×
Sunday 29th of December 2024

கருவறை – மூலஸ்தானம் – கர்ப்பக்கிரகம்


Karuvarai / Moolasthanam / Garbhagriha in Tamil

கர்ப்பக்கிரகம் / மூலஸ்தானம் எனும் கருவறையின் தேவ ரகசியம்

🙏 மனிதனுக்கு தலைதான் பிரதானம். தலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலில் மற்ற அங்க, அவயங்களை செயல்பட வைக்கிறது. இதே மாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது. உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக உள்ளது. இதை மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் சொல்வார்கள்.

🙏 நமது உடல் பிரமாண்டமாக இருந்தாலும், தலை சிறியதாகத்தான் இருக்கும். அது மாதிரிதான், ஆலயங்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் கருவறை சிறியதாகவே இருக்கும். இதன் பின்னணியில் சூட்சமங்களும், தேவ ரகசியமும் அடங்கியுள்ளன. வாஸ்து கணக்கு பிரகாரம், நீள, அகல, உயரங்களை மிகத் துல்லியமாக கணக்கிட்டு ஆலயங்களை உருவாக்கிய நம் முன்னோர்கள், பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் பகுதியாக கருவறையை அமைத்தனர்.

🙏 பிரபஞ்சத்தில் உள்ள கதிர்கள் எல்லாம் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாகும். இந்த அலைகள் கோவில் கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் மூலம் கருவறைக்குள் இருக்கும் மூலவர் மீது பாயும். பிறகு அங்கிருந்து அந்த அலைகள் ஆலயம் முழுக்க விரவிபரவும். எனவேதான் ஆலயங்களுக்கு செல்லும்போது நமது ஆற்றல் அதிகரிக்கிறது.

🙏 இதற்காகவே நம் முன்னோர்கள் கருவறை அமைப்பதில் மட்டும் அளவு கடந்த நுட்பத்தை கடைபிடித்தனர். எல்லா ஆலயங்களிலும் கருவறையானது, வாசல் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் மூடப்பட்டதாக இருக்கும். கருவறை அமைப்பை 6 பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை

  1. அதிஷ்டானம்
  2. பாதம்
  3. மஞ்சம்
  4. கண்டம்
  5. பண்டிகை
  6. ஸ்தூபி

எனப்படும்.

🙏 இதில் மூலவர் சிலை நிறுவப்படும் பகுதியை அதிஷ்டானம் என்பார்கள். பீடம் என்றும் சொல்வதுண்டு. கருவறையின் வெளிப்புறச்சுவரை கோஷ்டம் என்பார்கள். அவற்றில் பல்வேறு கடவுள் உருவங்கள் இடம் பெற்றிருக்கும். ஒரு கோவில் எந்த மூர்த்திக்கு உரியதோ, அந்த மூர்த்தியை அங்கு பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.

🙏 அது மட்டுமின்றி அந்த கருவறை எத்தனை ஆண்டுகளைக் கடந்தாலும் இறை அருளை அள்ளித்தரும் பொக்கிஷமாக இருக்கவும் வழி வகுத்திருந்தார்கள். இந்த நடைமுறை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதாவது ஆகம வழிபாட்டு முறைகளுக்கும் முன்பே தோன்றி விட்டது.

🙏 அந்த காலக் கட்டத்தில் நாட்டை ஆண்ட மன்னர்கள், தங்களது அரண்மனையை விட அருள் அலை தரும் கோவில்கள் எப்போதும் உறுதியாக நின்று நிலைப் பெற்று திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் கற்களால் ஆன கருவறையைக் கட்டினார்கள். அவர்கள் பெருங்கோவில், மாடக்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடிக் கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று 8 வகைக் கோவில்களைக் கட்டினார்கள்.

🙏 ஆனால் கருவறை பகுதி சதுரம், வட்டம், முக்கோணம் எனும் 3 வித அமைப்புகளில் அமைக்கப்பட்டன. இதில் சதுர அமைப்பு தேவ உலகத்துடனும், வட்டம் இறந்தவர்களுடனும், முக்கோணம் மண்ணுலகத்துடனும் தொடர்புடையதாக கருதப்படுகின்றன. தமிழ்நாட்டில் முக்கோண அமைப்புடன் ஆலய கருவறை அமைப்பதில்லை. வட்ட வடிவ கருவறைகளை புத்த ஸ்தூபிகளிலும் பள்ளிப்படை கோவில்களிலும் மட்டுமே காணமுடியும்.

🙏 என்றாலும், மதுரை அழகர் கோவிலில் உள்ள ஆலயக் கருவறை வட்ட வடிவில் இருப்பது ஆச்சரியமானது. மற்றபடி தமிழக ஆலயங்களில் கருவறை சமசதுர வடிவில்தான் இருக்கும். கருவறை சுற்றுப்பகுதி ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும். தொன்மை சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் கருவறை வெளிப்பகுதி ‘‘கஜப்ருஷ்டம்’’ வடிவில் இருக்கும்.

🙏 கஜம் என்றால் யானை, ப்ருஷ்டம் என்றால் பின்பகுதி என்று பொருள். ஆக கருவறை வெளிப்புற சுவர் யானையின் பின் பகுதி போன்ற வடிவில் இருக்கும் என்று அர்த்தம். இத்தகைய அமைப்பை ‘‘தூங்கானை மாடக்கோவில்’’ என்பார்கள். அதாவது ஒரு யானை முன்னங்கால்களை முன்புறம் நீட்டியும், பின்னங்கால்களை பின்புறம் மடித்தும் படுத்திருப்பதைப் போன்று காணப்படும்.

🙏 இத்தகைய கருவறையை நம் முன்னோர்கள் சாதாரணமாக அமைத்து விடவில்லை. கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் தானியங்களை விதைப்பார்கள். அந்த தானியங்கள் மூன்று நாட்களில் முளைத்து விட்டால் உத்தமமான இடம். 5 நாட்களில் முளைத்தால் மத்திமம். 5 நாட்களுக்கு பிறகு அதமம். மத்திமம், அதமமான இடங்களில் கருவறை கட்ட மாட்டார்கள். உத்தமமான இடத்தில் மட்டுமே கருவறையை அமைப்பார்கள்.

🙏 இது பிரபஞ்ச சக்திகளை ஒன்று திரட்டி தரும் தலமாக மாறும் என்று நம் மூதாதையர்கள் கணித்துதான் கோவில்களையும் கருவறைகளையும் கட்டினார்கள். கருவறைக்குள் வைரம், வைடூரியம், தகடுகள், கருங்கற்கள், சுட்ட கற்கள், ஆற்று மணல் போன்றவற்றை போட்டு நிரப்பும் வழக்கமும் இருந்தது.

🙏 சுண்ணாம்பு, கடுக்காய், தானிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை கலந்து அரைத்து பூசி கருவறையை உருவாக்குவதை கர்ப்பக கிரக லட்சணம் என்றனர். கர்ப்பக்கிரக சதுர அளவு 1 தண்டம் எனப்படும். இதன் அடிப்படையில்தான் ஆலயத்தின் மற்ற பகுதி அமைப்புகள் இருக்கும். உள்பிரகாரம் ஒரு தண்ட அளவு விஸ்தாரத்துடனும், இரண்டாம் பிரகாரம் இரண்டு தண்ட விஸ்தாரத்துடனும், மூன்றாம் பிரகாரம் 4 தண்ட விஸ்தார அளவுடனும், நான்காம் பிரகாரம் 7 தண்ட விஸ்தார அளவுடனும் இருத்தல் வேண்டும்.

🙏 இப்படி நம் முன்னோர்கள் கருவறையை பார்த்து, பார்த்து பரிசோதித்து கட்டினார்கள். சங்க காலத்தில் கருவறையை நம் முன்னோர்கள் திருவுண்ணாழிகை என்றழைத்தனர். கருவறை வலுவாக இருக்க வேண்டும் என்பதிலும் நம் முன்னோர்கள் மிகவும் கவனம் செலுத்தினார்கள். தேப்பெருமாநல்லூரில் உள்ள சிவாலயம் கருவறை தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது.

🙏 பெரும்பாலான கருவறைகள் இப்படித் தான் கட்டப்பட்டுள்ளன. அது போல கருவறை வடிவமைப்பிலும் மிகுந்த நுட்பம் கடைபிடிக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் ஆலய கருவறை இதயம் போன்றது. வேலூர் அருகே விரிஞ்சிபுரத்தில் உள்ள மார்க்கபந்தீஸ்வரர் ஆலய கருவறை ஓங்கார வடிவத்துடன் இருக்கிறது.

🙏 கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலய கருவறை அமைப்பு ஆச்சரியப்படத்தக்கது. சந்திரகாந்த கல்லால் உருவான இந்த கருவறை வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெப்பமாகவும் இருக்கும். இப்படி பல சூட்சமங்கள் கொண்ட கருவறையை நமது முன்னோர்கள் சற்று இருட்டாக வைத்தனர்.

🙏 அதிலும் ஒரு அறிவியல் பின்னணி உள்ளது. கருவறை விமான கலசம் மூலம் சூரிய கதிர்களின் அலை, மூலவர் சிலைக்கு கடத்தப்படும். அதே சமயம் சிலைக்கு அடியில் உள்ள யந்திரம் பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கும் ஆற்றல்களை மூலவர் சிலைக்கு கடத்தும். இதனால் கருவறையில் இறை ஆற்றல்கள் அனைத்தும் ஒன்று திரண்டு நிரம்பியிருக்கும்.

🙏 கருவறை சற்று இருட்டாக இருந்தால்தான் அந்த இறை ஆற்றல்கள் ஆலயத்தின் மற்ற பகுதிகளுக்குப் பரவும். இந்த விஞ்ஞான உண்மையை நம் முன்னோர்கள் அறிந்திருந்ததால்தான் அவர்கள் ஆலய கருவறையை சற்று இருளாக இருக்கும்படி செய்தனர். அது மட்டுமின்றி அந்த இறை ஆற்றல்களைப் பெற தினமும் ஆலயங்களுக்கு செல்ல வற்புறுத்தினார்கள்.

🙏 ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் கருவறையின் ஆற்றலையும் அருமையையும் புரிந்து கொள்ளாமலே இருக்கிறோம். நாம் வீட்டில் வழிபட்டால் 10 சதவீத ஆற்றலே கிடைக்கும். கோவில் பிரகாரத்தில் வழிபட்டால் 100 சதவீத ஆற்றல் பெறலாம். குளத்தில் வழிபட்டால் 1000 மடங்கு பலனும், ஆற்றில் வழிபட்டால் லட்சம் பங்கு பலனும், அருவிக்கரை பகுதிகளில் வழிபட்டால் 1 கோடி பங்கு பலனும், கடற்கரையில் வழிபட்டால் 2 கோடி பங்கு பலனும், ஜீவசமாதிகளில் வழிபட்டால் 10 கோடி பங்கு பலனும் கிடைக்குமாம்.

🙏 ஆனால் ஆலய கருவறை முன்பு நாம் வழிபாடு செய்தால் பலநூறு கோடி அளவுக்கு ஆற்றல்களை பெற முடியுமாம். இதில் இருந்தே நாம் கருவறை முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். எல்லா இடங்களிலும் காந்த அலைகள் இருந்தாலும் கருவறையில்தான் அவை நமக்கு ஆற்றல் தரும் சக்தியாக மாறுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

🙏 இதை கருத்தில் கொண்டே கருவறை எல்லா பக்கமும் மூடப்பட்டுள்ளது. கருவறையில் ஒரே ஒரு விளக்கு தொங்க விட்டிருப்பார்கள். அல்லது விக்கிரகத்துக்கு பின்னால் ஒரு செயற்கை ஒளி வட்டத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். இவை தான் கருவறையில் உள்ள இறை ஆற்றல்களை வெளிப்பக்கத்துக்கு எகிற செய்கிறது.

🙏 தினம், தினம் இந்த இறை ஆற்றல்கள் திரண்டு வெளி வருகிறது. அதனால்தான் கருவறையில் பால், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம், குங்குமம், விபூதி, எண்ணை என எந்த பொருள் கொண்டு அபிஷேகம் செய்தாலும் அவை நாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. அதற்கு பதில் கருவறையில் வைக்கப்படும் தண்ணீர் தீர்த்தமாக மாறுகிறது.

🙏 கருவறை நைவேத்தியங்கள் மகத்துவம் பொருந்திய மருந்தாக மாறுவதற்கு இறை ஆற்றல்களே காரணமாகும். கருவறையில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் போதும், நைவேத்தியம் படைக்கும்போதும் திரை போட்டு மூடி விடுவார்கள். தீபாராதனை காட்டும்போது திரையை விலக்குவார்கள். இதிலும் விஞ்ஞான தத்துவமே பின்புலமாக உள்ளது.

🙏 கருவறையை திரை போட்டு மூடி இருக்கும்போது இறை ஆற்றல்கள் தேங்கிநிற்கும். திரை விலக்கப்பட்டு தீபம் காட்டப்பட்டதும், அந்த ஆற்றல்கள் அப்படியே திரண்டு வந்து வெளியில் இரு பக்கமும் வரிசையில் நிற்பவர்கள் மீது அருள் வெள்ளமாக பாயும். இந்த இறை ஆற்றல்கள், அலைகள் நமது மூளையை சுத்தப்படுத்தி நம்மை புத்துணர்ச்சி பெறச் செய்யும்.

🙏 இதை கருத்தில் கொண்டுதான் சித்த சுவாதீனம் அடைந்தவர்களை கோவில் வளாகத்தில் கட்டி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. கோவிலில் தயாரிக்கப்படும் நைவேத்தியங்கள் சுவைமிக்கதாக மாறுவதற்கும், அபிஷேக நீர் நமது உடம்பில்பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் காந்த அலைகளே காரணமாகும்.

🙏 கருவறையில் உருவாகும் சக்தியானது இடமிருந்து வலமாக சுற்றுப்பாதையில் சுற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இதை கண்டுபிடித்து கருவறையை இடமிருந்து வலமாக நம்மை சுற்ற வைத்து விட்டனர். ஆண்கள் மேல் சட்டை அணியாமல் சுற்றினால் சக்தி அலைகள் நேரடியாக உடலுக்குள் புகுந்து நல்லது செய்யும்.

🙏 பொதுவாக கருவறை மூலவர் மூலம் ஆலயம் முழுவதும் காந்த சக்தி அலைகள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மிக அதிகமாக பரவும். எனவே பிரம்ம முகூர்த்தத்தில் சென்று முதல் ஆராதனையின் போது வழிபட்டால் அதிக நன்மை பெறலாம். இந்த காந்த அலைகள்தான் கோவிலின் பிரகாரத்தில் உள்ள சன்னதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றை கருவறையுடன் ‘‘வயர்லஸ்’’ தொடர்பு போல இணைக்கின்றன. எனவே ‘‘பாசிட்டிவ் எனர்ஜி’’ பெற கருவறை வழிபாடு மிக, மிக முக்கியமானது.

 

Also, read



One thought on "கருவறை – மூலஸ்தானம் – கர்ப்பக்கிரகம்"

  1. மூலஸ்தானத்திற்குள் தண்ணீர் பைப்பை சுவரில் துளையிட்டு அமைக்க ஆகம விதியில் அனுமதி உண்டா?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 22, 2024
ஸ்ரீ மாதா அறக்கட்டளை
  • டிசம்பர் 21, 2024
தில்லையம்பூர் முதியோர் இல்லம், கும்பகோணம்
  • டிசம்பர் 10, 2024
புனித யாத்திரை பாடல்கள்