- நவம்பர் 14, 2024
உள்ளடக்கம்
திருத்தலம் | உத்தமர் சீலி ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் |
---|---|
மூலவர் | ஸ்ரீருக்மிணி – ஸ்ரீசத்தியபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி, செங்கனிவாய் பெருமாள் |
தாயார் | ஸ்ரீ அரவிந்தநாயகி |
பழமை | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராண பெயர் | உத்தமசீலி சதுர்வேதி மங்கலம் |
ஊர் | உத்தமர் சீலி, திருச்சி |
திருச்சி நகரிலிருந்து காவிரி ஆற்றின் வடகரை வழியே கல்லணை செல்லும் சாலையில் சுமார் 12 கிமீ தொலைவில் உள்ளது உத்தமர் சீலி என்ற அழகிய கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அரவிந்தநாயகி உடனுறை ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் வழிபாடு சிறப்பு மிக்க ஒரு கோவிலாகும். இந்த கிராமத்தைச் சுற்றி ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில், காவல் தெய்வங்களான செல்லாயி அம்மன், அய்யனார் கோவில்கள் அமைந்துள்ளன.
கோவிலின் முகப்பில், ஆதிசேஷன் மீது சயனநிலையில் மகாலட்சுமி சமேதராக அருளும் திருமால், ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோர் காட்சி தருகின்றனர். கோவிலுக்கு உள்ளே சென்றதும் ஒரு கையை உயர்த்தி நம்மை ஆசீர்வதிக்கும் ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம். அவருக்கு அருகிலேயே விநாயகரும் காட்சி தருவது கூடுதல் விசேஷம்.
பிராகாரத்தில் ஸ்ரீ நம்மாழ்வார், ஸ்ரீ ராமாநுஜர், ஸ்ரீ சேனைமுதல்வர் ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன.
ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் கிழக்கு நோக்கிய திருக்கோவில். கோவிலின் நுழைவு வாயிலில் இடப்புறம் காவல் தெய்வமான ராஜகருப்புசாமி எழுந்தருளி அனைவரையும் காத்து வருகிறார். நுழைவு வாயிலின் மேலே வேணுகோபாலன் புல்லாங்குழல் வாசிக்கும் நிலையில் பசுக்களுடன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் சுதைவடிவம் நம் உள்ளத்தைக் கவர்கிறது.
கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபம் என்ற அமைப்புடன் பெருமாள் சன்னதி விளங்குகிறது. கருவறையில் குழலூதும் நிலையில், திருவாயில் வெண்ணெயுடன் புல்லாங்குழல் ஏந்தி, புன்முறுவலுடன் புல்லாங்குழல் வாசிக்கும் நிலையில் ருக்மிணி – சத்யபாமா சமேதராக, நின்ற கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கும் அழகே அழகு. நம் மனக் கவலைகளைப் போக்கி, உள்ளம் மகிழ்விக்கும் திருமுகத்துடன் காட்சி தரும் கோபாலனை ‘செங்கனிவாய்ப் பெருமாள்‘ என்றே அழைத்துப் போற்றுகின்றனர்.
மகா மண்டபத்தில் வடக்குப் பக்கத்தில் விநாயாகப் பெருமானும், சிறிய திருவடியான அனுமனும் ஓரே இடத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது தனிச் சிறப்பு. முன் மண்டபத்தில் பெருமாள் சந்நிதிக்கு எதிரில் கருடாழ்வார் தனிச் சந்நிதியில் எழுந்தருளி அருள்புரிகின்றார்.
திருச்சுற்று: கிழக்கு திருச்சுற்றில் நம்மாழ்வார், உடையவர் சன்னதிகளில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. தென்மேற்கு மூலையில் தாயார் ஸ்ரீ அரவிந்த நாயகி என்னும் திருப்பெயர் கொண்டு தனிச் சந்நிதியில் ஒரு தாயின் கருணையோடு அருளாசி வழங்குகிறார். வடக்குத் திருச்சுற்றில் சேனை முதலி (விஷ்வக்சேனர்) சன்னதி அமந்துள்ளது.
வழிபாடு: சந்தான பாக்கியம் அளிக்கும் தலமாக இத்திருத்தலம் விளங்குகிறது. மேலும் கடன் தொல்லை அகலவும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படவும் இங்கு வந்து வழிபடுகின்றனர்.
இந்தக் கோவிலைக் கரிகாலன் கட்டியதாகவும், இந்தத் தலத்தில்தான் கரிகாலன், மைத்ரேய மகரிஷியிடம் கல்லணை கட்டுவதற்கான ரகசியங்களை உபதேசமாகப் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
சோழ மன்னர்களில் முதலாம் பராந்தக சோழன் (907 – 953) சிறப்புமிக்கவனாகக் கருதப்படுகிறார். இவருக்கு வீர சோழன், வீர நாராயணன், குஞ்சரமல்லன், என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் உண்டு. இவருடைய நான்கு புதல்வர்களில் ஒருவர் உத்தமசீலி என்ற பெயர் கொண்டு விளங்கினார். இவ்வூர் உத்தமசீலி என்றும் உத்தமசீலி சதுர்வேதி மங்கலம் என்றும் இவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.
மரங்களும் செடிகளும் நிறைந்த சோலையில், புள்ளினங்களில் பலவித ஓசைகளோடு திகழும் தெய்விகச் சூழலில் அமைந்திருக்கும் கோவிலில் நமக்கு ஏற்படும் பரவச உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது.
குழலின் நாதம் காதிலே
ஆரமுதம் போல் பாயுதே
சந்நிதி தன்னை நான் அகலேன்
கருணா சாகரா
– கண்ணனிடம் லயிக்கச் செய்துவிடுகின்றன. அப்படி அவனிடம் லயித்த மனதுடன், நாம் வைக்கும் பிரார்த்தனைகளை நிறைவேற்றி அருளுவான் என்பது திண்ணம்!
இந்தத் தலத்தின் சிறப்புகள் பற்றி அர்ச்சகரிடம் கேட்டோம். ‘‘மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசியம் தரிசித்து வழிபடவேண்டிய கோவில் இது. இந்தக் கோவிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைப்பதாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். மேலும் வீடு கட்டும் பணியில் தடை ஏற்பட்டால், இங்கு வந்து வேணுகோபால சுவாமியை வேண்டிக் கொண்டு சென்றால், உடனே வீடு கட்டும் பணி நல்லபடியாக முடிவதும் பக்தர்கள் நம்பிக்கையாக இருக்கிறது’’ என்றார்.
நீங்களும் ஒருமுறை உத்தமர்சீலிக்குச் சென்று வாருங்கள். அந்த உத்தமனின் திருவருளால் உங்கள் வாழ்க்கை உன்னதமாகும்.
நடை திறந்திருக்கும் நேரம்: உத்தமர் சீலி ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் காலை 06:00 முதல் 09:00 மணி வரை; மாலை 05:00 முதல் 07:00 மணி வரை திறந்திருக்கும்.
உத்தமர் சீலி ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவிலுக்கு எப்படிச் செல்வது?
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கல்லணை செல்லும் வழியில் சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது உத்தமர்சீலி. திருச்சியில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
தொடர்புக்கு: 9750252299
ஓம் நமோ நாராயணாய
கொள்ளை சம்பவம்: 2013-ம் ஆண்டு உத்தமர்சீலியில் செங்கனிவாய் பெருமாள் கோவில் அம்மன் கழுத்தில் கிடந்த தாலி உட்பட 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ஏற்கனவே, 1985-ம் ஆண்டு கொள்ளையர்கள் இரண்டு காவலாளிகளை கொலை செய்துவிட்டு ஐந்தரை அடி உயரமுள்ள வரதராஜ பெருமாள் ஸ்வாமியின் ஐம்பொன் சிலையையும், மூன்றரை அடி உயரமுள்ள அரவிந்தநாயகி அம்பாள் ஐம்பொன் சிலையையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.