- டிசம்பர் 22, 2024
உள்ளடக்கம்
Click to read: சிவ வாக்கியம் பாடல்கள் (1 – 150)
Click to read: சிவ வாக்கியம் பாடல்கள் (301 – 450)
ஓதிவைத்த நூல்களு முணர்ந்துகற்ற கல்வியும்
மாதுமக்கள் சுற்றமும் மறக்கவந்த நித்திரை
ஏதுபுக் கொளித்ததோ வெங்குமாகி நின்றதோ
சோதிபுக் கொளித்தமாயஞ் சொல்லடா சுவாமியே. 151
படித்தறிந்து பாதுகாக்கும் நூல்களும், உணர்ந்து கற்ற கல்வியும், மனைவி, சுற்றத்தினர் என யாவையும் மறக்கும் படியான மரணம் என்று ஒன்று வந்ததே! அது ஏன் வந்தது என்பதை சிந்தியுங்கள். உடலோடிருந்து உலாவிய உயிர் மரணம் வந்ததும் எங்காவது சென்று ஒளிந்து கொண்டதோ? அல்லது எங்குமான வானத்தில் நின்றதோ? சோதியான ஈசனை அடைந்ததா? ஒளியாக நின்ற உயிர் ஒழிந்த மாயம் எங்கு என்பதை சுவாமி வேடம் போட்டு திரிபவர்களே சொல்லவேண்டும். எல்லாம் ஈசன் செயல் என்பதை உணர்ந்து, மரணமில்லாப் பெரு வாழ்வை அடைய முயற்சியுங்கள்.
ஈணெருமை யின்கழுத்தி லிட்டபொட்ட ணங்கள்போல்
மூணுநாலு சீலையில் முடிந்தவிழ்க்கும் மூடர்காள்
மூணுநாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை
ஊணியூணி நீர்முடிந்த வுண்மையென்ன வுண்மையே. 152
கன்று ஈன்ற எருமை மாட்டின் கழுத்தில், கண் திருஷ்டி படக்கூடாது என்பதற்காக மூன்று பொட்டணங்களை வைத்து முடிச்சுப் போட்டு வைப்பார்கள். அதுபோல பிராமணர்கள் குளிக்கும்போது ஒரு துண்டில் மூன்று முடிச்சுப்போட்டு கழுத்தில் போட்டுக்கொண்டு தண்ணீரில் மூழ்குவார்கள். பின் அந்த முடிச்சுக்களை அவிழ்த்துத் தண்ணீரிலே போட்டுவிட்டு முன்ஜென்மம், இந்த ஜென்மம், மறுஜென்மம் ஆகிய முப்பிறவிகளின் கர்மவினையை தொலைத்துவிட்டேன் என்று சொல்லித் தலை முழுகுவார்கள். ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களை விட்டுவிட்டேன் என்றும் விளக்கம் சொல்லுவார்கள். இதனால் அவைகள் அகன்றுவிடுமா? ஏழு உலகங்களிலும் ஆதியந்தம் இல்லாத அநாதியான ஈசனை உங்கள் ஊண் உடம்பிலே உணர்ந்து அதிலே ஊன்றி அறிவு, உணர்வும், மனம் ஆகிய மூன்றையும் முடிந்து தியானியுங்கள். மும்மலங்களும், மூவினைகளும் தானே விலகும். இதுவே உண்மையாக இறைவனை அடையும் வழி.
சாவல்நாலு குஞ்சதஞ்சு தாயதான வாறுபோல்
காயமான கூட்டிலே கலந்துசண்டை கொள்ளுதே
கூவமான கிழநரிக் கூட்டிலே புகுந்தபின்
சாவல்நாலு குஞ்சதஞ்சுந் தானிறந்து போனதே. 153
நான்கு சாவல்களையும் ஐந்து குஞ்சுகளையும் அதன் தாய்க் கோழியையும் ஒரே கூட்டில் அடைத்து வைத்தால் அவை ஒன்றுக் கொன்று கூவி கொத்தி சண்டை போடுகிறது. அக்கூட்டில் ஒரு கிழநரி புகுந்துவிட்டால் அவை யாவும் இறந்து போய்விடும். அது போலவே மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கும், பஞ்ச பூதங்களும், ஆன்மாவும் நம் உடம்பான கூட்டில் இருந்து ஐம்புலன்களாக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வுயிரை, உடம்பில் புகுந்து எமன் கொண்டு போய்விட்டால் அந்தக் கரணம் நான்கும், பஞ்சபூதங்களும் மறைந்து போய்விடும் என்பதையும், எல்லா தத்துவங்களும், ஆன்மாவில் அடங்கிவிடும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
மூலமாங் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
காலமே யெழுந்திருந்து நாலுகட் டறுப்பீரேல்
பாலனாகி வாழலாம் பரப்பிரம மாகலாம்
ஆலமுண்ட கண்டர்பாத மம்மைபாத முண்மையே. 154
அதிகாலை எழுந்து நமது மூலாதார சக்கரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியை பிராணாயாம பயிற்சி செய்து கோரையைப் போல முளைக்கும் கோழையாகிய எமனைக் கட்டறுத்து வெளியேற்ற வேண்டும். பின் வாசியோகம் செய்து பிராணசக்தியை மேலேற்றி ரேசக பூரக கும்பகம் என்று மூச்சை கட்டுப்படுத்தி, மனதை இறைவனுடன் இருத்தி, நான்கு நாழிகை நேரம் முயற்சியுடன் தியானப் பயிற்சியைத் தொடர்ச்சியாக தினமும் செய்து வரவேண்டும். இதனை விடாமல் தொடர்ந்து செய்து வரும் யோகிகள் பாலனாகி வாழ்ந்து பரப்பிரம்மம் ஆவார்கள். ஆலம் உண்ட நீலகண்டர் பாதமும் அம்மை பாதமும் நம்முள் அமர்ந்திருப்பதை உண்மையாய் உணர்ந்து தியானியுங்கள்.
செம்பினிற் களிம்புவந்த சீதரங்கள் போலவே
அம்பினி லெழுதொணாத வணியரங்க சோதியை
வெம்பிவெம்பி வெம்பியே மெலிந்துமேல் கலந்திட
செம்பினிற் களிம்புவிட்ட சேதியேது காணுமே. 155
செம்பினில் களிம்பு வந்து சேர்ந்தது போல் நீ செய்த பாவங்கள் உயிரில் சேர்ந்து அது அழிவதற்கு காரணமாகின்றது. ஆகவே இச்சீவனை பாவங்கள் சேரா வண்ணம் சிவனோடு சேர்த்து தியானியுங்கள். அச்சிவன் நம் உடம்பில் எழுதா எழுத்தாகவும், அணி அரங்கமான அழகிய சிற்றம்பலத்தில் சோதியாக உள்ளான். அதனை அறிந்து அவனையே நினைந்து வெம்பி வெம்பி அழுது உன் உயிரும் ஊணும் உருக உணர்ந்து தியானம் செய்து வாருங்கள். செம்பினில் களிம்பு போனால் தங்கமாவது போல் நீயும் பாவங்கள் நீங்கி இறைவனோடு சேர்ந்து இன்புறலாம்.
நாடிநாடி யும்முளே நயந்துகாண வல்லிரேல்
ஓடியோடி மீளுவா ரும்முளே யடங்கிடும்
தேடிவந்த காலனும் திகைத்திருந்து போய்விடும்
கோடி காலமும் உகந்து இருந்தவாறது எங்ஙனே. 156
இறைவனை அடைவதற்கான வழி, அவனையே நாடி அவன் புகழைப் பாடி அவனை நயந்து தேடி நமக்குள்ளேயே கண்டு கொண்டு, யோகமும் தியானமும் பழகவேண்டும். அதனால் நம்மில் இருந்து வெளியேறி ஓடும் மூச்சு நமக்குள்ளேயே ஒடுங்கி பிராணசக்தி கூடி உயிரிலேயே அடங்கிடும். இப்படியே தினமும் செய்ய வல்லவர்களுக்கு ஆயுள் கூடி தேடி வரும். எமனே திகைத்து திரும்பிடுவான், அவர்கள் கல்பகோடி காலமும் ஈசனோடு உகந்து இருப்பார்கள். ஆகவே யோக ஞான சாதனங்களைக் கைக்கொண்டு பிறவாநிலை பெறுங்கள்.
பிணங்குகின்ற தேதடா பிரஞ்ஞைகெட்ட மூடரே
பிணங்கிலாத பேரொளிப் பிராணனை யறிகிலீர்
பிணங்குவோ ரிருவினைப் பிணக்கறுக்க வல்லிரேல்
பிணங்கிலாத பெரியவின்பம் பெற்றிருக்க லாகுமே. 157
கோபம் கொள்வது ஏது என்பதை உணராத மூடரே!! சாந்தமான பேரொளியாக ஈசன் உன் பிராணனில் இருப்பதை அறியாமல் இருக்கிறீர்கள். இவ்வுலகில் பிறக்க வைக்கும் நல்வினை, தீவினை எனும் இரு வினைகளை யோக ஞானத்தால் பிணக்கு அறுத்து தியானம் செய்ய வல்லவர்கலானால் ஈசன் அருளால் பேரின்பம் பெற்று மரணமில்லா பெருவாழ்வில் இருக்கலாகுமே.
மீனிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
மீனிருக்கு நீரலோ மூழ்வதுங் குடிப்பதும்
மானிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
மானுரித்த தோலலோ மார்பில்நூ லணிவதும். 158
மீன் இறைச்சி வேதம் ஓதும் பிராமணர்கள் எப்போதும் உண்பதில்லை. அசைவத்தை உண்பதால் அசுத்தம் வந்துவிடும் என்றிடும் அவர்கள் மீன் இருக்கும் நீரில்தான் குளிக்கின்றார்கள், அதையேதான் குடிக்கின்றார்கள். தின்னாமல் குடிப்பதில் மட்டும் சுத்தமாகிவிடுமா? மான் இறைச்சியை உண்பதில்லை என்று சொல்லும் பிராமணர்கள் அந்த மானை உரித்த தோலில் பூணூல் அணிகின்றார்களே, இறைச்சி உண்ணாமல் இருப்பதால் மட்டும் இறைவனை அடையமுடியாது. சுத்தம் என்பது அவரவர் எண்ணத்தில்தான் இருக்கின்றது.
ஆட்டிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
ஆட்டிறைச்சி அல்லவோ யாகம் நீங்க ளாற்றலே
மாட்டிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
மாட்டிறைச்சி யல்லவோ மரக்கறிக் கிடுவது. 159
ஆட்டின் இறைச்சியை அந்தணர்கள் உண்பதில்லை. ஆனால் ஆட்டை பள்ளியிட்டு அவ்விறைச்சியை யாகத்தில் போட்டு செய்வது ஏன்? அக்காலத்தில் யாகங்களில் ஆட்டிறைச்சியை இட்டு செய்தார்கள் வேதியர்கள், இக்காலத்தில் மாட்டின் பாலிலிருந்து உண்டான நெய்யினை இட்டு செய்கின்றார்கள். மாட்டிறைச்சி தின்பதில்லை வேதியர்கள், ஆனால் அவர்கள் உண்ணும் காய்கறிகளுக்குப் போடுவது மாட்டிறைச்சியே. உணவுப் பழக்கத்தினாலோ, ஆசார அனுட்டனங் கலாலோ இறைவனை அடைந்து விடமுடியாது.
அக்கிடீ ரனைத்துயிர்க்கு மாதியாகி நிற்பதும்
முக்கிடீ ருமைப்பிடித்து முத்தரித்து விட்டதும்
மைக்கிடில் பிறந்திறந்து மாண்டுமாண்டு போவது
மொக்கிடி லுமக்குநா னுணர்த்துவித்த துண்மையே. 160
(அக்கிடீர்=நீரும், நெருப்பும்) ஆதியாக உள்ள மெய்ப்பொருளே அனைத்து உயிர்களிலும் நீராகவும், நெருப்பாகவும் இருக்கின்றது. அதுவே உங்களிடம் அறிவு, உணர்வு, மனம் என்று மூன்றாக தரித்து முப்பொருளாய் உணராது இப்பூமியில் பிறந்து இறந்து பிறந்து மாண்டு போகிறார்கள். ஆகவே மெய்ப்பொருளை அறிந்து அதையே ஒத்து தியானம் செய்வதுவே இப்பிறவித் தளையிலிருந்து ஆன்மா விடுதலை அடைவதற்கான வழி என நான் உங்களுக்கு உணர்த்துவிக்கும் உண்மையாகும்.
ஐயன்வந்து மெய்யகம் புகுந்தவாற தெங்ஙனே
செய்யதெங்க ளங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே.
ஐயன்வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தரோடு வாய்திறப்பது இல்லையே. 161
ஈசன் ஏன் உடன்பின் உள்ளே புகுந்தது எங்ஙகனமெனில் தென்னை மரத்தின் மேலே இளங் குரும்பையில் நீர் புகுந்து இருப்பது போலத்தான். இறைவன் என் மெய்யாகிய உடம்பில் உள்ளமாகிய கோயிலில் உறைவதை நான் அறிந்து கொண்டபின் அந்த மெய்ப்பொருள் நாட்டத்திலேயே ஒன்றி தியானம் செய்வதைத் தவிர வேறு எண்ணம் ஏதுமில்லையே. ஆதலால் இவ்வுலகில் மதத்தாலும், இனத்தாலும், சாதியாலும் பிரிந்து தீங்கையே செய்து தீவினைகளை சேர்த்துக் கொண்டு இறக்கப் போகும் மாந்தர்களோடு நான் வாய் திறந்து பேசுவதில்லை.
நவ்வுமவ்வை யுங்கடந்து நாடொணா தசியின்மேல்
வவ்வுயவ்வு ளுஞ்சிறந்த வண்மைஞான போதகம்
ஒவ்வுசத்தி யுண்ணிறைந் துச்சியூ டுருவியே
இவ்வகை யறிந்தபேர்க ளீசனாணை யீசனே. 162
அஞ்செழுத்தில் ‘ந’ என்ற சுவாதிட்டானத்தையும், ‘ம’ என்ற மணிப்பூரகத்தையும் கடந்து அனாகத்தில் உள்ள ‘சி’ யின் மேல் இருக்கும் விசுத்தியில் ‘வ’வும் ஆஞ்ஞாவில் ‘ய’ வும் ஓதி உணரவேண்டும். இந்த நமசிவய என்ற அஞ்செழுத்து நம் உடம்பில் மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களாக இருப்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். மூலாதாரத்தில் ‘ஓம்’ என்ற அட்சரத்தால் குண்டலினி சக்தியை, வாசியால் மேலேற்றி நினைவால் “ஓம் நமசிவய” என்று ஓதி ஒவ்வொரு சக்கரத்திலும் அதற்குறிய எழுத்தை நிறுத்தி அப்பியாசித்து வரவேண்டும். தூலத்தில் “ஓம் நமசிவய” எனும் இந்த பஞ்சாட்சரமே உள்ளே சூட்சுமமாகவும் எல்லா வல்லமையும் உள்ள சிறந்த ஞான போதப் பொருளாக இருக்கிறது. அதுவே உச்சியில் உள்ள மெய்ப் பொருள். இதற்குள் ஈசன் சோதியாக இருப்பதை உணர்ந்து “சிவயநம ஓம்” என்ற பஞ்சாட்சரத்தை அங்கு நிறுத்தி தியானிக்க வேண்டும். இப்படி மூலாதாரத்தில் இருந்து உச்சி வரை முதுகுத்தண்டின் வழியாக ஊடுருவி வாசியை மெய்ப் பொருளில் உள்ள சோதியில் சேர்க்கவேண்டும். “ஓம் நமசிவய” என்ற பஞ்சாட்சரமே நம் உடம்பில் தூலமாகவும், உயிரில் சூட்சுமமாகவும் இருப்பதை அறிந்து இந்த யோக ஞானத்தை உணர்ந்து தவம் புரிபவர்கள் ஈசனாகவே ஆவார்கள்!! இது அந்த பஞ்சாட்சரமாக விளங்கும் ஈசன் மீது ஆணை.
முச்சதுர மூலமாகி மூன்றதான பேதமாய்
யச்சதுர மும்முளே யடங்க வாசி யோகமாம்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமா
யுச்சரித்த மந்திரம் ஓம் நமச்சிவாயமே. 163
வாயிலிருந்து வெளியேறும் பன்னிரெண்டு அங்குல அளவு பிராணனை அடக்கி, பூரகம், இரேசகம், கும்பகம் ஆகிய முறைகளினால் வாசியைப் பயில அது வாசி யோகமாகும். நம் உடலில் மெய்ப்பொருளாம் கண்கள் ஞான தீபமாய் விளங்குகின்றது. அதனுள்ளே சென்று முக்கலைகளை ஒன்றாக்கி அதை மேலேற்றித் தவம் செய்யும்போது உச்சரிக்கவேன்டிய மந்திரம் ஓம் நமசிவய.
பார்த்ததேது பார்த்திடில் பார்வையூ டழிந்திடும்
கூத்ததாய் இருப்பிரேல் குறிப்பிலாச் சிவமதாம்
பார்த்தபார்த்த போதெல்லாம் பார்வையு மிகந்துநீர்
பூத்தபூவுங் காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே. 164
எல்லாவற்றையும் பார்த்தது எது என்பதை அறிந்து, அதையே பார்த்து தியானிக்க பார்வை ஒடுங்கி, அகக்கண் திறந்திடும். அதையே குறியாகக் கொண்டு மெய்ப்பொருளை உணர்ந்து சுழுமுனையில் கூர்மையான நினைவை குவித்திருந்தால் சோதியைக் காணலாம். அதுவே சிவம் ஆகும். ஆகவே தியானம் செய்யும் போதெல்லாம் பார்ப்பானையே பார்த்திரு. அதை விடுத்து நினைவை பல இடங்களில் வைத்து, பார்வையை பலவிதங்களில் செலுத்தி தியானத்தை இகழ்ந்து மறந்தால் நீங்கள் மீண்டும் பூத்த பூவும் காயுமாய் பிறப்பிறப்பில் உழலுவீர்.
நெற்றிபத்தி யுழலுகின்ற நீலமா விளக்கினைப்
பத்தியொத்தி நின்றுநின்று பற்றறுத்த தென்பலன்
உற்றிருந்து பாரடா வுள்ளொளிக்கு மேலொளி
அத்தனா யமர்ந்திட மறிந்தவ னனாதியே. 165
நெற்றியைப் பற்றி உழன்று கொண்டிருக்கின்ற ஒரு நீல நிறம் உடைய விளக்கை குறு தொட்டுக் காட்ட உணர்ந்து கொள்ளுங்கள். பின் அதையே பற்றி அறிவு, உணர்வு, நினைவு என்ற மூன்றையும் ஒன்றாக்கி நின்று தியானிக்க உலகப் பற்றுக்கள் யாவும் நீங்கும். அதனால் அநேக பலன்கள் கிடைக்கும். அதுவே இறைவனை அடையும் வழி என்பதை அறிந்து அந்நீல விளக்கையே உற்று நோக்கி தியானிக்க உள்வெளிக்குள் பரம்பொருள் ஒளி பொருந்திய சோதியாக ஒளிறும் . அதுவே ஈசன் அமர்ந்திருக்கும் இடம் என்பதை அறிந்து தவம் புரிபவர்கள் என்றும் அனாதியாக உள்ள ஈசனை அடைவார்கள்.
நீரையள்ளி நீரில்விட்டு நீநினைத்த காரியம்
ஆரையுன்னி நீரெலா மவத்திலே யிறைக்கிறீர்
வேரையுன்னி வித்தையுன்னி வித்திலே முளைத்தெழுந்த
சீரையுன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம். 166
பிராமணர்கள் குளித்து முடித்த பின்னர் அந்நீரில் நின்றபடியே, மூன்று முறை தண்ணீரை கைகளில் அள்ளி அத் தண்ணீரிலேயே மந்திரங்களை முணுமுணுத்து விடுவார்கள். இதற்கு வாக்கு, மனம், செயல் என்ற மூன்றையும் திரிகரண சுத்தி செய்வதாகச் சொல்லுவார்கள். இவையெல்லாம் இறைவனுக்கே செய்கின்ற சடங்குகள் தானே!! இதனால் இறைவனை அடைய முடியுமா? உனக்குள்ளேயே வேராக இருக்கும் ஆன்மாவையும், வித்தாக இருக்கும் இறைவனையும் அறிந்த அதிலேயே முளைத்து எழுகின்ற சிகரத்தை உணர்ந்து ‘சிவயநம’ என்று உனக்குள் பரவச் செய்து தியானம் செய்ய வல்லவர்களானால் சிவத்தின் திருவடியில் சேரலாம்.
நெற்றியி றயங்குகின்ற நீலமாம் விளக்கினை
யுய்த்துணர்ந்து பாரடா வுள்ளிருந்த சோதியைப்
பத்தியிற் றொடர்ந்தவர் பரமயம தானவர்
அத்தலத்தி லிருந்தபேர்க ளவரெனக்கு நாதரே. 167
விளக்கில் எரியும் தீபத்தை உற்றுப் பார்த்தால் அதன் நடுவில் நீல நிறம் பொருந்திய ஒளி வீசுவதை உணரலாம். அதுபோல நமது நெற்றியில் இயங்கிக் கொண்டிருக்கின்ற நீல நிறமாக விளங்கிக்கொண்டிருக்கும் ஆன்மாவை அறிந்து கொள்ளுங்கள். அதுவே இப்பிறவி உய்யும் வழி என உணர்ந்து அதன் உள்ளேயே அருட்பெருஞ் ஜோதியாகி விளங்கும் ஈசனைத் தியானித்துப் பாருங்கள். அவரே அனைத்திற்கும் நாதன் என்பதை உணர்ந்து, பக்தியால் பாடியும், ஆடியும் கண்ணீர்விட்டு கசிந்து தொடர்ந்து தியானியுங்கள். நீங்களே அப்பறம்போருளாக ஆவீர்கள். அதிலேயே இருந்து தியானமும் தவமும் செய்பவர்கள் எனக்கும் குருநாதன் அவார்கள்.
கருத்தரிக்கு முன்னெலாங் காயம்நின்ற தெவ்விடம்
உருத்தரிக்கு முன்னெலா முயிர்ப்புநின்ற தெவ்விடம்
அருட்டரிக்கு முன்னெலா மாசைநின்ற தெவ்விடம்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாயமென்று கூறுவீர். 168
தாயின் வயிற்றில் கருவாக தரிப்பதற்கு முன்பு உடம்பு எங்கு எவ்வாறு இருந்தது. உருவாக்கி வளர்வதற்கு முன்பு உயிர் இருந்த இடன் எது. இறை அருள் கிடைப்பதற்கு முன்பு ஆசைகளின் மனம் நின்றது எவ்விடம் என்பதை, யாவும் சந்தேகங்கள் ஏதுமின்றி திருக்கமுடன் தெரிந்த கொண்டு ‘சிவயநம’ என்ற அஞ்செழுத்தாக இருப்பதை அறிந்து கொண்டு பஞ்சாட்சரத்தை சொல்லி தியானியுங்கள்.
கருத்தரிக்கு முன்னெலாங் காயம்நின்ற தேயுவில்
உருத்தரிக்கு முன்னெலா முயிர்ப்புநின்ற தப்புவில்
அருட்டரிக்கு முன்னெலா மாசைநின்ற வாயுவில்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாய மென்று கூறுவீர். 169
ஆகாயத்திலிருந்து ஆன்மா கருத்தரிக்கும் முன்பு காயமான உடம்பு, தாய் தகப்பனின் உஷ்ணத்தில் தீயாக நின்றிருந்தது. உருவாக ஆவதற்கு முன்பு உயிர் சுக்கில சுரோனித நீராகி நின்றது. இறை அருளால் உயிர் உடம்பாகி வெளிவருவதற்கு முன்பு மனமானது ஆசையாக காற்றில் நின்றது. பின் தாயின் கருவறை என்ற மண்ணில் சிசுவாக வளர்ந்து உடலுயிராய் பிறவி வந்தது என்பதை திருத்தமாக தெரிந்துகொண்டு ‘சிவயநம’ என்ற பஞ்சாட்சரத்தை உணர்ந்து சொல்லி தியானம் செய்யுங்கள்.
தாதரான தாதருந் தலத்திலுள்ள சைவரும்
கூத்தரைப் பறைச்சிமக்கள் கூடிசெய்த காரியம்
வீதிபோகு ஞானியை விரைந்துகல் லெறிந்ததும்
பாதகங்களாகவே பலித்ததே சிவாயமே. 170
மக்கள் தொண்டு மகேசன் தொண்டு என்று தொண்டு செய்ய வந்தவர்கள் சுயநலமாக செய்யும் தீமைகளும், தலம் எனப்படும் கோயில், பள்ளி, ஆஸ்ரமம் போன்ற அறச்சாலைகளில் நடக்கும் கீழான செயல்களும், கூத்தாடிப் பிழைப்பவர்க்கு இழிவான கடைமக்கள் கூடிச் செய்கின்ற தீங்கும், வீதி வழியாகப் போகும் ஞானியை பழித்துரைத்துக் கல்லால் எரிந்து அடித்ததும் தப்பாமல் திரும்பி வந்து அவர்களுக்கு பாதகங்கள் ஆகவே பலித்து, துன்புற்று சாவார்கள். நீங்கள் செய்த பழிபாவங்கள் நீங்க ‘சிவயநம’ என்ற அஞ்செழுத்தை ஓதி பாதகங்கள் செய்யாது வாழுங்கள்.
ஓடியோடி பாவிழைத் துள்ளங்கால் வெளுத்ததும்
பாவியான பூனைவந்து பாவிலே குதித்ததும்
பணிக்கன்வந்து பார்த்ததும் பாரமில்லை யென்றதும்
இழையறுந்து போனதும் என்னமாய மீசனே. 171
நெசவு நெய்யும் பாவைப்போல அங்கும் இங்கும் ஓடியோடி உழைத்து மூச்சானது ஓடி ஒய்ந்து உயிர்போகின்ற தருனஹ்தில் உங்கள் உள்ளங்கால் வெளுத்து படுக்கையில் படுத்ததும் அச்சமயம் ஓடிய நேசவுப்பாவிலே பூனை வந்து குதித்ததும், பாவிழை அறுந்து போவது போல, எமன் வந்து உயிரை எடுத்துப் போவது போனதும் மூச்சு நின்றதும், மருத்துவன் வந்து பார்த்து உயிர் போய்விட்டது என்பதும், பாவிலே நூல் இழை அறுந்து தறி ஓட்டம் நின்றுபோவது போலவே உடம்பைவிட்டு உயிர் மூச்சு நின்று போவது யாவும் உன்மாயமே ஈசனே!
சதுரம்நாலு மறையுமிட்டு தானதங்கி மூன்றுமே
எதிரதான வாயுவாறு எண்ணும்வட்ட மேவியே
உதிரந்தான் வரைகளெட்டு மெண்ணுமென் சிரசின்மேல்
கதிரதான காயகத்தில் கலந்தெழுந்த நாதமே. 172
சதுரம் எனப்படும் நான்கு வேதங்களும் எண்சான் உடம்பிலே தங்கி, மூன்றான ஓங்காரமாய் இருக்கின்றது. அதையே பிரனவமாக்கி மூன்றெழுத்தால் ஆறு ஆதார வட்டங்களிலும் வாசியினால் மேலேற்றிப் பயில வேண்டும். உயிரிலிருந்தே உதிரங்கள் எட்டாகிய உடம்பு முழுவதும் ஓடிக் கொண்டிருப்பதை உணர்ந்து அகார, உகாரத்தை உயிரில் அறிந்து சிரசு எனும் தலை உச்சியில் சூரியனாக இருக்கும் சூட்சும உடம்பில் சுழுமுனையில் அவ்வாசியினைச் சேர்க்க நாத ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும்.
நாலொடாறு பத்துமேல் நாலுமூன்றும் இட்டபின்
மேலுபத்து மாறுடன் மேதிரண்ட தொன்றுமே
கோலிஅஞ் செழுத்துளே குருஇருந்து கூறிடில்
தோலுமேனி நாதமாய்த் தோற்றிநின்ற கோசமே. 173
மூலாதாரத்தில் நான்கு இதழ் கமலமாகவும் ‘ஓம்’ என்ற மூன்று எழுத்தாகவும், சுவாதிட்டானத்தில் ஆறு இதழ் கமலமாகவும் ‘ந’ என்ற மண் பூதமாகவும், மணிப் பூரகத்தில் பத்து இதழ் கமலமாகவும் ‘ம’ என்ற நீர்பூதமாகவும், அனாகத்தில் பனிரெண்டு இதழ் கமலமாகவும் ‘சி’ என்ற நெருப்பு பூதமாகவும், விசுத்தியில் பதினாறு இதழ் கமலமாகவும் ‘வ’ என்ற காற்றுப் பூதமாகவும், ஆஞ்ஞாவில் இரண்டு இதழ் கமலமாகவும் ‘ய’ என்ற ஆகாயப் பூதமாகவும் உயிர் ஒன்றாகவும் உங்கள் உடம்பில் அஞ்செழுத்து அமைந்துள்ளது. இதனை உண்மையான குறு விரும்பி உபதேசித்து அதை உன் உடம்பிலேயே உணர்ந்து உபாசித்தால் நாத ஒலித் தோன்றும். அந்த நாதம் ‘ஓம் நமசிவய’ கோசமாக எழுந்து நிற்கும்.
கோசமா யெழுந்ததும் கூடுருவி நின்றதும்
தேசமாய்ப் பிறந்ததுஞ் சிவாயமஞ் செழுத்துமே
ஈசனாரிருந்திட மனேகனேக மந்திரம்
ஆகமம் நிறைந்துநின்ற வைம்பத்தோர் எழுத்துமே. 174
ஐயும், கிலியும், சவ்வும், றீயும், ஸ்ரீயும் என்ற கோச அட்சரங்களாக எழுந்து கூடாகிய உடலுக்குள் ஊடுருவி நின்று இத்தேசத்தில் தேகம் எடுத்து பிறந்ததும் ‘நமசிவய’ என்ற அஞ்செழுத்து மந்திரத் தத்துவத்தாலே தானே. சோதியான ஈசனையும், அவன் நம் உடம்பில் தற்பரமாய் நின்ற இடத்தையும் தான், அனைத்து மந்திரங்களும் வேதங்களும் சொல்கின்றது. அதனை ஐந்து ஐந்து கட்டங்களாக வரைந்து ‘நமசிவய’ என்ற அஞ்செழுத்தின் பீஜ அட்சரமாக அ, இ, உ, எ, ஒ என்ற எழுத்தையும் கோச அட்சரங்களால் ஐயும், கிலியும், சவ்வும், றீயும், ஸ்ரீயும் எழுத்தையும் அமைத்து 9, 11, 4, 15, 12 என்ற என்னையும் கொடுத்து அது மொத்தம் ஐம்பத்தொன்று என்பதையே ஐம்பத்தோர் அட்சரம் என்பார்கள்.
அங்கலிங்க பீடமா வையிரண் டெழுத்திலும்
பொங்குதா மரையினும் பொருந்துவா ரகத்தினும்
பங்குகொண்ட சோதியும் மரந்தவஞ் செழுத்துமே
சிங்கநாத வோசையுஞ் சிவாயமல்ல தில்லையே. 175
உடம்பில் உள்ள அங்கத்தை பீடமாக இலிங்கமே ஐம்பத்தொரு அட்சரமாக உள்ளது. சகஸ்ரார தலமான தாமரையில் மனதை நிறுத்தி தியானத்தில் பொருந்துவார்கள் அகத்தில் சக்தியும் சிவனுமாய் பக்குகொண்டிருக்கும் சோதியாக பரந்து இருப்பதும் பஞ்சாட்சரமே! இந்த அஞ்செழுத்தில் சிகரமாகும் நாத ஒளியாகவும் இருப்பதும் பஞ்சாட்சரமே. இதை அறிந்துணர்ந்து ஒலியையும், ஒளியையும் ஒன்றாக்கி தியானியுங்கள்.
உவமையில்லாப் பேரொளிக்கு ளுருவமான தெவ்விடம்
உவமையாகி யண்டத்தி லுருவிநின்ற தெவ்விடம்
தவமதான பரமனார் தரித்துநின்ற தெவ்விடம்
தற்பரத்தில் சலம்பிறந்து தாங்கிநின்ற தெவ்விடம். 176
எதனோடும் ஒப்பிடமுடியாத தனித்தன்மையான பேரொளி நம்முள் உருவமாக நிற்பது எவ்விடம்? ஆகாயத்திற்கு உவமையான மனம் அண்டத்திலும் பிண்டத்திலும் அமைந்திருப்பது எந்த இடம்? தவத்திற்கு உரிமையான பரமனார் மெய்ப்பொருளாய் தரித்து நின்றது எந்த இடம்? தன் உடம்பில் நீராக நின்று தாங்கி தற்பரமாய் இருப்பது எந்த இடம்?
ககமதாக வெருதுமூன்று கன்றையீன்ற தெவ்விடம்
சொல்லுகீழு லோகமேழும் நின்றவாற தெவ்விடம்
அளவதான மேருவும் அம்மைதான தெவ்விடம்
அவனுமவளு மாடலா லருஞ்சீவன் பிறந்ததே. 177
மாடான மனதில்தான் புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய மூன்றும் பிறந்தது. அந்த நான்கு அந்த கரணங்களும் உடம்பில் எங்கு இருக்கின்றது. சொல்லும் வார்த்தைகள் தோன்றுவதும் ஏழு உலகங்களாக நின்றதும் அதுவாக இருப்பதும் எவ்விடம். அவளதான வாலை மேரு சக்கரமாகவும் அம்மையான மனோன்மணியாகவும் அமர்ந்திருந்தது எவ்விடம்? அவனும் அவளும் ஆடியே அருஞ்சீவன் உருவானது. எல்லாம் சிவசக்தியின் திருவிளையாடல் என்பதை புரிந்து தியானம் செய்து இச்சீவனை சிவனோடு சேருங்கள்.
உதிக்குகின்ற தெவ்விட மொடுங்குகின்ற தெவ்விடம்
கதிக்குகின்ற தெவ்விடம் கன்றுறக்க மெவ்விடம்
மதிக்கநின்ற தெவ்விடம் மதிமயக்க மெவ்விடம்
விதிக்கவல்ல ஞானிகாள் விரிந்துரைக்க வேணுமே. 178
மனம் உதிப்பதும், ஒடுங்குவதும் எந்த இடம்? கதியாகிய வாசி இருப்பது எந்த இடம்? கண்ணுறக்கம் கொள்வது எந்த இடம்? யாவரும் மதின்க்கும்படி நின்றது எவ்விடம்? மதியாகிய அறிவும் மயக்கமான மாயையும் தோன்றிய இடம் எது என்பதையெல்லாம் விதியை வெல்ல ஞானம் போதிக்க வந்த குருமார்களே!! சீடர்கள் ஆறியும் வண்ணம் விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
திரும்பியாடு வாசலெட்டு திறமுரைத்த வாசலெட்டு
மருங்கிலாத கோலமெட்டு வன்னியாடு வாசலெட்டு
துரும்பிலாத கோலமெட்டு சுத்திவந்த வருளரே
அரும்பிலாத பூவுமுண்டையனாணை யுண்மையே. 179
மீண்டும் மீண்டும் இப்பூவுலகில் பிறந்திறந்து உழலும் உடல் எண்சான் அளவே. அந்த எட்டான உடலில் திறமாக செயல்படும் உயிர் எட்டாகிய ஆகாரத்தின் வாசலில் உள்ளது. அது ஆகாயமான எட்டாகி இருக்கும் கோலமும் அதிலே வன்னி எனும் தீயாக ஈசன் இருந்து ஆடும் இடம் அகாரம். அந்த எட்டான அகாரத்தில் ஒரு தூசோ, துரும்போ அண்டாது. பரிசுத்தமான கோலமாய் உள்ள இடமாகிய அகாரத்தில்தான் சோதி உள்ளது. இதனை யாவும் எட்டாக விளங்கும் தன் உடம்பிலே காணாமல் வேறு எங்கெங்கோ சுற்றி வருகின்ற மருள் பிடித்த மனிதர்களே! அரும்போ, மோட்டோ இல்லாத பூவாக உன் ஆன்மா உனக்குள் இருப்பதை உணர்ந்து அதிலேயே தியானித்து பிறவா நிலை பெற வாருங்கள். இது என் ஐயன் மீது ஆணையிட்டு உண்மையாகச் சொல்லுகின்றேன்.
தானிருந்து மூலவங்கி தணலெழுப்பி வாயுவால்
தேனிருந்து வறைதிறந்து தித்தியொன்று வொத்தவே
வானிருந்து மதியமூன்று மண்டலம் புகுந்தபின்
ஊனிருந் தளவுகொண்ட யோகிநல்ல யோகியே. 180
யோக ஞான சாதகத்தால் உடம்பில் உள்ள மூலாதாரத்தில் தீயாக இருக்கும் குண்டலினியை அங்கிருக்கும் தனஞ்செயன் என்ற பத்தாவது வாயுவால் வாசியை மேலே எழுப்பி கபாலத்தில் உள்ள கோழையை அகற்றி அமிர்தம் உண்ணவேண்டும். அது தேனைப் போல ஆயிரம் மடங்கு தித்திப்பைக் கொடுப்பது. ஆகாயத்தாமரையில் உள்ள இவ்வமுதத்தை வாசியோகத்தால் கறந்து சந்திர மண்டலம், ஆதித்த மண்டலம், அக்னி மண்டலம் ஆகிய மூன்று மண்டலத்திலும் கரைத்து தம் உடம்பில் தினந்தோறும் அளவுடன் சேர்க்கும் யோகிகள் நல்ல யோகிகளே!
முத்தனாய் நினைந்தபோது முடிந்தவண்டத் துச்சிமேல்
பத்தனாரும் மம்மையும் பரிந்துவாட லாடினார்
சித்தரான ஞானிகாள் தில்லையாட லென்பிர்காள்
அத்தனாட லுற்றபோ தடங்கலாட லுற்றவே. 181
முக்தியைப் பெற நினைத்து முனைந்து தியானம் புரிகின்ற போது ஆதி அந்தமாக முடிந்த ஆகாயத் தாமரையின் உச்சியில் அப்பனும், அம்மையும் பரிவுடன் நடனம் ஆடுவதை அறியலாம். இதனை தவம் முடித்த சித்தர்களும், ஞானிகளும் தனக்குள் நின்று பரம்பொருள் ஆடுவதையே தில்லையில் ஈசனுக்கும் ஈஸ்வரிக்கும் நடந்த ஆட்டம் இதுவே என்பார்கள். இந்த வண்ணம் உடலில் நின்று ஆட்டுவிக்கும் அம்மை அப்பன் ஆட்டம் நின்று போனால் உயிர் பொய் உடம்பு ஆடிய ஆட்டம் எல்லாம் அடங்கிவிடும். ஆகவே இதனை நன்கு அறிந்துணர்ந்து நினைந்து தியானியுங்கள்.
ஒன்றுமொன்று மொன்றுமே யுலகனைத்து மொன்றுமே
அன்றுமின்று மொன்றுமே யனாதியான தொன்றுமே
கன்றல்நின்ற செம்பொனைக் களிம்பறுத்து நாட்டினால்
அன்றுதெய்வ மும்முளே யறிந்ததே சிவாயமே. 182
சக்தியும் சிவனும் ஒன்றாகி இந்த உலகம் அனைத்திலும் ஒன்றான சிவமே எல்லாமாய் இருக்கின்றது. இதனை சக்தியாகிய உடலையும் சிவனாகிய உயிரையும் ஒன்றில் ஒன்றாக்கி ஒன்றி தியானித்து சிவம் ஆகிய மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ளுங்கள். அன்றும் இன்றும் ஒன்றே தெய்வம். ஒருவனே தேவன். அவன் அனாதியாக என்றும் எப்போதும் நிலையான ஒன்றாக இருப்பவன். என்றும் இளமை மாறாமல் நின்ற செம்பொன்னம்பலத்தைக் கண்டு செம்பில் களிம்பருத்து பொன்னாக்குவது போல் நீங்கள் செய்த பாவங்கள் யாவையும் நீக்கி சோதியில் மனதை நாட்டி தியானித்தால் அப்போதே தெய்வம் உமக்குள்ளே இருப்பதை அறிவீர்கள். அது சிவம் என்று. (கன்றல் – இளமை)
நட்டதா வரங்களும் நவின்றசாத் திரங்களும்
இட்டமான ஓமகுண்ட மிசைந்தநாலு வேதமும்
கட்டிவைத்த புத்தகம் கடும்பிதற் றிதற்கெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானையா னறியவே. 183
மரம் நடுவது போன்ற புண்ணியச் செயல்களும், தர்ம சாஸ்திரங்கள் சொல்லும் உயர்ந்த பரம் பொருளும், ஹோமங்கள் செய்ய அமைத்த யோனி குண்டங்களும், வேள்வியில் ஓதுகின்ற நான்கு வேத மந்திரங்களும், மிகவும் முக்கியமான நூல்கள் என்று பாதுகாத்து வைக்கும் புத்தகங்களும், ஞானியர் உபதேசிக்கும் யோக ஞானங்களும், அது பெரியது இது பெரியது என செய்யும் வாதங்களும் ஆகிய இவைகள் யாவுமே என் உடம்பில் பொட்டாக விளங்கும் பிரம்மத்தையே போதிக்கின்றது என்பதையே என் பிரானாகிய ஈசனை அறிந்தபின் யான் தெளிந்து உணர்ந்து கொண்டேன்.
வட்டமான கூட்டிலே வளர்ந்தெழுந்த வம்புலி
சட்டமீ படைத்திலே சங்குசக் கரங்களாய்
விட்டதஞ்சு வாசலில் கதவினா லடைத்தபின்
முட்டையி லெழுந்தசீவன் விட்டவாற தெங்ஙனே. 184
உடம்பாகிய கூட்டுக்குள்ளே வட்டமான பூரண நிலவாக வளர்ந்து எழுந்து நிற்கின்றது பிரமம். அதுவே இப்பூமியெங்கும் சங்கு சக்கரங்களாக திகழ்கின்றது. இதனை அறிந்து ஐம்புலன்களையும் அஞ்செழுத்தால் அடக்கி அண்டமாக விளங்கும் முட்டையில் எழுந்துள்ள உயிராகிய சீவனை சிவனுடன் சேருங்கள். இறவா நிலையடைந்து இறைவனுடன் இரண்டறக் கலந்து பேரின்பம் பெறலாம்.
கோயில்பள்ளி யேதடா குறித்துநின்ற தேதடா
வாயினால் தொழுதுநின்ற மந்திரங்க ளேதடா
ஞானமான பள்ளியிற் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியிற் காணலா மிறையையே. 185
கோயில் என்பதும் மெய் கல்வி கற்க வேண்டிய பள்ளி என்பதும் எது? மெய்ப்பொருளை குறித்து நின்றது எது? கோயில் என்ன்பது இறைவனை தொழுவதற்கும் பள்ளி என்பது arivai வளக்கவும் உள்ள இடங்களே! வெறும் வாயினால் மட்டும் சொல்லுன் மந்திரங்களால் மட்டுமே இறைவனைக் காண முடியுமா? இறைவனும் அறிவும் கோயிலாகவும் பள்ளியாகவும் உங்கள் உள்ளத்தில் உறைவதை உணருங்கள். யோக ஞானத்தால் அதனை அறிந்து இறை நாட்டத்துடன் நன்மையாய் வணங்கி மந்திரங்களைச் செபித்து தியானித்தால் இறைவனைக் காணலாம்.
நல்லவெள்ளி யாறதாய் நயந்தசெம்பு நாலதாய்
கொல்லுநாக மூன்றதாய் குலாவுசெம்பொ னிரண்டதாய்
வில்லினோசை யொன்றுடன் விளங்கவூத வல்லிரேல்
எல்லையொத்த சோதியானை யெட்டுமாற்ற தாகுமே. 186
நல்ல வெள்ளி ஆறுபங்கும், செம்பு நாலு பங்கும், துத்தநாகம் மூன்று பங்கும், தங்கம் இரண்டு பங்கும் சேர்ந்து துருத்தி கொண்டு ஊத்தி உருக்கினால் அது எட்டு மாற்றுத் தங்கமாகும் என்று பொருள் கண்டு ஏமாந்தது போனவர்கள் அநேகர். நான்கு இதழ் கமலமான மூலாதாரத்தில் உள்ள குண்ட்டளினியை மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்ற நான்கு அந்த கரணங்களாலும் இணைத்து ஆனவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களையும் நீக்கி, நம்முள் செம்பொன்னம்பலமாக விளங்கும் சோதியில் அகாரம், உகாரம் என்ற எட்டிரண்டால் வாசியை வில்லில் இருந்து அம்புவிடும் போது தோன்றும் ‘ம்’ என்ற ஓசை லயத்துடன் உண்மை விளங்கி ஊதா வல்லவர்கலானால் ஆறு ஆதாரங்களையும் கடந்து அப்பாலாய் சோதியாய் நிற்கும் ஈசனிடம் சேரலாம். இப்படி யோக ஞான தியானம் செய்யும் சாதகர்களின் உடம்பு பொன் போல மின்னும். இது எல்லையில்லா அந்த பரம்பொருள் அருளால் ஆகும்.
மனத்தகத் தழுக்கறாத மவுனஞான யோகிகள்
வனத்தகத் திருக்கினும் மனத்தகத் தழுக்கறார்
மனத்தகத் தழுக்கறுத்த மவுனஞான யோகிகள்
முலைத்தடத் திருக்கினும் பிறப்பறுத் திருப்பரே. 187
மனதின் உள்ளே இருக்கும் பாவம், ஆசை எனும் மாசுகளை நீக்காமல் வாய்மூடி மவுனத்தில் இருக்கும் ஞான யோகி என்போர் காட்டிற்குள் சென்று ஆஸ்ரமம் அமைத்து இருந்தாலும், அவர்களின் மனத்தில் அழுக்கு அகலாது. காம கோப தாபங்களை விட்டு மனதின் ஆசைகளை ஒழித்து உண்மையான மவுனத்தை அறிந்த ஞான யோகியர் கலவி இன்பத்தில் பெண்ணில் முலைதடத்தில் கிடந்தாலும் அவர்களின் எண்ணம் முழுதையும் இறைவனிடத்திலேயே இருத்தி பிறப்பு இறப்பு எனும் மாயையில் சிக்காது இறைநிலை அடைவார்கள்.
உருவுமல்ல வொளியுமல்ல வொன்றதாகி நின்றதே
மருவுமல்ல கந்தமல்ல மந்தநாடி யுற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல
அரியதாக நின்றநேர்மை யாவர்காண வல்லிரே. 188
மெய்ப்பொருள் என்பது உருவும் அல்ல, ஒளியும் அல்ல, உருவும் ஒளியும் சேர்ந்து ஒன்றாகி நிற்பதே ! அது மருவாக இருப்பதல்ல, வாசனைப் பொருந்திய மனமாக வீசுவதல்ல, சுழுமுனை எண்டும் நாடியில் ஓடுவதல்ல. பெரியதும் அல்ல, சிறியதும் அல்ல, பேசுகின்ற ஆவியும் அல்ல. யாதுக்கும் நடுவாக இருந்து அறிவதற்கு அரியதாகி நிற்பதால் அந்த மெய்ப் பொருளை அறிந்து அதன் பெருமையை உணர்ந்து தியானித்து சோதியான ஈசனை யாவர் காண வல்லவர்கள்.
ஓரெழுத் துலகெலா முதித்தவட் சரத்துளே
ஈரெழுத் தியம்புகின்ற வின்பமே தறிகிலீர்
மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை
நாவெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே. 189
பிரம்மமே ஒரேழுத்து அட்சரமாக உதித்து உலகமெல்லாம் நின்று உடம்பாகியது. அதில் ஈரேழுத்தாக இயங்கும் ஒலியையும் ஒளியையும் அறிந்து அகார உகார அட்சரத்தின் உண்மையை உணர்ந்து வாசி எனும் யோக ஞானத்தால் இறை இன்பத்தை அடையும் வழியை அறியாமல் இருக்கின்றீர்கள். மூவெழுத்தான அகார, உகார, மகாரம் எனும் ஓங்காரத்தில் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவராக மூண்டெழுந்த சிவத்தை நாள் தோறும் அதிகாலையில் எழுந்து மனம் மொழி மெய்யால் ‘ஓம் சிவயநம’ என உச்சரித்து நினைவால் நினைந்து தியானம் செய்யுங்கள்.
ஆதியந்த மூலவிந்து நாதமைந்து பூதமாய்
ஆதியந்த மூலவிந்து நாதமைந் தெழுத்துமாய்
ஆதியந்த மூலவிந்து நாதமேவி நின்றதும்
ஆதியந்த மூலவிந்து நாதமே சிவாயமே. 190
ஆதியான தோற்றத்திற்கும் அந்தமான முடிவிற்கும் மூலமாக இருப்பது விந்து நாதம். அதுவே ஐந்து பூதங்களாகவும் விரிந்து ஐந்து எழுத்தாகவும் அமைந்தது. அந்த நாத விந்தே ஒளியாகவும், ஒலியாகவும் நம் உடலில் மேவி நிற்கின்றது. ஆதியாகவும், அந்தமாகவும், நாதமாகவும், சிவனாகவும், சக்தியாகவும், ஒலியாகவும், ஒளியாகவும் உள்ளவை யாவுமே சிவம் என்ற பரம் பொருளால் ஆனதே!
அன்னமிட்ட பேரெலா மனேககோடி வாழவே
சொன்னமிட்ட பேரெலாந் துரைத்தனங்கள் பண்ணலாம்
வின்னமிட்ட பேரெலாம் வீழ்வர்வெந் நரகிலே
கன்னமிட்ட பேரெலாம் கடந்துநின்ற திண்ணமே. 191
அரும்பசிக்கு அன்னதானம் செய்தவர்கள் கோடி வளம் பெற்று பல்லாண்டு காலம் வாழவேண்டும். அன்னதானம் செய்வதற்கு பொருள் வேண்டி செல்வந்தர்களிடம் சென்று உதவி கேட்டால் அவர்கள் அதிகாரம் செய்து இல்லை என்று விரட்டலாம். அன்னதானம் செய்வதை குற்றம் என்று சொல்லி வில்லங்கம் செய்பவர்கள் பாழும் நரகக் குழியில் வீழ்ந்து அல்லலுறுவார்கள். அனைத்து உயிரிலும் ஆண்டவன் இருப்பதை அறிந்து அவனைத் தனக்குள்ளேயே கண்டு கள்வர்கள் கன்னமிடுவதைப் போல் யோக ஞான சாதனத்தால் தியானிப்பவரால் பத்தாம் வாசலைக் கடந்து கடவுளை அடைவது நிச்சயம்.
ஓதொணாமல் நின்றநீ ருறக்கமூணு மற்றநீர்
சாதிபேத மற்றநீர் சங்கையின்றி நின்றநீர்
கோதிலாத வறிவிலே குறிப்புணர்ந்து நின்றநீ
ரேதுமன்றி நின்றநீ ரியங்குமாற தெங்ஙனே. 192
ஓதாது உணரும் ஒரேழுத்தாக நின்றது நீர். உறக்கம் என்பதோ, உணவு என்பதோ அற்று நிற்பது நீர். சாதி பேதம் அற்று சகலரும் ஒன்றாக உள்ளது நீர். சங்கோசமில்லாமல் நிர்வாணமாக நிற்பது நீர். குற்றமேதுமில்லாத அறிவாகவும் ஆயுளின் குறிப்பையும் உணர்ந்து நிற்பது நீர். இப்படி யாவும் எனக்குள்ளே நீராக நின்று இயங்குவது ஈசா உன் செயலே!! (சங்கை =வெட்கம்)
பிறந்தபோது கோவண மிலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ பிறங்குநாற் சடங்கெலா
மறந்துநாலு வேதமும் மனத்துளே யுதித்ததோ
நிலம்பிளந்து வானிடிந்து நின்றதென்ன வல்லிரே. 193
பிறந்தபோதே கோவணமும் பூணூலும் குடுமியும் கூடவே பிறக்கின்றதா? பிறக்கும் பொது இறைவனைத் தவிர வேறு எதையும் கொண்டு வருவது இல்லை என்பதை மறந்துவிட்டு வெறும் சடங்குகளை எல்லாம் குரங்குப் பிடியாக பிடித்துக் கொண்டு அதிலேயே மனம் வைத்து ஈசனை அறியாமல் இருக்கின்றார்கள். நான்கு வேதங்களும் மனதினுள்ளே உதித்ததா? அறிவிலே உதித்ததா? பிரம்மாவும், விஷ்ணுவும் தானே பெரியவன் என்ற சர்ச்சையில் எச்சன் நிலத்துக்கும் வானுக்கும் லிங்கோத்பவராக நின்று தானே அநாதி என நிரூபித்ததை அறிந்து அவ்வீசனை உங்களுக்குள் உணர்ந்து அவனை ஆயா தவம் செய்ய முயலுங்கள்.
துருத்தியுண்டு கொல்லனுண்டு சொர்ணமான சோதியுண்டு
திருத்தமாய் மனத்திலுன்னித் திகழவூத வல்லிரேல்
பெருத்ததூ ணிலங்கியே பிழம்பதாய் விரிந்திடும்
நிருத்தமான சோதியும் நீயுமல்ல தில்லையே. 194
நாம் விடும் மூச்சில் வாசியைக் கண்டு அதனை யோகமாக்கி செய்ய உடம்பு உண்டு. அதில் உள்ள ஆன்மாவில் பொன்னார் மேனியாகிய ஈசன் விளங்கும் சோதி உண்டு. இந்த வாசி யோகத்தை தினமும் முறை பிசகாமல் மனதில் நிறுத்தி இறைவனை எண்ணி ஊத ஊத மனம் இலயமாகி பெருத்த தூணாக மறைக்கும் நந்தி விலகி நெருப்பாறு ஒளிபிழம்பாக விரிந்து நிற்கும். அங்கு மயிர்பாலம் எனும் பிரம்மாந்திரத்தில் ஏறிக் கடந்தால் கோடி சூரியப் பிரகாசமான சோதியில் சிவனும் சீவனுமின்றி வேறு எதுவுமில்லை. நீயே அந்த பரம்பொருள் என்பதை உணர்ந்து யோக தியானமும் செய்து ஈசனைச் சேருங்கள்.
வேடமிட்டு மணிதுலக்கி மிக்கதூப தீபமாய்
ஆடறுத்து கூறுபோட்ட வவர்கள்போலும் பண்ணுறீர்
தேடிவைத்த செம்பெலாந் திரள்படப் பரப்பியே
போடுகின்ற புட்பபூசை பூசையென்ன பூசையே. 195
ஆசாரமாக வேடம் போட்டு ருத்திராட்சம் ஸ்படிகம் போன்ற மணிகளால் ஆன மாலைகளைக் கழுத்தில் போட்டு மணியோசையுடன் இறைவனுக்கு தூப தீபங்கள் காட்டுகின்றீர்கள். ஆட்டை அறுத்துக் கூறுபோட்டு விற்பவர்கள் போல சடங்குகள் பண்ணுகின்றீர்கள். தேடிக் கொணர்ந்து வைத்து செம்புகளில் நீர் நிரப்பி அதனை அங்கு திரளாகப் பரப்பி பூக்களால் அர்ச்சித்து செய்வதாக போடும் பூசை என்ன பூசையோ. உயிரை வளர்க்க செய்யும் பூசையை அறியாமல் வயிறை வளர்க்க செய்யும் பூசை என்ன பூசையோ?
முட்டுகண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை
கட்டிக்கொண்டு நின்றிடம் கடந்துநோக்க வல்லிரேல்
முட்டுமற்று கட்டுமற்று முடியினின்ற நாதனை
எட்டுத்திக்குங் கையினா லிருந்தவீட தாகுமே. 196
தாயின் கருவிலே தூமையினால் உருவான உடலிலே சீவன் புகுந்து மனிதனாக வளர்ந்துள்ளது. உடம்பிலே விந்துகள் ஒன்று சேர்ந்து இலிங்கமாகக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருக்கின்றது. அதனை அறிந்தபின், உடலில் எதனுடனும் முட்டாமலும், கட்டாமலும், ஒட்டாமலும் தனித்திருக்கும் உறுப்பு எது என அறிந்து அங்கிருந்து உள்ளே செல்ல முட்டுமின்றி கட்டுமின்றி முடிவாக நின்ற ஈசனை உணரலாம். அறிவு, உணர்வு, நினைவு, கருத்து ஆகிய நிலைகளைக் கடக்கவேண்டும். ஈசன் உனக்குள்ளேயே எட்டு திசைகளாகவும், நான்கு கைகளாகவும் இருக்கிறான். கவனத்தை அங்கேயே நிறுத்திப் பின்னர் அதையும் கடந்து சென்று இறையுடன் கலக்கவேண்டும்.
அருக்கனோடு சோமனு மதுக்குமப் புறத்திலே
நெருக்கியேறு தாரகை நெருங்கிநின்ற நேர்மையை
உருக்கியோ ரெழுத்துளே யொப்பிலாத வெளியிலே
யிருக்கவல்ல பேரலோ யினிபிறப்ப தில்லையே. 197
சூரியக்கலை, சந்திரக்கலை எனும் பிராணயாமத்திற்கு அப்பால் சுழுமுனை எனும் அக்னிக் கலையால் மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியை முதுகுத்தண்டின் வழியாக வாசியை மேலேற்றும் நேர்மையை உள்ளுணர்ந்து செய்ய வேண்டும். வாசி ஒடுங்கும் ஓர் எழுத்தாக உனக்குள் இருக்கும் பிரம்மத்தில் சேர்க்க வேண்டும். அந்த ஓர் எழுத்து உனக்குள் ஒப்பற்ற வெளியாக இருப்பதை உணர்ந்து வாசியோகம் செய்து தியானத்தில் இருக்கும் உத்தம யோக ஞானிகள் இறவா நிலைப் பெற்று இறைவனுடன் சேர்ந்து இனி இப்பூமியில் பிறப்பெடுக்க மாட்டார்கள்.
கள்ளவுள்ள மேயிருக்க கடந்தஞான மோதுவீர்
கள்ளமுள் ளறுத்தபோது கதியிதன்றிக் காண்கிலீ
ருள்ளமே விளக்கிநித்த மொளியணுக வல்லிரேற்
றெள்ளுஞான மும்முளே சிறந்ததே சிவாயமே. 198
உள்ளத்தில் உலகாயதமான ஆசைகளையும், கள்ள எண்ணங்களையும் வைத்துக் கொண்டு, எல்லாம் கடந்த ஞானிபோல ஞானோபதேசம் செய்கிறீர்கள். உள்ளத்தில் உள்ள மூவாசைகளையும், கள்ள எண்ணங்களையும் வேரோடு அறுத்தபோது கதியிதுதான்; வேறில்லை என்று உணருவீர்கள். உள்ளத்தைச் சுத்தமாக்கி, கண்களின் சுடர் வழியே கபாலத்துக்குள் செல்ல வல்லவராயின், தெளிந்த ஞானம் உம்முளே தெளியும். அதுவே சிவாயம்.
சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின் வாசலுள்
முச்சதுர மெட்டுளே மூலாதார வறையிலே
அச்சமற்ற சவ்வுளே யரியர னயனுமாய்
உச்சரிக்கும் மந்திரம் முண்மையே சிவாயமே. 199
சுக்கில சுரோணிதக் கலப்பால் உருவாகியது எட்டு சாண் அளவேயுள்ள உடல். அது ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எட்டு எனப்படும் மூலாதர அறையாம் யகாரமாகிய கண்ணிலே கவனத்தை வைத்து ஞனவினையாற்ற வேண்டும். அச்சமற்ற வாசியை உள் தொண்டை மேலுள்ள சவ்விலே வைத்து ஊதி உண்ணாக்கின் வழியாக மேலேற்றுங்கள். அங்கே மும்மூர்த்திகளும் உள்ளனர். அதை அறிந்து கவனத்தைக் கருத்தில் சேருங்கள். இதுதான் உண்மையான மந்திரம்.
பூவுநீரு மென்மனம் பொருந்துகோயி லென்னுளம்
ஆவியோடி லிங்கமாய் யகண்டமெங்கு மாகினாலும்
மேவுகின்ற ஐவரும் விளங்குதூப தீபமாய்
ஆடுகின்ற கூத்தனுக்கோ ரந்திசந்தி யில்லையே. 200
பூவாகவும், நீராகவும் இருப்பது என் மனம். அதில் ஈசன் பொருந்தி கோயில் கொண்டிருப்பது என் உள்ளம். ஆவியான ஆன்மா இலிங்கமாக அமைந்து உள்ளதும் அங்கேயே. இந்த அகிலம் எங்கும் நிறைந்த ஐம்பூதங்களும் என் உடலில் மேவியுள்ளன. தூப தீபமாய் விளங்கி நடமாடும் கூத்தன் அந்த உடலில் இரவு பகலற்ற இடமாம் கண்களில் நடனம் ஆடிக்கொண்டுள்ளான். அங்கே சென்று அவனுடன் ஒன்றவேண்டும்.
உருக்கலந்த பின்னலோ வுன்னைநா னறிந்தது
இருக்கிலென் மறக்கிலென் னினைந்திருந்த போதெலாம்
உருக்கலந்து நின்றபோது நீயுநானு மொன்றலோ
திருக்கலந்து போதலோ தெளிந்ததே சிவாயமே. 201
இறைவா! நான் ஆன்மாவாக இருந்து உருவாகி வளர்ந்து இவ்வுடலைப் பெற்றேன். அதன்பின் உன்னை அறிந்தேன். நீ என்னை மறந்தால் என்ன? என்னுடன் இருந்தால் என்ன? நான் நினைத்த போதெல்லாம் என்னுடன் கலந்து நின்றபோது, நீயும் நானும் ஒன்றுதானே! உன் திருவருளால் ஞானவினையாற்றி நான் தெளிந்தபோது எனக்கு சிவாயம் தெளிந்தது.
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்துதேவ ராகலாம்
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்துவான மாளலாம்
சிவாய மஞ்செழுத்துளே தெளிந்துகொண்ட வான்பொருள்
சிவாய மஞ்செழுத்துளே தெளிந்துகொள்ளு முண்மையே. 202
சிவயநம எனும் ஐந்தெழுத்து மந்திரத்தின் உட்பொருளை உணர்ந்து தொடர்ந்து ஞானவினையாற்றுவோர்கள் தேவர்கள் ஆகலாம். சிவயநம எனும் ஐந்தெழுத்துக்குள்ளே ஓரெழுத்தை உணர்ந்து தியானம் செய்து இறைவனைத் தெளிந்து கண்டு கொண்டவர்கள் ஆகாயத்தை ஆளலாம்(தத்துவார்த்தமாக). அங்ஙனம் தெளிந்து கண்டுகொண்ட வான்பொருளாம் ஈசனை சிவயநம என்னும் ஐந்தெழுத்துக்குள்ளே தெளிந்து கொள்ளுங்கள். உண்மை இதே.
பொய்க்குடத்தி லைந்தொதுங்கிப் போகம்வீசு மாறுபோல்
இச்சடமு மிந்திரியமும் நீருமே லலைந்ததே
அக்குடம் சலத்தைமொண் டமர்ந்திருந்த வாறுபோல்
யிச்சடஞ் சிவத்தைமொண் டுகந்தமர்ந் திருப்பதே. 203
பொய்க் குடமாகிய மானுட உடலில் ஐந்து பூதங்களும் அமைந்து உள்ளன. மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்களும் சுகபோகங்களை அனுபவிக்கின்றது. இந்த உடம்பும் இந்திரியங்களும் நாதவிந்தாகிய நீரினால் அமைந்து அலைந்து கொண்டிருக்கின்றது. மண் குடத்தில் நீரை ஊற்றி வைத்தால் அது எப்படி உறுதியாக சாயாமல் இருக்கின்றதோ, அது போலவே பொய்க் குடமான இந்த உடலில் மெய்ப் பொருளாகிய சிவம் உகந்து அமர்ந்திருப்பதால் தான் இவ்வுலகில் உயிர்கள் உலவுகின்றன. சிவமாகிய சீவன் போனால் சவம்தான்.
பட்டமுங் கயிறுபோல் பறக்கநின்ற சீவனைப்
பார்வையாலே பார்த்துநீ படுமுடிச்சு போடடா
திட்டவும் படாதடா சீவனை விடாதடா
கட்டடாநீ சிக்கெனக் களவறிந்த கள்ளனை. 204
பட்டம் போன்று உயிர் அந்தரத்தில் பறந்து கொண்டு இருக்கிறது. இணைக்கும் கயிறு உடலில் உள்ள உயிர். அக்கயிற்றை இயக்கும் சூத்திரதாரி ஈசன். இருகண் கொண்டு ஈசனை உன் பார்வையால் கவனித்து மூச்சுக் காற்றை கும்பகத்தால் நிறுத்தி இறுக முடிச்சு போட வேண்டும். இந்த ஞானக் கலை தெரியாமல், பூரக, கும்ப, இரேசகம் செய்து வாசியைப் பிடிக்கத் தெரியாமல் யாரையும் திட்டாதீர்கள். விந்து நாசம் செய்து சீவனாகிய உயிரை வீணே விடாதீர்கள். ஞானவினையாற்றி களவறிந்த கள்வனாம் ஈசனை சிக்கென்று பிடித்துக் கட்டிவிடுங்கள்.
அல்லிறந்து பகலிறந் தகப்பிரம மிறந்துபோய்
அண்டாண்ட முங்கடந் தனேகனேக ரூபமாய்ச்
சொல்லிறந்து மனமிறந்த சுகசொரூப வுண்மையைச்
சொல்லியாற வென்னில்வேறு துணைவரில்லை யானதே. 205
தினந்தோறும் இரவும் பகலும் அவனையே நினைத்து உள்ளத்தை பிரமத்தில் ஒன்றி ஞானவினையாற்றுங்கள். அண்டாண்டங்கள் அனைத்தில் வாழும் உயிர்கள் யாவிலும் ஆன்மா ஒன்றுதான் என உணருங்கள். அறிவையும் உணர்வையும் நினைவையும் ஒன்றிணைத்து கருத்தில் வைத்து கண்களுக்குள் சென்று ஞானவினை புரிய சொல்லற்ற மவுனம் எனும் சொல்லும், மனமும் இறந்த சுகம் கிடைக்கும். நான் அனுபவித்த உண்மையான சுகத்தைச் சொல்லியாற அனுபவித்து உணர்ந்த துணைவர்கள் யாருமில்லையே.
ஐயிரண்டு திங்களா யடங்கிநின்ற தூமைதான்
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டு மாகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
துய்யகாய மானதுஞ் சொல்லுகின்ற தூமையே. 206
இந்த உடல் உருவானது தூமை என்னும் தீட்டினால்தான். பத்து மாதம் தாயின் கருவறையில் வெளியேறாமல் அடங்கி நின்ற தீட்டினால் உடல் வளர்ந்தது. கைகள் இரண்டு, கால்கள் இரண்டு, கண்கள் இரண்டு ஆகி மெய்யாகிய உடல் திரண்டு உருவானது. அதில் சத்தம் கேட்கக் காதுகளும், ரசமாகிய சுவையை உணர வாயும், கந்தமாகிய மணம் உணர மூக்கும் தோன்றி தூய உடல் உருவானதும், உலகில் வாழ்வோர் சொல்லும் தீண்டத்தகாத தீட்டினால் உருவானது என்பதே உண்மை.
அங்கலிங்க பீடமு மசவைமூன் றெழுத்தினுஞ்
சங்குசக் கரத்திலுஞ் சகல வானகத்தினும்
பங்குகொண்ட யோகிகள் பரமவாச லஞ்சினும்
சிங்கநாத ஓசையுஞ் சிவாயமல்ல தில்லையே. 207
நம் அங்கத்தில் சூட்சமாக இலிங்க பீடமாக இருப்பதும் அசபை மந்திரம் எனும் “அ, உ, ம்” என்ற மூன்று எழுத்தாக இருப்பதும், சங்கு சக்கரங்களாகவும், சகல சராசரங்கலாகவும் இருப்பதும் மெய்ப்பொருளான சிவமே. இதனை அறிந்து ஆகாயமான தன் மனத்தில் ஈசனையே நினைந்து வாசியோகம் செய்யும் யோகிகள் பத்தாவது வாசல் எனும் பரமபத வாசலில் நாத ஓசையை சேர்த்து பரமனைக் கண்டு ஐம்புலன்களையும் ஐந்தெழுத்தால் அடக்கி தியானத்தில் இருப்பார்கள்.
அஞ்செழுத்தும் மூன்றெழுத்து மென்றுரைக்கு மன்பர்கா
ளஞ்செழுத்தும் மூன்றெழுத்து மல்லகாணு மப்பொருள்
அஞ்செழுத்து நெஞ்செழுத்தி லவ்வெழுத் தறிந்தபின்
அஞ்செழுத்தும் அவ்வின்வண்ண மானதே சிவாயமே. 208
அஞ்செழுத்து பஞ்சாக்கரமென்றும் மூன்றெழுத்து ஓங்காரம் என்றும் உரைத்து செபம் செய்யும் அன்பர்களே! ஈசன் அஞ்செழுத்தாகவோ, மூன்றெழுத்தாகவோ இருப்பதில்லை. “நமசிவய” நம் உடலே என்பதை உணர்ந்து, அதன் நெஞ்செழுத்து “சி“காரம் எனவும் அறிந்துகொள்ளுங்கள். அதுவே ஓரெழுத்து. அங்கிருந்துகொண்டு “சிவயநம” என்னும் பஞ்சாக்கரத்தை மனதில் செபிக்க வேண்டும். அப்பொழுது பிரமம் ஓரெழுத்தாகவும், அதுவே உயிராகவும் உள்ளதை உணர்வீர்கள். ஓரெழுத்திலே ஐந்தெழுத்தும் அடங்கி இருப்பதையும் அவ்வெழுத்தே பஞ்சாக்கரமாக ஐந்து வண்ணங்கள் ஆகி நிற்பதையும் அதிலேயே ஐந்து பூதங்களும் உள்ளதையும் அறிந்து உணர்ந்து ஞானவினை புரியுங்கள்.
ஆதரித்த மந்திர மமைந்த வாகமங்களும்
மாதர்மக்கள் சுற்றமும் மயக்கவந்த நித்திரை
ஏதுபுக் கொளித்ததோ வெங்குமாகி நின்றதோ
சோதிபுக் கொளித்திடஞ் சொல்லடா சுவாமியே. 209
நித்திரை வந்தபொழுது, ஆகமங்களில் சொல்லியபடி வாழ்ந்து செபித்த மந்திரங்கள், மனைவி, மக்கள், சுற்றம் ஆகியவைகள் எங்கு சென்றன? நம் உடலில் உலவிய உயிர் எங்கு ஒளிந்தது? எங்குமாகி நிற்கும் ஆகாயத்தில் உலவியதோ? நம் உடலில் சோதி ஒளிந்திருக்கும் இடத்தைச் சொல்லித் தாருங்கள் சாமி.
அக்கர மனாதியோ வாத்துமா வனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களு மனாதியோ
தக்கமிக்க நூல்களுஞ் சதாசிவ மனாதியோ
மிக்கவந்த யோகிகாள் விரைந்துரைக்க வேணுமே. 210
உடல் அனாதியா? உயிரான ஆன்மா அனாதியா? ஐம்பூதங்களும், ஐம்புலன்களும் அனாதியா? ஆராய்ந்தறிந்து விளக்கத்தக்க நூல்கள் அனாதியா? சதாசிவம் அனாதியா? யோக ஞானம் மிகுந்து மேற்கூறியவற்றை விளக்கவல்ல யோகிகளே! விரைந்து விளக்கம் தாருங்கள்.
ஒன்பதான வாசல்தா னொழியுநா ளிருக்கையில்
ஒன்பதாம் ராமராம நாமமென்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்துநோ யடைப்பதாம்
அன்பரான பேர்கள்வாக்கி லாய்ந்தமைந் திருப்பதே. 211
ஒன்பது வாசல் கொண்ட உடல் ஒரு நாள் அழியும் என்ற உண்மை உணர்ந்து எந்நேரமும் இராமநாமம் செபித்து அவனைச் சரண் அடையுங்கள். இராமநாமம் செபிக்காத வஞ்சகர்களின் நாவில் நோய் வரும். அப்பொழுதும் அவர்களால் இராமநாமம் செபிக்க இயலாது. இராமனை வணங்கும் அன்பர்களின் நாவில் சதா சர்வகாலமும் இராமநாமம் ஒலிக்கும்.
அள்ளிநீரை யிட்டதே தகங்கையிற் குழைத்ததேது
மெள்ளவே மிணமிணவென்று விளம்புகிற்கு மூடர்காள்
கள்ளவேட மிட்டதேது கண்ணைமூடி விட்டதேது
மெள்ளவே குருக்களே விளம்பிடீர் விளம்பிடீர். 212
ஆற்றில் குளிக்கும்போது கைகளில் ஆற்று நீரையள்ளி ஆற்றிலே விட்டு, உள்ளங்கையில் விபூதி எடுத்து அதில் நீரை விட்டுக் குழைத்து உடம்பு முழுவதும் பட்டை போட்டு மெல்ல வாய்க்குள்ளேயே முணுமுணுவென்று மந்திரங்களைச் சொல்லும் மூடர்களே! ஏன் இந்தக் கள்ள வேடம்? மரணம் வந்தபோது கண்களை மூடிவிடுகிறீர்கள். இதனால் சாதித்ததேது? இவ்வாறு செய்யும் குருக்களே! இதன் தத்துவத்தை மெதுவாக விளக்கிக் கூறுங்கள்.
அன்னைகர்ப்பத் தூமையி லவதரித்த சுக்கிலம்
மின்னையே தரித்தும் பனித்துளிபோ லாகுமே
உன்னிதொக் குளழலுந் தூமையுள்ளே யடங்கிடும்
பின்னையே பிறப்பதும் தூமைகாணும் பித்தரே. 213
பித்தர்களே! தாயின் கர்ப்பத்தில் உள்ள தூமையில் சேர்ந்த சுக்கிலம் மின்னலைப் போன்ற ஒளியால் தரித்து பனித்துளி போலாகி உயிர் உண்டாகும். அவ்வுயிரே உடல் எடுத்து தாயின் வயிற்றுக்குள் உழன்று பத்து மாதம் தூமையின் உள்ளேயே அடங்கி இருக்கும். பின்னர் குழந்தையாகப் பிறக்கிறது. இப்படி நாம் பிறந்ததே தீட்டினால்தான் என்றும், அத்தூமையில்தான் ஈசன் இருக்கிறான் என்பதனையும் உணர்ந்து கொண்டு யாரையும் தீட்டு என்று ஒதுக்காதீர்கள்.
அழுக்கறத்தி னங்குளித் தழுக்கறாத மாந்தரே
அழுக்கிருந்த தவ்விட மழுக்கிலாத தெவ்விடம்.
அழுக்கிருந்த தவ்விடத் தழுக்கறுக்க வல்லிரேல்
அழுக்கிலாத சோதியோ டணுகிவாழ லாகுமே. 214
அழுக்குப் போகவேண்டும் என்று தினந்தினம் நீரில் குளித்தும் அழுக்கு அகலாத மனிதர்களே! மாயையாம் அழுக்கு எவ்விடத்தில் உள்ளது? அந்த அழுக்கு இல்லாத இடம் எது? மனதில் உள்ள மாயை, ஆசாபாசங்கள் முதலிய அழுக்குகளை ஒழிக்க முடியுமானால் மாசற்ற சோதியாம் ஈசனோடு சேர்ந்து வழலாம்.
அனுத்திரண்ட கண்டமா யனைத்துபல் யோனியாய்
மனுப்பிறந் தோதிவைத்த நூலிலே மயங்குறீர்
சனிப்பதேது சாவதேது தற்பரத்தி னூடுபோய்
நினைப்பதேது நிற்பதேது நீர்நினைந்து பாருமே. 215
விந்து அணுக்களால் திரண்டு உருவானது உடம்பு. அகண்டத்தில் உள்ள பலவிதமான யோனிகளில் கருத்தரித்து, பலவிதமான உயிரினங்களாக வாழ்கின்றன. மனிதனின் பிறப்பும் அவ்வாறே. முன்னால் வந்தவர்கள் சொல்லி வைத்த சாற்றிறங்களைப் படித்து உள் மெய்யை உணராது மயங்குகிறீர்கள். ஆன்மா பிறப்பதோ இறப்பதோ இல்லை. ஒன்று மற்றொன்றாக மாறி வருகின்றது. நினைவாக இருப்பது எது? என்றும் நிலையாக நிற்பது எது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.. தற்பரமாம் ஆகாயத்திற்குள்ளே நீங்கள் சென்று நினைவினில் நின்று பாருங்கள்.
ஆதியாகி யண்டாண்ட மப்புறத்து மப்புறம்
சோதியாகி நின்றிலங்கு சுருதிநாத சோமனை
போதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகள்
சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை யில்லையே. 216
அனைத்துக்கும் ஆதியாகவும், அண்டங்களுக்கு அப்பாலும் சோதியாக நின்றும், சுருதியுடன் கூடிய நாதலயமாகவும் விளங்கும் ஈசனாம் சோமனை, யாரும் போதிக்காமல் தனக்குள் உணர்ந்த ஞானிகள் அவனையே நினைவில் வைத்திருப்பர்; எல்லோருக்குள்ளும் அவன் இருப்பதை உணர்ந்ததால் சாதி பேதம் பார்க்காமல் ஈசனையே அனைவரிடமும் காண்பார்கள்.
ஆக்கைமூப்ப தில்லையே யாதிகா ரணத்திலே
நாக்கைமூக்கை யுள்மடித்து நாதநாடி யூடுபோய்
எக்கறுத்தி ரெட்டையு மிறுக்கழுத்த வல்லிரேல்
பார்க்கப்பார்க்க திக்கெலாம் பரப்பிரம்ம மாகுமே. 217
ஆக்கையாகிய உடலில் உள்ள ஆதியான ஆன்மாவிற்கு மூப்பு என்பதில்லை. ஆன்மா ஆதியாக இருப்பதால் உடல் மூப்பு அடைந்தாலும் ஆன்மா என்றும் இளமையோடு உள்ளது. நாக்கை உள் மடித்து மூக்கில் இழுக்கும் வாயுவை இடகலை பிங்கலையாக ஓடும் மூச்சுக் காற்றுடன் கலந்து, உண்ணாக்கினுள் செலுத்தி நடு நாடியில் கலந்து, பலமான விசையுடன் ஊதினால் நாதம் உண்டாகும். எக்கி எட்டு ரெண்டும் பத்து அக்கரத்தால் கபாலத்துக்குள்ளே வாசியை இறுக்கி அழுத்தி வைத்து ஞானவினை புரிய வல்லவர்கள் ஆனால் பார்க்கும் திசைகளில் எல்லாம் அவர்களுக்கு பரப்பிரம்மமாய்க் காட்சி தரும்.
அஞ்செழுத்தி னாதியா யமர்ந்துநின்ற தேதடா
நெஞ்செழுத்தி நின்றுகொண்டு நீசெபிப்ப தேதடா
அஞ்செழுத்தின் வாளதா லறுப்பதாவ தேதடா
பிஞ்செழுத்தி னேர்மைதான் பிரித்துரைக்க வேண்டுமே. 218
நெஞ்சை அழுத்தி நின்றுகொண்டு செபம் செய்வது எதனால்? அஞ்செழுத்து வாளால் மனதில் இருந்து அறுத்து எறிவது எவைகளை? அஞ்செழுத்தில் ஓர் எழுத்தாய் அனாதியாய் அமர்ந்து நின்றது “சி“காரமே. பஞ்சாக்கரத்தில் சக்தியைக் குறிக்கும் ‘வ‘ என்ற எழுத்து. அதுவே பிஞ்செழுத்து. அதன் மகிமையைப் பிரித்து உரையுங்கள்.
அஞ்சுமஞ்சு மஞ்சுமஞ்சு மல்லல்செய்து நிற்பதும்
அஞ்சுமஞ்சு மஞ்சுமே யமர்ந்துளே யிருப்பதும்
அஞ்சுமஞ்சு மஞ்சுமே யாதரிக்க வல்லிரேல்
அஞ்சுமஞ்சு மும்முளே யமர்ந்ததே சிவாயமே. 219
மானுட உடலில் ஐந்து பூதங்களும் ஐந்து புலன்களும் ஐந்து கோசங்களும் ஐந்து அவத்தைகளாகவும் இருந்து அல்லல் செய்து நிற்கிறது. அஞ்செழுத்தாகிய நமசிவய என்ற பஞ்சாக்கரமே நமது உடல். ஐந்து பூதங்களாகவும் ஐந்து புலன்களில் இயங்கும் அஞ்செழுத்தை நமசிவய என பலுக்கித் தியானிக்க வேண்டும். அஞ்செழுத்தின் உட்பொருள் யாவையும் நன்கு உணர்ந்து உடலையும் உயிரையும் பாதுகாத்து அஞ்செழுத்தை ஓதி வருபவர்கள், அஞ்செழுத்துக்களாகவும் ஐந்து வண்ணங்களாகவும் இருந்து ஈசன் தனக்குள்ளேயே அமர்ந்திருப்பதை உணரலாம்.
சுழித்தவோ ரெழுத்தையுஞ் சொன்முகத் திருத்தியே
துன்பவின்ப முங்கடந்து சொல்லுமூல நாடிகள்
அழுத்தமான வக்கர மங்கியுள் ளெழுப்பியே
ஆறுபங்க யங்கலந் தப்புறத் தலத்துளே. 220
சுழித்த ஒரே எழுத்து “அ“காரம். அதுவே கண்கள். அங்குள்ள சூரிய சந்திர கலைகளை எழுப்பி மூல நாடியான அக்கினி கலையுடன் கலக்கவேண்டும். இதனால் ஏற்படும் இன்ப துன்பங்களைக் கடந்து அழுத்தமாக அக்கினி கலையை மேல் ஆதாரங்கள் வழியாக மேலே உள்ள தலத்தில் நிறுத்தவேண்டும். இதுவே வாசியோகம்.
உயிரிருந்த தெவ்விட முடம்பெடுத்த தின்முனம்
உயிரதாவ தேதடா வுடம்பதாவ தேதடா
உயிரையு முடம்பையு மொன்றுவிப்ப தேதடா
உயிரினா லுடம்பெடுத்த வுண்மைஞானி சொல்லடா. 221
இந்த உடலை எடுப்பதற்கு முன் உயிர் எங்கு இருந்தது? உயிர் ஆவது எது? உடம்பாக ஆவது எது? உயிரையும் உடம்பையும் ஒன்றாக்குவது எது? உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானியே சொல்லுங்கள். உடலாக உருவெடுக்கும் முன்ப உயிர் ஆகாயத்தில் இருந்தது. உடல் அம்மையின் கருவில் உள்ள தீட்டு. உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது சிவம். அனைத்தும் அச்சிவமே.
உருத்தரிப்ப தற்குமுன் னுயிர்புகுந்த நாதமும்
கருத்தரிப்ப தற்குமுன் காயமென்ன சோணிதம்
அருட்டரிப்ப தற்குமுன் னறிவுமூலா தாரமாம்
குறித்தறிந்து கொள்ளுவீர் குணங்கெடும் குருக்களே. 222
குணங்கெடும் குருக்களே! உடல் உருவாவதற்கு முன் உயிர் வானத்தில் நாதமாக இருந்தது. கருத்தரிப்பதற்கு முன்பு உடல் தாயின் கருவறையில் சுரோணிதமாய் இருந்தது. உயிரும் உடலும் சேர்ந்து வளர்வதற்கு இறையருள் மூலாதாரத்தில் இருந்தது. இப்படி வெளிவந்த உடலில் உயிர் சூக்குமாய் இருப்பதைக் குறித்தறிந்து கொள்ளுவீர்கள்.
எங்குமுள்ள வீசனா ரெம்முடல் புகுந்தபின்
பங்குகூறு பேசுவார் பாடுசென்று அணுகிலார்
எங்கள்தெய்வ முங்கள்தெய்வ மென்றிரண்டு பேதமோ
உங்கள்பேத மன்றியே வுண்மை இரண்டு மில்லையே. 223
எங்கும் நீக்கமற நிறைந்துள்ள ஈசன் எனது உடலில் இயக்குவோனாகப் புகுந்திருந்தான் என்பதை என்னிலே உணர்ந்து கொண்டேன்பிறைவன் ஒன்றே. அவனுக்குப் பல பெயரிட்டு பங்கு போட்டு பேசுவோர்கள், அவனை அடைவதற்குரிய உண்மையான வழியை அறிந்து அதன் வழி செல்ல முயலமாட்டார்கள். எங்கள் தெய்வமே பெரிதெனவும், உங்கள் தெய்வம் சிறிது எனவும் பேசி இறைவனை பேதப் படுத்துவார்கள். இது உங்களது அறியாமையால் விளைந்த பேதம்தான். இறைவனில் பேதம் இல்லை.
அரியுமாகி யயனுமாகி யண்டமெங்கு மொன்றதாய்ப்
பெரியதாகி யுலகுதன்னில் நின்றபாத மொன்றலோ
விரிவிதென்று வேறுசெய்த வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாருமிங்கு மங்குமெங்கு மொன்றதே. 224
ஈசன் இந்த அண்டமெங்கும் ஒன்றாய் விளங்குகிறான். திருமாலாய், பெரும்மா(பிரம்மா)வாய், அனைத்துமாய் பெரியதாகி உலகில் விளங்கும் திருவடி ஒன்றே. மால், பிரம்மா, சிவன் என மூவரையும் வேறுபடுத்தி விளக்கம் இதுதான் என்று வாதாடும் வேடதாரி மூடர்களே! மூவரும் ஒன்றாகி உனக்குள்ளேயே அறிவாக இருப்பதை அறிவால் அறிந்து உண்மையை உணர்ந்து பாருங்கள். ஈசன், இங்கும், அங்கும், எங்குமே ஒன்றே!
வெந்தநீறு மெய்க்கணிந்து வேடமுந் தரிக்கிறீர்
சிந்தையுள் நினைந்துமே தினஞ்செபிக்கு மந்திரம்
முந்தமந்தி ரத்திலோ மூலமந்திரத்திலோ
எந்தமந்தி ரத்திலோ வீசன்வந் தியங்குமே. 225
வெந்த விபூதியைக் குழைத்து உடல் முழுவதும் பூசி சிவஞானி போல் வேடம் போடுகிறீர். ஈசன் இவ்வுடலில் வந்து இயங்குவது எந்த மந்திரத்தால்? அறிவீர்களா? நீங்கள் மனதில் நினைத்து தினம் செபிக்கும் மந்திரத்தாலா, முதலில் தோன்றிய ஆதி மந்திரத்தாலா, அல்லது மூலமந்திரத்தாலா?
அகாரகா ரணத்திலே யனேகனேக ரூபமாய்
உகாரகா ரணத்திலே யுருத்தரித்து நின்றனன்
மகாரகா ரணத்திலே மயங்குகின்ற வையகம்
சிகாரகா ரணத்திலே தெளிந்ததே சிவாயமே. 226
அகாரம், உகாரம், மகாரம் சேர்ந்து ஓங்காரமானது. அகாரம் உடலானது. அனேக உருவங்களில் வாழ்கின்றன. உகாரம் உருவாகி உயிர் தரிப்பதற்குக் காரணம். வையகம் முழுதும் மயங்குவதற்குக் காரணம் மகாரமே. ஓங்காரமே அனைத்தும் தோன்றுவதற்கு காரணம். இம்மயக்கம் தீர சிகாரத்தைப் பிடித்து ஞானவினை புரியுங்கள். அகம் தெளிந்து சிவம் விளங்கும்.
அவ்வெழுத்தி லுவ்வுவந் தகாரமுஞ் சனித்ததோ
உவ்வெழுத்து மவ்வெழுத்து மொன்றையொன்றி நின்றதோ
செவ்வையொத்து நின்றலோ சிவபதங்கள் சேரினும்
மிவ்வையொத்த ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே. 227
அ, உ, ம் ஆகிய அக்கரக்கங்கள் சேர்ந்து ‘ஓம்‘ ஆகியது. இதைத்தான் அவ், உவ், மவ் என்றும் அம், உம், இம் என்றும் சொல்கின்றனர். அவ்வும் உவ்வும் ஆகிய நாத விந்து சேர்ந்தே அகாரமாகிய உடல் உருவானது. உவ்வும் மவ்வும் ஆகிய உயிரும் மனமும் ஒன்றாகி ஒன்றி நிற்கின்றது. இங்ஙனம் ஓங்காரம் செம்மையான பொருளாய் இருப்பதை அறிந்து, உடலுயிராய் நிற்பதை உணரவேண்டும். பின்னர் ஞானவினை புரியவேண்டும். இவ்வாறு ஞானவழி நிற்கும் நற்குணம் நிறைந்த ஞானிகள் உலகோருக்கு இவைகளை விளக்கமாக உபதேசிக்க வேணும்.
ஆதியான வஞ்சிலு மனாதியான நாலிலும்
சோதியான மூன்றிலுஞ் சொரூபமற்ற ரெண்டிலும்
நீதியான தொன்றிலே நிறைந்துநின்ற வத்துவை
ஆதியான தொன்றுமே யற்றதஞ் செழுத்துமே. 228
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களும் ஆதியாக உள்ளவை. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கும் அந்தக் கரணங்கள். அகாரம், உகாரம், மகாரம் ஆகிய மூன்றும் சோதி. சூரிய சந்திர கலை ஆகிய இரண்டும் உருவமில்லாதவை. இவையெல்லாம் சேர்ந்து எல்லோர்க்கும் பொது நீதியாக விளங்கும் வத்து ஒன்றிலே நிறைந்து நிற்கிறது. இந்த வத்துவை அறிந்து, அதுவே ஆதியென உணர்ந்து ஐந்தெழுத்தால் தியானம் செய்யுங்கள்.
வானிலாத தொன்றுமில்லை வானுமில்லை வானிடில்
ஊனிலாத தொன்றுமில்லை யூனுமில்லை யூனிடில்
நானிலாத தொன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில்
தானிலாத தொன்றுமே தயங்கியாடு கின்றதே. 229
ஆகாயம் இல்லாதது ஒன்றும் இல்லை. ஒன்றும் இல்லாததே ஆகாயம். உடல் இல்லாத உயிர் ஒன்றுமில்லை; அப்பொழுது உடலும் இல்லை. உடல் இல்லை என்பதை நினைவில் நிறுத்து. நான் என்பது என்ன என்பதை உணர். நான் என்ற ஆணவம் இல்லாது ஞானவினை புரியுங்கள். நான் என்பதற்று தானாக நின்றது ஒன்றான சிவம் என உணரலாம். அச்சிவம் உன் உடலில் தங்கி இயங்கி ஆடுகின்றது. அத்திருவடி பற்றினால் சிவநிலை கிட்டும்.
விழுத்தகண் குவித்தபோ தடைந்துபோ யெழுத்தெலாம்
விளைந்துவிட்ட விந்திரசால வீடதான வெளியிலே
அழுத்தினாலு மதிமயங்கி யனுபவிக்கும் வேளையில்
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே. 230
விழித்திருக்கும் அகக்கண்ணில் எண்ணங்களைக் குவித்தால் ஓங்காரம், பஞ்சாட்சரம் என்ற எழுத்துக்கள் எல்லாம் அங்கேயே அடைந்து போய் மெய்யான மவுனம் கிட்டும். இந்திரியங்களால் விளைந்த வீடாகிய உடலில் உள்ள ஆகாயத்தில் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கையும் அங்கேயே அழுத்தி நிறுத்தி உடலையும் உயிரையும் ஒன்றாக்கி பேரின்பத்தை அனுபவிக்கும் நேரத்தில் ஈசனில் ஒன்றலாம். அப்போது ஈசனுண்டு; நான் இல்லை.
நல்லமஞ் சனங்கள்தேடி நாடிநாடி யோடுறீர்
நல்லமஞ் சனங்களுண்டு நாதனுண்டு நம்முளே
எல்லைமஞ் சனங்கள்தேடி யேகபூசை பண்ணினால்
தில்லைமேவுஞ் சீவனுஞ் சிவபதத்து ளாடுமே. 231
ஈசனுக்குத் திருமுழுக்காட்டு செய்ய எண்ணி, அதற்கெனத் தேவையான பொருள்களை நல்லதாகப் பார்த்து நாடிநாடித் தேடி ஓடுகிறீர்கள். நமக்குள்ளேயே நல்ல மஞ்சனங்கள் உண்டு, நாதனான ஈசன் உண்டு. நமக்குள் எல்லையாக இருக்கும் மனதில் நல்ல எண்ணங்களால் மனமுருகித் திருமுழுக்காட்டு செய்து ஒரே மனதாக ஈசனை எண்ணித் தியானியுங்கள். தில்லையாம் ஆகாயத்தலத்தில் உள்ள சீவன், சிவனின் திருவடியைச் சேர்ந்து நடனமாடும்.
உயிரகத்தில் நின்றிடு முடம்பெடுத்த தற்குமுன்
உயிரகார மாயிடு முடலுகார மாயிடும்
உயிரையு முடம்பையு மொன்றுவிப்ப தச்சிவம்
உயிரினா லுடம்புதா னெடுத்தவா றுரைக்கினே. 232
உடம்பு எடுப்பதற்கு முன் உயிர் அகத்தில் உள்ள ஆகாயத்தில் நின்றிருக்கும். உயிர் அகாரமான சிவனாகவும் உடல் உகாரமான சக்தியாகவும் இருக்கும். உயிரையும் உடலையும் ஒன்று சேர்ப்பது சிவம். இவ்வாறு உயிர் உடம்பெடுத்து வந்ததை உரைக்கிறேன்.
அண்டமேழு முழலவே யனந்தயோனி யுழலவே
பண்டுமா லயனுடன் பரந்துநின் றுழலவே
எண்டிசை கடந்துநின் றிருண்டசத்தி யுழலவே
அண்டரண்ட மொன்றதா யாதிநட்ட மாடுமே. 233
அண்டங்கள் ஏழும் சுற்றிக்கொண்டே இருக்கின்றது. அனந்த கோடி யோனியில் உதித்த உயிர்களும் சுற்றி உழன்று கொண்டிருக்கின்றது. உங்கள் உடலில் திருமால் முகுளமாகவும், பிரமன் மனமாகவும் இருந்து உழன்று கொண்டு உள்ளனர். இவர்கள் உடலின் உள்ளேயே காத்தும், படைத்தும் வருகிறார்கள். எண்திசைக்கு அப்பாலாய் கடந்து நின்ற இருளான சக்தி உழலவே அண்டங்கள் அனைத்தும் ஒன்றதாகிவிடும். அப்போது உடலில் நின்ற ஆதி உனக்குள் நடனமாடும்.
உருவநீ ருறுப்புகொண் டுருத்தரித்து வைத்திடும்
பெரியபாதை பேசுமோ பிசாசையொத்த மூடரே
கரியமாலு மயனுமாக காணொணாத கடவுளை
உரிமையாக வும்முளே யுணர்ந் துணர்ந்து கொள்ளுமே. 234
நீராக இருக்கும் விந்து முட்டையில் கலந்து முழு மனிதனாக உருவெடுக்கிறது. மனிதனானபின், இந்த வழியில் சென்றால்தான் இறைவனைக் காணலாம், பக்தி வழிதான் சிறந்தது எனப் பல வழிகளிலும் அலந்தால் பலன் இல்லை. பிசாசைப்போல அங்கும் இங்கும் அலைந்து திரியும் மூடர்களே! திருமாலும் பிரமனும் தேடி அடிமுடி காண முடியாத ஈசனை உனக்குள்ளேயே உரிமையாகக் கண்டு உணர்ந்து ஞானவினை புரியுங்கள்.
பண்ணிவைத்த கல்லையும் பழம்பொரு ளதென்றுநீர்
எண்ணமுற்று மென்னபே ருரைக்கிறீர்க ளேழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்து வைத்தளிக்கவும்
ஒண்ணுமாகி யுலகளித்த வொன்றை நெஞ்சிலுண்ணுமே. 235
ஏழைகளே! தெய்வம் என்று மனிதன் செய்து வைத்துள்ள கற்சிலையைப் பழமையான தெய்வம் என்று எண்ணிப் பல பெயரிட்டு அழைக்கிறீர்கள். எதையும் செய்யவும், உண்டாக்கிப் படைக்கவும், காத்து அளிக்கவும், ஒன்றாகிய இறைவனை, இவ்வுலகை அளித்த ஒன்றை, ஈசனை உள்ளத்தில் நிறுத்தி எண்ணித் தவம் செய்யுங்கள்.
நாலதான யோனியுள் நவின்றவிந்து மொன்றதாய்
ஆலதான வித்துளே யமர்ந்தொடுங்கு மாறுபோல்
சூலதான வுற்பனஞ் சொல்வதான மந்திரம்
மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே. 236
யோனிகள் நான்கு: ஊர்வன, பறப்பன, விலங்கினம், மனிதன். இவ்வகை யோனிகளுள் விந்து விழுந்து சூலாகிய கருப்பம் தரிக்கிறது. ஒரு சிறிய ஆல வித்துக்குள்தான் மிகப் பெரிய ஆலமரம் ஒடுங்கி உள்ளது. அவ்வாறே ஒரு துளி விந்துக்குள் இவ்வுடல் ஒடுங்கியுள்ளது. இதனை அறிந்த மேன்மையான ஞானிகள், உலகோருக்கு விளக்கிச் சொல்லுங்கள்.
அருவமா யிருந்தபோ தன்னையங் கறிந்திலை
உருவமா யிருந்தபோ துன்னைநா னறிந்தனன்
குருவினால் தெளிந்துகொண்டு கோதிலாத ஞானமாம்
பருவமான போதலோ பரப்பிரம மானதே. 237
ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய ‘சிவய‘ என்ற அக்கரத்தில் ஆன்மா உருவின்றி இருந்தபோது அங்கு அன்னையால் கூட உன்னை அறியமுடியவில்லை. நீர், மண் ஆகிய ‘நம‘ என்றதில் சேர்ந்து உருவாகி ஐம்பூதங்களும் சேர்ந்து உடலாகி இருந்தபோது உன்னை நான் அறிந்து கொண்டேன். குரு தொட்டுக்காட்டி சொல்லித்தந்த குறையில்லாத ஞானம் என்னைத் தெளிய வைத்தது. ஞானவினையைத் தொடர்ந்து செய்து, தக்க பருவம் வந்தபோது பரப்பிருமத்தை உணர்ந்து அத்துடன் கலந்தேன்.
பிறப்பது மிறப்பதும் பிறந்திடா திருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறந்ததைத் தெளிந்ததும்
துறப்பதுந் தொடுப்பதும் சுகித்துவாரி யுண்பதும்
பிறப்பது மிறப்பதும் பிறந்தவீ டடங்குமே. 238
உலகில் பிறப்பதும், இறப்பதும், மீண்டும் பிறந்திடாது இருப்பதும் ஈசன் செயல். தன்னை மறந்து இருப்பதும், தன்னையே நினைந்து இருப்பதும், என்னுள்ளே மறைந்திருந்த ஈசனை அறிந்தபின் தெளிந்து, பின்னர் உலக சுகங்களைத் துறந்து அவனையே எண்ணித் தவம் புரிந்ததும், அப்போது கிடைத்த அமிர்தத்தை வாரி உண்பதும் ஆகியவை எல்லாம் பிறக்கவும் இறக்கவுமாக இருக்கும் பிறந்த வீடாக விளங்கும் உள்ளத்தில் அடங்கியுள்ளது.
கண்ணிலே யிருப்பனே கருங்கடல் கடைந்தமால்
விண்ணிலே யிருப்பனே மேவியங்கு நிற்பனே
தன்னுளே யிருப்பனே தராதலம் படைத்தவன்
என்னுளே யிருப்பனே யெங்குமாகி நிற்பனே. 239
பாற்கடலை கடைந்த திருமால் கண்ணின் கருமணியில் உள்ளான். விண்ணாக விளங்கும் மனத்தை மேவி அங்கு நிற்பான். இந்த தராதலம் படைத்த பிரம்மன் தனக்குள்ளே இருப்பான். ஈசன் என்னுள்ளே எங்குமாகி நிற்பான். ஆக மும்மூர்த்திகளையும் உடலில் காணுங்கள்.
கண்ணிலே யிருப்பனே கருங்கடல் கடைந்தமால்
விண்ணிலே யிருப்பனே மேவியங்கு நிற்பனே
தன்னுளே யிருப்பனே தராதலம் படைத்தவன்
என்னுளே யிருப்பனே யெங்குமாகி நிற்பனே. 240
பாற்கடலை கடைந்த திருமால் கண்ணின் கருமணியில் உள்ளான். விண்ணாக விளங்கும் மனத்தை மேவி அங்கு நிற்பான். இந்த தராதலம் படைத்த பிரம்மன் தனக்குள்ளே இருப்பான். ஈசன் என்னுள்ளே எங்குமாகி நிற்பான். ஆக மும்மூர்த்திகளையும் உடலில் காணுங்கள்.
எள்ளிரும்பு கம்பளி யிடும்பருத்தி வெண்கலம்
அள்ளியுண்ட நாதனுக்கோ ராடைமாடை வத்திரம்
உள்ளிருக்கும் வேதியர்க் குற்றதான மீதிரால்
மெள்ளவந்து நோயனைத்து மீண்டிடுஞ் சிவாயமே. 241
பசியென வந்தோருக்கு அன்னமிட்டு, தானியங்கள், கம்பளிப் போர்வை, பருத்தி ஆடை, வெண்கலப் பாத்திரங்கள் போன்றவைகளைத் தானமாக கொடுத்து, தர்மங்கள் செய்து வாழ வேண்டும். முதுமையினால் உடல் நலிந்து வீட்டுக்குள் இருக்கும் வேதியர்களுக்குத் தேவையான உதவிகளை தேடிச் சென்று செய்து, தானம் கொடுக்க வேண்டும். இவ்வாறு தான தர்மங்கள் செய்பவர்களுக்கு மெள்ள வந்த நோய்கள் அனைத்தும் அவர்களை விட்டு விலகும். தான தர்மம் செய்வது ஈசனைச் சேர வழி.
ஊரிலுள்ள மனிதர்கா ளொருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தையிட்டு செம்பைவைத் திழுக்கிறீர்
ஆரினாலும் மறியொணாத வாதிசித்த நாதரை
பேதையான மனிதர்பண்ணும் பிரளிபாரும் பாருமே. 242
கோயில் திருவிழாக்களில் தேர் இழுப்பது வழக்கம். ஊரில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒருமனதாய் ஒன்றாகக்கூடி தேரில் வடக்கயிற்றைக் கட்டி, செம்பினால் ஆன மூர்த்தங்களை வைத்து இழுக்கிறார்கள். தன் உடலைத் தேராக ஆக்கி, யாராலும் அறிய முடியாத ஆதிசித்த நாதனான ஈசனை அதனுள் இருத்தி, வாசியைக் கயிறாக ஆக்கித் தேரில் உள்ள ஈசனை இழுக்கவேண்டும். தன் உடலில் சோதியாக ஈசன் இருப்பதை உணராத பேதை மனிதர்கள் பண்ணும் பிரளியைப் பாருங்கள்.
மருள்புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே
குருக்கொடுத்த மந்திரங் கொண்டுநீந்த வல்லிரேல்
குருக்கொடுத்த தொண்டருங் குகனொடிந்த பிள்ளையும்
பருத்திபட்ட பன்னிரண்டு பாடுதான் படுவரே. 243
சிந்தையில் அருளுக்குப் பதில் மருள் புகுந்ததால் மாயையில் சிக்கி மயங்குகின்ற மாந்தர்களே! குரு கொடுத்த மந்திரத்தால் ஞானவினை புரிந்து ஈசனை உணர்ந்து தெளியுங்கள். சிந்தையில் சிவம் இருப்பதை உணருங்கள். பருத்தி ஆடை ஆவதற்கு முன் பஞ்சானது பன்னிரண்டு பாடுபட்டே உடையாக மாறுகிறது. அதுபோல ஞானகுருவிடம் சீடராகப் பன்னிரண்டு ஆண்டுகள் இருந்து ஞானப்பாடுபட்டு என்றும் மாறா இளமையுடன் இருக்கும் ஈசனின் பிள்ளை முருகனை போல் நீங்களும் ஆகுங்கள்.
அன்னைகர்ப்ப வறையதற்கு ளங்கியின்பிர காசமாய்
அந்தறைக்குள் வந்திருந் தரியவிந்து ரூபமாய்
தன்னையொத்து நின்றபோது தடையறுத்து வெளியதாய்
தங்கநற் பெருமைதந்து தலைவனாய் வளர்ந்ததே. 244
தாயின் கர்ப்ப அறையினுள் தீயின் ஒளியுடன் வந்த விந்து அங்கிருந்த முட்டையில் சேர்ந்து உருவாக்கி உடலாகிறது. அது முழு வளர்ச்சியுற்று தன்னைப் போல் கை, கால், தலை, முதலியவைகளுடன், தடை அனைத்தையும் உடைத்து வெளி வருகிறது. பின் அதுவே இப்பூமியில் தங்கி வளர்ந்து பல பெருமைகளையும் பெற்றுத் தலைவனாய் வாழ்கிறது. எல்லாம் விந்துவில் உள்ள சோதியில்தான் என்பதை உணருங்கள்.
உன்னையற்ப நேரமு மறந்திருக்க லாகுமோ
உள்ளமீ துறைந்தெனை மறைப்பிலாத சோதியை
பொன்னைவென்ற பேரொளிப் பொருவிலாத வீசனே
பொன்னடிப் பிறப்பிலாமை யென்றுநல்க வேணுமே. 245
உள்ளம் எனும் கோயிலிலே உள்ள மறைப்பில்லா சோதியாக என்னுள் விளங்கும் ஈசனே! ஒரு நொடி நேரம்கூட உன்னை என்னால் மறந்து இருக்க முடியாது. பொன்னையும் மிஞ்சி சொக்கத் தங்கமான பேரொளியாக பொருந்தி விளங்கும் ஈசனே! உன் பொன்னான திருவடியை என் தலை மேல் வைத்துள்ளாய். அதைப் பிடித்து மேலேறி, நான் பிறவா நிலை நான் பெற அருள்புரியாய்.
பிடித்ததெண்டு மும்மதோ பிரமமான பித்தர்காள்
தடித்தகோல மத்தைவிட்டு சாதிபேதங் கொண்மினோ
வடித்திருந்த தோர்சிவத்தை வாய்மைகூற வல்லிரேல்
திடுக்கமுற்ற வீசனைச் சென்றுகூட லாகுமே. 246
பித்தர்களே! உங்களுக்குப் பிடித்தவைகள் எல்லாம் என்றும் உங்களுக்கு சொந்தமோ? பிரமமே அனைவராயும் உள்ளது. இதை அறியாமல் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற சாதி பேதங்கள் கொள்ளாதீர்கள். உங்களுக்குள்ளேயே ஓரெழுத்தாக வடிவம் கொண்டிருக்கும் சிவத்தின் உண்மைகள் யாவையும் உணர்ந்து தெளிந்து ஞானவினை புரிந்தீர்களானால் ஈசனை அடையலாம்.
சத்திநீ தயவுநீ தயங்குசங்கி னோசைநீ
சித்திநீ சிவனுநீ சிவாயமா மெழுத்துநீ
முத்திநீ முதலும்நீ மூவரான தேவர்நீ
அத்திபூர மும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே. 247
சக்தியான அம்மை நீ, தயாவாகிய கருணை நீ, திருமாலின் சங்கோசை நீ, சித்தி நீ, சீவனிலாடும் சிவனும் நீ, சிவாயநம எனும் ஐந்தெழுத்தும் நீ, முத்தி தருபவன் நீ, உயிரின் முதலாம் ஆதி நீ, மும்மூர்த்திகளும் நீ, பூரணமான அகத்தீயுமாய் என்னுள் இருக்கும் ஈசனே! நீ எனக்குள் சீவனாய் இருப்பதை அறிந்து உணர்ந்து கொண்டேன்.
சட்டையிட்டு மணிதுலங்குஞ் சாத்திரச் சழக்கரே
பொத்தகத்தை மெத்தவைத்து போதமோதும் பொய்யரே
நிட்டையேது ஞானமேது நீரிருந்த வட்சரம்
பட்டைஏது சொல்லிரே பாதகக் கபடரே. 248
பளபளக்கும் பட்டுச்சட்டைகளை அணிந்து கொண்டு கழுத்தில் மணிமாலைகள் மின்ன, சாத்திரங்களை இட்டமுடன் வளைத்துப் பேசி மயக்கும் சாத்திரச் சழக்கரே! பொத்தகங்களை மட்டும் படித்துவிட்டு போதனை செய்யும் பொய்யர்களே! நிட்டை என்பது எது? ஞானம் என்பது எது? திருநீறாக தெய்வம் இருந்த அட்சரம் எது? பட்டை போடுவது எதற்காக என்னும் வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் கபட வேடதாரிகளே!
உண்மையான சுக்கில முபாயமா யிருந்ததும்
வெண்மையாகி நீரிலே விரைந்துநீர தானதும்
தண்மையான காயமே தரித்துருவ மானதும்
தெண்மையான ஞானிகாள்தெளிந் துரைக்க வேணுமே. 249
உண்மையான விந்துவே சுக்கிலமாகி உயிர் உருவாகக் காரணம். யாவற்றையும் அறிந்த ஞானிகளே! வெண்மை நிறமான அவ்விந்து சுரோணிதத்தில் விரைந்து கலந்து நீராகிக் கருவாகிப் பின் உடலாக உருவானதையும், அதன் தத்துவங்களையும் தெளிவாக உலகோருக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமே.
வஞ்சகப் பிறவியை மனத்துளே விரும்பியே
அஞ்செழுத்தி னுண்மையை யறிகிலாத மாந்தர்காள்
வஞ்சகப் பிறவியை வதைத்திடவும் வல்லிரேல்
அஞ்செழுத்தி னுண்மையை யறிந்துகொள்ள லாகுமே. 250
அஞ்செழுத்தால் ஆகிய இவ்வுடல் எதற்குக் கிட்டியது எனும் உண்மையை அறியாத மாந்தர்களே! வஞ்சகப் பிறவியாம் மானிடப் பிறவியின் மேல் ஆசை கொண்டு, அதனால் இன்னல்பல பட்டு வாழும் மனிதர்களே! மனதின் ஆசைகளைக் களைந்து, ஞானவினை புரிந்து இப்பிறவியை அறுக்க முடியுமானால், ஐந்தெழுத்தின் உண்மைத் தத்துவத்தை அறியமுடியும்.
காயிலாத சோலையிற் கனியுகந்த வண்டுகள்
ஈயிலாத தேனையுண் டிராப்பக லுறங்குறீர்
பாயிலாத கப்பலேறி யக்கரைப் படுமுனே
வாயினா லுரைப்பதாகு மோமவுன ஞானமே. 251
காயே இல்லாமல் அனைத்தும் கனிகளாகக் காய்த்துள்ள சோலையில், வண்டுகள் கனிக்குள் புகுந்து, உண்டு, அதன் சுவையில் மயங்கி எந்நேரமும் அதற்குள்ளேயே கிடந்து அழிந்து விடுவதைப் போல, ஈ இல்லாத தேனைப்போல் உள்ள உலக இன்பங்களில் அமிழ்ந்து இராப்பகல் முழுதும் உறங்குகிறீர். உங்கள் உடலில் உள்ள காயில்லாக் கனி நிறைந்த கற்பகத் தரு எங்கே உள்ளது. ஈ மொய்க்காத் தேனாம் அமிர்தம் எங்கே உள்ளது. இவையெல்லாம் அறிந்து ஞானவினையாற்ற, பாய்மரம் இல்லாத கப்பலாம் நம் உடலை வைத்துக்கொண்டு பிறவிப் பெருங்கடல் தாண்டலாம். அப்பொழுது கிட்டும் இன்பத்தை வாயினால் சொல்ல முடியாது; உணர்வால்தான் உணர முடியும். அந்த நிலைதான் மவுனம்.
பேய்கள்பேய்க ளென்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள்
பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுதோ
ஆதிபூசை கொள்ளுமோ வனாதி பூசை கொள்ளுதோ
காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே. 252
பேய்கள், பிசாசுகள் என்று பொய்களைப் பிதற்றி அவைகளுக்குப் பூசைகள் போடும் பேயர்களே! பேய்களும் பிடாரிகளும் பூசையை ஏற்றுக்கொள்கின்றவா? ஆதிசக்தி பூசையை ஏற்றுக்கொள்ளுமோ? அநாதியான ஈசன் பூசையை ஏற்றுக்கொள்கின்றானா? உடலெடுத்து வாழும் பேராசைப் பேய்களான மனிதனே பூசை செய்து அதனால் மற்றவர்களை ஏமாற்றிப் பொன்னும் பொருளும் பறித்து வாழ்கின்றனர். உலகோரே! இவ்வுண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.
மூலமண்ட லத்திலே முச்சதுர மாதியாய்
நாலுவாச லெம்பிரான் நடுவுதித்த மந்திரம்
கோலிஎட் டிதழுமாய் குளிர்ந்தலர்ந்த தீட்டமாய்
மேலும்வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே. 253
நம் உடலில் மூலமண்டலமான இடம் கபாலம். அதற்குள் ஆதி முக்கோணச் சதுரத்துக்குள் உள்ளது. அங்கு நான்கு வாசல் உள்ளது. அனைத்துக்கும் நடுவில் உள்ள மந்திரம் உயிராம் சீவனே! இச்சீவன் எண்சாண் உடலெடுக்கும்; அல்லது குளிர்ந்து காய்ந்து தீட்டாக வெளிவரும். இதைத் தவிற வேறு எதையும் காண்கிலேன். அப்படி உடலெடுத்து வந்ததே சிவாயம்.
ஆதிகூடு நாடியோடி காலைமாலை நீரிலே
சோதிமூல மானநாடி சொல்லிறந்த தூவெளி
யாதிகூடி நெற்பறித்த காரமாதி யாகமாம்
பேதபேத மாகியே பிறந்துட லிறந்ததே. 254
ஆதியான உயிர் மூச்சு நம் உடலில் உள்ள நாடிகளுக்குள் அல்லும் பகலும் ஓடி உடலுக்கு உயிர் தருகிறது. நீரில் எரியும் நெருப்பாகிய கண்களிலிருந்து உடலின் ஆகாயமான கபாலத்துக்கு ஒரு நாடி ஓடுகிறது. ஆதி கூடி விளைந்த விளைச்சலாம் நெற்பயிரைப் பறிக்க ஞானவினை புரியவேண்டும். ஆதி ஆகமங்கள் சொல்வதும் இதே. இங்ஙனம் செய்யாது மாறாக வாழ்ந்தால் உடல் பிறக்கும்; இறக்கும். இதுவே தொடரும். பிறப்பறுக்க இயலாது.
பாங்கினோ டிருந்துகொண்டு பரமனஞ் செழுத்துளே
யோங்கிநாடி மேலிருந்து உச்சரித்த மந்திரம்
மூங்கில்வெட்டி நாருரித்து முச்சில்செய் விதத்தினி
னாய்ந்தநூலிற் றோன்றுமே யரிந்துணர்ந்து கொள்ளுமே. 255
ஐந்தெழுத்தினுள்ளே ஈசன் பாங்காக இருக்கிறான். கபாலத்தில் ஞானவினை புரிந்து ஒன்று சேர்த்த நாடியில் நின்று உச்சரித்த மந்திரமாம் “ஓம்சிவயநம” ஈசனுடன் சேர்த்து பிறப்பறுக்கும். மூங்கில் மரங்களை வெட்டி, அதில் நார் உரித்து முறம், கூடை, தட்டு போன்ற பலவகைப் பொருட்கள் செய்கிறோம். அதேபோல் அனைத்து உயிர் உடல்களும் ஒரே பிரம்மத்திலிருந்தே வந்தன என்பதை உணருங்கள். இதைத்தான் திருவாசகம், திருமந்திரம், தேவாரம் போன்ற அனைத்து நூல்களும் உரைக்கின்றன. இவைகளை உணர்ந்து ஞானவினையாற்றுங்கள்.
புண்டரீக மத்தியி லுதித்தெழுந்த சோதியை
மண்டலங்கள் மூன்றினோடு மன்னுகின்ற மாயனை
அண்டரண்ட மூடறுத் தறிந்துணர வல்லிரேல்
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்ப தில்லையே. 256
புண்டரீகமாம் இருதயத் தாமரை கண்களே. கண்களில் உள்ள சோதியை சூரிய, சந்திர அக்கினி கலைகளில் ஒன்றுவிக்கவேண்டும். அப்பொழுது ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றால் மறைக்கப்பட்டுள்ள ஈசன் வெளிப்படுவான். அப்பொழுது உடலில் உள்ள மண்டலங்களுக்குள் ஊடுருவிச் செல்ல ஈசனுடன் ஒன்றலாம். இந்நிலை கிட்டியபின் கண்டகண்ட கோவிலுக்குச் செல்லவேண்டாம்; தெய்வங்களைக் கையெடுத்துக் கும்பிட வேண்டாம்.
அம்பலங்கள் சந்தியி லாடுகின்ற வம்பனே
அன்பனுக்கு ளன்பனாய் நிற்பனாதி வீரனே
அன்பருக்கு ளன்பராய் நின்றவாதி நாயனே
உன்பருக்கு வுண்மையாய் நின்றவுண்மை யுண்மையே. 257
திருச்சிற்றம்பலம் போன்ற அம்பலங்கள் யாவிலும் நடனமாடும் ஆண்டவனே! உன்னை அன்போடு நினைக்கும் அன்பனுக்குள் அன்பனாய் நிற்கும் ஆதி வீரனே! அன்பருக்குள் அன்பராய் நிற்கும் ஆதி நாயகனே! உண்மை(உன்+மெய்) அடியார்களுக்கு நீ உண்மையாகக் காட்சி தந்து ஆட்கொண்டது யாவும் உண்மையே. அந்த உள் மெய்யே உண்மை என்பதை உணர்ந்து ஞானவினை புரியுங்கள்.
அண்ணலாவ தேதடா வறிந்துரைத்த மந்திரம்
தண்ணலாக வந்தவன் சகலபுராணங் கற்றவன்
கண்ணனாக வந்தவன் காரணத் துதித்தவன்
ஒண்ணதாவ தேதடா உண்மையான மந்திரம். 258
ஈசன் நம் உடலில் குருவாகி வந்தவன். குரு எனில் இருளைப் போக்கி ஒளி தருபவன். தண்ணீரில் தணலாய் இருப்பவன். அவன் மூலம்தான் சகல புராணங்களையும் படித்து அறியவேண்டும். கண்ணனாக வந்தவன். அது தான் கண். அதைத் திறந்ததும்தான் சகல காரணப் பிறப்புக்களும் உண்டாகின்றன. அதன் கருவிழியே ஓரெழுத்தாம் குத்தெழுத்து. அதுதான் உண்மையான மந்திரம்; அண்ணலாகிய குரு உபதேசிக்கும் மந்திரம். இதையறிந்து ஞானவினையாற்றி ஈசனை அடையுங்கள்.
தன்மசிந்தை யாமளவுந் தவமறியாத் தன்மையாய்க்
கன்மசிந்தை வெயிலுழன்று கருத்தழிந்த கசடரே
சென்மசென்மந் தேடியுந் தெளியொணாத செல்வனை
நன்மையாக வும்முளே நயந்துகாண வேண்டுமே. 259
தர்மமே தவம் என்பதை அறியாது, தர்ம சிந்தையே இல்லாததால், அதர்ம வழி சென்று, அதனால் செய்யும் கரும வினைகளால் ஏற்பட்ட பந்த பாசங்களில் சிந்தையை வைத்து, அதனால் ஏற்படும் இன்ப துன்பங்களால் வெயிலில் விழுந்து துடிக்கும் புழுப்போல துடித்து, கருத்தழிந்த கசடர்களே! கோடி கோடி சென்மங்கள் எடுத்துத் தேடினாலும் கண்டு அறிந்து, இதுதான் எனத் தெளிவடைய முடியாத செல்வமான ஈசனை, நம் உடலுக்குள் நயந்து தேடிக் கண்டுபிடித்து, அங்கேயே நினைவை நிறுத்தித் தவம் செய்யுங்கள்.
ஆரலைந்து பூதமா யளவிடாத யோனியும்
பாரமான தேவரும் பழுதிலாத பாசமும்
ஓரொணாத வண்டமு முலோகலோக லோகமும்
சேரவெந்து போயிருந்த தேகமேது செப்புமே. 260
உயிர் பஞ்சபூதங்களால் எண்ணற்ற யோனிகளில் பிறக்கிறது. உடல் சுமையுடன் மனதில் ஆசாபாசங்களையும் சுமக்கிறது. உடலாகிய அண்டம் உயிர் பிரிந்து பிணமாகி, தன் உடலில் உள்ள உலோகச் சத்துக்களுடன் ஒருசேர வெந்துபோனால், அத்தேகம் என்ன சொல்லும்.
என்னகத்து ளென்னைநா னெங்குநாடி யோடினேன்
என்னகத்து ளென்னைநா னறிந்திலாத தாகையால்
என்னகத்து ளென்னைநா னறிந்துமே தெரிந்தபின்
என்னகத்து ளென்னையன்றி யாதுமொன்று மில்லையே. 261
என் உள்ளத்தில் இருக்கும் என்னை நான் அறியாததால், என் உள்ளத்தில் என்னை நான் அங்குமிங்கும் நாடித்தேடினேன். அப்படித் தேடிக் கண்டுகொண்டபின் என் உள்ளத்தில் நானாகிய சிவத்தைத் தவிர யாதுமில்லையே.
விண்ணினின்று மின்னெழுந்து மின்னொடுங்கு மாறுபோல்
என்னுள்நின்று மெண்ணுமீச னென்னகத்திருக் கையால்
கண்ணினின்று கண்ணில்தோன்றும் கண்ணறிவி லாமையால்
என்னுளின்ற வென்னையும் யானறிந்த தில்லையே. 262
விண்ணில் உதிக்கும் மின்னலானது அந்த மின்னலிலேயே ஒடுங்கிவிடுவது போல், என் ஆகாயமான நினைவில் நிற்கும் ஈசன் நானாக என் உள்ளத்தில் இருக்கின்றான். கண்தான் நுழைவாயில் என்னும் உண்மையை அறியாமையால், கண்ணின் கருமணியில் நின்றுள்ள என் ஈசனை அறியாது இருந்தேன். ஈசனும் நானும் ஒன்றே என அறிந்தபின், என்னையும் அவனையும் தவிர யாரும் இல்லையே.
அடக்கினு மடக்கொணாத வம்பலத்தி னூடுபோய்
அடக்கினு மடக்கொணா தன்பிருக்கு மென்னுளே
கிடக்கினு மிருக்கினுங் கிலேசம்வந் திருக்கினும்
நடக்கினு மிடைவிடாத நாதசங் கொலிக்குமே. 263
எவ்வளவுதான் அடக்கினாலும் அடக்க முடியாத மூச்சுக் காற்றை கபாலத்தில் உள்ள சிற்றம்பலத்தினுள் செலுத்தி, அதை அங்கேயே நிறுத்தி அடக்கவேண்டும். அடங்காத மனதை அன்பால் உருக்கவேண்டும். சதா சர்வ காலமும், எச்செயலைச் செய்து கொண்டிருந்தாலும், எந்நிலையில் இருப்பினும் நினைவை அவன்மேல் வையுங்கள். மனம் உதிக்கும் இடமாம் கண்ணிலேயே மனம் ஒடுங்கும். கருத்தில் நினைவு ஒன்றி இடைவிடாத சங்கோசை ஒலிக்கும்.
மட்டுலாவு தண்துழா யலங்கலாய் புனற்கழல்
விட்டுவீழில் தாகபோக விண்ணில் கண்ணில் வெளியினும்
எட்டினோ டிரண்டினு மிதத்தினால் மனந்தனைக்
கட்டிவீடி லாதுவைத்த காதலின்ப மாகுமே. 264
துளசியிலிருந்து நறுமணம் எப்போதும் விலகாது. அதுபோல், எப்போதும் என் மனம் நீராக உள்ள ஈசனின் திருவடிகளை திருவடிகளை விட்டு விலகாது. ஆகாயமே எனக்குள் மனமாகி வெட்டவெளியாக உள்ளது. எட்டு இரண்டு எனும் அகார உகாரம் சேர்ந்து பத்தாகிக் கண்ணாகிக் கபாலத்தில் உள்ளது. அதனுள் சென்று ஞானவினை புரிய மனம் அடங்கும். அறிவு வீட்டினுள் சென்று ஈசனுடன் இணையலாம். பேரின்பக் காதல் இன்பம் கிட்டும்.
ஏகமுத்தி மூன்றுமுத்தி நாலுமுத்தி நன்மைசேர்
போகமுற்றி புண்ணியத்தில் முத்தியன்றி முத்தியாய்
நாகமுற்ற சயனமாய் நலங்கடல் கடந்ததீ
யாகமுற்றி யாகிநின்ற தென்கொலாதி தேவனே. 265
ஈசனைச் சேர்ந்து ஏகமுத்தி பெற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையும் நீக்கவேண்டும். மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்ற நான்கு அந்தக் கரணங்களாலும் நன்மைகளைச் சேர்க்க வேண்டும். ஞானவினை செய்து போகம் முற்றிப் புண்ணியத்தால் முத்தி கிட்டும். மூன்று தீச்சுவாலைகளையும் ஒன்றாக்கி, கபாலத்தில் பள்ளிகொள்ளும் திருமாலாம் முகுளத்தில் உள்ள நினைவில் நிறுத்த, அது ஆதிதேவனிடம் அழைத்துச் செல்லும். அங்கு ஈசனுடன் ஒன்றலாம்.
மூன்றுமுப்பத் தாறினோடு மூன்றுமூன்று மாயமாய்
மூன்றுமுத்தி யாகிமூன்று மூன்றுமூன்று மூன்றுமாய்
தோன்றுசாதி மூன்றதாய் துலக்கமில் விளக்கதாய்
என்றனாவி னுள்புகுந்த தென்கோலோநம் மீசனே. 266
(தத்துவங்கள் – மூன்று முப்பது ஆறு — தொண்ணூற்றி ஆறு. ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்கள்.) மண், பெண், பொன் என்ற மூவாசைகள். 96 தத்துவங்களோடு இவைகள் மாயமாய் அமைந்து உள்ளன. அதில் மூன்று தீயாக சந்திரன், சூரியன், அக்னியாக உள்ளது. உயிர் சூரியநாடி, சந்திர நாடி, சுழுமுனை என்ற நாடிகளில் ஓடும் மூச்சாகும். இவ்வுடலில் ராஜசம், தாமசம், சாத்வீகம் என்ற மூன்று குணங்களும், வாதம், பித்தம், சிலேத்துமம் என்ற மூன்று பிணிகளும், லோக ஏடனை, அர்த்த ஏடனை, புத்திர ஏடனை என்ற மூன்று ஏடனைகளும் சேர்ந்து ஆண், பெண், அலி என்ற மூன்று சாதியாகி விளங்குகின்றது. உடலில் சோதி விளக்காக ஈசன் வாழுகின்றான். இவ்விளக்கத்தை என்நாவின் வழி சொல்லவைத்தாயே, ஈசா.
ஐந்துமைந்தும் ஐந்துமா யல்லவத்து ளாயுமாய்
ஐந்துமூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவனே
ஐந்துமைந்து மைந்துமா யமைந்தனைத்தும் நின்றநீ
ஐந்துமைந்து மாயநின்னை யாவர்காண வல்லரே. 267
ஐந்தெழுத்தாகவும், பஞ்ச பூதங்களாகவும், ஐம்புலன்களாகவும் இவ்வுடல் உள்ளது. பஞ்சாக்கரமாகவும், அ,உ,ம என்னும் ஓமாகவும் உள்ள அக்கரங்கள் ஒன்றாகி ஈசன் உட்லில் வாழ்கிறான். அகாரத்தின் ஆதியாம் குத்தெழுத்துதான் ஓரெழுத்து. ஓரெழுத்தாக உடலில் உள்ள ஆதி தேவனே! சிவயநம என்ற பஞ்சாக்கரமாகவும் ஐந்து வண்ணங்கள் கொண்ட திருவடியாகவும் நின்றுள்ள உன்னை யார் காணவல்லவர்.
ஆறுமாறு மாறுமா யொரைந்துமைந்து மைந்துமாய்
ஏறுசீ ரிரண்டுமூன்று மேழுமாறு மெட்டுமாய்
வேறுவேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறுமோசை யாயமர்ந்த மாயமாயம் மாயனே. 268
ஆறு ஆறும் ஆறும் = 18
ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்தும் = 16
ஏறு சீர் இரண்டு = 32 — 64
மூன்றும் = இடகலை, பிங்கலை, அக்கினி கலை.
ஏழும் = ஏழு திரைகள்.
ஆறும் = ஆறு ஆதாரங்கள்.
எட்டு = ஆகாயம்.
சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய பதினெட்டு படிகளை உடைய நிலைகளை அடையவேண்டும். அதற்கு வளிப்பயிற்சி செய்யவேண்டும்.
ஏறுதல் – பூரகம்: சிவசிவ என நான்கு முறை கணித்து வலது நாசித் துவாரத்தினால் தூய மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல்.
ஆறுதல் – கும்பகம்: சிவசிவ எனப் பதினாறு முறை கணித்து உள்ளிழுத்த மூச்சை மூடி உள்ளே நிறுத்தல்.
ஊறுதல் – இரேசகம்: உள் நிறுத்திய மூச்சை சிவசிவ என எட்டுமுறை கணித்து வல நாசித் துளை வழியே மெதுவாக வெளியில் விடுவது.
திருமூலர்:
ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.
இதனால் புருவ மத்தியில் உள்ள ஏழு திரைகளும் விலகும். உடலில் உள்ள ஆறு மேலாதாரங்களும் பரிசுத்தமாகி எட்டாகிய வெட்ட வெளியிலுள்ள சோதியில் உடல், உயிர், மனம் ஆகியவை ஒன்று சேரும். இதுவே வெவ்வேறு வகை ஞானங்களையும் உணரவைக்கும். பொய் உடலில் மெய்யான ஆன்மாவும் அதனுள் ஈசனும் இருப்பதை உணரலாம். இவ்வகையில் ஞானவினை புரிய அமுதம் ஊறும். நாதம் கேட்கும். நாதத்தோடு நினைவு ஒன்ற ஆன்மா ஈசனுடன் ஒன்றும்.
எட்டுமெட்டு மெட்டுமா யோரேழுமேழு மேழுமாய்
எட்டுமொன்று மூன்றுமாகி நின்றவாதி தேவனே
எட்டுமாய் பாதமோ டிறைஞ்சி நின்றவண்ணமே
எட்டெழுத்து மோதுவார்க ளல்லல்னீங்கி நிற்பரே. 269
ஈசன் எட்டு சாண் உடலில் எட்டாகிய அகரமான அறிவாகவும், காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம், இடம்பம், அகங்காரம் எனும் எட்டு ராகங்களாகவும் எண்குலங்களாகியும் உள்ளான். ஏழாம் நிலையான சகஸ்ராரத்தில் ஏழு திரைகளாகவும், இரசம், இரத்தம், மாமிசம், மேதஸ், அஸ்தி, மச்சை, சுக்கிலம் என்ற ஏழு தாதுக்களாகவும், சரிகமபதநீ எனும் ஏழிசை ஸ்வரங்களாகவும் உள்ளான். ஆதி தேவன், எட்டும் ஒன்றும் ஒன்பதான மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், வெப்பமான அனல் நட்சத்திரம் ஆகிய பிரணவம்(ப்ர+நவம்), அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்றாகிய ஓங்காரமாகி நம் உடலில் உள்ளான். அவனை இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி எனும் அட்டாங்க யோகம் புரிந்து, அகரமாகிய திருப்பாதமாம் கண்களைப்பற்றி, எட்டெழுத்தான ஓம்(அஉம்) சிவயநம என்ற அக்கரத்தால் ஓதுபவர்கள் துன்பங்களை யாவும் நீங்கி வாழ்வார்கள்.
பத்தினோடு பத்துமா யோரேழினோ டொன்பதாய்
பத்துநாற் றிசைக்குநின்ற நாடுபெற்ற நன்மையா
பத்துமாய கொத்தமோடு மத்தலமிக் காதிமால்
பத்தர்கட்க லாதுமுத்தி முத்திமுத்தி யாகுமே. 270
பத்து நாடிகளாகவும்; பத்து வாயுக்களாகவும் உயிராம் ஆன்மா, ஓர் ஏழினோடும்(1+7) எட்டாகிய உடம்பில் ஒன்பது வாசல்கள் வழியாக இயங்குகிறது. இதில் நாற்பத்து முக்கோணமாய் விளங்கும் ஞானவீட்டில் ஆன்மாவை நிலைநிறுத்தி தியானிப்பதால் நன்மை கிட்டும். எட்டிரண்டும் பத்தாகிய யகாரமான ஆகாயத்தலத்தில், ஆதியாகவும் சிவனாகவும், திருமாலாகவும் பரம்பொருள் உள்ளதென அறிந்து உணரவேண்டும். இது ஞானவினை புரிவோருக்கு முத்தியைத் தரும். ஆன்மா சோதியாகிய ஈசனைச் சேர்ந்து முக்தி பெறும்.
பத்து நாடிகள் – இடகலை, பிங்கலை, சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குக்கு
தச வாயுக்கள் – பிராணன், அபாணன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன்
வாசியாகி நேசமொன்றி வந்தெதிர்ந்த தென்னுக
நேசமாக நாளுலாவ நன்மைசேர் பவங்களில்
வீசிமேல் நிமிர்ந்ததோளி யில்லையாக்கி னாய்கழல்
ஆசையால் மறக்கலா தமரராக லாகுமே. 271
உண்மையான இறை பக்தியினாலும் குருவின் கருணையாலும் வாசியோக உபதேசம் கிடைத்தது. ஞானம் கிட்டியது. இவ்வாசி யோகத்தை நேசமுடன் எந்நாளும் இடைவிடாது பயிற்சி செய்துவருபவர்களுக்குப் பாவங்கள் யாவும் அகலும். ஞானானுபவம் கிடைக்கும். அவ்வாசியையே பிடித்து மேலேறினால் வெட்டவெளியாக வீசி நிமிர்ந்திருக்கும் ஈசன் திருவடியை அடையும். அத்திருவடியே மெய்; மற்றவைகள் பொய் என உணர்ந்து உலகாயத ஆசைகளில் மூழ்காது வாசியோகம் செய்ய அமரர்கள் போல் பிறவா நிலை பெறலாம்.
எளியதான காயமீதி லெம்பிரா னிருப்பிடம்
அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும்
கொளுகையான சோதியுங் குலாவிநின்ற தவ்விடம்
வெளியதாகு மொன்றிலே விளைந்ததே சிவாயமே. 272
அகாரமாகவும், உகாரமாகவும், இரண்டும் சேர்ந்த யகாரமாய், எளிமையான என் உடலில் தலையில் உள்ள கண்ணில் உள்ளே ஈசனாகிய எம்பிரான் இருக்கிறான். அங்கேதான் சோதி வடிவில் ஈசன் உலவுகின்றான். வெட்ட வெளியாம் ஆகாயத் தலத்திலே அவன் சிவாயமாய் விளைந்து உள்ளான்.
அஞ்செழுத்து மூன்றெழுத்து என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்து மல்லகாணு மப்பொருள்
அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி யவ்வெழுத் தறிந்தபின்
அஞ்செழுத்து மூன்றெழுத்து மவ்வுமாஞ் சிவாயமே. 273
அருத்தம் புரியாது அஞ்செழுத்து, மூன்றெழுத்து எனக்கூறும் அன்பர்களே! ஈசனாம் மெய்ப்பொருள் அஞ்செழுத்தோ (சிவயநம), மூன்றெழுத்தோ (ஓம்=அ+உ+ம்) அல்ல. சிவயநமவை நினைவினில் ஒன்றி ஓரெழுத்தாம் சிகாரத்தை அறிந்தபின், ஈசன் அஞ்செழுத்தாகவும் மூன்றெழுத்தாகவும் ஆகி நிற்பதை உணருங்கள்.
பொய்யுரைக்க போதமென்று பொய்யருக் கிருக்கையால்
மெய்யுரைக்க வேண்டுதில்லை மெய்யர்மெய்க் கிலாமையால்
வையகத்தி னுண்மைதன்னை வாய்திறக்க வஞ்சினேன்
நையவைத்த தென்கொலோ நமசிவாய நாதனே. 274
நான் சித்தன்; ஞானி; அவதாரப் பிறப்பு; குரு; ஆச்சார்யார் எனப் பொய்கள் சொல்கிறார்கள். நான் உபதேசிப்பது வேதத்தின் தெளிவு; மற்றவையெல்லாம் பொய் என மக்களை ஏமாற்றுகிறார்கள். பணம் பறிக்கின்றனர். உண்மையை விரும்பும் சில நல்லவர்கள் கூட இப்பொய்களை நம்புகிறார்கள். ஆதலால் மெய்ப்பொருளை எடுத்து உரைக்க முடியவில்லை. உள் மெய் ஞானம் இதுதான் என்னும் உண்மையை வாய் திறந்து சொல்லவும் அஞ்சினேன். இங்ஙனம் என் மனத்தை நையச் செய்த்தும் ஏனோ, என் ஈசனே?
ஒன்றையொன்று கொன்றுகூட னுணவுசெய் திருக்கினும்
மன்றினூடு பொய்களவு மாறுவேறு செய்யினும்
பன்றிதேடு மீசனைப் பரிந்துகூட வல்லிரேல்
அன்றுதேவ ரும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே. 275
ஒன்றையொன்று கொன்று தின்று வாழ்வதுதான் இவ்வுலக இயற்கை. இவ்வுலகில் வாழும் மனிதர்கள் திருட்டு, புரட்டு, பொய், களவு, ஏமாற்று ஆகியனவற்றைச் செய்துதான் வாழ்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் நிலையற்றவை; நிலையான மெய்ப்பொருளை உணரவேண்டும் என விழைபவர்கள், உலகாயத ஆசைகளைத் துறந்து ஈசனைத் தேடுகின்றனர். பக்தி, யோகம், ஞான மார்க்கங்களில் செல்கின்றனர். பன்றி உருவெடுத்து நிலத்தைக் கீறி ஈசனின் அடியைத் தேடினார் திருமால். அதுபோல, ஈசனின் திருவடியைத் தன் உடலிலே தோண்டிக் கண்டுகொண்டு, ஞானவினையாற்ற நாமும் ஈசனை உணர்ந்து தேவராகலாம்; பிறப்பறுக்கலாம்.
மச்சகத்துளே யிவர்ந்து மாயைபேசும் வாயுவை
அச்சகத்துளே யிருந் தறிவுணர்த்திக் கொள்விரேல்
அச்சகத்துளே யிருந் தறிவுணர்த்திக் கொண்டபின்
இச்சையற்ற வெம்பிரா னெங்குமாகி நிற்பனே. 276
உடலில் உயிராய் ஓடும் பிராணனான மூச்சுக்காற்று வெளியேறினால் மரணம். இவ்வுலக வாழ்வில், நாம் அனுபவிக்கும் இகவாழ்வில் உள்ளே இருக்கும் மூச்சுக்காற்றைவிட வெளியேற்றுவது அதிகம். ஆயுள் குறைகிறது. இரேசக, பூரக, கும்பகம் எனும் வளிப்பயிற்சியால் பிராணனைக் கட்டுப்படுத்த வேண்டும். இது கைவரப்பெற்றால், ஆசையழித்த ஈசன் எங்கும் பரவி இருப்பதை உணரலாம்.
வயலிலே முளைத்தசெந்நெல் களையதான வாறுபோல்
உலகினோரும் வண்மைகூறில் வுய்யுமாற தெங்ஙனே
விரகிலே முளைத்தெழுந்த மெய்யலாது பொய்யதாய்
நரகிலே பிறந்திருந்து நாடுபட்ட பாடதே. 277
உழவு செய்யும்போது பயிர் வளர்க்கும் முறை தவறினால் வயலிலே முளைக்கும் செந்நெல் களையாகும். அது போல பிறவி எடுத்த நோக்கம் அறியாது உலகிலுள்ள மனிதர்கள் நான், எனது என்று வண்மைகள் பேசிக் கொண்டிருந்தால் இப்பிறவிப் பிணியிலிருந்து தப்பிப் பிழைக்கும் வழி என்ன? விறகிலே முளைத்து எழுகின்ற தீயைப் போல் விரகத் தீயால் ஆண், பெண் சேர்ந்து முளைத்த இப்பொய்யான உடலை மெய்யென நினைக்கிறோம். உடலிலே மெய்சோதி இருப்பதை உணராது, பிறந்த நோக்கம் அறியாது வாழ்வதால், மீண்டும் பிறவிகளெடுத்து மாள்கிறோம். மெய்யாம் உடலே பொய்யாகி மாண்டு நரகத்திலே விழுகிறது. இதுதான் நாட்டில் நடக்கிறது.
ஆடுகின்ற வெம்பிரானை யங்குமிங்கு மென்றுநீர்
தேடுகின்ற பாவிகாள் தெளிந்ததொன்றை யோர்கிலீர்
காடுநாடு வீடுவீண் கலந்துநின்ற கள்வனை
நாடியோடி யும்முளே நயந்துணர்ந்து பாருமே. 278
உங்கள் உடலுக்குள்ளே சித்தத்தில் நின்று நடனமாடும் எம்பிரானை அறியாமல் அங்குமிங்கும் தேடுகின்ற பாவிகளே!! தெளிந்த மெய்ப்பொருளாக விளங்கும் அந்த ஒரு பொருளை அறிந்து அதனுள்ளே சென்று நினைவில் நிற்கத் தெரியாது அலைகின்றீர். காட்டிலும், நாட்டிலும், வீட்டிலும், ஆகாயத்திலும் என்று கண்டவிடமெல்லாம் பரவி நிற்கும் கள்வனாம் ஈசனை, உங்கள் உடலிலேயே தேடி அறிந்து உணர்ந்து பாருங்கள்.
ஆடுகின்ற வண்டர்கூடு மப்புற மதிப்புறம்
தேடுநாலு வேதமுந் தேவரான மூவரும்
நீடுவாழி பூதமும் நின்றதோர் நிலைகளும்
ஆடுவாழி னொழியலா தனைத்துமில்லை யில்லையே. 279
உடலினுள்ளே ஆடும் அருட்சோதியாக உள்ளது கண்கள். அக்கண்கள் சேருமிடம் அறிவு உள்ள இடம். நான்கு வேதங்களும் மும்மூர்த்திகளும் தேடுவது அதையே. ஐம்பூதங்களும், அவைகள் நின்ற நிலைகளும் ஆடவல்லானின் திருவடிகளே. இதையொழிய அனைத்தும் மெய் இல்லை.
ஆவதும் பரத்துளே யழிவதும் பரத்துளே
போவதும் பரத்துளே புகுவதும் பரத்துளே
தேவரும் பரத்துளே திசைகளும் பரத்துளே
யாவரும் பரத்துளே யானுமப் பரத்துளே. 280
சகல சீவராசிகளும் பிறப்பதும் பின் இறந்து கலப்பதும் பரமாகிய பரிபூரணத்துள்ளேதான். இப்பிறவிப் பெருங்கடலைத் தாண்ட நாம் போகவேண்டியது பரமாகிய கண்ணுக்குள்ளே; புகவேண்டிய இடமும் அதுதான். அங்கேதான் தேவர்களும் திசைகளுமுள்ளன. எல்லோரும் இருப்பதும், நானும் இருப்பதும் அந்தப் பரிபூரணத்துக்குள்ளேதான்.
ஏழுபா ரெழுகட லிடங்களெட்டு வெற்புடன்
சூழுவான் கிரிகடந்து சொல்லு மேழுலகமும்
ஆழிமால் விசும்புகொள் பிரமாண்ட ரண்டவண்டமும்
ஊழியா னொளிக்குளே யுதித்துட னொடுங்குமே. 281
அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதாளம் ஆகியன கீழ் ஏழு உலகங்கள். பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர்லோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் ஆகிய ஏழு மேல் உலகங்கள்.
கீழ் ஏழு உலகங்களும், ஏழு கடல்களும், எட்டுத் திசைகளும் வெப்பம் சூழ்ந்த மலை கடந்து உள்ள மேல் ஏழு உலகங்களும், பாற்கடல் பள்ளிகொண்ட திருமாலும், அண்டங்கள் யாவையும் ஊழியானாம் ஈசன் என்னும் சோதிக்குள்ளே உதித்துப் பின் ஒடுங்கும். சகலமும் உதிப்பதும் அடங்குவதும் சோதிக்குள்ளே. உடலில் உள்ள சோதி கண்கள்.
கயத்துநீ ரிறைக்குறீர் கைகள்சோர்ந்து நிற்பதேன்
மனத்துளீர மொன்றிலாத மதியிலாத மாந்தர்காள்
அகத்துளீரங் கொண்டுநீ ரழுக்கறுக்க வல்லிரேல்
நினைத்திருந்த சோதியும் நீயும்நானு மொன்றலோ. 282
ஈவு, இரக்கம் ஆகிய ஈரம் எதுவும் இல்லாத மனத்தை உடைய மாந்தர்களே! மொள்ள சால் இல்லாது கயிற்றை மட்டும் வைத்துக்கொண்டு கேணியிலிருந்து நீர் இறைக்கிறீர்கள். கைதான் வலிக்குமே ஒழிய நீரை இறைக்க முடியாது. உங்கள் உள்ளத்தில் அன்பு, இரக்கம் ஆகிய ஈரம் சுரக்கவேண்டும். அதன்பின், செய்த பாவங்களாம் அழுக்கை அறுக்க முடியுமானால், நினைவில் நின்றுள்ள சோதிக்குள், நீயும், நானும் ஒன்றி விடுவோம். பின் அனைத்தும் பிரமம் என்பது புரியும்.
நீரிலே பிறந்திருந்து நீர்சடங்கு செய்கிறீர்
ஆரையுன்னி நீரெலா மவத்திலே யிறைக்கிறீர்
வேரையுன்னி வித்தையுன்னி வித்திலே முளைத்தெழுஞ்
சீரையுன்ன வல்லிரேற் சிவபத மடைவிரே. 283
நீரால் உருவாகிய இவ்வுடலை வைத்து நீங்கள் சடங்குகள் செய்கிறீர்கள். யாரை எண்ணி நீரை இறைக்கிறீர். வேராக உள்ள ஆதியை எண்ணி, நினைவாகிய வித்தை எண்ணி, அதில் முளைத்தெழும் சீர்பெறும் சோதியை எண்ணி, அதில் கலக்க சிவபதம் அடையலாம்.
பத்தொடுற்ற வாசலிற் பரந்துமூல வக்கர
முத்திசித்தி தொந்தமென் றியங்குகின்ற மூலமே
மத்தசித்த வைம்புலன் மகரமான கூத்தையே
அத்தியூரர் தம்முளே யமைந்ததே சிவாயமே. 284
உடலாகிய வீட்டுக்கு ஒன்பது வாசல். அதன்றி பத்தாம் வாசல் ஒன்று உண்டு. அங்குதான் மூல அக்கரமாம் ஓரெழுத்தாம் ஆதி உள்ளது. அதுவே முத்தி பெறுவதற்கும் சித்தி அடைவதற்கும் மூலம். மனம், புத்தி, சித்தம் அகங்காரம் எனும் அந்தகரணங்களையும், மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களையும் ‘ம்‘ என்ற மகாரத்தில் குவித்து ஓத சோதியில் ஒன்றலாம். சோதியாக, தீயாக விளங்கும் ஈசன் நமக்குள்ளேயே இருப்பதை உணரலாலம்.
அணுவினோடு மண்டமா யளவிடாத சோதியை
குணமதாகி யும்முளே குறித்திருக்கில் முத்தியா
முணமுணென்று உம்முளே விரலையொன்றி மீளவும்
தினந்தினம் மயக்குவீர் செம்புபூசை பண்ணியே. 285
முணுமுணுவென முனுத்தங்களை உச்சரித்து, அவைகளை விரல்களால் எண்ணி, பூசை செய்கிறேன் எனத் தானும் மயங்கி, தினமும் மற்றவர்களை மயக்கி, செம்பு சிலைகளை வைத்து பூசையிடும் வேடதாரிகளே! அணுவாகவும், அண்டமாகவும், அனைத்துமாகவும், எதனாலும் அளவிட முடியாத சோதியாகவும் இருப்பவன் ஈசனே. அவன் எண்குணத்தானாக இருப்பதை உணருங்கள். அவனையே நினைவில் நிறுத்தித் தவம் புரிவோருக்கு முக்தி கிட்டும்.
மூலமான வக்கர முகப்பதற்கு முன்னெலாம்
மூடமாக மூடுகின்ற மூடமேது மூடரே
காலனான வஞ்சுபூத மஞ்சிலே யொடுங்கினால்
ஆதியோடு கூடுமோ வனாதியோடு கூடுமோ. 286
பிரசாதத்தை ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி, ஒருவரும் முகர்ந்து விடாமல் இறைவருக்கு படைப்பதாக நினைத்து, திறந்து மூடி நைவேத்தியம் செய்யும் மூடர்களே! அனைத்துக்கும் மூலமாய் இருக்கும் ஈசன் சமைக்கும்போதே முகர்ந்து விடுகிறானே! எமன் வந்து உயிரை எடுக்கும் பொழுது பஞ்ச பூதங்களும், அதனதன் கூறுகளில் கூடுமோ? அல்லது அனாதியாம் ஈசனோடு கூடுமோ?
முச்சதுர மூலமாகி முடிவுமாகி யேகமாய்
அச்சதுர மாகியே யடங்கியோ ரெழுத்துமாய்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரத்தி னுண்மையே சிவாயமே. 287
இரு கண்களால் தலை உச்சியைக் காணும்போது உண்டாவது முக்கோணமாம் முச்சதுரம். அதுவே ஏக வழி. மூலவழி; முடிவான வழி. ஊசிப்பார்வை நாசி நுனிமீது வைக்கின் அதுவே மேலெழுந்து முக்கோணமாகி, பார்வை சுருங்கச் சுருங்க முக்கோணம் மறைந்து(அடங்கி) ஓரெழுத்தாம் குத்தெழுத்தாக இவ்வுடலில் விளங்கும். அங்கேதான் ஞான சோதி உள்ளது. அதன்மேல் நினைவு வைத்து தவம் புரியும்போது முனுமுனுக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயம்.
வண்டுலங்கள் போலுநீர் மனத்துமா சறுக்கிலீர்
குண்டலங்கள் போலுநீர் குளத்திலே முழுகுறீர்
பண்டுமுங்கள் நான்முகன் பறந்துதேடி காண்கிலான்
கண்டிருக்கு மும்முளே கலந்திருப்பர் காணுமே. 288
தேன்வண்டு தேன் எடுக்கவேண்டும் என்னும் ஒரே குறிக்கோளோடு நல்ல தேன் உள்ள மலர்களை மட்டும் நாடித் தேனைச் சேகரிக்கும். அதுபோல கவனம் சிதறாது ஒரே நினைவோடு தவம் செய்து மனத்தில் உள்ள அழுக்குகளை அகற்றத் தெரியாமல், உடல் அழுக்கை அகற்றும் மாடுகளைப் போல் குளத்தில் மூழ்குகிறீர்கள். என்ன பயன்? ஈசனின் முடியைக் காணச் சென்ற பெரு(பிர)மனால் பறந்து தேடியும் காண முடியவில்லை. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தேடினால் கிட்டாது. நம் உடலில் ஒளியுள்ள கண்ணைக் கொண்டு கவனம் சிதறாது ஒரே நினைவோடு தவம் செய்தால், ஈசன் உம்மோடு கலந்திருப்பதைக் காணலாம்.
நின்றதன் றிருந்ததன்று நேரிதன்று கூறிதன்று
பந்தமன்று வீடுமன்று பாவகங்க ளற்றது
கெந்தமன்று கேள்வியன்று கேடிலாத வானிலே
அந்தமின்றி நின்றதொன்றை யெங்ஙனே யுரைப்பதே. 289
பரிபூரணமாம் பரம்பொருள் ஒரு இடத்தில் நின்றது இல்லை; இருந்தது இல்லை. அதற்கு ஒப்பானது(சமமானது) ஒன்றுமில்லை; சொற்களால் கூற இயலாது; அதற்கு எந்த பந்தமும் இல்லை; எந்த வீடும் இல்லை. பாவங்களற்றது; மணங்கள் இல்லாதது; கேள்விகளற்றது; கேடில்லாத வானிலே முடிவற்று நின்ற ஒன்றை எப்படி உரைப்பது?
பொருந்துநீரு மும்முளே புகுந்துநின்ற காரணம்
எருதிரண்டு கன்றையீன்ற வேகமொன்றை யோர்கிலீர்
அருகிருந்து சாவுகின்ற யாவையு மறிந்திலீர்
குருவிருந் துலாவுகின்ற கோலமென்ன கோலமே. 290
நீராகிய விந்துவினால் உருவாகிய உடலில் இரத்தமாம் நீர் உலவுவதன் காரணத்தை அறியமாட்டீர்கள். சூரிய சந்திர கலைகள் சேர்ந்து எழுப்பிய குண்டலினியின் வேகத்தை நினைத்துப் பார்க்க மாட்டீர்கள். அருகே வாழ்ந்து வந்தவர்கள் ஏன் இறந்தார்கள் என்றும் அறியீர். அதுபோல உடலில் ஈசன் இருக்குமிடத்தையும் உணரமாட்டீர்கள். அந்த ஒளிவீசும் குரு இவ்வுடலில் உலவும் கோலத்தை எவ்வாறு சொல்வேன்.
அம்பரத்து ளாடுகின்ற வஞ்செழுத்து நீயலோ
சிம்புளாய் பரந்துநின்ற சிற்பரமு நீயலோ
எம்பிரானு மெவ்வுயிர்க்கு மேகபோக மாதலால்
எம்பிரானு நானுமா யிருந்ததே சிவாயமே. 291
அம்பரமாம் ஆலயத்துள்ளே ஆடுகிறான் பரமன்; அதுபோல் உடலான அம்பரத்துள்ளே ஆடுகிறது ஐந்தெழுத்து ஆன்மா. சிம்புள் என்னும் பறவை வானிலேயே முட்டை இடும். அம்முட்டை கீழே விழும்போதே அதன் குஞ்சு வெளிவந்து இறக்கைகள் முளைத்து தரையைத் தொடாமல் பறந்து சென்று வானில் தாயைச் சேரும். அது போலவே பூமியாகிய இகலோக சுகங்களைத் தொடாது, வானமாகிய மனத்தில் பரவி இருக்கும் பரம்பொருளும் நீ அல்லவா? எம்பிரானாகிய ஈசன் எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒன்று. ஆகவே, அவனிருக்குமிடம் அறிந்து, உணர்ந்து தவம் செய்யுங்கள். எம்பிரானாகவும் நானாகவும் இருந்தது சிவாயமே.
ஈரொளிய திங்களே யியங்கிநின்றது தப்புறம்
பேரொளிய திங்களே யாவரும் அறிகிலீர்
காரொளிய படலமுங் கடந்துபோன தற்பரம்
பேரொளிப் பெரும்பத மேகநாத பாதமே. 292
நம் முகத்தில், சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு ஒளிகள் இயங்கி வருகின்றன. அவைகளே இரு கண்கள். அதற்கு அப்புறம், அதாவது கபாலத்துக்குள்ளே, ஒரு பேரொளி உள்ளது. அதை யாரும் அறியீர். படலங்களாம் திரைகளைக் கடந்து சென்றால் ஏகநாதனின் திருவடிப் பேரொளியில் கலக்கலாம்.
கொள்ளொணாது மெல்லொணாது கோதறக் குதட்டொணா
தள்ளொணா தணுகொணா தாகலான் மனத்துளே
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தி னுட்பயன்
விள்ளொணாத பொருளைநான் விளம்புமாற தெங்ஙனே. 293
பரம்பொருள், கொள்ள முடியாதது, மெல்ல முடியாதது; மென்று சக்கையின்றிக் குதப்ப முடியாதது. தள்ள முடியாதது; அணுக முடியாதது. மனத்தினுள்ளே தெள்ளிப்பார்க்காமல் தெளிந்து உணராமல் இத்தகைய சிற்பரமாம் பரம்பொருளின் உட்பயனை உணர இயலாது. இவ்வாறு சொல்ல முடியாத பொருளை நான் சொல்லுவது எவ்வாறு? அது உணரவேண்டியது. உணர ஒரே வழி தவம் செய்வதுதான்.
வாக்கினால் மனத்தினால் மதித்தகா ரணத்தினால்
நோக்கொணாத நோக்கையுன்னி நோக்கையாவர் நோக்குவார்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கநோக்க நோக்கிடில்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கையெங்க ணோக்குமே. 294
வாக்கினாலும் மனத்தினாலும் ஈசனை சதாசர்வ காலமும் மதித்து, நினைத்த காரணத்தால் மட்டுமே ஈசனை அடையமுடியும். பார்க்கமுடியாத பார்வையை நினைத்து அப்பார்வையை யார் பார்க்க முடியும்? அதாவது, இரு கண்களினாலும் கபாலத்துக்குள் ஐம்புலன்களும் சந்திக்கும் இடத்தை நோக்க வேண்டும். அப்படிப் பார்க்கமுடியாத பார்வையை நினைத்து அப்பார்வையைப் பார்த்துப் பார்த்து தவம் செய்ய அகக்கண் திறக்கும். பின்னர் பார்க்கும் இடமெல்லாம் பராபரமே தெரியும்.
உள்ளினும் புறம்பினு முலகமெங்கணும் பரந்
தெள்ளிலெண்ணெய் போலநின் றியங்குகின்ற வெம்பிரான்
மெள்ளவந் தென்னுட்புகுந்து மெய்த்தவம் புரிந்தபின்
வள்ளலென்ன வள்ளலுக்கு வண்ணமென்ன வண்ணமே. 295
உடலின் உள்ளே மனமாகவும், வெளியே ஆகாயத் தலமாகவும், எள்ளில் எப்படி எண்ணை உள்ளதோ அதுபோல ஈசன் நின்று இயங்குகிறான். அவனே மெல்ல என்னுள் புகுந்து என்னை மெய்யில் தவம் புரிய வைக்கிறான். அத்தவம் புரிந்தபின் அவனே என்னை ஆட்கொள்ளுகிறான். அவன் வள்ளல். அவனுக்கு ஆயிரம் வண்ணம். அதில் எந்த வண்ணமென்று நான் சொல்ல?
வேதமொன்று கண்டிலேன் வெம்பிறப் பிலாமையால்
போதநின்ற வடிவதாய் புவனமெங்கு மாயினாய்
சோதியுள் ளொளியுமாய்த் துரியமோ டதீதமாய்
ஆதிமூல மாதியா யமைந்ததே சிவாயமே. 296
நான்கு வேதங்களும் கூறும் இறைவனை நான் கண்டதில்லை. அப்படிக் கண்டிருந்தால் இக்கொடிய பிறப்பை ஒழித்திருக்கலாம். தெளிவுடன் நின்ற வடிவாய் இவ்வுலகமெங்கும் ஆயினாய்; சோதியில் ஒளியாய், துரியம் துரியாதீதமாய், ஆதி மூலமாய், ஆதியாய் அமைந்ததே சிவாயம்.
சாணிரு மடங்கினாற் சரிந்தகொண்டை தன்னுளே
பேணியப் பதிக்குளே பிறந்திறந் துழலுவீர்
தோணியான வைவரைத் துறந்தறுக்க வல்லிரேல்
காணிகண்டு கோடியாய்க் கலந்ததே சிவாயமே. 297
வயிற்றிலிருந்து இரண்டு சாண் அளவுள்ள சரிந்த உறுப்புக்குள்ளே உருவாகிப் பிறந்து, இறந்து உழலுவீர். தோணியான இவ்வுடலில் நாட்டாமை செய்யும் ஐம்புலன்களால் ஏற்படும் இச்சை முதலிய மாசுக்களை முழுவதுமாக அறுக்கமுடியுமானால் ஈசனை இப்பூமியில் எங்குவேண்டுமாகிலும் காணலாம். கோடி உயிர்களிலும் சிவாயம் கலந்திருப்பதை உணரலாம்.
அஞ்சுகோடி மந்திர மஞ்சுளே யடங்கினால்
நெஞ்சுகூற வும்முளே நினைப்பதோ ரெழுத்துளே
அஞ்சுநாலு மூன்றதாகி யும்முளே யடங்கினால்
அஞ்சுமோ ரெழுத்ததா யமைந்ததே சிவாயமே. 298
அஞ்சுகோடி மந்திரங்கள் அனைத்தும் சிவயநம என்ற அஞ்செழுத்து மந்திரத்தில் அடக்கம். அதை உங்களுக்குள்ளே மனதில் கூறி, நினைவில் நின்று சிகாராமாகிய ஓரெழுத்தைக் கருத்தில் பதிக்க, அஞ்சு பூதங்கள், நான்கு அந்தக்கரணங்கள், ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் அடங்கும். அப்போது அஞ்சு எழுத்துக்களும் ஓரெழுத்தாகி அமைந்ததே சிவாயம்.
அக்கரந்த வக்கரத்தி லுட்கரந்த வக்கரம்
சக்கரத்து சிவ்வையுண்டு சம்புளத் திருந்ததும்
எட்கரந்த வெண்ணெய்போ லெவ்வெழுத்து மெம்பிரான்
உட்கரந்து நின்றநேர்மை யாவர்காண வல்லரே. 299
ஃ என்ற ஆயுத எழுத்தின் அட்சரத்தில் உள்ளே இருக்கும் புள்ளியே ஊமை எழுத்து. வெட்டாத சக்கரமும் அதுவே. அது சிகாரத்திலேறி சம்புவாகிய ஈசன் உள்ளத்தில் உள்ளது. எள்ளுக்குள் எண்ணெய் போல் எல்லா எழுத்துக்களிலும் (.) குத்து எழுத்தாக எம்பிரான் அமர்ந்து உள்ளான். பிண்டத்தில் குத்தெழுத்தாம் கண்ணின் கருவிழி. அதற்குள் சோதி வடிவில் ஈசன் உள்ளான் எனும் உண்மையை யார் காண வல்லவர். தவம் செய்தவர்தான்.
ஆகமத்தி னுட்பொரு ளகண்டமூல மாதலால்
தாகபோக மன்றியே தரித்ததற் பரமும்நீ
ஏகபாதம் வைத்தனை யுணர்த்துமஞ் செழுத்துளே
ஏகபோக மாகியே யிருந்ததே சிவாயமே. 300
ஆகமங்கள் கூறும் உட்பொருள்; அகண்டங்களின் மூலமாக உள்ள பரம்பொருள்; இவையிரண்டும் ஒன்றேயான ஈசன்தான். விரக தாகம், சிற்றின்ப போகம், ஆகியவை ஏதும் இல்லாத தற்பரமான சதாசிவன் நீயே. நீ எனக்குள் உதித்தாய். அஞ்செழுத்தாம் உடலிலே, கண்ணின் கருமணியான ஏகபாதம் வைத்தாய். ஏகபாதத்தைப் பிடித்து உன்னையே உள்ளத்தில் வைத்துத் தவம் இயற்ற ஏகபோகமாக சிவாயம் இருப்பதை உணரலாம்.
Click to read: சிவ வாக்கியம் பாடல்கள் (1 – 150)
Click to read: சிவ வாக்கியம் பாடல்கள் (301 – 450)
Also, read
In villages, farmers used to bury dead cattles in their field. This in turn becomes maure for plants.
Thank you for the explanation sir.
Dear Sir,
Very nice explanation for the great work of the siddhar. I couldn’t understand the meanings of two stanzas:- 53 and 159.
In song 53, it is mentioned Lord Shiva killed elephant. Which incident is referred here? The one where Ganesha was replaced with elephant head.
And in song 159, it is mentioned beef is used for cultivation of vegetables. Not able to understand these two.
Could you please help me understand. Thank you very much.
Om Namachivaya.
53: ஒரு புலியைப் பிடிக்க விரும்புபவர்கள் ஒரு ஆட்டை கட்டி வைப்பது வழக்கம். இவ்வாறு அந்த ஆடு அந்த புலிக்கு இறப்பைக் கொண்டுவருகிறது. இறைவன் தன்னை உலக வாழ்க்கை என்றும் பிடிக்குள் சிக்க வைக்க மாட்டைக் காட்டினார் என்கிறார் சிவவாக்கியர். மாடு என்றால் செல்வம் என்றும் கறவை என்றும் பொருள். இறைவன் உலக இன்பங்களான செல்வங்களைக் காட்டித் தனது மதியை மயங்கச் செய்தார் என்று புலம்புகிறார் சிவவாக்கியர். மாடு என்றால் பசு என்றும் பொருள். பதி, பசு, பாசம் என்ற சைவத்தின் மூன்று பெரும் வஸ்துக்களில் மாடு என்பது ஜீவ நிலையைக் குறிக்கும். தான் அளவுக்குட்பட்டவன் என்ற என்னத்தைக் கொடுக்கும் ஜீவ நிலையைக் காட்டி தனது அறிவை இறைவன் மயங்கச் செய்தார் என்கிறார் சிவவாக்கியர். மதி என்றால் மனம் என்றும் பொருள். அறிவு மயக்கம் மன மயக்கம் என்றும் கொள்ளலாம். இறைவன் தனது சடையில் மதியை அணிந்திருப்பதற்குக் காரணம் அவர் மனதைக் கட்டுப்படுத்த உதவுபவர் என்பதைக் குறிக்கத்தான், மனதை மாயையின் மயக்கத்திலிருந்து விடுவிப்பவர் அவர் என்று காட்டத்தான். இதனை அடுத்து சிவவாக்கிய கஜாசுரன் சம்காரத்தைக் குறிப்பிடுகிறார். கஜாசுரன் என்ற அசுரன் ஒரு முறை சிவன் தனது இதயத்தில் லிங்க வடிவில் எப்போதும் நீங்காதிருக்க வேண்டும் என்று விரும்பித் தவமிருந்தான். சிவபெருமானும் அந்த பேற்றை அவனுக்கு அளித்தார். ஆனால் அவர் திரிபுரத்தை எரிக்க வேண்டி வந்தபோது கஜாசுரனின் இதயத்திலிருந்து வெளிப்பட வேண்டியதாயிற்று. அப்போது கஜாசுரன் சிவனிடம் அவர் தனது தோலை ஆடையாக அணிய வேண்டும் என்று விரும்பினான். சிவபெருமானும் அவனைத் தனது ஆடையாக அணிந்துகொண்டார். கஜம் அல்லது யானை என்பது நமது ஆணவத்தைக் குறிக்கும். மும்மலங்களில் ஆணவம் விளக்குவதற்குக் கடினமான ஒன்றாகும். அது யானையைப் போல வலிமை பெற்றது. இறைவன் அந்த ஆணவத்தை, ஜீவநிலையை, கொன்று அதை இறையுணர்வாக, தனது ஆடையாக அணிந்துகொள்கிறார். ஆடை என்பதன் சமஸ்கிருதச் சொல் அம்பரம். அம்பரம் என்றால் வெளி, ஆகாயம் என்று பொருள். சித் அம்பரம் என்றால் சித் வெளி என்று பொருள். இவ்வாறு இறைவன் அளவுக்குட்பட்ட ஜீவனை எல்லையற்ற வெட்டவெளியாக்குகிறார்.
159: ஆடு மாடுகளைத் தின்பதில்லை என்று தம்மை உயர்வாகக் காட்டிக்கொள்ளும் பிராமணர்களை இப்பாடலில் கேலி செய்கிறார் சிவவாக்கியர். தாம் ஆட்டின் இறைச்சியைத் தின்பதில்லை என்று வேதியர் கூறுகின்றனர். ஆனால் ஆட்டின் வபை யாகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. மாட்டிறைச்சியைத் தின்பதில்லை என்று வேதியர்கள் கூறுகின்றனர். ஆனால் அந்த மாட்டிறைச்சியை செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்துகின்றனர் என்கிறார் சிவவாக்கியர். பயன்பாடு என்பது உணவாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இறைச்சியை எப்படிப் பயன்படுத்தினாலும் அவ்வாறு செய்பவர் தன்னை அஹிம்சாவாதி என்று கூறிக்கொள்ள முடியாது. இதைத்தான் சிவவாக்கியர் சுட்டிக்காட்டுகிறார் இப்பாடலில்.