×
Monday 20th of January 2025

அருள்மிகு தண்டாயுதபாணி கோவில், பழனி


Read Palani Murugan Temple History in English

Palani Murugan Temple History in Tamil

பழனி மலை முருகன்

🛕 முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலாகும். இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி போகர் சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர்மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன. மலைகளில் மருந்து கிடைப்பது இயற்கை. ஆனால் ஒரு மலையே மருந்தாய் அமைந்தது அபூர்வம்! அந்த அபூர்வ மலையே திருஆவினன்குடி என்றும் பழனி என்றும் அழைக்கப்படுது.

Palani Name Meaning in Tamil

🛕 பழனி என்பது மலையின் பெயராகும். பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி ஸ்தலத்தையும் உள்ளிட்ட நகரமே பழனி என்று அழைக்கப்படுது. இத்தலம் “பழனி” என அழைக்கப்படுவதன் காரணம், சிவனும், பார்வதியும் தம் இளைய மைந்தன் முருகப்பெருமானை “ஞானப் பழம் நீ” என அழைத்ததால், “பழம் நீ” என வழங்கப் பெற்றுப் பின்னர் பழனி என மருவியது.

  • திரு – லட்சுமி
  • ஆ – காமதேனு
  • இனன் – சூரியன்
  • கு – பூமாதேவி
  • டி – அக்கினிதேவன்

🛕 இந்த ஐவரும் முருகனை பூசித்தமையால் இந்த ஸ்தலத்திற்கு “திருவாவினன் குடி” என்று ஆயிற்று. இந்நகரம் மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ அமைந்துள்ளது. கடைச்சங்ககாலத்தில் பழனி – பொதினி என்று அழைக்கப்பட்டு வந்ததாகவும், பொதினி என்ற பெயரே நாளடைவில் பழனி என்று ஆகிவிட்டதாகவும் அகநானூறு கூறுகிறது.

🛕 திருவாவினன்குடி கோவிலுக்கு அருகில், முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட சரவணப் பொய்கை தீர்த்தமும், கோவிலில் உள்ள மகாலட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி முதலியவர்களின் சன்னதிகளும், சித்திரங்களும் இவ்வரலாற்றை விளக்குகின்றன. கயிலையில் முருகப்பெருமானைப் பிரிந்த சிவனும், உமாதேவியும் வருந்தினர். இறைவனைக் குறிக்கும் “சச்சிதானந்தம்” என்ற பெயரில் வருகின்ற “சத்” என்னும் பதம் சிவபெருமானையும், “சித்” என்னும் பதம் பார்வதி தேவியையும், “ஆனந்தம்” என்னும் பதம் முருகப்பெருமானையும் குறிக்கும்.

Palani Temple History in Tamil

🛕 முருகனைப் பிரிந்த துயர் தாளாத சிவபெருமானும், உமாதேவியும், முருகனைப் பின் தொடர்ந்து திருவாவினன் குடிக்கு வந்து “பழம் நீ” என்று முருகனுக்குச் சூட்டிய திருப்பெயரே நாளடைவில் மருவி “பழனி” என்று ஆகிவிட்டது என்று பழனி ஸ்தல புராணம் கூறுகிறது. பழனி மலைமேல் உள்ள கோவிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சிவன், பார்வதி, கணபதி, முருகன் ஆகிய சிற்பங்கள் பழத்திற்காக உலகை வலம் வந்த போட்டியையும், மலைமேல் முருகப்பெருமான் சன்னதிக்குத் தென்பாகமாக காணப்படும் கைலாசநாதர் ஆலயம் இறைவனும் இறைவியும் முருகனைப் பின் தொடர்ந்து வந்து சமாதானம் செய்ததையும் உணர்த்துகின்றன.

🛕 பொதிகை மலையில் வந்து தங்கிய அகஸ்திய முனிவர் தன் சீடனான இடும்பாசுரனை கயிலை சென்று அங்கு முருகனுக்குரிய கந்த மலையில் காணப்படும் சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களையும் தனது வழிபாட்டிற்காக கொண்டு வரும்படி பணித்தார். இடும்பாசுரன் சிறந்த பக்திமானாக இருந்தப்படியினால், அகஸ்தியரின் கட்டளைப்படி, தனது மனைவியாகிய இடும்பியுடன் கயிலைக்குச் சென்று சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு குன்றுகளையும், ஒரு பெரிய பிரம்ம தண்டத்தின் இருபுறங்களிலும் காவடியாகக் கட்டித் தொங்கவிட்டு, தோள் மீது சுமந்து கொண்டு வந்தான்.

🛕 இவ்விரு கிரிகளையும் திருவாவினன் குடியிலேயே நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருள்புரியவும் பெருவிருப்பம் கொண்டு முருகப்பெருமான் குதிரை மேல் செல்லும் அரசனாக வடிவெடுத்து வந்தார். இடும்பன் வழி தெரியாது தவித்துக் கொண்டு நின்றான். முருகப்பெருமான் இடும்பனைத் திருவாவினன் குடிக்கே அழைத்து வந்து சற்று இளைப்பாறி விட்டுப் போகும்படி கூறினார். அவ்வண்ணமே இடும்பனும் காவடியை இறக்கி வைத்துவிட்டு இளைப்பாறினான். மீண்டும் காவடியைத் தூக்க முடியவில்லை. அதன் காரணத்தை ஆராய்ந்தான் இடும்பன்.

🛕 அப்போது சிறுவன் ஒருவன் கோவணத்தாண்டியாய் கையில் ஒரு சிறு தண்டு ஏந்தி சிவகிரி குன்றின்மீது நிற்பதைக் கண்டான் இடும்பன். அச்சிறுவனை நோக்கி மலையை விட்டுக் கீழிறங்கும்படிக் கட்டளையிட்டான் இடும்பன். ஆனால் அச்சிறுவனோ அக்குன்று தனக்கே உரியதென்று உரிமை கொண்டாட, இதனால் கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்று, பிறகு முடியாமல் வீழ்ந்தான். பின்னர் இடும்பன் மனைவியான இடும்பியும், அகஸ்திய முனிவரும் ஓடி வந்து வேண்டிக் கொள்ளவே, அவர்களுக்காகவே சிறுவனாக வந்த முருகன் மனமிறங்குவது போன்று இடும்பனை உயிர்ப்பித்தார்.

🛕 இடும்பனது சீலத்தையும் குருபக்தியையும் மெச்சிய முருகப்பெருமான் அன்று முதல் இடும்பனுக்கு, தனது காவல் தெய்வமாக விளங்கும் பேற்றை அளித்ததோடு இடும்பனைப் போன்று, சந்தனம், பால், புஷ்பம், பன்னீர் போன்ற பொருட்களையெல்லாம் காவடி எடுத்துத் தன் சன்னதிக்கு வருவோர்க்கெல்லாம் அருள்பாலிப்பதாக வாக்களித்தார். அன்றுமுதல் முருகன் ஆலயங்களில் காவடி செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது.

🛕 மலைமீது முருகனை வழிபடச் செல்பவர்கள் முதலில் மலைப் பாதையிலுள்ள இடும்பன் சன்னதியில் வணங்கிச் செல்லுதல் வேண்டும். இடும்பன் சிறந்த வரப்பிரசாதியாய் விளங்கி அருள்புரிகின்றார். இச்சிவகிரியின் உச்சியில்தான் தண்டாயுதபாணி என்று அழைக்கப்படும் முருகன் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது.

How to Worship Palani Murugan?

🛕 திருவாவினன்குடி ஆலயம் பழனிமலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் இருக்கிறது. இவ்வாலயத்தின் வடகிழக்கில் சிறிது தூரத்தில் சரவணப் பொய்கை காணப்படுகிறது. முருகனை தரிசனம் செய்ய வருபவர்கள் இப்பொய்கையில் நீராடிச் செல்வர். இப்பொய்கையின் அருகிலிருந்துதான் காவடி எடுக்கப்போகும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளைக் கொண்டு செல்வர். திருவாவினன்குடி கோவிலில் முருகப்பெருமான் மயில் மீதமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாகக் காட்சி தந்தருள்கின்றார். இங்குள்ள முருகப்பெருமானைத் தரிசிக்கும் பொருட்டு, மகாவிஷ்ணு, சிவபெருமான், இந்திரன் முதலியோர் வந்து இங்கே கூடியதாகவும் நக்கீரர் கூறுகிறார்.

🛕 இப்பெருமானை வழிபட்ட பின்பே மலைக்கோவிலுக்கு செல்வது மரபு. இத்திருத்தலம் முன்பு நெல்லிவனமாக இருந்தது என்பதற்கு ஓர் ஆதாரம் உண்டு. என்னவெனில், இங்கு தல விருட்சம் நெல்லி மரமாகும். திருவாவினன்குடி கோவிலிருந்து ஞான தண்டாயுதபாணியின் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் விளங்கும் மலை பழனி மலையாகும். இம்மலைக்கு எதிரில் இடும்பன் மலை என்றழைக்கப்படும் சக்திகிரி காணப்படுகிறது.

How many Steps in Palani Murugan Temple?

🛕 இம்மலையைச் சுற்றி சுமார் 3 கி.மீ. தொலைவிற்கு சோலைகள் நிறைந்த அழகிய கிரிப் பிரகாரமும், இப்பிரகாரத்தின் திருப்பங்களில் பெரிய மயிலின் உருவச் சிலைகளை உடைய மண்டபங்களும் இருக்கின்றன. கிரிவலம் மிகவும் சிறப்புடையதாகும். மலைப் பாதையின் முன்பக்கம், மலையின் அடிவாரத்தில் பாத விநாயகர் ஆலயமும், அதற்கு எதிரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளன. அருகிலுள்ள மயில் மண்டபத்திலிருந்து 695 படிக்கட்டுகள் நம்மை மலைக் கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றன. வழி நெடுக இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு ஏராளமான மண்டபங்களும், இடையிடையே பல ஆலயங்களும் இருக்கின்றன.

🛕 மூன்றாவது படைவீடான இத்திருத்தலத்தில் குமரப்பெருமான் தனது ஆண்டிக் கோலத்தின் மூலமும் குன்றின் உச்சியில் கோவில் கொண்டிருப்பதன் மூலமும் ஒரு உண்மையைப் போதிக்கிறார். ஆனந்தமயமான ஆண்டவனை அடைய வேண்டுமானால், ஆன்மாக்கள் முதலில் பற்றை ஒழிக்க வேண்டும். பற்றை ஒழித்த நிலை நீடிக்க வேண்டுமானால் மனதை இறைவனிடம் செலுத்தினால்தான் முடியும். மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் சிலை வடிவில் தோன்றினாலும், உண்மையில் அவரது திருமேனி போகர் எனும் சித்தரால், “நவபாஷாணம்” எனப்படும் ஒன்பது வகை மருந்துகளால் உருவாக்கப்பட்டதாகும்.

🛕 இப்படை வீட்டில் முருகப்பெருமான் அபிஷேகப் பிரியராக சிவனின் அம்சமாக விளங்குகிறார். மற்ற திருத்தலங்களைப் போலல்லாமல் இங்கு இரவு பூஜை முடியும் வரை சன்னதி சாற்றப்படுவதில்லை. அதிகாலை முதல் இரவுப் பூஜை முடியும்வரை சதா பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்தவண்ணமே இருக்கின்றன. அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன. தண்டாயுதபாணி சுவாமியை மொட்டையாண்டியாகப் படங்களில் சித்தரித்திருந்தாலும், இப்பெருமான் சடாமுடியுடனே விளங்குகின்றார் என்பதனை அபிஷேக காலத்தில் நன்கு அறியலாம்.

🛕 ஆதியில் போக சித்தராலும், அவரது சீடராகிய புலிப்பாணி முனிவராலும் வழிப்பட்டு வந்த ஞான தண்டாயுதபாணியின் கோவில் முதன்முதலில் சேர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டதாகவும், அதன் காரணமாக இத்தலத்தில் வழிபட கேரள மக்கள் மிகவும் அதிகமாக வருவதாகவும் சொல்லப்படுகிறது. சபரிமலை ஐயப்ப சுவாமியைச் சென்று தரிசித்து வருபவர்களும், குருவாயூரப்பனைத் தரிசித்து வருபவர்களும் பழனிக்குச் சென்று பழனி ஆண்டவனையும் வழிபட்டே தங்களது ஸ்தல தரிசனத்தைப் பூரணமாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்ற வழக்கமும் நிலவி வருகிறது.

Palani Murugan Temple Festivals

திருவிழா: வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்.

Palani Temple Alangaram & Pooja Timings

Time Pooja Alangaram
06:40 AM to 07:15 AM Vizhapooja – விளா பூஜை (சாது) Sanniyasi Alangaram
08:00 AM to 08:30 AM Sirukalasanthi – சிறுகால சந்தி பூஜை (வேடன்) Vedan Alangaram
09:00 AM to 09:30 AM Kalasanthi – காலசந்தி பூஜை (பாலசுப்பிரமணி) Balasubramaniar Alangaram
12:00 PM to 12:45 PM Uchikkalam – உச்சிக்கால பூஜை (வைதீகாள்) Vaitheekal Alangaram
05:30 PM to 06:15 PM Sayarakshai – சாயரட்சை பூஜை (ராஜ-அலங்காரம்) Raja Alangaram
08:30 PM to 09:00 PM Rakkalam – இராக்கால பூஜை (புஷ்ப அலங்காரம்) Puspha Alangaram

திறக்கும் நேரம்: திருஆவினன்குடி, மலைக்கோயில், பெரியநாயகி கோயில் ஆகிய மூன்று கோயில்களும் காலை 6 மணியில் இருந்து, இரவு 9 மணி வரையில் தொடர்ந்து திறந்திருக்கும்.

How to Reach Palani Murugan Temple?

வழித்தடம்: இக்கோவில் திண்டுக்கல் மாவட்டத்தின் கீழ் வருகிறது. திண்டுக்கல்-கோயம்புத்தூர் ரயில் பாதையில் சுமார் 60 கி.மீ. தொலைவில் எழில் கொஞ்சும் இயற்கை வனப்புடன் இத்திருத்தலம் அமையப் பெற்றுள்ளது.

Also read,

🛕 இவ்வளவு சிறப்பு வாய்ந்த கந்தப் பெருமானை ஞான தண்டாயுதபாணி வடிவில் வணங்கி, தரிசனம் செய்து ஞானமும், அருளும் பெறுவோமாக..

Murugan Arupadai Veedu List in Tamil

Palani Murugan Temple Address

Arulmigu Dhandayuthapani Swamy Temple,

Giri Veethi, Palani, Tamil Nadu 624601

 



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஜனவரி 20, 2025
தைப்பூசம் - திருவிழா, தைப்பூச விரதம்
  • ஜனவரி 9, 2025
பட்டீஸ்வரம் அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்
  • டிசம்பர் 19, 2024
ஆண் & பெண் குழந்தைகளுக்கான முருகன் பெயர்கள்