×
Saturday 28th of December 2024

பகை கடிதல் – ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளியது


Pamban Swamigal Mantra – Pagai Kadithal

ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல்

பகை கடிதல் என்னும் இந்தத் திருப்பதிகத்தை காலை, மாலை பூசித்துப் பத்தி பிறங்கப் பாடுவார் திரு மயில் மீது செவ்வேட்பரமனத் தரிசிப்பர்; பகையை வெல்வர் என ஶ்ரீ பாம்பன் சுவாமிகளாலேயே ஆசீர்வதிக்கப்பட்ட பதிகம் இது!
படிக்கும்போதே, படபடவெனச் சிறகு விரித்து மயில் ஒன்று நம் முன்னே வருவது போல் உணரமுடியும். ஏ! மயிலே! நீ இல்லாமல் முருகன் எங்கும் செல்ல மாட்டானாமே! சரி! உன்னையே அழைக்கிறேன்! நீ உடனே என் முருகனைக் கூட்டிக் கொண்டு வா! என விரும்பி வேண்டிக் கேட்கும் வகையில், சந்தம் கமழத் திகழும் பதிகம் இது!

ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் கீழ் வருமாறு:

திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே
அருமறை புகழுருவே அறவர்கள்தொழுமுருவே
இருள்தபும் ஒளியுருவே எனநினைஎனதெதிரே
குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே. [1]

(விளக்கம்) தெய்வத்தன்மையும் அழகும் மிகுகின்ற ஒளியுருவு உடையவனே! பார்வதியின் திருக்கரத்தில் அமரும் அழகனே! அருமையான வேதங்கள் போற்றும் திருவுருவானே! தவசிகள் வணங்கும் (தவ) மேனியனே! (அஞ்ஞான) இருளைப்போக்கும் (ஞான) ஒளி வடிவமுடையானே என்று தியானிக்கும் என் எதிரில் பறவைகட்கெல்லாம் தலையாய மயிலே! உன் நாயகனைக் கொண்டு வருவாயாக!!

(விசேடம்) திரு – தெய்வத்தன்மை, பேரழகு முதலிய பல பொருளொரு சொல். அறவர்கள் – முனிவர்களுமாம். முருகவேளை அகத்தியர், நாரதர், பராசர புத்திரர்களான ஆறு முனிவர்களும் தொழுதருள் பெற்றனர். இருள்தபும் ஒளியுரு – புற இருள் நீக்கும்சூரியன் போலாது அக இருளையும் ஓட்டும் ஆற்றலுடைய ஒளியுருவினன் என்க. ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி என்பர் நக்கீரர். குருகுகள் – பறவைகள். மயில், முருகவேல் திருவடிகளைத் தாங்கும் தனிச் சிறப்பால் குருகுகள் முதல் எனப்பட்டது. இறைவன் – எல்லா உயிர்களிலும் தங்குபவன். மயிலிறை எனவே, மயிலுக்குத் தலைவனான செவ்வேல் என்றபடி.

மறைபுகழ் இறைமுனரே மறைமுதல்பகருருவே
பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே
இறையிள முக உருவே எனநினை எனதெதிரே
குறைவறு திருமயிலே கொணர்தியுன்இறைவனையே. [2]

(விளக்கம்) வேதங்களால் துதிக்கப்படும் சிவபிரான் திரு முன்பிருந்தே மூல மந்திரப்பொருள் விரித்த குரு வடிவே!! பொறுமை நிறைந்த உலக உருவானவனே! வள்ளியம்மை இருந்த புனத்தில் நடந்த அழகனே! பெருமை மிக்க இளமையான திரு முகமுடையவனே என்று தியானிக்கும் என் எதிரில் எக் குறையினையும் நீக்கும் அழகிய மயிலே! உனது இறைவனைக் கொண்டு வருவாயாக!!

இதரர்கள் பலர்பொரவே இவணுறைஎனதெதிரே
மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா
சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே
குதிதரு மொரு மயிலே கொணர்தியுன் இறைவனையே. [3]

(விளக்கம்) பல கீழ்மக்கள் போரிடும்படி இவ்வுலகில் வாழும் எனக்கெதிரில், புகழப்படும் மிகப்பல் சூரியர் (உதயமோ) என எண்ணும்படி ஒளி வளரும் திருவடியைத் தாங்கும் இடமென்ன (ஊர்தி என) மிகுந்த திறமோடு வரும் மயிலே! பெரிய மலைகள் அதிரும்படி குதித்துவரும் ஒப்பற்ற மயிலே, உனது பெருமானைக் கொண்டு வந்து அருள்க!!

பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே
நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால்
சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே
குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே. [4]

(விளக்கம்) பிறவிக்கேதுவான பாவநெறியொழுகும் மனிதர் முன்னே, இன்புறும் என் எதிரில் நவரத்தினம் பதித்த அணியை நெற்றியிலும், அழகிய வேறு அணிகளைக் கழுத்திலும், அணிந்த பெருமைபொருந்திய திருமயிலே! ஆற்றலோடு உலகத்தையே ஒரு நொடியில் வலமாக வரும் மயிலே! உன் தலைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!

அழகுறு மலர் முகனே அமரர்கள்பணி குகனே
மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே
இழவிலர் இறையவனே எனநினைஎனதெதிரே
குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. [5]

(விளக்கம்) அழகிய மலர்ச்சியுள்ள முகமுடையவனே! தேவர்கள் வணங்கும் குகப்பெருமானே! நீங்கா இளமைத் திருமேனியனே! எல்லோராலும் மதிக்கப்படும் மிகப் பெரிய அறிஞனே! மரணமிலார் (ஞானியர்) தலைவனே! என்று தியானிக்கும் என் முன்னே இளமை விளங்க நிற்கும் மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்து அருள்க!!

இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே
இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே
கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர்
குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே. [6]

(விளக்கம்) மற்றொப்பாரில்லாத அறுமுகனே! இந்திராணி அன்பு கொள்ளும் மருமகனே! கொத்தான மலர் மாலை புரளும் திருத்தோளனே என்று தியானிக்கும் என் எதிரில் கூட்டமான படங்களையுடைய (சேடன்) பாம்பின் வன்மை குன்றும்படி எழும் ஒப்பற்ற (அருட்) குணமுடைய மரகத மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!

எளிய என் இறைவ குகா எனநினைஎனதெதிரே
வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையெனமிடைவான்
பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள்
குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே. [7]

(விளக்கம்) ஏழையாகிய அடியேனது இறைவா! குகா! என்று தியானிக்கும் என் எதிரில்வானவெளியில் சஞ்சரிக்கும் கூட்டங்களாகிய விண்மீன்களை, அழகிய முட்டைகளைப் போல ஒடுங்கிப் பளபளவென்று மின்னுமாறு பல இறக்கையை (தோகையை) விரிக்கும் நீண்ட குளிர்ந்த மணிபோலும் விழி படைத்த மயிலே! உன் இறைவனைக் கொண்டுவந்தருள்வாயாக!!

இலகயில் மயில்முருகா எனநினைஎனதெதிரே
பலபல களமணியே பலபல பதமணியே
கலகல கல எனமா கவினொடுவருமயிலே
குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே. [8]

(விளக்கம்) மேலே விளங்கு மயூர (வாகன) முருக எனத் தியானிக்கும் என் எதிரில் கழுத்தணிகள் பலவும், கலகலவென ஒலிக்கும்படி அழகாய் வரும் மயிலே! விளங்கும் கொண்டையுள்ள மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!

இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே
சுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே
தொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே
குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. [9]

(விளக்கம்) சிவகுமார! என் பகையை ஒழித்தருள்க என்று தியானிக்கும் என் எதிரில் பேரின்ப நிலை கைவந்த முனிவர்களும் அழகிய தேவர்கள் பலரும் துதிக்கவும் தொகுதொகு என்ற தாளத்துடன் தேவ நடனம் செய்யும் மயிலே! குகப்பரமன் வீற்றிருக்கும் மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!

கருணைபெய் கனமுகிலே கடமுனிபணிமுதலே
அருண் அயன் அரன் எனவே அகநினைஎனதெதிரே
மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே
குருபல வவிர்மயிலே கொணர்தியுன்இறைவனையே. [10]

(விளக்கம்) அருள்மழை பொழியும் கருணைமேகமே! கும்பமுனி (அகத்தியர்) வணங்கும் முதல்வனே! அருணகிரி (யை ஆண்டருள்) அறுமுகச் சிவனே என்றெல்லாம் உள்ளத்தில் தியானிக்கும் என் எதிரில் வாசமிக்க மாலை அணிந்த கழுத்தையுடைய மயிலே! மேன்மைகள் பல விளங்கு மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!

(விசேடம்) பாம்பனடிகள் பிரப்பன் வலசைப்பெருந்தலத்தில் 35 நாட்கள் நிட்டைகூடியபோது காளைக் குமரேசன் அவர் திருமுன் அகத்தியர், அருணகிரிநாதர் என்ற இரு முனிவர்களுடன் காட்சி அளித்தான். இப்பாட்டில் அந்த இரு முனிவர்களையும் ஒருசேர அமைத்திருப்பது விசேடமாம். சுவாமிகள் பாடல்கள் சிலவற்றில் தான் இருமுனிவர் திருநாமங்களும் ஒரே பாட்டில் வரும். எனவே, இப்பாடலில் தாம் பெற்ற உபதேசநினைவும் நிழலாடக் காணலாம்.

இதில் பிணி நீக்கும் மருத்துவக் கலைஞர் அகத்தியரும்அருள் நோக்குக்கு உதவும் அருணகிரியாரும் பகை நீக்க அருளும் மயூரநாதனும் வருவது உணர்ந்து மகிழத்தக்கது.

முருகா சரணம்

One thought on "பகை கடிதல் – ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளியது"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 22, 2024
மகா மிருத்யுஞ்சய மந்திரம்
  • டிசம்பர் 19, 2024
ஆண் & பெண் குழந்தைகளுக்கான முருகன் பெயர்கள்
  • டிசம்பர் 2, 2024
உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்