- டிசம்பர் 10, 2024
உள்ளடக்கம்
இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு ஆற்றலுக்கும் தேவையான எதிர்விளைவு உண்டாக்கும் ஆற்றல் உற்பத்தி ஆகிறது என்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொண்டதுபோல, ஆன்மிகமும் இதை ஆமோதிக்கிறது.
“இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை” என்பது போல, உலகில் வாழும் மனிதர்கள்- ஓய்வில்லாமல் உழைப்பவர்கள் அமைதியைத் தேடி கண்களை மூடித் தவமிருக்க ஆசைப்படுகிறார்கள். இது ஒரு இயற்கை தந்த எதிர்விளைவு ஆகும். அசையாது தவமிருந்து ஓய்ந்து கிடந்தவர்கள் ஆன்மா தொலைதூரப் பயணமாக இப்பிரபஞ்சத்தைச் சுற்றி வந்து இயற்கை ரகசிய இன்பத்தை அனுபவிக்கத் துடிக்கிறார்கள். அதாவது, அலைந்து திரிபவர்களுக்கு ஓய்வைப் பற்றிய கவலையும்; ஓய்ந்து கிடப்பவர்களுக்கு பயணிக்கும் கவலையையும் இயற்கை எதிர்விளைவாகக் கொடுக்கிறது. அழகாகப் பிறந்த மனிதன் அருவருப்பு தருகிற வயோதிகம் வந்து இறப்பது ஒரு இயற்கை எதிர்விளைவுதான். காதுக்கு இனிமை தரும் இசைக்கருவிகள் பலவற்றை ஒன்று சேர்த்து இசைக்கும்போது, அனைத்தும் ஒன்று சேரும்போது நமக்கு பிடிக்காத கீச் என்ற எதிர்விளைவுச் சத்தம் உருவாகிவிடும். இது இசை இன்பத்தைக் கெடுத்துவிடும். இதேபோல கடவுள் இன்பம் என்ற தனி ஆற்றல் இப்பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கிறது. அதே போல இணையான எதிர் விளைவைத் தருகிற துன்பப்படுத்தும் ஆற்றலும் இப்பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கிறது.
உலக உயிர்களுக்கு கருணை காட்டி மழையைத் தருவிப்பதும்; விளைச்சலைத் தருவித்து உணவு இன்பத்தைத் தருவதும்; ஒளியைக் கொடுத்து ஞானத்தைப் போதிப்பதும் கூட இயற்கை இன்பமே! அதேபோன்று பூகம்பத்தைத் தந்து பல உயிர்கள் கொலையாவதும்; கொடுங்கோலர்களைப் படைத்து இராஜபக்சாதாபம் இல்லாது உயிர்களை அழிப்பதும்; தீய சக்திகள் ராஜ்ஜியத்தை நடத்தி அழிவு நடத்துவதுமான இயற்கை எதிர்விளைவு சக்தியும் இப்பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கிறது.
பிறப்பைத் தருவது இறையாற்றல் என்றால் இறப்பைத் தருவது இயற்கை எதிர்விளைவு ஆற்றல். இன்பத்தைத் தருபவன் இறைவன்; துன்பத்தைத் தருவது கோள்கள். எதிர்விளைவைத் தருகிற சக்தி எல்லா இடங்களிலும் நிறைந்தே இருக்கிறது. எதிர்விளைவின் பாதிப்பிலிருந்து மீட்டெடுப்பதே ஆன்மிகத்தின் குறிக்கோள் ஆகும். அதற்கு முதலில் எதிர்விளைவைப் பற்றிய விழிப்புணர்வு மிகமிக அவசியம். பிறகு எதிர்விளைவு ஏற்படும்போது அதைத் தாங்கும் வலிமையை உண்டாக்க வேண்டும். குறிப்பாக, பணத்தைத் தேடிப்போகிறவனுக்கு வறுமை என்கிற எதிர்விளைவு உண்டாகும். திருமணம் வேண்டாம் என்று துறந்து விட்டு காட்டுக்குச் சென்றாலும், அங்கு ரஞ்சிதமான அழகு தேவதை வந்து ஆட்கொள்ளும். இதுவும் எதிர்விளைவுதான். புகழைத் தேடிப் போகிறவனுக்கு இகழ்ச்சி பரிசாக வரும். இப்படி எண்ணற்ற எதிர்விளைவுகள் இயற்கையில் மண்டிக் கிடக்கின்றன.
ஆன்மிகத்தில் கரைகண்ட உத்தமர்களாகிய ஞானிகள் வாழ்விலேயே எதிர்விளைவு புகுந்து இன்னல்படுத்தியுள்ளது. ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்ற புத்தரே ஆசைவாய்ப்பட்டு மதத்தை உருவாக்கினார். கவலைகளை ஒழிக்க மார்க்கம் கண்டுபிடித்த ஒரு ஞானிக்கு கவலையால் மாரடைப்பு உண்டாவதுபோல எதிர்விளைவு நடந்தது.
ஆன்மாவிற்குச் சொந்த பந்தம் இல்லை. ஆன்மாவை உணர்வதே ஆன்மிகம் என்று கூறிய ரமண மகரிஷிக்கு- பாசத்தைத் துறந்து திருச்சுழியிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்குப் போன துறவியிடம், எதிர்விளைவு காரியப்பட்டு கடைசியாக தனது மடத்தை தனது தம்பி மக்களிடம் ஒப்படைத்துவிட்டு பாசத்தில் மூழ்கடித்துவிட்ட எதிர்விளைவை எப்படிக் குறைத்து மதிப்பிட முடியும்?
கடவுளுக்கு இணையான சக்திதான் எதிர்விளைவு என்பது. எதிர்விளைவின் நோக்கமே துன்பப்படுத்துவதுதான். இதை அறிந்த ஞானிகள் துன்பப்படுவதையே வாழ்வியல் சுகமாக அமைத்துக் கொள்வார்கள். தினவுநோய் என்கிற ஒரு வகை சொரிசிரங்கு நோய் உள்ளது. இந்த நோய் வந்தால் உடம்பை சொரியக் கூடாது. சொரிந்தால் அதன் மூலம் உடல் முழுவதும் பரவிவிடும். என்றாலும் சொரியச் சொரிய இதமாகவும் இன்பமாகவும் இருக்கும். உண்மையிலேயே சில துன்பங்கள் இன்பமாகத் தெரியும். சில இன்பங்கள் துன்பமாகவே தெரியும். இதில் மனித சமூகம் குழம்பிவிடுகிறது. எதிர்விளைவு என்பது இன்பமும் அல்ல; துன்பமும் அல்ல என ஞானிகள் உணர்ந்ததால், மனிதர்களால் எவை எவை வெறுத்து ஒதுக்கப்படுகிறதோ அவற்றை ஞானிகள் வாழ்வியல் சாதனையாக மாற்றுகிறார்கள்.
அவமதித்தல் என்பதை மனித குலம் விரும்புவதில்லை. வாழ்நாள் முழுக்க ஒரு பைத்தியம் போலவே வாழ்ந்து காட்டினார் மடப்புரம் தட்சிணாமூர்த்தி சுவாமிகள். காரைக்கால் அம்மையார் இறையிடம் வேண்டி பேய் வடிவம் பெற்றார். பட்டினத்தார் அரை நிர்வாணமாகி பிச்சை எடுத்தார். இப்படி பல அடியார்கள் துன்பமான காரியத்தையே வாழ்வியல் சாதனையாகச் செய்து காட்டினார்கள். இவர்களுக்கு எதிர்விளைவு இன்பமான பதிவுகளாக உண்டாகிவிடும்.
இறைவனுக்கு கருணை உள்ளது. எதிர்விளைவு இயற்கையிடம் கருணை என்பது கிடையாது. அது நாம் விரும்பியதற்கு எதிர்மறையான பலன்களைத் தந்துவிடும். அனைத்து ஞானிகளும் துன்பமான வாழ்வியலை உண்டாக்கிய சாதனையாளர்களே! இயற்கை எதிர்மறைவிளைவு நமது வாழ்வை திசை திருப்பக்கூடாது என்பதற்காகவே துன்பத்தைத் தேடித் தேடி அனுபவித்தார்கள். துன்பத்தைச் சுவைப்பவர்களுக்கு இயற்கை எதிர்விளைவு, சில சித்திகளைக் கொடுத்து இன்பம் துய்க்க இடமளிக்கும். பிறகு கடவுள் கருணையால் சித்திகளைப் பயன்படுத்தாது எளிதாக ஈடேற்றம் அடைந்து விடுகிறார்கள்.
ஆன்மிக சாதனைகள் என்பதே துன்பமான வாழ்வை சகித்துத் தாங்கும் வலிமையை உண்டாக்குவதே என்பதை மறந்துவிடக்கூடாது. இறைவனை நேசிக்க நேசிக்க இறைவன் துன்பத்தை அதிகமாக்குவார். எதற்காக என்றால், இயற்கை எதிர்மறை விளைவை பக்தர்கள் சந்திக்கும்போது நிலைகுலைந்து போய்விடக்கூடாது என்ற கருணையே காரணமாகும். இயற்கையிடம் அன்பும் இல்லை; கருணையும் இல்லை; கொடுமையும் இல்லை. இயற்கை ஒரு விதிப்படி இயங்குகிறது. கடவுள் அப்படியல்ல. எட்டு குணத்தோடு இயங்கும் அளவற்ற கருணையாளர். அதேசமயம் இயற்கையோடு முரண்பட்டு நிற்பதையும் இறைவன் விரும்புவது கிடையாது. இயற்கையோடு இறைவன் எப்போதுமே முரண்பட்டு நிற்க மாட்டார். இயற்கை விதியை அறிய வைத்து சாதுர்யமாக தப்பித்து பிரபஞ்ச ஆற்றலோடு ஐக்கியமாக இறைவன் துணையாக இருப்பார்.
பல ஆன்மிக சாதகர்கள், “இறைவனை நினைத்து பயணிக்கும் போது, இறைவன் சந்நிதானத்திலேயே ஏன் ஆபத்து வருகிறது? இதைத் தடுக்க முடியாத இறைவனால் என்ன பயன் விளையப்போகிறது?” என நினைப்பார்கள். இது ஒரு ஞானமில்லாத முரண்பாடு ஆகும். இறைவனை நேசிக்கும்போதே இயற்கையும் முரண்பட்டு எதிர்விளைவு தராதபடி சாதகர்கள் பயணம் செய்ய வேண்டும். அதற்கு ஆன்ம வலிமை என்பது மிக அவசியம். ஆன்ம வலிமை இருந்தால் இயற்கை எதிர்விளைவைத் தரும்போது தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு விலகுவதுபோல விலகிவிடும். கண்ணன் தேர் ஓட்டும்போது அர்ஜுனனுக்கு கர்ணன் மூலமாக இயற்கை எதிர்விளைவு வந்தது. ஆனாலும் கண்ணன் ஒரு கடவுள் என்பதால் தலைக்கு வந்த ஆபத்து தலையில் அணிந்த கிரீடத்தைத் தட்டிக்கொண்டு போய்விட்டது. இப்படித்தான் ஆன்மிகவாதிகளுக்கு ஆபத்து நிகழும்; ஆனாலும் காப்பாற்றப்படுவார்கள்.
இயற்கை எதிர்வினைக்கு வலிமை சேர்ப்பது நல்லோருடைய சாபங்கள், அடுத்தவர் உழைப்பைச் சுரண்டும் ஊழல்கள் போன்றவை. அவையே ஊழ்வினையாக மாறி எதிர்விளைவை உருவாக்கும். அடுத்து முற்பிறவி வினையாலும் எதிர்விளைவு நேரலாம். உதாரணமாக மகாபாரதத்தில் வருகிற விதுரர் மிகமிக நல்லவர். ஆனாலும் துரியோதனன் உணவையே சாப்பிட்டு அவனாலேயே அவமானப்படுத்தப்பட்டார். என்றாலும் கடைசி வரை சகிப்புத்தன்மை, பொறுமை இவற்றை தாங்கி வாழ்ந்தவர். கடைசியாக குருக்ஷேத்ரப் போரில் துரியோதனனுக்கு உதவியாகப் போர் செய்யாமல் தீர்த்த யாத்திரை சென்றுவிட்டார். அதற்குக் காரணம் கடவுளாகிய கண்ணன் விதுரர் வீட்டிற்குச் சென்றவுடனேயே விதுரரின் முன்வினை எதிர்விளைவுகள் விலகிவிட்டன. இதன் மூலம் அறிவது இறை தரிசனத்தால் இயற்கை எதிர் விளைவுகள் முடிவுக்கு வந்துவிடும்.
ஆலய வழிபாடு என்பது வேறு; இறை தரிசனம் என்பது வேறு. ஆலய வழிபாடு என்பது இறை தரிசனம் பெற ஒரு வழி – அவ்வளவுதான். ஆலய வழிபாட்டின் மூலமாகவே அனைத்து எதிர்விளைவுகளிலிருந்தும் தப்பிக்க முடியும் என்று முடிவாகக் கூறவே முடியாது. ஆலயத்தில் உள்ள இறைவன் இதயத்தில் தங்கிப் பிரகாசித்தால் மட்டுமே எதிர்விளைவிலிருந்து தப்பிக்க முடியும். இதனாலேயே ஞானிகள் இதய வழிபாட்டை பெரிதும் போற்றினார்கள்.
ஆலயம் செல்லும்போது ஆபத்து வருவதற்கும்; வாழ்வியலில் சங்கடங்கள், துயரங்கள் வருவதற்கும் நமது வினைகளே காரணம். இதற்கு கடவுள் காரணமல்ல. கடவுள் தண்டித்ததாக கணக்கிடவும் கூடாது. எப்போது எதிர்விளைவுகள் வெல்லப்படுகிறது என்றால், வள்ளலார் கூறியதுபோல, “ஆபத்தை நீக்கி வளர்த்தே சற்றும் அசையாமல் அவியாமல் அடியேன் உள்ளத்தே தீபத்தை வைத்தது பாரீர் திருச்சிற்றம்பலத்தே திருநடஜோதி” என்பார். இந்த நிலைப்பாட்டை எய்த வேண்டும். இதை எய்திவிட்டால் காற்றாலோ புவியாலோ, வேறு எந்த கொலைக் கருவியாலும் மரணம் வராத தன்மை உருவாகும். இயற்கை எதிர்விளைவு வெல்லப்படும்போது இறை ரகசியமும் பிரபஞ்ச ரகசியமும் முழுமையாகக் கொடுக்கப்படும். இதனை உணர்ந்த சாதகர்கள், இதயத்தில் இறைவன் பிரகாசிக்க முயல வேண்டும். நிச்சயம் வெற்றியாளராக மிளிர முடியும்.
முடிவாகக் கூறுமிடத்து – வழிபாட்டுத் தலங்களில் ஆபத்துகள் நேர்ந்தால் கடவுளுக்கு கண் உள்ளதா என்று கண்மூடித்தனமாகப் பேசுவதும்; வழிபடுவதன் நோக்கம் அறிவார்ந்த செயலா, அறிவற்ற செயலா என்று பட்டிமன்றம் நடத்துவதும் முட்டாள்தனமாகும். அரசியல்வாதி மாநாடு நடத்தினால் சாலை விபத்தில் இறப்பவர்களைப் பற்றி எவருமே விவாதம் நடத்துவது இல்லை. ஆலயத்தில் நடந்தால் மட்டும் நாத்திகர்கள் உள்ளம் முதலைக் கண்ணீர் வடிப்பதுபோல சாடுகிறார்கள். இயற்கை எதிர்விளைவு எல்லா மட்டத்திலும் நடக்கும். இதை எதிர்க்கும் வலிமையை இறை நெறியாளர்கள் மட்டுமே பெற்றிருக்கிறார்கள். நெருப்பு எல்லாரையும் சுட்டுவிடும். நெருப்பில் அமர்ந்து ஆடைகூட கருகாமல் சாதனை செய்பவர்கள் பலர் உள்ளனர். இதை இன்டர்நெட்டில் உலகமே கண்டு அதிசயித்தது.
இயற்கையின் எதிர்விளைவை உணர்ந்து அதை வென்று காட்டுவதே உயரிய ஆன்ம சாதனையாகும்.
Also, read