- ஜூலை 6, 2022
உள்ளடக்கம்
(தமிழகத் தொல்லியல் ஆதாரச் சான்றுகள் கூறுகின்றன)
🛕 தமிழகத்தைச் சார்ந்த இல்லத்தரசிகள் அதிகாலையில் எழுந்து நீராடி, சிகையை சீவி முடித்து, தூய்மையான ஆடையுடுத்தி, தத்தம் குடியிருக்கும் வீடுகளின் முன்வாசலை கூட்டி பெருக்கி தூய்மைப்படுத்தி, ‘கிருமி நாசினியான’ மாட்டு சாணம் கரைத்த நீரைத் தெளித்து, குறிப்பாக ‘மார்கழி மாதத்தில்’ பல்வேறு நிறங்களில் கோலமிட்டு அதன் நடுவே பூசணிப்பூவை வைப்பது பழந்தமிழர்கள் மரபுகளில் ஒன்றாகும். இம்மரபு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
🛕 அதற்குச் சான்றாக 7500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சிந்து சமவெளி முத்திரை எண்: எம்-1356-ல் பொறிக்கப்பட்டுள்ள ஒரு குறியீட்டைச் சுட்டிக்காட்டலாம். இக்குறியீடு எட்டு மங்களகரமான சின்னங்களில் ஒன்றான சுவத்திக் குறியீடுடன் இணைந்து காணப்படுவதால் கோலம் ஒரு மங்களகரமான குறியீடு என்பது உறுதியாகிறது.
🛕 மேலும் இந்த மங்களகரமான கோலம் போன்றதொரு கோட்டுருவம் சுவத் பள்ளத்தாக்கில் 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஒரு பாறை ஓவியமாகவும், தமிழகத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், இராச்சாண்டார் திருமலை சிவாலயம் (தற்போது மூடி மறைக்கப்பட்டுவிட்டது), திருவெள்ளறை வட ஜம்புநாதர் குடைவரைக் கோவில் அருகாமையில் உள்ள சிதலம் அடைந்த கோவில் மேல் திசை சுற்றுச் சுவர் போன்ற வரலாற்று சிறப்புடைய இடங்களில், 1500 ஆண்டுகளுக்கும் முற்பட்டக் குறியீடுகளாகவும் பொறிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளன.
🛕 மேற்கண்ட பல்வேறு காலகட்டத்தைச் சார்ந்தவையும், ஒரே வடிவிலான வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையிலும், மங்களகரமான கோலம் போடும் மரபு பழந்தமிழகத்தைச் சார்ந்தது என்பதும், அம்மரபு அகில உலகின் மூத்த நாகரிகமாகக் கருதப்படுவதும், 7500 ஆண்டுகளுக்கும் முற்பட்டதுமான சிந்து சமவெளி நாகரிகத்திலும் இருந்துள்ளது என்பதாலும், “சிந்து சமவெளி நாகரிகம் பழந்தமிழர் நாகரிகமே” என்பது தெரியவருவதாகக் கருதலாம் எனத் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் குறிப்பிட்டுள்ளார்.