×
Saturday 28th of December 2024

தல விருட்சம் – தல மரங்களின் சிறப்புகள்


உள்ளடக்கம்

List of Sthala Virutcham (Sacred Trees) in Tamil

தல விருட்சம் சிறப்புகள்

அகில் மரம் – Agil Maram

திருக்காறாயில் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது அகில் மரமாகும். இது அகருமரம் என்றும் குறிக்கப்படுகின்றது. சிறகுக் கூட்டிலைகளையும், சமமற்ற சிற்றிலைகளையும் உடையது; தமிழக மலைக்காடுகளில் தானே வளர்கின்றது. இதன் கட்டை மணமுடையது; சந்தனம் போல் மணப்பொருளாய் பயன்பாட்டில் உள்ளது. இதன் தூளை தணலில் இட்டால் எழும்புகையானது மிகவும் நறுமணம் கொண்டதாக இருக்கும்.

கட்டை மருத்துவப் பயனுடையது. பித்தநீர் பெருக்குதல், வீக்கம் கரைத்தல், உடல் வெப்பம் மிகுத்தல் ஆகிய மருத்துவக் குணங்களைக் கொண்டது.

அத்தி மரம் – Athi Maram

திருவொற்றியூர், திருக்கானாட்டுமுள்ளூர் முதலிய திருக்கோவில்களில் இரண்டாவது தலமரமாக விளங்குவது அத்தியாகும். சற்றுநீண்ட இலைகளையும், பால் தன்மையதனாகிய சாற்றினையும் உடைய பெருமரமாகும். பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது. அடிமரத்திலேயே கொத்து கொத்தாக காய்க்கும் இயல்புடையது. இம்மரம் தமிழகமெங்கும் காடுகளிலும், தோட்டங்களிலும் தானே வளர்கின்றது. இதன் இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை முதலியன மருத்துவப் பயனுடையது.

பிஞ்சு, காய், பட்டை ஆகியவை குருதி, சீழ்க்கசிவையடக்கும். பழம் மலமிளக்கி, குருதிப் பெருக்கும். பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படுகிறது.

அரச மரம் – Arasamaram

இம்மரம் திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதிநியமம், ஆவூர்ப்பசுபதீச்சுரம், திருஅரசிலி, திருவியலூர், திருவெண்காடு, திருச்சுழியல் முதலிய சிவத்தலங்களில் தலமரமாக விளங்குகிறது. தமிழகமெங்கும் காணப்படும் கூரிய இலைகளையுடைய பெருமரம் (இது திருவாவடுதுறை தலத்தில் படர்ந்து காணப்படுவதால், படர் அரசு எனப்படுகிறது). இம்மரத்தைத் திருமரம் என்றும் கூறுவதுண்டு. ஏரி, குளக்கரைகளில் வேம்புடன் இணைத்து வளர்க்கப்பெறுவதுண்டு; இவ்விணை மரங்களை வலம் வருவதால் மகப்பேறு வாய்க்கும் என்று மக்களால் நம்பப்படுகிறது. இந்நம்பிக்கை அரச விதையால் ஆண்மலடு நீங்கும் என்பதையும், வேப்பிலையால் பெண்மலடு நீங்கும் என்பதையும் குறிப்பால் உணர்த்தியதேயாம். இம்மரத்தில் துளிர், பட்டை, வேர், விதை ஆகிய பாகங்கள் மருத்துவக் குணமுடையது.

கொழுந்து வெப்பு அகற்றி தாகந்தணிக்கவும், விதை காமம் பெருக்கவும், வேர், பட்டை ஆகியவை வீக்கம் குறைக்கவும் மருந்தாகப் பயன்படுகிறது.

அலரிச் செடி – Alari Chedi

திருக்கரவீரம், திருக்கள்ளில் முதலிய திருக்கோவில்களில் தலமரமாக அலரி உள்ளது. கரவீரம் என்பது அலரியின் மற்றொரு பெயராம். இது நீண்ட கூரிய இலைகளை உடைய சிறுசெடியாகும். இதில் வெள்ளை, சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் ஒற்றையடுக்கு, பலஅடுக்கு இதழ்களையுடைய இனங்கள் உள்ளன. எல்லாப் பருவங்களிலும் பூக்கும் தன்மை கொண்டது. பாடல் பெற்றத் தலமான திருநெடுங்களம் என்னும் தலத்தில் உள்ள ஒரே அலரிச் செடியில் மூன்றுநிறப் பூக்கள் காணப்படுகின்றன.

பூ, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவக் குணமுடையவை; எனினும் இதை நச்சு மூலிகைகளில் ஒன்றாகக் கருதப்படுவதால் அகமருந்தாக பயன்படுத்துவதில்லை. இதில் மஞ்சள் அலரி கடும் நஞ்சாகக் கருதப்படுகிறது.

ஆமணக்குச் செடி – Aamanaku Chedi

கும்பகோணத்திற்கு அருகாமையிலுள்ள கொட்டையூர் என்னும் தலத்தில் தலமரவாக விளங்குவது ஆமணக்கு (கொட்டைச்செடி) ஆகும். கை வடிவ இலைகளை மாற்றடுக்காகக் கொண்ட வெண்பூச்சுடைய செடியாகும். உள்ளீடற்ற கட்டைகளையும், முள்ளுள்ள மூன்று விதைகளைக் கொண்ட வெடிக்கக் கூடிய காய்களையும் உடையது. இதன் விதை கொட்டை அல்லது கொட்டைமுத்து எனப்படுகிறது. இக்கொட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யே விளக்கெண்ணெய் எனப்படுகிறது. தமிழகமெங்கும் புன்செய்ப் பயிராக விளைவிக்கப்படுகிறது. இலை, வேர், எண்ணெய் ஆகியவை மருத்துவப் பயனுடையதாகும்.

இலை வீக்கம், கட்டி ஆகியவற்றைக் கரைக்கக் கூடியது. ஆமணக்கு நெய் மலமிளக்கும். தாது வெப்பகற்றும். வேர் வாதத்தை குணப்படுத்தும்.

ஆல மரம் – Alamaram

திருஅன்பிலாலந்துறை, திருப்பழுவூர், திருவாலம்பொழில் திருமாந்துறை, திருக்கச்சூர், திருப்பூந்துருத்தி, திருவாலங்காடு, திருநெல்வாயில் அரத்துறை, திருப்புள்ளமங்கை திருக்கோணமலை, திருக்கூடலையாற்றூர், திருவெண்காடு, கோவில் (சிதம்பரம்), திருக்குற்றாலம், திருக்காளத்தி, திருத்தலையாலங்காடு முதலிய சிவத்தலங்களில் ஆலமரம் தலமரமாக விளங்குகின்றது. இவற்றுள் திருக்கூடலையாற்றூர் தலத்தில் இம்மரம் தற்போது இல்லை. அகன்ற இலைகளையுடைய பெருமரம். கிளைகளிலிருந்து விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றி மரத்தைத் தாங்கி விசாலமாக்கும் தன்மை கொண்டது. நிழலுக்காக தமிழகமெங்கும் வளர்க்கப்படும் மரமாகும். இதன் சாறு பால் தன்மை கொண்டது. இம்மரத்தின் இலை, மொட்டு, பழுப்பு, பழம், விதை, பால், பட்டை விழுது ஆகியன மருத்துவப் பயனுடையதாகும்.

பொதுவாக நரம்புகளையும் சதைகளையும் சுருக்கிக் குருதி, சீழ் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும், உடல் பலம் பெருக்கும், காமம் பெருக்குதல் ஆகிய மருத்துவக் குணமுடையது.

இலந்தை மரம் – Elantha Maram

திருக்கீழ்வேளூர், திருநணா, திருஓமாம்புலியூர், திருக்குரங்கணில்முட்டம், திருவெண்பாக்கம் (பூண்டி) முதலிய திருக்கோவில்களில் தலமரமாக இலந்தை விளங்குகிறது. வளந்த கூர்மையான முள்ளுள்ள மரம். இலைகள் முட்டை வடிவமானவை; புளிப்புச் சுவையுடைய சிறிய கனிகளை உடையது. தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் தானாகவே வளரும் இயல்பினது. கொழுந்து, இலை, பட்டை, வேர்ப்பட்டை, பழம், கட்டை முதலியன மருத்துவப் பயனுடையது.

இலுப்பை மரம் – Iluppai Maram

இலை பால் பெருக்கும், பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும்; உடலுக்குப் பலம் கொடுக்கும் பட்டை, விதை ஆகியவை உடல்தேற்றி உரமாக்கும்; பசிமிகுக்கும், நெய் புண்ணாற்றும். பிண்ணாக்கு தொற்றுப்புழு, குடற்புழு ஆகியவற்றைக் கொல்லும், வாந்தி உண்டாக்கும்.

ஊமத்தஞ் செடி – Oomatham Chedi

திருமணஞ்சேரி திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது ஊமத்தை ஆகும். இஃது விளிம்பில் பற்களுள்ள அகன்ற இலைகளையும், வாய் அகன்று நீண்ட குழலுடைய புனல் வடிவ மலர்களையும், முள் நிறைந்த காய்களையும் உடைய குறுஞ்செடி வகையது. மலர்கள் வெள்ளை, மஞ்சள், கருஞ்சிவப்பு முதலிய நிறங்களில் காணப்படுகின்றன. இவை முறையே வெள்ளை ஊமத்தை, பொன்னூமத்தை, கருஊமத்தை என வழங்கப்படுகிறது. தமிழகமெங்கும் சாலை ஓரங்களிலும் தரிசு நிலங்களிலும் தானே வளர்கிறது. அரிதாகக் காணப்பெறும் கருஊமத்தையே மருத்துவக் குணம் மிக்கதாகக் கருதப்படுகிறது. செடியின் அனைத்துப் பகுதிகளும் மருத்துவக் குணம் கொண்டவை.

இசிவு வேதனை அகற்றுதல், வாந்தி, மூர்ச்சையுண்டாக்குதல் ஆகிய மருத்துவக் குணங்களையுடையது.

எருக்கஞ்செடி – Erukkanchedi

எலுமிச்சை மரம் – திருமாகறல், திரு அன்னியூர் (பொன்னூர்) திருக்கோவில்களில் தலமரம் எலுமிச்சை ஆகும். இஃது முள்ளுள்ள சிறுமர வகையைச் சார்ந்தது. தமிழகமெங்கும் பயிரிடப்படுகின்றது. இலை, பழம், ஆகியன மருத்துவப் பயனுடையவை. உடல் சூடு தணித்தல், பசித்தூண்டுதல் ஆகிய மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.

கடம்ப மரம் – Kadamba Maram

திருக்கடம்பந்துறை (குழித்தலை – கடம்பர்கோவில்), திருக்கடம்பூர், திருஆலவாய் (கடம்பவனம் – மதுரை) ஆகிய திருக்கோவில்கள் கடம்ப மரத்தை தலமரமாகக் கொண்டவை. இத்திருக்கோவில்கள் சார்ந்த ஊரும் மரத்தின் பெயரால் அமைந்து உள்ளன. பட்டை உடல் தேற்றும், வெப்பகற்றும், பழம் குளிர்ச்சி உண்டாக்கும்.

கடுக்காய் மரம் – Kadukkai Maram

திருக்குறுக்கைவீரட்டம் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது கடுக்காய் மரமாகும். இஃது தமிழக காடுகளில் தானே வளரும் மர வகையைச் சார்ந்தது. சித்த மருத்துவத்தில் மிகச் சிறந்த மருந்துப் பொருள்களில் இதுவும் ஒன்று.

கருங்காலி மரம் – Karungali Maram

திருஅம்பர் மாகாளம் திருக்கோவிலில் தலமரமாக விளங்குவது கருங்காலியாகும். இது பச்சை, மஞ்சள் நிறமலர்களையும், செறிந்த சாம்பல் நிறப் பட்டையையும், செந்நிற கடினமான கட்டையையும் உடைய இலையுதிர் மரமாகும். இதன் பட்டை, கட்டை, பிசின், வேர் முதலியன மருத்துவப் பயனுடையன.

குருதி சீழ்க்கசிவு அடக்கல், நோய்தரும் நுண்ணுயிரிகளைக் கொல்லுதல், உடல் பலம் மிகுத்தல் முதலிய மருத்துவக் குணங்களைக் கொண்டது.

கல்லத்தி மரம் – Kallathi Maram

திருப்பரங்குன்றம் தலத்தின் தலமரம் கல்லத்தி மரம் ஆகும். இது காட்டத்தி என்றும் குறிக்கப்பெறுகிறது. இஃது கல்லால் இனத்தைச் சார்ந்த மரவகையாகும். சுந்தரமூர்த்தி நாயனாரும் திருப்பரங்குன்றத் திருப்பதிகத்தில் “கல்லால் கீழற்கீழ் ஒரு நாட்கண்டது” என்று குறிப்பிடுகின்றார். சிறிய ஆலிலை வடிவில் கரும்பச்சையான இலைகளையும், இலைக்கோணங்களில் மெல்லிய சுணையுடைய காய்களையும் கொண்ட வெண்பச்சையான மரம். இதன் பட்டை, பால், பழம் முதலியன மருத்துவப் பயனுடையன.

காட்டாத்தி மரம் – Kattathi Maram

திருஆப்பாடி, திருச்சிற்றேமம், திருச்செங்காட்டங்குடி முதலிய திருக்கோவில்களில் காட்டாத்தி தலமரமாக உள்ளது. இது தமிழகக் காடுகளில் தானே வளரும் ஒரு வகை மரம். இரண்டாகப் பிரிந்த இலைகளையும், மஞ்சள் நிறப்பூக்களையும், கருநிறக் கட்டைகளையும் உடைய மரமாகும். இதன் இலை, மொட்டு, பூ, பிஞ்சு, காய் ஆகிய அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயனுடையவை.

சமூலம் சீதக்கழிச்சல் போக்கியாகவும், நுண்புழுக்கொல்லியாகவும் செயற்படும். பூ இரத்தம், சீழ்க் கசிவைத் தடுத்து தாது பலம் மிகுக்கும். காய் சிறுநீர்ப் பெருக்கும். விதை உடல்பலம் மிகுக்கும்.

காரைச் செடி – Karai Chedi

காஞ்சிபுரத்திற்கு அருகாமையிலுள்ளது கச்சிநெறிக்காரைக்காடு; இத்தலத்தின் தலமரம் காரை ஆகும். இஃது இலையும் முள்ளும் மாற்றடுக்கில் அமைந்த குத்துச் செடி. பச்சை நிறக் காய்களையும், மஞ்சள் நிற பழங்களையும் கொண்டுள்ளது. பழங்கள் உண்ணக் கூடியவை. இலை, பழம் முதலியன மருத்துவப் பயனுடையன.

கிளுவை மரம் – Kiluvai Maram

திருக்கடைமுடி திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது கிளுவை மரமாகும். இஃது வேலிக்காக வளர்க்கப்படும் சிறுமர வகையாகும். முக்கூட்டு இலைகளையும், மென்மையான கட்டைகளையும் உடைய இலையுதிர் மரம். இதில் சிறுகிளுவை, பெருங்கிளுவை என இரு வகைகள் உள்ளன. இவை முறையே செங்கிளுவை, வெண்கிளுவை எனவும் குறிக்கப்படுகிறது. வெண்கிளுவையின் இலை, பட்டை முதலியன மருத்துவக் குணமுடையது.

இஃது சதை, நரம்புகளைச் சுருங்கச் செய்து குருதி, சீழ்க்கசிவுகளை அடக்கும் தன்மை கொண்டது.

குருந்த மரம் – Kuruntha Maram

திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில், திருதண்டலை நீள்நெறி, திருப்புனவாயில் தலமரம் குருந்த மரமாகும். கொத்தான வெண்ணிற மலர்களையும் உருண்டை வடிவக் காய்களையும் உடைய முள்ளுள்ள எலுமிச்சை இன மரம். காட்டு எலுமிச்சை என்றும் காட்டு நாரங்கம் என்றும் குறிப்பிடப்பெறும். இதில் சிறுகுருந்து, பெருங்குருந்து எனும் வகைகள் தமிழகக் காடுகளில் காணப்படுகின்றன. இதன் இலை, பழம் முதலியன மருத்துவப் பயனுடையன.

உடல் வெப்பு அகற்றுதல், பசியைத் தூண்டி வயிற்று வாயுவை அகற்றுதல் ஆகிய மருத்துவக் குணங்களைக் கொண்டது.

கொன்றை மரம் – Kondrai Maram

நீள் சதுரமான கூட்டிலைகளையும் சரஞ்சரமாய்த் தொங்கும் பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூங்கொத்துகளையும் நீண்ட உருளை வடிவக் காய்களையும் உடைய இலையுதிர் மரமாகும். தமிழகமெங்கும் இயற்கையாக வளர்கிறது.

பட்டை, பூ, வேர், காய் ஆகியவை மருத்துவப் பயனுடையதாக விளங்குகிறது. இம்மரத்தின் மருத்துவக் குணங்கள், நோய் நீக்கி உடல் தேற்றும்; காய்ச்சல் தணிக்கும்; மல மிளக்கும், வாந்தியுண்டாக்கும்; உடல் தாதுக்களை அழுகாமல் தடுக்கும். பூ வயிற்று வாயு அகற்றும்; நுண்புழுக்களைக் கொல்லும்.

கோங்கு மரம் – Kongu Maram

திருநன்னிலத்துப் பெருங்கோவில், திருமங்கலக்குடி, திருக்கோடி, திருக்கைச்சினம் முதலிய தலங்களில் கோங்கு தலமரமாக உள்ளது. தற்பொழுது எந்தத் தலத்திலும் வளர்ப்பதாகத் தெரியவில்லை. இது கைபோல் பிரிந்த இலைகளையும், இலையுதிர்ந்த காலத்துத் தோன்றும் மிகவும் செந்நிற மலர்களையும், வெண்ணிறப் பஞ்சிற் பொதிந்த வழவழப்பான உருண்டை விதைகளையும் உடைய நீண்டு ஓங்கி வளரும் மரமாகும். மரம் முழுவதும் கூம்புவடிவ முட்களைக் கொண்டிருக்கும். தமிழகத்துக் காடுகளிலும், ஆற்றோரங்களிலும் தானே வளரும் தன்மை கொண்டவை. இதன் இலை, பூ, விதை, பட்டை, பிசின், பஞ்சு, வேர் ஆகியன மருத்துவக் குணம் கொண்டவை.

இலை குளிர்ச்சியுண்டாக்கி அக உறுப்பு அழற்சியைத் திணிக்கும்; பூ சிறுநீர் பெருக்கும், மலசிக்கலகற்றும்; விதை குருதிப் பெருக்கு அடக்கும், காமம் பெருக்கும்; பட்டை சிறுநீர் மிகுக்கும், உடலுரமாக்கும்; பிசின் குருதிப் பெருக்கை கட்டுப்படுத்தும்; வேர் உடல் வெப்பத்தையும் பலத்தையும் மிகுக்கும்.

கோரைப் புல் – Korai Pul

திருச்சாய்க்காடு என்னும் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது கோரையாகும். இது ஒரு புல் வகையெனினும் தலமரமாகவே குறிக்கப்படுகிறது. தரைமட்டத்திலிருந்தே தோன்றியுள்ள தட்டையான இலையையுடைய சிறுபுல்லினம். முட்டை வடிவான நறுமணமுடைய சிறுகிழங்குகளைப் பெற்றிருக்கும். இக்கிழங்குகள் முத்தக்காசு எனக் குறிக்கப்பெறுகின்றன. இக்கிழங்குகளே மருத்துவப் பயனுடையவை.

சண்பக மரம் – Shenbaga Maram

திருத்தென்குடித்திட்டை, திருஇன்னம்பர், திருச்சிவபுரம், திருநாகேசுவரம், திருப்பெண்ணாகடம் (திருத்தூங்கானைமாடம்), திருவைகல்மாடக்கோவில், திருஇராமனதீச்சரம், திருநன்னிலம் (நன்னிலத்துப் பெருங்கோவில்) முதலிய திருத்தலங்களில் சண்பகம் தல விருட்சமாக உள்ளது. இவற்றுள் திருத்தென் குடித்திட்டை, திருச்சிவபுரம், திருவைகல் மாடக்கோவில், திருஇராமனதீச்சரம் தலங்களில் இம்மரம் தற்போதில்லை. மேற்குத் தொடர்ச்சிமலைக் காடுகளில் தானே வளருகின்றது. மையப்பகுதி மேல்நோக்கிக் குவிந்த இலைகளையும் நறுமணமுள்ள மஞ்சள் அல்லது வெண்மை நிறமுள்ள மலர்களையும் உடைய நெடிதுயர்ந்து வளரும் என்றுமே பசுமையாகக் காணப்படும் மரமாகும். மலருக்காக வீடுகளிலும், கோவில் நந்தவனங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதன் இலை, பூ, விதை, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையதாகும்.

நோய் நீக்கி உடல் தேற்றுதல், முறை நோய் தீர்த்தல், உள்ளுறுப்பு அழற்சியைத் தணித்தல், வீக்கம் குறைத்தல், பசி, மாதவிடாய் ஆகியவற்றைத் தூண்டுதல் ஆகிய மருத்துவக் குணமுடையது.

சதுரக்கள்ளி – Sathura Kalli

திருப்புனவாயில், என்னுந் திருத்தலத்தில் தலமரமாக விளங்கும் நான்கனுள் சதுரக்கள்ளியும் ஒன்றாகும். திருக்கள்ளில் தலத்திலும் உள்ளது. வேலிக்காக வளர்க்கப்படும் செடியினம். முப்பட்டையான தண்டுகளை அடுக்கடுக்காகக் கொண்டிருக்கும். மருத்துவக் குணத்தில் சிறந்த நாற்பட்டையான தண்டுடைய இனமும் அரிதாகக் காணப்படுகிறது. இதன் சாறு பால் வடிவானது. உடலில் பட்டால் எரிச்சலூட்டும் தன்மை கொண்டது. இதன் தண்டு, பால், வேர் முதலியன மருத்துவப் பயனுடையதாக விளங்குகிறது. இஃது நச்சு மூலிகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சந்தன மரம் – Santhana Maram

திருவாஞ்சியம், திருவழுந்தூர் ஆகிய தலங்களில் தலமரமாக விளங்குவது சந்தன மரமாகும். தமிழக மலைக்காடுகளில் தானே வளரும் மரம். உலர்ந்த மரம் மணம்மிக்கது. வெள்ளை, மஞ்சள், சிவப்பு என மூன்று வகைகள் உள்ளன. இவற்றுள் செஞ்சந்தனமே மருத்துவக் குணமிக்கதாகும். கட்டையும் அதிலிருந்து பிரித்து எடுக்கப்படும் எண்ணெய்யும் மருத்துவப் பயனுடையவை.

சிறுநீர், வியர்வை ஆகியவற்றைப் பெருக்கும். உடலைக் குளிர்வித்துத் தேற்றும். நாடிநடையை மிகுத்து உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். சதை நரம்புகளைச் சுருங்கச் செய்து இரத்தக் கசிவு, சீழ் ஆகியவற்றைத் தடுக்கும்.

சிறுபூளை – Sirupoolai

திரு இரும்பூளை (ஆலங்குடி) என்னுந் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது சிறுபூளை ஆகும். இது சிறு நீள்வட்ட இலைகளையும், இலைக்காம்புகளில் வெண்மையான பூக்கதிர்களையும் உடைய நேராக வளரும் மிகச் சிறுசெடி வகையாகும். இஃது பொங்கல் பூ, சிறுபீளை என்றும் வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது ஆவாரம் பூவுடன் சிறுபூளை பூவையும் இல்லந்தோறும் பயன்படுத்துவது மரபாக உள்ளது. செடிமுழுவதும் மருத்துவப் பயனுடையது. தமிழகமெங்கும் தரிசு நிலங்களில் தானே வளர்ந்து காணப்படுகின்றது.

தருப்பைப் புல் – Dharbai Pull

திருநள்ளாறு தலத்தின் தலமரமாக விளங்குவது தருப்பைப் புல் ஆகும். இஃது நீர்வளமிக்க இடங்களான வாய்க்கால் வரப்புகள், ஆற்றங்கரை ஓரங்களில் அடர்ந்து உயர்ந்து வளரும் ஒரு வகை புல்லினமாகும். பூசை முதலிய காரியங்களுக்குப் பயன்படுத்துவதால் அருச்சனைப் புல் என்றும் குறிக்கப்படுகிறது. செடி முழுமையும் மருத்துவக் குணமுடையது.

தாழை மரம் – Thazhai Maram

திருச்சாய்க்காடு, பல்லவனம், திருமயேந்திரப்பள்ளி சங்கவனேச்வரம் முதலிய திருக்கோவில்களில் தலமரமாக விளங்குவது தாழையாகும். இது கைதை, கேதை, கண்டல் என்றும் குறிக்கபெறும். விளிம்பில் முள்ளுள்ள நீண்ட தோல் போன்ற இலைகளையுடைய சிறுமரங்கள்; விழுதுகளைப் போன்ற புறவேர்கள் உள்ளன. மணம் மிக்க மலர்களைக் கொண்டது. தமிழகமெங்கும் கடற் கரைகளிலும் காணப்பெறும். செந்தாழை, வெண்தாழை என்ற இருவகைகள் காணப்படுகின்றன. வெண்தாழையே எளிதிற் கிடைக்கக் கூடியதாகவுள்ளது. இலை, பூ, சாறு, விழுது ஆகியவை மருத்துவக் குணமுடையது.

வியர்வை பெருக்குதல், வலி நீக்குதல், நாடிநடையை மிகுத்து உடல்வெப்பந் தருதல் ஆகிய குணங்களை உடையது.

தில்லை மரம் – Thillai Maram

திருத்தில்லை (கோவில், சிதம்பரம்) தலமரமாக விளங்குவது தில்லை மரமாகும். தில்லை மரங்கள் நிறைந்ததாலேயே தில்லைவனம் என்ற பெயர் பெற்று (ஊரின் பெயர் தில்லை; கோவிலின் பெயர் சிதம்பரம். தற்போது கோவிலின் பெயராலேயே ஊர் பெயர் விளங்குகின்றது.) தில்லையானது. இது கூர்நுனிப்பற்களுள்ள இலைகளை உடைய பசுமையான மரம். இம்மரத்தின் பால் உடலில் பட்டால் உடல் புண்ணாகும். தமிழகக் கடற்கறையோரக் காடுகளில் இது தானே வளர்கின்றது. இலை, விதை, பால் முதலியன மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.

துளசிச் செடி – Tulasi Chedi

திருவிற்குடி வீரட்டம் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது துளசியாகும். துளவம், திருத்துழாய் என்ற பெயர்களாலும் இது குறிக்கப்பெறுகிறது. இதில் நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, முள்துளசி முதலிய பல இனங்கள் உள்ளன. கற்பூர மணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்துள்ள பூங்கொத்துக்களையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்வது துளசி. இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

இலை கோழையகற்றும், நோய் நீக்கி உடல் தேற்றும், வியர்வை பெருக்கும், உடலுக்கும், உடலுக்கு வெப்பந்தந்து நாடிநடையை மிகுக்கும், முறைநோய் நீக்கும்.

தென்னை மரம் – Thennai Maram

திருத்தெங்கூர், வடகுரங்காடுதுறை முதலிய தலங்களில் தென்னை தலமரமாக விளங்குகின்றது. இது நீண்ட ஓலைத் தொகுதியை இலையாகவும், பாளையாக பூங்கொத்தினையும் கிளைகளற்று நெடிதுயர்ந்து வளரும் புல்லின மரமாகும். தமிழகமெங்கும் வளர்க்கப்படுகிறது. பூ, இளநீர், காய், மட்டை ஆகியன மருத்துவக் குணங்கொண்டவை.

பூ சிறுநீர் பெருக்கும், வெப்பகற்றும், உடல் உரமாக்கும், பசி மிகுக்கும். இளநீர் தாகம் தணிக்கும், குளிர்ச்சியுண்டாக்கும், உள்ளழல் அகற்றும். தேங்காய்ப் பால் மலமிளக்கும், தாது வெப்பகற்றும், உடல் பலம் பெருக்கும்.

தேற்றா மரம் – Thetran Maram

திருக்குவளை என்னும் திருக்கோளிலி தலத்தின் தலமரமாக விளங்குவது தேற்றா மரமாகும். இஃது பளபளப்பான சற்று நீண்ட கரும்பச்சை இலைகளையும், உருண்டையான விதையினையுமுடைய குறுமரம். தேற்றான் கொட்டையை கலங்கிய நீரில் நிறிதே உரைப்பதால் நீர் தெளிந்து விடும். இதன் பழம், விதை ஆகியன மருத்துவப் பயனுடையன. இஃது தமிழக மலைக்காடுகளிலும், சமவெளியில் ஒவ்வோர் இடத்திலும் காணப்படுகின்றது.

பழம் வாந்தி உண்டாக்கும், சீதப்பேதியைக் கட்டுப்படுத்தும், விதை உடல் தேற்றும், உடல் பலமிகுக்கும், பசித்தூண்டும், சளியகற்றும், அக உறுப்புகள் அழற்சியைத் தணிக்கும்.

நந்தியாவட்டம் செடி – Nandhiyavattam Chedi

திருவெண்ணியூர் திருக்கோவிலில் தலமரமாக விளங்குவது நந்தியாவட்டமாகும். இது கரும்பச்சை இலைகளையும், வெண்ணிற மலர்களையும் உடைய பாலுள்ள செடியினம். இதில் ஒற்றையடுக்கு, பலஅடுக்கு இதழ்களுடைய இனமும் காணப்படுகின்றன. பூசனைக்குரிய சிறந்த மலராதலால் இஃது எல்லாத் திருக்கோவில் நந்தவனங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகின்றன. பூ. வேர் முதலியன மருத்துவக் குணமுடையது.

வயிற்றுப் புழுக்கொல்லியாகவும் தோல்நோய் தீர்க்கும் மருந்தாகவும் செயற்படுகிறது.

நாரத்தை மரம் – Narthai Maram

திருப்பேரெயில் (ஓகைப்பேரையூர்) என்ற திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது நரத்தை மரமாகும். இது எலுமிச்சை இனத்தைச் சார்ந்த முள்ளுள்ள பெருமரமாகும். புளிப்புச் சுவையுடைய பழங்களையுடையது. பிஞ்சு, காய், பழம் முதலியன மருத்துவக் குணங்கொண்டவை. தமிழகமெங்கும் அரிதாகப் பயிரிடப்படுகிறது.

நாவல் மரம் – Naval Maram

திருவானைக்கா, திருநாவலூர் ஆகிய திருக்கோவில்களில் தலமரமாக விளங்குவது நாவல் மரமாகும். பழங்காலத்தில் மக்கள் மரத்தின் அடியிலேயே தெய்வங்களை வைத்து வணங்கினர் எனும் கருத்துக்கு அரண் செய்வதாக திருவானைக்கவில் கருவறைக்கு அருகில் மிகவும் பழமையான வெண்நாவல் மரம் அமைந்திருப்பதை இன்றும் நாம் காணலாம். இதையே, ‘வெண்ணாவல் அமர்ந்துறை வேதியனை’ என்றும், ‘வெண்ணாவல் விரும்பும்’ என்றும்,‘வெண்ணாவலின் மேவியயெம் அழகர்’ என்றும் திருஞானசம்பந்தர் சிறப்பித்துள்ளார். தமிழகமெங்கும் ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும் தானே வளரும் பெருமரம். உண்ணக் கூடிய கருஞ்சிவப்பு நிறக் கனிகளை உடையது. இதில் வெண்நாவல், கருநாவல், நரிநாவல் எனப் பல வகைகள் உள்ளன.

பட்டை சதை, நரம்பு ஆகியவற்றை சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் சிறுநீர் பெருக்கியாகவும் பயன்படுகிறது.

நெல்லி மரம் – Nelli Maram

திருநெல்லிகா, திருநெல்வாயில், திருப்பழையாறை வடதளி, திருவூறல் (தக்கோலம்) முதலிய திருத்தலங்களில் நெல்லி மரமே தலமரமாக விளங்குகின்றது. மிகவும் சிறிய இலைகளையும், இளம்மஞ்சள் நிறக் காய்களையும் உடைய மரம். காய் – இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகளை ஒருங்கே பெற்றுள்ளது. தமிழகமெங்கும் காடுகளிலும், வீட்டுத் தோட்டங்களிலும் வளர்கின்றன. நெல்லிமுள்ளி எனப்படும் உலர்ந்த நெல்லிக்காய் எல்லா காலங்களிலும் மருந்துக் கடைகளில் கிடைக்கும். இஃது ஓர் கற்ப மருந்து. இலை, பூ, பட்டை, வேர், காய் விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

காய் வெப்பகற்றி, சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, குடல் வாயு அகற்றும். வேர் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். நெல்லி வற்றல் குளிர்ச்சியுண்டாக்கி உடல் தாதுக்களைப் பலப்படுத்தும்.

பராய் மரம் – Parai Maram

திருப்பராய்த்துறை திருக்கோவிலின் தலமரமாக விளங்குவது பராய் மரமாகும். இது பிராய், பிறாமரம், குட்டிப்பலா என்றெல்லாம் குறிக்கப்பெறுகிறது. சுரசுரப்பான கரும்பச்சை இலைகளையுடைய வெள்ளை நிற மரம். புதர்க்காடுகளில் காணப்படும். இலை, பால், பட்டை முதலியன மருத்துவப் பயனுடையன.

பலா மரம் – Palamaram

திருக்குற்றாலம் திருக்குறும்பலா, திருநாலூர், திருவாய்மூர், தலையாலங்காடு, கடிக்குளம், திருக்காறாயில், திருவாலங்காடு, திருஇன்னம்பர், திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை), திருப்பூவணம், திருபறியலூர் (பரசலூர்), திருப்பூவனூர் முதலிய பத்துக்கும் மேற்பட்ட சிவத் திருகோவில்களில் தலமரமாக விளங்குகிறது. பளபளப்பான கரும்பச்சை இலையும், உருளை வடிவான புறத்தே முள்ளுள்ள இனிய சுளைகளுடைய பெருங்கனிகளையும், பளிச்சிடும் மஞ்சள் நிறக் கட்டையையும் உடைய பசுமையான பெருமரம். தமிழகமெங்கும் கனிகளுக்காகப் பயிரிடப் பெறுகிறது; காடுகளில் தானேயும் வளர்கிறது. திருக்குற்றாலத்துத் தலமரத்துப் பலாப்பழம் உண்ணப்படுவதில்லை. பலாப்பழம் உடல் நலத்திற்கு ஏற்றதன்று என்பதைக் குறிக்கவே இம்மரபு ஏற்பட்டிருக்கலாம். இலை, பிஞ்சு, காய், பால், வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

பொதுவாக சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும் தன்மை உடையது. பழம் மலமிளக்கும், உள்ளழல் ஆற்றும், உடலை உரமாக்கும்.

பவளமல்லி (பாரிசாதம்) – Pavalamalli / Parijatham

திருக்காழி, திருக்களர், திருக்கோட்டாறு, திருநறையூர்ச்சித்தீச்சரம், சிக்கல், இலம்பையங்கோட்டூர், திருப்பல்லவனீச்சுரம் முதலிய சிவத் தலங்களில் பவளமல்லிகை தலமரமாக விளங்குகிறது. இது பாரிசாதம், பகடாப்பூ, மஞ்சள்பூ என்றும் குறிப்பிடப்படுகிறது. சுரசுரப்பான இலைகளையுடைய சிறுமரம். இதன் மலர்கள் பவள நிறக்காம்பும் வெண்ணிற இதழ்களையும் உடையது. மலருக்காக வீட்டுத் தோட்டங்களிலும் நந்தவனங்களிலும் தமிழகமெங்கும் வளர்க்கப்படுகிறது. இதன் இலை, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவக் குணமுடையது.

இலை வியர்வை, சிறுநீர், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கி மலமிளக்கும்; வேர்ப்பட்டை கோழையகற்றும்; பித்தத்தைச் சமனப்படுத்தும்.

பன்னீர் மரம் – Panneer Maram

திருச்சோற்றுத்துறை, கீழைத்திருக்காட்டுப்பள்ளி முதலிய திருக்கோவில்களில் பன்னீர் தலமரமாக விளங்குகின்றது. இது அகன்ற கொத்தான இலைகளையும், வெண்ணிற நீண்ட மணமுடைய பூக்களையும் உடைய படர்ந்து வளரும் மரமாகும். பூக்களுக்காக தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பூக்கள் மருத்துவக் குணமுடையது. இதை தனித்து மருந்தாகப் பயன்படுத்தும் வழக்கம் இல்லை; பித்தந்தணிக்கும் மருந்துக்களுடன் சேர்க்க நற்குணத்தைத் தருகின்றது.

பனை மரம் – Panai Maram

திருப்பனந்தாள், திருப்புறவார் பனங்காட்டூர், திருப்பனையூர், திருமழபாடி, திருவோத்தூர், திருவன்பார்த்தான் பனங்காட்டூர், திருவலம்புரம், திருப்பாலைத்துறை, திருக்கன்றாப்பூர் முதலிய சிவத் தலங்களில் பனை மரம் தலமரமாக விளங்குகின்றது. இவற்றுள் திருக்கன்றாப்பூர் தலத்தில் இம்மரம் தற்போதில்லை. கைவடிவமான விசிறி போன்ற தனியிலைகளையும் புறவயிரமுடைய நெடிதுயர்ந்து கிளையிலாது வளரும் புல்லின மரமாகும். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் தானே வளர்வது. குருத்து, ஓலை, பாளை, பூ, மது, கள், நுங்கு, பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையதாகும்.

ஓலை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்து குருதி சீழ்க்கசிவைத் தடுக்கும். நுங்கு சிறுசீர்ப் பெருக்கி அகவெப்பத்தைத் தணித்து உடலை உரமாக்கும்; மது சிறுநீர் பெருக்கி குளிர்ச்சி உண்டாக்கும். கள் நாடி நடையை மிகுத்து உடல் வெப்பம் தரும்; நீர்விடாய்த் தணிக்கும்.

பாதிரி மரம் – Pathiri Maram

திருப்பாதிரிப்புலியூர், திருவலிதாயம், திருஅவினாசி, திருவாரூர், ஆரூர் அரநெறி, திருவாரூர் – ஆரூர்ப்பரவையுண்மண்டளி, திருப்புக்கொளியூர் (அவிநாசி), அவளிவணல்லூர் முதலிய சிவத் தலங்களில் பாதிரி தலமரமாக விளங்குகின்றது. இவற்றுள் பாதிரிப்புலியூரில் வெண்பாதிரியும், திருவாரூரில் செம்பாதிரியும் தலமரமாக உள்ளது. இணையில்லாத எதிர் அடுக்கில் அமைந்த சிறகமைப்புக் கூட்டிலைகளையுடைய வறட்சியான காடுகளில் வளரும் மரம். வெண்பாதிரி மலர் சிவப்பு வரிகளுடைய மஞ்சள் நிறமும், செம்பாதிரி மலர் மங்கிய செம்மஞ்சள் நிறமும் உடையது. இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவப் பயன் உடையது.

சிறுநீர் பெருக்குதல், வெப்பகற்றுதல் ஆகிய மருத்துவக் குணங்களையுடையது.

பாலை மரம் – Palai Maram

திருப்பாலைத்துறை என்னும் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது பாலை மரமாகும். தலத்தின் பெயர் தலமரத்தின் பெயரால் அமைந்ததேயாகும். (தற்போது பாலை மரம் இத்தலத்தில் இல்லை.) இது வெட்பாலை, நிலப்பாலை என்றம் குறிக்கப்பெறுகிறது. எதிரடுக்கில் அமைந்த இலைகளையும், உச்சியில் வெண்ணிற மலர்க்கொத்தினையும், பால் தன்மைக்கொண்ட சாற்றினையும், உடைய இலையுதிர் மரம். காய்கள் இரட்டையாய் முனைகள் இணைந்து காணப்பெறும். பஞ்சு இணைந்த விதைகளையுடையது. விதை, பட்டை முதலியன மருத்துவப் பயனுடையவை.

பிரம்புக் கொடி – Pirambu Kodi

திருக்கோடிகா என்னும் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது பிரம்பு ஆகும். இஃது அடர்ந்து வளரும் கொடி இனத்தைச் சார்ந்தது. தமிழகக் கடற்கரைகளிலும், மலைக்காடுகளிலும் வளர்கின்றது. இதன் கிழங்கு மருத்துவக் குணமுடையதாகும்.

புங்கமரம் – Punga Maram

திருப்புன்கூர் திருக்கோவிலின் தலமரமாக விளங்குவது புங்கமரமாகும். பளபளப்பான கரும்பச்சை இலைகளையும், இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்த நெற்பொரி போன்ற பூக்களையும் நீள்சதுரக் காய்களையும் உடைய மரம். இம்மரம் கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் தானே வளரும் தன்மை கொண்டது. நிழலுக்காகவும் இம்மரம் சாலையோரங்களில் வளர்க்கப்படுகிறது. இலை, பூ, காய், விதை, வேர், பால், நெய் ஆகியவை மருத்துவக் குணமுடையவை. இது தோல் நோய் போக்கும் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

புரசு மரம் – Purasu Maram

திருத்தலைச்சங்காடு, திருக்கஞ்சனூர், திருநாலூர் மயானம் ஆகிய சிவத் தலங்களில் புரசு (பலாசம்) தலமரமாக உள்ளது. இது பலாசம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இது பகட்டான செம்மஞ்சள் நிறப் பூங்கொத்தினையும், தட்டையான விதைகளையும் உடைய இலையுதிர் காடுகளில் தானே வளரும் மரமாகும். அழகுக்காக வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுவதுண்டு. இதன் இலை, பூ, விதை, பட்டை, பிசின் ஆகியவை மருத்துவக் குணமுடையதாக விளங்குகிறது.

இலை உடலுரமாக்கி காமம் பெருக்கும், பூ சிறுநீர், காமம் பெருக்கும், விதை மலப் புழுக்களகற்றி மலமிளக்கும், பிசின் குருதி, சீழ்க் கசிவடக்கும்.

புளிய மரம் – Puliya Maram

திருஈங்கோய்மலை, திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது புளியாகும். சிறிய கூட்டிலைகளையும், மஞ்சள் வரியுடைய இளஞ்சிவப்பு நிறமலர்களையும், பழுப்புநிற கடினமான நொறுங்கக் கூடிய புறவோட்டினையுடைய கனிகளையும் உடைய பெரு மரமாகும். இலை, பூ, காய், கனி, பட்டை, விதை ஆகியவை மருத்துவப் பயன்கொண்டு விளங்குகின்றது.

இலை வீக்கம், கட்டிகளைக் கரைக்கும்; நாடி நடையை மிகுத்து உடல் வெப்பந்தரும்; பூ குளிர்ச்சி தரும்; காய் பித்தம் தணிக்கும்; பழம் குடல் வாயு அகற்றி குளிர்ச்சி தரும்; மலமிளக்கும்; பட்டை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்; தாது பலந்தரும்; கொட்டை சிறுநீர் பெருக்கும்.

புன்னை மரம் – Punnai Maram

திருப்புனவாயில், திருப்பல்லவனீச்சுரம், திருநாரையூர், திருச்சுழியல் (திருச்சுழி), திருவலிவலம், திருப்புகலூர், திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் திருமயிலாப்பூர், திருவெண்ணெய்நல்லூர், திருவேட்டக்குடி, திருப்புறம்பயம், திருஅம்பர் பெருந்திருக்கோவில், திருநெல்வெண்ணெய், திருஇரும்பைமாகாளம் முதலிய சிவத்தலங்களில் புன்னை தலமரமாக விளங்குகிறது. அவற்றுள் திருப்பல்லவனீச்சுரம், திருநெல்வெண்ணெய், திருவேட்டக்குடி தலங்களில் இம்மரம் தற்போது இல்லை. திருவேட்டக்குடியில் சிவபிரானை “நறையுலவும் பொழிற்புன்னை நன்னிழற்கீழமரும் இறை” என தேவாரம் குறிப்பிடுகிறது. இம்மரம் தமிழகத்தின் கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் தானே வளரும் இயல்பினது. இதன் இலை சற்று நீண்டதாகவும், பளப்பளப்பாகவும் இருக்கும், உருண்டையான உள்ஓடுள்ள சதைக்கனியை உடையது. இதன் இலை, பூ, விதை, பட்டை, நெய் ஆகியவை மருத்துவப் பயன் உடையது.

தாது அழுகல் போக்கியாகவும், உடல் இசிவு நீக்கியாகவும், நாடி நடையை உயர்த்தி உடல் வெப்பு தரும் மருந்தாகவும் பயன்படும். தோல் நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.

மகிழமரம் – Magizha Maram

திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருஇராமனதீச்சரம், திருநீடூர், திருப்புனவாயில், திருக்காளத்தி முதலிய சிவத் தலங்களில் மகிழமரம் தலமரமாக உள்ளது. திருவண்ணாமலை, திருக்கண்ணமங்கை போன்ற திருத்தலங்களில் மகிழம்பூ இறைவழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. இம்மரம் அடர்த்தியான இலைகளையும் மனங்கவரும் இனிய மணமுடைய கொத்தான வெண்மலர்களையும் உடையது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தானே வளர்கிறது. வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இலை, பூ, காய், விதை, பட்டை ஆகியன மருத்துவக் குணமுடையது.

பூ தாது வெப்பகற்றும், காமம் பெருக்கும், விதை குளிர்ச்சியூட்டும், தாதுபலம் பெருக்கும், நஞ்சு நீக்கும்.

மந்தாரைச் செடி – Mantharai Chedi

திருக்கானப்பேர் (காளையார்கோவில்), திருத்திலதைப்பதி தலங்களில் தலமரமாக விளங்குவது மந்தாரை ஆகும். இது மணமுடைய இரண்டாகப் பிரிந்த இலைகளையும், மஞ்சள் நிறமலர்களையும் உடைய சிறுசெடி வகையாகும். இதில் செந்நிற மலருடைய பெரிதாய் வளரும் இனமும் காணப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இலை, பூ, வேர், பட்டை ஆகியன மருத்துவக் குணம் கொண்டவை.

மந்தாரைப் பட்டை சதை, நரம்புகளைச் சுருக்கி குருதி, சீழ்க்கசிவுகளைக் கட்டுப்படுத்தக்கூடியவை, நோய் நீக்கி உடல் தேற்றும் மருந்தாகப் பயன்படுகிறது; உடல் பலம் மிகுக்கும்.

மருத மரம் – Marutha Maram

திருவிடைமருதூர், திருஇடையாறு, திருஅம்பர் பெருந்திருக்கோவில், திருஅம்பர் மாகாளம், திருப்பருப்பதம் ஆகிய திருத்தலங்களில் மருதம் தலமரமாக விளங்குகின்றது. இது குறுகலான நீள்சதுர இலைகளையும் சாம்பல்நிற வழுவழுப்பான பட்டையையும் உடைய உயர்ந்து வளரும் பெரிய இலையுதிர் மரமாகும். பட்டை சதைப்பற்றாக இருக்கும். தமிழக ஆற்றங்கரைகளில் தானே வளர்ந்து காணப்படும். சாலையோரங்களில் நடப்பட்டுள்ளன. இதில், கருமருது, கலிமருது, பூமருது என பல்வேறு இனங்கள் காணப்படுகின்றன. இலை, பழம், விதை, பட்டை முதலியன மருத்துவக் குணங்கொண்டவை.

இலை, பழம், விதை ஆகியவை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். பட்டை உடலுரமாக்கும்; இதய பலவீனம் தீர்க்கும்; இசிவு நீக்கும்.

மாதவி மரம் – Madhavi Maram

திருமுருகன் பூண்டி, திருத்தெளிச்சேரி, வட திருமுல்லைவாயில், திருநன்னிலம் (திருநன்னிலத்துப் பெருங்கோவில்) முதலிய திருத்தலங்களில் தலமரமாக விளங்குவது மாதவியாகும். இஃது குருகு, குருக்கத்தி, கத்திகை என்றும் குறிக்கப்படுகிறது. இது நீண்டக் கூரிய கரும்பச்சை இலைகளையும், கொத்தான மணமுடைய மலர்களையும் உடைய என்றும் பசுமையான நீண்ட பெரும் கொடியினம். இதன் பூவே மருத்துவப் பயனுடையது. பூ குளிர்ச்சியுண்டாகி உடல் தேற்றும்.

மாமரம் – Mamaram

திருமாந்துறை, திருமயிலாடுதுறை, திருக்கச்சியேகம்பம், திருக்கச்சி மேற்றளி (பிள்ளைப் பாளையம்), திருஓணகாந்தன் தளி, திருக்கச்சி அநேகதங்காவதம், திருநல்லூர்ப் பெருமணம் (ஆச்சாள் புரம்), திருஉசாத்தானம், திருஅவிநாசி, திருப்பறியலூர், திருநாகைக்காரோணம், திருநாகை(நாகப்பட்டினம்) அகத்தீஸ்வரர் கோவில், பாதாளேச்சுரம் முதலிய சிவத்தலங்களில் மா தலமரமாக விளங்குகிறது. இஃது காம்புள்ள நீண்ட தனி இலைகளையும், கொத்தான மலர்களையும், புளிக்கும் காய்களையும், உண்ணக்கூடிய இனிய சதைக் கனியையும் உடையது; என்றும் பசுமையான பெரிய மரமாக வளரக்கூடியது. தமிழகமெங்கும் கனிகளுக்காகப் பயிரிடப்பெறுகிறது. துளிர், இலை, பருப்பு, பட்டை ஆகியவை மருத்துவக் குணமுடையதாக விளங்குகிறது.

பிஞ்சு உள்ளழலாற்றி பசிமிகுக்கும், காய் மலமிளக்கும், பழம் சிறுநீர் வியர்வை பெருக்கும், பருப்பு நுண்புழுக்களை கொல்லும், உள்ளழலாற்றி உடல் உரம் பெருக்கும், பட்டை சதை நரம்புகளைச் சுருக்கி இரத்தம் சீழ்க்கசிவை அடக்கும்.

மாவிலங்க மரம் – Mavilanga Maram

திருச்சேறை (உடையார்கோவில்), திருநாட்டியத்தான்குடி முதலிய தலங்களில் தலமரமாக விளங்குவது மாவிங்க மரமாகும். இது மூன்று விரல் போன்ற கூட்டிலைகளையும், மலர்ந்ததும் மஞ்சளாகும் வெண்ணிற மலர்களையும், செந்நிற உருண்டையான சதைக்கனிகளையும் உடைய வெண்ணிற மரமாகும். தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. இதன் இலை, வேர்ப்பட்டை முதலியன மருத்துவப் பண்புடையது.

இலை வெப்பகற்றும், பசி மிகுக்கும், உடல் பலம் மிகுக்கும்; பட்டை, வேர் ஆகியவை மலமிளக்கும், நோய் நீக்கி உடல் தேற்றும்.

முல்லைச் செடி – Mullai Chedi

திருக்கருகாவூர், திருப்பல்லவனீச்சரம் (காவிரிப்பூம்பட்டினம், பூம்புகார்), தென் திருமுல்லைவாயில், திருக்கருப்பறியலூர், வடதிருமுல்லைவாயில், திருக்கருவூரானிலை, திருக்கடவூர் வீரட்டம் முதலிய திருக்கோவில்களில் முல்லைக் கொடியும், திருஉசாத்தானம், திருஇலம்பையங்கோட்டூர் ஆகிய திருக்கோவில்களில் மல்லிகையும் (Jasminum Sambac) திருக்கடவூரில் பிஞ்சிலம் (Jasminum grandiflorum) என்ற பெருமல்லிகையும் தலமரங்களாக அமைந்துள்ளன. இவை மணம் மிகுந்த மலர்களைத் தரும் கொடி இனத்தைச் சார்ந்தவை. இவற்றின் மருத்துவக் குணங்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியானது. இலை, பூ, வேர் முதலியன மருத்துவப் பயனுடையது.

பால் சுரப்பு அடக்கல், நுண்புழுக் கொல்லுதல், வீக்கங் கரைத்தல், சிறுநீர் பெருக்குதல், மாதவிடாய் தூண்டுதல் ஆகிய மருத்துவக் குணமுடையது.

மூங்கில் மரம் – Moongil Maram

திருப்பாசூர், திருநெல்வேலி, திருவெண்ணெய்நல்லூர், திருவேட்களம் முதலிய திருக்கோவில்களில் தலமரமாக விளங்குவது மூங்கிலாகும். இது நீண்ட கூரான முனையுடைய சுரசுரப்பான மெல்லிய இலைகளைக் கொண்ட, கணுக்களில் முள்ளுள்ள, உட்கூடான, கூட்டமாக நீண்டு வளரும் மரமாகும். தமிழகமெங்கும் வளர்க்கப்படுகிறது. காடுகளில் தானே வளர்கிறது. இலை, கணு, வேர், விதை, உப்பு ஆகியவை மருத்துவப் பயனுடையது.

இம்மரம் இசிவு அகற்றல், உடல் உரமாக்கல், காமம் பெருக்குதல் ஆகிய மருத்துவக் குணங்களுடையது. இலை மாதவிடாய்த் தூண்டியாகவும், நுண்புழுக் கொல்லியாகவும் பயன்படுகிறது.

வஞ்சிக் கொடி – Vanji Kodi

திருக்கருவூர் ஆனிலை எனும் தலத்தில் தலவிருட்சமாக விளங்குவது வஞ்சியாகும். இது சீந்தில் கொடி, ஆகாசவல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகாமூலி என்ற பல பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றது. இஃது இதய வடிவ பசிய இலைகளையும் தக்கையான சாறுள்ள தண்டுகளையும், காகிதம் போன்ற மெல்லிய புறத்தோலையும் உடைய ஏறு கொடி இனமாகும். கொடியின் தரைத் தொடர்பு துண்டிக்கப்பட்டால் கொடியிலிருந்து மெல்லிய விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றி கொடி தழைக்கும் தன்மை கொண்டது. இதன் இலை, கொடி, வேர் முதலியன மருத்துவக் குணங்கொண்டு விளங்குகின்றது.

உடல் தேற்றி உரமாக்குதல், முறைநோய் நீக்குதல், பசி மிகுத்தல் முதலிய மருத்துவக் குணமுடையது.

வன்னி மரம் – Vanni Maram

மேலைத்திருக்காட்டுப்பள்ளி, திருவான்மியூர், பட்டீச்சரம், திருவடுகூர், திருப்பூந்துருத்தி, திருச்சாட்டியக்குடி, திருச்செம்பொன்பள்ளி, திருக்கோட்டூர், திருக்கொள்ளிக்காடு, பெருவேளூர், திருப்பாம்புரம், மயிலாடுதுறை, திருக்கேதீச்சரம், திருமுண்டீச்சரம், திருஆமாத்தூர், பேணுபெருந்துறை (திருப்பந்துறை), திருஅரதைப்பெரும்பாழி, கடுவாய்க்கரைப்புத்தூர், திருமுதுகுன்றம்(விருத்தாசலம்), திருப்பாண்டிக்கொடுமுடி, திருத்தெளிச்சேரி, திருவன்னியூர், திருக்கலய நல்லூர் (சாக்கோட்டை), திருக்காறாயில் (திருக் காறைவாசல்), திருமறைக்காடு, அகத்தியான்பள்ளி, திருமணஞ்சேரி, திருக்கானூர், திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி), திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு), திருக்குடமூக்கு (கும்பகோணம்), திரு இடையாறு முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட திருக்கோவில்களில் தல மரமாக வன்னி விளங்குகின்றது.

வில்வத்திற்கு அடுத்தபடியாக மிகுதியான கோவில்களில் தலமரமாக உள்ளது வன்னியேயாகும். இவற்றுள் திருமுண்டீச்சரத்தில் இம்மரம் தற்போதில்லை. இஃது ஓர் முள்ளுள்ள இலையுதிர் மரம். மிகச் சிறிய கூட்டிலைகளைக் கொண்டது. சதைப்பற்றுடைய உருளைவடிவக் காய்களை உடையது. வடதமிழ் நாட்டில் கரிசல் நிலங்களில் தானே வளர்கிறது. தோட்டங்களில் ஆங்காங்கே முளைக்கும் இவ்வன்னி மரங்களைப் பொதுவாக யாரும் வெட்டுவதில்லை. அந்த அளவுக்குப் புனிதமாக கருதப்படும் மரமாகும். மரம் முழுமையும் மருத்துவக் குணமுடையது.

இம்மரம் காய்ச்சல் போக்குதல், சளியகற்றுதல், நாடிநடையையும் உடல் வெப்பத்தையும் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.

வாகை மரம் – Vaagai Maram

திருவாழ்கொளிப்புத்தூர் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது வாகை மரமாகும். இஃது நெடிதுயர்ந்து வளரக் கூடிய பெரிய மரமாகும். பசிய சிறகமைப்புக் கூட்டிலைகளைக் கொண்டது. கொத்தான மகரந்தத் தாள்களையும், தட்டையான காய்களையும் உடையது. உலர்ந்த காய்கள் வெண்மையாய் இருக்கும். இதன் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகியன மருத்துவப் பயனுடையன. இம்மரம் தமிழகத்தில் காடுகளிலும், தோட்டங்களிலும் தானே வளர்ந்து காணப்படுகின்றது.

வாகைப்பூ நஞ்சு முறிக்கும், வீக்கம் கட்டிகளைக் கரைக்கும்; பட்டை உடல் வெப்பம் தணிக்கும்.

வால்மிளகுச் செடி – Val Milagu Chedi

திரு ஊறல் (தக்கோலம்) திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது வால்மிளகு ஆகும். இஃது மரத்தில் படர்ந்து வளரும் கொடியின வகையைச் சார்ந்தது. இதன் காம்பு காயோடு சேர்ந்து வால்போல் காணப்படுவதால் இஃது வால்மிளகு எனப்படுகின்றது. காரம், மணம், விறுவிறுப்புள்ள மூலிகை மருந்தாக பயன்படுகிறது.

பசி மிகுத்தல், உடல் வெப்பத்தையும், நாடிநடையையும் அதிகரித்தல் முதலிய மருத்துவக் குணங்களைக் கொண்டது.

வாழை மரம் – Vazhai Maram

திருப்பழனம், திருத்தேவூர், திருமருகல், திருத்தருமபுரம், திருக்குடவாயில், திருப்பைஞ்ஞீலி, திருக்கழுக்குன்றம், திருத்தென்குரங்காடுதுறை முதலிய தலங்களில் தலமரமாக வாழை விளங்குகின்றது. இது மிகப்பெரிய இலைகளையும், குலையாக வளரும் காய்களையும், உண்ணக்கூடிய இனிய கனிகளையும் உடைய மரமாகும். இதில் பேயன், மொந்தன், பூவன், இரத்தாளி போன்ற பல இனங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் இலை, காய், கனிகளுக்காக பயிரிடப்படுகின்றன. திருப்பைஞ்ஞீலியில் ஞீலி எனும் ஒரு வகைக் கல்வாழையும், திருமருகலில் மலைவாழை இனத்தைச் சேர்ந்த வாழையும் தலமரங்களாக உள்ளன. ஞீலி வாழைக்கனி இறைவனுக்கு பூசனை செய்து நீரில் விடப்படுவது மரபு; யாரும் உண்பதில்லை.

வாழையின் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், பட்டை, தண்டு, சாறு ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பூ, பிஞ்சு, காய் ஆகியவை குருதி, சீழ்க்கசிவை அடக்கும்; சாறு குருதி போக்கடக்கும். தண்டு சிறுநீர் பெருக்கி பித்தத்தைச் சமப்படுத்தும்; பழம் மலச் சிக்கல் அறுத்து உள்ளழலாற்றி உடலுரமாக்கும்.

வில்வமரம் – Vilvam Maram

திருவையாறு, திருவெறும்பியூர், திருமயேந்திரப்பள்ளி திருத்தென்குடித்திட்டை திருக்கலிக்காமூர், திருமூக்கீச்சரம், திருச்சத்திமுற்றம், திருக்குரக்குக்கா, திருவியலூர், திருக்கருக்குடி, திருவிளமர், திருக்குருகாவூர், வெள்ளடை, திருக்கழிப்பாலை, திருக்குரங்கணில்முட்டம், திருவேட்டக்குடி, திருநன்னிலம் (திருநன்னிலத்துப் பெருங்கோவில்), திருகோகர்ணம் (கோகர்ணா), திருக்கருவிலிக்கொட்டிட்டை, திருப்பள்ளியின் முக்கூடல், திருவிடைவாய், திருக்கோடி(கோடிக்கரை), திருக்கொள்ளிக்காடு, திருஇராமேச்சரம், திருவைகாவூர், திருஇலம்பையங்கோட்டூர், திருஆனைக்கா, திருஆப்பனூர், திருப்பரங்குன்றம், திருவெஞ்சமாக்கூடல், திருக்கோழம்பம், திருத்தென்குரங்காடுதுறை, திருநனிபள்ளி, திருநெல்வெண்ணெய், திருத்தருமபுரம், திருநள்ளாறு, திருக்கோட்டாறு, திருஅறையணிநல்லூர், திருமீயச்சூர் இளங்கோவில், திருக்கடவூர் வீரட்டம், திருக்கடவூர் மயானம், திருக்கருவூர் ஆனிலை(கரூர்), திருக்கானப்பேர்(காளையார் கோவில்), திருவேதிகுடி, திருகற்குடி, திருநெடுங்களம், திருக்கோணமலை, மேலைத்திருக்காட்டுப்பள்ளி, திருக்கண்டியூர், சக்கரப்பள்ளி, திருநல்லூர், திருச்செம்பொன்பொள்ளி, திருப்பறியலூர், திருவலஞ்சுழி, திருநீலக்குடி, திருத்தெளிச்சேரி, திருமீயச்சூர், திருச்சிறுகுடி, திருஅரிசிற்கரைப்புத்தூர், திருக்கொண்டீச்சரம், இடும்பாவனம், திருவெண்டுறை, திருக்கொள்ளம்பூதூர், திருஏடகம், திருஆடானை, திருமுருகன்பூண்டி, திருக்கோவலூர் வீரட்டம், இடையாறு, திருவல்லம், திருமாற்பேறு, திருஇடைச்சுரம், திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம், திருக்குடந்தைக் காரோணம், திருக்கானூர், திருவடுகூர், திருப்பூந்துருத்தி, திருப்பாற்றுறை, திருக்கூடலையாற்றூர், திருப்பழனம் திருநெய்த்தானம், திருத்தெங்கூர், திருவிற்கோலம்(கூவம்), திருப்பெரும்புலியூர், திருஅழுந்தூர், திருவக்கரை, திருவெண்காடு, திருப்பழையாறை, வடதளிதிருக்குடமூக்கு(கும்பகோணம்) முதலிய நூற்றுக்கும் மேற்பட்ட திருக்கோவில்களில் வில்வம் தல விருட்சமாக அமைந்துள்ளது.

சிவபெருமானுக்கு பூசனை மூலிகையான இஃது ஒரு கற்ப மூலிகையாகும்; அஃதாவது, இன்ன பிணிக்கு மட்டுமே மருந்துதென்று அமையாது எல்லாப் பிணிகளையும் நீக்கும் தன்மையுடையது. இஃது கூவிளம், கூவிளை என்ற பெயர்களாலும் வழங்கப்படுகிறது.

இது மூன்று கூட்டிலைகளை மாற்றடுக்கில் கொண்டு உருண்டையான மணமுள்ள சதைக்கனிகளைப் பெற்ற முட்களுள்ள பெரிய மரம். திருஇடைச்சுரம் என்ற திருத்தலத்தில் உள்ள வில்வ மரம் எண் கூட்டிலைகளைக் கொண்டமைந்துள்ளது. இவ்வாறு அமைந்தவை மகாவில்வம் என்றும் பிரம்ம வில்வம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவெண்காட்டிலுள்ள வில்வம் போல் முள் இல்லாத மரங்களும் அரிதாய் காணப்பெறும்.

வில்வத்தில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயன் உடையது.

விழல் புல் – Vizhal Pull

திருவிளநகர் திருத்தலத்தில் தல விருட்சமாக விளங்குவது விழல் ஆகும். இஃது நாணல் இனத்தைச் சார்ந்த புல்லினமாகும். இதன் தாள் விளிம்புகள் கூரானவை. கூரை வேய்வதற்குப் பயன்படுகிறது. இதன் அரிசியே மருத்துவப் பயனுடையது. இது தமிழகத்தில் ஏரி, குளங்களில் காணப்படுகின்றது.

விழுதி சிறுசெடி – Vizhuthi Chedi

திருவீழிமிழலை என்னும் தலத்தின் தலமரமாக விளங்குவது விழுதி ஆகும். வீழி என்பதும் விழுதியைக் குறிப்பதே. தலத்தின் பெயர் தலமரத்தால் பெற்றதாகும். இது தனியிலைகளையும் மங்கலான வெண்ணிற பூக்களையும் செந்நிறப் பழங்களையும் உடைய முள்ளில்லாத சிறுசெடியாகும். இதன் இலை, காய், வேர் முதலியன மருத்துவப் பயன்கொண்டவை.

வாத நோய் தீர்த்தல், வீக்கம் கரைத்தல் முதலிய மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.

விளா மரம் – Vila Maram

திருகாறாயில், திருவிளநகர், திருநின்றியூர் திருக்கோவில்களில் தலமரமாக விளங்குவது விளா மரம் ஆகும். இது மணமுள்ள சிறகுக் கூட்டிலைகளையும் ஓடுள்ள நறுமணமிக்க சதைக் கனிகளையும் உடைய முள்ளுள்ள உறுதியான பெரிய மரமாகும். இஃது கருவிளம் என்றும் வழங்கப்படுகின்றது. இதன் இலை, காய், பழம், பழஓடு, பட்டை, பிசின் முதலியவை மருத்துவப் பயன்பாடு கொண்டவை. தமிழகமெங்கும் கனிகளுக்காக தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றது.

வெள்வேல் மரம் – Velvel Maram

திருவேற்காடு என்னும் தலத்தில் தல விருட்சமாக விளங்குவது வெள்வேல் மரமாகும். தலத்தின் பெயர் வேல்காடு என மரத்தின் பெயராலேயே அமைந்துள்ளது. இம்மரம் இரட்டைச் சிறகமைப்புக் கூட்டிலைகளை உடைய கரிய முள்ளுள்ள பெருமரமாகும். மரத்தின் புறப்பரப்பு வெண்ணிறமாகவும் உட்புறம் மஞ்சளாகவும் இருக்கும். மலர்கள் வெளிர் மஞ்சள் நிறமாகவும், காய்கள் தட்டையாகவும் இருக்கும். இதன் இலை, பட்டை, வேர், பிசின், விதை முதலியன மருத்துவக் குணமுடையது. இது தமிழகத்தில் காடுகளிலும், தரிசுகளிலும் தானே வளர்ந்து காணப்படுகின்றன.

வேப்பமரம் – Veppa Maram

திருக்குடந்தைக் காரோணம், புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்), திருவாட்போக்கி (ஐயர்மலை), குடந்தைக்காரோணம் ஆகிய திருக்கோவில்களில் வேம்பு தலமரமாக உள்ளது. இஃது கசப்புச் சுவையுடைய விளிம்பில் பற்களுள்ள கத்தி போன்ற இலைகளையும், வெண்ணிற கொத்தான மலர்களையும், முட்டை வடிவ சதைக் கனிகளையும், எண்ணெய்ச் சத்துள்ள விதைகளையும் உடைய பெரிய மரமாகும். குளிர்ச்சி உண்டாக்குவதற்கும் நிழல் தருவதற்கும் இம்மரம் வீடுகளிலும் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதன் மிகையான மருத்துவப் பயனால் “அம்மை” போன்ற கடுந்தொற்று நோய்களுக்கு மருந்தாவதாலும், உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றாலை நல்குவதால் இம்மரம் தொன்றுதொட்டு தெய்வீக மரமாக கருதப்பட்டு வருகிறது. இதன் இலை, பூ, காய், விதை, பட்டை, எண்ணெய், பிண்ணாக்கு முதலியன மிகுந்த மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.

இலை நுண்புழுக்கொல்லும்; குடல் வாயு அகற்றும்; வீக்கம் – கட்டிகளைக் கரைக்கும்; தாய்ப்பாலைக் குறைக்கும். பூ நுண்புழுக்கொல்லும்; பசித்தூண்டும், உடல் பலம் மிகுக்கும். விதை நஞ்சு நீக்கும்; நோய் நீக்கி உடல் தேற்றும்; நுண்புழுக் கொல்லும். பட்டை குருதி சீழ்க்கசிவை அடக்கும்; முறை நோய் தீர்க்கும்; உடல் பலந்தரும். எண்ணெய் பித்தநீர் பெருக்கும்; இசிவு நோய்களைப் போக்கும்; நுண்புழுக் கொல்லும்; காய்ச்சல் தணிக்கும்.



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 22, 2024
ஸ்ரீ மாதா அறக்கட்டளை
  • டிசம்பர் 21, 2024
தில்லையம்பூர் முதியோர் இல்லம், கும்பகோணம்
  • டிசம்பர் 7, 2024
திருமாங்கல்யம்