- டிசம்பர் 11, 2024
உள்ளடக்கம்
🛕 இவ்வுலகைக் கருணையோடு படைத்தும், காத்தும் அருளுகின்ற கருணைத் தாயான அகிலாண்டதேவி பிரமாண்ட நாயகி ஆதிபராசக்தி வடிவுக்கரசியாய் அருள்தரும் தாயார் ஸ்ரீமேருபுரம் மஹாபத்ரகாளி அம்பாளின் திருவருட்சக்தி சொல்லிலடங்காது. சக்தியெனப் போற்றப்படும் தாய் எம்மை நாள்தோறும் காத்து அருள்கின்றாள்.
🛕 நாம் இறைவனை நம்பிக்கையுடன் போற்றி வழிபட வேண்டும். இறைவன் எம்மைப் பெரியவனாக்க ஆணவம் எம்மைச் சிறியவனாக்குகிறது. எனவே ஆணவப் பிடியிலிருந்து விடுபட்டு அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதற்கு இறைவழிபாடு செய்வதே சிறந்த வழியாகும். வாழ்க்கை பயனற்றதாகப் போகாமல் காப்பற்றப்படுவதற்கு இறைவழிபாடே சிறந்த மருந்தாகும். இறைவன் அன்பு வடிவானவன்.
🛕 எனவே நாம் இறைவன் மீது அன்பும் உறுதியும் கொண்டு அபிஷேகம் பூஜை அர்ச்சனைகள் பிரார்த்தனைகள் கூட்டு வழிபாடுகள் (பஜனை) ஆலயத் தொண்டுகள் போன்றவற்றை பக்தி பூர்வமாக நம்பிக்கையுடன் இறைவழிபாடாற்றினால் இறையருள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இறைவன்பால் காதலாகி கசிந்து கண்ணீர் மல்க நமக்கு வரும் துன்பங்கள் யாவும் மறைந்துவிடும்.
🛕 எந்நிலையிலும் உன் நாமம் என் நாவில் மறந்தறியேன் என்ற நிலையில் தொண்டாற்றிய சமய குரவர்கள், திருவருள் பெற்ற சீரடியார்கள், அம்பிகைத் தொண்டர்கள் போன்றோரின் வழிநின்று நாமும் தொண்டுகளாற்றி பயனடைவோம்.
🛕 லண்டனில் ஸ்ரீமேருபுரம் மஹாபத்ரகாளி அம்மன் கோவில் அமைக்கப் பெற்று சக்தி பெருமாட்டியை உறைவிடமாய் திகழ்ந்து வருகின்றது. இவ்வாலயத்தில் ஆழ்ந்து அகன்ற நுண்ணிய தவத்திருமேனியாக அழகு சௌந்தரியாய் விளங்கும் ஸ்ரீமேருபுரம் மஹாபத்ரகாளி அம்பாள் வீற்றிருந்து அடியவர்களுக்கு அருள் புரிகின்றாள்.
🛕 இப்படியான திருவருள் நிறைந்த தாயின் தேவஸ்தானத்தைச் சிறப்புடன் நடத்த உபயங்களை ஏற்று பூஜைகளை நடத்தும் உபயகாரர்களும், நிதி வழங்கும் அன்பர்களும், இளைஞர் யுவதியினரும் ஸ்ரீமேருபுரம் மஹாபத்ரகாளியின் அடியவர்கள் யாவரும் புண்ணிய சீலர்களே.
🛕 எம்பெருமாட்டியினுடைய திருவருள் சொரிந்து பரந்து பிரகாசித்து அடியவர்களுக்கு கருணை மழை பொழிய வேண்டும் – என மனம், வாக்கு, காயம் எனும் திரிகரண சுத்தியோடு எனதம்மை ஸ்ரீமஹா பத்ரகாளி அம்பாள் திருவடிகளை வணங்கி வேண்டுகின்றேன்.
🛕 இந்து சமயத்தில் பிறந்த நாம், எமது சமய அனுஷ்டானங்கள், விரதங்கள், விசேஷ புண்ணிய காலங்கள் ஆகியவற்றை தவறாது கடைப்பிடிப்பது தலையாய கடமையாகும். வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க நாம் நமது சமயத்தைச் சரியான முறையில் வளர்க்க வேண்டும். சமய கலாச்சார விழுமியப் பண்புகளை சரிவரப் பேணவேண்டும்.
🛕 இந்து மக்களின் புனிதமான திருநாட்களுக்குள் தமிழ் வருடப்பிறப்பு ஒன்றாகும். இத்தினத்தில் ஸ்ரீ மேருபுரம் மஹா பத்ரகாளி அம்பாளின் சர்வதிஷ்ட சகல சௌபாக்கியங்களும் பெற்று நல்வாழ்வு கிடைக்க வேண்டும். நாடும் நம் வீடும் மேன்மேலும் செழிப்புற வேண்டுமென அழகு சௌந்தரியாய் கருணை கூர்முகம் கொண்டு விளங்கும் ஸ்ரீ மேருபுரம் மஹாபத்ரகாளி அம்பாளின் பாதார விந்தங்களைப் பூசித்து போற்றி அவளது நல்லாசிகளையும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வங்களும் கிடைக்கப் பெற்று பேரானந்தப் பெருவாழ்வுடன், அன்பான உள்ளம், பண்பான குணம், இனிமையான பேச்சு, ஒற்றுமையான நிறைந்த நல்வாழ்வும் வாழவேண்டும் என ஸ்ரீமேருபுரம் மஹாபத்ரகாளி அம்பாளை வேண்டிக்கொள்வோம்!