- டிசம்பர் 22, 2024
உள்ளடக்கம்
உணவே மருந்து என்பது அந்தக் காலம். மருந்தே உணவு என்பது இந்தக் காலம். ஒரு பக்கம் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் எத்தகைய கொடுமையான நோயையும் குணப்படுத்தமுடியும் என்னும் நிலை உள்ளது. மறு பக்கம் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. நோயை நீக்கி இன்பத்தைப் பெறுவதற்கு என்ன செய்யலாம்? என்றும் இளமையோடு வாழவும், ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கவும் திருமூலர் கூறும் எளிய வழியைப் பின்பற்றலாம்.
திருமூலர், முதலில் உடம்பைக் குற்றமுடையது என்று எண்ணியிருந்தார். பின்பு இறைவன் குடியிருக்கும் கோயில் தான் உடம்பு என்பதை உணர்ந்து, அதனைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வைப் பெற்றதாக அவரே கூறியிருக்கிறார். மருத்துவமுறை, பார்வதி தேவி பரமசிவன் மூலம் நந்தி தேவருக்கு சொல்லப்பெற்று, அவர் மூலம் திருமூலருக்கு சொல்லப்பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றது. சரி, நோய் மற்றும் மருத்துவமுறையைப் பற்றி திருமூலர் கூறுவதைக் காண்போம்.
உடலில் உயிர் இருக்க வேண்டுமென்றால் புணர்ச்சியைக் குறைத்து உணவை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். அளவான உணவு என்பது, உணவு அரை வயிறு, நீர் கால் வயிறு மற்றும் காற்று கால் வயிறு என்பதே அந்தக் கணக்கு.
உடம்பில் வாதம் மிகுந்தால், எரிச்சல் உண்டாகும். கை, கால், விலாச் சந்து, இடுப்புச் சந்துகளில் மிகுதியான வலி ஏற்படும் என்று கூறியுள்ளார்.யோகத்தை முறையாகப் பயின்றால் வாதம் பித்தம், சிலேத்துமம் சமப்பட்டு, உடல் இளமை பெறும் என்பதைத் திருமந்திரத்தில் கூறியுள்ளார்.
சுவாசம் வாய் வழியாக வந்தால் அது மரணத்திற்கான அறிகுறி. சுவாசம் ஆழமானதாகவும் நீளமானதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அதற்குச் சிறந்த வழி பிராணாயாமம். அதாவது , பிராணனைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்துதல் என்று பொருள். மூச்சுக்காற்றின் இயக்கத்தை நெறிப்படுத்தி இயக்குவதன் மூலம் ஆயுளைக் கூட்டியும், குறைத்தும் மாற்றி நிறுத்த முடியும். மூச்சுப்பயிற்சியில் தேர்ந்தவர்களின் முகம் மலர்ந்திருக்கும், மனம் லேசாகும்,கண்களில் ஒளி இருக்கும்.
பிராண இயக்கத்தைக் கொண்டே ஆயுள் கணக்கிடப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு விரற்கடையளவு சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் அதற்கேற்ப குறையும் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
திருமூலர், கருவின் தோற்றம், வளர்ச்சி, ஆண் பெண் குழந்தைப் பிறப்பு, ஊனத்துடன் குழந்தைப் பிறப்பதற்கான வாய்ப்பு முதலிய செய்திகளையும் திருமந்திரத்தில் கூறியுள்ளார்.
உதாரணமாக, உறவின் போது ஆணிடம் சுவாசம் வலப்பக்கம் இருக்குமாயின் குழந்தை ஆணாக இருக்கும். ஆணிடம் சுவாசம் இடப்பக்கம் இருக்குமாயின் பெண் குழந்தைப் பிறக்கும். ஆண் பெண் இருவருக்கும் நல்ல முறையில் சுவாசம் ஓடினால் அழகான, அறிவான குழந்தைப் பிறக்கும் இதுபோன்றக் கருத்தை இப்பாடலில் கூறியுள்ளார்.
அவர் கூறும் கருத்தில் எத்தகைய உண்மை உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் உடலிலுள்ள வாயுக்களில் ஒன்றான தனஞ்சயன் என்னும் வாயுவினால் கால்வாதம், கூன், சிரங்கு முதலான நோய்கள் உருவாகும். கூர்மன் என்னும் வாயுவினால் கண்ணில் வீக்கம், பூ விழுதல் போன்ற கண் நோய்கள் வரும் என்றும் கூறியுள்ளார்.
திருமந்திரத்தில் குறிப்பிடாத மருத்துவக் குறிப்புகளே இல்லை. இதை மனதில் நிறுத்தி திருமந்திரம் போன்ற பொக்கிஷ நூல்களைப் போற்றிப் பாதுகாப்பதுடன், நேரம் கிடைக்கும் போது படிக்கலாம்.
Also, read
Arumai
Very informative!