×
Wednesday 27th of November 2024

குமரமலை முருகன் (பாலதண்டாயுதபாணி) திருக்கோவில்


Kumaramalai Murugan Temple History in Tamil

குமரமலை பால தண்டாயுதபாணி திருக்கோவில்

திருத்தலம் குமரமலை முருகன் கோவில்
மூலவர் பாலதண்டாயுதபாணி
தீர்த்தம் சங்குசுனை தீர்த்தம்
ஊர் குமரமலை
மாவட்டம் புதுக்கோட்டை

முருகனின் மறுபெயர் அழகு – அந்த
முறுவலில் மயங்குது உலகு!
குளுமைக்கு அவனொரு நிலவு
குமரா எனச் சொல்லிப் பழகு!

வேதங்கள் கூறிடும் ஒளியே – உயர்
வேலோடு விளையாடும் எழிலே!

kumaramalai murugan balathandayuthapani

🛕 முதலில் வேல் உருவிலும் அதைத் தொடர்ந்து அவன் திருவுருவிலும் அவனே வழிகாட்டிய வித்தியாசமான- சக்திமிக்க திருத்தலம் குமரமலை.

Kumaramalai Balathandayuthapani

குமரமலை முருகனின் வரலாறு

🛕 சிறு வயது முதலே பழநிக்கு பாதயாத்திரை மேற்கொண்ட தீவிர முருக பக்தர் சேதுபதி. 80 வயதைக் கடந்த நிலையில், ஒருமுறை கார்த்திகையன்று பழனிக்கு காவடி எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு அவர் உடல் நோயுற்றது. “பழனிக்குச் சென்று வழிபட முடியவில்லையே? இனி நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்?” என்ற வேதனைப்பட்ட அவர் கனவில் தோன்றிய முருகன், இத்தனை ஆண்டுகள் நீ என்னைத் தேடி வந்தாய். இந்த ஆண்டு உன்னைத் தேடி நான் வருகிறேன். உன் ஊருக்கு அருகிலுள்ள குன்றில் சங்குச் செடிகள் வளர்ந்து கிடக்கும் இடத்திற்கு காலையில் நான் வருவேன். அங்கு வந்து என்னைத் தரிசனம் செய்து வழிபடு. நான் அங்கு குடிகொண்டதற்கு அடையாளமாக அந்த இடத்தில் ஒரு விபூதிப் பை, உத்திராட்ச மாலை, பிரம்பு, எலுமிச்சம் பழம் ஆகியவை இருக்கும்.

🛕 அந்த இடத்தில் மேற்கு நோக்கி ஒரு வேலை வைத்து நீயும் இப்பகுதி மக்களும் வழிபடுங்கள். இனி இந்தக் குன்று “குமரமலை” என்ற பெயருடன் விளங்கும். இப்பகுதி மக்கள் அனைவரும் அனைத்து நன்மைகளும் பெறுவார்கள்! என்று சொல்லி மறைந்தார். கனவில் முருகன் சொல்லியபடி சங்குச் செடிகளின் இடையில் இருந்த விபூதிப் பை, பிரம்பு, உத்திராட்ச மாலை, எலுமிச்சம் பழம் அனைத்தையும் கண்டு, பழனி முருகன் வந்தமர்ந்த இடத்தில் அருளாணைப்படி ஆள் உயர வேலை பிரதிஷ்டை செய்து, அப்பகுதி மக்களும் வழிபட்டனர்.

🛕 வேலை எடுத்து விட்டு, அந்த இடத்தில் பழனி தண்டாயுதபாணியின் திருவுருவத்தை எழுந்தருளச் செய்யலாம் என்று திட்டமிட்ட போதும் முருகன் தோன்றி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் இருக்கும் சிற்பியின் பெயரைச் சொல்லி, “அவர் ஒரு முருகன் சிலையை வடிவமைத்து வைத்திருக்கிறார். அதை நான் சொன்னதாகச் சொல்லி கேள், தருவார். வாங்கி வந்து நான் வந்து நின்ற சங்குச் செடி மண்டிக் கிடக்கும் இடத்தில் மேற்கு நோக்கி வைத்து வழிபடுங்கள்” என்று சொல்லி மறைந்தார்.

🛕 அந்த இடத்தில் கோவில் கட்டி பாலமுருகன் சிலையை பிரதிஷ்டை செய்தார். சுவாமிக்கு பாலதண்டாயுதபாணி என்ற திருநாமம் சூட்டினார். 1898ல், பல்லவராயர்கள் கோவிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்தனர்.

kumaramalai murugan temple entrance arch

வாதநோய்க்கு பிரார்த்தனை

🛕 வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குமரமலை அடிவாரத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடி முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வதுடன், அர்ச்சனை செய்து வழிபட்டு செல்வதால் வாதம் நோய் நீங்குகிறது. நோய் நீங்கியவுடன் மலைப்படிகளில், தங்கள் பாதங்களை பதித்து முருகனுக்கு காணிக்கை செலுத்தி வழிபடுகின்றனர். வாழ்க்கையில் சகல செல்வவளமும் பெற மூலிகைச்சாறு, நெய், பால், விபூதி அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

வேலுக்கு வளையல்

🛕 இப்பகுதி பெண்கள் தங்கள் வளைகாப்பு நிகழ்ச்சியன்று அர்த்தமண்டபத்திலுள்ள வேலில் வளையல்களை கட்டி வழிபடுகின்றனர். இவ்வாறு செய்தால் பிரசவம் எளிமையாகும் என்பது நம்பிக்கை. இவ்வாறு பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு வயதானவுடன் காது குத்தும் நேர்த்திக்கடனையும் இங்கு செய்கின்றனர். குமரமலைக்கு சஷ்டி திதிகளில் வந்து விரதம் இருப்பதன் மூலம் திருமணத்தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் செய்வதாக நம்பிக்கையுள்ளது.

சங்கு சுனைத்தீர்த்தம்

🛕 குமரமலைக்கு மேல் சங்கு வடிவிலான சுனைத்தீர்த்தம் உள்ளது. இதில் ஆண்டு முழுவதும் தண்ணீர் உள்ளது. இங்கிருந்தே சுவாமிஅபிஷேகத்துக்கு தேவையான புனித நீர் எடுக்கப்படுகிறது. கோவிலில் வழங்கப்படும் இந்த தீர்த்தத்தை பக்தர்கள் பருகுவதன் மூலம் நோய் நொடிகள் நீங்குவதாகவும் நம்பிக்கையுள்ளது. பங்குனி உத்திரத்தன்று, பத்தாம் திருநாளில் அருகிலுள்ள குன்னக்குடிப்பட்டியிலுள்ள வெள்ளாற்றில் சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.

kumaramalai murugan temple theertham

நேர்த்திக்கடன்: முருகனுக்கு அபிஷேகம் செய்தும், பால்குடம் எடுத்தும், காதுகுத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே!
உடல் பற்றிய பிணி ஆறுமே!
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற
மெத்த இன்பம் சேருமே!!
குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு
குறைகள் யாவும் போகுமே!
அவர் குடும்பம் தழைத் தோங்குமே!

🛕 திருச்செந்தூரில் மூலவருக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் அமைக்கப்பட்ட இடைவெளியில் காதை வைத்துக் கேட்டால் ஓம் என்று ஒலிப்பதைக் கேட்கலாம்.

🛕 அதேபோல் இங்கு இடும்பன் சந்நிதிக்கு முன்னால் 24 மணி நேரமும் கடற்கரை காற்றுபோல் இதமான காற்று வீசுவதை அனுபவிக்கலாம். எதிரில் மரங்களோ குளமோ எதுவுமில்லை. இது ஆச்சரியம்!

🛕 குமரமலை முருகனின் பக்தர் முத்துமீனாட்சி கவிராயர் தினசரி மலை அடிவாரத்தில் உள்ள சங்குக் குளத்தில் தண்ணீர் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து நாள்தோறும் வழிபட்டு முருகன் சந்நிதிமுன் அமர்ந்து தவம் செய்து தினமும் ஒரு பாடல் வீதம் 100 பாடல்களைப் பாடி முடித்தார்.

🛕 அவர் எழுதிய 100 பாடல்களையும் நூலாகத் தொகுத்து “குமரேச சதகம்’ என்று பெயரிட்டு, தன் பெய ரையும் “குருபாத தாசர்’ என்று மாற்றிக் கொண்டார். அந்த நூல் பக்திப் பாடல் மட்டுமல்ல; ஒவ்வொருவரும் படித்து, உணர்ந்து, நடைமுறைப்படுத்த வேண்டிய அறநூல்.

🛕 இந்தக் குமரமலை குமரேசனை வழிபடும் பக்தர்கள் வேண்டியதை வேண்டியபடி அடைகிறார்கள். நீண்ட ஆயுளும் நிறை செல்வமும் நோயற்ற வாழ்வும் மணமாலையும் மக்கட் பேறும் கிடைக்கும்.

Kumaramalai Murugan Temple Festivals

திருவிழா: சித்திரை வருடப் பிறப்பு விழா, வைகாசி விசாகம், ஆடி வெள்ளியில் பக்தர்கள் பாத யாத்திரை செல்கின்றனர். ஐப்பசியில் கந்தசஷ்டி, மாதந்தோறும் கார்த்திகை, திருக்கார்த்திகை, சோமவார விழா, தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆங்கில வருடப் பிறப்பன்று படிபூஜை விழா என சிறப்பாக திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

kumaramalai murugan temple balathandayuthapani

Kumaramalai Murugan Temple Timings

🛕 தினசரி மலையை ஒட்டியுள்ள சங்கு தீர்த்தக் குளத்தில் நீர் கொண்டு வந்து, சங்குச் செடிப் புதரில் வந்தமர்ந்த தண்டாயுதபாணிக்கு முதல் அபிஷேகமும், அதைத் தொடர்ந்து நான்கு கால பூஜையும் நடைபெறுகிறது. குமரமலை முருகன் கோவில் தினசரி காலை 07:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும்.

குமரமலை முருகன் கோவிலுக்கு எப்படி போவது?

🛕 புதுக்கோட்டையிலிருந்து காரையூர் செல்லும் சாலையில், குமரமலையை அடையாளம் காட்டும் அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருக்கிறது. காரையூர் செல்லும் வழியில் 12 கி.மீ., சென்றால் குமரமலை விலக்கு வரும். அங்கிருந்து சற்றுதூரம் நடந்தால் மலை அடிவாரம். பஸ் உண்டு. 45 படி ஏறினால் கோவிலை அடையலாம்.

அழகனின் அழகினில் இருவிழி குளிர்ந்திடும்!
அவன் விழி அசைவினில் கணைகளும் மலர்ந்திடும்!
அவன் அருள் மழையினில் உணர்வுகள் சிலிர்த்திடும்!
அறிவுடன் பொருள் புகழ் அனைத்திலும் சிறந்திட
முருகனை நினை மனமே! – நலங்கள்
பெருகிடும் தினம் தினமே!

kumaramalai murugan with peacock

Kumaramalai Murugan Temple Address

🛕 அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் குமரமலை, புதுக்கோட்டை – 622104.

Kumaramalai Murugan Temple Contact Number: +91-9442740976

 



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • நவம்பர் 7, 2024
முருகனின் ஆசிர்வாதத்துடன் எதிலும் வெற்றி பெறுவோம்
  • அக்டோபர் 22, 2024
அறுபடை முருகன் அருட்பாமாலை