- பிப்ரவரி 9, 2024
உள்ளடக்கம்
ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லியவாறு ராம் என்கிற ஸ்ரீ ராம் குமார் ஒரு காலை பொழுதில் தன் கடந்த காலத்தை பற்றி நினைவு கூர்ந்தான்.
தன்னுடைய ஒன்றாம் கிளாசில், அரை பாஸ் செய்ததையும், அதனால் அதே வகுப்பை அடுத்த வருடம் திரும்பி படித்ததையும் நினைவு கூர்ந்தான். அதன் பின்பு தன்னுடைய தாயும், தந்தையும் தன்னை வெறுப்புடன் நடத்தினதையும் நினைவு கூர்ந்தான். அதன் விளைவாக மிகவும் கஷ்டப்பட்டு படித்து அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்பில் முதல் மாணவனாக விளங்கினான்.
அதனால் அவன் தாயும், தந்தையும் ஒரே பிள்ளையான அவன் மீது மிகுந்த அன்பு செலுத்தி வந்தனர். அவன் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்து வந்தனர். வாழ்க்கையும் மிகவும் நன்றாக போய் கொண்டிருந்தது. அவன் விருப்பப்பட்ட படியே கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆனான்.
அம்மா பால் என்ற சத்தம் கேட்டவுடன், சற்றே தன் நினைவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு தன் சுய நினைவிற்கு திரும்பினான்.
என்ன தம்பி தூக்கமா என்று பால் கார கிழவன் தன் காவி பல்லை காண்பித்து இளித்து விட்டு, பாலை அவனிடம் கொடுத்து விட்டு அவன் பதிலுக்கு காத்திராமல் சென்றான்.
ஸ்ரீ ராம் குமாருக்கு தன் மீதே வெறுப்பு வந்தது. அந்த வெறுப்பு, அழுகையை கொடுத்தது. மீண்டும் தன் நினைவில் ஆழ்ந்தான். சென்ற வருடம் தனக்கு பெண் பார்க்க தாயும், தந்தையும் திருச்சி சென்று விட்டு வரும் போது ஒரு விபத்தில் மாண்டதை எண்ணி கதறி அழுதான். பெண் வீட்டார் அதன் பின்பு எந்த தொடர்பையும் வைத்துக் கொள்ள வில்லை. அவ்வப்போது தன்னுடைய இஷ்ட தெய்வமாகிய ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் படத்தின் முன்பு பேசி சற்றே ஆறுதலடைகிறான். அவருமில்லாவிட்டால் தான் இந்நேரம் உயிரோடிருக்கவே முடியாது என்று தனக்குத் தானே பல மணிநேரம் சொல்லிக் கொண்டிருந்தான்.
அப்போது காலிங் பெல் சத்தம் கேட்டு எழுந்தான். வாசலில் அவனின் தூரத்து சொந்தமாகிய மாமா தன் தெத்து பல் பெண்ணுடன் நின்று இருந்தார். அவர் மிகவும் அதிகாரத்துடன் என்ன வீட்டில் யாருமில்லை என்பதால் உனக்கு தூக்கமா என்று எக்காளத்துடன் கேட்டார். அதை கேட்டு அவர் தெத்து பல் பெண்ணும் கெக்கே பிக்கே என்று சிரித்தது. வீட்டுக்கு வருபவர்களை உபசரிக்க யாரும் சொல்லி தர வில்லையா என்று கேட்டு, நான் வந்த விஷயம் என்ன வென்றால், என் பெண்ணை உனக்கு திருமணஞ் செய்து கொடுக்கலாம் என்று இருக்கிறேன் என்றார்.
தான் யோசிக்க சற்று நேரம் வேண்டுமென்றான். அதற்கு அந்த மாமா, ஏதோ போனா போகுது, பையன் அனாதையானாலும் நல்ல வேலையிலிருக்கிறான் என்று நான் வந்தேன், இஷ்டமில்லை என்றால் நேரடியாக சொல்லிவிடு என்றார். அதற்கு, இல்லை மாமா என்னை மன்னிக்கவும். என்னுடைய பெற்றோர் இறந்த துக்கம் இன்னும் தீரவில்லை என்றான். இத்தனை கொழுப்பு ஒரு அனாதை பயலுக்கு ஆகாது என்று கூறி விட்டு வாம்மா போகலாம் என்று தன் பெண்ணை கூட்டிக் கொண்டு சென்றார்.
ஸ்ரீராம் யோசித்து பார்த்தான். தன் பெற்றோர் இருக்கும் வரை அவரின் குறைந்த அந்தஸ்து கருதி தன் வீட்டின் பக்கமே வராதவர் இப்போது வந்து தன்னை திட்டி விட்டு செல்வதை எண்ணி வேதனை அடைந்தான். மீண்டும் காலிங் பெல் சத்தம் கேட்டது. அவனின் ஒரே பால்ய நண்பனான ப்ரஹலாத் நின்று கொண்டிருந்தான் . அவனை வரவேற்று உபசரித்து போது , அவனின் முகம் பார்த்து என்ன கவலை என்று ப்ரஹலாத் வினவினான். நடந்ததை அனைத்தும் ஒன்று விடாமல் அவனிடம் ஒப்புவித்தான். அதற்கு நான் இப்போது ஒரு இடத்திற்கு கூட்டி செல்ல போகிறேன் என்றான் ப்ரஹலாத். அவனும் அவனை போல் தாய், தந்தை இழந்தவன் தான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் ஆறுதல் கூறிக் கொள்வார்கள் .
ப்ரஹலாத் தன்னுடைய காரை ஒரு முதியோர் இல்லம் முன்பு நிறுத்தினான். அங்கு அவனைக் கண்டதும் அனைத்து முதியவர்களும், அவனருகே சுற்றி நின்று கொண்டனர். மிகவும் பாசத்துடன் அவன் நலம் விசாரித்தனர். இதனை கண்டு வியந்து போன ஸ்ரீராம் இவர்களை உனக்கு முன்பே தெரியுமா என்று ப்ரஹலாதிடம் வினவினான். அதற்கு ப்ரஹலாத், என்னுடைய நண்பன் ஒருவன் இந்த இல்லத்தை கடந்த பத்து வருடங்களாக நடத்தி வந்துள்ளான். நானும் அவ்வப்போது இங்கு வந்து செல்வேன்.
கடந்த மாதம் அவனுக்கு பணி நிமித்தமாக சில காலம் அமெரிக்கா செல்ல வந்துள்ளதால் இதன் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தான். நான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்பதால் பணி நேரம் போக மீதி நேரம் இங்கே வந்து இம்முதியவர்களுக்கு சேவை செய்யப் போகிறேன் என்றான். பளிச் என்ற ஓர் எண்ணம் ஸ்ரீராம் மனதில் எழுந்தது. இனி மேல் என் வாழ்வின் லட்சியமும் உன்னைப் போல தான் என்றான். அதை கேட்டு ப்ரஹலாத் அவனை கட்டி அணைத்து கொண்டான் .
ஜெய் ஸ்ரீ ராம்
எழுதியவர்: ரா. ஹரிசங்கர்