- ஜனவரி 9, 2025
உள்ளடக்கம்
Read Mahabalipuram Temple History in English
🛕 மாமல்லபுரம் என்றாள் அனைவரது நினைவுக்கும் வருவது மாமல்லபுரத்து குகைக் கோவில் சிற்பங்கள். மகேந்திர வர்மன் & நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கற்சிற்பங்கள், குகைக் கோவில்கள், ஒற்றைக்கல் ரதம் மற்றும் கடற்கரை கோவில் ஆகியவை மாமல்லபுரத்தின் சிறப்பம்சங்களாகும். மாமல்லபுரத்து சிற்பங்கள் புராண கதைகள், இதிகாச போர்கள், ராட்சஸர்கள், மற்றும் விலங்குகள் உள்ளது உள்ளபடி தத்ரூபமாக உலகம் வியக்கும் வண்ணம் அமைந்துள்ளன. மக்கள் அனைவரும் பார்த்து வியக்கும் மகிஷாசுரமர்த்தினி சிற்பத் தொகுதி இங்குதான் உள்ளது. இவற்றுக்கான உலகம் முழுவதிலுமிருந்து பல லட்சக்கணக்கான மக்கள் வருடம் முழுவதும் வந்து செல்கின்றனர்.
🛕 சென்னையிலிருந்து தெற்கில் 56 கிலோ மீட்டர் தொலைவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வங்காள விரிகுடா கடற்கரையில் மாமல்லபுரம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மிக்க பெருமையை அளிக்கும் இவ்வூர், சும்மா இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு துறைமுகமாக விளங்கியது. கிபி ஏழாம் நூற்றாண்டு காஞ்சியில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் இவ்வூரின் வளர்ச்சிக்கு பெரிதும் காரணமாக இருந்தனர். முதலாம் நரசிம்மவர்மன்(கிபி 630 – 668) என்ற பல்லவ மன்னன் காலத்தில் இத்துறைமுகம் சிறப்புற்று இருந்தது.
🛕 நரசிம்மவர்மனின் சிறப்புப் பெயர்களில் ஒன்று ‘மாமல்லன்‘ என்பதாகும். துறைமுக பட்டினத்திற்கு நரசிம்மவர்மனின் சிறப்பு பெயர் வழங்கப்பட்டு ‘மாமல்லபுரம்’ என அழைக்கப்படலாயிற்று. ‘கடல் மல்லை‘, ‘மாமல்லை‘ ஆகி மாமல்லபுரம் ஆயிற்று. (மகாபலிபுரம் என அழைப்பது தவறாகும்) சீருடன் பல நூற்றாண்டுகள் விளங்கிய துறைமுகப்பட்டினம் கடல் நீர் உட்புகுந்ததனால் அழிந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. கடற்கரைக்கு அருகில் காணப்படும் கருங்கற்கள், கடலில் ஓரளவு புதையுண்டு காணப்படும் ஆகியவை மேற் கூறிய கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன.
🛕 மாமல்லபுரம் இன்று சிற்றூராக தோன்றிடினும் இதன் பெருமைகள் உலகறிந்ததாகும். பெருமைக்கு காரணம் இங்குள்ள சிற்பங்களே. இச்சிற்பங்களை ஆக்குவித்தவர்கள் பல்லவ மன்னர்கள் ஆவர். கற்பாறைகளில், குகைக் கோவில்களை அமைத்து கோவிற்கலையில் ஒரு புதுமையைத் தமிழ்நாட்டில் புகுத்திய பெருமை முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் மன்னனை (600-630) சேரும். முதலாம் மகேந்திர வர்மனின் மகன் முதலாம் நரசிம்மவர்மன் (630-668) தந்தையைப் பின்பற்றி குன்றுகளைக் குடைந்து குகைக் கோவில்களை (Rock-cut temples) மாமல்லபுரத்தில் அமைத்தார். இவற்றைத் தவிர மலையைச் செதுக்கி கோவில்கள் (Cut-out-temples) அமைக்கும் புதுமையையும், திறந்தவெளியில் இயற்கையாக அமைந்த பாறைகளில் புடைப்புச் சிற்பங்களை அமைக்கும் புதுமையையும் புகுத்தினர்.
🛕 ‘மாமல்லன்’ மாமல்லபுரத்தில் தொடங்கிய புதுமையான கற்கோவில்கள், திறந்தவெளி புடைப்புச் சிற்பங்கள் ஆகியவை அமைக்கும் பணி அவருக்குப்பின் பதவி வகித்த பல்லவ மன்னர்களால் தொடரப்பட்டு பல கட்டங்களில் முடிக்கப்பட்டன. இரண்டாம் மகேந்திரவர்மன், முதலாம் பரமேஸ்வரவர்மன், இரண்டாம் நரசிம்மன் என்ற இராஜசிம்மன் ஆகிய பல்லவ மன்னர்கள் இப்பணியைச் செய்தனர். கல்வெட்டுக்கள், இரண்டாம் நரசிம்மன் என்ற இராஜசிம்மனின் பணியும் பாணியும் மாமல்லபுரத்தில் ஆதிக்கம் செலுத்துவதை காட்டுகின்றன. கட்டுமான கோவில்களை அமைக்கும் புதுமையை இராஜசிம்மன் புகுத்தினார். இக்கோவில்கள் அதிட்டானம் முதல் விமானம் வரை முழுவதும் கல்லினால் கட்டப்பட்டவையாகும்.
🛕 இவ்வாறு பல்லவ மன்னர்கள் மாமல்லபுரத்தில் குடைவரைக் கோவில்கள், வெட்டு கோவில்கள், பாறை சிற்பங்கள், கட்டுமான கோவில்கள் ஆகிய நால்வகை கோவில்களை அமைத்து இத்துறைமுகப் பட்டினத்தை ஒரு சிற்பக் களஞ்சியமாக ஆக்கியிருக்கிறார்கள். சாளுக்கியரின் படையெடுப்பு முதலிய காரணங்களால் பல பணிகள் முற்றுப்பெறாத நிலையில் சில சேதமடைந்த நிலையிலும் காணப்படுகின்றன.
🛕 தவிர, விஜய நகர மன்னர்கள் ஆட்சியில் இறுதியிலிருந்து மாமல்லபுர சிற்பங்கள் கோவில்களும் கவனிக்கப்படாமல் விடப்பட்டனவாகவும் தெரிகிறது. ஏனெனில் கிபி 18ம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்கள் மாமல்லபுரத்திற்கு வந்தபொழுது இங்குள்ள சிற்பங்கள் யாவராலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்தனவாம். புறக்கணிக்கப்பட்ட நிலையில் வல்லவரின் புகழ்மிக்க நினைவுச் சின்னங்கள் முற்றிலும் அல்லது ஒரு பகுதியோ மணலின் அடியில் சென்றிருக்கலாம். இச்சிற்பங்களை மீட்பது மற்றும் பாதுகாப்பதில் ஆங்கிலேயர்கள் அதிக கவனம் செலுத்தினர். பின் இவை இந்திய தொல்பொருள் துறையின் பாதுகாப்பில் வந்தன.
மாமல்லபுரத்தில் உள்ள கற்கோவில்கள், சிற்பங்கள்
🛕 விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் ஆக அமைக்கப்பட்டுள்ள இக்கோவில். கிபி 7ம் நூற்றாண்டில் ஆண்ட ராஜசிம்மன் என்ற பல்லவ மன்னனால் கட்டப்பட்டது. இது திராவிட கட்டடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டாகும். இரவிலும் இக்கோவிலை காணும் வகையில் இக்கோவிலில் பிரகாசமான விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அலைவாய்க் கரையில் அமைந்துள்ளதால் இரவின் மின் ஒளியில் பார்ப்பதற்கு மிக அழகாகக் காட்சியளிக்கின்றன. தென்னிந்தியாவின் பழமையான கோவில்களில் ஒன்றான இதை 13 கற்காளைகள் காவல் புரிகின்றன.
🛕 மாமல்லபுரக் கடற்கரை கோவில் இரண்டு அழகிய விமானங்களுடன் காட்சியளிப்பது கடற்கரை கோவில் எனப்படுகிறது. உண்மையில் கடற்கரை கோவில்களில் மூன்று கோவில்கள் அடங்கியுள்ளன. இரண்டு சிவன் கோவில்கள் ஒரு விஷ்ணு கோவிலும் இங்கு உள்ளன. இரு சிவன் கோவில்களுக்கு விமானங்கள் உள்ளன. விஷ்ணு கோவிலுக்கு விமானம் இல்லை. இவன் கோவில்களில் உள்ள கல்வெட்டுச் சான்றுகளில் இருந்து கடற்கரை கோவில் இரண்டாம் நரசிம்மவர்மன் என்ற இராஜசிம்மன் (700 – 728) பல்லவன் அமைக்கப்பட்டது என்று அறியப்படுகிறது.
🛕 இது முழுவதும் கற்பாறைகள் கொண்ட விமானங்கள், கோவிலைச் சுற்றியுள்ள சிங்கம் முதலில் உருவச் சிற்பங்கள் ஆகியவை கலை சிறப்புமிக்கவை. இக்கோவில் பண்டைய நினைவுச் சின்னமாக விளங்குகிறதே தவிர இங்கு வழிபாடு நடைபெறவில்லை. வங்கக் கடலின் அலை மோதும் எழில்மிக்க இக்கடற்கரை கோவில் உலகப் புகழ் பெற்றது. கடல் நீரின் உப்புத்தன்மை இக்கோவிலை சேதப்படுத்தாமல் பாதுகாப்பது நமது கடமையாகும்.
🛕 திமிங்கல வடிவிலான பாறையில் 27மீ x 9 மீ அளவு பரப்புடையது. இது உலகின் மிகப்பெரிய தொகுப்பு சிற்பமாகும் இதில் கடவுள்கள், தேவர்கள், மனிதர்கள், அரக்கர்கள், பறவைகள் மற்றும் பூச்சிகள் போன்றவை மிகவும் கலை நேர்த்தியுடன் செதுக்கப்பட்டு காண்போர் கண்ணைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளது.
🛕 மாமல்லபுரத்தின் மத்தியில் தலசயனப் பெருமாள் கோவிலுக்கு அருகில் ‘அர்ஜுனன் தவம்‘ என்ற சிற்பக் காட்சி உள்ளது. ஒரு குன்றின் 9 மீட்டர் உயரம் வரை உள்ள பாறைப்பகுதி செதுக்கப்பட்டு புடைப்புச் சிற்பங்களாக காட்சி தருகிறது. ‘அர்ஜுனன் தவம்‘ என்பது மகாபாரதத்தில் வரும் நிகழ்ச்சியாகும். கௌரவர்களுடன் போரிடுவதற்காக அர்ஜுனன் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் ‘பாசுபதம்‘ என்ற ஆயுதத்தைப் பெற்றார் என்பது மகாபாரத செய்தியாகும். குப்தர் காலத்தில் வாழ்ந்த பாரவி என்ற புலவர் தமது ‘கிராதார்ஜுன்யம்’ என்ற நூலில் விளக்கிக் கூறியுள்ளபடி ‘அர்ஜுனன் தவம்’ சிற்பக் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. ‘அர்ஜுனன் தவம்’ ஒரு ‘சிற்ப அதிசயம்’ ஆகும்.
🛕 சிவபெருமான், தேவர்கள், மனிதர்கள், யானை, சிங்கம், மான் முதலிய மிருகங்கள், பறவைகள் ஆகிய சுமார் 100 புடைப்புச் சிற்பங்களை ‘அர்ஜுனன் தவம்’ சிற்பத்தில் காணலாம். ‘அர்ஜுனன் தவம்’ ஒரு சிறந்த கலை கருவூலமாகும். இது உலக கலைஞர்கள் யாவராலும் போற்றப்படுகிறது!
🛕 ஒரே கல்லால் செதுக்கப்பட்ட கோவில்கள் ஐந்தும் வெவ்வேறு பாணியில் உள்ளன. இவை ஐந்து ரதங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த ஐந்து ரதங்களில் நான்கு ரதங்கள் ஒவ்வொன்றும் ஒற்றை கல்லினால் நிர்மாணிக்கப்பட்டவை என்ன கருதப்படுகின்றது. இந்த ரதங்களின் சுவர்களில் கடவுள்களின் உருவங்கள் மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.
🛕 கடற்கரைக் கோவிலில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் ‘ஐந்து கல் ரதங்கள்’ என்ற சிற்ப வினோதங்கள் உள்ளன. இந்த ஐந்து கிரகங்களின் பெயர்கள் பின்வருமாறு:
🛕 கோவில் தெய்வங்களைத் தெருக்களில் உற்சவமாக கொண்டுவருவதற்கு பயன்படுவது தேர் அல்லது ரதம் எனப்படும். இந்த ரதங்களின் அமைப்பை மாமல்லபுரக் கல் ரதங்கள் கொண்டுள்ளன. இயற்கையாக அமைந்திருந்த ஒரு குன்றை வெட்டியும், செதுக்கியும் இந்த ஐந்து ரதங்கள் அமைக்கப்பட்டன என்றும், தர்மராஜ ரதத்தின் உச்சிப் பகுதியை அக்குன்றின் உச்சியாக இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
🛕 இந்த ரகங்கள் மகாபாரதத்தில் வரும் ‘பஞ்சபாண்டவர்‘ பெயர்களையும் திரௌபதியின் பெயரையும் கொண்டுள்ளன. பஞ்சபாண்டவர்களின் பெயர்களை கொண்டிருந்தாலும் உண்மையில் இவை சிவன், துர்க்கை முதலிய தெய்வங்களின் வழிபாட்டிற்காக அமைக்கப்பட்ட கோவில்களே ஆகும். இயற்கையாக இந்த மலைப்பாறை அதே இடத்தில் கோவிலாக வடிக்கப்பட்டது. ஆனால், இவற்றில் இப்போது வழிபாடு இல்லை.
🛕 ஐந்து கல் ரதங்களுக்கு அருகில் யானை, சிங்கம், நந்தி ஆகியவற்றின் அழகிய சிற்ப உருவங்கள் உள்ளன. திரௌபதி ரகத்திற்கு எதிரில் சிங்கமும், அர்ஜுனன் ரகத்திற்கு எதிரில் நந்தியும், நகுல சகாதேவ ரகத்திற்கு அருகில் யானையும் உள்ளன. ஐந்து ரதங்கள் வடிக்கப்பட்ட கொன்றைச் சேர்ந்த பாறைகளிலிருந்தே இந்த மூன்று உருவங்களும் வைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
🛕 ஐந்து கல் ரதங்களைத் தவிர மாமல்லபுரத்தில் மேலும் நான்கு கல் ரதங்கள் உள்ளன. அவைகளில் ஒன்று கணேச ரதம். ‘அர்ஜுனன் தவம்’ சிற்பக் காட்சிக்கு அருகில் இந்த ரதம் உள்ளது. சிவபெருமானுக்காக வடிக்கப்பட்ட ரதமாக இருப்பினும் கருவறை லிங்கம் நீக்கப்பட்டு, சமீபகாலத்தில் கணேசனின் திருவுருவம் வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ரதம் ‘கணேச ரதம்’ என்ற பெயரைப் பெற்றுள்ளது. மாமல்லபுரம் ஊரை தாண்டியவுடன் மாமல்லபுரம் – திருக்கழுக்குன்றம் சாலையில் பிடாரி ரதங்கள் உள்ளன. இவை இரண்டு ரகங்கள். பிடாரி என்ற பெண் தெய்வத்தின் அருகில் இந்த ரதங்கள் இருப்பதால் இப்பெயர் பெற்றன. இந்த ரதங்களுக்குத் தெற்கில் வலையன் குட்டை என்ற குளத்திற்கு எதிரில் உள்ள ரதமும் வலையன் குட்டை ரதம் என்று அழைக்கப்படுகிறது.
🛕 குகைக் கோவில்கள் கோனேரி மண்டபம், மஹிசாசுரமர்த்தினி குகை, வராக மண்டபம், ஆதி வராஹ மண்டபம், திருமூர்த்தி குகை, மற்றும் கிருஷ்ண மண்டபம் குறிப்பிடத்தக்க குகை கோவில்களாகும். குகைக் கோவில்கள் முதன்முதலாக மகேந்திரவர்ம பல்லவனால் கட்டப்பட்டதாகும். இதன் நளினம் மற்றும் ஒப்பனை அழகு எளிமை ஆகியவற்றுக்காக இக்கோவிலில் போற்றப்படுகின்றன.
🛕 மலைப் பகுதியையும், பாறைகளையும் குடைந்து அமைக்கப்பட்ட பல்லவர் குடைவரை கோவில்கள் பல மாமல்லபுரத்தில் உள்ளன. குகை கோவில்களில் பெரும்பாலானவை மண்டபக் கோவில்களாக விளங்குகின்றன அவை:
🛕 மேற்கூறிய குகை கோவில்களிலும், குகை மண்டபச் சுவர்களிலும் புராண நிகழ்சிகளை சித்தரிக்கும் அழகிய சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மகிஷாசுரமர்த்தினி மண்டபச் சுவரில் துர்க்கை, எருமையின் தலைக்கொண்ட அசுரனுடன் ஓரிடம் காட்சி, ‘விஷ்ணுவின் அழகிய நித்திரை கோலம்‘ ஆகியவை சமயச் சிறப்பும், கலைச் சிறப்பும் மிக்கவையாகும். கிருஷ்ண பகவானின் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவத்தை, அழகுடன் சித்தரித்துக் காட்டும் சிற்பங்கள் கிருஷ்ண மண்டபத்தில் உள்ளன.
🛕 கோபமுற்ற இந்திரனின் செயலால் ஏற்பட்ட கடும் மழையால் கோபியர், குழந்தைகள் ஆகியோரும், பல மிருகங்களும் அவதியுற்ற பொழுது, கிருஷ்ண பகவான் கோவர்த்தன மலையை பெயர்த்து, அதை ஒரு குடை போல் பிடித்து மழையில் அவதியுறும் மக்களுக்கும் மாக்களுக்கும் அடைக்கலம் கொடுக்கும் காட்சியைக் கல் புராணக் கதையாக கூறுகிறது! வராக குகை, ஆதி வராக குகை திருமாலுக்கு வடிக்கப்பட்ட வையாகும். தெய்வத் திருவுருவங்களை தவிர ஆதிவராக குகையில், சிம்மவிஷ்ணு, மகேந்திரவர்மன் ஆகிய பல்லவ மன்னர்களின் ஆளுயர உருவங்கள் அவர்களது மனைவியருடன் காணப்படுகின்றனர்.
🛕 மஹிசாசுரமர்த்தினி குகை மிகவும் துல்லியமாக செதுக்கப்பட்ட ஒரு அற்புதமான குகைக் கோவிலாகும். இதில் ஒருபுறம் மகிஷாசுரமர்த்தினி மகிஷாசுரனை வதம் செய்யும் காட்சியும் மறுபுறம் விஷ்ணு பகவான் பள்ளி கொண்டிருக்கும் காட்சியும் மிக நேர்த்தியான முறையில் காண்போரை கவரும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது.
🛕 கிருஷ்ண மண்டபம் ஸ்ரீ கிருஷ்ணரின் சிறப்பு தொகுப்பாக உள்ளது. இதில் அவர் காத்தருளும் உயிர்களான மனிதர்கள், புள், பூச்சி, இனங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
🛕 கிருஷ்ணரின் வெண்ணை உருண்டை என்பது வெட்ட வெளியில் உள்ள ஒரு உருண்டையான பாறையாகும். இது எந்த ஒரு பிடிமானம் இல்லாமல் இருப்பது போன்று தோற்றமளிக்கிறது. இதை நான்கு பேர் சேர்ந்து தள்ளினாள் உருண்டு விழுந்து விடுவது போன்று தோற்றமளிக்கும். ஆனால் ஒரு கூட்டமே சேர்ந்து தள்ளினாலும் இது நிலையாக உள்ளது. இப்பாறையை பல்லவ அரசர்கள் யானையைக் கொண்டு தள்ளமுயன்றார்களாம். ஆனால் அது சிறிது கூட நகரவில்லையாம்.
🛕 வராக குகை ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ள ஒரு சிறிய மண்டபம் ஆகும். இங்கு நான்கு பிரிவுகளில் நிற்கும் துவார பாலகர்கள் செதுக்கப்பட்டுள்ளன.
🛕 புலிக் குகை பல்லவர் கலாச்சார நிகழ்வுகளை அரங்கேற்றுவதற்குரிய ஒரு திறந்தவெளி அரங்கமாக இது செதுக்கப்பட்டுள்ளது. இங்கு பல அழகிய பழங்கால சிற்பங்கள் இருப்பதைக் காணலாம். இது மாமல்லபுரத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
🛕 ‘அர்ஜுனன் தவம்’ சிற்ப காட்சியில் இருந்து சிறிது தொலைவில் தல சயன பெருமாள் கோவில் உள்ளது. சந்திரகிரியில் ஆட்சி புரிந்த விஜயநகர மன்னர்கள் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது. இக் கோவிலின் அருகில் விஜயநகர காலத்து இராய கோபுரம் ஒன்று முற்றுப்பெறா நிலையில் உள்ளது.
Click here to view these Temples on Google Map: Mahabalipuram Temple Google Map