×
Thursday 2nd of January 2025

திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவில்


Thirumanancheri Sugandha Parimaleshwarar Temple History in Tamil

அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோவில், திருமணஞ்சேரி

மூலவர் சுகந்த பரிமளேஸ்வரர் / திருமணநாதர்
தாயார் பெரிய நாயகி
தீர்த்தம் கிணற்று நீர்
ஊர் திருமணஞ்சேரி
மாவட்டம் புதுக்கோட்டை

Thirumanancheri Thirumananathar (Periyanayagi Amman) Temple History in Tamil

அருள்மிகு திருமணநாதர் ஆலயம், திருமணஞ்சேரி

தல வரலாறு: இத்தலம் ஒரு காலத்தில் ராஜராஜ வளநாடு என அழைக்கப்பட்டது. இங்கு வசித்த வணிகர் ஒருவருக்கு அழகான மகள் இருந்தாள். இவளை மதுரையில் வசித்த தன் தங்கை மகனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தார் வணிகர். ஆனால், அவன் இன்னொரு பெண்ணை காதலித்து திருமணமும் முடித்து விட்டான். இவ்விஷயம் தெரிந்தும், தங்கை மகனுக்கே மகளைக் கொடுப்பதென்ற முடிவில் இருந்தார் வணிகர். பெற்றவர் பேச்சை மீறாத அந்த பெண்ணும், கடவுள் சித்தப்படி நடக்கட்டும் என விட்டு விட்டாள். தினமும் தங்கள் ஊரிலுள்ள சுகந்த பரிமளேஸ்வரர் கோவிலுக்கு சென்று, சுவாமியையும், பெரியநாயகி அம்பாளையும் வணங்கி வந்தாள்.

இதனிடையே அப்பெண்ணின் பெற்றோர் இறந்து விட்டனர். அனாதையான அவள் பரிமேளஸ்வரர் சன்னதிக்கு சென்று அழுதாள். இறைவன் அவளுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து உதவ முடிவெடுத்தார்.

அவர் முதியவர் வடிவில் அங்கு வந்து, அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூற வந்த அவளது முறைப்பையனிடம், “அவள் உனக்காகவே பிறந்தவள். நீ இன்னொரு திருமணம் செய்திருந்தாலும் கூட, ஆதரவற்றவளாய் நிற்கிறாள். எனவே, நீயே அவளைத் திருமணம் செய்து கொள்,” என்றார்.

அவன் அவளுக்கு அவ்விடத்திலேயே மாலை சூடினான். அப்பெண் அந்த முதியவரிடம், “பெரியவரே! நான் அவரது மனைவியாகி விட்டேன். இங்கு உங்களைத் தவிர வேறு சாட்சி இல்லை. மதுரையில் உள்ளவர்கள் எங்களுக்கு திருமணம் நடந்ததற்கு சாட்சி கேட்டால் என்ன செய்வேன்?” என்றாள்.

அதற்கு பெரியவர், “இத்தல விருட்சமான வன்னி மரமும், இக்கோவில் கிணறும் தான் இத்திருமணத்தைப் பார்த்தன. உனக்கு பிரச்னை ஏற்படுமானால், இவை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்து சாட்சி சொல்லும்,” என்றார். பின்னர் மறைந்து விட்டார்.

இறைவனே தங்கள் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார் என்பதை உணர்ந்த அத்தம்பதியர் மகிழ்வுடன் மதுரை வந்தனர்.

இதை மூத்தவளும், அவளது உறவினர்களும் ஏற்கவில்லை. இறைவன் திருமணம் முடித்து வைத்தார் என்பதற்கு என்ன சாட்சி என கேட்டனர்?

அவர்கள் மீனாட்சியம்மன் கோவிலுக்குள் சென்றால், வன்னிமரமும், கிணறும் தோன்றி சாட்சியளிக்கும் என்றனர். எல்லாரும் கோவிலுக்குச் சென்றனர். கோவிலின் வடக்கு பிரகாரத்தில் வன்னிமரமும், கிணறும் தோன்றின. (இக்கிணறு இன்றும் உள்ளது. வன்னிமரம் ஆடிவீதியில் இருக்கிறது) அனைவரும் இறைவனின் லீலையே இது என்பதை உணர்ந்தனர். பின்னர் இருவரும் அவனுடன் இன்புற்று வாழ்ந்தனர்.

thirumanancheri thirumana nathar - sugandha parimaleshwarar

Karambakudi Thirumanancheri Temple Special in Tamil

தல பெருமை: கோவிலில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் அக்னியாறு ஓடுகிறது. இந்நதியில் மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் வரும். அவ்வாறு வந்து இதில் நீராடும் பாக்கியம் கிடைத்தால் அஞ்ஞானம் (அறியாமை) அழியும் என்பது நம்பிக்கை.

இக்கோவிலில் இருந்த வன்னிமரமும், கிணறும் மதுரைக்கு சாட்சி சொல்ல சென்றுவிட்டதால், இக்கோவிலுக்கென தல விருட்சம் கிடையாது. தல விருட்சம் இல்லாத சிவாலயம் என்ற சிறப்பை இது பெறுகிறது. அதுபோல் இக்கோவிலைச் சுற்றி, கோவிலின் சங்கு ஒலி கேட்கும் தூரத்துக்குள் கிணறு வெட்ட முயற்சித்தால், வேலையில் தடங்கல் ஏற்பட்டு நின்று விடுகிறது. கோவில் குளத்தில் இருந்தே சுவாமிக்கு அபிஷேக நீர் எடுக்கப்படுகிறது. மழை காலத்தில் குளத்தில் தண்ணீர் அதிகமாக இருக்கும்.

கோவிலில் உள்ள குளத்து நீருக்கு விஷத்தை முறிக்கும் சக்தியுண்டு என நம்பப்படுகிறது. சுவாமிக்கு திருமணநாதர் என்ற பெயரும் உள்ளது.

thirumanancheri periyanayagi amman

நந்தியின் சிறப்பு: எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் கோவிலுக்குள் கொடி மரத்தின் அருகில்தான் இருப்பார். ஆனால், இந்தக் கோவிலில் ராஜகோபுரத்துக்கு முன்னால் நந்தி தேவர் உள்ளார். இவர் சுயம்புவாக எழுந்தருளியவர் (தானாக தோன்றியவர், சிற்பி செதுக்காத சிலை) என்பதால் சக்தி அதிகம். இதனால் நந்திக்கு தனி மண்டபம் இல்லை. தரையிலேயே அமர்ந்துள்ளார். இவரை வணங்கி அபிஷேகம் செய்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.

புலவருக்கு அருள்: காளமேகப்புலவர் இத்தலத்து இறைவனை வணங்க வந்தபோது அக்னி ஆற்றை கடும் வெயிலில் கடந்தார். கால் சூடு தாங்காமல், திருமணநாதரைக் குறித்து பாடல் பாடினார். இறைவன் இவரது பக்தியை மெச்சி ஆற்றில் திடீரென தண்ணீர் வரச் செய்தார். ஜில்லென்ற ஆற்றில் இவர் இனிமையாய் நடந்து வந்தார்.

வறட்சி வராமல் தடுக்கவும் இவரை பிரார்த்திக்கலாம். அர்த்தநாரீஸ்வரர் சிற்பமும் இக்கோவிலில் உள்ளது திருமணத்தலம் என்பதற்கு மற்றொரு சான்றாகும். வாழ்க்கையில் இணைபவர்கள் கருத்தொருமித்து வாழ வேண்டும் என்பதற்கு இது சாட்சியாக உள்ளது.

Thirumanancheri Thirumana Nathar Temple Festival

திருவிழா: சித்திரை மாதப்பிறப்பு, வைகாசி விசாகம் பத்துநாள் விழா, ஆனி திருமஞ்சனம், ஆடிப்பெருக்கன்று புதுமணத்தம்பதிகள் கூடும் விழா ஆகியவை முக்கியமானவை.

பிரார்த்தனை: இறைவனே முன்னின்று திருமணம் நடத்தி வைத்த தலம் என்பதால், நீண்ட காலமாய் திருமணம் தடைபடுவோர் திருமண வரம் வேண்டி பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்: சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Sri Sugandha Parimaleshwarar Temple, thirumanancheri

Thirumanancheri Sugantha Parimaleshwarar Temple Timings

திறக்கும் நேரம் & பூஜை: காலசந்தி (காலை 8.00 மணி), உச்சிக்காலம் (நடுப்பகல் 12.00 மணி), சாயரட்சை (மாலை 6.00 மணி), அர்த்தசாமம் (இரவு 8.00 மணி) என்ற வகையில் நான்கு கால பூசைகள் இங்கு நடத்தப்பெறுகின்றன. இக்கோவில் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 முதல் 8.30 வரையிலும் திறந்திருக்கும்.

Thirumanancheri Thirumananathar Temple Address

புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆலங்குடி வட்டத்தில், பட்டுக்கோட்டை சாலையில் கறம்பக்குடியிலிருந்து தென்மேற்குத் திசையில் 3 கிமீ தொலைவில் இருக்கிறது திருமணத் தடை நீக்கும் ஆலயமான திருமணஞ்சேரி திருமணநாதர் திருக்கோவில்.



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்