- அக்டோபர் 23, 2024
அம்பரத் தோரணங்கள் அவ்வைகறைப் புள்ளினங்கள்
அம்புயன் படைப்பினில் எம்பரும் அதியங்கள்!
எம்பிரான் எழுந்தருள எத்திசையும் சித்தமாய்
எம்மனோர்க்கரனே குழையோனே கண்விழித்தருளாயே! (1)
தீவிழி கொண்ட வானமும் ஒண்ணொளி வீசிட
கூவின கோழிகள் குயில்களும் குழைக்காதாவென்று!
நாவினாலுன் நாமத்தை கூறுவார் கூடிட
பூவிழி கொண்ட குழைக்காதா கண்விழித்தருளாயே! (2)
நிலமிசை உயிர் தரும் குண திசை எழுஞ்சுடர்
மலர்ந்ததே மகிழம்பூ கதிரவன் கணப்பினால்
அலங்கார அணிகலனாய் திண்தோள் சேர்ந்திட!
குலங்காக்கும் குழைக்காதா கண்விழித்தருளாயே! (3)
முதள் விரிந்து மலராகி மலரடிக்கி மாலையாக்கி
முதல்பொழுது மலர்கையில் பேரைவாழ் மங்கையரோ
கோதையாய் நாடினர் தென்பேரை கண்ணபிரானை!
கீதை மொழிந்தவனே ! குழைக்காதா கண்விழித்தருளாயே! (4)
வானவருங் காணவரும் வாணபிரான் மணிவண்ணன்
ஞானந்தரும் பரம்பொருளாய் வீற்றிருக்கும் பேரையில்
கானரசப் பேரையர்கள் காலையில் உன் காட்சி பெற
தீனதயாளா! மகரக் குழையோனே கண்விழித்தருளாயே! (5)
புலரும் பொழுதினில் பசுஞ்சானமிட்டு மெழுகினோம்
கோலமிட்டோம் கோவிந்தா உந்தன் வருகைக்காக!
ஞாலமளந்த அசதியோ அச்சுதனே இப்பேருறக்கம்!
மலரும் வாழ்வுதருங் குழைக்காதா கண்விழித்தருளாயே! (6)
மடியும் இருள் வானும் விடியல் வழங்கிச் சென்றது
மடியுடைய மாட்டினங்கள் பால் நிறைந்தொழுகின !
குடிமையால் பேரையரும் பக்தி நிறைந்தொழுகினர்!
வடிகாதழகனே குழைக்காதா கண்விழித்தருளாயே! (7)
தெள்ளிய பொருனையோ சோம்பலில் சுணங்கிட
களித்திடும் கெளுத்திகள் சோம்பலைத் துறத்திட
சள்ளலில்லா நீரெடுத்து குடத்தினில் சுமக்கிறோம்
குளியல் நீர் கொள்ள குழையோனே கண்விழித்தருளாயே! (8)
கருவறை கதவுகள் இரண்டும் பிரியும் நேரம்
விருப்புடன் வானவர் அடியவர் வைணவர் யாவரும்
ஒருமுறை திருமுகம் கண்டு பொழுதினைத் துவங்கிட
திருபேரை தலங்கொண்ட குழைக்காதா கண்விழித்தருளாயே!(9)
விதலையோ விழித்தது சூழ் வானிருள் வெளுத்திட
மதலைகள் விரைந்தன கோயிற்முன் விளையாட!
கதவுகள் திறந்தன மகரக் குழைகளும் மிளிர்ந்ததே!
உதவிடும் பரந்தாமா! குழைக்காதா கண்விழித்தருளாயே!(10)
நித்திரையில் சொப்பனத்தில் நித்தமும் நீதானோ!
நித்திரை கலைந்பின் முதல் நினைப்பும் நீதானோ!
பித்தனாய் பிதற்றுமிந்த கம்பத்தடியான் கவியில்
உத்திரத்திலுத்த உத்தமனே! கண்விழித்தருளாயே!(11)
– கம்பத்தடியான்
1)அம்பரம் – வானம், 2)வைகறை – அதிகாலை வேளை, 3)அம்புயன் – ப்ரம்மன், 4)எம்பரும் – எவ்விடத்தும், 5)எம்மனோர் – எம்மை போன்றோர், 6)ஒண்ணொளி – பிரகாசமான ஒளி, 7)முதள் – மொட்டு, 8)பேரை – திருப்பேரை/தெந்திருப்பேரை எனும் ஊர், 9)பேரையர்கள் - திருப்பேரை/தெந்திருப்பேரை எனும் ஊரில் வாழும் மக்கள், 10)குடிமை – மேன்மையான ஒழுக்கம், 11)சள்ளலில்லா – சேறு இல்லாத, 12)விதலை – பூமி/நிலம், 13)மதலை – மழலைக் குழந்தை.
Also, read
Our Sincere Thanks:
கம்பத்தடியான் (Sudharsana Srinivasan)
(Email ID: kambathdiayaan@gmail.com or viruvasan@gmail.com)
அருமை அருமை