×
Wednesday 27th of November 2024

யாதேவி ஸர்வ பூதேஷூ – தேவி மஹாத்மியத்தில் சொல்லப்பட்ட அபூர்வ ஸ்லோகம்


தேவி மஹாத்மியத்தில் சொல்லப்பட்ட அபூர்வ ஸ்லோகம்

சும்பன், நிசும்பன் என்ற அசுரர்கள் தமக்கு அளிக்கப்பட்ட வர பலத்தாலும், இயல்பான அரக்கத்தனத்தாலும் இந்திரன் மீது போர் தொடுத்து, தேவருலகத்தையே அடிமைப்படுத்தினர். தேவர்களின் பொறுப்புகளையெல்லாம் தாமே ஏற்று நடைமுறைப்படுத்தவும் முற்பட்டனர். தம் சுகபோகங்களையும், செல்வங்களையும் இழந்த தேவர்கள், தேவியைத் தஞ்சமடைந்தனர். தங்களை அரக்கர் பிடியினின்றும் காத்தருள வேண்டினர்.

“யார் தம்மை அவர்களது ஆபத்து காலத்தில் துதிக்கிறார்களோ, அவர்களின் துயர் அனைத்தையும் அக்கணமே போக்குவேன்” என தேவி அவர்களுக்கு ஏற்கெனவே வரமளித்திருந்தாள். அதனால் தேவர்கள் மலையரசாகிய இமயத்தை அடைந்து விஷ்ணுமாயாவான பராசக்தியை துதித்தார்கள்.

இத்துதி தேவி மஹாத்மியத்தில் இடம் பெற்றுள்ளது. ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் இத்துதியை பாராயணம் செய்பவர்கள் அனைவரும் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்கிறது தேவி மகாத்மியம்!

deity sri devi image

Ya Devi Sarva Bhuteshu Lyrics in Tamil

யாதேவி ஸர்வபூதேஷு விஷ்ணு மாயேதி ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (01)

எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்தும் விஷ்ணு மாயை உருவில் உறைந்திருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவி ஸர்வபூதேஷு சேதனேத்பிதீயதே
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (02)

எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிலும், தாவரங்களிலும், மரம் செடி, கொடிகளிலும், பறப்பன, ஊர்வன, மிதப்பன மற்றும் மிருகங்கள், மனிதர்கள் என அனைத்து ஜீவராசிகளிலும் உறைந்திருக்கும் உயிர்ச் சத்தாக, ஜீவசக்தியாக, ஆன்மாவாக அமைகிறாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதேவி ஸர்வ பூதேஷு புத்தி ரூபிணே ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (03)

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும் புத்தியாக, ஞானமாக இருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவி ஸர்வபூதேஷு நித்ரா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (04)

இங்கே தூங்குவதற்குக் கூட தேவியைத் தொழவேண்டுமா என்று கேட்கலாம். அந்த நித்திரை கூட அவ்வளவு சுலபமாக அனைவருக்கும் வந்துவிடுகிறதா என்ன? எத்தனையோ பேர் பலவிதமான உபாதைகளால், தூக்கம் வராமல் தவிப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். அப்படி நல்ல தூக்கத்தைக் கொடுக்கக் கூடிய சக்தியாக விளங்கும் தேவியை தினமும் இரவில் நினைத்து நம் கவலைகளை அவளின் பாதத்தில் சமர்ப்பித்தால் அவள் தூக்கத்தின் வடிவில் நம்மை ஆக்கிரமிப்பாள். எந்த தேவியானவள் அனைவரிடத்திலும், எல்லா உயிர்களிடத்திலும் நித்திரை வடிவில் உறைகின்றாளோ, அதன் மூலம் உடல் அயர்ச்சியைப் போக்கிப் புத்துணர்வு தருகின்றாளோ, அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவி ஸர்வபூதேஷு க்ஷுதாரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (05)

மனிதர் மட்டுமின்றித் தாவரங்களுக்கும், மிருகங்களுக்கும், பட்சிகளுக்கும் மற்றும் ஊர்வன என அனைத்து உயிர்களுக்கும் உணவு தேவைப்படுகின்றது. தேவையான சமயத்தில் உணவு கிடைத்தால் மட்டும் போதுமா? அந்த உணவை உண்ணும் அளவுக்குப் பசியும் இருத்தல் வேண்டும் அல்லவா? என்னதான் அறுசுவை உணவை நம் கண்முன் வைத்திருந்தாலும் நமக்கு பசி இல்லை என்றால் சாப்பிடமுடியாது. இந்த உலகத்தில் எதையும் போதும் என்று நாம் சொல்லமாட்டோம். ஆனால் சாப்பாடு மட்டும் வயிறு நிறைந்துவிட்டால் போதும், இனிமேல் சாப்பிட முடியாது என்று கூறுவோம். அப்படி நாம் உயிர்வாழ நமக்கு அத்தியாவசியமான அந்த உணவை உட்கொள்ளத் தேவையான பசி உணர்வு நமக்கு தேவை. எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்திலும் பசி வடிவில் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவி ஸர்வ பூதேஷு ச்சாயா ரூபேண ஸம்ஸ்திதா,
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (06)

எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்திலும் நிழல் வடிவில் பிரதிபிம்பமாய் உறைகின்றாளோ அந்ததேவிக்கு நமஸ்காரம். வெயிலிலும், நிலவிலும் உயிர்வாழ் ஜீவராசிகள் அனைத்திற்கும் பிரதிபிம்பங்கள் தோன்றுவதுண்டு. அந்தப் பிரதிபிம்பமாய் உறையும் தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவி ஸர்வபூதேஷு சக்திரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (07)

எந்த தேவியானவள் சக்தி ரூபமாய் அனைத்து உயிர்களிடத்திலும் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம். நெருப்பில் உஷ்ணம் எவ்வாறு உணரப்படுகின்றதோ, காற்றில் அதன் வலிமை எவ்வாறு உணரப்படுகின்றதோ, வெயிலில் அதன் சூடு எவ்வாறு உணரப்படுகின்றதோ, குளிரில் அதன் வாடை எவ்வாறு தெரிகின்றதோ அவ்வாறு இயற்கையாகவே மனிதரிடம் உள்ள சக்தி உருவாய் தேவி விளங்குகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவி ஸர்வ பூதேஷு த்ருஷ்ணா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (08)

எந்த தேவியானவள் அனைவரிடத்தில் ஆசை அல்லது வேட்கை வடிவில் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம். த்ருஷ்ணா என்றால் பேராசை என்ற ஒரு பொருளும் உண்டு. எனினும் இங்கே குறிப்பிடப்படுவது தேவியை அடைய வேண்டும், அவள் பாதாரவிந்தங்களைத் தியானிக்க வேண்டும் என்று எண்ணும் பேராசையைத்தான். ஆகவே தேவியை அடைய நினைக்கும் பேராசையைத் தோற்றுவிப்பவளும் அவளே என்று வர்ணிக்கப் படுகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவீ ஸர்வபூதேஷு க்ஷாந்திரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யைநமோ நம: (09)

அனைத்து உயிர்களிடத்திலும் பொறுமை வடிவினளாக உறையும் தேவிக்கு
நமஸ்காரம். ஒன்றை அடைய வேண்டுமானால் ஆசை மட்டும் இருந்தால் போதுமா? அதற்காகப் பாடுபடவேண்டும், பொறுமை காக்கவேண்டும். தக்க தருணத்திலேதான் அடைய முடியும். அதுவரை பொறுத்திருக்க வேண்டும். அந்தக் காத்திருப்புக்குக் கைகொடுக்கும் அன்னை பொறுமை வடிவினளாய் வர்ணிக்கப் படுகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவி ஸர்வபூதேஷு ஜாதிரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (10)

எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்திலும் ஜாதி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம். இதை லலிதா ஸஹஸ்ரநாமம் வர்ணாஸ்ரம விதாயினி என்று கூறுகிறது. அவளே வர்ணங்களை வகுப்பவள்.

யா தேவீ ஸர்வ பூதேஷு லஜ்ஜாரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (11)

லஜ்ஜா என்றால் வெட்கம், நாணம் என்று அர்த்தங்கள் வருகின்றன. என்றாலும் இந்த இடத்தில் இதற்கு அடக்கம், பணிவு என்பது பொருந்தும். நாம் செய்யும் தவறுகளுக்கு வெட்கப்படுவதோடு அல்லாமல், நாம்தான் அனைத்தும் செய்தோம், நம்மால் தான் எல்லாம் என்ற நினைப்பும் வரக் கூடாது. அடக்கமாய், பணிவாய், விநயமாய் இருக்கவேண்டும். அத்தகைய கல்விதான் தேவை, இல்லையா? கல்வியால் பெறக்கூடிய இந்த லஜ்ஜை என்னும் உணர்வாய் எந்த தேவி அனைவரிடத்திலும் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவீ ஸர்வ பூதேஷு சாந்திரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யைநமோ நம: (12)

எந்த தேவியானவள் நம் அனைவரிடத்திலும் சாந்தி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம். இங்கே சாந்தி என்பது மௌனம், பொறுமை, பகை தீர்ந்து அமைதி அடைதல் என்ற அர்த்தங்களில் எடுத்துக் கொள்ளலாம். மற்றவர் நம்மிடம் கோபமாய் இருந்தாலோ மன வேறுபாடுகள் இருந்தாலோ அமைதியா இரு என்று சொல்கின்றோம் அல்லவா? அந்த அமைதிதான் இங்கே. மௌனமும் ஒரு மொழியே.
மௌனமாய் இருந்தால் அதைவிடச் சிறந்ததொரு பேச்சு வேறு கிடையாது. அனைத்தையும் உணர்த்தும் மௌனம். மௌனம் கடைப்பிடிக்கப்பட்டால் அங்கே சாந்தி தானாகவே வந்து சேரும். தேவையான சமயங்களில் கட்டாயமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய மௌனம், அமைதி என்ற உருவில் எந்த தேவி உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவீ ஸர்வ பூதேஷு ஷ்ரத்தா ரூபேணஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யைநமோ நம: (13)

சிரத்தை என்பது ஒருமித்த மனத்துடனும் தீவிரமான எண்ணத்துடனும் ஒன்றை அடைய நாம் அக்கறையுடன் எடுத்துக்கொள்ளும் முயற்சியே. எந்த தேவியானவள் நம்மிடம் சிரத்தை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவீ ஸர்வ பூதேஷு காந்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யைநமோ நம: (14)

காந்தி என்றால் ஒளி, வெளிச்சம் என்றும் பொருள். தனிப்பட்ட முறையில் அலங்கரித்துக் கொள்வதையும் குறிக்கும். அந்த அலங்கரிப்பினால் ஏற்படும் தனிப்பட்ட கவரும் தன்மையையும் குறிக்கும். ஆனால், இங்கே ஒளி என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். ஒளி இல்லையேல் உலகில்லை அல்லவா? பகலில் சூரிய ஒளி தேவைப்படுகின்றது. இரவில் மாற்றாக சந்திரன் ஒளி குளுமையாகக் கிடைக்கின்றது.
வெறும் இருட்டு மட்டுமே இருந்தால் என்ன தெரியும்? எதுவும் தெரியாது, புரியாது. நம் அனைவருக்கும் இவ்வாறு ஒளியின் அவசியம் தேவைப்படுகின்றது. அதை உணருவது நம் கண்களே அல்லவா? நம் அனைவருக்கும் அந்தக் கண்களுக்கு ஒளியைத் தரும் தேவியாக உறைபவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவீ ஸர்வ பூதேஷூ லக்ஷ்மி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (15)

உயிர் வாழ அனைவருக்கும் உணவு தேவை, அந்த உணவை எல்லாராலுமா உற்பத்தி செய்ய முடியும்? யாரோ உற்பத்தி செய்கின்றார்கள். நாம் விலை கொடுத்து வாங்குகின்றோம். அதற்குப் பணம் தேவை அல்லவா? பணம் இல்லை எனில் எதையும் வாங்க முடியாது. தேவைக்குத் தக்க பணம் இல்லாமால் ஒருவராலும் இருக்க முடியாது. நாம் ஆசைப்பட்டு சேர்த்து வைக்கும் பணம் இல்லை இது. தேவைக்கான பணமே இங்கே குறிப்பிடப் படுகின்றது. அந்தச் செல்வத்தைத் தருபவள் லக்ஷ்மி தேவி தான். அந்த லக்ஷ்மி தேவி வடிவில் எந்த தேவி உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

யா தேவீ ஸர்வ பூதேஷூ வ்ருத்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: (16)

பொதுவாய் சொத்துக் குவிப்பையும், மேன்மேலும் வட்டி வாங்கிச் சேர்ப்பதையுமே குறித்தாலும், வளர்ச்சியைக் குறிக்கும் இந்த வ்ருத்தி என்னும் சொல்லானது இங்கேயும் நல் வளர்ச்சியை மட்டுமே குறிக்கின்றது. செழிப்பாக இருக்கும் மனிதன், குடும்பத்தையும், குடும்பம் சமூகத்தையும், சமூகம் நகரத்தையும் நகரம், மாவட்டங்களையும், மாவட்டங்கள் மாநிலங்களையும், மாநிலங்கள் நாட்டையும் எவ்வாறு செழிப்பாக்குகின்றதோ, அந்தத் தனி மனிதனின் செழிப்பு, வளர்ச்சி ஒவ்வொருவருக்கும் தேவை. அதைக் கொடுப்பவள் தேவியே. இங்கே வ்ருத்தி வடிவில் உறைகின்ற தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

யா தேவீ ஸர்வ பூதேஷு ஸ்ம்ருதி ரூபேணஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (17)

ஸ்ம்ருதி என்றால் இந்த இடத்தில் திரும்பத் திரும்பச் சொல்லி வேதங்களை நினைவு கூருதல் என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளாமல், நினைவு, சிந்தனை, யோசித்துப் பாகுபாடு அறிந்து புரிதல் என எடுத்துக் கொள்ள வேண்டும். அத்தகையதொரு நல்ல நினைவு நம்மிடம் தேவை அல்லவா? தீயவற்றையே நினைத்தால் மனம் கெடுவதோடு மட்டுமல்லாமல், உடல் நலமும் கெட்டுப் போகுமே! ஆகவே நல்ல சிந்தனையை, நல்ல புத்தியை, நல்லவற்றையே நினைக்கும் மனதைக் கொடுப்பவள் தேவியே. இப்படி அனைவர் மனதிலும் சிந்தனை உருவில், ஸ்ம்ருதியாக உறைந்திருக்கும் தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவீ ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்திதா
நம்ஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (18)

தயை, கருணை, இரக்கம், பரிவு அனைத்துமே இங்கே பொருந்தும். சகல ஜீவ ராசிகளிடத்திலும் கருணை காட்ட வேண்டும். பரிவு காட்ட வேண்டும். எளியோரிடம் இரக்கமும் பரிவும் இருக்க வேண்டும். இந்த தயை அனைவரிடத்திலும் இருந்தாலே நல்லது அல்லவா? தயை உருவில் அனைவரிடத்திலும் உறைந்திருக்கும் தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவீ ஸர்வ பூதேஷு துஷ்டி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (19)

துஷ்டி, திருப்தி, சந்தோஷம். மனதில் போதுமென்ற எண்ணம் இருந்தாலே சந்தோஷம் வரும் அல்லவா? இந்த உலகைப் படைத்த அன்னை உலகிலே மற்ற அனைத்து ஜீவராசிகளையும் மட்டுமல்லாமல், நாம் உண்ணக் கூடிய உணவாகக் காய், கனிகள் என அனைத்தையும் படைத்திருக்கின்றாள். பசு மாடு பால் கொடுக்கின்றது. நாம் கொடுப்பதோ வைக்கோலும், தவிடுமே. மாடு அதிலேயே திருப்தி அடைகின்றது. ‘கறந்த பாலைத் திரும்பக் கொடு’ என்று பசு கேட்டால் என்ன செய்ய முடியும்? பறித்த காய், கனிகளைத் திரும்பக் கொடு என எந்தச் செடி, மரமாவது கேட்கின்றதா?
இல்லையே! நமக்கு எந்த மறுப்பும் காட்டாமல் நம் தேவைக்கு உதவும் இந்தச் செடி, கொடிகளையும், மிருகங்களையும், பறவைகளையும் பார்த்தாவது நமக்குப் போதுமென்ற மனம் வருகின்றதா? வரவில்லையே! இந்தப் போதுமென்ற மனத்தைக் கொடுக்கும் தேவிக்கு, அந்த மனமாக உறைகின்ற தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (20)

அம்மா என்றால் அன்பு, பொறுமை, பாசம், இனிமை. அம்மா என்ற ஒரு வார்த்தையே நாம் அனைவருக்கும் எத்தகையதொரு நிம்மதியையும், பாசத்தையும், ஆறுதலையும் தருகின்றது! எத்தனை வயது ஆனாலும் அம்மா இருந்தால் என்ற எண்ணம் எழுவதையும், அம்மா நினைவு வருவதையும் மறுக்கவோ, மறைக்கவோ முடியவில்லையே! பெண்கள் அனைவரிடமும் தாய்மை சக்தி, உறைந்தே இருக்கின்றது. அதை எவராலும் மாற்றவோ, மறைக்கவோ முடியாது. தேவையான சமயங்களில் தன்னை மீறி வெளிப்பட்டே ஆகும். பட்சிகள் ஆகட்டும், புழு, பூச்சிகள் ஆகட்டும்,
மிருகங்கள் ஆகட்டும் அனைத்திலும் பொதுவாக பெண் இனமே குழந்தை பெறுகின்றது. ஆகவே அந்த அன்னை என்னும் சக்தியாக உறைகின்றவளே தேவிதான். அவளின் சக்தி இல்லை எனில் தாய்மை என்பது கேலிக்கூத்தாக இருக்குமோ?அந்த தாய் வடிவான சக்தியாக உறைந்திருக்கும் அன்னைக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யா தேவீ ஸர்வ பூதேஷு ப்ராந்தி ரூபேணஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யைநமோ நம: (21)

ப்ராந்தி என்றால் சுற்றுதல், ஸ்திரமற்ற தன்மை என்று பொருள்படும். மாயை, என்றும் அர்த்தம் கொள்ளலாம். பூமியின் சுழற்சியை எடுத்துக் கொள்ளலாம். இறை சக்தி இல்லை எனில் பூமி சுற்றுவது எங்கே? என்றாலும் நமக்குத் தோன்றும் மாயையைக் களைய அன்னையின் சக்தி வேண்டுமல்லவா? அந்த மாயையைத் தோற்றுவித்து, அதன் மூலம் நம்மைப் பண்படுத்தி, நல்வழியில் திருப்பி, நம்மைப் பூரண சரணாகதி அடையச் செய்யும், மாயா தேவி என்னும் சக்தியாக இருக்கும் அந்த அன்னைக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

இந்த்ரியாணாம் அதிஷ்டாத்ரீ பூதானாஞ்சாகிலேஷு யா
பூதேஷூ ஸததம் தஸ்யை வ்யாப்தி தேவ்யை நமோ நம:

அனைத்து உயிர்களிடத்திலும் உறைந்திருக்கும் இந்திரியங்களை அடக்கி ஆள்பவளாய் எந்த தேவி உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

சிதிரூபேண யா க்ருத்ஸன மேதத் வ்யாப்யஸ்திதா ஜகத்
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

சைதன்யமாக, ஆன்மா, உயிர், ஜீவன், உணர்ச்சி அல்லது நம் புத்தியை ஆட்டுவிக்கும் சக்தி என்று அந்த உணர்வாய் உறைபவளே, நம் ஆன்மாவே அந்த தேவிதான். அப்படி சகல ஜீவராசிகளிலும் இவ்வாறே நிலைத்து வியாபித்துப் பரவி இருக்கின்ற அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

அனைவருக்கும் என்றும் மங்களமே உண்டாக அந்த சர்வேஸ்வரியைப் பிரார்த்திப்போம்.

🙏 வளர்ச்சியையும், வெற்றியையும் அளிக்கும் தேவிக்கு நமஸ்காரம் 🙏

Also, read



2 thoughts on "யாதேவி ஸர்வ பூதேஷூ – தேவி மஹாத்மியத்தில் சொல்லப்பட்ட அபூர்வ ஸ்லோகம்"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • அக்டோபர் 23, 2024
சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக்: ஒரு முழுமையான விளக்கம்
  • அக்டோபர் 22, 2024
அறுபடை முருகன் அருட்பாமாலை
  • அக்டோபர் 17, 2024
ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் [தமிழில்]