம் அவள் செயல் என நினைத்து எந்தச் செயலைச் செய்தாலும் பந்தம் வராது. இப்படி மனதை நீ ஜெயித்து விட்டால் உன்னால் முடியாதது எதுவும் இல்லை. இப்படி மனதை ஜெயிக்க உபாயம் என்ன வென்றால் தேவியை பூஜை செய், அவளின் பெருமையை யாராவது சொன்னால் அதைக் கேள். தேவியை நாம ஜபம் செய். இது போன்ற பக்தி சாதனைகளை விடாமுயற்சியுடன் செய்யும் போது தேவி உன் மனதில் வந்து அமர்ந்து விடுவாள். தேவி மனதில் வந்துவிட்டால், அகந்தை மமதை எல்லாம் அங்கு இருக்க முடியுமா? எங்கோ ஓடிப் போய்விடும். அதனால் நீ கல்யாணம் செய்து கொண்டு, தேவியை மனதில் நிறுத்தி, ஸ்வதர்மங்களை அனுஷ்டித்துக் கொண்டு சந்தோஷமாக இரு என்று சொன்னார்.

2. யஸ்யா: ப்ராஸாதே, ஸபலம் ஸமஸ்தம்
யதப்ரஸாதே, விபலம் ஸமஸ்தம்
மாஹாத்ம்யமஸ்யா, விதிதம் ஜகத்ஸு
மயாக்ருதம் பாகவதம் ச்ருணு த்வம்

என்ன தபஸ் செய்தாலும், எந்த தர்மானுஷ்டானம் செய்தாலும், இதை நான் செய்ய வில்லை. நான் செய்யும் அனைத்துச் செயலும் அன்னையை மகிழ்விப்பதற்கே என்ற நினைவுடன் செய்யும் போது மனதிற்கு பலம் கிடைக்கும். எதைச் செய்தாலும் தேவி சந்தோஷப்படவில்லை என்றால், அதற்கு எந்தப் பயனும் இல்லை. இது தேவி பாகவதத்தில் மிகவும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே நான் எழுதிய தேவி பாகவதத்தை நீ படி என்றார்.

2. விஷ்ணுர், ஜகத்யேக, ஸமுத்ரலீனே
பால: சயானோ வடபத்ர ஏகஹ
ஸ்வபாலதாஹேது விசாரமக்னஹ
சுச்ராவ காமப்ய சரீரிவாசம்

வேத வ்யாஸ மஹரிஷி தான் எழுதிய தேவி பாகவதத்தின் மூல கதை, அதன் அர்த்தம் எல்லாவற்றையும் விரிவாகச் சொல்ல ஆரம்பிக்கிறார். ப்ரளய காலத்தில் உலகம் முழுவதும் தண்ணீரில் மூழ்கிவிடுகிறது. ஆனால் விஷ்ணு மட்டும் ஒரு அரச இலையில் குழந்தையாகப் படுத்துக் கொண்டிருக்கிறார். விஷ்ணு நான் எப்படி குழந்தையாக மாறினேன்? என்னை யார் இப்படி மாற்றினார்கள்? என யோசிக்கிறார். அப்பொழுது ஆகாசவாணி போல் ஒரு சப்தம் கேட்கிறது.

3. ஸனாதனம் ஸத்யமஹம்; மதன்யது
ஸத்யம் ந ச ஸ்யா, தஹமேவ ஸர்வம்”
ச்ருத்வேதமுன் மீலித த்ருஷ்டிரேஷ
ஸ்மிதானனாம் த்வாம், ஜனனீம் ததர்ச

அந்த அசரீரி “நேற்று காணப்பட்ட, இன்று காண்கின்ற, நாளை காணப் போகும் அனைத்து பொருள்களும் நானே. நானே சத்யம்” என்று சொன்னது. மண், குடமமாக மாறுகிறது, உடைந்தால் மீண்டும் மண் துண்டுகளாகிறது. இதில் மண் மட்டுமே ஸ்திரமானது. இது போல பொன்னை உருக்கிப் பல நகைகள் செய்தாலும், அவைகளை உருக்கினால் மீண்டும் பொன்னாகிறது. பொருள் பலவாக உருவாகினாலும் ஆதாரமான பொருள் ஒன்றுதான். இதைப் போல பலவிதமாகத் தோன்றினாலும் நானே சத்யம். காணும் பொருள்கள் எல்லாம் நானே. இதுவே உண்மை என்றது. இந்த ஸத்ய வார்த்தைகள் யாரால் சொல்லப்பட்டது? இதைச் சொன்னது யார்? ஆணா? பெண்ணா? என்று அவர் ஆலோசிக்கும் பொழுது, இந்த ஸத்யமான வார்த்தைகள் முகுந்தனின் உள்ளத்தில் ஆழமாகப் பதிய, ஆச்சர்யமாக கண்களை அகல விரித்து, புன்சிரிப்புடன் பார்க்கும் போது, சிரித்த முகத்துடன் குழந்தையைத் தாவி அணைக்கவரும் தாயைப் போன்று அன்னை முகுந்தனுக்கு சிரித்த முகத்துடன் காட்சி தருகிறாள். மஹாவிஷ்ணுவும் அன்னையைப் பார்க்கிறார். அவர் பார்த்த தேவியின் ஸ்வரூபம் எப்படி இருந்தது?

4. சதுர்புஜா சங்ககதாரிபத்ம
தரா க்ருபாத்யை: ஸஹ சக்திஜாலைஹீ
ஸ்திதா ஜலோபர்யம், அலாம்பரா த்வம்
ப்ரஹ்ருஷ்ட, சித்தம் ஹரிமேவ, மாத்த

நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதை, பத்மத்துடன் திவ்யமான வஸ்த்ரங்களும், ஆபரணங்களும் அணிந்து கொண்டு, அனேக சக்திகளால் சூழப்பட்டு, மிகுந்த ஒளியுடன் ப்ரகாஸமாக தண்ணீரின் மேல் தேவி நின்று கொண்டு புன்னகை செய்கிறாள். இதைப் பார்த்த விஷ்ணு, மிகுந்த ஆனந்தம் அடைகிறார்.

5. “கிம் விஸ்ம,யேனாச்யுத! விஸ்ம்ருதாஹம்
த்வயா பராசக்தி,மஹா ப்ரபாவாது!
ஸா நிர்குணா வாங்மனஸோரகம்யா;
மாம் ஸாத்விகீம் சக்தி, மவேஹி லக்ஷ்மீம்

பால முகுந்தன் முன் காட்சி தந்த அன்னை ஸாத்வீகி. அதாவது ஸாத்வீக சக்தி உடையவள். அவளே மஹாலக்ஷ்மி. அவளின் புத்தி மனம் வாக்கு, செயல் எல்லாமே நன்மையை மட்டுமே தரக்கூடியது. அதாவது நல்லதையே நினைப்பாள், நல்லதையே சொல்வாள், நல்லதையே செய்வாள். ஆனால் பராசக்திக்கு இந்த குணங்கள் கிடையாது. அவள் குணாதீதை. எல்லா குணங்களுக்கும் மேற்பட்டவள். பராசக்தி இப்படி இருப்பாள் இந்த குணம் உடையவள் என்று எதையும் உதாரணமாகக் காட்டவோ சொல்லவோ முடியாது. பால முகுந்தன் முன் தோன்றிய மஹாலக்ஷ்மி பேசத் தொடங்குகிறாள்.

7. ச்ருதஸ்த்வயா யஸ்த்வசரீரிசப்தோ
ஹிதாய தே தேவ! தயா ஸ உக்தஹ
அயம் ஹி ஸர்வ, ச்ருதிசாஸ்த்ர,ஸாரோ;
மா விஸ்மரேமம், ஹ்ருதி ரக்ஷணீயம்

நான் மட்டுமே ஸத்யம் என்று அசரீரியாகச் சொன்னவள் எல்லா குணங்களுக்கும் மேற்பட்டவளான நிர்குண பராசக்தி. தேவி என்பது ஒன்றுதான். இரண்டல்ல. எல்லாவற்றிற்கும் காரணம் அவள் ஒருவளே. வேதங்களும் வேதாந்தங்களும் எதைச் சொல்கின்றதோ அவள் இவளே தான். இந்த தத்வத்தை நீ மறக்காதே. மனசில் நிறுத்திக்கொள் என்றாள். தேவி பேசும் சப்தத்தை கேட்க முடியுமா என்ற சந்தேகம் உனக்கு வேண்டாம். பால முகுந்தனிடம் தேவி பேசும் சப்தத்தை நீ கேட்டாயல்லவா? நீ கேட்டும் இருக்கலாம் அல்லது உன் மன சக்தியால் அதை உணர்ந்தும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் அது கனவல்ல. உண்மைதான் என்றார் வ்யாஸர்.

8. நாத: பரம் ஞேயமவேஹி கிஞ்சிது
ப்ரியோSஸி தேவ்யாஹா, ச்ருணு மே வசஸ்த்வம்
த்வன்னாபி பத்மாத், த்ருஹிணோ பவேத்,
ஸ: கர்த்தா ஜகத், பாலய தத் ஸமஸ்தம்

மஹாலக்ஷ்மி சொல்கிறள்” ஸத்யம் என்பது ஒன்று தான். அது பலதாகத் தோன்றினால் அது உண்மை இல்லை. ஸத்யம் ஒன்றுதான் என்று உணர்வதே பரம ஞானம். தேவிக்கு உம்மிடம் விசேஷமான ப்ரியம் இருந்த படியால், இந்த பாகவத ரகஸ்யத்தை தானே நேரில் வந்து உமக்கு உபதேசித்தாள் . இதை விட சிறந்த சாஸ்த்திரங்கள் மூஉலகிலும் இல்லை. இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் ஒவ்வொரு முறையும் ப்ரளயம் முடிந்து ஸ்ருஷ்டி ஆரம்பிக்கும் காலத்தில், தேவி ஸகுணை வடிவமாகத் தோன்றுவாள். நான் அவளின் ஸகுணை ரூபமானவள். உன் நாபிக் கமலத்தில் ப்ரம்மன் உதிக்கப் போகிறான். அவன் ஒப்பில்லாத தவம் செய்து ராஜஸ சக்தியுடன், பூஉலகைப் படைப்பான். அவர் படைத்த உலகை காக்கும் காவல் கடவுள் நீரே ஆவீர் என்று கூறினாள். இந்த ப்ரளய காலத்தில் தான் மது கைடபர்கள் தோன்றி மஹாவிஷ்ணுவால் கொல்லப்படுகிறார்கள். (இது 4 ஆவது அத்யாயத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.)

9. ப்ரூமத்யத: பத்மபவஸ்ய கோபாது
ருத்ரோ பவிஷ்யன் ஸகலம் ஹரேச்ச
தேவீம் ஸதா ஸம்ஸ்மர: தேSஸ்து பத்ரம்
ஏவம் நிகத்யாசு திரோததாத

ப்ரம்மனின் புருவத்தின் நடுவிலிருந்து ருத்ர மூர்த்தி தோன்றி, தாமஸ சக்தி உடையவராக எல்லாவற்றையும் அழிக்கும் ஸம்ஹார கர்த்தா ஆவார். சாத்வீக சக்தி ஆகிய நான் உம்முடைய இருதயத்தில் வசிப்பேன் என்று சொல்லி மறைந்து விடுகிறாள். வ்யாஸர் மேலும் சொல்கிறார் “நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை. கல்யாணம் செய்து கொள்வதால் பந்தம் ஏற்படாது. பந்தத்திற்குக் காரணம் மனசு தான். இந்த மனதை நீ ஜெயிக்க வேண்டும். அதனால் நீ அந்த தேவியை த்யானம் செய்” என்று சுகருக்குச் சொன்னார்.

10. ஹரேரிதம் ஞானமஜஸ்ய லப்தம்
அஜாத் ஸுரர்வேஷச்ச, ததோ மமாபி;
மயா த்விதம் விஸ்தரத; ஸுதோக்தம்;
யத் ஸுரயோ பாகவதம் வதந்தி

விஷ்ணு ” நான் மாத்திரம் ஸத்யம் ” என்று தேவி சொன்ன இந்த மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்தார். ப்ரம்மா விஷ்ணுவிடம் நீங்கள் என்ன ஜபம் செய்கின்றீர்? உம்மைவிட மேலான கடவுள் இருக்கின்றாரா? என்று கேட்கிறார். விஷ்ணு சொல்கிறார் “உமக்கும் எனக்கும் இருக்கும் சக்தியை நினைத்துப் பாருங்கள். அதற்குக் காரணம் அந்த சிவசக்தி ரூபிணியே. அவள் ஆதி அந்தம் இல்லாதவள். அனைத்திற்கும் ஆதாரமானவள். அசையும் அசையாத அனைத்தும் அவளால்தான் படைக்கப் படுகிறது. அவள் கருணையால் மட்டுமே மனித ஜன்மம் எடுத்தவன் முக்தி அடைய முடியும். இந்த ப்ரபஞ்சம் தோன்றக் காரணம் அவளே. அவளே அந்த மேலான தெய்வம். அந்த அன்னை பாகவத சாரமான அர்த்த ஸ்லோகத்தை எனக்கு உபதேசித்தாள். அந்த ஸ்லோகத்தின் அர்த்தம் துவாபர யுகத்தில் பாகவதமாகப் போகிறது என்றார். உடனே ப்ரம்மன் அந்த மந்திரத்தை விஷ்ணுவிடமிருந்து உபதேசம் பெற்றார். ப்ரம்மனிடமிருந்து நாரதரும், நாரதரிடமிருந்து நானும் உபதேசம் பெற்றேன். அதை நான் தேவி பாகவதமாக எழுதினேன். அதை நீ என்னிடம் உபதேசம் பெற்றுப் படிப்பாயாக என்றார் வ்யாஸர்.

11. தேவ்யா மஹத்வம் கலு வர்ண்யதே த்ர;
யத்பக்திமாப்தஸ்ய க்ருஹே ந பந்தஹ
யத்பக்தி ஹீனஸ்த்வக்ருஹேSபி பத்தோ
ராஜாபி முக்தோ ஜனகோ க்ருஹஸ்தஹ

இந்த தேவி பாகவதத்தை நீ சிரத்தையுடன் படித்தால் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் அன்னையே காரணம். அவள் ஆட்டி வைக்கும்படி ஆடும் பொம்மலாட்ட பொம்மை நாம். சூத்ரதாரி அவளே என்பது புரியும். அதனால் நீ தேவியை மனதில் நிறுத்திக் கொண்டு க்ரஹ்ஸ்தாச்ரமம் மேற்கொண்டால் பந்தப்பட மாட்டாய். இது நிச்சயம். இதற்கு உதாரணம் விதேக நாட்டு (மிதிலை) ஜனக மஹாராஜா.

12. விதேஹராஜம் தமவாப்ய ப்ருஷ்ட்வா
ஸ்வதர்மசங்கா: பரிஹ்ருத்ய தீரஹ
பலேஷ்வஸக்த: குரு கர்ம; தேந
கர்மக்ஷ்ய: ஸ்யாத்; தவ பத்ரமஸ்து,

அவர் ராஜா, க்ரஹஸ்தன். ராஜ்ய பரிபாலனம் செய்பவர். ஆனாலும் எந்த பந்தமும் இல்லாத ஜீவன் முக்தன். ப்ரம்ம ஞானமுடைய ராஜரிஷி. சாந்த குணமுடைய யோகீ. அவர் உன்னுடைய சந்தேகத்தைத் தீர்த்து வைப்பார் என்று சொன்னார். க்ரஹஸ்தன், ராஜா ஆனாலும் ஜீவன் முக்தன் என்று சொல்கிறாரே? இது எப்படி முடியும்? என்று சுகருக்குச் சந்தேகம் வருகிறது. ஜனக மஹாராஜாவை நேரில் சந்தித்து உன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள் என்று வ்யாஸர் சொன்னார்,

13. ச்ருத்வேதி ஸத்ய ஹ: சுக ஆச்ரமாத் ஸ
ப்ரஸ்தாய வைதேஹ,புரம் ஸமேத்ய
ப்ரத்யுத்கத: ஸர்வஜனைர் ந்ருபாய
ன்ய வேதயத் ஸ்வாக,மனஸ்ய ஹேதும்

தந்தையின் ஆசீர் வாதத்துடன் சுகர் மிதிலை புறப்படுகிறார். அந் நாட்டு நுழைவாயிலில் நிற்கும் காவலாளி, சுகரைத் தடுக்கிறான். எங்களின் கேள்விக்குப் பதில் சொன்னால் மட்டுமே நகரின் உள்ளே செல்ல அனுமதி கிடைக்கும் என்று சொல்கிறான். காவலாளியின் அனைத்து வினாவிற்கும் தகுந்த பதிலை சுகர் சொன்னபின் அவரை அரண்மனைக்கு அழைத்துச் செல்கின்றனர். சுகருக்கு உபசாரங்கள் செய்து முடிந்த பின் ,அவர் ஜனக மஹாராஜாவிடம் ப்ரம்மசர்யம், க்ரஹஸ்தாச்ரமம், வானப்ரஸ்தம், சந்யாஸம் இவைகளுக்கான தர்மங்களைச் சொல்ல வேண்டும். க்ரஹஸ்தாச்ரமம் பந்தப்படுத்தாது. மனசு தான் காரணம் என்று என் தந்தை சொல்கிறார். அதனால் என் சந்தேகத்தைத் தாங்கள் நிவர்த்திக்க வேண்டும் என்று சொல்கிறார்.

14. க்ருஹஸ்ததர்மஸ்ய மஹத்வமஸ்மாது
விஞாய தீமான் ஸ சுகோ நிவ்ருத்தஹ
பித்ராச்ருமம் ப்ராப்ய ஸுதாம் பித்ருணாம்
வ்யாஸேSதிஹ்ருஷ்டே, க்ருஹிணீம் சகார

வ்யாஸர் சொன்ன அதே விளக்கங்களை ஜனகரும் சொல்கிறார். பந்தம் வேண்டாம் என்று, தபஸ் செய்ய காட்டிற்குச் சென்றாலும், ஒரு மானையோ, முயலையோப் பார்த்து ஆசைப்பட்டால் அதுவும் பந்தத்தை ஏற்படுத்தும். எதன் மேல் ஆசை வைத்தாலும் அது பந்தமே. மனதை எடுத்து வைத்துவிட்டு எங்காவது போக முடியுமா? வீடானாலும், காடானாலும் மனசு தான் காரணம். அதனால் க்ரஹஸ்தாச்ரமத்தால் பந்தம் வராது என்று சொல்ல சுகரும் மனக் குழுப்பம் நீங்கி தெளிவடைந்து தந்தையிடம் மீண்டும் சென்று திருமணத்திற்கு சம்மதம் தருகிறார். பித்ரு தேவதைகளின் புத்ரியான பீவரீ என்னும் கன்னிகையை கல்யாணம் செய்து கொள்கிறார்.

15. உத்பாத்ய புத்ராம்சசதுர: ஸுதாம் ச
க்ருஹஸ்ததர்மான் விதினாSSசரன் ஸஹ
ப்ரதாய சைனாம் முனயேSணுஹாய
பபூவ காலே க்ருதஸர்வக்ருத்யஹ

க்ருஷ்ணன், கௌரப்ரமன், பூரிதன், தேவஸ்ருதன் என்ற நான்கு மகன்களும், கீர்த்தி என்ற ஒரு பெண்ணும் பிறக்கின்றனர். க்ரஹஸ்தாச்ரம தர்மப்படி வாழ்ந்து வருகிறார். மகன்களுக்குச் செய்ய வேண்டிய உபநயனம் போன்றவைகளையும் செய்வித்து, உரிய வயதில் மகளை அணுஹன் என்னும் மஹானுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார். அவர்களுக்கு ப்ரமதத்தன் என்னும் மகனும் பிறக்கிறான்.

16. ஹித்வாSSச்ய்ரமம் தாத,மபீசசைல
ச்ருங்கே, தபஸ்வீ ஸஹ,ஸோத்பதன் கே
பபௌ ஸ பாஸ்வா,னிவ, தத்வியோக
கின்னம் சிவோ வ்யாஸ,மஸாந்த்வ யச்ச

தன் பிதாவின் விருப்பப்படி க்ரஹஸ்தாச்ரம கடமைகளைச் சரிவர முடித்து விட்டு, கைலாய மலைக்குச் சென்று த்யானம் செய்து, சித்தியும் அடைந்து, மலையினின்றும் எழும் உதய சூரியனைப் போல கைலாய மலையிலிருந்து மேலே எழும்பினார். அப்பொழுது கைலாய மலையில் இரண்டு சிகரம் இருப்பது போல் தோன்றியது. இவர் எழுந்த வேகத்தில் கைலாய மலையும் சிறிது அசைந்தது. அதன் பிறகு சுகர் ஆகாஸ ஸஞ்சாரியாய் ரிஷிகளால் துதிக்கப்பட்டு வந்தார். மகனைப் பிரிந்த வ்யாஸர் துயரம் தாங்காமல் கைலாயமலை வந்து மகனே! மகனே! என்று கதறி அழுத போது, பார்வதி பரமேஸ்வரன் அவருக்குக் காட்சி தந்து “உன் மகன் யாரும் அடைய முடியாத ஆகாஸ சஞ்சார பதவி அடைந்திருக்கிறான். அவனால் உங்கள் புகழ் எங்கும் பரவி உள்ளது என்று ஆறுதல் சொன்னார். அப்படியும் வ்யாஸர் ஆறுதல் அடையாததால், வ்யாஸரின் அருகில் சுகர் சாயா ரூபமாக தோன்றும்படி அனுக்ரஹம் செய்து மறைந்தனர்.

17. ஸர்வத்ர சங்கா,குலமேவ சித்தம்
மமேஹ விக்ஷிப்,தமதீரமார்த்தம்;
கர்த்தவ்யமூடோSஸ்மி, ஸதா சிவே!; மாம்
தீரம் குரு த்வம்; வரதே! நமஸ்தே.

இந்த ஸ்லோகத்தில் தேவி நாராயணீயத்தின் ஆசிரியர் தன் கருத்தைச் சொல்கிறார். நாம் எப்போதும் நல்ல செயல்களையேச் செய்ய வேண்டும் என நினைக்க வேண்டும். அதைச் செய்ய ஆரம்பிக்கவும் வேண்டும். அப்படி நல்ல செயல்களைச் செய்யத் தொடங்கும் போது, அதைச் செய்ய முடியாமல் மனத்தின் கவனம் வேறு திசையில் மாறும் போது, அந்த மனதிற்கு விக்ஷித்த மனம் என்று பெயர். இதைச் செய்தால் இப்படி ஆகுமோ, அதைச் செய்தால் அப்படி ஆகுமோ என்று சந்தேகத்துடன் குழும்பும் உறுதியில்லாத தீர்மானிக்க முடியாத மனம், சங்காகுல மனம். செய்யகூடியது எது, செய்யக்கூடாது எது என்று புரியாமல், இதைச் செய்யலாமா, அதைச் செய்ய வேண்டாமா என்று கலக்கம். அந்த மனதிற்குக் கர்த்தவ்ய மூடதா என்று பெயர். இதைப் போன்று குழுப்பங் சந்தேகங்களும் இல்லாத மனம் வேண்டும் என்றால் அதற்கும் தேவியின் அனுக்ரஹம் வேண்டும் என்று சொல்கிறார்.

எட்டாம் தசகம் முடிந்தது

மஹாபாரத கதை

இஷ்வாகு வம்சத்தில் மஹாபிஷன் என்று ஒரு ராஜா. அவன் 1000 அஸ்வமேத யாகமும், 100 வாஜபேய யாகமும் செய்து இந்திரபதம் அடைந்தான். ஒருநாள் அனைத்து தேவர்களுடன் மஹாபிஷனும் ப்ரம்மசபையில் கூடி இருந்த போது கங்கை மாதாவும் வந்திருந்தாள். திடீரென பெருங் காற்று வீச கங்கையின் மேலாடை சற்று விலக, அதைக் கண்டு மஹாபிஷன் கங்கையிடம் காதல் கொள்ள, கங்கையும் அவனை பிரியத்துடன் பார்த்தாள். இதைக் கண்ட ப்ரம்மன் அவர்களை பூமியில் பிறந்து சிற்றின்பங்களை அனுபவித்து, அதன் பின் புண்ணியங்களைச் செய்து பின் வாருங்கள் என்று சாபம் தந்தான்.

இது இப்படி இருக்க அஷ்ட வஸுக்களும் பூலோகத்தைச் சஞ்சாரம் செய்து வரும் பொழுது, அஷ்ட வஸுக்களில் ஒருவரான தியா என்பவர் தன் மனைவியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய, வசிஷ்டரின் ஆசிரமத்தில் இருக்கும் நந்தினி என்னும் காமதேனுவைக் கவர்ந்து சென்றார். நந்தினியைக் காணாத வசிஷ்டர், ஞான திருஷ்டியால் அறிந்து, தியாவை தெய்வத்தன்மை நீங்கி நீண்டநாள் மனிதனாக இருப்பாய் என்றும், தியாவிற்குத் துணை இருந்த மற்ற வஸுக்களை ஓர் ஆண்டு மனித ஜன்மம் எடுத்து, மீண்டும் தெய்வத்தன்மை அடைவீர்கள் என சாபம் தந்தார். சாபம் பெற்ற வஸுக்கள் கங்கைக் கரையில் வந்து கொண்டிருக்கும் போது, ப்ரம்ம லோகத்திலிருந்து சாபம் பெற்ற கங்கை எதிரே வர, “தாங்கள் சந்தனு மஹாராஜாவை மணந்து கொண்டு, எங்களை குழந்தைகளாகப் பெற்று, இந்த கங்கை நதியில் விடுவீர்களானால் நாங்கள் சாப விமோசனம் பெறுவோம் ” என்று சொல்ல கங்கையும் சம்மதித்தாள்.

ஒரு நாள் குரு வம்சத்து அரசனான ப்ரதீபன் கங்கை நதிக்கரையில் சூர்ய நமஸ்காரம் செய்யும் பொழுது, கங்கை ஒரு அழகான பெண் உருவம் கொண்டு அவனது வலது துடையில் உட்கார்ந்தாள். ப்ர்தீபன் “பெண்ணே! நீ யார்? என்று கேட்க, கங்கையும் தான் அவனை மணக்க விரும்புவதாகக் கூறினாள். உடனே அவர் சொன்னார் “அம்மா! வலதுடையில் அமரத்தக்கவர்கள் புத்ரன், புத்ரி, மருமகள் அல்லாவா? எனவே நீ என் மகனுக்கு மனைவி ஆவாய்” என்று சொன்னார். சாபம் பெற்ற மஹாபிஷன் இவருக்கு மகனாகப் பிறந்தார். அவர்தான் சந்தனு மஹாராஜா.

சந்தனு மஹாராஜா ஒரு நாள் கங்கைக் கரையின் பக்கம் வந்து கொண்டிருந்த போது, கங்கை ஒரு பெண் உருவில் உலாவிக் கொண்டிருந்தாள். அவள் அழகில் சந்தனு மயங்கினான். அவளைத் தன் மனைவி ஆகவேண்டும் என்றும் கேட்டான். கங்கையும் இவன் தான் அந்த மஹாபிஷன் என்று அறிந்து கொண்டாள். நான் சொல்லும் நிபந்தனைகளுக்கு ஒத்துக் கொண்டால் மணந்து கொள்கிறேன் என்றாள். 1. நான் எந்த செயலைச் செய்தாலும், அது தீய செயலாக இருந்தாலும் அதற்குக் காரணம் கேட்கக் கூடாது. 2. என்னிடம் பிரியமில்லாத வார்த்தைகளை எப்பவும் பேசக் கூடாது. 3. என் செயலை எப்பொழுது நீ மறுக்கின்றாயோ அப்பொழுது உன்னை விட்டுப் பிரிந்து விடுவேன் என்றாள். அரசனும் சம்மதிக்க அவருடன் அரண்மனை சென்று சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். கங்கையும் கர்பவதி ஆகி முதல் புத்திரனைப் பெற்றதும் கங்கையில் விட்டாள். இப்படியாக ஏழு வஸுக்களையும் புத்திரர்களாகப் பெற்று கங்கையில் விட்டாள். சந்தனு மஹாராஜா வருத்தம் கொண்டார். தனது 7 பிள்ளைகளையும் ஜலத்தில் விட்டு விட்டாளே. இந்த 8 ஆவது குழந்தையையாவது நாம் எப்படியாது காப்பாற்ற வேண்டும் என்று சந்தனு மஹாராஜா நினைக்கும் பொழுது கங்கை நந்தினியை அபஹரித்த 8 வது வஸுவைப் பிள்ளையாகப் பெற்றாள். சந்தனூ மஹாராஜா கங்கையிடம் இந்தக் குழந்தையையாவது விட்டு விடு என்று வேண்டினார். கொடுத்த வாக்கினை மீறியதால் நான் உங்களைப் பிரியும் நேரம் வந்து விட்டது. அஷ்ட வஸுக்களுக்குச் சாப விமோசனம் தரவே நான் உங்களுக்குப் பத்தினி ஆனேன். நந்தினியைக் கவர்ந்த 8 ஆவ்து வஸுவே இந்தக் குழந்தை. தாயின்றி வளரும் பிள்ளை சுகம் பெற மாட்டான். இவன் தெய்வத்தன்மை கொண்டவன் என்பதை நீங்கள் அறியவேண்டும். இவனுக்கு கங்கேயன் என்று பெயர். அதனால் நானே இந்தக் குழந்தையை யௌவனம் வரை வளர்த்து மீண்டும் நீங்கள் இவ்வனத்திற்கு வரும் போது தருகிறேன் .அப்பொழுது என்னையும் நீங்கள் காணலாம் என்று சொல்லி கங்கை மறைந்து விட்டாள்.

சில காலம் சென்றது. சந்தனு மஹாராஜா வனத்திற்கு வேட்டை ஆடச் சென்றார். திடீரென கங்கையில் வெள்ளம் பெருக்கெடுப்பதையும் அதில் அதிரூப லாவண்யமான ஒரு சிறுவன் தனுஷை நாட்டி பாணங்களை விட்டு விளையாடிக் கொண்டிருப்பதையும் கண்டார்.. அவனை நீ யார்? என்று கேட்க அவன் பதில் கூறாமல் கங்கையில் மறைந்தான். சந்தனு தன் மகனையும் கங்கையையும் நினைத்தார். கங்கையும் உடனே தோன்றினாள். உங்கள் மகன் உங்கள் வம்சத்திற்குக் கீர்த்தியையும், அழியாத புகழையும் தர வல்லவன். இதோ காங்கேயனை உங்களிடம் ஒப்படைத்தேன் என்று சொல்லி கங்கை மறைந்தாள். காங்கேயனுக்கு இளவரசு பட்டம் கட்டி சந்தனு மகிழ்ச்சியுடன் இருந்தார்.

சில காலம் சென்றது. சந்தனு மஹாராஜா வேட்டையாட வனம் சென்றார். தெய்வாதீனமாக கங்கை கரை ஓரம் அடைந்தார். அங்கு சுகந்த பரிமள வாசனைக் காற்று வீசியது. இதுவரை அறியாத இந்த மணம் எங்கிருந்து வீசுகிறது? என அதன் வழியே சென்றபோது யமுனை நதிக் கரையில் ஒரு அழகிய பெண்ணைக் கண்டார். அவள் அழகில் மயங்கி “நீ யார்?” என வினவ, அவள் தான் வலைஞர் தாசனின் மகள் என்று சொன்னாள். சந்தனு மஹாராஜா அவளைத் தன் துணைவியாக வேண்டும் என்று கேட்க, அவளும் தன் தந்தை சம்மதித்தால் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றாள். அந்த மீனவனும் தன் மகளுக்குப் பிறக்கும் பிள்ளை ராஜ்யத்தை ஆள வேண்டும் என்று சொல்ல, காங்கேயன் இருக்க இது எப்படி சாத்யம் என்று, அரண்மனை திரும்பி காதல் வயப்பட்டு மனச் சோர்வுடன் இருந்தார். தந்தையின் துயர் தீர்க்காத மகன் இருந்தும் பயன் இல்லை என்று, மந்திரி ப்ராதானிகள் மூலம் தந்தையின் துயருக்குக் காரணம் அறிந்து, சத்யவதியின் தந்தையை சந்தித்து, சத்யவதியின் பிள்ளைகளே ராஜ்யத்தைப் பரிபாலனம் செய்வார்கள் என்றும், தான் விவாஹம் செய்து கொள்வதில்லை என்னும் பீஷ்ம விரதத்தை அனுஷ்டித்தேன் என்றும் சத்யம் செய்து சத்யவதியை தந்தைக்கு மணம் செய்வித்தார். சந்தனுவிற்கு சத்யவதிக்கு முன் வ்யாஸர் பிறந்த செய்தி தெரியாது.

சந்தனு சத்யவதிக்கு சித்ராங்கதன், விசித்ரவீரியன் என இரு மகன்கள் பிறந்தார்கள். வாரிசு இல்லாமல் அவர்கள் இறந்து போனதால், வ்யாஸரை ப்ரார்த்தித்து, மூத்த மருமகளிடம் சம்போகிக்கச் செய்தாள். ,அவள் வ்யாஸரின் நகம் முடி கண்டு அஞ்சி கண்ணை மூடிக் கொண்டதால் குருடனாக திருதராஷ்டிரனையும், இளைய மருமகள் நாணத்தால் தன் உருவம் காட்டாமல் வெண்மை வர்ணம் பூசிக்கொண்டதால், நீங்காத வெண்மை நிறமுடைய வ்யாதி கொண்ட பாண்டுவையும் பெற்றெடுத்தார்கள். குருடனும் ,வியாதியாளனுமாகப் பிறந்ததால் அரசுரிமைக்கு ஏற்றவர்கள் அல்லர் என்று, மீண்டும் இளைய மருமகளை வ்யாஸரிடம் அனுப்பினாள். ஆனால் அவளோ தன்னுடைய தாதியை அனுப்பினாள். அவள் வ்யாஸரிடம் முழு மனதுடன் சென்றதால், தர்மாத்மாவும், ஞானமுடையவரும் ஆசாரசீலருமான, யமனின் அம்சமான விதுரர் பிறந்தார். பின் பாண்டுவிற்கு முடி சூட்டி, விதுரரை மந்திரியாக்கி பீஷ்மர் ஆணைப்படி அரசாளும்படிச் செய்தாள் சத்யவதி.

திருதராஷ்ட்ரன் சௌபலை, காந்தாரி என இருவரைத் திருமணம் செய்து கொண்டார். சௌபலைக்கு யுயுத்ஸு என்னும் மகனும், காந்தாரிக்கு துரியோதனனுடன் 100 பிள்ளைகளும் பெற்றாள். பாண்டுவுக்கு குந்தி, மாத்திரி என இரு மனைவியர்கள். குந்தி திருமணத்திற்கு முன் துர்வாஸருக்குப் பணிவிடை செய்து அவர் மகிழ்ச்சி அடைந்ததால், குந்திக்கு சில மந்திரங்களை உபதேசம் செய்தார். சில நாள் சென்று குந்தி தான் அறிந்த மந்திரத்தின் மகிமையை அறிந்து கொள்ள அதில் ஒரு மந்திரத்தை உச்சரித்த பொழுது, சூர்ய பகவான் தோன்றி, அவளை கர்பவதியாக்கி, அவளுக்கு கவசகுண்டலத்தோடு கூடிய கர்ணனை மகனாகக் கொடுத்தார். குந்தி திருமணம் ஆகாது பிறந்த குழந்தை என அஞ்சி, அதை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட, அது அதிரதன் என்னும் தேர்ப்பாகன் கையில் கிடைத்தது. அக்குழந்தையே கர்ணன்.

பின் பாண்டு குந்தி, மாத்திரி இருவரையும் மணந்து கொண்டு, ஒரு நாள் வேட்டைக்குச் சென்ற போது, குந்தமென் என்னும் முனிவர், மான் உருவத்தில் தன் மனைவியைப் புணரும் போது, மிருகம் என்று எண்ணி பாணத்தை விட்டான். அவர் நீ உன் மனைவியைப் புணரும் பொழுது மரணம் அடைவாய் எனச் சாபம் தந்தார்.

ஒரு நாள் பாண்டு கங்கைக் கரை வழியே தன் மனைவியருடன் போகும் பொழுது, ஒரு ஆஸ்ரமத்தில் முனிவர்கள்” அபுத்ரஸ்யகதிர்நாஸ்தி” அதாவது புத்திரன் இல்லாதவனுக்குக் கதி இல்லை எனச் சொல்வதைக் கேட்டு, குந்தியிடம் “என்னால் உனக்குப் புத்திரபாக்யம் இல்லை. அதனால் இந்த முனிவரிடம் சென்று புத்திர பாக்யம் பெறுவாய்” என்று சொன்னார். அதற்குக் குந்தி தான் துர்வாஸரிடம் உபதேசம் பெற்றதைச் சொல்லி, யமதர்மராஜனை நினைத்து மந்திரத்தைச் ஜபிக்க தருமரையும், வாயுபகவானிடம் பீமனையும், இந்திரனிடம் அர்ஜுனனையும் பெற்றெடுத்தாள். மாத்திரிக்கு அஸ்வினீ தேவதைகளின் மந்திரத்தை உபதேசிக்க, அவளும் நகுல, சகாதேவரைப் பெற்றெடுத்தாள். இவர்கள் பாண்டு புத்திரர்கள் எனப்பட்டனர். ஒரு நாள் மாத்திரியிடம் பாண்டு சுகிக்கும் பொழுது மரணம் அடைந்தார். நகுல சகாதேவரை குந்தியிடம் ஒப்படைத்து விட்டு மாத்திரியும் நாயகனுடன் மரணம் அடைந்தாள். குந்தியோடு பாண்டவர்கள் அஸ்தினாபுரம் சென்றனர். பாண்டுவின் சாபம் தெரிந்தவர்கள் குழந்தைகளைச் சந்தேகிக்க, குந்தியின் வேண்டு கோளுக்கு இணங்கி, யமன் முதலானோர், இக்குழந்தைகள் தேவ அம்சம் கொண்டவர்கள் என்று சொல்ல, இது சத்தியம் என்று குழந்தைகளை அன்புடன் நடத்தி வந்தனர். பாண்டவர்களுக்கு த்ரௌபதி மனைவியானாள். அவள் பொதுவாக இருந்தாலும் மஹா பதிவிரதை. அவளுக்கு 5 குழந்தைகள். கிருஷ்ணனின் சகோதரி சுபத்திரையை அர்ஜுனன் மணந்து அபிமன்யுவைப் பெற்றான். அவன் மனைவி உத்தரை. பாரத யுத்தத்தில் த்ரௌபதியின் 5 மகன்களும், அபிமன்யுவும் இறந்தார்கள். உத்தரையின் மகனை அஸ்வத்தாமா தன் பாணத்தால் மாய்த்தார். இதை அறிந்த கிருஷ்ணன் அக்குழந்தைக்கு உயிர் கொடுத்தார். தன் குலம் அழியும் காலத்தில் பிறந்ததால் இவன் “பரீக்ஷித்” என்று பெயர் கொண்டான்.

பிறகு சிலகாலம் பாண்டு புத்திரர்களிடம் இருந்துவிட்டு திருதராஷ்ட்ரர் தன் மனைவி, விதுரர் இவர்களுடன் ஆரண்யம் சென்ற போது குந்தியும் அவர்களுடன் சென்றாள்.. தாயைக் கனவிவிலே கண்ட தருமர் தன் சகோதரர்கள் ,உத்திரை, நகரத்தார் சூழ ஆரண்யம் சென்று , சதயூபர் ஆஸ்ரமத்தில் அவர்களைக் கண்டு மகிழ்ந்தார். அங்கு விதுரர் இல்லாததால் கங்கைக் கரை வழியே ஆரண்யம் சென்று, யோகத்திலிருக்கும் விதுரரை நமஸ்க்கரித்தார். தருமர் பலமுறை அழைத்தும் அவர் காதில் விழாத நிலையில், விதுரர் முகத்திலிருந்து ஒரு ஜோதி கிளம்பி அது தருமருடைய முகத்தில் சென்று மறைந்தது. இருவரும் யமன் அம்சத்தினர் ஆனதால் தருமரிடம் சென்று ஒன்றியது. இதுபோல் தருமரும் யமதர்மனிடம் அடக்குவார். வ்யாஸரும், நாரதமுனிவரும் அப்பொழுது அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களைக் கண்டதும் குந்தி கர்ணனையும், காந்தாரி தன் 100 பிள்ளைகளையும், சுபத்ரை அபிமன்யுவையும் காண விரும்புவதாகத் தெரிவித்தனர். வ்யாஸர் இவர்களது விருப்பத்தைக் கேட்டு மனம் இரங்கி, தேவியை த்யானித்து, அன்னையின் கருணையினால் அனைவரும் அவர்கள் முன் தோன்றிப் பின் மறைந்தார்கள். பாண்டவர்கள் மீண்டும் அனைவரையும் அழைத்துக் கொண்டு அஸ்தினாபுரம் சென்றனர். பிறகு திருதராஷ்ட்ரன், காந்தாரி, குந்தி மூவரும் காட்டிற்குச் சென்று தீயில் ப்ரவேசித்தனர். கௌரவ வம்சம் அழிந்தபின் யாதவர்களும் பிராமண சாபத்தால் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டு அழிந்தனர். பலராமனும் தேகத்தை விட்டார். கிருஷ்ணனும் வேடனின் பாணத்தால் இறந்து போனார். கிருஷ்ணன் இறந்ததைக் கேட்டு வசுதேவரும், பலராமருடன் ரேவதியும், கிருஷ்ணனுடன் அவரது மனைவியர் ருக்மிணி, சத்யபாம, சாம்பவி அனைவரும் இறந்தனர். அர்ஜுனன் துவாரகைக்குச் சென்று அங்குள்ள அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றியதும், துவாரகை ஜலத்தில் மூழ்கிப் போயிற்று. கோபிகா ஸ்த்ரீகள் திருடர்களால் துன்பம் அடைந்து இறந்து போயினர். அர்ஜுனன் இந்திரப்ரஸ்தத்தை அனிருத்ரன் மகன் வஜ்ரனுக்குப் பட்டாபிஷேகம் செய்தான். தருமரும் உத்தரையின் மகன் பரீக்ஷித்திற்கு அஸ்தினாபுர ராஜ்ய பரிபாலம் தந்து விட்டு வனத்திற்குச் சென்றார். இமயமலைச் சாரலில் உள்ள வனத்தில் பாண்டவர்கள் அனைவரும் அவரவர்கள் அடைய வேண்டிய கதியை அடைந்தனர்.

பரீக்ஷித்து பரிபாலனம் செய்து வரும் போது ஒரு நாள் காட்டிற்கு வேட்டை ஆடச் சென்றான். பசி, தாகம் இரண்டும் அவனை வாட்ட, நிஷ்டையில் இருக்கும் ஒரு யோகியைப் பார்த்துத் தண்ணீர் கேட்டான். அவர் நிஷ்டையில் இருந்ததால் எந்த பதிலும் இல்லாததால் கோபம் கொண்டு அங்கு இறந்து கிடந்த ஒரு பாம்பை அவர் கழுத்தில் சுற்றினான். அப்பொழுதும் பதில் இல்லை.. சுற்றிய பாம்பால் அவர் கழுத்தைப் பற்றி இழுத்தான். பயன் உண்டா? இல்லை. அவர் யோக நிலையிலிருந்து மாறவில்லை. பசுவின் வயிற்றில் பிறந்த மஹா தபஸ்வியான அவரது மகன் அங்கு வந்தார். தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பைப் பார்த்தான். உடனே கோபம் கொண்டு ‘என் தந்தையின் கழுத்தில் இறந்த இந்த பாம்பைச் சுற்றியவன் இன்னும் 7 நாட்களில் தக்ஷகன் என்னும் சர்பராஜன் (பாம்பு) கடித்து இறப்பான்” என்று சாபம் தந்தார். முனிகுமாரன் தந்த சாபத்தை அறிந்த அரசன், எப்படியாவது அதற்குப் பரிகாரம் தேடவேண்டும், இல்லையெறால் சாபம் பலித்துவிடும் என்று, பண்டிதர்களை அழைத்து அதற்கு வழி தேடினான். புத்திமான்களின் உபாயம் நிச்சயம் சித்தியாகும் என்று ஒரு உதாரணம் சொன்னான்.

ஒரு சமயம் ஒரு ரிஷிபத்னீ விஷம் தீண்டி இறந்து விட்டாள். ஆனால் அவள் கணவனான ருரு மஹரிஷி தன் ஆயுளில் பாதியைத் தத்தஞ் செய்தார். எனவே முயற்சி இருந்தால் காரிய சித்தி கிடைக்கும். பிருகு மஹாமுனிவரின் பத்னி புலோமை என்பவள். அவர்களது மகன் யவனன். யவனனின் மனைவி சுகன்யை, இவள் சர்யாதி என்னும் அரசனின் மகள். இவர்களது மகன் பிரமாதி. பிரமாதியின் மனைவி பிரதாபி. ருரு மஹரிஷி இவர்களின் புதல்வன். இவர் மேனகையின் பெண்ணைக் கண்டு விருப்பம் கொண்டார். மேனகை என்னும் கந்தர்வப் பெண் விசுவாவசு என்னும் கந்தர்வனோடு நதிக்கரையில் கிரீடித்து கர்பமடைந்தாள். மேனகை ஸ்தூலகேசருடைய ஆஸ்ரமத்தை அடைந்து அங்கு ஒரு அழகானப் பெண் குழந்தையை பெற்றுவிட்டுத் தன் உலகம் சென்றாள். அதற்குப் பிரமத்வரை என்று பெயர். ருரு மஹரிஷி பிரமத்வரைக் கண்டு மோகித்துத் தன் தந்தையிடம் தன் விருப்பத்தைக் கூறினார். இரு மஹரிஷிகளும் ஒன்று கூடி திருமணத்தை நிச்சயித்தனர். அதுசமயம் முற்றத்தில் விளையாடிக் கொண்டு இருந்த பிரமத்வரை, விஷம் தீண்டி இறந்தாள். அங்கு வந்த கணவனாக வேண்டிய ருரு மஹரிஷி தானும் மிகவும் வேதனை அடைந்து தானும் உயிர்விட நினைத்தார். துர் மரணம் மேல் உலகத்திலும் தன்னை விரும்பியவளுடன் சேர்க்காது என்று நினைத்து, ஆற்றில் இறங்கி ஸ்நானம் செய்து கையில் நீரை எடுத்து “நான் பக்தியுடன் இதுநாள் வரை சகல காரியங்களையும் அதாவது, ஆராதனை, பூஜை, ஹோமங்கள், ஜபம், காயத்ரி ஜபங்கள் போன்றவைகளை, முறைப்படிச் செய்திருந்தால் என் பிராண நாயகி உயிர் பெற்று எழ வேண்டும். இல்லையென்றால் நான் என் உயிரை விடுவேன்” என்று இஷ்ட தெய்வத்தை வேண்டி ஜலத்தை பூமியில் விட்டார். ருருவின் நம்பிக்கையைப் பார்த்து கால தூதன் “உன் ஆயுளில் பாதியைத் தத்தஞ் செய்தால் அவள் உயிர் பெறுவாள்” என்றார். அவரும் அப்படியே செய்தார். காலதூதன் தர்மராஜனிடம் சென்று நடந்ததை சொல்ல, அவரும் மனம் இரங்கி பிரமத்வரையை உயிர்ப்பித்தார். ருரு கால தேவனுக்குத் தன் நன்றியைச் சொன்னார்.” நீ உயிரை எடுப்பவன் அல்ல. கொடுப்பவன்” என்றார்.

ருரு மஹரிஷியின் நம்பிக்கைப் போல் தானும் ஏதேனும் வழி தேட வேண்டும் என நினத்துத், தன்னை காப்பாற்றக் கூடிய மணிமந்திர ஔஷதங்களினாலேயும், கவசம் போன்ற மந்திரிகளின் யோசனைப்படியும், 7 மதில்கள் கொண்ட ஒரு கோட்டையை அமைத்து அதில் மந்திரிகளுடன் குடி புகுந்தான். ஔஷதங்களில் வல்லமையுடையவர்களையும், அவர்களின் தொழிலைச் சரிவரச் செய்ய கௌரமுகர் என்ற மஹரிஷியையும் ஏற்பாடு செய்தான். பிராமணோத்தமர்களை அங்கு இருக்கும் அனைவரையும் சோதிக்கும் படியும், மந்திரி குமாரர்களை உப்பரிகையில் யாரும் போகாது இருக்கவும், கோபுரத்வாரத்தில் யானைகளைக் கட்டி அங்கு வரும் காற்றினை காதசைவால் தடுக்கவும் ஏற்பாடுகள் செய்து கொண்டு கோட்டையின் உள்ளிருந்து அரசாக்ஷி செய்தான். அப்பொழுது மந்திர வித்தை அறிந்த கஸ்யபன் என்னும் பிராமணன், அரசன் இருக்கும் இடமான கோட்டைக்குப் போக நினைத்தான். அந்த சமத்தில் தக்ஷகன் என்னும் சர்பராஜன் நாக லோகத்திலிருந்து பூலோகம் வந்தான். ஒரு பிராமணன் போல் வேஷம் தரித்து, கஸ்யபரைப் பார்த்து, அவர் எங்கு போகிறார் என்றும் கேட்டான். கஸ்யபர்” பரீக்ஷித்து மஹாராஜாவை தக்ஷகன் என்னும் பாம்பு கடிக்கப் போகிறது. அந்த விஷத்தால் ராஜா இறக்காமல் இருப்பதற்கான மந்திர சித்தி என்னிடம் உள்ளது அதனால் நான் அங்கு போகிறேன் என்று சொன்னார். உடனே சர்பராஜன் ” நான் தான் தக்ஷகன். அவரைக் கடிக்கவே நான் போகிறேன். உம்மால் அவரைக் காப்பாற்ற முடியுமா? உமக்கு அந்த சக்தி உள்ளதா? நீர் பேசாமல் திரும்பிப் போய்விடும்” என்றார். கஸ்யபர் “என் மந்திர பலத்தால், சக்தியால் நான் அவரைப் பிழைக்க வைப்பேன்” என்றார்.

சர்பராஜன் ஒரு மரத்தைக் கடித்து சாம்பலாக்கினான். உடனே கஸ்யபர் அந்த சாம்பலை ஒன்று திரட்டி,கையில் நீரை எடுத்து மந்திரத்தை ஜபித்து அதன் மீது தெளித்தார். உடனே அந்த மரம் வளர்ந்து இலை, பூ காய், பழங்களுடன் ஓங்கி வளர்ந்தது. தக்ஷகன் அவரின் மந்திர சக்தியின் வல்லமையை அறிந்தான். “நீவீர் அந்த ராஜாவைக் காப்பாற்றுவதால் என்ன லாபம் அடையப் போகிறீர்?” என்று கேட்டான். கஸ்யபரும் தனம் வேண்டியே இதைச் செய்யப் போகிறேன். என்றார். தக்ஷகன் தான் அவருக்கு வேண்டிய அளவு பணம் தருவதாகச் சொன்னான். கஸ்யபர் யோசித்தார். தன்னுடைய ஞானத்தால் இது தவிர்க்க முடியாத மரணம் என்று அறிந்தார். அதனால் தக்ஷகனிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டுத் தன் இருப்பிடம் திரும்பினார்.

இந்த பரீக்ஷித்து மஹாராஜாவைப் போல் யாரும் இருந்ததில்லை. யாராவது செத்த பாம்பை பிராமணன் கழுத்தில் போடுவானா? இந்த பாபத்திற்கான கதியை அவன் அடைந்தே தீருவானே. மணி மந்திரங்களும். ஔஷதமும் இவனைக் காப்பாற்ற முடியுமா? மரணத்தை யாரால் வெல்ல முடியும்? தான தருமங்களால் ஸ்வர்கத்தை அடையலாம். இறப்பைத் தடுக்க முடியுமா? இதை அறியாவனாக இருக்கிறானே என்று தக்ஷகன் நினைத்தான். பின் தன்னுடன் இருக்கும் நாகங்களை தவ வேடம் கொண்ட பிராமணர்களைப் போல் கையில் நல்ல உயர்ந்த பழங்களுடன் அரண்மனை நோக்கிச் செல்லுங்கள் என்று சொல்லி, அந்த பழத்தினுள் கிருமி ரூபத்தில் புகுந்தான். அரண்மனைக்குச் சென்றவர்களை காவலாளி உள்ளே விடவில்லை. அரசனின் ஆயுளை வேண்டி மந்திரித்துக் கொண்டுவந்த பழம் இது. என்று கூற, அவர்கள் அரசனிடம் தெரிவித்தனர். பழத்தைக் கொண்டு வாருங்கள். நாளை அவர்களைச் சந்திகிறேன் என்று அரசன் சொல்லி அனுப்பினார். அரசன் அவர்கள் கொடுத்த பழத்தில் அழகான ஒரு பழத்தை எடுத்து இரண்டாகப் பிளந்தான். அதில் ஒரு புழுவைக் கண்டான். சூரியன் மறையும் நேரம் இது. விஷத்தால் பயம் இல்லை என்று சொல்லி அந்த புழுவைத் தன் கழுத்தில் விட்டான். தக்ஷகன் தன் உருவத்தை எடுத்து அவரின் கழுத்தைக் கடித்தான். அரசனைத் தன் விஷ அக்னியால் தகித்து விட்டுச் சென்றுவிட்டான். சாபத்தினால் விஷம் தீண்டி பரீக்ஷித்து மஹாராஜா இறந்தான்.

அதன் பிறகு அவர் மகனான, குழந்தையான, ஜனமேஜயனுக்குப் பட்டாபிஷேகம் செய்தார்கள். ஜனமேஜயன் வேத சாஸ்திரங்களையும், தனுர்வித்தைகளையும் நீதி நூல்களையும் ஐயம் இன்றிக் கற்று அதன் படி அரசாண்டு வந்தான். காசி ராஜன் மகளான வபுஷ்டையை மணந்து கொண்டான். மகிழ்ச்சியாக வாழ்ந்தும் வந்தான். இந்த சூழ்நிலையில் உத்துங்கனென்னும் மஹரிஷி, பரீக்ஷித்தை கொன்ற தக்ஷகனைக் கொல்ல யாரை அணுகுவது என்று யோசித்து, அவன் மகனான ஜனமேஜயனிடம் சென்றார். அவனிடம் “ராஜாவே! உன் சத்ருவை நீ அறிந்து கொள்ளாமல் சிறு பிள்ளை போல் கவலையில்லாமல் சந்தோஷமாக இருக்கின்றாயே!” என்றார். யார் அந்தப் பகைவன்? என்று ஜனமேஜயன் கேட்க முழு விபரமும் சொன்னார். மந்திரிகளிடமும் விபரம் அறிந்து, கவிஜாதரின் சாபத்தால்தான் தக்ஷகன் பிதாவைக் கடித்தான். அவனுக்குத் தன் பிதாவிடம் ஏதும் பகை இல்லை என்றும் அறிந்தான். அதனால் தக்ஷகன் என் தந்தைக்கு எதிரி அல்லவே? என்றான். அவர் சொன்னார் ராஜாவே! உன் தந்தையைக் காக்க வந்த அந்தணனை பணம் தந்து யார் திருப்பி அனுப்பியது? தக்ஷகன் தானே? அவன் எதிரியா? நண்பனா? என்றார்.

ருரு மஹரிஷி தன் மனவியாகப் போகின்றவளைக் கடித்தததற்காகச் சர்பங்கள் எல்லாவற்றையும் கொன்று வந்தார். ஒரு சமயம் காட்டில் மிகவும் வயதான, பால் நிறமுள்ள இரண்டு தலைகளும் கொண்ட “டுண்டுபம்” என்னும் பாம்பை அடிக்கத் தடியை ஓங்கினார். அந்த சர்பம் ” மஹரிஷியே! நான் என்ன தவறு செய்தேன்”? என்று கேட்டது. “உன் இனமே என் மனைவியைக் கடித்தது. அதனால் உங்கள் இனத்தைக் கொல்வதே என் சபதம்” என்றார்.’ உன் மனைவியைக் கடித்த சர்பத்தைத் தானே கொல்ல வேண்டும். நான் என்ன சர்பமா? என்னை ஏன் அடித்தீர்? என்னைக் கொல்ல உம்மால் முடியுமா? என்றது. உடனே மஹரிஷி நீ யார்? என்று கேட்டார். அந்த சர்பம் சொல்லியது” எனக்கு மேககன் என்னும் நண்பன் ஒருவன் இருந்தான். அவன் அக்னிஹோத்திரம் செய்யும் பொழுது பாம்பு போல் ஒன்றைப் போட்டு “பாம்பு! பாம்பு!” என்று அலறிக் கத்தினேன். அவனும் பயந்து நடுங்கி ஓடினான். பின்பு அது உண்மைப் பாம்பல்ல ,பொய்பாம்பு என்று அறிந்து “அட மூடனே! பொய்யான பாம்பைக் காட்டி என்னை பயம் காட்டினாயே. உண்மையான பாம்பின் ரூபத்தை அடைவாயாக” என்று சபித்தான். பின் நான் மன்றாடி மன்னிப்புக் கேட்டபடியால் ருரு மஹரிஷியால் உன் சாபம் நீங்கும் என்று கூறினான். அதன்படி என் சாபம் உம்மால் நீங்கியது. ‘ மஹரிஷியே! நான் ஒன்று சொல்கிறேன். நீர் எந்த ஜீவ ஜந்துக்களையும் கொல்லக் கூடாது. கருணை காட்ட வேண்டும்” என்று சொல்லி பிராமணன் உருவம் எடுத்தார்.

ருரு மஹரிஷியும் அன்று முதல் சர்பங்களைக் கொல்வதை விடுத்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். “ருரு மஹரிஷி தன் பத்தினியைக் கடித்ததற்காகப் பாம்புகளைக் கொன்றார். உன் தந்தையைக் கடித்த ஸர்பங்களை நீ கொல்லாவிட்டால் உன் தந்தைக்குத் துர்கதிதான். அதனால் நீ சர்பயாகம் செய்” என்று அந்த ஜனமேஜயனைச் சந்தித்த உத்துங்க மஹரிஷி கூறினார். என் தந்தை நற்கதியை அடைய வேண்டும் என்று ஸர்ப யாகத்திற்கான, ஏற்பாடுகளைச் செய்து கங்கா தீரத்தில் யாகசாலை கட்டி யாகம் செய்ய ஆரம்பித்தான். இதை அறிந்த தக்ஷகன் இந்திரனிடம் அபயம் கேட்டான். இதைத் தன் தவ வலிமையால் உத்துங்க மஹரிஷி அறிந்து, அவர்களைத் தன் மந்திர சக்தியால் யாக சாலைக்கு ஓடி வரும்படிச் செய்தார். அப்பொழுது தக்ஷகன் ஆஸ்தீகர் என்னும் ரிஷியை சந்தித்து விபரம் சொல்ல, அவரும் யாகசாலை வந்து ஜனமேஜயனை சந்தித்தார். ஜனமேஜயனும் முனிவரே! நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்க அவரும் யாகத்தை நிறுத்தும்படிச் சொன்னார்.

முனிவர் சொன்னதை எப்படி மறுப்பது? அதனால் யாகத்தை நிறுத்தினான். துக்க மடைந்த ஜனமேஜயன் வ்யாஸரைச் சந்தித்து துர்கதி அடைந்துவிட்ட என் தந்தைக்கு ஸ்வர்கம் கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்? மேலும் இந்த ஆஸ்திக ரிஷி யார்? அவர் ஏன் யாகத்தை நிறுத்தினார்” என்று கேட்டார். வ்யாஸர் சொன்னார் “கேட்பதற்கு ஆச்சர்யமானதும் புண்யமானதுமான ஒரு புராணம் உள்ளது. அதைக் கேட்டால் மனச் சாந்தியும், உன் பிதாவிற்கு ஸ்வர்கலோகமும் கிடைக்கும். இதை என் மகனான சுகருக்கும் நான் உபதேசித்திருக்கிறேன். நீயும் கேட்டால் பரம சுகமும், நித்யத்வமும், சர்வ சம்பத்தும் கிடைக்கும். அதுதான் தேவீ புராணம்” என்றார். தேவீபுராணம் கேட்க நான் ஆவல் உடையவனாக இருக்கிறேன். இருப்பினும் அந்த ஆஸ்தீக ரிஷி யார்? ஏன் யாகத்தை நிறுத்தினார்? இந்த சர்பங்களை ஏன் காப்பாற்ற வேண்டும்? என ஜனமேஜயன் கேட்டான். வ்யாஸர் சொல்ல ஆரம்பித்தார்.

ஜாத்காரு என்று ஒரு மஹரிஷி இருந்தார். அவர் ப்ரம்மச்சாரி. ஒருநாள் வனத்தில் செல்லும் போது அவருடைய பிதுர்க்கள் ஒரு கிணற்றில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். பித்ருக்கள் “எங்கள் நிலையைப் பார்த்தாயா? நீ விவாஹம் செய்து நல்ல புத்திரனைப் பெற்றால் தான் நாங்கள் ஸ்வர்கம் செல்லமுடியும்” என்றார்கள். எனக்கு வருபவள் என் பெயரை உடையவளாகவும், என் மனப்படி நடப்பவளாகவும், என்னால் தேடப்படாதவளாகவும் இருந்தால் மணந்து கொள்வேன் என்றார் ஜாத்காரு மஹரிஷி.

இது இப்படி இருக்க ஒரு நாள் காசிப மஹரிஷியின் பத்னிகளான கத்துரு, வினதை இவர்கள் சூரியனின் குதிரையின் நிறம் என்ன என்று சர்ச்சை செய்ய, விநதை அது வெண்மை நிறம் என்றாள். அவள் கத்துருவிடம் நீ இந்தக் குதிரையின் நிறம் என்ன என்று சொல்?அது வெண்மையாக இல்லை என்றால் நான் உனக்கு அடிமை என்றாள். நீ எனக்கு வேலைக்காரியாகத்தான் ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டு, கத்துரு தன் மகன்களான சர்பங்களை அழைத்து, சூரியனின் குதிரையை விஷ ஜ்வாலையால் கறுப்பாக்குங்கள் என்றாள். சில சர்பங்கள் மறுத்தன. உடனே அவள் நீங்கள் ஜனமேஜயன் செய்யப் போகிற யாகத்தில் வீழ்ந்து இறக்கக் கடவது என சபித்தாள். மற்ற சர்பங்கள் தாய் சொல்லைத் தட்டக் கூடாது என்று, ஆகாயத்தில் சென்று குதிரையின் வாலை சுற்றிக் கொண்டு, அதை கறுப்பு நிறம் போல் தோன்றச் செய்தது. கத்துரு வினதையைப் பார்த்து நீ வெண்மை நிறம் என்று சொன்னாயே, அது கறுப்பாகவல்லவா இருக்கிறது? என்று சொல்ல, வினதையும் கறுப்பு நிறமான குதிரையைப் பார்த்துவிட்டு தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள். கத்துரு வினதயை சிறையில் அடைத்தாள். வினதை சிறையில் கஷ்டப்படுவதை அறிந்த அவளது மகன் கருடன் “தாயே நீங்கள் கவலையை விடுங்கள். நான் இருக்கிறேன்.” என்றான்.

வினதை சொன்னாள் மகனே! நான் உன் பெரிய தாயின் அடிமை. அவளை நான் இப்போது அவள் சொல்லும் இடம் தூக்கிச் செல்லவேண்டும் இதுவே என் கவலை” என்றாள். நான் இருக்க கவலை ஏன்? என்று இருவரும் கத்துருவைப் பார்க்கச் சென்றனர். கருடன் “தாயே! உங்களை நான் தூக்கிச் செல்கிறேன் ” என்று சொல்ல ஸர்பங்களும், கத்துருவும் அதன் மீது ஏறி அரைக் கணத்தில் கடற்கரைச் சென்றனர். கத்துரு மகிழ்ந்தாள். சமயம் பார்த்து கருடன் என் தாய் விடுதலை அடைய என்ன செய்ய வேண்டும்? என்றான். இந்திரலோகம் சென்று அமிர்த கலசத்தைக் கொண்டுவா என்றாள். கருடனும் இதோ அமிர்த கலசம் என்று தர்பயைப் பரப்பி அதன் மீது கலசத்தை வைத்துவிட்டுத் தன் தாயை மீட்டுக் கொண்டு போய்விட்டான். ஸ்நானம் செய்த பின் அமிர்தம் அருந்தலாம் என்று சர்பங்கள் குளிக்கச் சென்றன. அந்த சமயம் இந்திரன் கலசத்தை எடுத்துச் சென்று விட்டான். சிதறி இருந்த அமிர்தத்தை சர்பங்கள் ருசிக்க, அவைகளின் நாக்கு இரண்டாகப் பிளந்தது. அந்த நேரத்தில் சாபம் கொண்ட வாசுகியும் மற்ற சர்பங்களும் ப்ரம்மனிடம் சரண் அடந்ததார்கள்.

அவர் வாசுகியின் தங்கையை ஜரத்காரு என்னும் மஹரிஷிக்குக் கல்யாணம் செய்து வையுங்கள், அவர்களுக்கு ஆஸ்திகன் என்னும் மகன் பிறப்பான். அவனால் உங்கள் மரண பயம் நீங்கும் என்று சொன்னார். அதன்படி வாசுகி ஜரத்காருவிற்குத் தங்கையைக் கல்யாணம் செய்து கொடுத்தார். அவர் சொன்னார் அவள் எனக்கு விருப்பம் இல்லாததை எப்பொழுது செய்கிறாளோ அப்பொழுது நான் அவளைப் பிரிவேன் என்றார். ஒரு நாள் நான் இப்பொழுது தூங்கப் போகிறேன். என்னை எந்த காரணத்திற்காகவும் எழுப்பாதே என்றார். மாலை வந்தது. சந்த்யாவந்தனம் செய்ய வேண்டுமே? அது தர்மம் ஆயிற்றே என்று அவரை எழுப்பினாள். மஹரிஷி கோபம் கொண்டு சொல்லை மீறி விட்டாய். நான் போகிறேன். நீ உன் தமயனிடம் போ! என்றார். அவள் சொன்னாள் நமக்கு இன்னும் சந்தான பாக்யம் கிடைக்கவில்லையே? என்றாள். அவர் “அஸ்து” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். இவள் வாசுகியிடம் மீண்டும் போனாள். பத்தாவது மாதம் குழந்தை பெற்றாள். தந்தை “அஸ்து” என்றதால் ஆஸ்திகர் எனப் பெயர் கொண்டார். இவரின் தாய் சர்பத்தின் வம்ஸம் அல்லவா?அதனால் ஸர்பங்களைக் யாகத்தில் விழுந்து இறக்காமல் காப்பாற்றினார். சில ஸர்பங்கள் யாகத்தில் இறந்ததற்கு அவைகளின் அன்னையான கத்துருவின் சாபமே காரணம். சில ஸர்பங்கள் பிழைத்ததற்குக் காரணம் ப்ரம்மாவின் அனுக்ரஹமே. அதனால் ஆஸ்திகரிடம் உனக்குக் கோபம் வேண்டாம.

அவரை பூஜிப்பாய் உனக்கு நன்மை உண்டாகும் என்றார். நீ பல புண்ணிய கர்மங்களும் தானம் ,தர்மங்கள் செய்தும் உன் தந்தை ஸ்வர்கம் அடையவில்லை. அதனால் தேவிக்கு கோவில் கட்டி ஆராதனைகள் செய்தால் சகல சம்பத்தும் கிடைக்கும். தேவி பாகவதம் கேட்பது யாகம் செய்யும் பலனைத்தரும். மனதில் தேவியை நினைப்பவன் பாக்யவான் ஆவான். சகல தேவர்களும் தேவியை ஆராதிக்கின்றனர். இது தேவியினால் விஷ்ணுவிற்கு உபதேசிக்கப் பட்டது. இதைப் படிப்பவரும் கேட்பவரும் எல்லா நன்மைகளும் அடைவார்கள். பித்ருக்களும் ஸ்வர்கம் சேர்வார்கள். எல்லா விருப்பமும் நிறைவேரும் என்று சொன்னார்.

தசகம் 9

புவனேச்வரீ தர்சனம்

1. ஏகார்ணவேSஸ்மின், ஜகதி ப்ரலீனே
தைத்யௌ ஹரிர் ப்ரம்ம,வதோத்யதௌ தௌ
ஜகான தேவி: த்வதனுக்ரஹேண
த்வதிச்சயைவாSS,கமதத்ர ருத்ரஹ

முன் ஒரு காலத்தில் உலகம் முழுவதும் ப்ரளயத்தில் மூழ்கியது. எந்த ஜீவ ராசிகளையும் காணவில்லை. எங்கும் ஒரே ஜலமயம். விஷ்ணுவின் நாபியிலிருந்து தோன்றிய ப்ரம்மன் மட்டும் இருந்தார். ப்ரம்மனுக்குச் சந்தேகம் வந்தது. இந்த ப்ரளயத்தில் நாம் எப்படி உண்டானோம்? இந்த தாமரை எப்படி வந்தது? இதற்கு ஆதாரம் எது? பூமி இருந்தால் தானே தாமரை உண்டாகும்? எனவே முதலில் இந்த பூமியைக் கண்டுபிடிப்போம் என்று நினைத்தார். பல வருங்களாகத் தேடியும் பூமியைப் பார்க்க முடியவில்லை. அப்பொழுது “நீ தவம் செய்” என்ற குரல் கேட்டது. அதன்படி ப்ரம்மன் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து வந்தார். மீண்டும் “நீ ஸ்ருஷ்டி செய் ” என்ற குரல் கேட்டது. எதைச் ஸ்ருஷ்டிப்பது? இங்கு ஏதும் காண்வில்லையே? என யோஜித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென ஒரு பெரும் சப்தம் கேட்டது. கண்முன் மது கைடபர்கள் நின்றுகொண்டு ப்ரம்மனை வலுச் சண்டைக்கு இழுத்தனர். ப்ரம்மன் பயந்து நடுங்கி, தாமரைத் தண்டை பிடிதுக் கொண்டு இறங்கி பீதாம்பரதாரியான விஷ்ணுவைப் பார்க்கிறார். அங்கு ஆதிசேஷன் மடியில் உறங்கும் மஹாவிஷ்ணு யோக நித்திரையில் இருந்தார். பலமுறை அவரை அழைத்தும் எழுந்திருக்கவில்லை. அதனால் நித்ராதேவியை த்யானம் செய்தார். நித்ராதேவியிடமிருந்து விடுபட்டு 5000 ஆண்டுகள் மது கைடபர்களுடன் போர் செய்தார். அவர்கள் அழிந்த பிறகு ப்ரம்மனும் விஷ்ணுவும் இருந்த போது ருத்ரனும் அங்கு வந்தார்.

2. ஏகோ விமானஸ்,தரஸாSSகத: காது
த்ரிமூர்த்ய – விஞாத கதி ஸ்வதீயஹ
த்வத்ப்ரேரிதா, ஆரு,ருஹு ஸ்தமேதே;
ஸ சோத்பதன் வ்யோம்,னி ச,சார சீக்ரம்

மும்மூர்த்திகள் மூவரும் அசுரர்களை அழித்த மகிழ்ச்சியில் இருக்கும் போது, தேவி அவர்கள் முன் தோன்றி ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகியவற்றைச் செய்யும்படி அனுக்ரஹம் செய்தாள். எங்கும் ஒரே ஜலமயம். ப்ரஜைகள் யாருமே இல்லை எப்படி ஸ்ருஷ்டிப்பது? என்று கேட்டார்கள். தேவி புன்னகை செய்தாள். அப்பொழுது ஆகாஸத்திலிருந்து திடிரென ஒரு விமானம் வந்து இறங்கியது. யாருமே எதுவுமே இல்லாத இந்த இடத்தில் இந்த விமானம் எப்படி வந்தது என்று ஆச்சர்யத்துடன் பார்க்கும் பொழுது, அன்னை பகவதியானவள் “இதில் ஏறிக் கொள்ளுங்கள் அற்புதங்களைக் காட்டுகிறேன்” என்றாள். அந்த பகவதியைத் த்யானித்து மிக அழகான அந்த விமானத்தில் மும்மூர்த்திகளும் ஏறி அமர்ந்தனர். தேவி தன் சக்தியினால் விமானத்தை மேலே எழுப்பினாள்.

3. வைமானிகாச்சோத்,கதய: ஸசக்ரம்
திவம் ஸபத்மோத், பவஸத்ய லோகம்
ஸருத்ர,கைலாஸ,மமீ ஸவிஷ்ணு
வைகுண்ட மப்யுத்,புளகா அபச்யன்னு

மனோவேகத்தை விட வேகமான அந்த விமானம் ஒரு இடத்தில் நின்றது. அங்கு பூமி, புஷ்பங்கள். குயில்கள், மரங்கள், வனம், நதிகள்,, புருஷர்கள், பெண்கள், ஆறுகள், மிருகங்கள், யக்ஞசாலைகள் அனைத்தும் பார்த்தனர். அங்கு பாரிஜாத மர நிழலில் காமதேனுவும், ஐராவதமும், மேனகை முதலிய அப்ஸரஸுக்களும், கந்தர்வர்களும், இந்திரன், வருணன், குபேரன், யமதர்மன், சூரியன், அக்னி ஆகியோர் இருந்தனர். ஆகா! இது ஸ்வர்கமல்லவா? இதை யார் நிர்மாணம் செய்தது என்ற சந்தேகம் வந்தது. அதற்குள் விமானம் வேறு ஓர் இடத்திற்குச் சென்றது. அங்கு சத்ய லோகமும், ப்ரம்மன் சபையும், அந்த சபையில் சர்வ தேவதைகளாலும் நமஸ்கரிக்கக் கூடிய ப்ரம்மனும் இருந்தான். கடல், நதிகள் மலைகள், தேவ ஸர்பங்கள் ஆகியவைகளும் இருந்தன. அந்த ப்ரம்மன் நான்கு தலைகளை உடையவராக இருந்தார். இந்த ஸ்ருஷ்டி கர்த்தா யார்? நாம் காண்பது கனவா? நிஜமா? என்று இப்படி யோஜிக்கும் போது விமானம் வேறு இடத்திற்குச் சென்றது. அங்கு யக்ஷர்கள், கிளி, குயில், வீணை, மிருதங்கம் போன்றவைகளின் இனிமையான சப்தத்தால் மிக மிக ரமணீயமாக இருந்தது. அதுவே கைலாஸம். அங்கு ஐந்து முகம் உடைய சிவன் வினாயகர், சுப்ரமண்யன், நந்திதேவர், பூதகணங்கள் ஆகியவர்களுடன் இருந்தார். பின் விமானம் வைகுண்டம் சென்றது. அங்கு விமானத்தில் இருந்த நாராயணன், பீதாம்பர தாரியாக, நான்கு கைகளுடன், ஆபரணங்கள் அணிந்து கொண்டு, லக்ஷ்மிதேவி சாமரம் வீச, கருட வாகனத்தில் இருந்தார். நாம் தான் த்ரிமூர்த்திகள் என்று நினைத்தோமே இங்கும் இருக்கிறார்களே இப்படியும் இருக்குமா? என்று ஆச்சர்யப்படுகிறார்கள்

4. அத்ருஷ்ட பூர்வானி தராம் ஸ்திரிமூர்த்தீன்
ஸ்தானானி தேஷாம், அபி த்ருஷ்டவந்தஹ
த்ரிமூர்த்தயஸ்தே ச, விமோஹமாபுஹு
ப்ராப்தோ, விமானச்ச, ஸுதாஸமுத்ரம்

இப்படி ஸ்வர்கம், ஸத்ய லோகம், கைலாஸம், வைகுண்டம் என்று இவைகளைப் பார்த்து ஆச்சர்யத்துக் கொண்டு, நாம் எங்கே போகிறோம் என்பது தெரியாமல் இருக்கும், போது விமானம் பாற்கடலை அடைகிறது.

5. த்வத்ப்ரூல,தாலோல, தரங்கமாலம்
த்வதீயமந்தஸ்,மித சாருஃபேனம்
த்வன்மஞ்சுமஞ்சீர, ம்ருது ஸ்வநாட்யம்
தவத்பாதயுக்மோபம, ஸௌக்யதம் ச

அந்த பாற்கடலில் அங்கும் இங்கும், முன்னும் பின்னும் அசையும் அலைகளைப் பார்த்தால் அன்னையின் புருவம் போலவும், நீர்க்குமிழிகளைப் பார்த்தால் தேவியின் சிரிப்பு போலவும், அந்த அலை ஓசைகள் தேவியின் பாத சிலம்பொலி போலவும் இருந்ததாம். தேவியின் பாதத்திற்கு எத்தனை சிறப்பும் பெருமையும் உன்டோ அவை அனைத்தும் பாற்கடலுக்கும் உண்டு.

6. தந்மத்யதஸ்தே, தத்ருசுர் விசித்ர
ப்ராகாரநாநாத்ரு,லதாபரீதம்
ஸ்தாநம் மணித் வீபம் அத்ருஷ்ட பூர்வம்
க்ரமாத் சிவே! த்வாம் ச ஸகீஸமேதாம்

இந்த ஸ்லோகம் சொல்ல வேண்டும்.

ஓம் பாலார்க்க -ரவித்யுதி-மிந்துகிரீடாம்
துங்ககுசாம் நயனத்ரயயுக்தாம் |
ஸ்மேர-முகீம் -வரதாங்குச’ பாசாம்-
பீதிகராம் ப்ரபஜே புவனேசீம் ||

அமிர்த கடலின் நடுவில் மணித்வீபம் என்னும் ஒரு தீவு. அதைச் சுற்றி 18 கோட்டைகள். அதன் நடுவில் நான்கு மண்டபங்கள் இருக்கின்றன. சிருங்கார மண்டபம், முக்தி மண்டபம், ஞான மண்டபம், ஏகாந்த மண்டபம். அந்த ஏகாந்த மண்டபத்தில் சிவவடிவமான ஒரு கட்டில். அந்த கட்டில் பரம அற்புதமாகவும், மங்களகரமாகவும், கோடிசூர்ய ப்ரகாஸத்துடன் ஜ்வலித்தது. அதில் மிக மிக அழகான ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள். அவள் சிவந்த நிற வஸ்த்ரம், சிவந்த கண்கள், கோடி மின்னலைப் போன்ற தேஜஸ், சிவந்த அதரங்கள், கோடி ல்க்ஷ்மிகளும் கூட ஈடாக முடியாத மங்களத்துடன், அபயம், வரதம், பாசம் அங்குசம் ஆகியவைகளைக் கொண்ட நான்கு கைகளுடன், ஹ்ரீம் காரமான சக்தி பீஜத்தைச் சொல்லும் பட்க்ஷிக் கூட்டத்துடன், ஸ்வர்ண மயமான கேயூரம், அங்கதம், ரத்னாபரணங்களை அணிந்தவளாகவும், ஸ்ரீசக்ரரூபமான காதணிகளை அணிந்தவளாகவும், ஹ்ருல்லேகை, புவனேசி என்னும் என்னும் பெயர்களைக் கொண்டவளாகவும், தேவ கன்னிகைகளால் சூழப்பட்டவளாகவும், எண்கோண வடிமான ஸ்ரீச்க்ர பீடத்தில் அமர்ந்திருந்தாள். அன்னையைப் பார்த்த மும்மூர்த்திகளுக்கும் யார் இந்தப் பெண்? மிகவும் அழகாக இருக்கிறாளே? ப்ரம்ம விஷ்ணு சிவன், ருத்ரர் அனைவரும் வணங்குகிறார்களே என ஆச்சர்யப்பட்டனர்!

7. ஞாத்வா த்ருதம் த்வாம் ஹரிராஹ – “தாதஹ!”
த்ரிநேத்ர! தந்யா வயமத்ய நூநம்;
ஸுதாஸமுத்ரோSய; மநல்பபுண்யைஹி
ப்ராப்யா ஜகந்மாத்ரு,நிவாஸ பூமிஹி

எங்கும் நிறைந்தவளும், அல்பமதி உடையோர்களால் அறியமுடியாதவளும், யோகத்தால் அறிய கூடியவளும், புண்ணியம் செய்யாதவர்களால் வணங்கக் கூட முடியாதவளும், எல்லாவற்றிற்கும் ஆதியானவளும், ப்ரளய காலத்தில் அனைத்தையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு விளையாடுபவளும் ஆகிய இவள் மஹாமாயா. மஹாபூஜ்யா. இச்சா சக்தியும் அவளே. பராசக்தியும் அவளே. நித்யமும் அநித்யமும் அவளே. ஸர்வ பீஜ ஸ்வரூபிணி. அன்னையைச் சுற்றி இருக்கும் சக்திகள் அனைத்தும் தேவின் அம்சமே. நாம் பூர்வ ஜன்மத்தில் செய்த தவத்தின் பலனே இந்த ஸ்வரூப தரிசனம் நமக்குக் கிடைத்தது என்று நினைத்தனர்.

8. ஸா த்ருச்யதே ரா,கிஜனை ரத்ருச்யா
மஞ்சே நிஷண்ணா, பஹுசக்தியுக்தா;
ஏஷைவ த்ருக; ஸர்வ,மிதம் ச த்ருச்ய,
மஹேதுரேஷா கலு ஸர்வஹேதுஹூ

புண்யம் செய்தவர்களுக்கு மட்டும் தான் மங்கள ஸ்வரூபியான இந்த தேவி தரிசனம் கிடைக்கும். அன்னையின் கட்டிலின் 4 கால்களாக ஸ்ருஷ்டி கர்த்தாவான ப்ரம்மா, ஸ்திதி கர்த்தாவான விஷ்ணு, ஸம்ஹார கர்த்தாவான ருத்ரன், திரோதன கர்த்தாவான ஈஸ்வரன். இதற்கு மேல் உள்ள பலகை சதாசிவ ப்ரம்மம். இதன் மேல் தேவி அமர்ந்திருக்கிறாள். இந்த ப்ரபஞ்சத்தின் இரண்டு கரங்கள் த்ருஷ், த்ருஷ்யம் ஆகும். த்ருஷ் என்பது கண்ணால் காண்பது. த்ருஷ்யம் என்பது அனுபவத்தால் உணர்வது. தன் மாத்திரைகள் 5. சப்தம் என்பது தன் மாத்திரை. அதைக் கேட்க முடியும். ஆனால் பார்க்க முடியாது. அது போல் ருசியை உணர முடியும் பார்க்க முடியாது. இந்த த்ருஷ்யம் மாறலாம் ஆனால் த்ருஷ்டிகள் மாறாது. அதைப் போல் நாம் தேவியை மனதில் காணலாம். நாம் எப்படி நினைக்கிறோமோ அப்படிப் பார்க்கிறோம். ஆனால் கண்ணால் பார்க்க முடியாது. அந்த தேவியே அனைத்திற்கும் காரணம்.

9. பால: சயானோ வடபத்ர ஏக
ஏகார்ணவேSபச்யம்,இமாம் ஸ்மிதாஸ்யாம்;
யயைவ மாத்ரா, பரிலாளிதோSஹ
மேநாம் ஸமஸ்தார்த்தி,ஹரம் வ்ரஜேமா.

உலகம் முழுவதும் ப்ரளயத்தில் மூழ்கி இருக்கும் போது விஷ்ணு மட்டும் ஒரு சின்ன அரச இலையில் படுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது தேவி ஒரு குழந்தையின் தொட்டிலை ஒரு தாய் ஆட்டுவது போல் ஆட்டினாள். எந்த ப்ரளயமும் இவளை பாதிக்கவில்லை. அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே மஹாவிஷ்ணு இதுதான் நம் அன்னை என்று நினைத்தாராம். இந்த சத்யத்தை அனுபவ பூர்வமாக உணர்ந்தவர் விஷ்ணுமட்டுமே.

10. ருத்யாமஹே த்வாரி, யதி ஸ்துவாமஹ
ஸ்தத்ர ஸ்திதா ஏவ வயம் மஹேசீம்:
இத்யச்யு,தேனாபி,ஹிதே விமாநஹ
ஸ்த்வத்கோபுர த்வாரம்,அவாப தேவி

மும் மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு சொல்கிறார் “நாம் இந்த தேவியின் சந்திதானத்தை அடைந்து நமஸ்கரிப்போம். இந்த மஹாமாயா ஸ்வரூபிணியான தேவியின் பாதத்தின் அருகில் சென்று ஸ்தோத்திரம் செய்வோம். ஒரு சமயம் அன்னையின் தோழிகளான துவார பாலகிகள் தேவியின் அருகில் போக முடியாமல் நம்மைத் தடுத்தால், அங்கேயே நின்று கொண்டு ஒரே சித்தமாக அன்னையின் ஸ்தோத்ரங்களைப் படிப்போம்” என்றார்.

11.ஆயாம்யஹம் சித்த,நிரோதரூப
விமான,தஸ்தே பதமத்,விதீயம்
ந கேநசித் ருத்த,கதோ பவானி;
த்வாமேவ மாதஹ! சரணம் வ்ராஜாமி

ஏகாந்த த்யானம் என்னும் விமானத்தில் ஏறிச் சென்றால் தேவியிடம் போக முடியும். அதற்கான முயற்சியை இப்பொழுதே தொடங்குங்கள். தடைகள் வரக் கூடாது என்று அன்னையைச் சரணம் அடையுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது விமானம் கோபுர துவாரத்தை அடைகிறது.
ஒன்பதாம் தசகம் முடிந்தது

தசகம் 10

சக்தி ப்ரதானம்

1. ததோ விமாநா,தஜ விஷ்ணுருத்ராஹா
த்வத் கோபுர த்வார்ய, வருஹ்ய ஸத்யஹ
ஸ்த்ரிய: க்ருதாதேவி தவேச்சயைவ
ஸவிஸ்மயாஸ், த்வந்,நிகடம் ஸமீயுஹு

தேவியை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலுடனும் சந்தோஷத்துடனும், கோபுர துவாரம் அருகில் வந்தனர் மும்மூர்த்திகள். அவர்களை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. அப்பொழுது தேவி கோபுர துவாரத்தை அடைத்து விட்டு அவர்கள் மூவரையும் பெண்ணாக மாற்றினாள்.

2. க்ருதப்ரணா மா.ஸ்தவ பாதயுக்ம-
-நகேஷு விச்வம் ப்ரதி பிம்பிதம்தே
விலோக்ய ஸாச்சர்யம், அமோக வாக்பிஹி
ப்ருதக் ப்ருதக் துஷ்டு,வு ரம்பிகே த்வாம்

பெண்ணாக மாறிய அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ஆச்சர்யமடைந்தனர். இது தேவியின் கருணையே என்று நினைத்து தேவியை நமஸ்கரித்தனர். அப்பொழுது கண்ணாடி போன்ற அன்னையின் பாத நகத்தில் ப்ரம்மாண்டங்களையும், ப்ரம்மாதி தேவர்கள் மூவரையும், அண்ட சராசரங்களையும், இந்த்ரன் வாயு, அக்னி, நாரதர், மேருமலை மற்றும் தாமரைமலரில் நான்முகனை சத்யலோகத்திலும், விஷ்ணுலோகத்தில் ஆதிசேஷன் மேல் மஹாவிஷ்ணுவையும், கைலாயத்தில் ருத்ரனையும், மற்றும் மது கைடபர்கள் ஆகிய அனைத்தையும் கண்டு ஆச்சர்யமடைந்தனர். அன்னையின் பாத தரிசனத்தில் அற்புதங்களைக் கண்டபடியே 100 வருடங்கள் ஆயிற்று. ஒருநாள் மஹாவிஷ்ணு தேவியை துதிக்கத் தொடங்கினார். மூலப்ரக்ருதியாகிய தேவியே! உனக்கு நமஸ்காரம். சித்தியும் நீயே! விருத்தியும் நீயே! உனக்கு நமஸ்காரம் நமஸ்காரம். உன் பாதத்தில் கண்ட காட்சியினால் நீயே ஸர்வ ப்ரபஞ்ச ஸ்வரூபிணீ என அறிந்தேன். மது கைடபரிடமிருந்து எங்களை காப்பாற்றியது நீயல்லவா? உன்னுடைய இருப்பிடமான மணித்வீபத்திற்கு வந்ததும் எங்களுக்கு ஏற்பட்ட பரமானந்தத்தை எப்படிப்பட்டது என்று சொல்ல முடியாது.

அது எல்லையில்லாத ஓர் ஆனந்தம். உன்னுடைய தரிசனம் மஹாப்பெருமை உடையது. நாங்கள் தான் மும்மூர்த்திகள் என நினைத்திருந்தோம். ஆனால் உன் நகத்திலே மும்மூர்த்திகளைப் பார்த்தோமே! அவர்கள் வேறு நாங்கள் வேறா? எல்லாம் ஒன்றா? எங்களுக்கு ஒன்றும் புரியவில்லையே? இதை எப்படித் தெரிந்து கொள்வது? புத்திமான்களிடம் நீயே புத்தியாகவும், சக்திமான்களிடம் நீயே சக்தியாகவும் இருக்கிறாய். வைராக்யம், செல்வம், கீர்த்தி, அழகு, சந்தோஷம் அனைத்துமே நீயாக இருக்கிறாய். இவைகள் அனைத்தையும் தருபவளும் நீதான். நீ மஹாவித்யா ஸ்வரூபிணீ. உன் பாதங்களில் நான் நமஸ்கரிக்கிறேன். சர்வ மங்களத்தையும் தரக்கூடிய மங்கள ரூபிணியே! உன்னை சரணாகதி அடைகிறேன் எனக்கு அகண்டஞானத்தைத் தருவாயாக! என்று தேவியை வணங்கினார்.

அடுத்து ருத்ரன் துதிக்கிறார். ஹே! சிவே! உன்னுடைய மூன்று குணங்களே ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் மூன்றிற்கும் காரணம். உன்னால் உண்டாக்கப்பட்ட மூன்று உலகங்களுக்கும் நாங்களா காரணம்? ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் அனைத்தும் உன் சக்தியே! விமானத்தில் நாங்கள் கண்ட உலகங்களை நாங்களா படைத்தோம்? பவானி! நீயே சொல்! எங்களைப் பெண்ணாக மாற்றியதால் அல்லவா உன் பெருமைகளை நாங்கள் அறிந்தோம்? ஜனன பந்தத்தை நிவர்த்தி செய்யும் உன் பாத தரிசனம் கிடைக்கப் பெற்றோம். யாகம் செய்வதாலோ, தவம் செய்வதாலோ, சமாதி நிஷ்டைகளினாலோ ஒருவன் முக்தி அடைய முடியாது. ஆனால் உன் பாதத்தை அலம்பிய நீரை உட்கொள்பவனுக்கு நிச்சயம் முக்தி கிடைக்கும். அதனால் உனக்கு என்னிடம் கொஞ்சமாவது கருணை இருந்தால் நவாக்ஷரமந்திரத்தை எனக்கு உபதேசம் செய். என்னைக் கரையேற்றுவாய் என வேண்ட அன்னையும் உபதேசம் செய்தாள். ருத்ரரும் காமத்தைப் போக்கி மோக்ஷத்தை அளிக்கும் அந்த நவாக்ஷரி மந்திரதை பீஜாக்ஷரத்துடன் பேரானந்தத்துடன் ஜபிக்க ஆரம்பித்தார்.

அடுத்து ப்ரம்மன் துதிக்கிறார். ஹே அம்ப! நான்கு பிரிவினை உடைய ஸர்வ ப்ரபஞ்சத்தையும் உன் கடைக்கண் பார்வையில் உண்டாக்கும் சக்தி கொண்டவள் நீ! என்னிடம் எதற்குப் படைக்கும் தொழிலைத் தரவேண்டும்? உனக்கு சாமர்த்யம் இல்லையா? மது கைடபர்கள் யுத்தத்தில் விஷ்ணுவால் தன்னைக் காத்துக் கொள்ள முடிந்ததா? அல்லது ருத்ரரால் கொல்ல முடிந்ததா? நீதானே எங்களக் காத்து அவர்களைக் கொன்றாய். நீ ஜனனம் மரணம் இல்லாத ஆதி என்பது உண்மைதான். ஆனால் தனக்கு மேல் ஒரு கடவுள் இல்லாதவராகவும் நித்யானந்தராகவும் இருக்கும் பரமசிவன் உன் லீலா வினோதங்களை ஆனந்தமாக பார்க்கிறார் என்று மெய்ஞானிகள் கூறுகிறார்கள். மாயா ஸ்வரூபிணியான நீயும் மாயாதீதரான பரமசிவனையும் தவிர மூன்றாவதாக யாரும் இல்லை என்பதே உண்மை. ஆனால் இது வேத வாக்யத்தைப் பொய் ஆக்குகிறதோ என்ற சந்தேகம் வருகிறது.

வேதம் பரமசிவமானது “ஏகமேவாத்விதீயம்” என்று சொல்கிறது. ப்ரம்மம் ஒன்றுதான் என்று சொல்கிறது. அப்படியானால் அது நீயா? பரமசிவமா? நீ ஆணா? பெண்ணா? அப்பொழுது அன்னை சொல்கிறாள்” நீங்கள் உள்ளே வரும் போது என்னை தேவீ என்ற உணர்வோடு வந்ததால் என்னை சக்தியாகப் பார்க்கிறீர்கள். என்னை சிவன் என்ற உணர்வோடு வந்திருந்தால் சிவனாகப் பார்த்திருப்பீகள். இந்த உண்மையை உங்களுக்கு உணர்த்தவே இந்த நாடகம். சிவனும் சக்தியும் ஒன்றே” என்று சொன்னாள். உலக ஸ்ருஷ்டி ஆரம்பிக்கும் காலத்தில் ப்ரம்மா அன்னையின் ஆணைப்படி ஆணாகவோ பெண்ணாகவோ படைக்கிறார். ஸ்ருஷ்டியில் பேதம் இருக்கிறது. ஆனால் இறுதியில் லயம் அடையும் போது ஆண் பெண் என்ற வித்யாசம் இல்லை. அனைத்தும் ஒன்றே. இறந்த பின் செய்யும் சிரார்தங்களில் கூட ஆண் பெண் இருவருக்கும் மந்திரங்கள் ஒன்றே. அறியாமையே பேதத்திற்குக் காரணம்.

3. நுதிப்ரஸன்னா, நிஜஸர்க சக்திம்
மஹாஸரஸ்வத்ய பிதாமஜாய
(ரக்ஷார்த்த சக்திம்- ஹரயே மஹால-
-க்ஷ்ம்யாக்யாம் ச லீலா,நிரதே! ததாத)

ப்ரம்மாவிற்கு ஸ்ருஷ்டிக்கும் சக்தியை அன்னை தருகிறாள். அந்த ஸ்ருஷ்டி சக்தியின் பெயர் ஸரஸ்வதி. அவள் ரஜோ குணம் உடையவள். இவளை உன் மனைவியாகக் கொண்டு, உற்பத்திக்குக் காரணமான உத்பீஜம், அங்கஜம், ஏகஜம், சராயுஜம் ஆகிய நான்கு வகை பீஜங்களைத் தந்து. சத்யலோகம் சென்று, கால, கன்ம (கர்மம்,) சுபாவங்களுக்கு ஏற்ப ஸ்ருஷ்டியைத் தொடங்கு (நம்முடைய அடுத்த ஜன்மத்தை நாம் தான் நிச்சயிக்கிறோம் என்பது இதில் தெரிகிறது). உன்னுடைய ஸ்ருஷ்டிக்குத் தடங்கல் வரும் போது ஹரி அவதரிப்பார். உனக்கு உதவி செய்வார் என்று சொன்னாள். மஹாவிஷ்ணுவிற்கு ஸர்வ சம்பத்தையும் தருகின்ற மஹாலக்ஷிமியைத் தந்தாள். இவள் எப்போதும் உன் மார்பில் வீற்றிருப்பாள். மங்கள ஸ்வரூபிணீ. அனைவராலும் வணங்கக்கூடிய பெருமை கொண்டவள். அனைவரும் என்னிடமிருந்து தோன்றியவர்கள். அதனால் ஹரியும் சிவனும், ஒன்றே. இதை பேதப் படுத்துபவர்கள் நரகத்திற்குச் செல்வர் என்று சொன்னாள். இந்த விஷ்ணு சத்வகுணம் மேலோங்கியவராக பரமார்த்த சிந்தனையுடன் இருப்பார் என்று சொல்லி பீஜாக்ஷரத்தோடு நவாக்ஷரமந்திரத்தை ஜபியுங்கள். இது உங்களுக்கு சர்வ காரிய சித்தியையும் கொடுக்கும். என் முக்குணத்திலிருந்து தோன்றிய நீங்கள் எல்லோராலும் பூஜிக்கத் தக்க கடவுள் ஆவீர்கள் என்று சொன்னாள்.

4. கௌரீம் மஹாகாள்ய, பிதாம் ச தத்வா
ஸம்ஹார சக்திம் கிரிசாய மாதஹ
நவாக்ஷரம் மந்த்ர, முதீரயந்தீ
பத்தாஞ்சலிம் ஸ்தான், ஸ்மித பூர்வமாத்த

மஹாகாளிகௌரி என்னும் சக்தியை சிவனுக்குக் கொடுத்து, கைலாயம் சென்று அவளுடன் இருப்பாயாக! ரஜஸ், ஸத்வ குணங்கள் உம்மிடம் இருந்தாலும் நீர் தமோ குணம் மேலிட்டவராகவே இருப்பீர். ஸ்ருங்கார லீலைகளில் ரஜோகுணமும், அசுர வதத்தில் தமோ குணமும், தபஸ் செய்கையில் ஸத்வ குணமும் கொள்ளல் வேண்டும். உன்னிடம் ஸகுணையாகவும், நிர்குணையாகவும் நான் இருப்பேன். ஆனால் நான் எதற்கும் காரணமாக மாட்டேன். உங்களுக்கு ஏதேனும் இடையூறு வரும் காலத்தில், நீங்கள் என்னை நினைத்தவுடன் நான் வருவேன். ஆதி புருஷரையும் என்னையும் நினைத்தால் காரியம் சித்தியாகும் என்று சொல்லி மறைந்தாள். மது கைடபர் வதத்தில் விஷ்ணுவிற்கு சக்தி தந்தது மஹாகாளிதான். அது தமோகுண சக்தியான புவனேஸ்வரி அவதாரம். ஆனால் இப்பொழுது சிவனுக்கு கொடுத்திருக்கும் மஹாகாளிகௌரி புவனேஸ்வரியின் அம்சம். அம்சத்தில் அவதாரத்தை விடசக்தி குறைவுதான்.

5. ப்ரஹ்மன் ஹரே ருத்ர மதீயசக்தி
த்ரயேண தத்தேன, ஸுகம் பவந்தஹ
ப்ரமாண்ட ஸர்க, ஸ்திதி ஸம்ஹ்ருதீச்ச
குர்வந்து மே சா,ஸநயா விநீதா

ப்ரம்மாவிற்கு உற்பத்தி, விஷ்ணுவிற்கு காத்தல், ருத்ரனுக்கு அழித்தல் ஆகிய தொழில்களைத் தந்தாள். இவர்கள் அன்னையின் கட்டளைகளைச் செய்பவர்களே அன்றி சுதந்தரமானவர்கள் அல்லர். தன்னிச்சையாக எதையும் செய்ய முடியாது. அனைத்தும் அன்னையின் சக்தியே. நம்முடைய கண், காது, வாய், மூக்கு போன்ற எதுவும் அதனதன் வேலைகளைச் செய்ய சக்தி வேண்டும். தேவியின் அருள் வேண்டும். இல்லை என்றால் எதுவும் இயங்காது.

6. மான்யா பவத்பி: கலு சக்தயோ மே
ஸ்யாத் சக்திஹீனம், ஸகலம் வினிந்த்யம்
ஸ்மரேத மாம் ஸந்,ததம் ஏவமுக்த்வா
ப்ரஸ்தாபயாமா,ஸித தாம்ஸ்த்ரீ மூர்த்தீன்

இப்படி மும் மூர்த்திகளுக்கும். சக்தியையும் கொடுத்து, அவர்களை ஆதரவுடன் நடத்த வேண்டும் என்றும் சொன்னாள். பெண்ணிற்கு மரியாதையும் அணுசரணையும் ஆதரவும் கிடைக்காவிட்டால் அந்த குடுபம் விளங்காது. சக்தியும் அங்கிருந்து போய்விடுவாள். மீதமிருப்பது வெறும் ஜடம் தான். பார்வை இல்லாத கண்ணால் என்ன பயன்? கணவனும் மனையும் இணைந்து செயல்பட்டால் குடும்பம் க்ஷேமமடையும். மனைவியே கணவனின் ஜீவநாடி. அவள் இல்லையென்றால் அவனின் பாதி சக்தி போயிற்று. சக்தியால் தானே செயல்பட முடியும். ஆனால் சிவனால் முடியாது. என்னை மறந்தால் நான் உங்களைவிட்டுச் சென்று விடுவேன் என்றும் அன்னை கூறுகிறாள்.

7. நத்வா த்ரயஸ்தே, பவதீம் நிவ்ருத்தாஹா
பும்ஸ்த்வம் கதா ஆ,ருருஹுர் விமானம்
ஸத்யஸ்திரோதா:, ஸ ஸுதாஸமுத்ரோ
த்வீபோ விமானச்ச, திரோபபூவூ

மும் மூர்த்திகள் மூவரும் அவரவர் சக்திகளுடன் தேவியை நமஸ்கரித்துவிட்டு, கோபுர வாசலை விட்டு வெளியே வந்ததும், அவர்கள் மீண்டும் முன்போல் ஆண்களாக மாறினார்கள். மீண்டும் விமானத்தில் ஏறி வந்து கொண்டிருந்த போது, தேவியும், மணித்வீபமும், சமுத்திரமும், விமானமும் அனைத்தும் மறைந்து போனது. இது என்ன அதிசயம் என நினைத்த போது, அவர்கள் முன்பு மது கைடபர்களுடன் எங்கு யுத்தம் செய்தார்களோ, அதே இடத்தில் நின்று கொண்டிருந்தனர்.

8. ஏகார்ரணவே பங்,கஜ ஸன்னிதௌச
ஹதாஸுரே தே, கலு தஸ்திவாம்ஸ:
த்ருஷ்டம்னு ஸத்யம்? கிமு புத்திமோஹஹ?
ஸ்வப்னோ நு கிம்வே,தி ச ந வ்யஜாநன்

நாம் விமானத்தில் சென்றது பொய்யா? நிஜமா? என்பதை அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. இன்னதென்று வருணிக்க முடியாததும், அடைய முடியாததும், எல்லையற்ற மகிமையுடன் கூடிய மஹாமாயா உருவினளாகி இந்த உலகம் முழுவதையும் தேவி திகைக்க வைக்கிறாள்!

9. ததஸ்த்ரயஸ்தே, கலு ஸத்யலோக
வைகுண்ட கைலாஸ, க்ருதாதிவாஸாஹா
ப்ரமாண்ட ஸ்ருஷ்ட்யா,திஷு தத்தசித்தாஹா
ஸ்த்வாம் ஸர்வ,சக்தாம் அப ஜந்த தேவி

மும்மூர்த்திகள் மூவரும் அவரவர் இடமான சத்யலோகம், விஷ்ணுலோகம், கைலாயம் சென்று, அன்னை நம்முடன் இருக்கிறாள் நமக்கு உதவி செய்வாள் என்று, அவரவர் தொழிலைச் செய்யத் துவங்கினர்.

10.ஸுதாஸமுத்ரம் தரளோற்,மிமாலம்
ஸ்தானம் மணித்வீப, மனோபமம்தே
மஞ்சே நிஷண்ணாம், பவதீம் ச சித்தே
பச்யானி தே, தேவி நம: ப்ரஸித

மும்மூர்த்திகள் தேவியைப் பார்த்தது கனவா? நினைவா? யாருக்கும் தெரியாது. நமக்கும் தெரியாது. ஆனால் எதைச் செய்யவும் தேவியின் அனுக்ரஹம் வேண்டும். அதற்கு அந்த தேவியை நாம் உபாசிக்க வேண்டும். அப்போது நம் மனக் கண்ணில் அன்னை தெரிவாள்.

பத்தாம் தசகம் முடிந்தது

Also, read



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 22, 2024
மகா மிருத்யுஞ்சய மந்திரம்
  • டிசம்பர் 2, 2024
உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்
  • அக்டோபர் 23, 2024
சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக்: ஒரு முழுமையான விளக்கம்