×
Saturday 28th of December 2024

அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோவில்


Vadapalani Andavar Temple

வடபழனி முருகன் கோவில்

திருத்தலம் அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோவில்
மூலவர் வடபழநி முருகன்
அம்மன் ஸ்ரீவள்ளி, தேவசேனா
தலமரம் அவதும்பரவிருக்ஷம் (அத்திமரம்)
ஆகமம் சிவாகமம்
தீர்த்தம் குகபுஷ்கரணி (திருக்குளம்)
ஊர் வடபழநி
மாவட்டம் சென்னை

Vadapalani Murugan Temple History in Tamil

வடபழநி ஆண்டவர் கோவில் வரலாறு

திருமுருகன் திருத்தலங்களுள் தொன்மைவாய்ந்த தென்பழனியில் பழநியாண்டியாகவும், அவரே சென்னையம்பதியில் கோடம்பாக்கம் வடபழநியில் வடபழநியாண்டியாகவும், வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை அளித்து கலியுக வரதனாகவும் எழுந்தளியிருப்பவர் அருள்மிகு வடபழநி ஆண்டவர்.

vadapalani andavar

அருள்மிகு வடபழநி ஆண்டவர் சென்னை மாநகரின் மையப்பகுதியில் கிழக்கு மேற்கு ஆற்காடு சாலையில் இருந்து 100 அடி தொலையிலும், தென்புறம் ஆலந்தூர் மற்றும் வடபுறம் நெற்குன்றம் சாலையிலிருந்து 100 அடி தொலையிலும், கோயம்பேடு பேருந்து நிலையிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் வடபழநியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவிலாகும்.

சென்னையிலுள்ள பழமையான கோவில்களில் வடபழனி முருகன் கோவிலும் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் முருகபக்தர்களிடையே வெகு பிரசித்தம். 17ம் நூற்றாண்டின் இறுதியில் அண்ணாசாமி நாயக்கர் எனும் தீவிர முருகபக்தரால் இக்கோவில் கட்டுவிக்கப்பட்டுள்ளது. வறியவரான அவர் ஒரு ஓலைக்குடிசையில் முருகன் சித்திரத்தை வைத்து பூஜித்து வந்துள்ளார். தலபுராணக்கதைகளின்படி நாயக்கர் ஒரு நாள் பூஜை செய்துகொண்டிருக்கும்போது அவருள் தெய்வீக சக்தி பரவுவதை உணர்ந்துள்ளார். சொல்வதெல்லாம் சித்திக்கும் சக்தியையும் அக்கணத்திலிருந்து பெற்றதை அவர் அறிந்துகொண்டார்.

இக்கோவில் தோன்ற மூல காரணமாக இருந்தவர் அண்ணாசாமி தம்பிரான். தன் நாக்கை அறுத்து திருத்தணி முருகனுக்கு காணிக்கை செலுத்தியவர். (நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் வழக்கத்திற்கு பாவாடம் என்று பெயர்). இவர், தான் இருந்த வீட்டை சிறிய கீற்றுக் கொட்டகையாக போட்டு அங்கு குறிசொல்லும் மேடை அமைத்து பழநியிலிருந்து வாங்கி வந்த பழநி ஆண்டவர் படத்தை அங்கு வைத்து பூஜை செய்தவர். இவர் வைத்து பூஜை செய்த பழநி ஆண்டவர் படம் இன்றும் சன்னதியின் உட்பிரகாரத்தில் வடக்கு மண்டபத்தில் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்தினசாமி தம்பிரான் ஆண்டவருக்கு பாவாடம் செய்தவர். இவர் அண்ணாச்சாமி தம்பிரானின் தொண்டர் ஆவார். அண்ணாச்சாமிக்கு பிறகு இவர் காலத்தில் தான் இங்குள்ள முருகப்பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்போதுள்ள கருவறைப் பகுதி உள்ள இடத்தில் செங்கல், சுண்ணாம்புக் கட்டிடம் கட்டப்பட்டது. குறிசொல்லி வந்த மேடையை வடபழநி ஆண்டவர் கோவில் என அழைக்கச் செய்தவரும் இவர்தான்.

பாக்யலிங்க தம்பிரான்: இப்போதுள்ள வடபழநி கோவிலின் கர்ப்ப கிரகமும், முதல் உட்பிரகாரத் திருச்சுற்றும் மற்றும் கருங்கல் திருப்பணி ஆகியவற்றை செய்வித்தவர் இவர். இவரும் வடபழநி கோவிலுக்கு பாவாடம் தரித்தவர். இவர் காலத்தில்தான் இக்கோவில் மிகவும் புகழ் பெற்று விளங்கத் தொடங்கியது. இம்மூவரின் சமாதிகளும் வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு வடமேற்காக 1 பர்லாங்கு தொலைவில் இருக்கின்றன. இப்போதுள்ள கோவிலின் தென்கிழக்குப் பகுதியில் பழைய குறிமேடை இருந்த இடம் இருக்கிறது.

இம்மூன்று சாதுக்களுக்கும் நெற்குன்றம் பாதையில் தனியே திருக்கோவில்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபட ஏதுவாக தினசரி பூஜைகளும் நடைபெறுகின்றன.

vadapalani murugan temple gopuram

கோவிலுக்கென்று பிரத்யேக தீர்த்தக்குளத்துடனும் பெரிய வளாகத்தை கொண்டதாகவும் வடபழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த குளத்து நீருக்கு பிணி தீர்க்கும் குணம் உள்ளதாக நம்பிக்கை உள்ளது. முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் இக்கோவிலில் நடத்தப்படுகின்றன. பழநிக்கு செல்ல இயலாதவர்கள் இங்கு தங்களின் நேர்த்திக்கடன்களையும் செலுத்தி வழிபடுகின்றனர். இத்தலத்தில் பாத ரட்க்சையுடன் (காலணிகள்) முருகன் அருள்பாலிப்பது சிறப்பு.

கோவிலின் அமைப்பு

இக்கோவிலின் தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய திசைகளில் கோபுரங்கள் உள்ளன. கோபுரங்களில் சிவன் மற்றும் முருகனின் வடிவங்கள் சுதைச் சிற்பங்களாக காட்டப்பட்டுள்ளன. கிழக்கில் இராஜகோபுரம் 112 அடி உயரமுடையது. இராஜகோபுரத்தினையடுத்து பலிபீடமும், கொடிமரமும் அமைந்துள்ளன. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், திருச்சுற்று மண்டபம், வாகன மண்டபம், உற்சவர் மண்டபம், கல்யாண மண்டபம் ஆகியன இக்கோவில்களின் கட்டிட அமைப்புகளாக உள்ளன.

இக்கோவிலில் கருவறை சதுரவடிவில் உள்ளது. கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். அர்த்தமண்டபத்தின் இருபுறமும் வாயிற்காவலர்களின் சிற்பங்கள் உள்ளன. நுழைவாயிலின் மேற்புறம் யானைத்திருமகள் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறைத் திருச்சுற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்முகர், சண்டிகேசுவரர், துர்க்கை, வீரபாகு, வீரபத்திரர், பைரவர், காளி, வையாபுரி பாண்டியன், தேவார மூவர், மாணிக்கவாசகர் ஆகிய திருவுருவங்கள் வழிபாட்டில் உள்ளன.

மேலும் நடராசர், முருகன், வள்ளி, தேவசேனை, சிவகாமி, விநாயகர் ஆகிய செப்புத்திருமேனிகள் விழாக்காலங்களில் உலாப்படிமங்களாக வழிபடப்படுகின்றன. திருச்சுற்றில் அங்காரகன் (செவ்வாய்), சண்முகர், மீனாட்சி ஆகிய தெய்வங்களின் சிற்றாலயங்கள் வடக்குப்பக்கத்திலும், அருணகிரிநாதர் மற்றும் அனுமனின் சிறுகோவில்கள் கிழக்குப்பக்கத்திலும் அமைந்துள்ளன. இராஜகோபுரத்தின் எதிரே திருக்குளம் அமைந்துள்ளது. தலமரமான அத்திமரம் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது.

கருவறை விமானத்தின் தாங்குதளம் ஆறு அங்கங்களான உபானம், ஜகதி, முப்பட்டை குமுதம், கண்டம், பட்டிகை முதலிய உறுப்புகளைப் பெற்று விளங்குகிறது. சுவர்ப்பகுதியில் வேதிகை உறுப்பு காணப்படுகிறது. மேலும் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதி கோட்டங்களைப் பெற்று விளங்குகிறது. இக்கோட்டங்களில் தென்புறம் தட்சிணாமூர்த்தி, விநாயகர், வடபுறம் துர்க்கை ஆகிய இறைவடிவங்கள் இடம்பெற்றுள்ளன.

vadapalani andavar temple kodimaram

வாகன மண்டபத்தில் மயில், பூதம் ஆகிய வாகனங்கள் இடம் பெற்றுள்ளன. திருச்சுற்றில் வடபுறம் உள்ள திருமண மண்டபத்தில் மேடை போன்ற அமைப்பு காட்டப்பட்டுள்ளது. இங்கு திருமணங்கள் நிகழ்த்தப்படுகின்றன. திருச்சுற்று முழுவதும் முழுத்தூண்களால் அலங்கரிக்கப்பட்டு மண்டபங்களாக பிரிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் முன்புறம் அடியவர்கள் நின்று வணங்கத்தக்க முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

மகாமண்டபத்தின் மேற்கூரையின் விதானப்பகுதியில் முருகனின் பிறப்பு முதலான திருவிளையாடல்கள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. முருகனின் பிறப்பு, கார்த்திகைப் பெண்கள் வளர்ப்பு உள்ளிட்ட திருவிளையாடல்களும், முருகனின் அறுபடை வீடுகளான திருத்தலங்களும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

Vadapalani Murugan Temple Festival

திருவிழாக்கள்: சித்திரை தமிழ்ப்புத்தாண்டு, கிருத்திகை, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம் 11 நாட்கள் வீதி உலா பெருந்திருவிழா ஆனி, ஆடி, ஆவணி சுவாமி வீதி உலா ஐப்பசி கந்த சஷ்டி 6 நாட்கள் பங்குனி கிருத்திகை லட்ச்சார்ச்சனை 3 நாட்கள் தெப்பதிருவிழா 6 நாட்கள்.

பிரார்த்தனை: இங்குள்ள வடபழநி ஆண்டவரை வழிபட்டால் குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க, வியாபாரம் விருத்தியடைய இத்தலத்து முருகனை வேண்டிக் கொள்ளலாம். கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் பெருமளவில் வருகிறார்கள்.

நேர்த்திக்கடன்: வேண்டியதெல்லாம் தரும் வடபழநி ஆண்டவர் சன்னதியின் முக்கிய நேர்த்திகடன் முடி காணிக்கையாகும். வேல் காணிக்கை, ரொக்கம் போன்றவற்றை உண்டியலில் செலுத்துகிறார்கள். தவிர உண்டியல் காணிக்கை இக்கோவிலின் மிக முக்கிய வருமானம் ஆகும். பால், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி , சந்தனம் ஆகிவற்றாலான அபிசேகங்கள் சுவாமிக்கு நேர்த்திகடனாக நடைபெறுகின்றன.

vadapalani murugan temple deities

Vadapalani Temple Timings

பூஜைக்காலம்

1. பள்ளியறை – காலை 5.30 மணி
2. கால சந்தி – காலை 6.30 மணி
3. உச்சிக் காலம் – பகல் 12.00 மணி
4. சாயரட்சை – மாலை 5.00 மணி
5. அர்த்த ஜாம பூஜை – இரவு 9.00 மணி; செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் 09.30 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறும்.

கோவில் திறக்கும் நேரம்: அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோவில் காலை 05:00 மணி முதல் பகல் 12:30 மணி வரை மாலை 04:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும்.

Vadapalani Murugan Temple Contact Number: +914424836903, 8072398360

Arulmigu Vadapalani Murugan Temple Address

பழனி ஆண்டவர் கோவில் தெரு வடபழனி, சென்னை – 600026.

Palani Andavar Koil St, Vadapalani, Chennai, Tamil Nadu 600026



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 19, 2024
ஆண் & பெண் குழந்தைகளுக்கான முருகன் பெயர்கள்
  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • நவம்பர் 7, 2024
முருகனின் ஆசிர்வாதத்துடன் எதிலும் வெற்றி பெறுவோம்