- டிசம்பர் 22, 2024
உள்ளடக்கம்
பொய் நீக்கி மெய்க் காட்டி பொற்கிழியறுத்தப் பட்டனை
தெய்வம் நாராயணன் என்றுணர்த்திய விட்டுச்சித்தனை
பட்டத்தானைமிசை யேற்றினான் வல்லபன் -கருடப்புள்ளேறி
விட்டத்தில் தோன்றியது திருக்கூடல் அழகனே! (23)
வாணகன் வானிலே விட்டுசித்தன் காணவே!
மாண்கெழுக் காட்சியை மக்களும் காணவே!
கண்ணூறு கழிக்கவே காலமெல்லாம் நிலைத்திடும்
வைணவ வைரமாய் திருப்பல்லாண்டு பிறந்ததே! (24)
கோரிய வரத்தினை தடையில்லா வழங்கிடும்
காரிருள் கூடற் கோவிந்தன் அழகினை
கூரிய வேல் கொண்ட கலியன் கூறிய
சீரிய பாசுரம் அழகிற்கோர் உவமானமே! (25)
கீர்த்தனைகள் பாடி கண்ணனை கண்டவன்
கிருதமாலா நதியினிலே நீராட வந்தவன்!
வங்கத்து வைணவன் கிருட்ண சைத்தன்யன்
சங்கமாமதுரையில் கூடலழகன் காட்சி பெற்றானே! (26)
வாகாரு தோள் கொண்ட வினதைப் புதல்வனே!
ஆகாயம் பறக்கிராய் அழகனைத் தாங்கியே
சூசகமாய் சுமந்திடு சுந்தரன் சுடர்முகம் வாடாது
கேசவன் பாதங்கள் நோகாது பறந்திடு! (27)
சேவகனாய் பெருமாளை சுமக்கும் புள்ளரசே!
சாவரம் சுமந்திடும் சாமான்ய சீவாத்மா நான்
பரமாத்மன் அழகனை என் சிந்தையில் சுமப்பதால்
இராமனுசன் வழியிலே நானும் சேவகனானேனே! (28)
பாயிரம் பாடியே நற்பாதையைக் காட்டியும்
ஆயிரம் பெயர்யுடை அழகனை மறப்பரோ!
தீயினம் எவ்வினம் உனை மறந்த அவ்வினம்
ஆயினும் அருள்கிறாய் உன் மனம் தாய்மனம்! (29)
கூடுதல் அழகா நீ கூடல் அழகா ? நின்னைப்
பாடுதல் அழகா? நின் பாடல் அழகா? நான்
வாடுதல் அழகா ? நீ பார்பதுமழகா ? நின்னைத்
தேடுதல் அழகா ? திரையின் பின் போவதுமழகா! (30)
போராய் போர்களமாய் என் மனமும் போராடும்
நேராய் வழி நடந்திடவே நின் நிழலையது தேடும்
வாராய் என்னுடனே எந்நாளும் ஒர் துணையாய்
சீராரத் திருக்கூடலமர்ந்த கோவிந்தனே! (31)
வினைப்பயன் அனைத்தையும் விதைப்பவன் அடைகிறான்
வினைப்பயன் அனைத்தையும் படைத்தவன் அறிகிறான்!
வினைப்பயன் துரத்திடும் வியப்பு தான் வாழ்க்கையோ ?
வினைக்கட்டறுத்திட அழகனோ அழைக்கிறான்! (32)
சோகமாகித் துவண்டுபோன நாட்களும் கடந்து போய்
வேகமாகி தாகமாகி உன்னை தேடி தேடியே
இராகமாகி கீதமாகி உன்னை போற்ற வேண்டுமே
தேகமாகி ஏகமாகி உன்னை வந்து சேருமுன்! (33)
Also, read
Our Sincere Thanks:
கம்பத்தடியான் (Sudharsana Srinivasan)
Email ID: kambathdiayaan@gmail.com or viruvasan@gmail.com