- ஜூலை 6, 2022
7500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்ததும், உலகின் மூத்த நாகரிகம் என்பதுமான சிந்து சமவெளி நாகரிகப் பகுதிகளில் ஒன்றான இறந்தவர் மேடு என்னும் மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட அகழாய்வின் போது பானை ஓடு முத்திரை எண்: M-1375A2 கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் பானை ஓடு முத்திரை பாகிஸ்தானில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது
இதன் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு 2, பக்கம் எண்: 180-லும் மற்ற குறிப்புகள் பக்கம் எண்: 438-லும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த முத்திரையை பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ள செய்தியாவது,
ஒரு உடைந்த பானையின் வாய் பகுதியின் கீழே செவ்வக வடிவ கட்டத்தில் 4 எழுத்துக்களும், 4-வது எழுத்துக்கு முன்பாக எண் ஐந்து என்பதைக் குறிக்கும் நடுத்தர உயரமுடைய ஐந்து செங்குத்துக் கோடுகள் கீறப்பட்டுள்ளன. 1, 2, 3 ஆகிய மூன்று எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்றாக இணைந்துள்ளன.
இவை இடமிருந்து வலமாக, (ப + ற + ல்) + ஐந்து + ம், பறல் ஐந்தும் எனப் படிக்கப்படுகின்றன.
இதிலுள்ள ‘ப’ என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ற’ என்பது 17-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ல்’ என்பது 13-ஆவது மெய் எழுத்து, ‘ம்’ என்பது 10-ஆவது மெய் எழுத்து.
பறல் : பறவை, பட்சி
ஐந்தும் : ஐந்தும், பஞ்ச
பொருள்: பறவை ஐந்தும் என்பது பஞ்சபட்சிகளும் என்பதைக் குறிப்பதாகக் கருதலாம். பஞ்சபட்சி என்பதற்கு குறியறிதற்கு உரியனவும் அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்து உயிர் எழுத்தால் முறையே குறிக்கப்படுவனவுமான வல்லூறு, மயில், ஆந்தை, காகம், கோழி ஆகிய ஐந்து பட்சிகள். ‘பஞ்சபட்சிகளின் ஒலியைக்கொண்டு குறி சொல்லும் நூல்’ எனத் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.
இந்த முத்திரையின் வாயிலாக 7500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் சிந்து சமவெளியில் ‘பஞ்சபட்சி குறி சொல்லும் (சோதிடம்)’ அறிந்த வல்லுநர்கள் வாழ்ந்துள்ளனர் என்பது தெரியவருவதாகக் கருதலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.