×
Sunday 29th of December 2024

திருவாரூர் தியாகராஜர் கோவில்


Thiruvarur Thiyagarajar Temple Timings

அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில், திருவாரூர்

மூலவர் தியாகராஜர், வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார்
அம்மன் கமலாம்பிகை, அல்லியங்கோதை, நீலோத்பலாம்பாள்
தல விருட்சம் பாதிரிமரம்
தீர்த்தம் கமலாலயம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவாரூர்
ஊர் திருவாரூர்

Thiruvarur Temple History in Tamil

ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் “என்ன வேண்டும்?” எனக் கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைக் கேட்டார். தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த இலிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை. தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 இலிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான். முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார். வேறு வழியின்றி, இந்திரன் நிஜ இலிங்கத்துடன், மயன் செய்த இலிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். அவற்றில், நிஜ இலிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்ற இலிங்கங்கள் சுற்றியுள்ள கோவில்களில் உள்ளன.

Saptha Vidanga Sthalangal

இவை “சப்தவிடங்கத் தலங்கள்” எனப்படுகின்றன. “சப்தம்” என்றால் ஏழு.

திருவாரூரில் “வீதி விடங்கர்”, திருநள்ளாறில் “நகர விடங்கர்”, நாகப்பட்டினத்தில் “சுந்தர விடங்கர்”, திருக்குவளையில் “அவனி விடங்கர்”, திருவாய்மூரில் “நீலவிடங்கர்”, வேதாரண்யத்தில் “புவனி விடங்கர்”, திருக்காரவாசலில் “ஆதி விடங்கர்” என்ற பெயர்களில் விடங்க இலிங்கங்கள் அழைக்கப்படுகின்றன.
இந்த லிங்கங்கள் கையடக்க அளவே இருக்கும். சப்த விடங்க தலங்கள் உள்ள கோவில்களில் சுவாமியை “தியாகராஜர்” என்பர்.

சதயகுப்தன் என்ற அசுரன், தேவர்களுக்கு தொந்தரவு கொடுத்தான். இவனை சனிதோஷம் பிடித்தது. எனவே நவக்கிரகங்களை எதிர்த்து போரிட்டான். பயந்து போன கிரகங்கள் திருவாரூர் சிவனிடம் முறையிட்டனர். சிவன், “என்னை நாடி வரும் பக்தர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது” என்ற நிபந்தனையின்படி நவக்கிரகங்களைக் காப்பாற்றினார். எனவே, நவக்கிரகங்கள் இங்கு நேர்கோட்டில் சிவனை நோக்கியபடி அமைந்துள்ளன. கிரகங்கள் பக்தர்களுக்குத் தொல்லை கொடுக்கிறதா என்பதைக் கண்காணிக்க விநாயகர் சிலை, கிரகங்களின் சன்னதியில் உள்ளது. எனவே தான் திருநள்ளாறு சென்றாலும் திருவாரூர் செல்ல வேண்டும் என்பார்கள்.

 

Arulmigu Thiyagarajaswamy Temple

தியாகராஜர் கோவிலில் 84 விநாயகர்கள் உள்ளனர். இவர்களில் நால்வருக்கு தனி சிறப்பு உண்டு. அம்மன் சன்னதி பிரகாரத்திலுள்ள, நடுக்கம் தீர்த்த விநாயகரை, நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள், டென்ஷனாக இருப்பவர்கள் வழிபடுகிறார்கள்.

மேற்கு கோபுரத்தின் அருகில், சுந்தரருக்கு சிவனால் தரப்பட்ட பொன், நிஜத்தங்கம்தானா என்பதை சோதித்துப் பார்த்து தந்த, “மாற்றுரைத்த விநாயகர்” அருள்பாலிக்கிறார். நகை வாங்கும்முன் பெண்கள் இவரை வழிபடுகின்றனர். சிவன் சன்னதியின் முதல் பிரகாரத்திலுள்ள மூலாதார கணபதி, சுருண்டு படுத்த ஐந்து தலை நாகத்தின் நடுவில் விரிந்த தாமரைப்பூ மீது நர்த்தனம் ஆடும் நிலையில் உள்ளார். யோகா பழகுபவர்கள் இவரை வணங்குவது சிறப்பு. சுவாமி சன்னதியின் முதல் பிரகாரத்தில் அருள்பாலிக்கிறார் வாதாபி கணபதி. இந்த விநாயகர் முன்பு நின்றுதான், திருவாரூர் முத்துசுவாமி தீட்சிதர் “வாதாபி கணபதிம்” எனத் தொடங்கும் பாடலைப் பாடினார்.

திருவாரூரில் மூலவரை “வன்மீகநாதர்” என்ற திருப்பெயரிட்டு அழைக்கின்றனர். இவர் தலையில் பிறைச்சந்திரனை சூடியுள்ளதைப் போல, இத்தலத்து நாயகி “கமலாம்பிகையும்” சந்திரனை நெற்றியில் சூடியிருக்கிறாள். க–கலைமகள், ம–மலைமகள், ல–அலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமாக விளங்குகிறாள். வலக்கரத்தில் மலர் ஏந்தியும், இடது கரத்தை இடையில் வைத்தும், கால்களை யோகாசன நிலையில் அமைத்தும் ராணி போல் காட்சி தருகிறாள். இத்தலத்தின் வடபால் சுக்கனாறும், தென்பால் ஓடம்போக்கியாறும் ஒடுகின்றன.

Thiruvarur Temple List

பஞ்ச பூதத்தலங்களுள் பிருதிவித் தலம். எல்லா சிவாலயங்களின் சான்னித்யமும் மாலை நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம். இத்தலத்திற்கு பல பெயர்கள் உள்ளன. அவையாவன:

  1. சேத்ரவாரபுரம்
  2. ஆடகேசுரபுரம்
  3. தேவயாகபுரம்
  4. முசுகுந்தபுரம்
  5. கலிசெலாநகரம்
  6. அந்தரகேசுபுரம்
  7. வன்மீகனாதபுரம்
  8. மூலாதாரபுரம்
  9. கமலாலயபுரம்
  10. சமற்காரபுரம்

சிவன் கோவில்களில் தேவாரம் பாடியதும், “திருச்சிற்றம்பலம்” எனக் கூறி முடிப்பார்கள். சிதம்பரம் நடராஜர் கோவிலே முதல் கோவில் என்ற அடிப்படையில், அங்கு நடராஜர் நடனமாடும் சிற்றம்பலத்தை இப்படிச் சொல்வதுண்டு. ஆனால், சிதம்பரம் கோவிலுக்கும் முந்தைய கோவில் திருவாரூர் எனக் கருதப்படுவதால், இந்தக்கோவிலில் மட்டும் தேவாரம் பாடி முடித்ததும், “திருச்சிற்றம்பலம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை.

Thiruvarur Ther – திருவாரூர் தேர்

தமிழகத்திலுள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் தான் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும். இதனால் தான் “திருவாரூர் தேரழகு” என்பார்கள்.

சிவபெருமான் இத்தலத்தில் மட்டும் 364 திருவிளையாடல்கள் நிகழ்த்தியுள்ளார்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி என்பதால், எமனுக்கு வேலை இல்லாமல் போனது. எனவே இங்கு எமனே, சண்டிகேஸ்வரராக இருந்து இறைவனை வேண்டி, தன் வேலையை காப்பாற்றிக் கொண்டார். எமபயம் உள்ளவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு.

திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு.

சிதம்பர ரகசியம் போல, தியாகராஜ ரகசியம் இந்த கோவிலின் சிறப்பு.

தியாகராஜருக்கு பின்னுள்ள மூலஸ்தானத்தில் அந்த ரகசியம் உள்ளதாக கூறப்படுகிறது. இங்குள்ள உற்சவ அம்மன் “மனோன்மணி“க்கு ஆடிப்பூரத்தில் விழா நடக்கிறது.

கமலாம்பிகை கோபுரத்தின் உச்சியில் “ஆகாச பைரவர்” காவல் காத்து வருகிறார். இங்குள்ள பைரவர் “சித்தி பைரவர்” எனப்படுகிறார். அம்மன் மூலஸ்தானம் அருகே வலதுபுறம் கமலமுனி சித்தர் பீடம் உள்ளது. சிவன் சன்னதியின் பிரகாரத்தில் மிகப்பெரிய “சிவசூரியன்” அருள்பாலிக்கிறார்.

வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ராஜநாராயண மண்டபத்தில்தான், தியாகராஜர் திருவாதிரை தினத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இங்கு அஷ்ட துர்க்கை சன்னதிகள் உள்ளன. இந்த துர்க்கைகளையும், மகாலட்சுமியையும் முத்துசுவாமி தீட்சிதர் பாடியுள்ளார். அட்சய திருதியை, தீபாவளி நாட்களில் இங்குள்ள மகாலட்சுமிக்கு நாணயங்களால் சொர்ண அபிஷேகம் செய்வது சிறப்பு. அம்மன் சன்னதி வெளிப்பிரகார சுவரில் 6 சீடர்களுடன் தெட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். வழக்கமாக நான்கு சீடர்களே இருப்பர்.

தியாகராஜர் கோவிலில், அம்பிகையான நீலோத்பலாம்பாள் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு அருகில் ஒரு தோழி நிற்கிறாள். அவள் தோளில் முருகன் இருக்கிறார். முருகனின் தலையை அம்மன் தடவிக்கொடுக்கும் விதத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சரஸ்வதி வீணை வைத்திருப்பது வழக்கம். ஆனால், திருவாரூர் சிவன் சன்னதி பிரகாரத்தில் வீணை இல்லாத சரஸ்வதியை தவக்கோலத்தில் காணலாம். இவள் சிவனை நோக்கித் தவமிருக்கிறாள். ஹயக்கிரீவரும் தனி சன்னதியில் இலிங்க பூஜை செய்யும் காட்சியைக் காணலாம். இவரை “ஹயக்கிரீஸ்வரர்” என்கின்றனர். இந்த இருபெரும் கல்வி தெய்வங்களையும் மாணவர்கள் பூஜித்தால், படிப்பில் கவனம் அதிகரிக்கும் என நம்புகின்றனர்.

தேவலோகத்தில் யார் நேர்மையானவர் என்ற போட்டி ஏற்பட்டது. எமதர்மராஜன் “நானே நேர்மையாளன்” என்றார். நாரதரோ, பூமியில் மனுநீதிச்சோழனே நேர்மையானவன் என்றார். இதனால் எமன் பசுவாக வடிவெடுத்து, ஒரு கன்றுடன் திருவாரூர் ராஜவீதிக்கு வந்தார்.

அப்போது மனுநீதிச்சோழனின் மகன் வீதிவிடங்கன் தேரில் வந்தான். வேகமாக வந்த தேரில் சிக்கி, கன்று இறந்தது. இதையறிந்த பசு மன்னனின் அரண்மனைக்கு சென்று நீதி கேட்டது. கன்றை இழந்த பசு எவ்வளவு வேதனைப்படுமோ, அதே வேதனையை தானும் படவேண்டும் என்பதற்காக தன் மகனைத் தேர்ச்சக்கரத்தில் ஏற்றி கொன்றான் சோழன். பசு வடிவில் இருந்த எமதர்மராஜா மனுநீதிச்சோழனுக்கு காட்சி கொடுத்து “நீயே நேர்மையானவன்” எனக் கூறி மறைந்தார். இந்த காட்சியை விளக்கும் கல்தேர் கோவிலின் வடகிழக்கு மூலையில் உள்ளது.

சிவாலயங்களில், பொதுவாக நந்தி சிலைகளை படுத்த கோலத்திலேயே காண முடியும். ஆனால், திருவாரூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள சப்தவிடங்கத்தலங்களில் மட்டும் நந்தியை நின்ற கோலத்தில் காணலாம். மேலும், இவையனைத்தும் உலோகச் சிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு பார்த்து அமைந்த கோவில்களில், சுவாமி வீதிஉலாவிற்கு கிழக்கு கோபுரம் வழியாகத்தான் வெளியே செல்வார். ஆனால், இங்கு ஈசான்ய திசையிலுள்ள விட்டவாசல் வழியாக வெளியே செல்கிறார்.

இந்திரனிடம் பெற்ற இலிங்கத்தை முசுகுந்த சக்கரவர்த்தி இங்கு பிரதிஷ்டை செய்தார். அதை முசுகுந்தனுக்கு கொடுத்த இந்திரன், மீண்டும் அதை தேவலோகம் கொண்டு சொல்ல விரும்பினான். எனவே, தியாகராஜர் கிழக்கு வாசல் வழியாக உலா வரும் போது, அவரை மீண்டும் கொண்டு சென்று விடலாம் என நினைத்து, அங்கேயே அவன் காத்திருப்பதாக ஐதீகம். இந்திரனிடமிருந்து தப்புவதற்காக, தியாகராஜரை பக்தர்கள் ஈசான்யத்தில் உள்ள விட்டவாசல் வழியாக உலா கொண்டு செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் கோவிலுக்குள் நுழையக் கூட கிழக்கு வாசலை தவிர்த்து விட்டு, வடக்கு மற்றும் மேற்கு வாசல் வழியாகத்தான் கோவிலுக்கு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் இத்தலம் தான் மிக அதிகமாக 353 பாடல்களைப் பெற்றுள்ளது. சம்பந்தர் 55 பாடல், அப்பர் 208 பாடல், சுந்தரர் 87 பாடல், மாணிக்கவாசகர் 3 பாடல்கள் பாடியுள்ளனர்.

லலிதா சகஸ்ரநாமத்தின் மொத்த வடிவமாக, இத்தலத்து நாயகி கமலாம்பிகை விளங்குகிறாள். எனவே இங்குள்ள தீர்த்தம் “கமலாலயம்‘ எனப்படுகிறது. பங்குனி உத்திரத்தில் இங்கு நீராடினால், கும்பகோணத்தில் 12 மகாமகம் நீராடிய பலன் உண்டு என்பது ஐதீகம். குளத்தின் நடுவே நாகநாதர் சன்னதி உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர்.

பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடத்தப்படும். ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது. இதை “நித்திய பிரதோஷம்” என்பார்கள். இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர்களும் தரிசிப்பதாக ஐதீகம். எனவே, இந்தக் கோவிலுக்கு மாலை வேளையில் சென்றால், எல்லா தேவர்களின் அருளையும் பெற்ற புண்ணியம் கிடைக்கும்.

Thiruvarur Kovil Special

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் தமிழகத்தின் புகழ்பெற்ற தலம். இந்தக் கோவிலை சுற்றிப் பார்க்க வேண்டுமானால், முழுமையாக ஒருநாள் ஆகும்.

பெரும்பாலான கோவில்களின் சுற்றுப்பிரகாரத்தில் சிறிய சன்னதிகள்தான் இருக்கும். ஆனால், திருவாரூர் கோவிலின் உள்ளே இருக்கும் சன்னதிகள், கிட்டத்தட்ட தெருவோர கோவில்களின் அளவுக்கு பெரிய அளவில் இருக்கிறது.

வீதிவிடங்க விநாயகர், அசலேஸ்வரர் (இது தனியாக பாடல் பெற்றது), கமலாம்பாள், நீலோத்பலாம்பாள், ரெளவுத்ர துர்க்கை, ருண விமோசனர், தெட்சிணாமூர்த்தி, ஆனந்தீஸ்வரர், சித்தீஸ்வரர், ஹயக்கிரீஸ்வரர், தட்சணேஸ்வரர், அண்ணாமலேஸ்வரர், வருணேஸ்வரர், ஓட்டு தியாகேசர், துளசிராஜா பூஜித்த கோவில், தெய்வேந்திரன் பூஜித்த இலிங்கம், சேரநாதர், பாண்டியநாதர், ஆடகேஸ்வரர், புலஸ்திய ரட்சேஸ்வரர், புலஸ்திய பிரம்மேஸ்வரர், பக்தேஸ்வரர், வில்வாதீஸ்வரர் மற்றும் பாதாளேஸ்வரர் ஆகியோர் இந்த சன்னதிகளில் அருள் செய்கின்றனர்.

கோவிலின் மேற்கு கோபுர நுழைவாயிலில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. இவரை வழிபட்டால் தொலைந்த பொருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அம்மன் சன்னதியின் உள்பிரகார விநாயகர் சன்னதியில், ஐயப்பனும் அருள்பாலிக்கிறார்.

மாற்றுரைத்த விநாயகர் சந்நிதி மேலைக்கோபுரத்தின் எதிரில் குளக்கரையில் உள்ளது. “செங்கழுநீர் ஓடை” எனப்படும் ஓரோடை கோவிலுக்கு அப்பால் 1 கி.மீ., தொலைவில் உள்ளது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தியாகராஜர் என்றால் “கடவுள்களுக்கெல்லாம் ராஜா” என்று பொருள். தியாகராஜர் கோவிலும் கோவில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது. 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோவில்கள் என பிரமாண்டமாக விளங்குகிறது.

இக்கோவிலை பெரியகோவில் என்றும் சொல்வர். கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது. இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி விடங்க இலிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த இலிங்கம் வைக்கப்படும். அதன் மேல் வெள்ளிக்குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும். மற்ற நேரங்களில், பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும்.

தேவாரப்பதிகம்

துன்பெலாம் அற நீங்கிச் சுபத்தராய் என்பெலாம் நெக்கு இராப்பகல் ஏத்திநின்று இன்பராய் நினைந்து என்றும் இடையறா அன்பர் ஆமவர்க்கு அன்பர் ஆரூரரே.

– திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 87வது தலம்.

திருவிழா

  • மார்கழி மாதம் – மார்கழி திருவாதிரை – தியாகேசர் பெருமானின் பாதம் காட்சியளிக்கிறார்.
  • பங்குனி மாதம் – பங்குனி உத்திர – மாசி மாத அஸ்தத்தில் கொடி ஏற்றி பங்குனி மாதம் ஆயில்யத்தில் தேரோட்டம் – 10 நாட்கள் திருவிழா– வியாக்ரபாதருக்கு காட்சி தந்த சிறப்பை காட்டும் திருவிழா இது.
  • ஆடிப்பூரம் – 10 நாட்கள் திருவிழா.
  • மாசி மக நாள் சுந்தரருக்கு பூதகணம் நெல் கட்டி செல்லும் விழா, சித்திரை விழா, ஆடிப்பூரம் விழா, தெப்பதிருவிழா, நிறைபணி விழா ஆகியவை இத்தலத்தின் சிறப்பான விழா நாட்கள் ஆகும்.
  • மாதாந்திர பிரதோஷம் இத்தலத்தில் மிகவும் விசேஷமானது. வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கிலப் புத்தாண்டு தினங்களின்போது கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.

பிரார்த்தனை

இத்தலத்தில் உள்ள பக்தர்கள் இராகு கால துர்க்கையை வழிபட்டு பதவி உயர்வு பணிமாற்றம் உள்ளிட்ட பல காரியங்கள் வெற்றியடையப் பெறுகிறார்கள். கடன் தொல்லை, உடற்பிணிகள் உள்ளவர்கள், இங்குள்ள ருண விமோசன ஈஸ்வரனை வழிபடுவது சிறப்பு. இத்தலத்து சண்முகரை வழிபட்டால் பகை விலகும். நீலோத்பலாம்பாளை வழிபட்டு, அர்த்தஜாமத்தில் நைவேத்தியம் செய்து பால் சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கிறது. பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவதும் நிகழ்கிறது. மேலும் பிரதான மூர்த்தியான தியாகேசரை வணங்கினால் திருமண வரம், குழந்தை வரம், கல்வி மேன்மை, வேலை வாய்பபு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவை நிறைவேறுகிறது. மூலவர் வன்மீகி நாதரை வழிபட்டால் எண்ணற்ற வரங்களும், செல்வ செழிப்பும் கிடைக்கும், பாவங்கள் நீங்கும், ஆணவம் மறையும். அம்மன் சன்னதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும்.

நேர்த்திக்கடன்

வீதிவிடங்க விநாயகருக்கு பின் உள்ள பிரம்மநந்தியை மழைவேண்டி பிரார்த்தித்து, இவர் மீது நீர் நிரப்பினால் மழை கொட்டும். பசுக்கள் கறவாது இருந்தால் இவருக்கு அருகு சாற்றி, அதனை பசுவுக்குக் கொடுத்தால் நன்றாகப் பால் கறக்கும்.

கமலாம்பாளை வணங்கினால் ஞானம் கிட்டும். ஊமைகள் கூட வியாழனுக்கு குருவாவார்கள். புரட்டாசி மகர நவமியில் பால் அன்னம் நிவேதிப்பவர்கள் முக்தியடைவர்.

ஜூரம் நீங்க, ஆயுள் அதிகரிக்க இங்குள்ள ஜூர தேவரை மிளகுரசம் படைத்து வழிபடுகிறார்கள். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். நினைத்த காரியம் நிறைவேற தியாகராஜருக்கு விஷ்ணு பகவான் செய்த “முகுந்தார்ச்சனை” செய்யலாம். முசுகுந்த சக்கரவர்த்தி தியாகராஜருக்கு செய்த “முசுகுந்தார்ச்சனை” செய்யலாம்.

Also, read



4 thoughts on "திருவாரூர் தியாகராஜர் கோவில்"

  1. இந்தியாவின் மிகபெரிய கோயில் எது தெரியுமா?* ⁉️
    _தெரிந்து கொள்வோம்‼️_
    33 ஏக்கர் (14 லட்சம் சதுரடி) நிலப்பரப்பில்
    திருவாரூரில் அமைந்துள்ள,
    தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின்
    மிகப் பெரிய கோயிலாகும்!
    🏵️ 9 ராஜ கோபுரங்கள்,
    🏵️ 80 விமானங்கள்,
    🏵️ 12 பெரிய மதில்கள்,
    🏵 13 மிகப்பெரிய மண்டபங்கள்,
    🏵️ 15 தீர்த்தக்கிணறுகள்,
    🏵️ 3 நந்தவனங்கள்,
    🏵️3 பெரிய பிரகாரங்கள்,
    🏵️ 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்),
    🏵️ 100க்கும் மேற்பட்ட சன்னதிகள்,
    🏵️ 86 விநாயகர் சிலைகள்,
    🏵️ 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விளங்குகிறது.
    இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
    சோழர்கள் கட்டிய கோவில் இது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலை சிறப்பாக நிர்வகித்துள்ளனர்.
    *திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும்.*
    தெற்கு வடக்காக 656 அடி அகலமும்,
    கிழக்கு மேற்காக 846 அடி நீளமும்,
    சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை
    நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.❗
    நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது.
    ஸ்வாமியின் நடனம் அஜபா நடனம்.
    ஸ்வாமி திருமேனி தரிசனம் கிடையாது. மார்கழி திருவாதிரை ஒரு பாதமும், பங்குனி உத்திரம் மற்றொறு பாதமும் தரிசனம் கிடைக்கும்.🙏
    திருமேனியை யாரும் பார்த்தது கிடையாது. பார்த்தால் கண் குருடாகிவிடும் என்பதால் யாருக்கும் தரிசனமும் கிடையாது❗
    அர்ச்சகர்களும் பார்த்தது கிடையாது.
    கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
    திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.
    *கோயில் ஐந்து வேலி,*
    *குளம் ஐந்து வேலி,*
    *செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி*
    என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்).
    கோவிலின் மொத்த பரப்பளவு 33 ஏக்கர் ஆகும். அதாவது பதினாலு லட்சத்து முப்பத்து ஏழாயிரத்து நானுற்று என்பது
    (1437480 ) சதுர அடியாகும்
    இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டுமானால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தான் முடியும்.🙏🌹
    *சிவாயநம திருச்சிற்றம்பலம்.* 🙏

  2. நான் திருஆருரில் பிறந்து வளர்ந்து வாழ்கிறேன் என்பது எனக்கு பெருமையாக இருக்கின்றது..ஆருரா தியாகராசா

  3. திருவாரூர் தியாகேசர் ஆலயத்தின் அறபுதமான விஷயங்களை அறிந்து அந்த ஆலயத்திற்கு கூடிய விரைவில் சென்று இறைவனின் அருளைப் பெற வேண்டும் என்ற வேட்கை ஏற்படுகிறது. இதுவரை அறிந்திராத அற்புதமான விஷயத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்