×
Sunday 29th of December 2024

மருதமலை முருகன் – சுப்ரமணிய சுவாமி கோவில்


Arulmigu Subramanya Swami Temple

மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில்

மூலவர் சுப்ரமணிய சுவாமி (மருதாசலமூர்த்தி)
அம்மன்/தாயார் வள்ளி, தெய்வானை
தல விருட்சம் மருதமரம்
தீர்த்தம் மருது சுனை
புராண பெயர் மருதவரை
ஊர் மருதமலை
மாவட்டம் கோயம்புத்தூர்

Maruthamalai Murugan Temple History in Tamil

தல வரலாறு: பாம்பாட்டிச்சித்தர், இளவயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். மக்கள் இவரை, “பாம்பு வைத்தியர்” என்றே அழைத்தனர். ஒருசமயம் இவர், நாகரத்தின பாம்பு ஒன்றைத்தேடி மருதமலைக்கு வந்தார். அப்போது சட்டைமுனிவர் அவருக்கு காட்சி தந்து, “உடலுக்குள் இருக்கும் பாம்பை (குண்டலினி சக்தி) கண்டறிவதுதான் பிறப்பின் பயனாகும். அதைவிடுத்து காட்டில் திரியும் பாம்புகளை தேடி அலைவது வீண் வேலையே!” என்றார். அவரது சொல் கேட்ட பாம்பாட்டிச்சித்தர் ஞானம் பெற்றார். உயிர்களைத் துன்புறுத்துவதில்லை என்றமுடிவுக்கு வந்தார். முருகனை வணங்கி தியானத்தில் ஈடுபட்டார். முருகன் அவருக்கு வள்ளி, தெய்வானையுடன் காட்சி தந்து ஞான உபதேசம் செய்தார். பக்தர்கள் இவரை, மருதமலை மாமணி என்றுசெல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.

How Many Steps in Marudhamalai Murugan Temple?

  • 837 – சுமார் 837 படிகளுடன் அமைந்த மலைக்கோவில் இது. வரதராஜப் பெருமாளுக்கு சன்னதி இருக்கிறது. பாம்பாட்டிச்சித்தர் சன்னதி செல்லும் வழியில் சப்தகன்னியர் சன்னதி உள்ளது. ஆடிப்பெருக்கின்போது இங்கு விசேஷ வழிபாடு நடக்கிறது. மலைக்கோவிலுக்குச் செல்லும் வழியில் நடுவே இடும்பன் சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரே புலி வாகனம் உள்ளது.

Maruthamalai Murugan Temple Special

அர்த்தஜாம பூஜை விசேஷம்: மருதமலையில் முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார். இந்த சிலையே மூலஸ்தானத்தில் இருக்கிறது. இரண்டு கரங்களுடன் உள்ள இவர், பழநி முருகனைப் போலவே, கையில் தண்டத்துடன், இடதுகையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார். தலைக்கு பின்புறம் குடுமி உள்ளது. காலில் தண்டை அணிந்திருக்கிறார். தினமும் ராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பு என மூன்று வித அலங்காரங்களுடன் காட்சி தருவார். விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பும், கிருத்திகை, தைப்பூசம் நாட்களில் தங்க கவசமும் அணிகிறார். அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இவரை தண்டாயுதபாணியாக சுயரூபத்தில் தரிசிக்க முடியும். அப்போது ஆபரணம், கிரீடம் என எதுவும் இல்லாமல், வேட்டி மட்டும் அணிவிக்கின்றனர். அருணகிரிநாதரால் பாடப்பெற்றவர் இவர். இத்தலம்  ஏழாம்படை வீடாக  கருதப்படுகிறது.

Pambatti Siddhar Temple

பாம்பாட்டி சித்தர் சன்னதி: மலைப்பாறைகளுக்கு மத்தியில் உள்ள குகையில் பாம்பாட்டிச் சித்தர் சன்னதி உள்ளது. வலது கையில் மகுடி, இடது கையில் தடி வைத்துள்ளார். அருகில் சிவலிங்கம், நாகர் இருக்கிறது. முருகனுக்கு பூஜை முடிந்ததும், சித்தருக்கும் பூஜை செய்யப்படுகிறது. பாம்பாட்டிச்சித்தர் தற்போதும் இங்கு முருகனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். தினமும் இவரது சன்னதியில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி வைத்து விடுகிறார்கள். மறுநாள் இந்த பால் குறைந்திருக்குமாம். சித்தர், இந்த பாலை முருகனுக்கு அபிஷேகித்து பூஜை செய்வதாக சொல்கிறார்கள்.

Pambatti Siddhar temple entrance in Maruthamalai

பாம்பு முருகன்: பாம்பாட்டிச்சித்தர் சன்னதியிலுள்ள பாறையில் நாக வடிவம் இருக்கிறது. இந்த நாகத்தின் வடிவிலேயே பாம்பாட்டிச்சித்தருக்கு முருகன் காட்சி தந்தார். இந்த நாகத்தை முருகனாகவே பாவித்து வழிபடுகிறார்கள். இதன் பின்புறம் பீடம் போன்ற அமைப்பில் மூன்று வடிவங்கள் உள்ளது. இவற்றை சிவன், கணபதி, அம்பிகையாக கருதி பூஜை செய்கிறார்கள். பொதுவாக முருகன்தான் சிவன், அம்பாளுக்கு நடுவில் காட்சி தருவார். இங்கு விநாயகர், பெற்றோருக்கு மத்தியில் காட்சியளிப்பது விசேஷம்.

Maruthachala Moorthy

மருதாச்சல மூர்த்தி: மருத மரங்கள் நிறைந்தும், நோய் நீக்கும் மருந்து குணங்களை உள்ளடக்கிய மூலிகைகளைக் கொண்டதுமான மலையில் அருளுபவர் என்பதால் இங்கு முருகன், “மருதாச்சலமூர்த்தி” என்று அழைக்கப்படுகிறார். மருதமரமே இத்தலத்தின் விருட்சம். தீர்த்தத்தின் பெயர் மருது சுனை. இந்த தீர்த்தம் பிரசித்தி பெற்றது. மலையில் உள்ள ஒரு மருதமரத்தின் அடியில் இருந்து இந்த தீர்த்தம் உற்பத்தியாகி வருவதாக சொல்கிறார்கள். இந்த தீர்த்தமே சுவாமி அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

ஆதி முருகன்: புராதனமான சிவன் கோவில்களில் சிவன், சுயம்புலிங்கமாக இருப்பார். ஆனால், இத்தலத்தில் முருகன் சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். இவருடன் வள்ளி, தெய்வானையும் சுயம்புவடிவில் இருப்பது விசேஷம். முருகனுக்கு பின்புறத்தில் பிளவு இருக்கிறது. வள்ளி உயரமாகவும், தெய்வானை சற்று உயரம் குறைந்தும் காட்சி தருகின்றனர். இந்த முருகனே இத்தலத்தின் ஆதிமூர்தியாவார். இவரது சன்னதி  ஆதி மூலஸ்தானம்  எனப்படுகிறது. இவருக்கு முதல் பூஜை செய்யப்பட்ட பின்பே, பிரதான முருகனுக்கு பூஜை நடக்கிறது. கிருத்திகையில் இவருக்கு அதிகளவில் பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

பஞ்ச விருட்ச விநாயகர்: அரச மரத்தின் அடியில் விநாயகர் இருப்பார். இத்தலத்தில் அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்கள் இணைந்து வளர்ந்திருக்க அதன் அடியில் விநாயகர் இருக்கிறார். இவரை, “பஞ்ச விருட்ச விநாயகர்” என்று அழைக்கிறார்கள். அருகில் முருகப்பெருமான், மயில் மீது அமர்ந்து, கையில் வேலுடன் காட்சி தருகிறார்.

சோமாஸ்கந்த தலம்: சிவன், அம்பாளுக்கு நடுவில் முருகன் இருக்கும் அமைப்பை, சோமாஸ்கந்த அமைப்பு என்பர். இங்கும் சிவன், அம்பாளுக்கு நடுவில்தான் முருகப்பெருமான் காட்சி தருகிறார். முருகத்தலம் என்றாலும் சுவாமிக்கு வலப்புறம் பட்டீஸ்வரர் சன்னதியும், இடப்புறத்தில் மரகதாம்பிகை சன்னதியும் உள்ளன. கோஷ்டத்தில் உள்ள முருகன் சிகிவாகனர் (மயிலை வாகனமாக உடையவர்), “சேனானி (படைத்தளபதி)” என்ற பெயரில் அழைக்கப்படுவது விசேஷம்.

தோஷம் நீக்கும் விபூதி பிரசாதம்: பாம்பாட்டிச்சித்தருக்கு ஆடம்பர அலங்காரம் செய்யப்படுவதில்லை. விபூதிக்காப்பு செய்து, காவியுடை அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். மனிதர்கள் ஆடம்பரம் இல்லாமல், எளிய வாழ்க்கை வாழ வேண்டும் என்பது இதன் மூலம் உணர்த்தப்படுகிறது.

Thanthondri Vinayagar

தம்பிக்கு உகந்த விநாயகர்: மருதமலை கோவிலுக்குச் செல்லும் வழியில் அடிவாரத்தில் “தான்தோன்றி விநாயகர்” சன்னதி இருக்கிறது. இச்சன்னதியில் விநாயகர், சுயம்புவாக இருக்கிறார். யானைத்தலை மட்டும் உள்ள இவருக்கு உடல் இல்லை. இவர், மலையிலுள்ள முருகன் சன்னதியை நோக்கி, தும்பிக்கையை நீட்டி காட்சி தருவதுவிசேஷம். அருகில் மற்றொரு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுயம்பு விநாயகருக்கு பூஜை செய்த பின்பே, பிரதான விநாயகருக்கு பூஜை நடக்கிறது. முருகனுக்கு உகந்த நாட்களான கிருத்திகை, சஷ்டி, விசாகம் மற்றும் அமாவாசை நாட்களில் இவருக்கும் விசேஷ பூஜை நடக்கிறது. எனவே இவரை, “தம்பிக்கு உகந்த விநாயகர்” என்றும் அழைக்கிறார்கள். மருதமலை சுப்பிரமணியரை தரிசிக்கச் செல்பவர்கள் இவரை வணங்கிவிட்டுச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம். மலைக்கோவிலுக்கு படி வழியாகச் செல்லும் பக்தர்கள் மட்டுமே இவரை வணங்கிச் செல்கிறார்கள். வாகனத்தில் செல்பவர்கள், இவரைக் கவனிக்காமல் சென்று விடுகிறார்கள். வாகனத்தில் வந்தாலும், அடிவாரத்திலுள்ள இவரை வணங்கியபிறகே செல்ல வேண்டும் என்பது நியதி.

குதிரையில் வந்த முருகன்: முருகனுக்கு வாகனம் மயில் என்றாலும், ஒரு சில ஊர்களிலுள்ள கோவில்களில் அவரை விழாக்காலங்களில் குதிரையில் எழுந்தருளச் செய்வர். இதற்கு காரணம் என்ன தெரியுமா? முற்காலத்தில் இக்கோவிலில் சில திருடர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பினர். அப்போது, முருகன் குதிரை மீதேறிச் சென்று அவர்களை மறித்து, பொருட்களை மீண்டும் கோவிலில் சேர்க்கச் செய்தார். அதோடு அவர்களை பாறையாக மாற்றி விட்டார். முருகன் குதிரையில் வேகமாகச் சென்றபோது, குதிரை மிதித்த இடத்தில் பள்ளம் உண்டானது. மலைப்பாதையில் உள்ள ஒரு பாறையில் இந்த தடம் இருக்கிறது. இக்கல்லை குதிரைக்குளம்பு கல் என்கிறார்கள். இம்மண்டபத்தில் முருகன், குதிரை மீது வந்த சிற்பம் இருக்கிறது.

Marudhamalai Murugan Temple Prarthanai

? திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் விநாயகர், முருகனை வேண்டி மரத்தில் மாங்கல்யக்கயிறு மற்றும் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள். பாம்பாட்டிச்சித்தருக்கு அலங்காரத்துக்கு பயன்படுத்திய விபூதியை பிரசாதமாக தருகிறார்கள். நாக தோஷம், விஷப்பூச்சி கடிபட்டவர்கள் இந்த விபூதியை நீரில் கரைத்து சாப்பிட்டால் நோய் குணமாவதாக நம்பிக்கை. தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விபூதியை உடலில் பூசிக்கொள்கிறார்கள்.

Maruthamalai Murugan Temple Nerthikadan

? மன நிம்மதி வேண்டுபவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள் பாம்பாட்டி சித்தர் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி, வெண்ணிற மலர், இனிப்பான நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள்.

Marudhamalai Temple Festival

? வைகாசி விசாகத்தன்று முருகனுக்கு 108 பால் குட அபிஷேகம் நடக்கிறது, தைப்பூசத்தை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. பூசத்தன்று காலையில் திருக்கல்யாணம், மாலையில் தேர்த்திருவிழா நடக்கும். அன்று சுவாமி, யானை வாகனத்தில் எழுந்தருள்வார். தினமும் மாலையில் தங்க ரதத்தில் சுவாமி வலம் வருகிறார்.

Marudhamalai Temple Timings

? காலை 5.30 மணி முதல் 1 மணி வரை மாதியம் 2 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

Marudhamalai Temple Karunai Kadale Kandha Potri

Read also,

Maruthamalai Murugan Temple Address

? Temple Rd, Marudhamalai Adivaram, Coimbatore, Tamil Nadu 641046

Contact Number: +914222422490

 



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 19, 2024
ஆண் & பெண் குழந்தைகளுக்கான முருகன் பெயர்கள்
  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • நவம்பர் 7, 2024
முருகனின் ஆசிர்வாதத்துடன் எதிலும் வெற்றி பெறுவோம்