×
Saturday 28th of December 2024

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோவில்


திருஇந்தளூர் அருள்மிகு பரிமள ரங்கநாயகி ஸ்ரீ பரிமள ரங்கநாதர் கோவில்

Thiruindalur Sri Parimala Ranganayaki Sri Parimala Ranganatha Swamy Temple

திருத்தலம் அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோவில், திருஇந்தளூர்
மூலவர் பரிமள ரங்கநாதர், சுகந்தவனநாதர், மருவினிய மைந்தன்
தாயார் பரிமள ரங்கநாயகி, சந்திரசாப விமோசனவல்லி
தலத்தின் புராண பெயர் திரு இந்தளூர்
தலத்தின் வேறு பெயர் திருவிழந்தூர்
பாடியவர்கள் திருமங்கையாழ்வார், முத்துசுவாமி தீட்சிதர்
விமானம் வேதசக்ர விமானம்
தீர்த்தம் இந்து புஷ்கரிணி
வழிபட்டோர் பிரம்மன், எமன், கங்கை, காவிரி, பிரம்மா, சூரியன், சந்திரன், அம்பரீசன்
பழமை 2000 ஆண்டுகளுக்கு மேல்

Sri Parimala Ranganathar Temple, Thiruindalur

கோபுரம் முழுசும், கதை சொல்லும் சுதைச்சிற்பங்கள். வெண்ணெய் திருடும் கண்ணனும், அவன் களித்தோழர்களும் கூட இருக்காங்க. ஒரு அடுக்கில் இடது புறம் கருடவாகனத்தில் பெருமாளும் வலதுபுறம் பள்ளிகொண்ட பரந்தாமனும். கொள்ளை அழகு!

திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேச தலங்களில் 26-வது திவ்ய தேசமாக திகழ்கிறது, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவில். சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாக ஸ்ரீ பரிமள ரங்கநாதர் கோவில் இருக்கிறது. முற்காலத்தில் இந்த இடம் சுகந்தவனமாக இருந்ததால் மூலவர் ‘பரிமள ரங்கநாதன்‘ என்று அழைக்கப்படுகின்றார். சோழர்கால கட்டிடக்கலை கொண்ட கோவிலாக இருக்கிறது. இக்கோவிலின் இறைவனாக பரிமள ரங்கநாதரும், இறைவியாக பரிமள ரங்கநாயகியும் இருக்கின்றனர். இத்தல பெருமாள் வீர சயனத்தில் கிழக்கு பார்த்து அருள்பாலிக்கிறார்.

ஏகாதசி விரதம் சிறப்பு பெற காரணமாக இருந்த தலம், ஸ்ரீ பரிமள ரங்கநாதர் கோவில். கங்கை, காவிரி, பிரம்மா, சூரியன், சந்திரன் என பலரும் பெருமாளை பூஜித்த தலம் ஆகும்.

thiruindalur sri parimala ranganayaki sri parimala ranganatha swamy

சந்திரனின் சாபம் நீக்கிய தலம்

ஒரு சமயம் சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்குவதற்கு இத்தலத்தில் பள்ளிக் கொண்டிருக்கும் பெருமாளை வந்து வழிபட்டான். பகவான் அவனது பிரார்த்தனைக்கு இரங்கி சாபவிமோசனம் அளித்தார். தனது பெயராலேயே இவ்வூர் வழங்கப்பட வேண்டும் என்று சந்திரன் பெருமாளிடம் வேண்டிக்கொண்டதால் இந்தளூர் என்று ஆனதாகக் கூறுவர். ‘இந்து’ என்ற பெயருக்கு ‘சந்திரன்’ என்று பொருள். இந்து + ஊர் – இந்தளூர்.

Thiruindalur Parimala Ranganathar Temple History in Tamil

திரு இந்தளூர் கோவில் வரலாறு

ஏகாதசி விரத மகிமை

தல புராணங்களின் படி இப்பகுதியை ஆண்ட அம்பரீசன் மன்னன் நூறாவது ஏகாதசி விரதம் முடித்தால் அம்பரீசனுக்கு தேவலோகப் பதவி கூட கிடைக்க வாய்ப்புள்ளது என்பதால், மானிடனுக்கு அப்பதவி கிடைத்தால் தேவர்களின் மதிப்பு குறைந்து விடும் என்று அஞ்சினர். இதனால் தேவர்கள் துர்வாச முனிவரிடம் முறையிட்டனர். துர்வாச முனிவரும் அம்பரீசனின் விரதத்தைத் தடுக்கும் பொருட்டு பூலோகத்துக்கு வந்தார். அவர் வருவதற்குள் மன்னன் விரதத்தை முடித்திருந்தான். துவாதசி நேரம் முடிவதற்குள் அவன் உணவு அருந்தியிருக்க வேண்டும். அப்படி செய்தால்தான் ஏகாதசி விரதத்தின் முழுப்பயன் அவனுக்குக் கிடைக்கும். ஏகாதசி விரத நாளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், தேவலோகத்தில் அனைவரும் கலக்கத்துடன் இருந்தனர்.

அம்பரீசன் உணவு உண்ணத் தயாராக இருந்த சமயத்தில், துர்வாச முனிவர் உள்ளே நுழைந்தார். முனிவர் வந்ததால் அவரையும் உணவருந்த அழைத்தான் அம்பரீசன். முனிவரும் அதற்கு சம்மதித்து, நதியில் நீராடிவிட்டு வருவதாக கூறிச் சென்றார். நீண்ட நேரம் முனிவர் வராததை நினைத்து கவலை அடைந்தான் அம்பரீசன். குறித்த நேரத்தில் (துவாதசி நேரம் முடிவடைவதற்குள்) உணவு அருந்த வேண்டுமே, என்ன செய்வது என்று வேதியர்களிடமும் அந்தணர்களிடம் கலந்தாது ஆலோசித்தான்.

நீராடிவிட்டு காலம் தாழ்த்தி வந்தால், அதற்குள் துவாதசி நேரம் முடிந்துவிடும், அம்பரீசனின் ஏகாதசி விரதம் தடைபட்டு விடும் என்ற எண்ணத்தில் இருந்தார் துர்வாச முனிவர். துவாதசி முடிய இன்னும் சில மணித் துளிகளே இருந்த நிலையில், உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்தால் விரதம் முடிந்து ஏகாதசி விரதத்தின் முழுப்பயனும் கிடைத்துவிடும் என்று தலைமைப் பண்டிதரின் ஆலோசனையின் பேரில், அவ்வாறு செய்து, தன் விரதத்தை பூர்த்தி செய்து, முனிவருடன் உணவருந்தக் காத்திருந்தான் அம்பரீசன்.

இதை ஞான திருஷ்டியால் உணர்ந்த துர்வாச முனிவர் மிகவும் கோபம் அடைந்தார். ஒரு பூதத்தை வரவழைத்து அம்பரீசனை கொல்ல ஆணையிட்டார். அம்பரீசன் இச்செயலுக்கு அஞ்சி, பரிமள ரங்கநாதரிடம் சரண் புகுந்தான். பெருமாள் மிகுந்த கோபத்துடன் பூதத்தை விரட்டினார்.

அனைத்து சம்பவங்களையும் அறிந்த துர்வாச முனிவர் பெருமாளிடம் மன்னித்து அருள வேண்ட, பெருமாளும் மன்னித்தருளினார். பின்பு, நூறு ஏகாதசி விரதம் இருந்து முடித்த அம்பரீசனிடம், “வேண்டியதைக் கேள்” என்றார் பெருமாள். அம்பரீசனும், “தாங்கள் இத்தலத்தில் வீற்றிருந்து, பக்தர்களின் குறைகேட்டு அருள்புரிய வேண்டும்” என்று வேண்ட, பெருமாளும் அவ்வண்ணமே இத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

thiruindalur parimala ranganathar temple amman statue

Parimala Ranganathar Temple Special in Tamil

திருஇந்தளூர் கோவில் சிறப்பு

கங்கையை விட காவேரி நதி இத்தலத்தில் புனிதத்தன்மை அதிகம் பெறுவதாக கருதப்படுகிறது. இத்தலம் ஏகாதசி விரதத்திற்குரிய தலமாக இருப்பதால் மாத ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி தினங்களில் இக்கோவிலுக்கு வந்து பெருமாளை வழிபட்டு சென்று ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்களின் வாழ்வில் சிறப்பான பலன்கள் ஏற்படும் என்பது அனுபவசாலியான பக்தர்களின் நம்பிக்கை. சந்திர பகவானின் தோஷம் நீங்கிய கோவில் என்பதால் இங்கு வந்து பரிமள ரங்கநாதரையும், ரங்கநாயகி தாயாரையும் வழிபடுபவர்களுக்கு சந்திரனின் தோஷங்கள் நீங்குகிறது. தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் துளசி இலைகளை கொண்டு அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.

கோவில் அமைப்பு

ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் 350 அடி நீளமும் 230 அடி அகலமும் கொண்ட பெரிய கோவிலான இத்தலத்தின் வாசலில் சந்திர புஷ்கரிணி தீர்த்தம் உள்ளது. சந்திரன் இத்தீர்த்தத்தில் நீராடி தன் சாபம் நீங்கப் பெற்றதாகக் கூறப்படுகிறது. பெருமாளின் முகத்தை சந்திரன், பாதத்தை சூரியன், நாபிக் கமலத்தை பிரம்மன் பூஜிப்பதாக தல வரலாறு கூறுகிறது. பெருமாளின் தலை அருகே காவிரித் தாயாரும், திருவடி அருகே கங்கைத் தாயாரும் வழிபடுகிறார்கள். எமனும் அம்பரீசனும் பெருமாளின் திருவடியை பூஜை செய்கிறார்கள்.

thiruindalur parimala ranganathar temple kodimaram

மூலவர் பரிமள ரங்கநாத பெருமாள், வீர சயனத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். மூலவர் சந்நிதியின் மேல் உள்ள விமானம் ‘வேத சக்ர விமானம்’ என்று அழைக்கப்படுகிறது. ஏகாதசி அன்று விரதம் இருக்க நினைப்பவர்கள் இத்தலப் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு விரதத்தைத் தொடங்கினால் கேட்டது அனைத்தையும் பெருமாள் கொடுப்பார் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறிய பின், துளசியால் அர்ச்சனை செய்து பெருமாளை வழிபடுவது வழக்கம். தனிசந்நிதியில் பரிமள ரங்கநாயகி தாயார் அருள்பாலிக்கிறாள்.

thiruindalur sri parimala ranganathar sculpture

நம் மனதையும், கண்ணையும் கவரும் அற்புதமான சிற்பங்கள்

இக்கோவில் சிற்பங்களும் பேரழகு நிறைந்ததாய் விளங்குகின்றன. கோவில் கோபுரத்தை தாண்டி கொடிமரம் தாண்டிய உடனேயே பெருமாளின் தசாவதாரச் சிற்பங்கள் நம்மை வரவேற்கின்றன.

மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமண அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராமர் அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் என அவதாரங்களின் அணிவகுப்பு. பெருமாளின் 10 அவதாரங்கள் நமக்கு உணர்த்துவது ஒரு உன்னத தாத்பர்யம். மீன் போன்ற சிறிய மச்ச வடிவத்தில் ஆரம்பித்து, அடுத்து சற்று பெரிய ஆமையாக கூர்ம வடிவத்தில், பின் அதனைவிட சற்று பெரிய பன்றி வடிவம் வராகமாய், பின்னர் மனிதனும் விலங்கும் சேர்ந்த அமைப்பு நரசிம்மராய், பிறகு சிறிய வடிவிலான வாமணனாக மனித வடிவம், பின்னர் காட்டுவாசி போல வாழ்ந்த பரசுராமன், அதன்பின் மனிதன் இத்தகைய பண்புகளுடன்தான் வாழவேண்டும் என்று உணர்த்திய ராம அவதாரம், பலம் பொருந்திய வடிவில் பாலராமராக, மனிதன் தனக்குள்ளேயே இறைவனைக் காணலாம் என்னும் தத்துவத்தை உணர்த்த எளிய மனிதப் பிறவி எடுத்து நம்மிடையே வாழ்ந்து அனைவருக்கும் நண்பராக விளங்கிய கண்ணன், அநியாயங்களை அழிக்க பிறவி எடுக்கப் போகும் கல்கி அவதாரம் என மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியை தசாவதாரத்தின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

வாலியை மறைந்து நின்று ராமர் கொன்றது எத்தனை கேள்விகளை நம் மனத்துள் உண்டாக்கினாலும், தர்மத்தை நிலைநாட்ட சில விஷயங்களை செய்துதான் ஆகவேண்டும் என்பதை உணர்த்தும், ராமர் சுக்ரீவனுக்கு முடிசூட்டி வைக்கும் சிற்பம் அழகு.

thiruindalur parimala ranganathar temple raman sugreeva sculpture

தன்னை சீண்டுவதற்காக தனது வாலில் நெருப்பு வைத்தவர்களுக்கு பாடம் கற்பிக்க இலங்கைக்கு நெருப்பு வைத்த அனுமனது பிரமிக்க வைக்கும் சிற்பம். ஒவ்வொரு வினைக்கும் செயலுக்கும், எதிர் வினை கட்டாயம் உண்டு. அவை நல்லவையோ, தீயவையோ, என்பதை உணர்த்தும் சிற்பம்.

thiruindalur parimala ranganathar temple anjaneya sculpture

பிரிதிவிராஜன், சம்யுக்தையை சிறைபிடிப்பது போன்றதொரு சிற்பவடிவம்.

thiruindalur parimala ranganathar temple prithviraj samyukta sculpture

காண்போரது கண்ணையும், கருத்தையும் கவரும் கிருஷ்ணரின் காளிங்க நர்த்தனம்.

thiruindalur parimala ranganathar temple kalinga narthana statue

மூவுலகத்தையும் அளந்த பெருமான் மூன்றாவது அடியை எங்கு வைக்க எனக் கேட்க, மகாபலிச் சர்க்கரவர்த்தி தனது தலையின் மேல் மூன்றாவது அடியை வைத்துக் கொள்ளச் சொன்ன காட்சி கண்முன்னே.

thiruindalur parimala ranganathar temple mahabali chakravarthy statue

ஸ்ரீதேவி, பூமாதேவி சமேதராய் காட்சி தரும் மகாவிஷ்ணு. ஐந்து தலை நாகத்தின் மேல் அமர்ந்த நிலை.

mahavishnu sat on 5 head snake with sridevi bhudevi

நம் உள்ளத்தை கொள்ளை கொண்ட கிருஷ்ணன், பாமா ருக்மணியுடன்.

krishna with bama and rukmini

சீதையை இலங்கையில் கண்டதற்கு சாட்சியாக, சீதா பிராட்டி தந்த கணையாழியை ராமரிடம் சேர்ப்பிக்கும் அன்பின் விசுவாசி அனுமன்.

anjaneya kanaiyali story statue

உலகை காப்பவன் கண்ணன் என்றாலும், அவனைக் காப்பவள் தாயார் யசோதை தானே. பெற்ற பாசத்தைவிட வளர்த்த பாசம் பல ஆயிரம் மடங்கு பெரிது என்பதை உணர்த்தும் தாய் மகன் உறவு, கண்ணன் யசோதை உறவு. அவர்கள் பாசம் சிற்ப வடிவில்.

kannan with yashoda statue

தன் புல்லாங்குழல் இசையால் ஆறறிவு மனிதர்களை மட்டுமன்றி, ஐந்தறிவு ஜீவன்களையும் தன்வசப் படுத்திய வேணுகோபாலனின் இன்னிசை நமக்குக் கேட்கிறது அந்த சிற்பத்தை பார்க்கும்போது.

krishna with flute sculpture

குழந்தை வடிவில் கண்ணன் ஆலிலை மேலே.

aalilai krishna sculpture

இது போன்ற கோவில் தரிசனத்தில், சிற்பங்களை காணும்போது கற்பனை வளமும், ஸ்லோகங்களை சொல்லி பாடும் போது மொழி வளமும், கடவுளைக் காணும்போது மன வளமும், என திருக்கோவில் செல்வதற்கு ஆன்மிகம் என்ற ஒரு விஷயத்தை தாண்டி பல்வேறு சங்கதிகளை உள்ளடக்கியது திருக்கோவில் தரிசனம்.

பஞ்சரங்க தலம்

இத்தலம் பஞ்சரங்க தலங்களில் ஒன்றாகும். காவிரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதனின் கோவில்கள் அமைந்துள்ள நதித்தீவுகள் பஞ்சரங்க தலம் என்று அழைக்கப்படுகின்றன. ரங்கம் என்றால் அரங்கம். (மண்டபம் / சபை).
ஆதிரங்கம் (ரங்கநாத சுவாமி – ஸ்ரீரங்கபட்டணம் – கர்நாடக மாநிலம்), மத்தியரங்கம் (கஸ்தூரி ரங்கன் – ஸ்ரீரங்கம் – தமிழ்நாடு), அப்பால ரங்கம் – அப்பால ரங்கன் – அப்பக்குடத்தான் திருப்பேர் நகர் என்ற கோவிலடி – தமிழ்நாடு), சதுர்த்தரங்கம் – ஹேம ரங்கன் (ஆராவமுதன் சாரங்கபாணி கோவில், கும்பகோணம் தமிழ்நாடு) பஞ்சரங்கம் – பரிமள ரங்கன் (மருவினிய மைந்தன் பரிமள ரங்கநாதர் கோவில், திருஇந்தளூர், தமிழ்நாடு) ஆகியன பஞ்சரங்க தலங்கள் எனப்படும்.

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதன் கோவில் மாட வீதியில் மிகப் புராதனமான ஹயக்ரீவர் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு ஸ்வாமி தேசிகனும் லட்சுமி ஹயக்ரீவரும் காட்சி தருகிறார்கள்.

பெண் சாபம் தீர்க்கும் பெருமாள்

பிரார்த்தனை: பெண் பித்தால் தவறு செய்தவர்கள், பெண்களின் சாபத்துக்கு ஆளானவர்கள், பெண் வாரிசு பிறக்கவில்லையே என்று கவலைப்படுபவர்கள் இங்கு வந்து சாந்தி செய்தால் அவர்களது அனைத்துத் குறைகளும் விலகிவிடும். ஏகாதசி விரதம் துவக்க நினைப்பவர்கள் இத்தல பெருமாளை வழிபட்டு, துவக்கினால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியதும் துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.

சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் இந்தளூர் பெருமாள் மீது கீர்த்தனைகள் இயற்றியுள்ளார்.

திருமங்கையாழ்வார் 11 பாசுரங்கள் பாடியுள்ளார்.

பிரபந்தம்:

நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி யாவா வென்று இரங்கி
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே –4-9-1-

சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என்
எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே–4-9-2-

பேசுகின்றது இதுவே வையம் ஈரடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர் உம்மைக் காணும்
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்ற்றது இதுவே காணும் இந்தளூரீரே-4-9-3-

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காயாய்த்து அடியோர்க்குத்
தேசம் அறிய வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக்
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான்
வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே -4-9-4-

தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய்
எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்கே
எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே -4-9-5-

சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே –4-9-6-

மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள வெம்மைப் பணி யறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே
காட்டீர் ஆனீர் நுந்தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே -4-9-7-

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே –4-9-8-

எந்தை தந்தை தம்மான் என்று எமர் ஏழு அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை தன்னுள் முந்தி நிற்றீர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே -4-9-9-

ஏரார் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக்
காரார் புறவில் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த
சீரார் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்து
ஆராரவரே யமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே -4-9-10-

அன்ன வுருவி னரியை திரு மெய்யத்து இன்னமுத வெள்ளத்தை இந்தளூ ரந்தணனை –பெரிய திருமடல் – 126

thiruindalur parimala ranganathar temple entrance

Thiruindalur Parimala Ranganathar Temple Festivals

திருவிழாக்கள்: சித்திரை மாதப் பிறப்பில் பெருமாள் வீதி புறப்பாடு. ஆடி மாதம் ஆண்டாள் ஆடிப் பூர உற்சவம் பத்து நாள். ஆவணியில் ஐந்து நாட்கள் கண்ணன் புறப்பாடு. புரட்டாசி மாதம் தாயாருக்கு நவராத்திரி உற்சவம். ஐப்பசியில் பத்து நாட்கள் துலா பிரம்மோற்சவம். மார்கழியில் இருபது நாட்கள் வைகுண்ட ஏகாதசி உற்சவம். தை முதல் நாள் சங்கராந்தி உற்சவம். பங்குனி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த ஊரில் கொண்டப்படும் கடைமுழுக்கு மிகவும் சிறப்பானது, ஐப்பசி மாதம் கடைசி நாளில் மயிலாடுதுறையில் உள்ள சிவாவிஷ்ணு கோவில் தெய்வங்கள் காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். பல்லாயிரக்கணக்கான மக்கள் காவேரியில் நீராடுவர்.

Thiruindalur Temple Timings

கோவில் திறக்கும் நேரம்: திருஇந்தளூர் அருள்மிகு பரிமள ரங்கநாதர் கோவில் காலை 06:30 மணி முதல் 11:30 மணி வரையிலும், மாலை 05:00 மணி முதல் இரவு 08:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்: மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து மாப்படுகை சாலையில் 2 கி.மீ. தொலைவில் பரிமள ரங்கநாதர் திருக்கோவில் உள்ளது. பேருந்து வசதிகள் உள்ளன.

Thiruindalur Parimala Ranganathar Temple Address

அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோவில்,
திருஇந்தளூர் – 609 003
மயிலாடுதுறை மாவட்டம்

Thiruindalur Parimala Ranganathar Temple Contact Number: + 91-4364223330



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 23, 2024
ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (ஸ்ரீ போசல பாவா)
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்