- டிசம்பர் 22, 2024
உள்ளடக்கம்
தூயவன் சாயவன் தூதுழாய் மாயவன்
வேயவன் வேயவள் போற்றிய வாமனன்!
ஆயவள் ஆயவன் ஆநிரை நேயவன்
மேயமில் மேணியன் பாற்கடற் பாயலன்! (12)
புவியளந்த பெருமாளின் படி தாண்டா பத்தினியாம்
பவித்தரை இவளென்று பாரெங்கும் கொண்டாட
மதுரவல்லி மணாளன் எந்தை என்றானபின்
மதுரமாநகருளே ஆதித் தாய் எனக்குந்தாயானாலே! (13)
தூமலர்த் தாமரைக் கரத்தினைக் கொண்டவள்
மாமலை தாங்கிய அழகனை வென்றவள்!
புரட்டாசி பாற்குடமுன் பாதத்தில் சேர்வித்தால்
துருசுடை பேய்மனம் தூமனம் ஆகாதோ! (14)
தீக்குணம் தாங்கித் தீவினைச் செய்திடும்
மாக்களை எல்லாம் போகத்தில் வைக்கிறான்!
மிகுதியாய் பக்தனை சோதிப்பான் சீதரன்
வகுளவல்லித் தாயே இது முறைதானா ? (15)
தருவது போல் பெருவான்! பெருவது போல்
தருவான்! கொடுப்பது போல் கெடுப்பான்!
கெடுப்பது போல் கொடுப்பான்! போதுமே
கூடலழகாவுன் மாயைகளென்றால் விளக்கிடுவான்! (16)
மதங்கத்தின் மணியோசை மாடவீதி எதிரொளிக்க
மத்தகம் பொன் மினுக்க கண்வெறித்த சனம் விலக!
மதலைக் குழாம் ஒன்றோ அம்பாரி அடம்பிடிக்க
மதலைக் குழாம் போல அடம்பிடித்தேன் உன் முகங்காண! (17)
சங்கமும் மத்தளியும் துளைக்கருவி வாத்தியமும்
சங்கீத சாகரம் போல் வளியெல்லாம் தேனிசைக்க!
மங்கல இசை வருகை உன் வரவைச் சொல்லிட!
எங்ஙனம் நான் அறிவேன் உன் சுந்தர முகங்காண! (18)
திரிதண்டம் கையிலேந்தி திருநாமம் நுதல் பரப்பி
பெருங்கோட்டி வருகுதே தமிழ்மறை ஓதியே!
பன்னிருவர் பாசுரம் மாருதப் பயணத்தில்
என்னிருச் செவி புகுதே உன் அழகு முகங்காண! (19)
வையத்தில் அழகெல்லாம் யார் கொண்டு போனதோ ?
வையத்தின் அழகெல்லாம் ஓருருவு கொண்டதோ ?
திருவிழா நாயகன் வியூக சுந்தர ராசனோ வாழ்வினை
மெருகேத்த வீதியுலா வருகிறான்! (20)
அகம்வென்ற அழகனின் முகங் கண்டு நிற்கிறேன்!
சகம் காக்கும் ஒருவனின் முகங் கண்டு நிற்கிறேன்!
யுகங்கண்ட ராசனும் எனைத் தாண்டிச் செல்கிறான்!
சுகங்கண்ட என்னுள்ளம் உடல் மறந்து பின் செல்லுதே! (21)
மாலிருஞ்சோலையில் உளம் கவர்ந்த கள்ளழகனும்
வல்லைசூழ் குழகனாய் நின்ற காட்டழகனும்
கூடல்மாநகரிலே வலம் தருமழகனும்
மூடனாய் இருப்பின் மூவரும் வேறெண்பாய்! (22)
Also, read
Our Sincere Thanks:
கம்பத்தடியான் (Sudharsana Srinivasan)
Email ID: kambathdiayaan@gmail.com or viruvasan@gmail.com
மதுரை கூடல் அழகர் மேல் தொடுத்துள்ள கதம்ப மாலைகள் அனைத்தும் அருமை
பக்திச் சுவையும் தமிழ்ச் சுவையும் சேர்ந்து மிளிர்கின்றன
வாழ்க! வெல்க! வளர்க !
Super arumai thambi 17, 21 paadalkal migavum arumai