×
Wednesday 27th of November 2024

பால விநாயகர் திருக்கோவில் – வடபழநி


Bala Vinayagar Temple Vadapalani

வடபழநி பால விநாயகர் கோவில்

மூலவர் பால விநாயகர்
தீர்த்தம் அரச மரம்
ஊர் வடபழநி
மாவட்டம் சென்னை

சுமார் முப்பது வருடங்களுக்கு முன் இங்கே பால விநாயகரை தங்கள் பகுதிக்குக் காவலாக இருத்தி கோவிலமைக்க நினைத்தார்கள் இப்பகுதி மக்கள். அவர்கள் ஆசை பலித்து 1983-ம் வருட குடியரசு தினம் முதல் அங்கே கோவில் கொண்டார் கஜமுகன். அப்போது அருகே இருந்த அரச மரம் ஒன்று ஆனைமுகனுக்குக் குடையாகக் கவிழ்ந்து நிழல்பரப்பத் தொடங்கியது.

கோவிலுக்கு வந்தவர்கள் அரசமரத்தினையும் வலம் வந்தார்கள். பதினாறு ஆண்டுகள் கடந்தது. வரம் தந்து தங்கள் பகுதியின் வளம் காத்திடும் பாலகணபதி ஆலயத்தை விரிவாக்கம் செய்ய எண்ணினார்கள் பக்தர்கள். அரச மரத்தினை அகற்றிவிட்டு அந்த இடத்தில் பிள்ளையாரின் பிரத்யோகமான பதினாறு வடிவங்களை பிரதிஷ்டை செய்யத் தீர்மானித்தார்கள்.

சிலைகளை செய்யச் சொல்லிவிட்டு, மரத்தை அகற்ற நாள் குறித்தார்கள். குறிப்பிட்ட நாள் நெருங்கியபோது, சிலை வடிப்பதில் சிரமங்கள் நேருவதாகச் சொன்னார்கள் சிற்பிகள் – என்ன காரணம்? ஏன் தடை? புரியாமல் தவித்தார்கள். ஏகதந்தனையே வேண்டினார்கள்.

குறித்தநாளில் மரத்தையாவது அகற்றுவோம் என்று அவர்கள் நினைக்க, அப்போதுதான் ஆனைமுகனின் எண்ணம் வேறாக இருப்பது தெரியவந்தது அவர்களுக்கு. தன்னை அகற்றாமல் இருக்க வேண்டும் என்று அந்த அரசமரம் வேண்டித் தவமிருந்ததோ என்னவோ. அரசமரத்தின் தண்டுப்பகுதியில் இருந்தே தோன்றியிருந்தார் தந்தமுகன்.

சுயம்புவாக கணபதி தோன்றியிருக்கக் கண்டவர்கள், மரத்தை வெட்டும் எண்ணத்தைக் கைவிட்டார்கள். கோடரி பிடித்திருந்த கரங்கள் கும்பிட்டுக் குவிந்தன. வேண்டுவோர் வேண்டுவன தரும் வேழமுகன், ஒவ்வொரு வடிவாக மரத்தைச் சுற்றிலும் தோன்றினார். வெகுசீக்கிரமே பதினாறு வடிவங்கள் தோன்றின.

தனியாக கணபதி வடிவங்களை பிரதிஷ்டை செய்யும் எண்ணத்தினைக் கைவிட்டு, அரசமரத்தில் தோன்றிய பதினாறு வடிவங்களையே பிரத்யேக பூஜைகள் செய்து வணங்கத் தொடங்கினார்கள் பக்தர்கள். தன் அருள் அங்கே நாளுக்கு நாள் பெருகுவதை உணர்த்துவதுபோல் மேலும் வளர்ந்து இன்று, இருபத்தொரு சுயம்பு மூர்த்தங்கள் இருக்கின்றன.

ஒரு சமயம் சேண்பாக்கத்தில் உள்ள பதினொரு சுயம்பு கணபதிகளை காஞ்சி மகா பெரியவர் தரிசித்து மகிழ்ந்திருக்கும் விஷயத்தை அறிந்த பக்தர்கள் இங்கே அவரை சிலாரூபமாகவாவது எழுந்தருளச் செய்யவேண்டும் என ஆசைப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து ஆசார்யாளின் அழகான திருவடிவம் கோவிலில் இடம்பிடித்தது.

Bala Vinayagar Temple Vadapalani Speciality in Tamil

பொதுவாக அரசமரத்தினை அதிகாலையில் மட்டுமே வலம் வர வேண்டும் என்பார்கள். ஆனால் இங்கே அதுவே ஆனைமுகனாக இருப்பதால் சூழ்வினைகள் விலக வேண்டி எப்போதும் சுற்றிவருகிறார்கள். ஏராளமான பக்தர்கள் ஆதிவாரம் எனும் ஞாயிற்றுக் கிழமைகளில் ராகுகால நேரமான மாலை நாலரை முதல் ஆறு மணி வரையிலான நேரத்தில் ஆறு எலுமிச்சம் பழங்களைக் கைகளில் ஏந்தியவாறு வலம் வந்தால் எண்ணியாவும் ஆறே வாரத்தில் ஈடேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

அரச மரத்திலிருந்து ஆனைமுகத்தோன் சுயம்புவாகத் தோன்றியது சிறப்பு. இன்று, பால விநாயகரோடு, அரச மரத்தில் தோன்றிய இருபத்தொரு விநாயகர்கள், துர்க்கை, தென்முகக் கடவுள், லட்சுமி நாராயணன், அனுமன் ஆகியோர் தரிசனம் தருகின்றனர் இங்கே. இருபுறமும் கண்ணாடிகள் பதித்த வித்தியாசமான அமைப்புள்ள சக்கர வியூக சன்னதியில் தேவியர் இருவருடன் சுப்ரமண்யன் இருக்கிறான். தரிசிக்க நெருங்கினால் கண்ணாடிகளின் பிரதிபலிப்பில் ஆறுமுகன், நூறுமுகங்கள் காட்டி சிலிர்க்கச் செய்கிறான்.

நேர்த்திக்கடன்: அபிஷேகம் செய்து வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

Bala Vinayagar Temple Vadapalani Festival

திருவிழா: விநாயகர் சதுர்த்தி, சூரசம்ஹாரம், நவராத்திரி விழாக்களோடு ஜனவரியில் ஆனைமுகன் இங்கே எழுந்தருளிய தினமான குடியரசு தினத்தில் ஏகதின லட்சார்ச்சனையுடன் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

Bala Vinayagar Temple Timings

பால விநாயகர் திருக்கோவில் திறக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

Also, read

Bala Vinayagar Temple Vadapalani Address

Bhanumathi Ramakrishna Rd, Vijayaraghavapuram, Saligramam, Chennai, Tamil Nadu 600093

 



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்