×
Saturday 28th of December 2024

அமிர்தநாயகி சமேத நாகநாதசுவாமி கோவில், பாமணி


Amirthanayagi Naganathaswamy Temple

அருள்மிகு சர்ப்ப புரீஸ்வரர் திருக்கோவில், பாமணி

🛕 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரில் பாமணி ஆற்றின் வடக்கு திசையில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாமணி கிராமத்தில் அமிர்தநாயகி சமேத நாகநாதசுவாமி கோவில் உள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். இத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிறப்பினை உடையது.

🛕 சுவாமி பாதாளத்தில் இருந்து சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருப்பதால் பாதாளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். நாகநாதசுவாமி, பாம்பணிநாதர், திருப்பாதாளேஸ்வரர், ஸ்ரீபதி விண்ணகர ஆழ்வார் என்ற சிறப்பு பெயர்களும் உண்டு. பொதுவாக சிவாலயங்களில் சுயம்பு லிங்கத்துக்கு வெள்ளிக்கவசம் சாற்றியே அபிஷேகம் நடக்கும். ஆனால் புற்று மண்ணால் ஆன நாகநாத சுவாமிக்கு நேரிடையாகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தினமும் இருவேளை அபிஷேகம் நடைபெற்று வருவது இத்தலத்தின் தனிப்பெரும் மகிமையாகும். அம்பாள் திருநாமம் அமிர்தநாயகி.

🛕 இக்கோவில் விசேஷ அமைப்பின்படி சுவாமியை தரிசனம் செய்து நவக்கிரகங்களை வலம் வந்தால் ‘ஓம்’ என்ற ஓங்கார வடிவில் பக்தர்களின் தரிசன சுற்று முடிவடையும். பொதுவாக சிவாலயங்களில் அம்பாள் சன்னிதியை தாண்டிய பிறகே நவக்கிரகங்கள் அமைந்திருக்கும். இக்கோவிலின் விசேஷ அமைப்பின்படி இத்தலத்தில் அம்பாள் சன்னிதி தனியாக பலிபீடம் கொடி மரத்தின் அருகில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

🛕 சுகல முனிவர் என்பவர் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு வந்தார். அவர் வளர்த்த காமதேனு தரும் பாலைக் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்து வந்தார். ஒரு சமயம் அவர் வளர்த்த காமதேனு பால் சொரிந்து சிவலிங்கத்தை வழிபடுவதைக் கண்டு, முனிவர் தமக்குப் பால் குறைந்து விடுமே என்று கோபித்து காமதேனுவை அடித்தார். அதுகண்டு வருந்திய காமதேனு ஓடிச்சென்று, வழிபட்டதனால் தனக்கு நேர்ந்த நிலையை உணர்த்துவது போலச் சிவலிங்கத்தின்மீது முட்டி ஓடி வடக்கு வீதியில் உள்ள பசுபதி தீர்த்தத்தில் விழுந்து இறந்தது. அப்போது இறைவன் காட்சி தந்து பசுவை உயிர்ப்பித்தார். காமதேனு முட்டியபோது சுயம்பு லிங்க மூலத்திருமேனி முப்பிரிவாகப் பிளந்தது. சுயம்பு லிங்கமாதலால் மேற்புறம் சொர சொரப்பாகவுள்ளது. முப்பிரிவாகப் பிளந்த லிங்கம் செப்புத் தகட்டால் ஒன்றாகப் பொருத்தப்பட்டு விளங்குகிறது.

🛕 பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் வெளிப்பட்டு, தனஞ்சய முனிவராய் இத்தல இறைவனை வழிபட்டார். ஆகவே பாதாளீச்சுரம் என்று பெயர் பெற்றது. பாம்பணி, சர்ப்பபுரம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள். பாம்பணி என்பதே மருவி பாமணி ஆயிற்று. இறைவன் கருவறையில் மூலவருக்கு இடதுபுறம் தனஞ்சய முனிவர் உருவமுள்ளது. நாகலிங்கப் பிரதிஷ்டையும் காணப்படுகிறது.

நாகநாதசுவாமி கோவில் அமைப்பு

முகப்பு வாயிலைக் கடந்து உள் புகுந்தால் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. உட்கோபுர வாயிலைக் கடந்தால் நேரே மூலவர் தரிசனம். உள்பிராகாரத்தில் சூரியன், தலவிநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, துர்வாசர், சாஸ்தா, காலபைரவர், சனிபகவான், நவக்கிரகம், நால்வர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன.உள்மண்டபத்தில் வலப்பால் நடராஜ சபை உள்ளது.

🛕 மனித முகம், பாம்பு உடலுடன் ஆதிசேஷனுக்கு இக்கோவிலில் தனி சன்னதி உள்ளது. அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் என்ற அஷ்ட நாகங்களுக்கும், ராகு கேதுவிற்கும் தலைவன் ஆதிசேஷன். வேறு எங்கும் காணமுடியாத இந்த ஆதிசேஷனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் ஜாதக ரீதியாக நாகதோஷம், ராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்கள் நிவாரணமடைவர் என்பது நம்பிக்கை. மண்ணால் அமைக்கப்பட்ட லிங்கங்களுக்கு பிற கோவில்களில் அபிஷேகம் செய்ய மாட்டார்கள். ஆனால் இங்கு ஆதிசேஷன் புற்றுமண்ணால் அமைத்த நாகநாதசுவாமிக்கு அபிஷேகம் உண்டு என்பது தனி சிறப்பாகும். இங்கு பைரவரும் சனிபகவானும் சேர்ந்து அருள்பாலிப்பதால் இது சனிதோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் உள்ளது.

🛕 இத்தலத்தில் குருபகவான் நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து சிம்ம தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிப்பதால், இவரை வழிபடுபவர்களுக்கு சிம்மகுருவின் அருள் கிடைக்கும். ஒருமுறை தட்சிணாமூர்த்தியின் சீடர்கள் நால்வரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றார்கள். அப்போது இவர்களை துவார பாலகர்கள் தடுத்தனர். கோபம் கொண்ட முனிவர்கள் இவர்களுக்கு சாபம் கொடுத்தனர். இதனால் முனிவர்களுக்கு தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்க பாமணி நாகநாதரையும், சிம்ம தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு தங்கள் தோஷம் நீங்கப் பெற்றனர். சிம்மம், கும்பம், கடகம், தனுசு, மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களும், லக்னத்திற்குரியவர்களும் சிம்ம தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை. 1000 தலை கொண்ட ஆதிசேஷனே இங்கு வந்து வழிபாடு செய்துள்ளதால், இத்தலம் செவ்வாய் உட்பட சகல தோஷங்களுக்கும் நிவர்த்தி தலமாக விளங்குகிறது.

🛕 ஒரு காலத்தில் சுகல முனிவர் தன் தாயாரின் அஸ்தியை கரைப்பதற்காக காசியை நோக்கி தன் சீடனுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது மாலை நேரத்தில் முனிவர் இளைப்பாறும் பொருட்டு சீடனிடம் அஸ்தி கலசத்தை கொடுத்து விட்டு சென்றார். சீடன் அதை திறந்து பார்த்தபோது அஸ்தி கலசத்தில் தங்க பூக்களாக இருந்தது. உடனே பயந்து அதை மூடி வைத்து விட்டான். சுகல முனிவர் வந்து மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்து காசிக்கு சென்றார்.

🛕 அங்கு கலசத்தில் அஸ்தியின் சாம்பலை பார்த்த சீடன் முன்பு நீங்கள் இளைப்பாறிய இடத்தில் கலசத்தில் தங்க பூக்கள்இருந்த விவரத்தை கூறினான். உடனே அவர் அதுவே காசியை விட புனிதமான இடம் என்று கூறி மீண்டும் அங்கு வந்து ருத்ர தீர்த்தம் என்று அழைக்கப்பட்ட தற்போது வெட்டு குளம் என்று அழைக்கப்படுகிற குளத்தின் கரையில் காசிவிஸ்வநாதர்-விசாலாட்சி ஆலயம் அமைத்து அக்குளத்திலேயே தனது தாயாரின் அஸ்தியையும் கரைத்து இங்கேயே தங்கிவிட்டார்.

🛕 அப்போது அவர் தனது குடிலில் ஒரு பசுவை வளர்த்து வந்தார். ஒரு நாள் மேயச் சென்ற பசு தன்னை அறியாமலேயே புற்றின் மீது பாலை சுரந்தது. தினமும் அவ்வாறே செய்து வந்தது. மேயச் சென்ற பசு ஏன் பாலை கொடுக்கவில்லை என்று எண்ணி ஒன்றும் புரியாமல் திகைத்தார். முனிவர் ஒருநாள் மேய்ச்சலுக்கு சென்ற பசுவை பின் தொடர்ந்து சென்றார். பசு புற்றின் மீது பால் சுரப்பதை கண்ட அவர், ஒரு தடியால் பசுவை அடித்தார்.

🛕 பசு உடனே கோபமுற்று புற்றை முட்டியது. புற்று மூன்று பிளவாக பிளந்து உள்ளே இருந்த லிங்கம் வெளிப்பட்டது. பின்னர் பசு ஓடிச்சென்று தெற்கு திசையில் இருந்த குளத்தில் விழுந்து இறந்தது. உடனே சிவ பெருமான் ரிஷப வாகனத்தில் கயிலாய காட்சி கொடுத்து பசுவை உயிர்த்தெழ செய்தார். பின்னர் பசுவின் பால் அபிஷேகத்தால் நான் மிகவும் சந்தோஷம் அடைந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று பசுவிடம் கேட்டார். அதற்கு பசு, தன்னிடம் இருந்து கிடைக்கும் பொருட்கள் எல்லாம் சிவனுக்கே அர்ப்பணம் ஆக வேண்டும் என்று கேட்டது. பரமேஸ்வரனும் மிகவும் மகிழ்ந்து பசு கேட்ட வரத்தை கொடுத்தார். அன்று முதல் பசுவிடம் இருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் போன்றவை பஞ்ச கவ்யம் என்றழைக்கப்பட்டு புனிதமான பொருட்களாக ஈசனுக்கு இன்றும் அபிஷேகத்துக்கு உகந்ததாக ஆனது. சுகல முனிவரும் தன் தவறை உணர்ந்து ஈசனை வணங்கி பெரும்பேறு பெற்றார்.

🛕 தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடைபெற்ற போரில் முசுகுந்த சக்கரவர்த்தி தேவர்களுக்கு ஆதரவாக சென்று அசுரர்களை போரிட்டு வென்றார். அதற்கு இந்திரன் தான் தினமும் பூஜித்து வந்த மரகத லிங்கத்தையும், கொடி முந்திரியையும் (திராட்சை) அவருக்கு பரிசாக வழங்கினான். அவர் அந்த லிங்கத்துடனும், திராட்சையுடனும் திருவாரூர் தியாகேசர் சன்னிதிக்கு வந்தார்.

🛕 அப்போது திருப்பாதாளேசுவரத்தில் பிரம்மோற்சவம் நடப்பதால் அங்கு சென்று நிவேதனம் செய்வாயாக என்று அசரீரி கேட்டது. இதையடுத்து அவர் இங்கு வந்து திருப்பாதாளேஸ்வரரை பணிந்து திராட்சையை நிவேதனம் செய்தார். அதுமுதல் இங்கு கொடி முந்திரி எனப்படும் பச்சை திராட்சை சிறப்பு நிவேதனம் செய்யப்படுகிறது.

🛕 திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது 4 மாங்கனிகள் தோன்றின. அதை எடுத்த பிரம்மன் ஒன்றை விநாயகருக்கும், மற்றொன்றை ஆறுமுகனுக்கும் கொடுத்தார். மூன்றாவது கனியை காஞ்சியில் முளைக்கும்படி ஊன்றிவிட்டு, நான்காவது கனியை இத்தலத்திற்கு கொண்டு வந்து நாகநாதசுவாமிக்கு சாறு பிழிந்து அபிஷேகம் செய்தார். பிறகு அதன் விதையை பிரம்ம தீர்த்தத்தின் வட கரையில் ஊன்றினார். இதனால் மாமரம் இத்தல விருட்சமாகிறது. இன்றும் நாகநாதருக்கு மாம்பழச்சாறு அபிஷேகம் நடப்பது விசேஷம். மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம், நதி என ஐந்து வகையாலும் சிறப்பு பெற்றது இத்தலம் ஆகும்.



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்