×
Saturday 28th of December 2024

வைத்தீஸ்வரன் கோவில்


Vaitheeswaran Temple Chidambaram

வைத்தீஸ்வரன் கோவில்

🛕 “இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும் என்பர்.

🛕 தென் நாட்டின் தலைசிறந்த பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றானது. புள்ளிருக்கு வேளூர் எனப்படும் பாடல் பெற்ற தலம். பலராலும் பொதுவாக வைத்தீஸ்வரன் கோவில் என்றே அழைக்கப்பெறுகின்றது. சோழ வளநாட்டில் தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் வடகரைத் தலங்களில் 16வது தலமான இத்திருத்தலம் இந்திய இருப்புப் பாதையில் வைத்தீஸ்வரன் கோவில் எனும் பெயருடன் புகை வண்டி நிலையமாகவும் அமைந்துள்ளது. தருமையாதீனத்திற்குச் சொந்தமான 27 கோவில்களுள் மிகவும் புராதனமான, பிரபலமான ஒன்றாகும் இங்குள்ள கோவில்.

Vaitheeswaran Name Meaning in Tamil

🛕  பெயர்க் காரணம்:  புள்(ஜடாயு). இருக்கு(ரிக்வேதம்), வேள்(முருகன்), ஊர்(சூரியன்) ஆகிய இந்நால்வரும் பூசித்ததால் புள்ளிருக்கு வேளூர் எனும் பெயர் கொண்டது. மற்றும் சடாயு புரி, கந்தபுரி, வேதபுரி என்றும் அங்காரகன் வழிபட்டமையால் அங்காரகபுரம் என்றும், அம்பிகையைப் பூசித்தமையால் அம்பிகாபுரம் எனவும் அழைக்கப்பெறும். வினைதீர்த்தான் கோவில், தையல்நாயகி கோவில் மற்றும் வழக்கில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் எனப் பல பெயர்களும் உண்டு.

Vaitheeswaran Kovil Architecture

கோவில் அமைப்பு: நான்கு கோபுரங்களுடனும் உயர்ந்த மதில்களோடும் கூடிய கோவில். மேற்கு நோக்கிய இறைவன் சந்நிதி கொண்டது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. தெற்கில் கணேசன் திகழ் மேற்கில் பைரவரும். தொக்கவடக்கில் தொடர்காளிமிக்க கிழக்கு உள்ளிருக்கும் வீரனையும் உற்றுப் பணிந்துய்ந்தேன். புள்ளிருக்கு வேளூரிற்போய். எனும் பாடலின் மூலம் வைத்தியநாத ஸ்வாமி ஆலயத்தைத் தெற்கில் கணபதியும், மேற்கில் பைரவரும், வடக்கில் காளியும், கிழக்கில் வீரபத்திரரும் காவல் புரிகின்றனர் என்று அறியலாம்.

Vaitheeswaran Temple Theertham

கோவில் தீர்த்தம்: கோவிலுக்குள் விளங்கும் சித்தாமிர்த்த தீர்த்தம் விசேஷமானது. நான்கு புரங்களிலும் மண்டபத்தோடும் படிக்கட்டுகளோடும் நடுவில் நீராழி மண்டபத்தோடும் விளங்குகின்றது. இங்கே கிருத யுகத்தில் காமதேனு இறைவனைத் தன் முலைப்பால் கொண்டு திருமஞ்சனம் ஆட்டிய சம்பவம் நிகழ்ந்தது. அதுவே புனித தீர்த்தமாக பெருகி இங்கு அமைந்ததென்பர். இதன் காரணமாக கோக்ஷர தீர்த்தம் என்று பெயர்ப் பெறலாயிற்று. சதானந்த முனிவர் இங்கு தவம் செய்து கொண்டிருந்தபோது பாம்பால் துரத்தப்பெற்று தவளை ஒன்று தண்ணீரில் குதித்து அவர் தவத்தை கலைத்தது. முனிவர் குளத்தில் பாம்பும் தவளையும் வாசஞ் செய்யக்கூடாது என்று சபித்ததால் இக்குளத்தில் தவளைகள் வசிப்பதில்லை என்பர்.

🛕 இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். நோய்தீரக் குளத்தில் வெல்லம் கரைத்து விடுவதும் பிரகாரத்தில் உள்ள மரப்பெட்டியில் உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கொட்டுவதும் இன்றும் உள்ள ஒரு பிராத்தனை வழக்கம். சித்தாமிர்த்த தீர்த்தம் தவிர கோதண்ட தீர்த்தம், கௌதம தீர்த்தம், வில்வ தீர்த்தம், அங்கசந்தனத் தீர்த்தம், முனிவர் தீர்த்தம் என்று வேறு தீர்த்தங்களும் இங்கு உள்ளன.

Vaitheeswaran Koil Deity

மூர்த்திகள்: சுவாமி பெயர் ஸ்ரீவைத்தியநாதன், வைத்தீஸ்வரன், அம்பாள் பெயர் ஸ்ரீதையல்நாயகி, முருகன் செல்வமுத்துக் குமரன் எனும் பெயரோடு விளங்குகின்றார். கோளிலித்தலம் என்று அழைக்கப்படும் வைத்தீஸ்வரன் கோவிலில் நவக்கிரகங்கள் வக்கிரமில்லாமல் வரிசையாக ஈஸ்வரன் சந்நிதிக்கு பின்புறம் நோய்கள் தீர வேண்டி பிரார்த்தித்திருக்கும் காட்சியைக் காணலாம். அங்காரகனின் செங்குஷ்டநோயைத் தீர்த்தபடியால் அங்காரகத் தலமாகின்றது. அங்காரகனுக்குத் தனிச் சந்நிதி உண்டு. மூல விக்கிரகத்தோடு உற்சவ விக்கிரகமான அங்காரகனும் உண்டு. இரண்டும் தனித்தனிச் சந்நிதிகளாக உள்ளன. அங்காரக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடுவதால் தோஷம் நீங்கப் பெறுவர். நவக்கிரகங்களுக்கு அடுத்தாற்போல் 63 நாயன்மார்கள், ஸப்த கன்னியர் ஆகியோரையும் மற்றும் ஆயுர்வேதத்தின் தலைவனான தன்வந்திரி சித்தர் விஷ்ணு ஸ்வரூபத்தில் அமர்ந்திருக்கும் வடிவத்தையும் காணலாம். துர்க்கை மற்றும் சஹஸ்ர லிங்கமும் விசேஷமானவை.

Vaitheeswaran Temple Special

தலப்பெருமை: முருகன் சூரபத்மனை வெல்ல வேல் வாங்கிய தலம் இது. இறைவன் 4448 நோய்களையும் அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்ல வைத்தியநாதராய் எழுந்தருளியுள்ளார். அவருக்கு உதவியாய் அம்பாள் கையில் தைல பாத்திரமும், அமிர்த சஞ்சீவியும், வில்வமரத்தடி மண்ணும் ஏந்தி வர, இருவரும் தீராத நோய்களையும், வினைகளையும் தீர்த்து வைக்கும் வேதியத் தம்பதிகளாகின்றனர். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும் என்பர்.

Jatayu Kundam

சடாயு குண்டம்: சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றபோது, அதனைத் தடுத்த ஜடாயுவின் சிறகுகளை இராவணன் வெட்டி வீழ்த்தினான். பின்னர் இராமன் அவ்வழியில் சீதையைத் தேடி வந்த நேரத்தில், நடந்தவற்றைச் சொல்லிய ஜடாயு இராமனது காலடியில் உயிர்ததுறந்தான். இராமபிரான் ஜடாயுவின் வேண்டுகோள்படி சிதையடுக்கி அவனது உடலைத் தகனம் செய்த இடம் ‘ஜடாயு குண்டம்’ என்று அழைக்கப் பெறுகின்றது. இன்றும் இக்குண்டத்தில் உள்ள திருநீற்றினை அணிந்தால் தீராத நோய்களும் தீரும் எனும் நம்பிக்கை உண்டு. ஜடாயு குண்டத்திற்கு அருகில் ஜடாயு மோட்சத்தைச் சிலை வடிவில் காணலாம். ஜடாயு உற்சவ மூர்த்தியாகவும் இருக்கின்றார்.

Thiruchandu Urundai

திருச்சாந்துருண்டை: இது வைத்தியநாதப் பெருமானின் பிரசாதமாக நோய் நீங்கும் பொருட்டு அளிக்கப்பெறுவது. ஆலயத்தில் விபூதி குண்டத்தில் (ஜடாயு குண்டத்தில்) உள்ள விபூதியையும் சித்தாமிர்த தீரத்த நீரையும் சேர்த்துக் குழைத்து, ஐந்தெழுத்து மந்திரமாகிய “நமசிவாய” என்பதனை ஓதிக்கொண்டே முத்துக்குமார சுவாமி சந்நிதியில் உள்ள குழியம்மியில் அரைத்து உளுந்தளவில் உருட்டி, அம்பாள் திருவடியில் வைத்து அர்ச்சித்து எடுத்துச் சேகரித்து வைத்துக் கொண்டு வேண்டியவர்களுக்கு அந்த உருண்டை வழங்கப் பெறுகின்றது. இதனை உண்டோர் நோய் (தீவினை) நீங்கி வாழ்வாங்கு வாழ்ந்து, பின் முக்தி எய்துவர். இங்கு அர்த்த சாமப் பூஜை செல்வ முத்துக்குமார சுவாமிக்குச் செய்த பின்புதான் ஸ்வாமிக்குச் செய்யப் பெறுகின்றது. அர்த்தசாமப் பூஜையின்போது முத்துக்குமார சுவாமிக்கு அணிவிக்கப் பெறும் சந்தனமான “நேத்திரிப்படி” சந்தனமும் வேண்டிய வரம் தரவல்ல மகிமையுடையது. இந்தச் சந்தனத்தை “புழுகாப்பு” என்பர்.

Vaitheeswaran Sthala Virutcham

தல விருட்சம்: கிழக்குக் கோபுர வாயிலில் உள்ள வேம்பு தல விருட்சமாகும். இதனை “வேம்படிமால்” என்கின்றனர். ஆதிவைத்தியநாதபுரம் இதுதான் என்பர்.

Also, read ஸ்ரீ வைத்தியநாத அஷ்டகம்

Vaitheeswaran Kovil Festival

திருவிழாக்கள்: நாள்தோறும் 6 கால பூஜைகள் உண்டு. பங்குனியில் பிரம்மோற்சவம் நடைபெறும். அதில் ஐந்தாவது நாளன்று செல்வமுத்துக்குமரன் வைத்தியநாதரைப் பூசித்துச் செண்டு பெறும் காட்சி மிக அற்புதமான ஒன்று. உற்சவகாலத்தில் கயிலையில் சோமாஸ்கந்தர் எழுந்தருளியிருப்பது போல் சுவாமி ஒரு புறமும், அம்பாள் ஒரு புறமுமாக எழுந்தருள, செல்வமுத்துக்குமார சுவாமி நடுவில் எழுந்தருள்வார். மாதந்தோறும் வரும் கார்த்திகைவிழா இங்குச் சிறப்பானது. இந்நாளில் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசிக்க மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடுவர். அபிஷேகங்களில் சந்தன அபிஷேகம் மிகவும் சிறப்புடையது. தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் மாதந்தோறும் கார்த்திகையன்று எழுந்தருள, அவர்கள் திரு முன்னிலையில் இந்த அபிஷேகம் நடைபெறுவது கண்கொள்ளக் காட்சி. அங்காரக் க்ஷேத்திரமாதலால் செவ்வாயக் கிழமைகளில் அங்காரகர் பிரகாரத்தில் வலம் வருவார். கார்த்திகை மாத சோம வாரங்களில் ஈசுவரனுக்குச் சங்காபிஷேகமும் உண்டு.

🛕 ஆண்டுதோறும் நகரத்தார்கள் சித்திரை மாதத்தில் வண்டிப் பயணமாக வேளூருக்கு வரும் வழக்கம் உண்டு. ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இப்பயணம் ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு சித்திரைத் திங்களில் நடைபெற்று வருகின்றன. இப்பயணம் கீரணிப்பட்டி முத்து மாரியம்மன் திருவிழா முடிந்து தொடர்ந்து வரும் புதன்கிழமை இரவு 12 மணிக்கு மேல் அதாவது வியாழக்கிழமை காலை தொடங்குகிறது. இப்பயணம் கீரணிப்பட்டித் திருவிழா முடிந்தபின் நடைபெறுவதற்குக் காரணம் நகரத்தார்கள் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து பாண்டிய நாடு வரும்போது கீரணி அம்மனையும் தங்களோடு கொண்டு வந்தார்கள் என்பது வரலாறு. இதனைக் கீழ்க்காணும் கும்மிப்பாடல் வழி அறியலாம்.

“காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்ததொரு
காவலன் மாறனழைத்து வர பூவிரிப்
புலன்மிகும் பாண்டிய நாட்டினிற்
பொங்கத்துடன் வந்தமர்ந்தானே”
பொங்கம் = பொலிவு அல்லது மகிழ்ச்சி.

🛕 வண்டிப் பயணமாகத் துவங்கி நடைப்பயணத்தையும் இன்று ஈர்த்துப் பல்லாயிரக் கணக்கானோர் பங்கு பெறும் சிறப்புறு பயணமாகியுள்ளது. இது கீழச்சீவல்பட்டி, அழகாபுரி நகரத்தார்களோடு பள்ளத்தூர், குருவிக்கொண்டான்பட்டி, ஆத்தங்குடி, கோட்டையூர், சிறுகூடற்பட்டி ஆகிய ஊர்களிலிருந்தும் பக்தர்கள் இந்த வண்டிப் பயணத்தில் கலந்து கொள்கின்றனர். திருஞானசம்பந்தர் இத்தலத்தைப் பற்றிப் பதிகம் ஒன்று பாடியுள்ளார். திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார். தருமையாதீனம் 10வது மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமி அருளிய செல்வமுத்துக்குமாரசாமி திருவருட்பாவும் குமரகுருபரர் அருளிய பிள்ளைத் தமிழும் இத்தலம் பற்றிய அழகு தமிழ்ப் பாடல்கள். “தையல்நாயகியைத் தொழுது எழுவார் தொங்கத் தொங்கத் தாலி அணிவார்”. வைத்தியநாதனைப் போற்றி எழுவாருக்கு அவனே மந்திரமும் மருந்துமாகித் தீராத நோய் தீர்த்து வைப்பான். பிறவிப் பெரும்பயனையும் தேடித்தருவான்.

நிறம் – சிகப்பு
அணிகலன் – பவளம்
வாகனம் – அன்னம்
தானியம் – துவரை
காரகம் – பூமி, சகோதரன், வீடு
கடவுள் – முருகன்
சுவை – துவர்ப்பு
உச்சம் – மகரம்
நீசம் – கடகம்
திசைகாலம் – 7 ஆண்டுகள்
நட்பு – சூரியன்
பகை – புதன், ராகு, கேது
சமம் – சுக்கிரன், சனி
உபகிரகம் – துமன்
கோவில் – வைத்தீஸ்வரன் கோவில்

Vaitheeswaran Koil Timings

🛕 காலை 06:00 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும்.

Vaitheeswaran Koil Address

West St, Sirkali, Tamil Nadu 609117



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்