- நவம்பர் 14, 2024
உள்ளடக்கம்
திருத்தலம் | அருள்மிகு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் திருக்கோவில் |
---|---|
மூலவர் | ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் |
தல விருட்சம் | நெல்லி மரம் |
ஊர் | பீளமேடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
ஆஞ்சநேயர் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக அனைவராலும் வணங்கப்படுபவர். இறைவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக அவதரிக்கிறார். இந்த கலியுகத்தில் அர்ச்சாவதாரமாக அதாவது சிலை வடிவில் அருள்பாலித்து வருகிறார். அர்ச்சாவதாரமாக அருள் பாலிக்கும் இறைவனை நாம் ஆடி, பாடி, தொழுது அவன் திருவடிகளை சேர வேண்டும் என இந்து மதம் வலியுறுத்துகிறது.
இங்குள்ள உற்சவ விக்ரகங்கள், இந்த ஆலயம் உருவாவதற்கு முன்பிருந்தே பூஜிக்கப்பட்டு வந்த சிறப்புக்குரியவை. ஞானானந்தகிரி சுவாமிகளின் பிரதான சீடர்களுளள் ஒருவரான ஹரிதாஸ்கிரி சுவாமிகள் தாம் நீணட காலமாக பூஜையில் வைத்திருந்த ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் விக்ரகங்களையும், சாளகிராமத்தையும் வைகானச பரம்பரையைச் சேர்ந்த ஒரு பக்தரிடம் கொடுத்து, இவற்றை வழிபட்டு வா! ஒரு காலகட்டத்தில் இப்பகுதியில் ஓர் ஆஞ்சநேயர் ஆலயம் அமையும். அதில் இந்த விக்ரகங்களை பிரதிஷ்டை செய் எனக் கூறினார்.
சுவாமிகள் அனுகிரகத்தின்படி கோவை பீளமேடு அவினாசி ரோட்டின் அருகே அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் ஆலயம் கட்டப்பட்டது. அவரது ஆணைப்படி அந்த விக்ரகங்களையும் சாளகிராமத்தையும் ஆஞ்சநேயர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து 2004ம் ஆண்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது.
அச்சமயம் நான்கு வருடமாக மழை இல்லாமல், வறட்சியின் பிடியில் கோவை சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. அதனால் 48 நாட்கள் நடைபெற்ற மண்டல பூஜையின்போது, மழைக்காக சிறப்பு வழிபாடுகளும் செய்யப்பட, மக்களை குளிர்விக்கும் வண்ணம் பெருமழையை பெய்வித்து, நீர்நிலைகள் நிரம்பிவழியும்படி அனுகிரகம் செய்தார் இந்த ஆஞ்சநேயர்.
இக்கோவிலில் ஆஞ்சநேயரது திருமேனி சாளக்கிராமத்தினால் ஆனது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் மேற்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். இடுப்பில் கத்தியுடன் போர்க்கோலத்தில் கருவறையில் காட்சி தருகிறார். இதுபோன்ற தோற்றத்தில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம் என்கின்றனர். அபய ஹஸ்தம் கொண்டுள்ளார். எட்டடி உயரத்தில் கோமுகி வடிவில் காணப்படுகிறார். இடது கரத்தில் கதாயுதம் வைத்துள்ளார். வலது உள்ளங்கையில் மஹாலட்சுமி வாசம் செய்கின்றாள். வடக்கு நோக்கி காணப்படும் வால், தரிசிப்போருக்கு தோஷ நிவர்த்தி செய்கிறது.
இத்தலத்தில் எந்த இடத்தில் நின்று தரிசனம் செய்தாலும் உயிரோட்டமுள்ள ஆஞ்சநேயரின் அருள் பார்வையை உணரமுடிகிறது.
கோயம்புத்தூர் ஸ்ரீ அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயரைப் பற்றி இங்குள்ள ராஜாமணி பட்டாச்சாரியார் கூறும் போது,”இவருக்கென எட்டு விதமான சிறப்புக்கள் உள்ளன. எனவே தான் இவரை அஷ்டாம் ஆஞ்சநேயர் என்கிறார்கள்“, என்றார்.
இவருக்குரிய சிறப்பு அம்சங்களைக் குறிக்கவே அஷ்டாம்ச என்று திருநாமத்துடன் சேர்த்து குறிப்பிட்டுள்ளனர்.
1 . வலது கரம் – பக்தர்களை அஞ்சேல் என ஆறுதல் தருகின்றது.
2 . இடது கரத்திலுள்ள கதாயுதம் – பேராசை, கோபம், ஆணவம், காமம் ஆகியவற்றை அழிப்பது.
3 . மேற்கு நோக்கி திருமுகம் தரிசனம் தருவது.
4 . பாதங்களிரண்டும் தெற்கு நோக்கி இருப்பது மரண பயத்தை அகற்ற.
5 . வால் குபேர திசை நோக்கியிருப்பது, வால் முழுவதும் தரிசிக்க முடிவது, சனி பாதிப்பிலிருந்து காத்திட.
6 . சிவலிங்கத் திருமேனியிலேயே ஆஞ்சநேயர் உருவம் அமைந்துள்ளது.
7 . வலது உள்ளங்கையில் திருமகள் அமர்ந்திருப்பது.
8 . சூரிய – சந்திரர்களை கண்களாக கொண்டுள்ளது.
பிரார்த்தனை: பயம், நோய்கள் தீர, எதிரிகளை அழிக்க, மரண பயம் நீங்க, செல்வச் செழிப்புடன் திகழ, அஷ்டலட்சுமியின் அனுக்கிரகம் கிடைக்க பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்: பிரார்த்தனை நிறைவேறியதும் அபிஷேம் செய்தும், துளசியால் அர்ச்சனை செய்தும் வழிபாடு செய்கின்றனர்.
திருவிழா: தினசரி ஆறு கால பூஜைகள் வைகானச ஆகமப்படி நடந்து வருகின்றன. சனிக்கிழமைகளிலும், மூல நட்சத்திர நாளிலும் சிறப்பு அலங்காரமும், பூஜைகளும் செய்யப்படகின்றன. சித்திரை முதல் நாள், புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி முப்பது நாட்கள், தை முதல்நாள் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும் மார்கழி அமாவாசையன்று கொண்டாடப்படும் ஆஞ்சநேய ஜெயந்தியே பெருந்திருவிழாவாகும். அன்று புஷ்பாங்கி சேவை நடைபெறும். தமிழ் வருடப்பிறப்பன்று 10008 கனிகளால் அலங்கரிக்கப்பட்ட பழக்காப்பு அலங்காரம்.
புரட்டாசி சனிக் கிழமைகளில் 10008 வடைகளால் உருவாக்கப்பட்ட வடைமாலை சாத்தப்படுகிறது. இரண்டாவது சனியன்று செந்தூரக்காப்பு அலங்காரம், மூன்றாம் சனியன்று ரோமங்களுடன் கூடிய வானர உருவம், 4வது சனிக்கிழமை முத்தங்கி சேவை, தை முதல் நாள் கரும்பு வன அலங்காரம் என அருள்பாலிக்கும் அழகைக் காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். இதுதவிர வெண்ணெய்க் காப்பு, ராஜ அலங்காரமும் இவருக்குச் செய்யப்படுகிறது.
கோவில் திறக்கும் நேரம்: காலை 07.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை -மாலை 05.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை கோவில் திறந்திருக்கும்.
Peelamedu Anjaneyar Temple Contact Number: +91-9443334624
கோயம்புத்தூர் ஜங்ஷனிலிருந்து 6.8 கி.மி தொலைவிலுள்ளது. தண்டு மாரியம்மன் கோவிலிலிருந்து 5.7 கி.மி தொலைவிலுள்ளது. காந்திபுரத்திலிருந்து 4.6 கி.மி தொலைவு. அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் ஆலயம் கோவை அவினாசி சாலையில் சுகுணா கல்யாணமண்டபத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
Avinashi Rd, near ramapadhuka hall, Peelamedu, Coimbatore, Tamil Nadu 641004.