×
Sunday 29th of December 2024

திருக்கடையூர் அபிராமி அமிர்தகடேஸ்வரர் கோவில்


Sri Abhirami Amirthakadeswarar Temple History in Tamil

திருக்கடையூர் அபிராமி அம்பாள் அமிர்தகடேஸ்வரர் கோவில்

சிவஸ்தலம் பெயர் திருக்கடையூர்
மூலவர் அமிர்தகடேஸ்வரர்
உற்சவர் கால சம்ஹாரமூர்த்தி
அம்மன் அபிராமி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் அமிர்தபுஷ்கரிணி, கங்கை தீர்த்தம், சிவகங்கை
புராண பெயர் திருக்கடவூர்
ஊர் திருக்கடையூர்
மாவட்டம் மயிலாடுதுறை

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

Thirukadaiyur Temple History in Tamil

திருக்கடையூர் கோவில் வரலாறு: மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு மெச்சி இறைவன் அவர்கள் முன் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் வாழும் துர்க்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா? அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா என்று கேட்க மிருகண்டு தமபதியினர் 16 வயது மகனே வேண்டும் என்று வரம் கேட்டனர்.

மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். அவருக்கு 16 வயது நடக்கும் போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயது தான் என்பதை மார்க்கண்டேயருக்கு கூறினர். சிவபெருமானே அவரின் ஆயுளைக் காக்க முடியும் என்று மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக தரிசித்து வரும் போது திருக்கடவூர் வந்து சேர்ந்தார். அவர் திருக்கடவூர் தலம் வந்தபோது அவருடைய ஆயுள் முடியும் நாள் நெருங்கியது.

எமன் தன் பணியை முடிக்கும் பொருட்டு பாசக்கயிற்றை மார்க்கண்டேயர் மீது வீசினான். எமனைக் கண்டு அச்சமுற்ற மார்க்கண்டேயர் தான் வழிபட்டுக் கொண்டிருந்த லிங்கத்தை ஆரத் தழுவிக் கொண்டார். எமனும் பாசக்கயிற்றை லிங்கத்தையும் சேர்த்து வீசினான். இறைவன் சிவபெருமான் தன்னுடைய பக்தனைக் காப்பாற்ற லிங்கத்திலிருந்து திரிசூலத்துடன் வெளிப்பட்டு காலனைக் சூலாயுத்தால் கொன்று காலனுக்குக் காலனாக காலசம்ஹார மூர்த்தியாக விளங்கினார். பின்பு பூதேவி, பிரம்மா, மஹாவிஷ்னு ஆகியோரின் வேண்டுதலுக்கு இணங்கி எமனை உயிர்ப்பித்து அருள் புரிந்தார் என்று தல புராணம் கூறுகிறது. சிவபெருமானின் எட்டு வீரச் செயல்களுள் காலனை கடிந்த இந்த வீரச் செயலும் ஒன்று.

புராண வரலாறு

பிரம்மா ஞானோபதேசம் பெற விருப்பம் கொண்டு சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் வில்வ விதை ஒன்றைக் கொடுத்து, அவ்விதை நடப்பட்ட ஒரு முகூர்த்தத்திற்குள் எந்த இடத்தில் முளை விடுகிறதோ அங்கு தன்னை வழிபடும்படி தெரிவிக்கிறார். பிரம்மாவும் அந்த விதையை பல இடங்களில் நட்டுப் பார்த்து திருக்கடவூரில் முளை விடக் கண்டார். இதனால் இத்தலம் வில்வவனம் என்று பெயர் பெற்றது.

பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தை தேவர்கள் அசுரர்களுக்கு கொடுக்க விரும்பாமல் அதை குடத்தில் (கடம்) எடுத்துக் கொண்டு செல்லும் போது வழியில் நீராடுவதற்காக இத்தலத்தில் இறக்கி வைத்துவிட்டு நீராடச் சென்றனர். திரும்பி வந்து குடத்தை எடுக்க முயற்சி செய்த போது குடத்தை எடுக்க முடியவில்லை. குடம் பூமியில் வேர் ஊன்றி விட்ட இடம்தான் திருக்கடவூர் என்று பெயர் பெற்றது. அந்தக் குடம் லிங்க வடிவில் நிலைத்து நின்றபடியால் இந்த லிங்கேஸ்வரர் அமிர்தகடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

thirukadaiyur amirthakadeswarar temple vimanam

கோவில் அமைப்பு

ஆலயத்தின் கிழக்கிலும் மேற்கிலும் இராஜகோபுரங்கள் இருந்தாலும் மேற்கில் உள்ள ஏழு நிலை ராஜகோபுரம் தான் பிரதான வாயிலாகும். கருவறையில் உள்ள அமிர்தகடேஸ்வரர் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் முருகன், லட்சுமி, சோமஸ்கந்தர், நடராஜர், வில்வனேஸ்வரர், பைரவர், பஞ்சபூத லிங்கங்கள், சூரியன், அகத்தியர், சப்த கன்னியர்கள், 63 நாயன்மார்கள் சந்நிதிகள் உள்ளன. இவ்வாலயத்தில் நவக்கிரக சந்நிதி இல்லை.

இறைவன் கருவறைக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் காலசம்ஹார மூர்த்தியின் செப்புச் சிலை உருவம் பார்த்து தரிசிக்க வேண்டியதாகும். காலன் காலடியில் தலைகீழாக விழுந்து கிடக்கிறான். காலசம்ஹாரமூர்த்தி வலது காலை ஊன்றி இடது காலை உயர்த்தி எமனை உதைக்கும் நிலையில் காணப்படுகிறார். மார்க்கண்டேயர் அருகில் கூப்பிய கரத்துடன் நிற்கிறார். பிறகு எமனுக்கு மன்னிப்புக் கொடுத்த சிவபெருமான் எமனை தன் சந்நிதிக்கு எதிரே இருக்கச் செய்து விடுகிறார். எருமை வாகனத்துடன் கரம் கூப்பியவாறு நிற்கும் எமனுக்கு சிறு கோவில் உள்ளது. எமனுடைய பாசக்கயிறு பட்டதால் லிங்கத்தின் உச்சியில் ஒரு பிளவும், மேனியில் தழும்பும் காணப்படுகின்றன.

thirukadaiyur abirami amman

Thirukadaiyur Abirami Temple

திருக்கடையூர் அபிராமி கோவில்: வெளிப் பிரகாரத்தில் கிழக்கு நோகியவாறு அன்னை அபிராமி சந்நிதி உள்ளது. சரஸ்வதி தேவிக்கும், அபிராமி பட்டருக்கும் அருள் புரிந்தவள் இந்த அன்னை அபிராமியே. இவ்வூரில் வாழ்ந்து வந்த பட்டர் ஒருவர் அன்னை அபிராமியின் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். பக்தி அதிகரிக்க உன்மத்த நிலையில் இருப்பார். அவ்வாறு இருந்த சமயம் ஒருமுறை தஞ்சை மன்னர் இரண்டாம் சரபோஜி இவ்வூர் வந்த போது இந்த பட்டரைப் பார்த்து இன்று என்ன திதி என்று கேட்கிறார். அன்னை நினைவிலிருந்த பட்டர் அமாவாசையை பௌர்ணமி திதி என்று தவறாகக் கூறி விடுகிறார்.

பட்டரைப் பற்றி தவறான கருத்துக்களை மன்னரிடம் கோவில் அர்ச்சகர்கள் ஏற்கனவே கூறி இருந்தனர். இதனால் கோபமுற்ற மன்னர் அன்றிரவு பௌர்ணமியைக் காணாவிட்டால் பட்டருக்கு தண்டனை அளிக்கப்படும் என்று கூறிவிடுகிறார். பட்டர் அன்னை மீது 100 பாடல்கள் கொண்ட அபிராமி அந்தாதி பாட, அமாவாசை அன்று பௌர்னமி தோன்றியது. 79வது பாடலின் போது அன்னை அபிராமி தனது காதில் இருந்த தோடு ஒன்றைக் கழற்றி ஆகாயத்தில் வீச அது பௌர்ணமி இரவு பூர்ண சந்திரனாகக் காட்சி அளித்தது. இவ்வாறு பட்டருக்கு அருள் செய்த இந்த அன்னை அபிராமியை வழிபடுவோர் எல்லா நலங்களும் பெறுவர்.

abirami pattar

திருக்கடையூர் கோவில் சிறப்புகள்

எம பயம் நீக்கும் தலங்கள் திருக்கடையூர், திருவீழிமிழலை, திருவையாறு, திருவெண்காடு, திருவைகாவூர், திருவாஞ்சியம் ஆகியவை ஆகும். இவற்றுள் திருக்கடையூர் மிகவும் பிரசித்தி பெற்ற தலம்.

கார்த்திகை மாத சோமவார நாட்களில் மூலவர் சந்நிதிக்கு எதிரில் உள்ள சங்கு மண்டபத்தில் வலம்புரி சங்குடன் கூடிய 1008 சங்குகள் வைத்து இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும். அச்சமயத்தில் மட்டுமே இறைவன் திருமேனியை வஸ்திரம் ஏதுமின்றி தரிசிக்க முடியும். காலன் பாசக்கயிறு மேலே விழுந்ததால் ஏற்பட்ட அடையாளத் தழும்புகளும், காலனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு லிங்கத்திலிருந்து வெடித்துத் தோன்றியதால் லிங்கத்தின் உச்சியில் ஏற்பட்ட பிளவும் நன்றாகத் தெரியும். அதேபோல் முன் மண்டபத்தில் உள்ள காலசம்ஹார மூர்த்தியின் செப்புச் சிலை வடிவமும் சிவலிங்கம் இரண்டாகப் பிளந்து அதிலிருந்து திரிசூலம் ஏந்திய கையுடன் சிவபெருமான் வெளிப்படும்படி தத்ரூபமாக அமைந்துள்ளது. இந்த காலசம்ஹார மூர்த்திக்கு ஆண்டுக்கு 11 முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அவ்வாறு அபிஷேகம் நடைபெறும் போது இறைவனின் திருமேனி அழகினைக் கண்டு களிக்க முடியும்.

திருக்கடையூரில் பூர்ணாபிஷேகம் (100வயது பூர்த்தி), கனகாபிஷேகம் (90 வயது), சதாபிஷேகம், பீமரதசாந்தி, மணிவிழா மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்து கொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. இந்த திருமணத்தின்போது 16 கலசங்கள் வைத்து, அருகில் நவதானியங்களில் நவக்கிரகங்களை ஆவாஹனம் செய்து, ஹோமம் செய்கின்றனர். கலசங்களில் உள்ள புனித நீரை உறவினர்களைக் கொண்டு, தம்பதியர் மீது ஊற்றுகிறார்கள். இவ்வாறு செய்வதால் பாவங்கள் நீங்கிவிடுவதாக நம்பிக்கை.

திருப்புகழ் முருகன்

திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார். இங்கு முருகப்பெருமான் சிறு பாலகன் வடிவில் பார்வதியின் வலப்பக்கம் தாயைத் தழுவியவாறு காட்சி தருவது காண வேண்டிய ஒரு காடசியாகும்.

நேர்த்திக்கடன்: அங்க பிரதட்சணம், கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துதல், குழந்தை பாக்கியம் வேண்டுவோர், குழந்தை தத்துக் கொடுத்தல் ஆகியவற்றை நேர்த்திக்கடன்களாக செய்கின்றனர். வியாதிகள் குணமாக சங்காபிசேகமும், புத்திரபாக்கியம் வேண்டுவோர் ருத்ராபிசேகமும் சுவாமிக்கு செய்கின்றனர்.

பிரார்த்தனை: மிகச் சிறந்த பரிகாரத்தலமாகத் திகழும் இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் அமிர்தகடேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

thirukadaiyur temple elephant

Thirukadaiyur Temple Festivals

திருவிழா: எம சம்ஹாரம் – சித்திரை மாதம் – 18 நாட்கள் – மகம் நட்சத்திரத்தன்று இத்திருவிழா சிறப்பாக இத்தலத்தில் நடக்கும். தினமும் சுவாமி புறப்பாடு நடைபெறும் – 6 ம் நாள் அன்று கால சம்கார மூர்த்தி ஒரே ஒரு முறை வெளியே வரும். கார்த்திகை – சோம வாரம் 1008 சங்காபிசேகம் இத்தலத்தில் மிக சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்படத்தக்கது. புரட்டாசி நவராத்திரி, மார்கழி மாதம் விதிபாதம் அன்று ஏக தின உற்சவம் இங்கு சிறப்பாக நடக்கும். ஆடிப்பூரம், நவராத்திரி, பௌர்ணமி பூஜை ஆகியவை இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கும்.

கந்தர் சஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேச நாட்கள் ஆகும். தை அமாவாசை அன்று அந்தாதி பாராயணம் பாடி நிலவு காட்டி வழிபடுதல் இங்கு விசேசம். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோவிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் & ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோவிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

திருக்கடையூர் அருகில் உள்ள கோவில்கள்

திருக்கடையூர் சென்று அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தையும், கடவூர் மயானத்திலுள்ள பிரம்ம்புரீஸவரர் ஆலயத்தையும் தரிசித்த பிறகு அருகிலுள்ள கீழ்க்கண்ட மற்ற கோவில்களுக்கும் சென்று வரலாம்.

அனந்தமங்கலம்: திருக்கடையூரில் இருந்து சுமார் 3 கி.மி. தொலைவில் உள்ளது அனந்தமங்கலம் இராஜகோபாலப் பெருமாள் கோவில். இக்கோவிலில் உள்ள த்ரிநேத்ர பஞ்சமுக ஆஞ்சனேயர் மிகவும் பிரசித்தி பெற்றவர்.

தில்லையாடி: திருக்கடையூரில் இருந்து கிழக்கே திருவிடைக்கழி செல்லும் பாதையில் சுமார் 4 கி.மி. தொலைவில் உள்ளது தில்லையாடி. இங்குள்ள சிவன் கோவில் பெரிய பிரகாரம், பெரிய கோபுரம் உடையதாகும். சுயம்பு லிங்க வடிவிலுள்ள இறைவனை திருமால் வழிபட்டுள்ளார்.

திருவிடைக்கழி: தில்லையாடியில் இருந்து மேற்கே சுமார் 3 கி.மி. தொலைவில் உள்ள திருவிடைக்கழி திருவிசைப்பா பாடல் பெற்ற முருகன் தலம். இக்கோவிலில் மூலவர் திருகாமேஸ்வரர். ஆயினும் பிரதான மூர்த்தியாகத் திகழ்பவர் இக்கோவிலில் உள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ள சுப்பிரமண்யர் தான்.

தேவானூர்: தில்லையாடிக்கு அருகில் உள்ள தேவானூரில் உள்ள அருள்மிகு விசாலாட்சி உடனுறை விஸ்வநாத சுவாமி ஆலயமும் பார்க்க வேண்டிய ஒன்றாகும். இக்கோவிலில் உள்ள ஞான குரு பகவான் சந்நிதியும் பார்த்து வழிபட வேண்டிய சிறப்புள்ளது. இங்குள்ள ஞான குரு பகவான் இந்திரனால் வழிபடப் பெற்றவர்.

தரங்கம்பாடி: திருக்கடையூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 8 கி.மி. தொலைவில் உள்ள “அளப்பூர்” என்ற தேவார வைப்புத்தலம் தான் இன்றைய தரங்கம்பாடி. கடல் அலைகள் மோதி மோதி மிகவும் சிதிலம் அடைந்துள்ள இங்குள்ள சிவாலயத்தின் மூலவர் மாசிலாநாதர். கந்தர்சஷ்டி நாளில் திருவிடைக்கழி முருகன் சூரசம்காரம் செய்யும் தலம்.

Thirukadaiyur Temple Timings

திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

thirukadaiyur amirthakadeswarar abirami

Thirukadaiyur Temple Address

Sannathi St, Thirukadaiyur, Tamil Nadu 609311

Thirukadaiyur Temple Contact Number: +91-4364287429

அமிர்தகடேஸ்வரர் கோவில் எங்கு உள்ளது? எப்படிப் போவது?

மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மி. தொலைவில் சீர்காழி – தரங்கம்பாடி சாலை வழியில் இத்தலம் உள்ளது.

எல்லோரும் மார்க்கண்டேயனைப் போல் என்றும் 16 வயதுடன் மரணத்தில் இருந்து தப்ப முடியாது. இருப்பினும் நாம் எதிர்கொள்ளும் மரணம் துன்பத்தைத் தராமல் இருக்க இத்தலத்து இறைவனை வணங்கி வழிபட்டு நலம் பெறுவோம்.



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்