×
Saturday 28th of December 2024

இராமநாதசுவாமி திருக்கோவில் – இராமேஸ்வரம்


Rameswaram Temple History in Tamil

அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில், இராமேஸ்வரம்

மூலவர் ராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர்
அம்மன் பர்வத வர்த்தினி, மலைவளர்காதலி
தீர்த்தம் கோவிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும், கோவிலுக்கு வெளியே 22 தீர்த்தங்கள்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கந்தமாதன பர்வதம், திருவிராமேச்சுரம்
ஊர் ராமேஸ்வரம்
மாவட்டம் ராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

சிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மகத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க ராமேசுவரம் கடற்கரையில் சிவ பூஜை செய்ய விரும்பினார். இதற்காக சிவலிங்கம் கொண்டு வரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். அவர் வரத் தாமதமாகவே, சீதை கடற்கரை மணலில் இலிங்கம் அமைத்தாள். அந்த இலிங்கத்தை ராமர் பூஜித்ததால் “ராமநாதசுவாமி” என்ற திருநாமம் அமைந்தது.

இராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது. காசி, இராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் இராமேஸ்வரத்தில் அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி செல்ல வேண்டும். கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும்.

அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, இராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ராமேஸ்வரத்தில் துவங்கி ராமேஸ்வரத்தில்தான் தீர்த்த யாத்திரையை முடிக்க வேண்டும். சிலரால் இது முடிவதில்லை. காசி செல்ல முடியாதவர்களுக்கு வசதியாக, கோவிலிலேயே கங்கை தீர்த்தம் விற்கப்படுகிறது. மானசீகமாக காசி விஸ்வநாதரை வணங்கி, இந்த தீர்த்தத்தை இராமநாதருக்கு அபிஷேகம் செய்யக்கொடுக்கலாம்.

புரட்டாசியில் வரும் மகாளய பட்சத்தில் பித்ருக்கள் பூமிக்கு வருகின்றனர். எமதர்மராஜா அவர்களை விடுவித்து, அவரவர் குடும்பத்தினரை பார்த்து வர அனுமதியளிப்பார். “மகாளயம்” என்றால் “கூட்டமாக பூமிக்கு வருதல்” எனப்பொருள். இந்த சமயத்தில் அவர்களை வரவேற்று, தர்ப்பணம், சிரார்த்தம், பிண்டம் முதலான காரியங்களைச் செய்ய வேண்டியது அந்தந்த குடும்பத்தினரின் கடமை. இதனால் பிதுர் ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும். பிதுர் காரியங்களைச் செய்யச் சிறந்த தலம் ராமேஸ்வரம் ராமநாதர் கோவில்.

சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் 12 தலங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் ஒன்று இராமேஸ்வரம். மற்ற 11 தலங்களும் பிற மாநிலங்களில் உள்ளன. விபீஷணன், இராமருக்கு உதவி செய்ததன் மூலம் இராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான். இந்தப் பாவம் நீங்க, இங்கு இலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், அவனது பாவத்தைப் போக்கியதோடு, ஜோதி ரூபமாக மாறி இந்த இலிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே, “ஜோதிர்லிங்கம்” ஆயிற்று. இந்த இலிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது.

ஆஞ்சநேயர் தாமதமாக கைலாயத்திலிருந்து கொண்டு வந்த இலிங்கத்திற்கு, “விஸ்வநாதர்” என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. இராமநாதர் சன்னதிக்கு இடப்புறமுள்ள சன்னதியில் இவர் இருக்கிறார். விசாலாட்சிக்கும் தனி சன்னதி இருக்கிறது. ஆஞ்சநேயர் சிரமப்பட்டு கொண்டு வந்த இலிங்கம் என்பதால், தன் பக்தனுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலில் விஸ்வநாதருக்கு பூஜை செய்ய இராமர் ஏற்பாடு செய்தார்.

அதன்படி, இப்போதும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்டபின்பே, சீதாவால் உருவாக்கப்பட்ட இராமநாதருக்கு பூஜை நடக்கிறது. கோவிலுக்கு வருபவர்கள் விஸ்வநாதரை தரிசித்த பின்பே, இராமநாதரைத் தரிசிக்க வேண்டும். ஆஞ்சநேயர் கொண்டு வந்த மற்றொரு இலிங்கம் கோவில் நுழைவு வாயிலின் வலப்பக்கம் உள்ளது.

ஒரு சமயம் இக்கோவில் இலிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல என்றும், அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் சிலர் வாதம் செய்தனர். அப்போது பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு இலிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். அந்த இலிங்கம் கரையவில்லை.

அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த இலிங்கமே கரையாதபோது, சீதாதேவி பிரதிஷ்டை செய்த இலிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார். இராயர் செய்த உப்பு இலிங்கத்தைப் பிரகாரத்தில், இராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த இலிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.

இராமேஸ்வரம் கடல், “அக்னி தீர்த்தம்” என்றழைக்கப்படுகிறது. சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக, அவளை அக்னிப் பிரவேசம் செய்யச் செய்தார் ராமர். சீதையைத் தொட்ட பாவம் நீங்க, அக்னிபகவான் இங்கு கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார். எனவே, இந்த தீர்த்தம் “அக்னி தீர்த்தம்” என்று அழைக்கப்படுகிறது. சீதையின் கற்புத்திறன் அக்னியையே சுட்டதாகவும், அந்த வெம்மை தாளாத அக்னி இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தை தணித்ததாகவும் சொல்வதுண்டு.

குழந்தை பாக்கியம் இல்லாத சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான். அவனது குறையைத் தீர்க்க தன் மனைவி மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள். அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார். மன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப்போட்டான். பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார்.

அன்றிரவில் இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது. இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார். அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது. தீர்த்த யாத்திரை செல்பவர்கள் இவரது சன்னதி முன்பு, கடல் மணலில் இலிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்கிறார்கள். இவரது சன்னதி அருகில் இலட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர்.

Rameshwaram Temple Theertham

பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.

1. மகாலட்சுமி தீர்த்தம்
2. சாவித்திரி தீர்த்தம்
3. காயத்ரி தீர்த்தம்
4. சரஸ்வதி தீர்த்தம்
5. சங்கு தீர்த்தம்
6. சக்கர தீர்த்தம்
7. சேது மாதவ தீர்த்தம்
8. நள தீர்த்தம்
9. நீல தீர்த்தம்
10. கவய தீர்த்தம்
11. கவாட்ச தீர்த்தம்
12. கந்தமாதன தீர்த்தம்
13. பிரம்மகத்தி விமோசன தீர்த்தம்
14. கங்கா தீர்த்தம்
15. யமுனை தீர்த்தம்
16. கயா தீர்த்தம்
17. சர்வ தீர்த்தம்
18. சிவ தீர்த்தம்
19. சத்யாமிர்த தீர்த்தம்
20. சந்திர தீர்த்தம்
21. சூரிய தீர்த்தம்
22. கோடி தீர்த்தம்

ராமர் இங்கு சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மகத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதெனத் தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மகத்தி தோஷத்தைத் தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு “பாதாள பைரவர்” என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது.

சீதையை மீட்பதற்கு உதவி செய்த சுக்ரீவனுக்கு நன்றிக்கடனாக இராமர், அவனுக்கு அநீதி இழைத்த வாலியைக் கொன்றார். வாலி அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் உண்டானது. தோஷ நிவர்த்திக்காக இங்கு ஒரு தீர்த்தம் உருவாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றான். இந்த தீர்த்தத்துடன் கூடிய சுக்ரீவன் கோவில், இராமநாதர் கோவிலில் இருந்து இராமர் பாதம் செல்லும் வழியில் 2 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.

பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி பிரகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு காவிஉடை அணிவிக்கப்படுகிறது. விநாயகர், பிரம்மச்சாரி என்பதால் இவ்வாறு அணிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இவர்கள் தங்களுக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், தங்கள் பக்தர்கள் கேட்பதையெல்லாம் கொடுத்து விடுவார்களாம். இதன் காரணமாகவும், இவர்கள் காவியுடையை அணிந்துள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான உருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட ஒரு பந்தலின் கீழ் இத்தலத்து நடராஜர் காட்சி தருகிறார். இவரது எதிரில் நந்தி இருக்கிறது. நடராஜர் சன்னதியின் பின்புறம் ஒரு கரம் மட்டும் உள்ளது. இதற்கு தினமும் பூஜை நடக்கும். யோகக்கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நம் கண்ணுக்கு தெரியாமல் நாகவடிவில் மறைந்திருக்கும் பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்ளலாம். பதஞ்சலி முக்தியடைந்த தலம் என்பதால், நம் கண்களுக்கு தெரியமாட்டார்.

அம்பாள் சன்னதி பிரகாரத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் அரங்கநாதர் காட்சி தருகிறார். இராமர் பூஜித்த அரங்கநாதரைப் பெற்ற விபீஷணன், சந்தர்ப்பவசத்தால் அச்சிலையை காவிரிக்கரையில் வைத்துவிட்டு, இலங்கை திரும்பினான். அப்போது தன் திருப்திக்காக, இங்கு வேறொரு அரங்கநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். ஏழு தலையுடைய ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ள இந்த அரங்கநாதர், கையில் தண்டத்துடன் காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு.

முத்துராமலிங்க சேதுபதி மன்னர், இக்கோவிலில் மூன்றாம் பிரகாரத்தை மிகப்பெரிதாகக் கட்டியுள்ளார். 1212 தூண்களுடன் கூடிய இந்த பிரகாரம் 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்டது.

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக இலிங்கம் இருக்கிறது. தினமும் காலை 5 மணிக்கு இந்த இலிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்கின்றனர். இந்த அபிஷேகத்திற்கு பின்பே, இராமநாத சுவாமிக்கு பூஜை நடக்கிறது. இந்த அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது. சக்தி பீடங்களில் இத்தலம், “சேதுபீடம்” ஆகும். அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்கின்றனர்.

இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கங்களையும் ராமேஸ்வரம் தீர்த்தக்கரையிலுள்ள சங்கர மடத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர். அந்தந்த சுவாமிக்குரிய விமான வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முருகனின் 16 வடிவங்களையும் இங்கு தரிசிக்கலாம்.

வீரத்துறவி விவேகானந்தர் 1897ம் ஆண்டு, ஜனவரி 27ல் இராமநாதசுவாமி கோவிலுக்கு வந்தார். அப்போது அவர் ஆற்றிய சொற்பொழிவில், அன்புதான் சமயம். உடல், உள்ளம் இரண்டும் சுத்தமில்லாமல் சிவனை வழிபடுவதால் ஒரு பலனும் இல்லை. உள்ளம், மன சுத்தத்துடன் தன்னை பிரார்த்திப்பவர்களின் கோரிக்கைகளுக்கு சிவன் செவிசாய்க்கிறார். தூய்மையில்லாமல் கோவிலுக்குள் செல்பவர்கள், தங்களின் பாவங்களோடு மேலும் ஒரு பாவத்தைச் சேர்த்துக் கொள்கிறார்கள்.

சிவனுக்கு சேவை செய்ய விரும்புபவர்கள், அவரது படைப்புகளுக்கு சேவை செய்ய வேண்டும். தன்னால் முடிந்தவரையில் பிறருக்கு தூய மனதுடன் உதவுபவனே, சிவபெருமானுக்கு நெருக்கமாக இருக்கும் வாய்ப்பைப் பெறுகிறான்,” என்று பேசியுள்ளதுடன் பார்வையாளர் புத்தகத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.

விபீஷணன் தன் சகோதரன் இராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை இராமரிடமே ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினான். இராவணன் அதை ஏற்க மறுக்கவே, அவன் இராமருக்கு உதவி செய்வதற்காக இராமேஸ்வரம் வந்தான். அவனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட இராமன், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே, இலங்கை வேந்தனாகப் பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.

அந்த பட்டாபிஷேகம் நடந்த இடத்தில், இராமருக்கு கோவில் உள்ளது. சுவாமிக்கு “கோதண்டராமர்” என்பது திருநாமம். இவரது அருகில் விபீஷணன் வணங்கியபடி இருக்கிறான். அவனை இராமரிடம் சேர்க்க, பரிந்துரை செய்த ஆஞ்சநேயரும் அருகில் இருக்கிறார். இராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில், வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கும் மத்தியிலுள்ள தீவில் இக்கோவில் அமைந்துள்ளது.

இராமநாதர் கோவிலில் இராமர், இலட்சுமணர், சீதை ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர். ஆனி மாதத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா, வைகுண்ட ஏகாதசி, ராமநவமி மற்றும் ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் இவர்கள் புறப்பாடாவர். இராமலிங்கப் பிரதிஷ்டையின்போது இராவணன் சீதையை கவர்ந்து செல்லுதல், அவனை ஜடாயு தடுத்தல், ஆஞ்சநேயர் இலங்கை செல்லுதல், இராமன் இராவணனை வீழ்த்துதல், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்தல், இராமர் இலிங்கப் பிரதிஷ்டை செய்தல் ஆகிய வைபவங்கள் நடக்கும்.

கயிலாயத்தில் இருந்து தான் இலிங்கம் கொண்டு வரும் முன்பாக சீதையால் உருவாக்கப்பட்ட மணல் இலிங்கத்திற்கு இராமபிரான், பூஜை செய்தது கண்டு ஆஞ்சநேயர் தன் தாமதத்துக்காக வருந்தினார். அந்த மணல் இலிங்கத்தை வாலால் பெயர்க்க முயன்றார். இந்த நிகழ்வின்போது அவரது வால் அறுந்தது. இதன் அடிப்படையில் வால் இல்லாத கோலத்தில் ஆஞ்சநேயருக்கு தனிக்கோவில் இருக்கிறது. இராமநாதசுவாமி கோவிலில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் இக்கோவில் உள்ளது. இங்கு கடல் மணலால் உருவாக்கப்பட்ட மற்றொரு வால் இல்லாத ஆஞ்சநேயர் சிலையில், சிப்பி பதிந்திருப்பதைக் காணலாம்.

சீதையை மீட்பது குறித்து இராமர் ஆலோசித்த இடத்தில், “இராமர் பாதம்” இருக்கிறது. பொதுவாக கோவில்களில் தாழம்பூ வழிபாடு நடப்பதில்லை. இது எந்த பாவத்தையும் தீர்க்கும் தலம் என்பதால், இங்கு சிவனுக்கு தாழம்பூவும் சூட்டுகின்றனர். கருவறைக்கு பின்புறமுள்ள இலிங்கோத்பவரின் எதிரில் பலிபீடம் உள்ளது வித்தியாசமான அமைப்பு. வடநாட்டு பக்தர்கள் தலையில் இராமாயணம் புத்தகத்தை சுமந்து கொண்டு இராமநாத சுவாமி சன்னதியை சுற்றி வந்து வழிபடுகிறார்கள்.

பிரகாரத்தில் சீதை, மணலில் இலிங்கம் பிடிக்க, அதற்கு இராமர் பூஜை செய்யும் காட்சி சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. அருகில் ஆஞ்சநேயர், சுக்ரீவன் உள்ளிட்ட வானர வீரர்களும் இருக்கின்றனர். மேலும் நளன், நீலன், கவனால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளும் இப்பிரகாரத்தில் உள்ளன. சுவாமி சன்னதி பிரகாரத்தில் இரு இலிங்கங்களுக்கு மத்தியில் சரஸ்வதி, சங்கரநாராயணர், அர்த்தநாரீஸ்வரர், ஏகாதச உருத்ர லிங்கம் (11 லிங்கங்கள்) ஆகியோர் அருளுகின்றனர். அம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

தேவாரப்பதிகம்

கடலிடை மலைகள் தம்மால் அடைத்து மால் தரும் முற்றித் திடலிடைச் செய்த கோவில் திருஇரா மேச்சு ரத்தைத் தொடலிடை வைத்து நாவில் சுழல்கின்றேன் தூய்மையின்றி உடலிடை நின்றுப் பேரா ஐவர்ஆட் டுண்டு நானே.

– திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற பாண்டிநாட்டுத்தலங்களில் இது 8வது தலம்.

Rameshwaram Temple Festival

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை.

Rameshwaram Temple Prayer

இரட்டை விநாயகரை குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் வேண்டிக்கொள்கின்றனர். நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அக்னி தீர்த்தக்கரையில் நாகர் பிரதிஷ்டை செய்து வேண்டிக் கொள்கிறார்கள்.

Rameshwaram Temple Timings

காலை 04:00 மணி முதல் 01:00 மணி வரை, மாலை 03:00 மணி முதல் இரவு 08.30 மணி வரை திறந்திருக்கும்.

Rameswaram Ramanathaswamy Temple Address

Rameswaram, Tamil Nadu 623526

Rameshwaram Temple Contact Number: 04573 221 223



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 23, 2024
ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (ஸ்ரீ போசல பாவா)
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்