×
Thursday 17th of April 2025

உண்ணாமுலை அம்மன், திருச்சி ஜே.கே நகர்


J K Nagar Arunachaleswarar Temple

🛕 உண்ணாமுலை அம்மனின் பெயரைக் கேட்டதும் திருவண்ணாமலை உங்களுக்கு நினைவுக்கு வரலாம். ஆனால் அதே பெயரோடு அம்பிகை அருள்வது திருச்சி ஜே.கே நகரில் உள்ள அருணாசலேஸ்வரர் ஆலயத்தில். ஆம்! இறைவன் பெயரும் அதேதான். அருணாசலேஸ்வரர்.

🛕 ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைக் கடந்ததும் நூறு தூண்களுடன் கூடிய மகா மண்டபம் பிரமாண்டமாகக் காட்சி தருகிறது. வலதுபுறம் கால பைரவரின் தனிச் சன்னிதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு சிறப்பு ஹோமம், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த வழிபாட்டில் கலந்து கொள்வதால் ஏவல், பில்லி, சூனியம் போன்ற பாதிப்பில் இருந்து பூரணமாக விடுபடலாம் என்பது நம்பிக்கை.

🛕 சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மகாமண்டபத் தூண்களை ரசித்தபடி நடந்தால் நந்தியை தரிசித்து, அர்த்த மண்டப நுழைவுவாசலில் உள்ள கம்பீரமான துவாரபாலகர்களின் அனுமதிபெற்று, கருவறையில் இறைவன் அருணாசலேஸ்வரரின் லிங்கத் திருமேனி முன்சென்று நிற்கலாம். கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கும் இறைவன் முன் நின்று கரங்குவிக்கும் போது மனம் பூராவும் வெற்றிடமாகி, மெல்லிய மலர்களால் வருடப்படும் உணர்வு தோன்றுகிறது.

🛕 சிவராத்திரியின் போது இறைவனுக்கு நான்கு கால ஆராதனைகளும் அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. கார்த்திகை மாதம் அனைத்து சோமவார நாட்களில் இறைவனுக்கு 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதோஷ வழிபாடும் சிறப்பாக நடக்கிறது.

🛕 இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து, அன்னதானம் செய்தால் பித்ருதோஷம் நீங்கும் என்றும், ஜாதகக் கோளாறுகள் நிவர்த்தியாகும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.இறைவனின் தேவகோட்டத்தில் தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். சண்டேசர் சன்னிதியும் உள்ளது.

Unnamulai Amman

🛕 அன்னை உண்ணாமுலை அம்மன் தனிச் சன்னிதியில் நின்ற கோலத்தில் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் அருள்பாலிக்கிறாள். புன்சிரிப்பு மலர காட்சி தரும் அன்னையின் அருள் முகம் நம்மை வசீகரிப்பது நிஜம்.மாங்கல்யம் நிலைத்துத் தழைக்க வேண்டும் என்றும், கணவன் நீண்ட ஆயுளுடன்வாழ வேண்டும் என்றும் விரும்பாத பெண் இருக்க முடியாது.இப்படிப்பட்ட பெண்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கிறாள் அன்னை உண்ணாமுலை அம்மன்.

Thaali Bhagyam

🛕 பவுர்ணமி நாட்களில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தை வெள்ளிக்கிழமைகள், ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உண்டு. வெள்ளிக்கிழமைகளில் அன்னைக்கு குங்கும அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால் தாலி பாக்கியம் நீடிக்கும் என்றும், நோயுற்றவர்கள் விரைந்து குணமாவார் என்றும், தோஷங்கள் விலகும் என்றும் நம்புவதால் அன்றைய தினம் அன்னையின் சன்னிதியில் பெண்கள் கூட்டம் நிறைந்திருக்கும்.
🛕 தங்கள் வேண்டுதல் பலித்ததும் இறைவிக்கு புடவை சார்த்தி, நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றனர். வாசனை மலர்களால் தொடுக்கப்பட்ட பூமாலையை இறைவிக்கு சாத்தினால், திருமணம் விரைந்து நடந்தேறும் என்கின்றனர். இறைவியின் தேவகோட்டத்தில் இச்சா, கிரியா, ஞான சக்தியரும், எதிரே சண்டிகேஸ்வரியும் அருள்பாலிக்கின்றனர்.
🛕 இறைவன், இறைவியை சேர்ந்தே வலம் வரும் வகையில் உட்பிரகாரம் அமைந்துள்ளது. நிருதி விநாயகர், மகாலட்சுமி, சரஸ்வதி, முருகன், வள்ளி, தெய்வானை, நால்வர், நவக்கிரக நாயகர்கள் இங்கே அருள் பாலிக்கின்றனர்.இறைவியின் சன்னிதியை அடுத்து ஜெயம் கொண்ட விநாயகரின் சன்னிதி உள்ளது. ஆனை முகன் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்க, கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, லிங்கோத்பவர் உள்ளனர். அடுத்துள்ளது பாலமுருகனின் சன்னிதி. சஷ்டியின் போது ஆறு நாட்களும் முருகனுக்கு சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை நடைபெறும். மாத சஷ்டி மற்றும் தைப்பூசத்தின்போது முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

🛕 ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

🛕 ரிஷபங்களின் சுதையாலான திருவடிவங்களுடன் ஆலயத்தைச் சுற்றியுள்ள மதிற்சுவர் அழகுற காட்சியளிக்கிறது.

🛕 தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயத்தின் தல விருட்சம் – வில்வம்.

🛕 பக்தர்களின் நலம் காக்கும் அருணாசலேஸ்வரரையும், மகளிர் துயர் காக்கும் உண்ணாமுலை அம்மனையும் ஒரு முறை தரிசித்து நன்மை பெறலாமே!

🛕 திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஜே.கே நகரில் உள்ளது இந்த அருணாசலேஸ்வரர் ஆலயம்.


 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஏப்ரல் 5, 2025
அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில், ஆனைமலை
  • ஏப்ரல் 1, 2025
அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில், திருமுல்லைவாயில்
  • ஏப்ரல் 1, 2025
அருள்மிகு பதஞ்சலிநாதர் திருக்கோவில், கானாட்டம்புலியூர்