×
Sunday 29th of December 2024

இருண்ட வீடு – தமிழ் சிறுகதை


ஓலைக் குடிசைக்கு ஒட்டுபோட்டது மாதிரி இருக்கும் அந்த கீற்றுக் கொட்டகை வீட்டிலிருந்து, கடுங்கோபத்துடன் ஒரு பெண்குரல், தன் வேதனை மொத்தத்தையும் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது என்பதை, தொலைவில் வருகிறவர்களும் புரிந்துகொள்ளும் விதமாகச் சத்தம், சங்கீதப் பறவையாக சாளரவழிப் புறப்பட்டது. ஆனாலும் அது தனிமையான வீடு என்பதால், அந்தச் சத்தமும் ரகசியம் காக்கப்பட்டது என்பதே உண்மை.

அது இரண்டு திண்ணைகள் வைத்து கட்டப்பட்ட வீடு. மூக்குக் கொட்டகை என்று கிராமத்தில் சொல்லப்படும் ஒற்றை அறை ஓலைக்குடிசை. அந்த வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டிருந்த மணிவண்ணன்…

சுவற்றுக்குப் பதிலாக ஓலையால் மடித்துக் கட்டப்பட்ட தடுப்பில் ஒரு குச்சியை உடைத்து, அதை நகங்களால் இழைத்துக் கொண்டிருந்தான். இப்போதும் கூட உள்ளிலிருந்து சீற்றம் குறையாமல் சத்தம், வந்துகொண்டேதான் இருந்தது.

“உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லை தானே., அப்படி ஒன்னு இருந்தா இப்படியெல்லாமா நீ பேசுவே” என்றவளை நிமிர்ந்தும் பார்க்காமல்; இப்போதும் அந்தக் குச்சியைப் பட்டை தீட்டுவதில் முனைப்போடு இருந்தான். என்றாலும் அவன் கண்களும் கொஞ்சம் கலங்கியேதான் இருந்தது.

“ஓடுகாலினு எங்கப்பனே சொல்லும் போதும் கூட எனக்கு வலிக்கலையா.. ஏன்னா.. உன்ன நான் மலைபோல நம்பிவந்தேன். அப்பவெல்லாம் எவஞ்சொல்லும் எனக்கு பெரிசா தெரியலை.. நீ ஒருத்தன் மட்டுந்தான் உலகமுன்னு நெனச்சு இருந்தேன். உனக்குச் சொந்தம் இருக்கா.. பந்தம் இருக்கா.. இல்லை சொந்த வீடுதான் இருக்கா..? எந்த கேள்வியும் கேக்காமத்தானே உன்னோட ஓடி வந்தேன்.. உன்னாலே எப்படி, இப்படி எல்லாம் பேச முடியுது..?” என்று சொல்லி கொண்டே கையில் இருந்த கரிச்சட்டியை வைத்தாளா.. இல்லை இட்டு உடைத்தாளா.. என்று தெரியவில்லை. கரிச்சட்டி “பொத்து” ங்குற சத்தத்தோட உடஞ்சு சிதறியது.. பாவம், அங்கே நடப்பது ஒன்றும் அறியாத அந்த அப்பாவி மண்சட்டி.

உடஞ்ச சட்டியை மெல்லத் திரும்பி பார்த்தான், ஆனாலும் அந்த ஓலையீர்கை அழகான ஓவியம் ஆக்காமல் விடமாட்டான் போலிருக்கிறது. மண்சட்டி விழுந்த சத்தங் கேட்டு, இரண்டு தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் அச்சத்தில் விசும்பலோடு அசையத் தொடங்கிற்று.

“ஒன்னும் இல்லை… ஒன்னும் இல்லை..” என்றிவள் ஒரு தொட்டிலை நெருங்கும்போது. மற்றொரு தொட்டிலை, நாலுவயதே நிறம்பி இருக்கும் ஒரு பிஞ்சு பாதம் ஓடி வந்து சத்தமே இல்லாத சத்தத்தோடு.. “என்னடா செல்லம் எந்திரிச்சிட்டியா..?” என்று தொட்டிலில் கவிழ்ந்து கிடந்துகொண்டு.. “ஒன்னும் இல்லை, ஒன்னும் இல்லை… ஏ கண்ணுல்ல..” என்று கண்ணை உருட்டி உருட்டி உதட்டைச் சுழிச்சு சுழிச்சு கொஞ்சிக்கொண்டிருந்தது..

“ஆதிரா.. நீ போய்த் தூங்கு தங்கம்” என்றதும் “சரிங்கம்மா” என்று சொல்லிவிட்டு அந்த குடிசையின் ஓரத்தில் ஒரு பூனைபோல் நடந்துபோய்ப் படுத்துக்கொண்டது. அந்த சிரிக்கும் சித்திரப் பாவையானது படுத்துக்கொண்டாலும் அங்கே நடப்பவைகளை இமைக்காமல் பார்த்துக் கொண்டேதான் இருக்கு. எப்போதும் இல்லாமல் இன்றைக்கு அம்மாவின் புதிய கோபத்தை புரியாமலும், புரிந்துகொள்ள முடியாமலும் இருந்தது அவளுக்கு.

இரண்டு கைகளாலும் இரண்டு தொட்டிலையும் ஆட்டிக் கொண்டிருந்தாள் சாரதா. அந்த நிமிடம் மட்டும்தான் அவளிடம் சத்தமும் சமாதானம் கொண்டிருந்தது போல். மூன்றும் ஒவ்வொன்றாய் கண்ணயர்ந்ததும், மணிவண்ணனுக்கான உணவை ஒரு தட்டில் எடுத்து கொண்டு வந்து சத்தமில்லாமல் வைத்தாள். அவ்வளவு சீக்கிரம் இவ்வளவு சாந்தமாக அவள் மாற வாய்ப்பே இல்லை. குழந்தைகள் உறக்கம் கெட்டுவிடுமே என்ற அச்சமாகத்தான் இருக்கும்.

மணிவண்ணன் அந்த தட்டையும் பார்த்துக் கொண்டு அந்த சீகையும் சிங்காரித்துக் கொண்டே இருந்தான். அவளும் கொஞ்சம் சோறு போட்டுக்கொண்டு வந்து உக்கார்ந்தவள்; வேக வேகமாகக் காய்கறிகளை தட்டின் ஓரத்தில் எடுத்து வைத்துவிட்டு சாப்பிடத் தொடங்கினாள். எண்ணிப் பார்த்திருந்தால் ஐந்தோ ஆறோ கவளம் சாதம் மட்டுமே தின்றிருப்பாள். மீதத்தை திண்ணையின் ஓரத்தில் கொட்டிவிட்டுத் திருப்பினாள். இப்போதும் அவன் அந்த சீகை சிங்காரிப்பதில் கவனமுடன் இருந்தான். அவன் செய்கையை கவனித்தவள் தட்டை எடுக்கும் எண்ணத்தோடு குனிந்தவாரே கேட்டாள் “சோறு வேணுமா? வேண்டாமா…?” அந்த சீகையைக் காதோரம் சொருகிக்கொண்டே ஒரு பெரும் மூச்சை விட்டுவிட்டு தட்டைக் கையில் எடுத்தான். அவள் உள்ளே போய் ஒரு செம்பில் தண்ணீர் கொண்டுவந்து வைத்தாள். அப்போதுதான், தான் கை கழுகவில்லை என்பதும் நினைவில் வந்தது. கடமைக்குக் கொஞ்சம் தண்ணீரை கையில் ஊற்றிக் கொண்டு உண்ணத் தொடங்கினான் மணிவண்ணன்.

அதற்குள் ஒரு பாயையும் தலையணையும் எடுத்து எதிரே இருக்கும் திண்ணையில் போட்டுவிட்டுத் தட்டுக்குக் காத்திருந்தாள் சாரதா. அவன் சாப்பிட்டுகொண்டே அந்த பாயையும் தலையணையையும் ஏக்கத்தோடு பார்த்தான். இதுவரை ஒருநாள்கூட தனிப்பாய் போட்டதில்லை இருவரும் என்பதால்.. அவன் பார்வையைப் புரிந்து கொண்டவள்.. “முடிஞ்சிருச்சில…. கையை கழுவுங்க..” என்றாள், எல்லாவற்றையும் சேர்த்தேதான் என்பதுபோல் இருந்தது. மணிவண்ணனுக்கு கையைக் கழுவிவிட்டுத் தட்டை உட்புறமாக வைத்தான். தட்டை எடுத்துக் கொண்டு, யாராலும் திறக்கமுடியாத அந்த ஓலைக் கதவை மிக வேகமாகச் சாத்தினாள். இருள் இருவருக்கும் இடையில் இருக்கிறேன் என்பதை உறுதி செய்துகொண்டே இருந்தது.

விடிந்தது என்று சொல்லமுடியாது. காரணம், இப்போதும் அவன் உள்ளத்தில் ஒரு நிலையானத் தெளிவு இல்லாமல் தான் இருந்தது. பாவம், அவனால் அவள் முகத்திலும் பழைய மகிழ்ச்சியும் இல்லாமல் போயிற்று. எப்போதும் வேலைக்கு புறப்படும் முன் கொஞ்சம் நீராகாரம் அருந்துவது இவன் வழக்கம். இன்று அந்த பேச்சுக்கே இடமில்லை. அவள் உள்ளம் முழுவதும் அனல்மழை பொழிந்து கொண்டிருக்கும் போது, ஆகாரத்துக்கு நீராகாரமா கேட்குது..?

எது எப்படி இருந்தாலும், எப்போதும் போல் பயணம் சொல்ல அவள் முகத்தைப் பார்த்தான். எந்த கோவிலில் அடித்துச் சத்தியம் செய்துவிட்டு வந்தாளோ! தெரியவில்லை.. எள்ளும் கொல்லும் வெடித்துக் கொண்டிருந்தது முகத்தில். நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை அவள். பயணம் சொல்லாமல் போவது என்பது இன்றுதான் இவனுக்குப் புதிதாய் நடக்கிறது. அது எதையோ இழந்தது போல் இருந்தது. எப்போதும் மதியத்திற்கான உணவும் தண்ணீரும் கொடுத்தனுப்புவாள். இன்று அதுவும் இல்லை. வேலை நேரத்தில் உடுத்தும் அந்த சட்டையை மட்டும் துவைத்து. வைத்திருந்தாள். அதுவும் அவன் அந்த பேச்சை தொடங்குவதற்கு முன் செய்து இருக்க வேண்டும். அதை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். அப்போதுகூட அவள் மணிவண்ணனை கவனிக்கவும் இல்லை, அவன் பக்கம் திரும்பவுமில்லை. வாசல் கூட்டுவதில் மட்டுமே கவனம் என்றிருந்தாள்.

சரி இருக்கட்டும் என்று புறப்பட்டவனுக்கு. கொஞ்சம் தூரம் வந்த பிறகுதான் நினைவு வந்திருக்க வேண்டும். உடனே ஆவலோடு தேடினான், அந்த பிஞ்சு மலரை. நேற்று இவர்கள் நடத்திய வாதத்தில் இப்போதும் அனிச்ச மலர்போல் வாடிய ஆதிரா, வருந்திய நிலையில் ஒரு மௌனச் சாமியாக இருந்தாள். தேடிய இவன் கண்களும் ஆதிராவைப் பார்த்ததும் கலங்கிற்று. ஆதிராவும் நெடுநேரமாக தன் அப்பனையேப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

இவன் கண்ணீர் கன்னத்தில் வழியும் முன்பாக டாடா காட்டிவிட்டுத் திரும்பிக்கொள்ள நினைத்தபோது. அடடா! அந்தக் குழந்தை முகத்தில் அப்படி ஒரு ஆனந்தத்தோடு இதுவரைக் கண்டதில்லை அவன். கள்ளம் கபடம் இல்லாமல் சட்டெனச் சிரித்து மெட்டென விரிந்து மகிழ்ந்து மனம் நிறைந்து நின்றாள். அந்தச் செந்தாமரை சிற்பமான ஆதிரா.

ஓடாத கார்களை ஓடவைக்கும் ஒப்பற்ற கடவுள்களில் இவனும் ஒருவன். இவன் வரவை எதிர்பார்த்து எத்தனையோ கார்கள், காலையில் இருந்து மாலைவரை காத்திருக்கும் என்பதை இவனாலும் கணக்கிட்டுச் சொல்ல முடியாது.

எப்போதும் வேலை செய்வதில் ஒரு அலுப்பும் தட்டியதில்லை மணிவண்ணனுக்கு. ஆனால் இன்று கிலர்ச்சு இல்லாத வண்டிபோல் ஒரு பிடிமானமும் இல்லாமல்தான் இருந்தது. ஏன் இப்படி இருக்கிறான்..! எப்போதும் கார் இஞ்சினை ஓடவிட்டு அந்தச் சத்தத்தை வைத்தே அதில் எதுயெதை மாற்றவேண்டும் என்பதை கணிப்பவனுக்கு. இன்றந்தச் சத்தமும் சாவு மணிபோல் ஒலித்தது.

உள்ளறையில் ஓடிக் கொண்டிருந்த கடிகாரத்தை பார்த்தான். நேரம் 9 : 05 காட்டியது. “பத்துமணிக்கு வருவேன் நல்ல முடிவாச் சொல்லு” என்று சொல்லிவிட்டுப் போன கந்தையன் குரல், அவன் காதருகே வந்து வந்து செவிப்பறைக்குள் மோதியது. இன்று வேலை நடக்கிறதா என்று யாரேனும் கேட்டால். இல்லை “அவன் கடிகாரம் நடப்பதையே பார்த்திருக் கொண்டிருந்தான்” என்று சொல்வதே சரியாக இருக்கும்.

“மணி..” என்ற குரல் வந்ததும். உச்சி மண்டையில் ஒரு கொத்து மயிர்க்கால் எழுந்து நின்றது அவனுக்கு. அது அச்சமா? இல்லை அறியாமையா? என்பதும் தெரியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் “வாங்க அண்ணெ” என்று அழைத்து வைத்தான்.

“அப்பறம் என்னப்பா முடிவு பண்ணினே” என்ற கந்தையன் சிறிது இடைவெளி விட்டு. மேலும் தொடர்ந்தார். “அந்த அம்மா உன்னோட சம்மதத்தை எதிர்பார்த்து தான் இருக்கு.. அவங்க நிலைமை யாருக்கும் வரக்கூடாதுப்பா.. ம்ம்… என்ன பண்ண.. எல்லாம் விதி.. சரி அதை விடு.. நீ சொல்லு” மணிவண்ணன் கையில் இருந்தத் திருப்புலியைத் திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டிருந்தான். மணிவண்ணா… உன்னோட நிலமை எனக்கு நல்லாத் தெரியுது. அதுக்குத்தான் உனக்கு உதவலாமுன்னு வந்தேன். இல்லையின்னா ஊர் உலகத்தில் எனக்கு வேற ஆளா இல்லை. அது மட்டுமில்லை அந்தம்மா உன்ன ரொம்ப தெரிஞ்சவுக மாதிரி பேசுது நீயும் பாத்தேல்ல..

அவன் பேசுவதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. மனசும் கொஞ்சம் சரியில்லாமலே இருந்தது. மணிவண்ணன் நிமிர்ந்து பார்த்தான். பார்வையில் உயிர் இல்லை. “அண்ணா நாளைக்கு சொல்றேண்ணா… மனைவியிடம் இன்னும் சொல்லல.. அதான்.. நாளைக்கு…” என்று இழுத்தான். சரிப்பா சரிப்பா உன்னை யார் இப்ப அவசரப்படுத்தினா… மெல்லவே சொல்லு, ஆனா ஒன்னு எல்லாம் உன்னோட நல்லதுக்குத்தான்… ஆமா புரிஞ்சுக்க… நாளைக்கு ஒரு நல்ல முடிவாச் சொல்லு. நான் நாளைக்கே அந்த அம்மாவையும் கூட்டிக் கொண்டு வாரேன்..” என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு போனவனையே பார்த்துக் கொண்டிருந்தான் மணிவண்ணன். கந்தையனின் மயக்கும் வார்த்தைக்கும் மந்திர பார்வைக்குமா இப்படி தடுமாறி நிற்கிறான். இல்லை, இவன் நிலைமை மத்தளத்தை ஒத்திருக்கு என்றுதான் சொல்லனும்.

மூன்று நாட்களுக்கு முன் இதே கந்தையன், இறக்குமதி செய்யப்பட்ட உயர்தரமான காரில் வந்து இறங்கினார். மணிவண்ணனின் அதே பரபரப்பான கேரேஜ். எத்தனையோ காரின் உரிமையாளர் இவனை எதிர்பார்த்திருக்க.. கந்தையனை பார்த்ததும், வாங்க அண்ணெ.. என்ன சேதி… அதுவும் புத்தம் புது காரோடு நம்ம கடைக்கு… என்று காரை சுற்றிவலம் வந்து சிரித்துக் கொண்டே கேட்டான். நல்ல கலர் அருமையா இருக்கு…. என்றதோடு தொட்டுப்பார்க்க நினைத்தவன். தனது அழுக்கு படிந்த கையை காட்டனில் துடைத்தும் சுத்தமில்லை என்பதால் வேண்டாமென்று ஒரு அசட்டு சிரிப்புடன் நிறுத்திக் கொண்டான், மறுபடியும். சொல்லுங்கண்ணெ…. என்ன சேதி…. அதுவும் புது காரோட வந்துருக்கிறீங்க…

அது ஒன்னும் இல்லை மணி… என்ற அவர் குரலில் ஒரு தயக்கமிருந்தது. என்ன அண்ணெ… சும்மா சொல்லுங்க, நமக்குள்ள என்ன ஒளிவு மறைவு. ஒன்னு இல்லை.. உனக்கு விருப்பமுன்னா…. உன்னோட குழந்தையில ஒன்னு…. தத்துக் கொடுப்பியானு…. கேட்கத்தான் வந்தேன்.. நீ அன்றை ஒருநாள் சொன்னியே என்று தயங்கித் தயங்கி சொல்லிக்கொண்டே காரின் முன் கதவைத் திறக்கவும் செய்தான். குழந்தையில் ஒன்றை விற்கலாம் என்ற தனது வெகுளியான பேச்சை பலரிடமும் பேசியிருக்கிறான். இவரிடமும் பேசியிருக்கிறான். அதை மனதில் வைத்துதான் கந்தையன் அண்ணா இப்படி கேட்கிறார். கார் கதைவை திறந்ததும் அங்கே அழுத விழியோடும், துடிக்கும் உதடுகள் வெடிக்கும் தருவாயில் இரண்டு கைகளை சேர்த்துக் கும்பிட்டவாரே வெளியில் இறங்கினார் ஒருவர்.

மணிவண்ணனின் வயதைவிட ஐந்து வயது அதிகம் இருக்கும். அழகானவர், வசதியானவரும் தான். அவரை பார்த்ததும் கந்தையனின் கேள்விக்கும் பதிலைச் சொல்லாமல். இறங்கியவரையே பார்த்து நின்றான். கும்பிட்டுக் கொண்டே மணிவண்ணனின் கையைப்பிடித்து “இந்த உதவிய மட்டும் மறுக்காமல் எங்களுக்கு செய்திங்கன்னா… நீங்கள் தான்…. நீங்கதான் எங்க கடவுள்….” என்று அவன் சொல்லும்போது தாரைதாரையாக வழிந்தது கண்ணீர். அதைப் பார்க்கவும் மணிவண்ணனுக்கு, நாம வெகுளித்தனமா சொல்லப்போய் வில்லங்கமாச்சேன்னு என்ன சொல்வதென்று புரியாமல் நின்றான். அப்போது காரின் பின் கதவைத் திறந்து கொண்டு ஒரு பேரழகுக்கு அலங்காரம் செய்தது போன்ற வடிவழகுப் பெண்ணொருத்தியும் இறங்கினாள். அவளை எங்கேயோ பார்த்திருக்கிறோம் என்று நினைத்த நொடியில், நெஞ்சுக்குள் பேரிடி மழையே பெய்யத்தொடங்கி விட்டது. அவளைப் பார்த்ததும் மணிவண்ணன் மிரண்டே போனான்.

அவங்க இவரோட மனைவி என்றார் கந்தையன். இப்போது மணிவண்ணனுக்குத் தான் நிற்கும் இடம், எதுவென்று புரியவில்லை தவித்தான். பத்து ஆண்டுகளைக் கடந்து பின்னோக்கிச் சென்ற நினைவில். “எனக்கு என்ன பதில் சொல்லப்போறே..” என்று அவள் அழுத முகம் கலையாமல் நின்றது. அவன் முன்னே, இன்றும் கூட.

மணிவண்ணனின் இந்த மாற்றத்தை கூர்ந்து கவனித்த கந்தையன். ஒரு வேளை இவன் பெண்களின் கண்ணீருக்கு மனமிரங்குவானோ… அப்படியானால் அந்த அம்மாவை மட்டுமே பேச விடுவோம். பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்றுதானே சொல்வார்கள். அதையும் பார்ப்போம் என்ற எண்ணத்தில் அழுது தேம்பும் அவரை கையைப்பிடித்து மெல்ல பின்னால் இழுத்து வந்தார். அவர்கள் தங்களை விட்டு விலகியதை உணர்ந்தவள். ஏன் விலகிபோகிறார்கள் என்று நினைத்துக் கொண்டே.. சரி நல்லதுதான் என பேசத் தொடங்கினாள்.

“எப்படி இருக்குற மணிவண்ணன்..” என்றதும் நிமிர்ந்து பார்த்துச் சிறிதாய்ப் புன்னகை செய்தான். “எப்பவாச்சும் என்னோட நெனப்பெல்லாம் வருமா..” என்றாள் கேள்விகள் சாதாரனம்தான் என்றாலும் அவள் விழியில் வற்றாத காட்டாறு கட்டுக்குள் நிற்காமல் கரைபுரண்டு ஓடியது. இவள் பேச்சு அவர்களுக்குக் கேட்குமா என்று பார்த்தான், இல்லை.. அவர்கள் நிற்கும் தொலைவு அதிகம்தான்… கேட்காது என்று முடிவு செய்து கொண்டான். தன்னால் அவர்களுக்குள் எந்தப் பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணமே காரணம். சில நிமிடங்கள் மௌனம், இருவரையும் தின்று தீர்த்தது… பின் கண்களைத் துடைத்துக் கொண்டு அவளே தொடங்கினாள். “பத்து வருசமாச்சு மணிவண்ணன் திருமணமாகி..! உனக்குத்தான் தெரியுமே… யாரு சாபமோ என்னமோ… இதுவரை ஒரு புழு பூச்சி கூட தங்கல…”

ஒரு பெருமூச்சிற்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தாள். ” எத்தனையோ மருத்துவமனை கோயில் கொளமுன்னு ஏறி இறங்கியாச்சு… ஒரு பயனும் இல்லை. சரி நம்மக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதானு இருக்கும்போதுதான், கந்தையன் அண்ணனை பார்த்தோம். அவரும் எங்கெல்லாமோ கூட்டிக்கிட்டு போனார். ஒன்னும் நடக்கல. ஆனாலும் உன்னை சந்திப்பேன்னோ… உங்கிட்டே கொண்டுவந்து விடுவார்னோ…. நான் நெனச்சுக் கூடப் பார்க்கல… சரி அத விடு. என் சோகம் என்னோட போகட்டும். நீ சொல்லு… உனக்கு எத்தனை குழந்தை..!”

“மூன்று” என்றான்.

“ஆண்ணெத்தனை பெண்ணெத்தனை….” என்றாள்.

“மூனும் பெண்தான்”… என்றான்.

இவள் சிரித்தாள். அந்த சிரிப்புக்குள் கந்தையனின் கணிப்புக்கும் விடை இருந்தது. ” நல்லா இருங்காங்களா…? மனைவி எப்படி அன்பானவளா… இல்லை என்னாட்டம் அடாவடியா…” என்றாள். அவன் இப்போது கொஞ்சம் மெல்லிய புன்னகையை மட்டுமே இழையோட்டினான். “சரி இங்கே பக்கத்தில தான் எங்க வீடு. அந்தப் பக்கம் வந்தால், வந்திட்டுப் போ மணிவண்ணன். என்னனமோ நெனச்சுக்கிட்டு வந்தேன். உன்னயப் பார்த்ததும் வார்த்தையே வரலை…” என்று மெலிதாகச் சிரித்தாள். பின் விலகி நிற்கும் அவர்களைப் பார்த்து “போலாமா” என்றாள். கண்களைத் துடைத்துக்கொண்டே.. கந்தையனுக்கு ஒன்னும் புரியலை குழந்தை விசயமா கேட்டாங்களா இல்லையா என்ற குழப்பம் வேறு… பக்கத்தில் வந்து

“அம்மா அந்த..”

“அது இருக்கட்டும் வாங்க…” என்றாள். இருவரும் காரில் ஏறினார்கள். மதுமிதா மட்டும் கதைவைத் திறந்தும் ஏறாமல், மீண்டும் சாத்திவிட்டு வந்தாள். “சரி இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தோமே… ஒரு டீ காப்பி குடிக்கிறியானு கேட்டியா..”

“அது வந்து… தம்பி இங்கே வா..” என்று அவன் திரும்பி அழைத்த நேரம்.

“பரவாயில்லை இருக்கட்டும் மணிவண்ணன். அன்றைக்கு உன்னோட சேர்ந்து வாழனுனு கேட்டப்ப, நீ முடிவு சொல்லத் தயங்கினே. இப்போ உன்னோட குழந்தையில் ஒன்னு கேட்டா..! அதைக் கொடுத்தாவது அந்தக் குறையைத் தீர்ப்பியா….?” என்று அழுகையை அடக்கமுடியாமல் நின்றவளை. எப்படிச் சொல்லி, எதை சொல்லி ஆறுதல் படுத்துவான். அழுத விழியோடு எங்கெங்கோ பார்த்தவள் கடைசியில் அவனையும் நிதானமாய்ப் பார்த்துவிட்டுப், பதிலுக்குக் காத்திராமல் காரில் ஏறிக் கொண்டாள்.

பழைய நினைவுகள் இவனைப் பாடாய்ப் படுத்தியது. கல்லூரி நாட்கள் நெஞ்சுக்குள் வந்து திசையறியா பாய்மரம்போல் திண்டாடி அலைந்தான். அவள் அழுகை, அழுகை மட்டுமே இன்றும் அவனை நிலைகுழைய வைக்கிறது.

சாரதா ஒன்றும் புரியாமலும், என்ன செய்வது என்று தெரியாமலும், பித்துபிடித்தவள் போல் எட்டுதிசைகளையும் வெறித்து பார்த்தபடி இருந்தாள். உள்ளத்துக்குள் ஓயாத சர்ச்சை. தெளிவில்லா நிலை. “ஒப்புதலுக்கு காத்திருக்கிறானா இல்லை ஒப்புக்கு சொல்லி இருக்கிறானா..” என்று புலம்பியவாறு வீட்டுத் திண்ணையில் யோசனையோடும் பெருத்தக் கவலையோடும் அமர்ந்திருந்தாள்.

அப்போதுதான் அந்த நாலுவயதே நிரம்பிய, அந்த நயமான பூவினம். கவலை என்றால் என்னவென்று நேற்றுவரை அறியாத பிள்ளைமனம். சிரித்தால் குழிவிழும் சிங்காரக் கன்னக்காரி. அடுத்தவரை சிரிப்பிக்கவும் அவரோடு சேர்ந்து சிரிக்கவுமே நேற்றுவரை சேதி கேட்டவள், இன்று இப்படி கேட்பாள் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள் தான்.

மெல்ல நடந்து வந்தாள். வாசலுக்கும் வீட்டுக்கும் ஒரு படிதான் இருக்கும். அதையும் மிக கவனமாக கடந்து அம்மாவின் முன்னால் வந்தாள். தாயின் சோகம் சொல்லாமல் கொள்ளாமல் தனக்குள்ளே குடி புகுந்ததை உணர்ந்துகொண்டாள், அந்த செல்ல சீமாட்டி. சாரதாவின் காலை கட்டிப்பிடித்துக் கொள்ள, சரியாக முழங்காலில் அவள் தாடையை பொருத்த வசதியாக இருந்தது. அவள் கால்மேல் முகத்தை வைத்துக் கொண்டு அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். சாரதாவும் அப்போதுதான் யோசனையில் இருந்து மீண்டிருப்பாள் போல். ஆதிரா நிற்கும் வடிவழகை பார்த்தவளுக்கு கண்ணீர் சொல்லாமல் வந்துவிடும் போல் இருந்தது. அதை காட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக மரங்களுக்கு மேலே தன் பார்வையை செழுத்தி காற்றில் கண்ணீர் துடைத்துக் கொண்டாள். அப்படியே மெல்ல செல்ல மகளின் தலையை கோதியும் விட்டாள். சட்டென முழங்காலில் ஒரு அழுத்தம் தென்பட்டது. கூடவே அவள் குரலும் வெளிப்பட்டது. “அம்மா…” என்று அழைத்தாள். அவள் குனிந்து பார்க்கும் முன்பே… “பாப்பாவெ விக்க வேணாமா.. அப்பாக்கு காசு பத்தலனா என்ன வித்திடுங்கம்மா..

இவள் பேச்சால் சாரதாவிற்கு துக்கம் தொண்டைக்குழியை அடைத்து நின்றது. பெத்தவயிறாயிற்றே துடியாய்த் துடித்தது. “பாப்பாவே நீ தானேம்மா நல்லா பத்துபே… நீ தூக்கினாதானே… பாப்பா அழுவாது…. எதுனாலும் நீயே பாப்பாவே பாத்துக்கோமா… என்னவே வித்திடலாமா…” என்று கெஞ்சும் ஆதிரையை வாரியணைத்துக்கொண்டாள். “அடி பாவி மகளே… அவன் உன்னத்தாண்டி விக்கறதா சொல்றான்…” உங்கள வித்துட்டு அதுல வயிறு வளர்த்து நான் வாழவா செய்வேன்..” என்று தனக்குள்ளே குமுறி குமுறி அழுதாள். கண்ணீர் மட்டும் அணையுடைந்தார்போல் கொட்டிக் கொண்டிருந்தது.

எப்போதும் கேரேஜ் வேலை முடிந்து வரும்போது உடை மாற்றிக் கொண்டுதான் வருவான். ஏனோ இன்று அவன் நடை பிணமாகத்தான் வந்தான். அவன் எண்ணத்தில் எண்ணற்ற மின்னல் கீற்று ஓடிற்று. அது ஒவ்வொன்றும் ஓராயிரம் கதை சொல்லும். நேற்று மனைவியோடு பேசும்போது கூட அவள் வீசிய வார்த்தை உள்ளத்தை உக்ரமாக தாக்கியது.

“அன்றைக்கு தாய்ப்பெயரை வைக்கனும்னு சொன்னே…. இன்னிக்கு நாயைத் தூக்கி கொடுக்கிற மாதிரி சொல்றே… உனக்கெல்லாம் எதுக்கு பிள்ளகுட்டி..! வித்து தின்னவா இல்ல வெட்டி தின்னவா…. உங்கூட நாங்க இந்த வாழ்க்கை வாழ்றதுக்கு பட்டினி கிடந்து சாவதே மேல்…” என்றவள் சொன்னது இப்போதும் சாட்டையாய்
வந்து தாக்கியது.

வழக்கமாக நடந்து போகும் பாதைதான் என்றாலும், இன்று பல இடங்கள் சறுக்கவும் தடுக்கவும் செய்தது. எல்லாம் கடந்து வந்துவிட்டான். கண்ணுக்கு எட்டும் தூரத்தில் வீடு. அவன் மனைவி, ஒற்றை சிம்மினி விளக்கொளியில் கருப்பு வெள்ளை ஓவியம் போல் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு பெருங் கவலையோடு காத்திருந்தாள். ஒரு தீர்வு காணவேண்டி காத்திருந்தாள்.

நிலத்தில் ஊரும் எறும்பும் அறியாத வண்ணம், அவன் மெல்ல கழற்றி வைத்தான் காலணியை. வந்தவனை வரவேற்கவும் இல்லை, கன்னத்து கையை இடம் மாற்றவுமில்லை. கையில் கொண்டு வந்தப் பையை வைத்துவிட்டு. குளிக்கச் சென்றான். குளிர்ந்த நீரில் குளித்தாளும் அவன் புளுக்கம் போகவில்லை. அவள் இப்போதும் இடமாறாமல் இருந்தாள்.

குளித்த ஈரம் துடைத்தும் துடைக்காமலும் வந்து, அவள் எதிரே உக்கார்ந்தான். இருளோடு சேர்ந்து இன்னும் இம்சித்தது மௌனம். ஒருசில நாழிகையே கழிந்திருக்கும். “சாராதா..” என்று அவன் அழைத்ததுதான் தாமதம். அவள் தொடங்கிவிட்டாள்.

“நேத்து நீ.. முடிவு பண்ணிட்டு வந்து சொன்னியா…. இல்லை என் முடிவை கேட்க வந்தியா…?” என்றவள் பொறிந்து வெடிக்கும் கடுகின் நிலையிருந்து மீளவில்லை. “அது.. அது வந்து.. கொஞ்சம் பணம் கொடச்சா பிள்ளைங்களை நல்லா வளர்க்கலாமேனு தான்..” என்று உண்மையை ஒரு பக்கம் ஒளித்துவைத்தே சொன்னான்.

“அதுக்காக… பெத்தத விற்கிறதா முடிவு… சரி அப்படி வளர்க்க வசதி இல்லாத நீ.. எதுக்கு குழந்தை பெத்துக்கிற ஆசைப்பட்டே..? ” சாரதா ஆவேசம் அடங்காமல் கேள்விகளால் துளைத்தெடுத்தாள். கொஞ்சம் நேரம் பதில் சொல்லாமல் இருந்தான். பின் அவனே புலம்பவும் ஆரம்பித்தான். “படிச்ச படிப்புக்கு எங்கே வேலை கெடைக்குது. கெடச்ச வேலையும் சரியான வருமானம் வரலை.. ரெண்டோட போதுமுன்னு நெனச்சா… விதி மூனுனு முடிச்சு போட்டு வச்சிருக்கு.. அதுகளையும் என்னமாதிரி ஏழையாகவே வைச்சி இருக்கனுமா..” என்றழுதே விட்டான். ஆனாலும் சத்தம் வெளிப்படுகிறதா என்று தேடித்தான் பார்க்கனும்.

“ஓ… அப்ப சாருக்கு ரெண்டுக்கு மேலே வந்திருச்சுனுதான் இந்த முடிவா…?” அவன் கலங்கிய கண்களோடு.. திரும்பிப் பார்க்கத் திறனற்றவனாக இருந்தான். “அப்போ என்னோட முடிவச் சொல்றேன் கேட்டுக்கோ… நான் பெத்ததுல ஒன்னு வித்துத்தான் மத்ததெ காப்பத்தனுமுன்னா… அந்த பாவம் உனக்கு வேண்டாம். அதவிட பத்துபேருக்கு என்ன முந்தி விரிக்கச் சொல்லி நீ பணம் சம்பாதிச்சுக்கோ.. பாவம் என்னோட போகட்டும், ஆனாலும் உன்னோட விக்கனுங்கிற முடிவு இருக்கே… அது என் சாவுக்கு பின்னாடிதான் அதமட்டும் நினைப்பில் நீ வைச்சுக்க…” என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல், அந்த ஓலை கதலை சாத்திவிட்டு உள்ளறக்குள் திடுமென விழுந்தாள். அவள் அழும் சத்தம் இருள் முழுதும் நிரம்பிக் கரைந்தது.

அவளோடு இவன் அழுத கண்ணீரும் காய்ந்தா போயிருக்கும்? அதனாலே நித்திரை இன்னும் எட்டிப் பார்க்கவில்லை. அவன் இப்படி ஒரு பதிலை எதிர்பார்த்திருக்க வில்லை. இவன் காதலிக்கும் போதுகூட ஒருநாள் அழுகையோடு அவள் அழைப்பு வந்தது, வீட்டில் திருமணப் பேச்சு நடக்குது. என்னை வந்து பெண் கேளு இல்லையின்னா எங்கேயாச்சும் அழைச்சுட்டு போயிறு..

உன்னைத் தவிர இன்னொருத்தன் கை எம்மேல பட்டுச்சுனா.. அழுகையை அடக்கிக்கொண்டும் துக்கத்தை விழுங்கிக்கொண்டு நீ… மறந்திடாமே.. என்னோட சவத்தை தூக்கி போடறதுக்காவது வந்துட்டுபோடா… என்று அழுது தீர்த்தவளா இப்படி பேசுறா.. இதுவரை வாங்க என்று சொல்லியவளை, வா என்று சொல்ல வைச்சதும் நான்தானே.. தேவையற்ற வார்த்தைகளை பேசவச்சதும் நான்தானே.. அட ஐயோ கடவுளே.. எனக்கு ஏன் இப்படி இரக்ககுணத்தை கொடுத்த… என்று தனக்குள்ளே புலம்பலிட்டவாரே புரண்டு புரண்டு தவித்தான். இரவை வந்து வெளிச்சம் துடைக்கும் வரை காத்திருந்தான் கண்ணீரோடு.. அவன் உள்ளத்தில் இனம்புரியாமல் மண்டிக்கிடந்த இருள் மெல்ல விலகியது. பொழுது விடிந்தது.

வழக்கம் போல் இவன் புறப்படும் நேரம் வாசலில் அந்த ஓவியம்; ஆதிரை வந்து நின்றாள். அவளை வாரியணைத்து முத்தமிட்டு “அப்பா போயிட்டு வரவா…” என்று விழிநீர் பூக்க மண்டியிட்டு அனுமதி கேட்டான். அந்த அல்லி மலரும் அழகாய்ச் சிரித்து கையசைக்க, ஆதிரைக்கு கை காட்டியவாரே சாரதாவையும் தேடினான். அவளும் ஏதோ இவன் மனம் மாற்றம் கண்டு மெய்மறந்து நிற்க; அவளிடமும் புன்னகை பூச்செண்டை கொத்தோடு கொடுத்துவிட்டு திரும்பினான்.

தூரத்தில் அந்த வெண்ணிறக் கார் வருவதும் அதிலிருந்து இருவர் இறங்குவதும் தெரிந்ததும். மணிவண்ணனின் பார்வை ஒளி மங்கத்தொடங்கியது, விழிகள் நீரால் நிறைந்து நீந்திட, கைகள் தானாகப் கும்பிட்டு நின்றது. என்ன செய்கிறோம் என்பது புரியவில்லை. யாரிடம் அழுகிறோம் என்தும் தெரியவில்லை. கூப்பிய இவன் கரத்தின் மேல் முகத்தை வைத்துக் கண்களை மூடியும் மன்னிப்புக் கேட்டானோ என்னவோ. எதிரே நின்றவர் வார்த்தைகளற்ற வருடலாய் தன் இயலாமை மொத்தமும் தனக்குள்ளே பத்திரமாக அடைகாத்துக் கொண்டு. வந்த வழியே திரும்பிப் போவதை உணர்ந்தான்.

அன்று எனக்கு என்ன வழி.. பதில்சொல் என்று அவன் சட்டையைக் கிழித்து நகங்களால் நெஞ்சில் காயமாக்கியவளா இப்படி அமைதியாய்ப் போவது.. இல்லை வேறு யாருமா…? என்ற சந்தேகத்தில் வேகமாக கண்களைத் துடைத்து பார்த்தான். போர்க்களத்தில் ஆயுதம் இழந்த அரசனைப் போல ஆராவாரம் இல்லாமல் அமைதியாய்ப் போகிறாள் அவள், என்று வியப்போடு பார்த்தான். ஆம் இவனுயிரைத் தன்னுயிராய் கொண்டு போகிற அவளிடம் உயிரில்லை. ஆனாலும் நாகரீகமாகப் போகிறாள் அந்த நளினமான மங்கை.

இறுகிய நெஞ்சம் இளகியது, இதுவரை இருந்த இருளும் தூரமாய் ஓடியது. காதுக்குள், “அப்பா…” என்ற மகிழ்ச்சி குரல் வந்து வந்து இனித்தது.

நன்றி

செந்தில் சுலோ, செருவாவிடுதி.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • பிப்ரவரி 9, 2024
சுசீலா ஆன்ட்டி
  • பிப்ரவரி 5, 2024
சலீம் மாமா
  • ஜனவரி 28, 2024
ஆவிகள் நமது நண்பர்கள்